ஒரே திருவிழாக் கூட்டம்தான்.
அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா நெடுஞ்சாலைகளும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டி, திக்கித் திணறின. ஏழெட்டு மைல் முன்பிருந்தே மினுக்கும் பலகைகள் வேறு வழிகளை நாடச்சொல்லி கெஞ்சின.
மக்கள் கேட்கவில்லை.குளிர்காலம் முடிந்து வெய்யில் கிட்டத்தட்ட "சுள்"ளென்று உறைக்குமாறு அடிக்கும் நேரம். எல்லோரும் ஓவர்கோட் போட்டுக் கொண்டு, முன்னெச்சரிக்கையாக சன்ஸ்கிரீன் பூசிக் கொண்டு(ம்), மடக்கு நாற்காலிகள், பெட்ஷீட்டுகள், குளிர் கன்ணாடிகள், சிப்ஸ்/பிஸ்கட், குழந்தை குட்டிகளுடன் பெரிய்ய்ய பேரணியாகவே கிளம்பி விட்டார்கள்.
மாயூரத்தில் அஞ்சாம் திருவிழாவுக்கு தேர் பார்க்கப் போவது போல இருந்தது.
இது அமெரிக்க விமானப் படையின் முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் தொடர்புக்கு அருமையான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்லுவேன். சாக்ரமண்டோவில், மேத்தர் ஃபீல்ட் என்ற இடத்தில் உல்ள ஏர்ஃபோர்ஸ் பேஸில், எல்லா வகையான பறக்கும் ஊர்திகளையும் கொண்டு வந்து வானில் சாகஸம் நிகழ்த்திக் காட்டும் ஏர் ஷோ. தலைக்கு 15$.
இத்துடன் கார் பார்க்கிங், மற்றும் உள்ளே சுற்றுலா பொருட்காட்சி திடலில் சாப்பாடு விற்பது போல அநியாய விலையில் சாப்பாட்டு/பீர் கடைகள்.
அடேங்கப்பா...இவங்க எது செஞ்சாலும் பெரிசா தான் இருக்குது. அபான வாயு விட்டாக் கூட மைக் வெச்சுத்தான் விடுவாங்க போல ;-)
ஆனா, இந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே பிரம்ம்ம்ம்....மாண்டம்தான்.
முதலில் கிளைடர் வகை குட்டி விமானங்கள். வானில் எல்லாப் பக்கமும் உரண்டு, புரண்டு, திரும்பி, கவிழ்ந்து, ஏறி, இறங்கி, வானத்திலேயே ஜாங்கிரி பிழிவது போலவும், ரங்கோலி போடுவது போலவும் ஆட்டம் காட்டி கிலி கிளப்பின. இவர்கள் இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட வேண்டுமென்றால், அரிசி, உளுந்து, தேங்காய், பொட்டுக்கடலை, கொஞ்சம் ப.மிளகாய் , உப்பு, தண்ணீர் குடித்து விட்டு ஏறினால் போதும் என்று நான் அடித்த கமெண்ட் புரிந்து கொண்டு சிரிக்க யாரும் இல்லாமல் காற்றில் கரைந்தது. காரணம் வீட்டம்மாவும் பசியில் இருந்தார்.
அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் வந்து ஆட்களை மீட்பது, பாராசூட்டில் இறக்கி விடுவது, கீழே காயம்பட்டவனை காப்பற்றி தூக்கி செல்வது என்று செய்து காட்டின. கூட்டம் சற்றே அசந்து கால் பரப்பி உட்கார்ந்தபோது கிளைடர் விமானங்களில் இருந்து பலத்த சத்தத்துடன் குண்டு வீசி நெருப்பை கிளப்பி சூடேற்றின.
பிறகு வந்தன ப்ளூ ஏஞ்சல் வகை விமானங்கள். அத்தனை வேகத்தில், அத்தனை துல்லியமான இடைவெளியில் அத்தனை அழகாக ஆறு விமானங்கள் பறந்து நான்கண்டெதேஇல்லை. வேறு யாராவது படம் பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருந்தால் கண்டிப்பாக
க்ராஃபிக்ஸ் என்று லொள்ளி இருப்பேன். அத்தனை ஆச்சரிய சாகசம்.
நம்மூரில் இப்படிப்பட்ட ஏர்ஷோக்கள் குடியரசு தின, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக இருக்குமோ என்னவோ, இது போல எங்கும் மக்கள் தொடர்புக்காக நடத்துவது மாதிரி தெரியவில்லை. இப்படி எல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தினால், நம் பாதுகாப்புப் படை மீது நிஜமாகவே மரியாதை பிறக்கும். "மிலிட்டரிக்காரனா,,?? வம்பு பிடிச்ச பயலுங்கப்பா..?? ரம்மையும், கோழியயும் தின்னு கொழுத்துபுட்டு, ஊருக்கு லீவுல வந்தா கண்ட இடத்தில் வம்பு வளத்துகிட்டு திரியறானுங்க" போன்ற புகார்கள் குறையும்.
நேற்று காலை பத்து மணிக்கு உள்ளே போன நாங்கள் வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அடித்துப் போட்டாற்போல தூங்கிவிட்டு, காலையில் ஆபீஸ் விரையும்போது, மேலே ஒரு அலுமினியப் பறவை ஆடாமல், அசையாமல் நேராகச் சென்றது.
ஆச்சரியமாக இருந்தது. பைலட்டுக்கு போர் அடிக்காது..?? ;-)