Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 7

நாளை காலை என் புது வீட்டில் கணபதி ஹோமம். நேற்றிரவு ஆபிசில் இரவு ஒரு மணி வரை திடீர் வேலை. சாயங்காலம் புதிதாக சேரப் போகும் கிடார் வகுப்பு. பிள்ளை சூர்யாவுக்கு ஏகக் காய்ச்சல், மற்றும் அதனாலான மன உளைச்சல்.

இத்த்னைக்கும் நடுவில் இங்கு எழுத, கலந்து கொள்ள முக்கியக் காரணம் மதியக்கா.

போன வருடமே கலந்து கொண்டு எழுதச் சொல்லி தாக்கீது வந்தது. ஏதோ காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை. வலைப்பூவை பொத்தி, பாதுகாத்து, பாலூட்டி, சீராட்டி வரும் அவர், வலைப்பூ ஆசிரியராக இருக்கச் சொல்லி, இரண்டு/ மூன்று முறை தாக்கீது அனுப்பினார். நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை, நேர நெருக்கடியில் செய்தால் குவாலிட்டி பாதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில், அதையும் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். எனவே இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் செய்த விஷயம்.

நன்றாகவந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. குழுவில் நிலவும் மயான அமைதியைப் பார்த்தால், சற்றே பயமாகக் கூட இருக்கிறது.

இனி என்ன..??

கிளி என் கையை விட்டு பறந்து விட்டது. அதை தோளில் வைத்து கொஞ்சுகிறீர்களோ, குழம்பில் போட்டுகுமுக்குகிறீர்களோ, உங்கள் இஷ்டம்.

போன வாரம் கலந்து கொண்ட சாக்ரமண்டோ தமிழ் மன்றம் பிக்னிக் பற்றியும், என் இசைத் துரத்தல்களைப்பற்றியும், தென் தமிழ்நாட்டில் நான் போக நினைத்திருக்கும் ஊர்கள் பற்றியும், 1992 ல் கல்லூரி மேகஸினில் வெளிவந்த என் கதையை மறு பிரசுரம் செய்யலாமென்றும், ஏன் காதலிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்,இணையத்தில் தமிழ் எழுதுபவர்களின் அபார ஆர்வத்தையும், உழைப்பையும், ஐநூறு பேர் உள்ள மரத்தடியில்இன்னும் எத்த்னை பேரை வலைப்பூ உலகுக்கு இழுக்கலாம் என்று நினைத்ததையும் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.

ஒற்றை விரலால் குத்திக் குத்தி இந்த மடல்களை எழுதுவதெற்கே "உன்னைப் பிடி; என்னைப் பிடி; என்றாகிவிட்டது.

என்னுடைய கோணங்கித்தனங்களை பொறுத்த்க் கொண்டு வாயைத் திறக்காமல் மெளனம் காக்கும் உங்கள் அனைவருக்கும் ஏசுநாதரை விட சகிப்புத் தன்மை ஜாஸ்தியாகி இருக்கிரது என்கிற எண்ணத் துணிபுடன்,
சூரியனுக்கு டார்ச் அடிக்க அடுத்த மடலில் வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு...

ஜூட்........


மரத்தடி மண்டகப்படி - 6

விழா மலர் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு பின்னும் விளம்பரதாரர்களைத் திருப்திபடுத்த சாஸ்திரத்துக்காக செய்யும் விஷயம் என்று இத்த்னை நாள் நினைத்திருந்தேன். ஆனால் அமீரக ஆண்டு விழா மலரைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் ஓரளவு மாறி விட்டது. என் கவிதை பதிப்பிக்கப் பட்டது என்பதற்காக சொல்லவில்லை.:-) உண்மையிலேயே சிரத்தை எடுத்துச் செய்திருந்தார் தம்புரான்.

மரத்தடி வலைப் பக்கத்தில் படைப்புகளை நீங்கள் ரெகுலராக வலையேற்றிக் கொண்டிருந்தாலும், ஆண்டு விழாவுக்காக ஒரு மலர் வெளியிடுவது நல்ல ஐடியா என்று எனக்குத் தோன்றுகிறது. வச வச வென்று படைப்புகள் வேண்டாம். மறு பதிப்புகள், பழைய சரக்கு ஆகியவற்றைத் தள்ளிவிட்டு இதற்கென்றே பிரத்யேகமாக எழுதிய படைப்புகளை வெளிடுவது நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

நேற்று மரத்தடி.காம் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தபோது நிர்மலா டீச்சர் எழுதிய ஒரு கவிதை நெத்தியடியாக இருந்தது. தலைப்பு மட்டும் கொஞ்சம் நன்றாக வைத்திருக்கலாம்.

கச்சேரிக்கணக்குகள்
==================

கூடலுக்கு முன்னறிவிப்பாய்
பின்னிருந்து அணைக்கையில்
ருசிமாறிய காப்பிக்காக
காலையில் கடிந்தது நினைவில்

சில்மிஷங்கள் தொடர
சிரிக்கும் உன் முகத்தில்
சண்டையில் மிரட்டும்
கோபமுகம் நிழலாய்

கிசுகிசுப்பாய் காம உளரல்கள்
கிறக்கி முடிக்குமுன்
முந்தின நாளின் கடுஞ்சொல்
தொடர்ந்து எதிரொலியாய்

சுயவெளியற்ற உள்வட்டத்தில்
சாரம் குறையாமல் நினைவுகள்
கடமையாய் பழக்கத்தில்

ஒத்துழைக்க நினைத்தபோதும்
நினைவடுக்கில் உறுத்தல்கள்
நெகிழாது இறுக்க

சுருதி சேராத கச்சேரி
என் கணக்கில்
இன்னொன்றாய்.


அடுத்த முறை மனைவியை "அணுகும்போது" இதைப் படித்தவர் சற்றேனும் யோசித்தால், அது இந்தக் கவிதையின் வெற்றி.

என்னளவில் இது, படித்த கணத்திலேயே உள்ளே இறங்கி விட்டது.


மரத்தடி மண்டகப்படி - 5

on demand கவிதை எழுதி எனக்கு பழக்கம் இல்லை. கவிதை எழுத ஏதாவது கோபமோ, யோக்கியமானநேர்மையான, உணர்ச்சியோ இருக்க வேண்டும் என்பார் சுஜா(தாத்)தா. முதலாவது அர்த்தமில்லாமல் அதிகம் வந்தாலும், அயோக்கியத்தனம் அதிகமாகிக் கொண்டிருப்பதால் இரண்டாவது அதிகமாக வருவதில்லை. கவிதைஏன் எழுதவில்லை என்று என் நண்பன் ஒரு முறை கேட்டபோது " ரொம்பத் தளும்பலை. அதனால எழுதலை" என்று மகாகவி காளிதாசன் போல பதில் சொன்னேன்.

அது உண்மைதான்.

சரியான பயிற்சிகள் இல்லாமல்,முறையான இசை அறிவு இல்லாமல், பழந்தமிழ் இலக்கியம் பயிலாமல், வெறும் உணர்வு அடிப்படையில் வரி ஒடிக்கும்போது, அந்த உணர்வும் உண்மையாக இல்லாமல் கவிதை எழுதுவது தற்கொலைக்கு சமம். மீனாக்ஸ்,புகாரி, சேவியர், கற்பகம் போன்றவர்கள் இத்தனை கவிதை எழுதுகிறார்கள் என்றால், அத்தனை "தளும்புகிறது" என்றுதான் அர்த்தம்.

எனக்குப் பிடித்த சு.ரா வின் கவிதை ஒன்றை இங்கே தர விருப்பம்:


வாழ்க்கை
========

பாம்பைக் கண்டதும்
கல்லெடுத்தாய்
நான் கல்லானேன்.

வாளைக் கண்டதும்
வில்லை வளைத்தாய்
வாளுறை யானேன்

மதயானை வந்ததும்
அலறி யடித்தாய்
வாலிலூசல் பயின்றேன்

பின்னொரு நாள்
முச்சந்தியில்சறுக்கி விழுந்து
செத்தேன் நான்

செத்து செத்து
பிழைத்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்.


ரத்தம் 'ஜூடா" இருக்கும்போது எழுதினது போல.

எனக்கு ரொம்ப பிடிச்சது.


மரத்தடி மண்டகப்படி- 4

சாக்ரமண்டோ - ஒரு அறிமுகம்
=============================

சாக்ரமண்டோ என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. இணையத்தில் என்னால் புகழ் பெற்ற ஊர். ( ஆஹா..மாமி ரொம்ப பாதிச்சிட்டாங்க..:-) ) . கலி·போர்னியாவின் தலைநகர் என்றாலும் ஒருமாதிரி laid back ஊர் தான். பக்கா மெட்ரோவும் இல்லை. படு கிராமமும் இல்லை. நடுவாந்திரம். ஆம்...நடு" ஆந்திரம்தான்". அமெரிக்கா முழுவதும் மாட்லாடிக் கொண்டிருக்கிற மிளகாய் ஆசாமிகள் சாக்ரமண்டோவிலும் குவிந்து, ரெண்டு தெலுகு மண்டலம் வைத்துக் கொண்டு "நாகு ஒத்து..நீகு தெலுசு" என்று மிழற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தொண்ணூறு மைல். எல்லே ராமால் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சலிலிருந்து நானூறு மைல்.(குடாப்பகுதி) சிலிகான் வேலியிலிருந்து நூற்று முப்பது மைல். வரைவின் மகளிருக்கும், சூதாட்டத்துக்கும் புகழ்பெற்ற கார்சன் சிட்டியிலிருந்து எண்பது மைல். இத்தனை பர பர, சுறு சுறு நகரங்கள் சுற்றி இருந்தும் என்னை மாதிரியே கொஞ்சம் சோம்பேறி ஊர்தான். ஊர் முழுக்க வளைத்துக் கொண்டு அமெரிக்கன் ஆறு ஓடுகிறது. போட்டிங் போகலாம். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சற்றே அதிகம். குடாப்பகுதியில்இருந்து வரும் என் இந்திய நண்பர்கள் எல்லாம் " இங்க ப்ளாக்ஸ்" ஜாஸ்தியாமே என்று என்னவோ சார்லஸ் பரம்பரையில் பிறந்தவர்கள் போல பேசுகிறார்கள். சாக்ரமண்டோவில், சம்மரில் வெயில் அடிக்கும்போது, நாங்கள் வெயிலிலேயே பால் காய்ச்சி விடுவோம். அதே போல்தான் வின்டர் குளிரும். எத்த்னை போர்வை போர்த்தினாலும் , "உள்ளே" ஹீட்டர் போடாவிட்டால், சில இரவுகளில் தூங்க முடியாது. பிரைவேட் கம்பெனிகள் அதிகம் இல்லை. பெரிதும் அரசுத் துறைகள் தான். ஆணழக ஆர்னாடு கவர்னராக வந்த பிறகு பத்திரிக்கைகளில் ஊரின் பெயர் அதிகம் அடிபட ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் சக்கை போடு போடும் இடங்களில் முதல் மூன்று இடங்களில் இது இருப்பதாக சொன்ன செய்திகளை நம்பி, சமீபத்தில் வீடு வாங்கிஇருக்கிறேன். அடுத்த மாதத்தில் ஏதாவது அரசுத் துறையில் ஜாயிண் பண்ணிவிட்டு, விகடன்/வெற்றிலைசீவல்/அடுக்கு டிபன் காரியரோடு செட்டில் ஆகி விடலாம் என்று ஒரு எண்ணம். வீட்டிலிருந்து ஏர்போர்ட் ஆறு மைல்தான்.

இந்தப் பக்கம் வர வாய்ப்பு இருந்தால் ஒரு தாக்கல் சொல்லிவிட்டு வாருங்கள்.

மரத்தடி மண்டகப்படி - 3

ஏன் எழுதுகிறோம்
=================

ஸ்வஸ்திக் விளம்பரர் ஒருமுறை மிக முக்கியமான இந்தக் கேள்வியை மாமியின் ஸ்ரீராமஜெயத்தை வெளியிட்ட பத்திரிக்கையில் கேட்க, பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மைதான் . வெ.சா சொன்னபடி எந்தப் பிரயோஜத்துக்கும் ஆகாத தமிழை இளைய தலைமுறை ஏன் இப்படி விழுந்து விழுந்து சேவித்துக் கொண்டிருக்கிறது.

காரணம் ரொப்ப சிம்பிள்.

எல்லோருக்கும் தன்னுடைய இருப்பை நிலைநாட்ட ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. செத்துபோன பின், பத்தோடு பதினொன்றாக, புழுவும், பூச்சியும் , பூமியும் அரித்து மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து காணாது போக யாருக்கும் விருப்பம் இல்லை.அதனால்தான் கவிதை எழுதுகிறோம். கானா எழுதுகிறோம். போட்டோ போடுகிறோம். எழுத்தாளரைக் கெள்வி கேட்கிறோம். கைக்காசை செலவழித்து புத்தகம் போடுகிறோம்.கேள்வி கேட்கிறோம். வம்பு எழுதுகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம், இந்த "நான்"தான். அங்கீகார அரிப்பு தேடும் இந்த ஆத்திரம்தான். சீசனுக்கு வந்து டப்பாங்குத்து ஆடும் மூக்கன் உட்பட.

அதில் தான் எத்த்னை மாறுபாடுகள். வண்ணங்கள். வர்ணங்கள். சிக்கல்கள்.
சிலருக்கு கவிதை இஷ்டம். அதிலேயே புதுக்கவிதை, மரபு என்று கோஷ்டி. சிலருக்கு கதை. அதில் ஆயிரம் வகை. எது எழுதினாலும் நம் சிந்தனையைத்தான் வேறு வேறு வடிவங்களில் எழுதப் பார்க்கிறோம் என்பது பலபேருக்கு விளங்குவதே இல்லை. அலகிட்டாலும், வரியை ஒடித்து வளைத்துப் போட்டு "புதுசு" எழுதினாலும், உள் இருப்பது அந்த "நான்" தான். ஸ்திரமாக இருக்க ஆசைப்படும் மனித யத்தனம்தான்.


1996 ல் நான் எழுதிய கவிதை கீழே:

http://www.weblogimages.com/v.p?uid=sundar23&pid=188613&sid=osR22jpCT7

அதே கவிதையை மாற்றி கட்டுரையாக எழுதிப் போடலாம் என்று தீபாவளி ரிலீஸாக ஒருமுறை ரா.கா.கி யில் எழுதினேன்.
======================================================================

வெடி
====

அப்போதெல்லாம் தீபாவளி வருவதற்கு இரண்டு மாதம் முன்னரே ஒரே பரபரப்பாயிருக்கும்.விநாயகர் சதுர்த்திவரும்போதே அதன் சாயல் தெரிந்துவிடும். முதல் அடையாளம் சின்னக்கடைத்தெருவில் வரும் பட்டாசுக் கடைகள்தான். மற்ற நேரத்தில் சோனியான பையன் காத்தடிக்க பஞ்சர் பார்க்கும் கனகு, தீபாவளியானால் பட்டாசுக்க்கடை வைத்து விடுவார். போன வருசத்து சரக்குகளையெல்லாம் எடுத்து தூசி தட்டி, வெயிலில் காய வைத்து,முதலில் விற்றுத் தீ¢ர்ப்பார். பிறகே வரும் துப்பாக்கிகள். அலுமினியப் பளபளப்பில், கருப்பு மினுக்கலில்,இரட்டைக் குழலோடு சரம் சரமாக சணலில் கட்டித் தொங்கும். ஸ்கூல் போகும் போதும் வரும்போதும் ஆசைஆசையாய் எட்டிப்பார்த்து , எச்சில் விழுங்கி, வீட்டில் கோரிக்கை வைத்து கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,கிடைக்கும். பின் கேப்புகள். வாங்கி சுருள் சுருளாய் கோர்த்து, வெடிக்கும்போது ...அப்... ப்....பாஜென்ம சாபல்யம் தான். +1 படிக்கும்போது கூட காலாண்டு தேர்வு ஹாலில் சுருள் கேப்பு வெடித்தது ஞாபகம்இருக்கிறது.

அறுபது நாளைக்கு முன்பிருந்தே வெடி வாங்க லிஸ்ட் தயாராகும். குருவி வெடி, யானை வெடி, லக்ஷ்மி வெடி,டபுள் ஷாட் என்று எழுதி வைத்து, எங்கு வாங்கலாம். சிவகாசியில் நேரே வாங்கினால் விலைகுறைவாமே..ஸ்கூல் ·ப்ரெண்ட் எத்தனை ரூபாய்க்கு வாங்கினான். நாம் அவனை விட அதிகம் வாங்கவேண்டுமா..??என்று பல பல கேள்விகள் . சந்தேகங்கள். ஆசைகள். அபிலாஷைகள். சில பேர் வீ ட்டில்தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். விட்டு வாசலில் உட்கார்ந்து (டேய்...அவங்க வீட்டு வாசல்ல போய் உட்கார்ந்து 'பே' ந்னு பாத்துகிட்டு நிக்காதடா - அம்மா) அவர்கள்வெடிப்பதை, வீட்டுக்கும் வாசலுக்குமாய் ஓடி ஓடி ஊதுபத்தியால் திரியில் வைத்து விட்டு வருவதை, அவர்கள் த்ரில்லை, வெடிப்புகை வாசனையை ஏக்கத்தோடு உக்காந்து பார்த்து விட்டு, வீட்டுக்குள் வந்து என் வெடி லிஸ்டைஇன்னொரு தடவை சரி பார்த்துவிட்டு கனவுகளுடன் தூங்கிப் போவேன்.


தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு தடக்கென்று அப்பா வெளி ஊரிலிருந்து வெடி வாங்கி வந்து விடுவார். பிரித்துப் பார்த்தால்எல்லாம் மத்தாப்பு, தீப்பெட்டி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வானம் என்று தலையில் இடி விழும். கேட்டால்"சீ..நீ சின்னப் பையன். வெடி யெல்லாம் வெடிக்கக்கூடாது. மத்தாப்பு போதும்' என்ற கண்டிப்பு . தீபாவளிக்கு தீபாவளி வந்து போனதே ஒழிய , நான் பெரியவனாகவெ இல்லை. அப்பாவின் மத்தாப்புபாக்கெட்டுகளும் குறையவே இல்லை.


மெல்ல மெல்ல இதில் நாட்டம் குறைந்து, தீபாவளி புது ட்ரெஸ், புது படங்கள், சாட்டிலைட் டீவி சிறப்புநிகழ்ச்சிகள் என்று வேறு திசையில் பயணப்பட்டது மனசு. காலையில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு சாஸ்திரத்துக்கு இரண்டு வெடிகொளுத்திப் போடுவது வரை வந்தது நினவுக்கு இருக்கிறது. பிறகு வேலை தேடி வெளியில் பயணப்பட்டு, சில வருடங்கள் தீபாவளி எப்போ வருகிறது என்பதே மறந்து போய், வாழ்க்கையில்/ மனதில்ஏகப்பட்ட வெடிகள் வெடித்து ரணப்பட்டு, புகை மூட்டமாய் போய், மீண்டு, தெளிந்து ,மணமாகி, லாப் டாப்பில் cracker.exe யை வெடித்துப் பழகிய பிளளையோடு ஊருக்கு தீபாவளிக்கு போனேன். அப்பா தீபாவளிசாமான் வாங்க லிஸ்ட போடச்சொன்னார்.
பட்டாசு லிஸ்ட்டில் ஒரே மத்தாப்பாக பார்த்து விட்டு நிமிர்ந்த அப்பாவின் பார்வையை, அவரது புன் சிரிப்பை, அதன் அர்த்தத்தை எழுத எனக்கு ஆயிரம் விரல்கள் இருந்தாலும் போதாது.


==================================================================

படித்துவிட்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் ரெ.கா எழுதினார்:

தீபாவளி வெடி பற்றி சந்தோஷமாக பேசு முன்னர், இதை செய்வது சிவகாசி குழந்தைகள் என்று நினைவில்வைத்திருப்பது முக்கியமான விஷயம் என்றார்.

எனக்கு வெறுத்துப் போய், மயக்கம் வராத குறை. என்ன சொல்ல..??

அதுவும் ஒரு கோணம் தான். ரொம்பவே விரிந்த கோணம். :-)


மரத்தடி மண்டகப்படி - 2

நம்பிக்கை மனிதர்கள்
===================

தூரத்திலிருந்து பார்த்தால் ஸ்கூல் பையன் போலத்தான் இருப்பார் ராட்னி வாங். அமெரிக்காவில் செட்டில்ஆகிவிட்ட மூன்றாம் தலைமுறை சீனர். ராக்லின் என்ற இடத்தில் இருந்து சாக்ரமண்டோ வரை ரயிலில் வந்திறங்கி, வெயிலோ மழையோ, ஸ்டேஷனிலிருந்து குழந்தைகள் ஓட்டும் குட்டி ஸ்கூட்டரில் ஒரு காலை வைத்து, இன்னோருகாலால் உந்திக் கொண்டே வருவார். "ர்" வராது என்பதால் 'ஹாய் ...சுண்டா" என்பார். எப்போதும் சிரித்த முகம்தான். ட்ரேட்மார்க் அரசு ஊழிய சோம்பேறித்தனமும், ஒபீ யும் அடிக்காமல், சின்சியராக வேலைபார்க்கும் ஆசாமி. போன வருடம் ஒரு நாள் அவருடைய டீன் ஏஜ் வயசுப் பெண் லாஸ் ஏஞ்சல் ஜூவுக்கு வெளியே நடந்த ஒரு விபத்தில் அடிபட்டு கோமாவில் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்து, மூன்றாம் நாள் உயிர் விட்டாள். அவருக்கு அவ்வளவு வயசில் பெண்ணிருப்பதே எனக்கு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் சம்பவம்முடிந்து ஆபிசுக்கு வந்தவரை விசாரிக்கப்போன என்னிடம், உடையாமல் கொள்ளாமல் திடமாக பேசிக்கொண்டிருந்தது.

பின் கொஞ்ச நாள் கழித்து கண்ணில் பச்சை கலர் மாஸ்க் போட்டுக் கொண்டு, தமிழ் சினிமா வில்லன்மாதிரி வந்தார். ஆள் என்னைபோல சோடா புட்டி. அதனால் லேசிக் சிகிச்சை செய்து கொண்டதாக சொன்னார். ஆனால் அவர் கெட்ட நேரம், ஆபரேஷன் செய்யப்பட்ட இடம் சரியாக ஆறாமல், எல்லாம் அவுட் ஆ·ப் ·போகஸில் தெரிந்து முன்பை விட பார்வை மோசமாகி விட்டது. ஆபரேஷன் செய்த டாக்டரை ஸ்யூ பண்ணுய்யா என்றேன். என்னத்துக்கு சுண்டா..என்றார் அதே சிரிப்போடு.

லேட்டாக வேலை பார்த்து விட்டு ஒரு நாள் வேக வேகமாக பார்க்கிங் லாட் சென்றுகொண்டிருந்தேன். ஆபரேஷனால் பாரவை பாதிக்கப்பட்டு, இரவில் சரியாக கண் தெரியாத அவர் அந் நேரத்துக்கு தன் ஸ்கூட்டரில் உந்திக் கொண்டு வர " என்ன இவ்ளோ லேட் ராட்னி. ராக்லின் போறதுக்கு இந்நேரத்துக்குமேல் ட்ரெயின் இருக்கா..?? என்று கேட்க, தான் இப்போது டவுனிலியே தங்கி இருப்பதாகவும், வெள்ளைக்கார மனைவி தன்னை டைவர்ஸ் செய்து விட்டதாகவும் அவர் சொல்லும்போது, நான் குறுக்கிட்டேன். " என்னராட்னி..வாழ்க்கையிலே இவ்ளோ நடக்குது. நீங்க பாட்டுக்கு கேஷ¤வலா சுத்திகிட்டு இருக்கிங்க...." என வினவவும் " இல்லை ...சுண்டா..என்னால முடியலை. எப்போ வெடிக்கப் போறேன்னு தெரியலை. அப்பப்ப பொறுமை இழப்பது எனக்கே இப்போ நல்லா தெரியுது. ஆனா என்ன பண்ணி அதை அடக்கறதுன்னு தெரீலை. எப்படியாவது என் வைப் மனசு மாறிடும்னு தோணுது. அதுதான் எனக்கிருக்கிற கடைசி ஹோப்" என்கிறார் சிரித்துக்கொண்டே....

ரவிஷங்கரின் ஆர்ட் ஆ·ப் லிவிங் கோர்ஸ¤க்கு போன என் நண்பன் ஒருவன், மூன்றாவது நாள் தன் உள்மனச்சோகம் உடைய, ஆறு மணி நேரம் அழுது கொண்டிருந்தானாம். ராட்னி அந்த வகுப்புக்கு போனால எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன்.

பயமாக இருந்தது.


மரத்தடி மண்டகப்படி - I

முதல் ஆட்டம், இரண்டாம் ஆட்டம் என்று ·பர்ஸ்ட் ஷோ,செகண்ட் ஷோவை சொல்வார்கள் கிராமங்களிலும், கிராமம் மாதிரி இருக்கும் முனிசிபாலிட்டிகளிலும். இந்த ஆட்டம் என்கிற வார்த்தையே பழைய கூத்துக் கலாசார, நாடக கால வழக்கிலிருந்து வந்ததோ என்று எனக்கு ஒரு சம்சயம் உண்டு. பவளக்கொடி என்று எங்குபார்த்தாலும் சாணி தாளில் மாரியம்மன் தீமிதி காலங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அதே போலவே சதிரும். தஞ்சை பாலாமணி என்ற சதிர் ஆட்டக்காரர் சுதந்திரபோராட்டத்தில் எல்லாம் பங்கு பெற்றதாககதை கேட்டதுண்டு.

காரைக்குடி அருகே கீழ்ச்சிவல்பட்டியில் கொஞ்சநாள் டூரிங் டாக்கிஸ் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட என் தாத்தாவைத் தவிர யாரும் ஸீஸனுக்கு போய் ஆட்டம் போட்டது இல்லை.

இப்போது இங்கே நான்.

இது டூரிங் டாக்கிஸோ, கூத்துக் கட்டலோ, பவளக்கொடியோ, சதிரோ இல்லை ரிக்கார்ட் டான்ஸோ, வந்தநாளுக்கு ஏதாவது பண்ண முடிந்தால் சந்தோஷம்தான்.

எங்கிருந்து ஆரம்பிப்பது.....??

ம்ம்... சொக்கன் ஆட்டோவில் கூட்டிவந்து ரா.கா.கி யில் ஏற்றிவிட்ட தினம் ஒரு கவிதைதொண்டரடிப்பொடிகளில் நானும் ஒன்று. அவர்கள் பேசும் விஷயம் புரியாமல் கை, வாய் மெய் பொத்திகொஞ்ச நாள் பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருகையில், யார் மூலமாகவோ மரத்தடி பற்றி தெரிய வந்தது.ரா.கா.கி மேல் பரம பக்தியோடு இருந்த எனக்கு க்ளப் முக்கியஸ்தர்கள் மரத்தடியில் நிறைய எழுதுவதைப்பார்த்து சற்றே எரிச்சல் கூட வந்தது. அதற்கு முன்பே நான் மரத்தடியில் துண்டு போட்டு வைத்திருந்தாலும்,ஏதும் எழுதியதில்லை. இளைஞர்கள் ஜாலியாகப் பேசிக் கொண்டு, கலாய்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைஎனக்கும் கொஞ்சம் ஜாலியாகவே இருந்தாலும்....எதோ ஒரு தயக்கம். இலக்கியம் இங்கே பரிமாறப்பட்டாலும், ஆதியில் இங்கே தனிமனித தொடர்புகளுக்கும், நட்புக்குமே முக்கியம் இருந்தது என்று நினைக்கிறேன்.இப்போதும் அப்படித்தானோ..?? மதியை நான் முதலில் படித்தது கோணல் பக்கங்களில். சாரு நிவேதிதா சொன்ன பெண்கள் எல்லாம் இப்படியே இருந்தால் இணையத்தமிழ் இன்னம் எத்தனை செழித்திருக்கும்என்று யோசிக்க வைக்கிற,(கறி தின்னு எலும்பு ஒதுக்கற - நன்றி: ஆப்பு) நபர்.

அவர் அழைப்பின் பேரில் இன்று இங்கே எழுதுவது சந்தோஷம்தான். ஆயினும் மற்ற குறுக்கீடுகள் அகன்றுமரத்தடியில் நானும் ரெகுலராக எழுத ஆரம்பிக்கும் நாள்தான் என்னைப் பொறுத்தவரை, எனக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான நாள்.

எழுதும் நாளன்று, என்னைப் போல பொடியனை, இணையத்தில் மட்டுமே தமிழ் படிக்கின்ற வாய்ப்பு இருக்கிறஒரு தான் தோன்றியை, குமுதம், கணையாழி, கலைமகள் இன்னபிற எண்ணிலடங்கா பத்திரிக்கைகளில் எழுதிபுகழ்பெற்ற ஒரு எழுத்தாளினி கூட சேர்ந்து மதி எழுத வைப்பது என் நல்லூழ்.

மாமியின் எழுத்தைப் படிக்கிறவர்கள், என்னையும் கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். மூக்கனின் அதே கோணங்கித்தனங்களை இங்கேயும் அரங்கேற்ற இதோ வந்தேன்.

மரத்தடிக் கொண்டாட்டம்

இன்று நாள் முழுதும் மரத்தடி ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்று என் தான்தோன்றித்த்னத்தை அங்கேயும் அரங்கேற்றப் போகிறேன்.

என் பினாத்தல்கள் அத்தனையும் இந்தத் திரியில் வெடிக்கும் என்பதறிக.

Monday, August 30, 2004

புத்திபூர்வமான ரசிகர்..??
======================

என்னுடைய முந்தைய பதிவில் சேர்த்திருக்க வேண்டிய விஷயமிது. ஆனால் தனிமரியாதை செய்ய வேண்டுமென்று தோன்றியதால் இங்கே எழுதுகிறேன்.

பத்ரியின் இலக்கியச்சிந்தனை கதைத் தேர்வு சம்பந்தமான பேச்சை படித்து முடித்ததும் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பத்ரியை ஒரு டெக்னோக்ராட்டாக, தினமணி போன்ற வடிவம் உள்ள ஒரு வலைப்பூவை நடத்துபவராக, கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள ஒரு ஐ.ஐ.டி பஸ் மண்டையாக, அமெரிக்காவில் 'சாத்தமுசாதம்' சாப்பிட்டு படித்துவிட்டு இந்தியாவில் தொழில் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்துபவராக, எனக்குத் தெரியும். மடலாடற்குழுக்களிலும், மற்ற இடங்களிலும் வரும் அவர் கட்டுரையில் தினப்பத்திரிக்கை செய்தி வாசனை நிறைய அடித்தாலும், புனைவுப் படைப்புகளிலும் ( உதா: விடுதலை இனி இல்லை - நான் தனியே சேமித்து வைத்த கதை) அவருக்கு ஆர்வம் இருப்பது தெரியும்.

ஆனால் இலக்கிய சிந்தனை பேச்சினைப் படித்தபின்னர்தான் அவர் வாசிப்பின் நீள அகலங்கள் புரிந்தது. எழுத்தை தினப்படி எழுத வேண்டிய கட்டாயத்திலிருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களுக்கு இம்மாதிரியான விசாலமான வாசிப்பு தேவை. சாத்தியமும் கூட. ஆனால் இவருக்கு இவ்வளவு படிக்க நேரம் கிடைப்பது, இத்தனை தமிழ் வாசிப்பு ஆர்வமிருப்பது மிக நல்ல விஷயம். இவருடைய நிறுவனம்தான் கிழக்கு பதிப்பகத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அறிகிறேன். தமிழுக்கு சர்வதேச மதிப்பு கூடி வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழ் எழுத்தாளர்கள் வலை வெளியில் உலா வர ஆர்வம் காட்டும் இந்த சமயத்தில், பத்ரி மாதிரி ஒரு புரவலருக்கு, தமிழ் புத்தக ஆர்வமும், தமிழ் பதிப்பக தொழில் சார்ந்த விருப்பமும் வந்திருப்பது, கண்டிப்பாக தமிழம்மாவுக்கு நல்லது.

தமிழ் எழுத்தாளர்களுக்கு பொற்கிழி தர வேண்டாம். எழுதின எழுத்துக்கு ஒழுங்காக சேர வெண்டிய ராயல்டி கொடுத்தாலே போதும்...கிழக்குக்கு எப்போதுமே மேற்கு இல்லை.

சீக்கிரம் க்ரெடிட் கார்டு உதவியோடு புத்தகம் வாங்கும் வசதியும் ஏற்படுத்தித் தாருங்கள் பத்ரி.


மனசும் புத்தியும்
===============

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் தகப்பனார் ஒரு முறை சொன்னார். " கலைஞர்கள் மிக மிக உணர்ச்சிவயப்படுபவர்கள்.அதனாலேயே சமூகத்தின் ஒழுக்க விதிகளை அவர்கள் கண்டுகொள்ளாமல், குடியர்களாகவும், புகைப்பிரியர்களாகவும், பூவைப்ரியர்களாகவும் இருக்கிறார்கள். குடும்பவாழ்க்கை சோபிக்காமல் அல்பாயுசிலேயே உயிர் விட்டு விடுகிறார்கள்" என்றார்.

கிட்டத்தட்ட அது உண்மையாகத் தான் தோன்றுகிறது. இந்த வாரம் என் மனசுக்குப்பிடித்த பாலுமகேந்திரா, விகடனில் வாய் திறந்திருக்கிறார். எத்தனைதான் மெளனிகாவைப் பற்றி சொன்னாலும், என்னால் முடியவில்லை.தவறிவிட்டேன் என்கிற அவர் நேர்மையான தோல்வி மனப்பான்மைதான் தெரிகிறது அந்தப் பேட்டியில்.

பாலுவின் படமும் சரி, அவர் தேர்ந்தெடுக்கும் கதாநாயகிகளும் சரி, எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா..ஓஹோவென்று பிரமாண்டம் பண்ணாமல், மனிதனுக்கு உள்ளிருக்கும் ஒரு கவிஞனை தொட்டுத் தடவுவது மாதிரி எத்தனை படங்கள்...மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், மூடுபனி...எத்த்னை சொல்வது. ஷோபாவிலிருந்து, அர்ச்சனா வரை, மெளனிகா உட்பட எத்த்னை லட்சணமான கதாநாயகிகள். சிவப்பும், பளபளப்பும் கோலோச்சுகின்ற செல்லூலாய்டு உலகில் இத்த்கைய 'கருப்பு' கதாநாயகிகளை தன் படத்தில் நடிக்க வைக்க தன் ரசனையின் மேல் அவருக்கு எத்தனை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்...! அந்த ரசனைதான் அவரை அகிலாம்மாவிற்கு 'துரோகம்' இழைக்க வைத்திருக்கிறது. புத்தியும் மனசும் வெவ்வேறாகப் போன கலைஞர்களுகே உண்டான பலவீனத்தின் சமீபத்தைய பலிதான் பாலு. காலம் அவரைக் காப்பாற்றி, இரண்டு பேருக்காவது (?!!) அவரை நல்ல கணவனாக வைத்திருந்து நமக்கு இன்னமும் பல மயிலிறகு படங்களை அவர் மூலமாக அறிமுகப்படுத்த வேண்டும்

கிருத்திகா, ஜீவஜோதி என்று தறிகெட்ட அண்ணாச்சியும், செரினா etc etc என்று ஓடிய நடராஜனும், ஜெயலட்சுமி பின்னால் ஒட்டுமொத்தமாக ஓடிய தென்மண்டல (கே)காவலர்களும் கலைஞர்களா என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் நான் அப்பீட்.

உள் வேறு, புறம் வேறு என இரட்டை வேடம் காட்டி கொள்கை முழக்கம் செய்வதை விட, பாலு மாதிரி பகிரங்கமாக பேச நிசமாகவே தில் வேண்டும்.

Friday, August 27, 2004

காணாமல் போனவர்கள் - தேன்சிட்டு
=================================

normal_nanthithadas

சொக்கன் மூலம்தான் இந்தப் பெயர் கேள்விப்பட்டேன். தி.ஒ.க வில் கவிதைகள் நிறைய எழுதுவார். தடலடியாக எழுதாமல், புரட்சிக் குரலெல்லாம் கொடுக்கும் பெண்ணியவாதியாக இல்லாமல், பழமைவிரும்பிகளால் கண்டனத்துக்குள்ளாகப்படும் "பப்பிஷேம்" கவிதைகள் எல்லாம் எழுதாமல், எழுதும பெண் கவிஞர் தேன்சிட்டு. மடலாடற்குழுவில் சேர்ந்த காலங்களில் முகமூடிப் பிரச்சினை வந்தபோது, யாரோ இவரை தேன்சிட்டு முகமூடியா ..?? ஒரிஜினல் பெயரென்ன..?..முகமென்ன..என்று கலாட்டா பண்ணித் தொலைக்க, அத்தனை விவகார முகமூடிகளும் பார்த்துக்கொண்டிருக்கையில், தன் ஃபோட்டோவை யாஹூ ப்ரொஃபைலில் போட்டு, என் பேர் திலகா..என் பேர் திலகா என்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் மருத்துவம் தொடர்பான படிப்பு படித்துக் கொண்டிருந்தவர், தான் கண்டதையெல்லாம் நல்ல முறையில் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அனுப்பிக் கொண்டிருந்தார். இட்லியைப் பற்றியெல்லம் கூட கவிதை எழுத முடியுமா..?? என்று என்னை ஆச்சரியப்படவைத்தவர். மரத்தடி, ராயர் காபி க்ளப், அகத்தியர் என்று பல குழுமங்களில் உள்ளவர்களோடு உறவுமுறை பெயர்கள் எல்லாம் சொல்லி எல்லாரையும் விளித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தார். கவிதை ஆர்வம் உள்ள நண்பர்கள் புகாரி, சேவியர் கற்பகம் இவர்களோடு உயிரெழுத்து என்ற மடலாடற்குழு ஆரம்பித்தார். என்ன ஆச்சோ தெரியவில்லை...பெர்முடா முக்கோணம் போன ப்ளேன் போல திடீரென்று "காணாமல்" போய் விட்டார். ஆமாம்...நிசமாகவே ...காணாமல்தான் போய்விட்டார். உயிரெழுத்து நண்பர்களுக்கு மேல் விவரம் தெரியலாம்.

காணாமல் போன அந்த வானம்பாடி வகைக் கவிஞர் என்றாவது ஒரு நாள் தடாலென்று திரும்பி வந்து இணைய ஊடாட்டம் செய்ய வேண்டும் என்பது
ஆசை மட்டுமல்ல...வேண்டல் கூட.

அவருடைய கவிதை ஒன்று கீழே:


எட்டாத தொலைவு
**************************

பிரிந்திராத சொந்தங்களே
நான் மாறிவிட்டேன்
சுத்தமாக விலக்கிவிட்டேன்-
உங்களை என்னிடமிருந்து
இதைச் சொலவ்தில்
மிகுந்த வருத்தம்தான் எனக்கு.

பயந்தவளென்றும்
பாவமென்றும், நான்
சாதுவென்றும்
சொல்லிச் சொல்லி என்னைப்
பாதுகாத்தவர்களை மறந்து
எட்டாத தொலைவில்
இன்னொரு வாழ்க்கை

தயவுசெய்து
என்னைத் தேடிவராதீர்கள்
எனக்குள் நானே
தொலைந்து விட்டபிறகு,
இதென்ன
இறுதி ஆசைபோல்
இழந்த நினைவுகள்.?

என் வாழ்வில் நீங்கள்
வந்துபோகும் அத்தியாயங்கள்
முடிந்தே விட்டன
என்றாலும்
மனதில் சில
ஈரங்கள் மிச்சமுண்டு
கண்ணீர்த்துளிகளாய்..!

மணமான பெண் தன் பிறந்த வீட்டை பார்த்து சொல்வதாய் இருக்கும் இந்த கவிதை, கிட்டத்தட்ட அவருடைய நிலையை நமக்கு சொல்வது போல் இல்லை..??இதுதான் எனக்குத் தெரிந்து இணையத்தில் அவர் கடைசியாய் எழுதியது.

அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பிறகு, கொஞ்ச நாள் கழித்து திரும்ப வந்து கவிதை எழுதிக்கொள்ளலாம். அதுவரை என் தட்டில் இட்லியை பார்க்கும்போதெல்லாம் கோணலாக நான் சிரிப்பதை பார்த்து வீட்டில் விழி பிதுங்கட்டும்.

காணாமல் போனவர்கள் பட்டியல் தொடரும்.

Thursday, August 26, 2004

குறும்பட வரிசை
===============

வெ.சா வின் கனடா சந்திப்பு நடந்த விஷயத்தில் தான் முதன்முதல் நான் சுமதி ரூபன் என்ற பெயரைக் கேட்டேன். பிறகு மனஓசையில் அவர்கள் குறும்படம் பற்றிய சேதி கண்டாலும், இன்று கேவீயார் வலைப்பதிவு படித்த் பின் மனுஷி பார்த்தேன்.

நல்ல படம. அருமையான நடிப்பு. ஆரம்பக் காட்சியிலிருந்தே நடந்து வரும் பெண்ணின் முக இறுக்கமும், அலுப்பும் , மென்மையான இசையும் நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. உள்ளே நுழைந்தவுடன், கஜோல் டான்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் கணவன், இவள் இருப்பையே கண்டுகொள்ளாமல் சொரிந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருக்கிறான். உள்ளே செல்லும் அவள் இந்த பாராமுகத்தில் வந்த எரிச்சலை சாப்பிங் போர்டில் இருக்கும் மாமிசத்தில் மீது ஓங்கி ஓங்கி காட்டுகிறாள். அது கூட அவன் படம் பார்ப்பதற்கு இடஞ்சலாக இருக்கிறதே என்று முகம் சுளிக்கிறானே ஒழிய, எழுந்து வந்து இன்னதென்று கேட்பதில்லை. நேரம் ஓடுவதை 'மின்சாரக் கனவு' காட்சிகள் மாறுவதிலும், நேரம் ஓடி படம் முடிவதை AVM லோகோ மூலம் காட்டுகிறார் டைரக்டர். ஒரு பேச்சுக்கூட பேசாமல் காஃபி, சாப்பாடு இன்னபிற அயிட்டங்கள் அந்த சாக்கு மூட்டைக்குள் கொட்டப்படுகிறது. சரிதான்...ஏதோ சண்டை போலிருக்கு, அதனால்தான் ஒரே வீட்டுக்குள் இருந்தும், இப்படி ஒட்டாமல் இருக்கிறார்கள் இருவரும் என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் சென்று கடைசி காட்சியில் ஒரு விகார இளிப்போடு படுக்கையறையில் அவசரமாக எழுந்து உட்காரும் அந்த சாக்கு மூட்டையின் முகத்தில் படத்தை முடிக்கிறார் சுமதி.

வசனமே இல்லாமல், நல்ல இசை( மிக்ஸிங்) உதவியோடு, எடிட்டிங், மற்றும் நடிப்பும் சேர்ந்து மனுஷியை உச்சத்துக்கு தூக்கி, பாலுமகேந்திரா போன்ற ஒரு கை தேர்ந்த டைரக்டரின் படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. குறும்படங்களை நான் noose ல் இருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன். மனுஷி ஒரு நல்ல தொடர்ச்சி.

இவரின் மனமுள் என்ற படத்தையும் பார்த்தேன். ஆனால் என்ன ஏதென்று சரிவர விளங்கவில்லை. இத்தனைக்கும் படத்தில் வசனமுண்டு. தலைப்புக்கும் படத்துக்கும் கூட தொடர்பு விளங்கவில்லை.இதுதான் சுமதியின் முதல் படமாம். இதற்கும் மனுஷிக்கும் இடையே ஏகப்பட்ட வளர்ச்சி இருப்பது கண்கூடாக தெரிகிறது.

நானும் அருணிடம் அவருடைய மற்ற படங்களையும் வலையேற்றம் செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்னமும் சாமி மலையேறவில்லை. படமும் வலையேறவில்லை.

நிறைய படங்கள், இது போன்ற அழுத்தமான முத்திரைகளோடு வரவேண்டும்.



Wednesday, August 25, 2004

யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர
==================================

கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்றவர்கள் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஸீட்டிலும் இருக்கும் பெண் பக்கத்தில் உள்ள இடம் காலியாக இருக்க பஸ் கிளம்பும் நேரம், பையன்கள் வரிசையாக அந்தந்த இடங்களில் அமர்ந்து கொள்ள வண்டி புறப்படும். படிக்கும் நாட்களில் இவை எல்லாம் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அதிக நெருக்கமாக பழக விரும்பும் இருவர் அதற்கேற்றார்போல உட்கார விரும்புவதாக நினைத்துக் கொண்டேன். பல வருடங்கள் கழித்து என் நெருங்கிய ஸ்நேகிதியுடன் பேசும்போது இவ்வாறு சொன்னாள் " மத்த பசங்களா ஏதாவது நினைச்சுகிட்டு ஒதுங்கி போயிடுறாங்க. உண்மையில் பெண்களுக்கு பெரும்பாலும், கூட படிக்கும் எல்லா பையன்களுடனும் பழக விருப்பம் இருக்கும். இவனுகளா ப்ராண்ட் பண்ணிட்டு, பின்னாடி இவனுகளா ஏதாவது பண்ணிகிட்டு அலையறான்க" என்றாள்.

தினவாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்புகிறோம். அந்த முடிவுக்கான காரணங்களை நம்மை பாதிக்கும் காரணிகளைக் கொண்டே அளந்து அந்த முடிவை எடுக்கிறோம். கேட்கும் செய்திகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், கற்பிதங்களை கொண்டும் எடுக்கப்படும் முடிவுகளும், அது சார்ந்த கொள்கைகளும், அது பிரகடனப்படுத்தப்படும்போது ஏற்படும் விவாதங்களும் சர்ச்சைகளும் நமக்கு போதையூட்டுகின்றன. விவாதப்பொருளாகி விடும் காரணத்தால், நம் முடிவுகளின், இன்னமும் அறுதியிடப்படாத வீரியமான உண்மை நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது. அதன் மீது நமக்கு காதல் உண்டாகிறது. அந்த உண்மையை சாசுவதப்படுத்தவும், கேட்டறிதல்களினால் உண்டான நம் கொள்கைகளை கெட்டிபடுத்தவும் முனையும் நாம், மாற்று சாத்தியங்களையும், சித்தாந்தங்களையும் நியாயமான முறையில் முன் வைப்பவர்களைக் கூட ஒதுக்க முனைகிறோம். கற்றுக்கொள்ளுதன் பொருட்டு சிந்திக்க, படிக்க ஆரம்பித்த நாம், நம் கற்றல் முடிவுக்கு வரும் முன்பே பாடத்திட்டங்களை அதன் முரட்டு வாசல்களோடு கட்டமைக்க முயல்கிறோம்.

எனக்கு நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்.....

எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்
வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு...

கூடையிலிருந்து சிதறி ஓடும்
ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,
திக்குகளறுத்து எல்லையறுத்து
மானுடம் வெல்லும் அது.

(பிரசன்னரின் கவிதைகளில் ஒன்று)

( குரு சத்ரு ஸ்தானத்தில இருக்காண்டா ன்னு அப்பா அப்ப சொன்னப்ப விளங்கலை. பக்கம் பக்கமா விளக்கம் எழுதும்போது இப்ப நல்லா வெளங்குது... )

Tuesday, August 24, 2004

சுட்ட பட(ழ)ம்
=============

jeyalalitha

சுட்ட இடம் மறந்து போச்...
சாத்தான்குளத்திலிருந்து தேவனின் குரல் போல...
============================================

srilanka


http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/8977


ஏதோ கதவு திறந்த மாதிரி இருக்கிறது. ஆனால் என்னன்னு விளங்கலை. மெதுவா அசை போட வேண்டிய விஷயம்.

நன்றி : ஆசிஃப் மீரான், ராயர் காப்பி கிளப்

பி.கு: யுனிகோடுல வேணுன்னா சொல்லுங்க. இங்க ஒரு முறை தனியா போட்ருவம். இல்லைன்னா ஈ-கலப்பையோட வாசிங்க. அருமையான அலசல்.


Monday, August 23, 2004

தமிழ் க்ளாஸ்
============

குழந்தைகளின் படிப்பைப் பற்றியும், இந்திய அமெரிக்க கல்வி முறை வேறுபாடுகள் பற்றியும் நான் இங்கு ஏற்கனவெ சங்கு ஊதி இருக்கிறேன். இப்போதைய பதிவுக்குக் காரணம் - என் நண்பரின் சமீபத்திய விசிட்.

kids

எல்லா பெற்றோர்களின் முக்கியமான ஆதங்கமே, தான் கோட்டை விட்ட இடங்களில் தன் குழந்தைகள் தவறி விழக்கூடாது என்பதே. அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தக்கால ஆனந்த விகடனில் வரும் ஸ்கூல் ஜோக் ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

மேற்சொன்ன நண்பருக்கு ஒரு சுட்டிக் குட்டி இருக்கிறது. அது பிறந்த நாளிலிருந்தே கையில் பேனாவையும் புத்தகத்தையும் அண்ணாச்சி கொடுத்து விட்டார் போல. ஆய கலைகள் அறுநூற்று நாற்பதையும் (?!!) அந்தப் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்து அதன் இளவயதிலேயே இத்த்னை விஷயங்களை லோட் பண்ணி, அதை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
பாலே நடனம் போகிறது. நீச்சல் வகுப்பு போகிறது. ( குளிர்காலத்தில் வெந்நீர்க் குளம்..:-) ) . ஜிம்னாஸ்டிக் க்ளாஸ் போகிறது. இத்துடன் வாரத்துக்கு மூன்று நாட்கள் ஸ்கூல போகிறது. இளைத்துக் கறுத்து இருமிக்கொண்டே வாயடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்...சிசுவுக்கு மூன்று வயது.

என்ன சொல்ல...??

வாழ்க்கையில் பொருளாதாரம் தரும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்காமல்தான் பலபேர் தனக்குப் பிடித்த துறைகளை எல்லாம் விட்டு விட்டு வேறு துறைகளில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வற்புறுத்தல்கள் அடுத்த தலைமுறைக்கு இப்போது இல்லாத பட்சத்தில் அவர்கள் விருப்பம் என்ன என்று பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையை வடிவமைத்தால் என்ன குடிமுழுகிப் போகும்..?? நான் இஞ்சினியரிங் படித்தேன். என் பிள்ளை அட்லீஸ்ட் IIT படிக்க வேண்டும். நான் டாக்டர் சீட் கிடைக்காமல் விலங்கியல் படித்தேன். என் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று பிள்ளைகளை தங்கள் காலநீட்சியாக பார்ப்பதால் இந்த விபத்துகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிள்ளைக்கு ட்ராயிங் பிடித்திருக்கிறதா...க்ரியேட்டிவ் டிசைனிங் போகட்டும். ம்யூசிக் பிடித்திருக்கிறதா, கிடார் கற்றுக் கொள்ளட்டும். விளையாட்டு பிடித்திருக்கிறதா ஸ்போர்ட்ஸ்மேன் ஆகட்டும். கம்ப்யூட்டர் பிடித்திருக்கிறதா..அதைப் படிக்கட்டும் என்று எல்லாமே ஓரளவிற்கு குழந்தைகளின் விருப்பம் சார்ந்து நிகழ்ந்து விட்டால், நம்மைபோல 'ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்" என்று அழுகுணி ஆட்டம் ஆட வேண்டி இருக்காது. மனசாட்சி உறுத்தலோடு இப்படி ஆஃபிஸ் நேரத்தில் ப்ளாக் ஆட்டம் ஆட வேண்டி இருக்காது.

போன வாரம் இங்கே வந்திருந்தபோது அதே நண்பர் " என்ன சுந்து..சூர்யாவை தமிழ் க்ளாஸ் சேக்கலியா..என் பொண்ணு அடுத்த வாரத்திலேர்ந்து தமிழ் க்ளாஸ் போறா" என்று அநாயாசமாக ஒரு ஹைட்ரஜன் பாம் போட்டார். இத்தனைக்கும் நண்பருக்கு என் தமிழ்ப்பித்து பற்றி ஓரளவிற்கு தெரியும். பாம்படிக்கவும், சொறிந்து கொள்ளவும் நான் இணையத்தில் நடத்தும் லீலைகளும் தெரியும். சங்கடமாக ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டு கப்சிப் ஆகி விட்டேன்.

ஜிம் குட்டிகரணம், பாலே, ஆக்ஸெண்ட் போட்டு ஒரு இங்க்லீஷுடன் சமீபத்திய சேர்க்கையாக, அந்தச் சுட்டிக் குட்டி எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தை எனக்கு எழுதிக்காட்டி, நான் களிக்கும் நாளை ஆர்வமுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வா.....ரம்
=============

நண்பரொருவர் வீடு மாற்றத்திற்காக, பொருட்களைத் தூக்கி இறக்கப் போயிருந்ததில் சனியும், உடல்வலிக்கு "தெளித்துக்" கொண்டு தூங்கி லேட்டாக எழுந்து கலிஃபோர்னியா ஸ்டேட் ஃபேர் போய் வந்ததில் ஞாயிறும் போனதில், இன்றுதான் அரக்கப்பரக்க எழுந்து வந்து உலாவினேன்.

ஆஹா...வலைவெளியெங்கும் காமெடிக்கு குறைச்சலே இல்லை.

விஜயகாந்த் நிறஞ்ச மனசுக்காரன் ஷூட்டிங்கில் இருந்ததால் அவர் மனைவி பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு லியாகத் அலிகான் அறிக்கையை பத்திரிக்கைக்கு கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். அந்த அறிக்கை முதல் காமெடி

பாண்டிசேரியில் பாக்யராஜ் ஒரு விழாவில் பேசும்போது பல வருடங்களுக்கு முன் தனக்கு துரோகம் செய்த சிஷ்யர்களை தாக்கி முருங்கைகாய் ...ச்..சீ..முந்தானை முடிச்சு படத்தில் தான் வசனமெழுதியதை சொல்ல, சிஷ்யர்களில் ஒருவரான சுந்தரபுருஷன் லிவி காலில் விழுந்து கதறி இருக்கிறார். விழாவில் யாரோ ஒருவர் முருங்கைகாய் கட்-அவுட்டையும், பாண்டியராஜன் குறுவாளையும் நினைவுப் பரிசாக வழங்கி இருக்கிறார்கள். இது ரெண்டு.

C1105_ram sujaathaa

ரவுடி டாக்டர் ( நன்றி : ரா.கா.கி திருமலை) அண்ணல் காந்தியடிகள் வழியில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு விட்டு , கம்பிவலைக்குள் ஒரு மெதப்பான போஸ் கொடுத்துவிட்டு, தொண்டரடியாட்களை பஸ் மறியல் பண்ணச்சொல்லி விட்டு, வீட்டில் போய் வறுத்த முந்திரியோடு விஸ்கி அடித்துவிட்டு தூங்கி விட்டார்.

வயசான காலத்தில் சும்மா இருக்காமல், நம்ம ரிடையர்டு விஞ்ஞானம் ( நன்றி : சினிமா பொன்னையா, தினஉளர்) வலைப்பூக்களை பற்றி க.பெ வில் எழுதிவைக்க, ரமணியால் "பாடல்பெற்ற" சனங்களின் கலாய்ய்ஞ்ஞனும், சுவடு சங்கரும் அவரைப் போட்டு வாங்கி இருக்கிறார்கள். வெங்கட் தாத்தாவைப் பற்றி சொன்ன போதெல்லாம் எனக்கு லைட்டாக இருந்த சந்தேகம், வலைப்பூவைப் பற்றி அவர் உதிர்த்த முத்தைப் படித்ததும் உறுதிப்பட்டு விட்டது. பெரும்பாலான வலைப்பூக்களின் இன்ஸ்பிரேஷனே கற்றதும் பெற்றதும் தான். ஒருவேளை அவர் மட்டும்தான் தான் கற்றதையும் பெற்றதையும் சொல்ல வேணும் என்று யோசித்து விட்டார் போலிருக்கிறது. அலெக்ஸாண்டர் வாழ்க்கை மட்டுமல்ல. கோடி வீட்டு குப்புசாமி வாழ்க்கை கூட சரித்திரம்தான். பகிர்ந்து கொள்ள தன் அனுபவங்களிலிருந்து விஷயம் இருக்கிறதாய் நினைப்பவன் எவனும் எழுதலாம். தமிழும், விஞ்ஞான வியாக்யானமும் சுஜாதாவின் தனியுரிமை இல்லை.

பாவம் என் மதிப்புக்குரிய தாத்தா...


Friday, August 20, 2004

வதம் - ஒரு விளக்கம்
====================

பாபா பற்றிய எனது முந்தைய பதிவை எழுதி முடித்து விட்டு ஒரு நிமிடம் யோசித்தேன், இது தேவையா என்று. நல்லதோ, கெட்டதோ, நண்பரோ மூன்றாமவரோ எனக்கு எதையும் நேரடியாக சொல்லித்தான் பழக்கம். இம் மாதிரி மறைபொருளாக சொல்லி பழக்கமில்லை. ஆனால் இந்த விஷ(ம)யத்தை இப்படித்தான் அவர்கள் ஸ்டைலிலேயே அணுகவேண்டும் என்று முடிவெடுத்தவுடன் என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு அனுப்பினேன் - என்னடா ..இதைப் போடலாமா.? என்ற கொக்கியோடு. தாராளமா போடு. யாராவது இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்றதோடு மட்டுமில்லாமல் உனக்கு இதைப் பதிக்க யோசனையாய் இருந்தால் நான் செய்கிறேன் என்றான். இல்லை என்று நானே பதிப்பித்தவுடன், இதற்கு பதிவில் பின்னூட்டம் தந்தவர்களைவிட தொலைபேசியிலும், தனிமடலிலும் தொடர்பு கொண்டவர்கள் மிக அதிகம். அப்போதுதான் அட...இந்தக் கருமம் பிடிச்ச பதிவைப் போட்டு நம்ம வலைப்பூவை அசிங்கப்படுத்திகிட்டாலும், நல்லதுதான் நடந்திருக்கு என நினைத்துக் கொண்டேன்.சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் திருந்தாமல், நேரடியாக இதை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் வழக்கம்போல cut and paste வித்தையிலும், வீணாய்ப்போன குட்டிக் கதைகளிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். கடைக்கு ஆள் பிடிக்கும் அவசரத்தில் இது மாதிரியானதை எல்லாம் அவர்கள் கேட்க வேண்டியிருக்கிறது....பாவம்.

நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்களோ அது நடந்து, அவர்கள் முகத்திரை கிழிந்து விட்டது. இனி அது எதற்கு. பதிவை நீக்கி விடுங்கள் என்று என் அமெரிக்க நண்பர் ஒருவரும், கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக என் எழுத்துக்களோடு பரிச்சயம் உள்ள என் இந்திய ஸ்நேகிதியும் அறிவுறுத்தினார்கள்.

எனவே அந்தப் பதிவு நீக்கப்பட்டு விட்டது.

Monday, August 16, 2004

சந்தோஷமான விஷயம்
======================


http://www.athens2004.com/en/ParticipantsAthletes/newParticipants?pid=1726086

சுதந்திர தின சோக்குகள்
=====================

p74

‘‘ஆமா... அடிதடி மல்லுக்கட்டுனா சினிமால பொளக்கறீங்களே, அது எப்பிடிங்க?’’ ஆர்வமாகக் கேட்டார்கள்.

‘‘எல்லாம் ஒரு வேகம்தான். ஊர்ல உலகத்துல நடக்கிற அநியாயத்தைப் பாக்கிறப்போ ஒரு வெறி வரும்ல. அதையெல்லாம் மொத்தமா சேர்த்து வெச்சு வாய்ப்பு கிடைக்கிறப்போ வெளுத்து எடுத்துர்றதுதான்!’’ \ விஜயகாந்த் மீசையை முறுக்கிக் காட்ட, கூட்டம் கை தட்டியது.

ரொம்ப நேரமாக கஞ்சி சட்டியுடன் காத்திருந்த ஒரு அம்மாவிடம், ‘‘அது என்னது?’’ என்றார். ‘‘கஞ்சி சாமி...’’ என்று அந்த அம்மா தயக்கமாகச் சொல்ல, ‘‘கொண்டாங்க’’ என்று வாங்கி, கடக் கடக்கென்று குடித்தார் விஜயகாந்த். நானும் இதையெல்லாம் குடிச்சு வளர்ந்தவன்தான். நாம என்ன லண்டன்லயா பொறந்து வளர்ந்தோம்? என்று சொல்ல, கன்னத்தில் கைவைத்து ரசித்தது கூட்டம்.

( கேப்டன் ஷூட்டிங் ஞாபகத்திலேயே இருக்காரு. கலைத் தாகம் ..ம்ம்ம் )

p11

அண்ணாச்சி... சோப்பு போட்டுக்கறீங்களா?’’ என வைகோவை கட்சிக்காரர் ஒருவர் கேட்க, ‘‘வேணாம்... வேணாம். ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னால எந்தத் தமிழன் சோப் போட்டு குளிச்சான்? எனச் சிரித்தபடி அரைமணி நேரம் தாமிரபரணித் தண்ணீரில் ஜாலியாக நீச்சலடித்தார் வைகோ.

( ஐயாயிரம் வருஷம் முன்னாடி தமிழன் ஷார்ட்ஸ் போட்டிருந்தான் என்பதறிக...)

p92

பரிணாம வளர்ச்சி...???!!! ( சின்ன எம்.ஜி.ஆர் திருநாவு )

தத்துவம் நெம்பர் 10010:

சுதந்திரம்ங்கிறது கடவுள் மாதிரி. கடவுள் பேரை சொல்லி சாமியாடி இளம்பெண்களை கற்பழிக்கலாம். அதே கடவுள் பேரைச் சொல்லி ஆதரவற்றவர்களுக்கு கஞ்சி ஊத்தலாம். படிக்க வைக்கலாம்.

பார்க்கிறவர்களின் பார்வையைப் பொறுத்தது அது.

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

( குவாண்டம் இயற்பியல் மாதிரி விடுதலை நாள் வாழ்த்து சொன்ன சுந்தரவடிவேலுவின் நக்கல் .... நச். )


Friday, August 13, 2004

தொட்ட பாவத்திற்கு....
==================

1986-87 ல் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு குடும்பம் குடி வந்தது. தகப்பன் தவறிப்போய், தாய் தன் இரு பெண்களோடும், இளைய மகனோடும் வசிக்க, மூத்தமகன் லண்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக சொன்னார்கள். செல்வமும் , செழுமையும் இருந்தாலும், எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருப்பார்கள். அவர்கள் மகள்களின் நடை உடை பாவனைகள் தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்ததால், அவர்களைப் பற்றி தேவையற்ற பேச்சுகள், பிரச்சினைகள் என்று பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் இலங்கை கலவரத்தினால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள்

*******

கல்லூரியில் படிக்கும்போது ஜூனியர் விகடன் பகுதி நேரப் பத்திரிக்கையாளராக பணி புரிந்து கொண்டிருந்தேன். சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டை முகாமில், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்ததை பற்றி எழுதி அனுப்ப சென்னையிலிருந்து தகவல் வந்திருந்தது. கிராமத்துக்கு சென்று முகாமிலும், கிராமத்திலும் அதைப் பற்றிக் கேட்டால் யாரும் வாயே திறக்கவில்லை. பஸ் ஏறும் சமயம் பின் தொடர்ந்து வந்த ஓரிரண்டு இளைஞர்கள் மருண்ட கண்களோடும், யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்துடனும் திக்கித் திணறி விவரித்தது நினைவுக்கு வருகிறது.

அது நாட்டரசன்கோட்டை இலங்கை அகதிகள் முகாம்.

*********

திருச்சியில் வேலை பார்க்கையில், என் நண்பரின் தோழரொருவர் இலங்கையிலிருந்து வருவார். தமிழ்நாட்டு யுனிவர்ஸிடியில் படித்துக் கொண்டிருந்தார். "பொடியன்களைப்" பற்றியும், எத்த்னை கொடூரம் இழைத்தாலும் இலங்கை தமிழர்களுக்கு அவர்களை விட்டால் வேறு நாதி இல்லாமையால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது பற்றியும், யுத்தகால நெருக்கடியால் சாதாரன சுசூகி எஞ்சினை மாற்றியமைத்து மண்ணெண்ணையிலேயே யாழ்ப்பாணத்தில் பைக் ஓடுவது பற்றியும், கதைத்துக் கொண்டிருப்பார்.

****************

வளர்ந்த , நினைவு தெரிந்த நாள் முதல் இப்படி ஏதாவதொரு வகையில் இலங்கையும், தமிழ் அவலமும் என் மனதில் பதிந்தே வளர்ந்திருக்கிறேன். அதனால்தான், என் பக்கம் நியாயம் இருப்பினும், தூக்கி எறிந்து பேசாமல் அடக்கி வாசிக்கிறேன். சாவுக்கு வா என்றால் கருமாதிக்கு வருகிறாயே என்பதற்கேற்ப தம்பி ஈழநாதன் லேட்டாக வந்து புள்ளி விவரங்களால என்னை புளகாங்கிதப்படுத்திக் கொண்டிருக்கிறார். பொறுமையிழந்து OTL கவிதைகள் எழுதும் நிலைக்கு என்னையும் தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறது. ஏனெனில் எந்த அளவுக்கு நானும் பேசுவேன் என்பது ரமணிக்கும் தெரியும்.

தம்பி ஈழநாதன்... ஒன்றாக, ஒற்றுமையுணர்வோடு இருந்து வந்த வலைப்பதிவாளர்கள் இருகூறாய்ப் பிளவு பட எங்கே பொறி கிளம்பியது என்று சற்றே யோசியுங்கள். வலைப்பூ ஆசிரியராய் இத்தனை பேர் இருந்து இருக்கிறார்கள் . ஆனால் நீங்கள்தான் "ஈழத்து வலைப்பதிவுகள்" என்று வகைப்படுத்தும் திருப்பணியை தொடங்கி வைத்தீர்கள். இது நாளை எங்கே தொடர்ந்து எவ்விதம் முடியுமென்று சற்றேனும் யோசித்தீர்களா..?? பிரிவினையும், வேறுபடுத்திப் பார்ப்பதும் எந்த ரத்தத்தில் ஊறியிருக்கிறது ...யோசியுங்கள். நீங்கள் இளைஞர். வளர வேண்டியவ்ர். கொதிக்கும் குருதியையும், முகிழ்க்கும் எண்ணங்களையும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க எண்ணிக்கொள்ளுங்கள். இந்தியத் தமிழன் எவனும், ஈழத்தவனை அயலானாக பார்ப்பதில்லை. அயலானாக பார்த்திருந்தால் ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ipkf கொடுமைக் கதைகள் தொடர்வதற்கு தார்மீக ரீதியான காரணங்கள் இல்லை இன்று. எப்படி அமைதிபடையில் வந்த ஒவ்வொரு ஜவானுக்கும் வக்காலத்து வாங்கி நான் பொறுப்பேத்துக்க முடியாதோ, அதே போலத்தான், விடுதலைப் புலிகளோட ஒவ்வொரு படுகொலைக்கும் நீங்க பொறுப்பேத்துக்க முடியாது. ராஜீவோட ரத்தத்தால, அமைதிப்படை அட்டூழியக் கறைகளை உங்காட்களே துடச்சு கழுவீட்டிங்க...பிறகு பேச்சென்ன.,கவிதையென்ன...வக்காலத்தென்ன..???

இரண்டையும் பற்றி நாம ரெண்டு தரப்புமே பேசாதிருந்தா தான் இலங்கைப் பிரச்சினை பற்றி உபயோகமா பேச இயலும்.

ஆமாம் , நடு நிலைமையோட எழுத பதிவு ஒண்ணு துவங்கி இருக்கிறீர்களே, அதுக்கு படம் என்ன போட்டு இருக்கிறீர்கள், தெரிகிறதா,,..??
இதுதான் உங்க ஸோ- கால்ட நடு நிலையோட லட்சணம். அங்க எழுதறவன் என்ன எழுதுவான்னு நான் சொல்லணுமா..??

இத்தனை திட்டிகிட்டு, எழுதிட்டு, கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிச்சுகிட்டு இருக்கீறீர்களே, உங்க குடுமபத்தில் இந்த க்ஷணம் இந்திய மண்ணில இருக்கிற, இந்திய சர்வகலாசாலையில படிக்கிற, இந்தியாவில வாழற உறவுகளை எல்லாம் வெளியே கூப்பிட்டுக்க வேண்டியதுதானே. மிருக வெறி பிடிச்ச போலிஸும், ஆமிக்காரனும் அங்கே இருக்கானே...தன் அரிப்புக்கு அங்க சொறிஞ்சுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..என்ன பாதுகாப்பு அங்க உங்களுக்கு...?? நீங்க பண்ண மாட்டீங்க..!! ஏன்னா, எங்களோட ஜனநாயகம் உங்களுக்கு பாதுகாப்பு, எங்களுடைய பரிதாபம் உங்களோட பலம் ( அது எங்க பலவீனம்...!!! ) எங்க அரசியல்வாதிகள் உங்க ஜால்ரா மாடுகள். அதனால நீங்க எப்படி வேணா இருக்கலாம். ப்ரான்ஸிலயும், கனடாவிலும், யூ.கே அரசாங்கமும் மாதிரி தமிழக அரசாங்கமும், அரசியல் வாதிகளும் விலக்கி வைச்சு பாக்க மாட்டாங்க அப்படித்தானே...

எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சு
ஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...
மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)

இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு

அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்.




Wednesday, August 11, 2004

p148



தலைவரே!!!!...சேதி தெரியுமா..?? டெல்லி இன்னோரு அமைச்சர் பதவி தர்றேன்னு சொல்லி இருக்கு

அடப் போய்யா..என்ன பிரயோசனம். தயாநிதிக்கு ஒரு தம்பி இல்லாம போய்ட்டானே... !!!!

Tuesday, August 10, 2004

என் நியாயமான சந்தேகங்களுக்கு பரிசு..??
======================================

வருத்தமாய் இருக்கிறது. வேதனை குமிழி இடுகிறது. தமிழனுக்கு தமிழனே ஆப்பு அடிக்கிறான். வரலாற்றுத் தவறுகளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் அளப்பரிய சக்தியை இம் மாதிரியான விடயங்களுக்கு வீணில் சிலவு செய்கிறான்.

ரமணியின் முதல் பதிவில் இருந்த நிதானமும், நேர்மையும் கூட நேரம் ஆக ஆக வலுவிழநது அவர் சிந்தனை வேறு திசையில் சீற ஆரம்பித்து விட்டது.

என்ன கேட்டேன்..??

இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு மாற்று வழிக்கு ஒப்புக்கொண்டு, அதில் இருந்து பிறழும்போது, இந்தியா பேசாதிருக்குமா..?? உலகத்தில் எல்லோருமா நீதியையும், நிதானத்தையும் பேணிக்கொண்டு சொன்ன வாக்குக்கு குந்தகமில்லாமல் நடக்கிறார்கள். சாதாரண மனிதன் அம்மாதிரி தவறு செய்தால் அது அவனோடு முடியும். ஒரு ஸ்தாபனம் தவறு செய்தால், அது பரவும். பலரை பலி கொள்ளும்...! அதுவே நடந்திருக்கிறது. தவறுக்கு தவறு பரிகாரம் என்று படர்ந்து விஷ விருட்சமாய் வளரும். அந்த விவரத்தை வசதியாக மறந்து விட்டு, தன் தரப்பு நியாயத்தை மட்டும் எடுத்துச் சொல்லிக்கொண்டு இத்த்னை நாள் இணையத்தில் பதிவுகள் வந்ததே, தமிழக/இந்தியத் தமிழர்கள் ஒரு வார்த்தை பேசி இருப்போமா..?? ஏன்..அடிபடுகிறவன் என் சகோதரன்..கற்பழிக்கப்படுகிறவள் தமிழச்சி..எரியும் பிஞ்சுகள் நாளைய சமுதாயம் என்ற உணர்வின் அடிப்படையிலேயே வாளாவிருந்தோம். ஆனால், ஒரு அளவுக்கு மேல் பேசாதிருந்தால், மறுதரப்பு நியாயம் செத்துப் போகிறதல்லவா..?? அதுவே என் பதிவின் நோக்கம்.

என்ன நடந்தது இங்கே..?? தேசபக்தி புதுப்பிக்கப்பட்டதென்றார்கள். யதார்த்தம் பேனாகி, பேன் பெருமாளானது என்றார்கள். பாரதிராஜா படத்து வெள்ளையுடை தேவதைகள் எல்லாம் இழுபட்டார்கள். எளிமை என்றார்கள். தட்டை என்றார்கள். தொலைக்காட்சித் தொடர் என்றார்கள்.

நான் கேட்ட கேள்வி சீந்துவாரில்லாமல் கிடக்கிறது மூலையில்....

தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர் ஆதரவுநிலை மாறியதற்குக் காரணம் இராஜீவ் காந்தி கொலை (ஒத்துக்கொள்கிறேன்; ஆனால், இன்னொரு விதத்திலே என்ன சொல்லவருகின்றீர்களென்றால், "ஏன் இராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்பதிலெல்லாம் எனக்கு(ம் - தித்தமிழக்மக்களுக்கும்) அக்கறையில்லை - ரமணி

உண்மைதான். ஏன் ராஜிவ் காந்தியை கொன்றார்கள் என்பதற்கான காரண காரியங்கள் எந்த இந்தியனுக்கும் முக்கியமில்லை. கொன்றது தவறு. அவர் எங்கள் தேச பிரதமர். நீங்கள் நினைப்பது போல geopolitics காரணங்களுக்காக இலங்கை பிரச்சினையில் மூக்கினை நுழைக்கவில்லை. கடலுக்கு இப்புறம் இருக்கும் தமிழகத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற ஒருமைப்பாட்டு காரணங்களுக்காக, பிரபாகரனை கூப்பிட்டு பேசினார். ப்ரச்சினை முற்றி, போர் வெடித்தபின், உங்கள் உள்வீட்டு கலகக்காரர்களை அடக்கம் பண்ணுவது போல போட்டுத் தள்ளி விடுவீர்களோ....?? உண்மையில் ராஜீவ் கொலையை நீங்கள் நிகழ்த்திய கணத்திலேயே அமைதிப்படையின் கொடூரங்களைப் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வு ரீதியிலான சப்போர்ட்டை இழந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல முடியும். புரிந்து கொள்ள இயலாவிடில் நான் ஒன்றும் சொல்ல ஏலாது

ஈழநாட்டுப்பற்றோ இந்தியத்தேசாபிமானமோ கண்மூடித்தனமாக இருக்கக்கூடாதென்பதென் அவா - ரமணி

அதுவேதான் என் ஆசையும். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது. எது பேசினாலும், எதை இழுத்தாலும், நீங்களெல்லாம் இந்தியாவை இழுத்தும் பழித்தும் பேசுவீர்களாம். அதில் உள்ள ஒருதலைப்பட்சமான உணர்வை யாராவது எடுத்துக்காட்டினால், எங்கள் தேசபக்தி புதுப்பிக்கப்பட்டதாய் சொல்வீர்களாம். நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, உங்கள் உணர்வுகள் எப்படி மதிக்கப்பட வேண்டுமென விரும்புகிறீர்களோ, அப்படியே மற்றவர்களையும் நடத்துங்கள். உங்கள் இன உணர்வுக்கும், நாட்டுப் பற்றுக்கும் சற்றும் குறைந்ததல்ல எங்கள் உணர்வுகள். உங்கள் நாட்டில் பிரச்சினை இருப்பதால், உங்கள் உணர்வுகள் குவி மையத்தில் இருக்கிறது. உயிர்போகிற அப்படி இரு பிரச்சினை இங்கே இல்லாததாகையால், நாங்கள் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு, மிமிக்ரி பண்ணிக்கொண்டு, சுகஜீவனம் வாழ்கிறோம் என நீங்கள் நினைக்கிறீர்கள் ..?? அப்படித்தானே..?? அப்படியே இருக்கட்டும் சாமிகளா...

ராஜீவ் காந்தி கொலையை, புலிகளின் வன்முறைகளைப் பேசும் நாம், நம் பக்கத்துத் தவறுகளையும் மறுதட்டில் வைத்தே எடை போட வேண்டும். எல்லை என்பதை நாம் உண்மையின் வாசலுக்கு வெகு முன்னரேயே வைத்து விட்டு எல்லையை மீறக் கூடாது என்று கூவக் கூடாது. உண்மைகள் வரட்டும். தேசாபிமானத்தின் குறுக்கீடின்றி எல்லாப் பக்கத்து உண்மைகளும் வரட்டும். அதுதான் வரலாறு, மொத்த முழுப் பார்வை. - சுந்தரவடிவேல்

போகுமிடமெல்லாம், எழுதும் விடயத்திலெல்லாம் ராஜீவ் காந்தியின் கொலையையும், புலிகளின் வன்முறையையும் பற்றி நாங்கள்தான் எழுதுகிறோமா. ??? இன்றைக்கு இணையத்திலே தேடிப்பாருங்கள். எத்த்னை இந்தியன் ராஜீவ் கொலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவ்விடத்தில் என்ன நடக்கிறது. தூக்கிப் போட்டுக் கொல்லும் சிங்களவனை விட இந்தியாவும், ராஜீவும், இந்திய பத்திரிக்கைகளும் நாயடி படுகின்றன. ஐயா..வீரம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை உங்களிடம். பராக்கிரமம் இருக்கும் அளவுக்கு எதிர்க்கருத்தையும் அளந்து பார்க்கிற பண்பு இல்லை உங்கள் அனைவரிடமும். இந்தியாவிடம் பிச்சை கேட்க விருப்பமில்லை என்கிறீர்கள் இப்போது. எதற்காக இந்தியாவின் தலையீட்டை ஒத்துக் கொண்டீர்கள் அப்போது. எதற்காக அழித்தொழிப்பு வேலைகள் செய்கிறீர்கள் என்றால், துவக்கு சுடக் கற்றதே இந்தியாவிடம்தான் என்கிறீர்கள். விளக்கேற்ற் தீப்பெட்டி கொடுத்தால் வீட்டை கொளுத்த உபயோகிப்பீர்களா..?? என்ன அவலம் இது..??

ஐயா...பாலியல் வன்புணர்ச்சியும், ராணுவ அத்துமீறல்களும் நியாயம் என்று எவனாவது சொன்னானா...ஏன் திரிக்கிறீர்கள்..?? ஒரு அரிப்பெடுத்த அவில்தார் மிருகம் போருக்கு போன இடத்தில் அறியாப் பெண்ணை மயக்கி அனுபவித்தானென்றால், அது இந்திய ராணுவம் எடுத்த பாடமா..?? ஊருக்கு ஊர், இலங்கை உட்பட நடக்கும் கற்பழிப்புகள், ஏமாற்றி வைக்கும் உடலுறவுகளுக்கு எல்லாம் யாராவது பாடம் எடுக்க வேண்டுமா..?? என்ன அறியாமை இது..??

பிரபாகரன் ஆரம்பித்த போது அடிபடும் தன் இனத்துக்காகத்தான் ஆயுதம் ஏந்தினார். ஆயுதம் தந்த பலம் இப்போது பதவி சுகத்தில் வந்து முடிந்து விட்டது. இலங்கை தமிழர்களின் தனியொரு தலைவனாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையே, உள்வீட்டு பிரச்சினைகளாக மாறி எதிர்க்கருத்து கொண்டோரை எல்லாம் போட்டுத்தள்ள சொல்கிறது. அதுவே பயமாக மாறி, இந்திய நுழைவை ஏற்றுக்கொண்டு பிறகு ஒத்துழைப்பு தராமல் பின் வாங்கிக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள துண்டு துக்கடா கட்சிக்கெல்லாம் பொருளாதார உதவி செய்து , பிற்காலத்தில் தமிழீழம் கடல் தாண்டி வளரவும், அந்த மேலாதிக்க ஆசையே தூண்டுகிறது. புலிகளின் இந்த ஆசையே இந்தியாவின் தேசியத்திலும் , இறையாண்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்களுக்கு துர்க்கனவாக இருக்கிறது.

தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.

இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.

பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்....







Monday, August 09, 2004

நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்
===============================================

இனிய சுந்தர்,

தனியே எழுதாமல், அப்படி என்ன பொதுக்கடிதம் வேண்டி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கும், உங்களையொத்த எண்ணங்கள் கொண்ட எமது சக ஈழத்து சகோதரர்களுக்கும் என் நிலையை சொல்ல வேணுமென்று தோன்றியதால் எழுதுகிறேன்.

வல்வை படுகொலையைப் பற்றி தம்பி கரிகாலன், மற்றும் ஈழநாதன் ஆகியோரது பதிவுகளுக்கு தொடர்ச்சியாக உங்கள் பதிவையும் கண்டேன். ஈழத்தமிழர்களின் சோகமும், சிங்களக் காடையர்கள் அவர்கள் மீது நடத்தி வரும் அரக்கத்தனமான ஒடுக்குமுறையும், அதன் விளைவாக உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கை மக்களும் எங்கள் பரிவுக்கும், அனுதாபத்துக்கும் உரியவர்கள். அதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் எது நடந்தாலும், இந்தியா எது செய்தாலும், அதில் குற்றங்கண்டுபிடித்து, இந்தியாவை இகழவும் தூற்றவும் செய்யும் உங்கள் அனைவரின் செயல்களும், எழுத்துக்களும் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது.

உங்கள் அனைவரைப் போல எனக்கு இந்திய இலங்கை ஒப்பந்தமும், திகதிகளும், புள்ளி விவரங்களும் விரல் நுனியில் தெரியாது. ஆயினும், இலங்கை தமிழ்ப் போராளிகளுக்காக இந்திரா தொடங்கி, எம்.ஜி.ஆர் அளித்து வந்த ஆதரவும், ஈழத் தமிழினத்துக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களும் என் மனதில் நிழலாடுகிறது. இவை அத்த்னையும் மாறியதற்கு முக்கிய காரணம் ராஜீவ் காந்தியின் படுகொலை. ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்துக்கு பலியாகி, புலிகளையும் பகைத்துக் கொண்டு, கடைசியில் சொந்த மண்ணிலேயே விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் அவர் என்பதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொது அபிப்ராயம்.

அவர் எதற்காக கொல்லப்பட்டார்..புலிகளிடம் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்துகொண்டாரா போன்ற விவாதங்கள் எல்லாம் நெடுந்தூரம். ஆனால் சித்தாங்களின் அடிப்படையில் மாறுபாடு கொண்டவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் புலிகளின் வேலை என்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு தீர்வே இல்லை. இப்படி இருக்கையில், இத்தனை அணுகுமுறைக் குறைபாடுகளையும், வன்முறையும், ரத்த வெறியையும் கொண்டுள்ள ஒரு கூட்டத்திடம் பரிவும், அனுசரணையும் காட்டும் நீங்கள், ஒரு அரசு கொடுத்த வேலையை செய்வதற்காக, நண்பன் யார்..பகைவன் யார்..இவர்கள் என்ன தந்திரம் செய்கிறார்கள் எனு எதுவும் தெரியாத சூழ்நிலையில், இலங்கை வந்து இறங்கிய இந்தியப் படையை, அதன் பொறுப்புகளை, நாம் பிறந்த நாடு இந்தியா என்பதையும் மறந்து புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

அபத்தத்தின் உச்சமாக, ஒரு அவில்தாரின், தனி மனித பாலியல் வாழ்வு சார்ந்த விடயத்தை, இந்திய அமைதிப் படையின் கூட்டுப் பொறுப்பில் ஏற்றி, ஒரு மூன்றாம் தர ஏடு செய்யும் விஷயத்தை, விஷமத்தனமாக செய்து இருக்கிறீர்கள். ஒரு நல்ல எழுத்தாளராகக் கூட இல்லை, ஒரு ந்ல்ல மனிதனாக இரண்டு பக்கமும் பாராமல், யோசியாமல், இப்படி ஒரு தலைப்பட்சமாக கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியா உங்கள் பிரச்சினையில் நுழைந்தாலும் குற்றம் , நுழையாமல் இருந்தாலும் குற்றம் என்ற உங்கள் நிலையினை நீங்கள் மறுபரிசீலனை செய்கிறவரை, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுகே தெரியாதவரை, இந்த சோகம் தொடரத்தான் போகிறது. இன்னமும் இம்மாதிரியான சோகங்களும், வேதனைகளும் தொடரக்கூடாதெனில், வன்முறைக்கெதிராக உயர்த்திப் பிடிக்கும் உங்கள் கொடியினை, உங்கள் பிரியத்துக்குரிய புலிகளின் பக்கமும் திருப்புங்களேன். வன்முறை விடுத்து அவர்களை சனநாயகப் பாதையில் திரும்பச் செய்ய உமக்கும், உம்மையொத்த எமது சக ஈழ சோதரர்களுக்கும் தெம்பிருக்கிறதா..??

இல்லையெனில், இதோடு பிறர் வன்முறையை மட்டும் கண்டிக்கும் இரட்டை வேட நிலையை விட்டு விடுங்கள்.


என்றென்றும் அன்புடன்

சுந்தரராஜன்


Friday, August 06, 2004

மரபு - புதுசு - கவிதை..??

=====================

புதுக்கவிதை
===========

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத -

கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக்கொண்ட
மக்களாட்சி முறை

- கவிஞர். மேத்தா

*********************
தமிழ்க்கவிஞர்
============

உரைநடையினை
உடைத்துப் போட்டு
உடைப்பெடுக்கின்றதே
தன் கவிதையென்பார்
ஓசையில்லாமல்
ஓசை நயத்தையும் அழிப்பார்
அசைகளைப் பாடலில்
வேர் நுனியோடு
அசைத்தறுத்தெடுப்பார்
சீர்களைக் கவிதையில்
சீர் குலைத்துவிட்டு
சீர்மை மிகு பாடலென்பார்
வெண்பாவில் ஒன்றேனும்
எழுதியிராமல்
பெண் பாவை
அங்கத்தையே பெரும்பாலும்
தங்கமாய்ச் சொல்லி
கவி சமைப்பார்.
இலக்கணம் தெரியாமல்
பிலாக்கணமாய்
வரிகளைச் தொகுப்பார்
உவமையையும்
உருவகத்தையும்
உருத்தெரியாமற்
சிதைத்திருப்பார்
எளிமை என்பார்
அழகு என்பார்
அருமை என்பார்
இதுவே புதுமையுமென்பார்
ஒரு பாவுக்கேனும்
இலக்கணம் தெரியாதெனவுரையார்,
வினவிப் பாருங்களேன்
"போடா பழைய பஞ்சாங்கமே" யென
பொரித்தெடுப்பார் - அவரே
இருபதாம் நூற்றாண்டில்
தமிழ்க்கவிஞர்.

- "மரபர்" ராகவன் கோபால்சாமி


இனி பெருசுகள் :

வார்த்தைகளுக்கு மிஞ்சி, சொல்லின் அர்த்தம் மிஞ்சி, ஒரு உணர்வு அல்லது பிரம்மிப்பு ஏற்படுத்துவது கவிதை.வார்த்தைகளுக்கு இடையே தொக்கி நிற்கும் அர்த்தம் கனமாக கனமாக கவிதை உயர்வாகிறது.ஒருவன் ஒரு பெண்ணுக்கு மான் போல மருண்ட கண்கள் என வர்ணித்தால், அது வெறும் உபமானம் மட்டுமல்ல, அதில் அந்தப் பெண்ணை அவனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது என்கிற த்வனியும் தொக்கி நிற்கிறது. அவள் அழகான கண்களை உடையவள் என்பதும் புரிகிறது. கவிதையில் அந்தப் பெண்ணை பிடித்திருப்பது பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் உணர்கிறோம் இல்லையா..??. அதுபோல கவிதையில் சொல்லப்பட்ட அர்த்தம் தாண்டி ஒரு உணர்வு புரிபட் வேண்டும்.உணர்வு மரத்தின் உச்சாணிக்கிளை கவிதை.

- பாலகுமாரன் ("விசுவாமித்திர" தாடி இல்லாமல்)

புதிதோ, மரபோ - சட்டென்று மனதைக் கவ்வும் தன்மை, நேர்த்தியான நெசவு, "இந்தக் கவிதையை நான் எழுதாமல் போனேனே" என்று மனதில் சிறிய வருத்தம், பொறாமை, கவிதையனுபவத்தில் விளைகிற பிரமிப்பு, தனியாக நடக்கிறபோது கவிதை வரிகளை சத்தம் போட்டு சொல்ல வைக்கப் பார்க்கிற தூண்டுதல், எதிர்பாராத தருணத்தில் சடாரென நினைவுக்கு வந்து இன்புறுத்தும் , துன்பப்படுத்தும் கவிதை வரிகள், நாலு வரிக்கு நடுவில் மறந்து போன சொல்லை நாள் முழுக்க மனதில் தேடி, இரவில் படுக்கப் போகிறபோது சட்டென்று நினைவு வரக்கிடைக்கும் சந்தோஷம்...இவைதான் கவிதை என்று எனக்குத் தோன்றுகிறது.

- இரா.முருகன்
வாழும் முறை - கற்றுக் கொடுக்கப் படும் விஷயமா..??
=================================================

SriSri

"The Art of Living " என்ற வகுப்பு இப்போது அமெரிக்காவில் மிகப் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. சுதர்ஸன க்ரியா என்று அழைக்கப்படும் அந்த வகுப்புகளை மகரிஷி ரவிஷங்கரின் சீடர்கள் உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்தும், பரபரப்புகளிலிருந்தும் விலக்கி, வாழும் முறையை போதிப்பதாய் சொல்லும் இந்த வகுப்பை இளைஞர்கள் பெரிதும் நாடி செல்கிறார்கள். சுதர்ஷன் என்ற என் ஐயங்கார் நண்பனொருவன் இதைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம்
கேட்டுக் கொண்டிருந்து வீட்டு , "சுதா...நீ கடைசியாக எப்போது 'சந்தியாவந்தனம் செய்தாய் என்றேன். ஆள் அம்பேல். கிரிதர் டாட்டிபிகாரி என்ற என் நண்பனின் சகோதரன், இந்த வகுப்பு/தியானப்பயிற்சி ஆரம்பித்த மூன்று நாட்கள் கழித்து திடீரென்று அழ ஆரம்பித்தவன் தொடர்ந்து ஆறு மணி நேரம் அழுது கொண்டிருந்திருக்கிறான். " வாழ்க்கையில் அதுவரை அவன் சேமித்து/புதைத்து வைத்திருந்த துயரங்களையெல்லாம் அவன் கரைத்திருக்கிறான்" என்றான் கிரி பயபக்தியுடன்.

எனக்கு வகுப்பு வேண்டாம் என்று சொல்ல அது ஒன்றே காரணமாகி விட்டது .

அறுபது மணி நேரம் அழ யாருக்கு தெம்பு இருக்கிறது...??



Tuesday, August 03, 2004

sa(a)da சிவம் அல்ல ...ஸ்பெஷல் சிவம்
==================================

m002_large

மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்று சொன்னால் எத்தனை பேருக்கு தெரியுமோ, ஆனால் எம்.எஸ் என்றால் சுப்ரபாதம் காதுகளில் ஒலிக்கும். போன வாரம் ஸ்வரலயா ஃபவுண்டேஷனுக்காக, அவர் நடத்திய கச்சேரி ஒன்றை அடர்தகட்டு பேழையில் பார்க்க நேர்ந்தது.

அருமையான கச்சேரி. சொன்னபடி கேட்கும் குரல். கூடவே ஒத்தாற்போல் பாட உறுத்தாத கெளரி ராம்நாராயண் குரல் ( அவர் பாடினரா..??? ) என்று ஒரு சுகானுபவம் அது. பசுபதி அருகில் அமர்ந்திருந்தால் கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக பயபக்தியோடு கேட்டிருப்பார். அவ்வளவு எம்.எஸ் பைத்தியம். அந்தக் கால ஐஸ்வர்யாராய்..அதுவும் அருமையான சாரீரம் கொண்டவர் என்றால் கேட்கவா வேண்டும்.

"At this ripe old age, we are blessed by a baby" என்று ஆரம்பித்தார் மிஸ்டர் எம்.எஸ். கூட்டம் முழுக்க கொல்லேன்று எழுந்த சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகியது. காரணம் கேரள அரசிலிருந்து எம்.ஏ.பேபி என்பவர் அந்த விழா நடைபெற முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்த சதாசிவம் அவர்கள், மேடையில் அமர்ந்திருந்த ஹிந்து ஆசிரியரைக் காட்டி " This is not (என்) N.Ram or உன் Ram. he is everybody's Ram" என்று அடுத்த போடு போட்டார். அருகில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு டி.டி.வாசு பயபக்தியுடன்.

ஊரே போற்றும் எம்.எஸ்ஸை விட என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருப்பவர் எம்.எஸ்ஸின் கணவர் திரு கல்கி சதாசிவம்தான். பல பேட்டிகளிலும், இடங்களிலும் " அவர் என் கணவர் மட்டுமில்லை..குரு" என்று எம்.எஸ் பயபக்தியோடு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். எம்.எஸ்சை போன்ற ஒரு பிரபல்யத்துக்கு புருஷனாக இருப்பதே கஷ்டமான காரியம். ( ஏறக்குறைய சொர்க்கம் ஞாபகம் வருதா..?? ) அதுவும் சாதிக் கட்டுப்பாடுகள் கொடி கட்டிப் பறந்த அந்தக் காலத்திலேயே ஒரு இசை வேளாளர் வீட்டுப் பெண்ணை மணக்க பிராமணரான சதாசிவத்துக்கு ஏகப்பட்ட தைரியம் இருந்திருக்க வேண்டும். மணந்து, அந்தப் பெண்ணுக்கு இயற்கையாக இருந்த திறமைகளை மங்கிப்போக விடாமல், மெருகூட்டி, நேரு முதல் ஐ.நா வரை அழைத்துப் போய் அவர் பெருமையை வெளிக் கொண்டுவந்து, இத்த்னைக்குப் பிறகும் எம்.எஸ்ஸின் பின்புறமே இருந்து கொண்டு..ஆஹா..சதாசிவம் அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது.

இதையெல்லாம் தாண்டி, எம்.எஸ் பற்றி ( நேருவை இணைத்து) வந்த வதந்திகள், சினிமாவில் நடித்ததால் இயல்பாக எழக்கூடிய கிசுகிசுப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, மனமொத்த தம்பதியினராக வாழ்ந்து விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் மறைந்தார்.

கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர், விகடனிலிருந்து ரா.கிருஷ்ணமூர்த்தி வெளிவந்தபோது, அவரை வைத்து பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்தி, பத்திரிக்கை செலவுகளுக்காக, மார்க்கெட் உச்சமாக இருந்த காலத்திலேயே இமேஜ் பார்க்காமல் எம்.எஸ் ஆண் வேஷமெல்லாம் போட்டு நடித்தாராம்.

இருந்தால் எம்.எஸ் -- சதாசிவம் மாதிரி இருக்க வேண்டும்.

எங்கே முடிகிறது..??

(படத்தில் எம்.எஸ் மற்றும் எல்லீஸ் ஆர் டங்கனுடன் திரு சதாசிவம் - நன்றி ராயர் காப்பி க்ளப் )



Monday, August 02, 2004

தனியார் துறையில் இட ஒதுக்கீடு
===============================

பத்ரி மற்றும் வெங்கடேஷின் பதிவுகள் படித்தேன். இதற்குமுன்னரே பாட்டில் பாலாவும் இதை எழுதி இருந்தாலும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்று ஆரம்பித்துவிட்டு கடைசியாக இடஒதுக்கீடு என்று பொதுவாக இதை விமர்சித்துவிட்டுத்தான் முடித்தார்.

என்னைப் பொறுத்தவரை தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவையற்றது. தனியார் துறையில், எந்த ஒதுக்கீடும் இல்லாமலேயே ஏற்கனவே எல்லா வகுப்பினரும், அவரவர் திறமையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெற்றுத்தான் வருகிறார்கள் - சில குறிப்பிட இடங்களைத் தவிர. அங்கு மட்டுமே முதலாளி வர்க்கத்தின் குறுகிய கண்ணோட்டத்தால் குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளையதலைமுறையின் கையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போது இதுவும் குறைந்து விடும் என்று நம்புவோம்.

ஏற்கனவே பொதுத்துறையில் இடஒதுக்கீடு இருப்பதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அரசின் தயவில் கல்வியும், உயர்படிப்பும் படித்து விட்ட புதிய பார்ப்பான்கள் என்று அவர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள். ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால், ஏழையாக இருந்தாலும் முன்னேறிய வகுப்பினர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் நியாயம். ஆனால் பொருளாதாரம் மட்டுமே இதை அளக்க சரியான அளவுகோல அல்ல என்று நினைக்கிறேன்.

தலித் மற்றும் பின்தங்கிய வகுப்பினரில், போன தலைமுறையில் படித்து பட்டம் பெற்ற, செல்வம் சேர்த்து நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், அவர்களால் பலன் பெறக்கூடிய அவர்களது குடும்பத்தினருக்கும் முதலில் இந்த சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். அதனால் மிகுதியாகும் வாய்ப்புக்களை அதே வகுப்பினில் இருக்கும் இன்னமும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் மக்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களும் கல்வி பெற்று சரியான நிலைக்கு வந்த பிறகு, அவர்களின் சலுகைகளை பறித்து, மற்ற வகுப்பினில் இருக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

பொருளாதார நிலை மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை முன்னேற்றம் அடைந்தவர்களாக காட்ட போதுமானதில்லை. அதைக் காட்டிலும், கடந்தும் வேறு காரணிகள் இருக்கின்றன. மாயவரம் ஏ.வி.சி கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படிக்கும் ஒரு முன்னேறிய வகுப்பு பையனும், ஒரு தலித் இளைஞனுக்கும் இருக்கும் பொருளாதார வசதிகள் ஒன்றாக இருந்தாலும், அந்த அடிப்படை கல்வியை முடித்துவிட்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற பார்வையில், இருக்கிறது சூட்சுமம்.

பிராமணர்களுக்கு இத்தனை வருடங்கள் இந்த சலுகைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, பின்தங்கியோருக்கும், தலித்துகளுக்கும் கொடுக்கப்பட்டன. என்ன குறைந்து விட்டது அங்கே..?? திறமையின் மூலமும், ஏற்கனவே தன் திறமை மூலம் வெளியே பறந்து விட்ட தன் வகுப்பினர் மூலமும், அந்த வகுப்பினர் தங்களை இன்னமும் பலமாக்கி கொண்டு வளம் பெற்று விடவில்லையா..?? ஏற்கனவே உழுது, பண்படுத்தி, சிறக்க வைத்திருக்கும் அவர்கள் மூளையைக் கொண்டு அவர்களால் எங்கும் ஜெயித்து விட முடியும் - ஏழ்மை இருந்தாலும். அம்மாதிரி தொடர்புகளும், வாய்ப்புகளும் இல்லாதவரையே நான் இன்னமும் பின் தங்கிய வகுப்பினர் என்கிறேன். எனவே பொருளாதார அடிப்படையில், முன்னேறிய வகுப்பினர்கள் ஒதுக்கீடு கேட்பதற்கு காலம் கனியவில்லை.

பத்ரியின் கருத்துக்கு மறுமொழி தந்த திருமலை சிவகாமி ஐ.ஏ.எஸ் ஸின் கருத்தை மேற்கொள் காட்டி, அவர் சொன்னதை சுயநலம் என்கிறார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் சலுகைகள் தொடரட்டும் என்று சொன்னது தன் சந்ததியினர் அனைவரும் கலெக்டர் ஆக இல்லை. தன் மீது பட்ட வெளிச்சம், இன்னமும் நசிந்த நிலையில் இருக்கும் தன் இன மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அறிவினாலோ, படிப்பினாலோ கிடைக்கும் மூளை வெளிச்சமும், மலர்ச்சியும், அதிகாலை சூரியக் கதிர் மாதிரி. மெல்ல மெல்லத்தான் தலித் சமூகத்தின் உள்ளே ஊடுறுவும் . அதுவரை கொஞ்சம் பொறுமை அவசியம்.

இப்போதைக்கு இடஒதுக்கீடு பொதுத்துறை/ அரசுத்துறையில் மட்டும் இருப்பதே சாலச்சிறந்தது. அதுவும் வெறும் நுழைவுக்கு மட்டுமே. பதவி உயர்வுக்கும் மற்ற சிறப்புகளுக்கும் திறமை அடிப்படையில் கணக்கிடுவதே சரியானது.

நாஞ் சொன்னா யாரு கேக்கப் போறாங்க..ஏதோ தோணிணதை எழுதிட்டேன்.

அம்புடுதேன்.!!!!!!!



 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...