Wednesday, July 21, 2021

சார்பட்டா பரம்பரை 

--------------------------------------------

 சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம்ப்ளேட்டு கதைதான். ஆனால், களமும், மனிதர்களும், மொழியும், அரசியலும், காலப் பரிணாமங்களும் வெளிப்பட்ட விதம் அத்தனை அழகு. 

சந்தேகமில்லாமல் பசுபதிதான் ஹீரோ. குஸ்தி வாத்தியாராக முறுக்கும், மிரட்டலும், பார்வையும், பரிதவிப்புமாக அத்தனை பாந்தம். 1970 களின் கழக கண்மணியாக கெத்து காட்டுகிறார். அடுத்த அம்சமான தேர்வு ராமனின் மாமா முத்துராஜ் . அகண்ட முட்டிகளும், புலிநக டாலரும், தூக்கி வாரிய சிகையுமாக ஆண்ட பரம்பரை அலட்டலை  கண்ணுக்குள் கொண்டு வருகிறார். மற்றொரு குறிப்படத்தக்க தேர்வு Dancing Rose.  மலையாள நடிகர் போல. He is a treat to watch. நல்லவரா கெட்டவரா என்று ஆர்யாவை மட்டுமல்ல, நம்மையும் குழப்பும் ஒரு பாத்திர படைப்புடன் கலையரசன். வாழ்க்கையில் இப்படி நூறு முகம் காட்டும் ஆறுமுகங்களை நாம் நிறைய பார்த்திருக்கக் கூடும். நடிகர்களில் இவர்களுக்கு அப்புறம்தான் ஆர்யா, தஷ்ரா, சஞ்சனா, ஆர்யாவின் அம்மா, நெல்லை விஜய் மற்ற எல்லோரும். 

  தமிழில் பீரியட் பிலிம்களில் மேட்டுக்குடியினர் வாழ்க்கைதான் பிரதானமாக விவரணையில் வரும்.ஜட்கா வண்டியும், வெள்ளி கூஜாவும், கார்நாடக சங்கீதமும், பால் சாதமும்,  வெற்றிலை ஜோரும், சதிருமாக. எளிய மனிதர்கள் புழங்கும் இடங்கள்,  அவர்கள் வாழ்க்கை முறைகள், தொழிற்படும் இடங்கள், அவர்கள் உணவு, ரொமான்ஸ், அரசியல், போன்ற எதுவுமே  இத்தனை நுணுக்கமாக விவரிக்கப்பட்டதில்லை . 

குத்துசண்டை ஆட்கள் வன்முறைக்கு மனதில் இடம் தந்ததால்,  எத்தனை எளிதாக குற்ற வயப்படுகிறார்கள் என்று அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் சொல்லி சொல்லி வடித்திருக்கிறார்கள் . ரஞ்சித்தின் படங்களில் பெண்கள், கே. பாலச்சந்தரின் படங்கள் போலவே சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒரு செய்தி இருக்கிறது :-)  

இசை, ஒப்பனை, கலை, சண்டைக்காட்சிகள், காமிரா எல்லாமே அழகான பெண்ணுக்கு சிரத்தையாக அலங்காரம் செய்தது போல படத்தை  இன்னமும் தூக்கி நிறுத்துகிறது.  ரஞ்சித் இன்னொருமுறை தான் யார் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அவர் படங்களே அவர் அரசியலுக்கு சரியான வாகனம் என்பதால், இதையேஅவர் இன்னும் சிரத்தையாக செய்யலாம். 

சார்பட்டா  -  பார்த்தாலே போதும். சல்பேட்டாவே தேவைப்படாத போதை.   

Tuesday, May 04, 2021

கர்ணன்  - அக்மார்க் நெய்யில் தாளித்த மசாலா

----------------- நம் மனிதர்களை ஹாலிவுட் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.   படம் முழுக்க வாளும், வேலும், குதிரையும், யானையும் - போலிசுக்காக காத்திருக்கும் சுளுந்து ராத்திரி உட்பட.   காமிராவின் இளகிய கலர் palette ஐ காண்பதில் வில்லியம் வாலேஸ் திருநெல்வேலிக்கு வந்த மாதிரி ஒரு தோணல்.  முதல் படத்தில் தடுத்து ஆடிய மாரி, இரண்டாம் படத்தில் அடித்து ஆடி இருக்கிறார். படாத இடத்தில் பட்டு விடுமோ என்று பயந்து வருகுது.  

தனுஷ் அச்சு அசலாய்  கர்ணனில் ஒட்டிக் கொள்கிறார். அவர் வீடும் மனிதர்களும் ரத்தமிமும் சதையுமாக  அதைவிட அசல்.  அவருக்கும் லாலுக்கும் உள்ள அன்னியோன்னியமும், அக்காவுடனான அவர் உறவும்  இதம் 

அருமையான  செட். கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். தலித் வாழ்வு அதன் வீரமும், வீச்சமுமாக காமிராவின் வழியே  இறங்கி இருக்கிறது. பாரதிராஜாவின் படத்தில் தெரியும் பன்றிகளுக்கும், பருத்தி வீரன் / கர்ணனில் தெரியும் பன்றிகளுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சாவு வீட்டில்  தனுஷுடன் ஆட்டக்காரிகள் ஆடும் நடனமும் அவ்விதமே ரஜிஷா விஜயனின் அறிமுக ( மெல்லிய) ஆட்டமும், ஆம்பிளை சட்டையும், ஆசையும் அவ்வளவு நிஜம்  அவர் பெயர் திரெளபதையாம். - கர்ணனின் காதலி திரெளபதை.  மாரி - you are such a rebel !!!   

மாரி நல்ல கதை சொல்லி. படம் துவக்கத்தில் இருந்து அழகாக உள்ளே கை பிடித்து கூட்டி செல்கிறார். கடலுக்குள் இறங்குவது மாதிரி  - திரும்பி பார்க்கும்போதுதான் எவ்வளவு ஆழமான இடத்துக்கு வந்து விட்டோம் என்று புரிகிறது. மீன் வெட்டும் வாளும், கால் கட்டும் கழுதையும் என்ன குறியீடுகளோ .. விளங்கவில்லை  நட்டியின் உள்ளுறை  ஜாதி வெறி - முதன்முறை கிராமம் வரும்போது  படிப்படியாய் கொந்தளிக்க துவங்கும் அவர் மனது - வைத்தவனின் முகத்தை பார்க்காமல் அவன் கையை  பார்க்கும் ரெளத்ரம் -- wow. மாடசாமி மகன் துரியோதனனா என்ற என்ற அவரின் எகத்தாளக் கேள்விக்கு  கந்தையா மகன் கண்ணபிரானா இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன என்ற  கர்ணனின் பொருமல் புரிகிறது. ரங்காச்சாரியின் மகன் ரமேஷ் முறுவலிக்கக் கூடும் ;-) 

திருஷ்டி பொட்டுகள்  

1. ஊருக்கு அனுப்பி விட வந்த  தனுஷின் அப்பா  வாள் எடுத்துக் கொடுக்கும் இடம். 

2. முதல் காட்சியில் தெருவில் சாகக்கிடக்கும் பெண் குழந்தையை காணாமல் ( ?!!)   கடக்கும் பஸ்கள். 

3. போலீசை சிறுபிள்ளைத்தனமாக எதிர்க்கும் சினிமா கிராமம்  

4. தனுஷ் மழையில்  பேசும் வசனம்

போலீசை கொன்றால் ஊருக்கு பஸ் வரும் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுதல்.  மாரி அடுத்த படத்தில் அறிவாயுதம் ஏந்தி கலெக்டராகும் ஒரு தலித்தை கதானாயகனாக்க வேண்டும். அப்போதுதான் நாராயண குருவின் உள்ளம் குளிரும்.

Friday, November 27, 2020

 சிகரெட்

--------------வாசனையாய்
வடிப்பானோடு
அரச அளவில்
அடர்பச்சையில்
காட்டமாய்
இப்படியாக
வகைக்கொன்றாய்
பல உண்டு
அந்தப் பெட்டியில்....
கவிதைக்கொருவன்
படிப்புக்கொருவன்
பந்தப்பட ஒருவன்
இச்சைக்கு ஒருவன்
உதவிக்கொருவன்
என பலபேர்
தோழமைக்கிருந்தும்
சகலரையும் புறந்தள்ளி
வேறு வாழ்க்கை புகும்
ஸ்நேகிதிக்கு
இந்தப் பலநாள்
பரிச்சயமும்
பெற்ற ஆசுவாசமும்
திடீரென்று
இஃதொரு
ரகசிய தவறென்று
மனப்பெட்டியில்
புலனாவது
போல


Friday, September 25, 2020

நிதர்சனம் 
------------

தமிழ்நாடு தமிழருக்கே
என்று வெடிக்கும் செந்தமிழன்கள்
பெற்றெடுப்பதோ
வடுக வாரிசுகளை....

பசுக்களை தெய்வம் என்று
கும்பிடும் கட்சியினர் 
நடத்தும் அரசாங்கம்
மாட்டுக்கறி ஏற்றுமதியில் 
முன்னிலை ...

புரட்சி செய்து 
புதுக்கட்சி தொடங்கிய
பொருளாளர் 
ஆழ்துயில் கொள்கையில்
அடிமைகள் கூடாரம்
தலைவனுக்கு காத்திருக்கும் 
பரிதவிப்பு

ஆங்கிலேயர்களை
விரட்டி நமக்கு  
சுதந்திரம் தந்த 
இயக்கத்துக்கு தலைமை
இத்தாலிய மாது ...

தகர உண்டியல் குலுக்கியே
கூட்டம் சேர்த்த தலைமை 
தங்கக் கடத்தல் புகாரில் 

இந்தி வேண்டாம் போடா
என்று போராட்டத்தை
முன்னிறுத்தும் கட்சித் 
தலைமை நடத்துவதோ
இந்தி கற்பிக்கும் பள்ளிகள்...

மரம் வெட்டி போராட்டங்களால்
கிடுகிடுக்கவத்த 
சமூகநீதிக் காவலர்
பசுமைத் தாயகம் 
என்ற பெயரில் 
மாதந்தோறும் மரம் நடுகிறார்

சாமான்ய மக்களால்
ஸ்டார் ஆன ஒருவர் 
சனாதனிகளுக்கு 
சாமரம் வீசுகிறார்

வலதென்றும் இடதென்றும்
சொல்லாமல் 
மய்யம்  வசதி 
என்று சாதுர்யமாக 
காத்திருக்கிறார்
மற்றொருவர் 

தமிழினத்தலைவர் என்று 
அறியப்பட்டவர்களில் 
ஒருவரை
தெலுங்கர் என்கிறார்கள் 
மற்றொருவரை 
மலையாளி என்கிறார்கள் 

அரசியல் .....!!! 

Wednesday, June 13, 2018

காலா - இருளும் ஒளியும்


இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவையும் பயன்படுத்த வேண்டியதில்லை.. அல்லது பேசாமல் அரசியலில் குதித்து தொல். திருமாவுக்கு உதவலாம். அல்லது முழு நேர எழுத்தாளர் ஆகலாம். அதீத ஆர்வக் கோளாறு .. பாவம்.  

கபாலியில் கதையும் கொஞ்சம் சேர்த்து பிரசாரமும் இருந்தது. இதில் 70 விழுக்காடு பிரச்சாரமும், கொஞ்சமே கொஞ்சம் மற்றதும் ஆனால் ரஜினியை உபயோகப்படுத்திய காரணத்திற்காக மோடி பக்தாளை எல்லாம் இதற்கு முட்டு கொடுக்க வைத்திருப்பது .. சூப்பர்.

ரஜினிக்கு இந்தப் படம் நல்ல பயன் அளித்திருக்கும் - தூத்துக்குடியில் அவர் ஹரிதேவ் அப்யங்கர் போல பேசாமல் இருந்திருந்தால். :-)

மற்றபடி ரஜினி பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறார். நம் வீடுகளில் இருக்கும் குறும்புக்கார தாத்தாக்களை நினைவு படுத்துகிறார். சில காட்சிகளில் மிக இயற்கையாக ஸ்கோர் செய்கிறார்.
சில காட்சிகளில் முகபாவங்கள் ஒத்துழைக்காமல் சங்கடப்படுத்துகிறார். மொத்தத்தில் இப்பேர்ப்பட்ட ஆளை அரசியலுக்கு காவு கொடுத்து விட்டோமே என்று வருந்த வைக்கிறார்.  ஈஸ்வரி ராவ், நடிப்பதற்கு ஏதுவான பாத்திரம். தூள். ஹ்யூமா குரோஷி அந்தளவு ஒட்டவில்லை. மற்றபடி அந்தப் பெரிய குடும்ப பட்டாளத்தில் ஒட்டுவது கனியும், கண்டனும். என்னதான் மணிகண்டன் ( லெனின்)  என்.ஜி.ஓ மூலமாக தாராவியை புதிதாக்க முயன்றாலும், பின்னணியில் நாநா (ஹரிதேவ்) இருப்பது  தெரியாமாலா இருப்பார். ரஞ்சித்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவும், விவேகமும் இவ்வளவுதானா?

நானா படேகர் அற்புதம். பாலா சாஹேப் அவர்களை நினைவுபடுத்தும் முயற்சி. அருமையான நடிப்பு. சில காட்சிகளில் ரஜினியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார். முக்கியமாக ஈஸ்வரி//செல்வம் முடிவுக்கு பிறகு, காலா அவரை அவர் வீட்டில் சந்திக்கும் காட்சியில்  நானா பேசும் வசனங்களும், பாடி லாங்வேஜும் - முதுகுத் தண்டு சில்லிட்டு விடுகிறது. அவருடைய பாத்திரப்படைப்பு ( casting and costume) முழுக்க அவரே வடிவமைத்ததாக கேள்வி. பலே...

அஞ்சலி பாட்டீல் கொஞ்சம் over hyped. ஆனால் அவருடைய மராத்தி என்னுடைய பம்பாய் நினைவுகளை கிளறி விட்டது. அந்த வகையில் நன்றி.. கமலின் ஹேராம் வந்த போது இது தமிழ் படமாகவே இல்லை. ஏகப்பட்ட மொழிகள் கலந்து சாதாரண  சினிமா ரசிகனுக்கு புரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். Are they domesticated now by Masthaan ji? :-) 

ரஞ்சித் முதலில் தான் யார். தன் முக்கிய நோக்கம் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். தன் பிரசாரங்களுக்கு சினிமா மீடியாவை இந்தளவு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போட வேண்டும் லட்டு மாதிரி தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை இப்படி ஓவராக பிரசாரம் பேசி கடுப்பேற்றினால மறுபடியும் திருநின்றவூருக்கு டிக்கேட் எடுக்க வேண்டியதுதான். சினிமாவில் முதலில் கலை/craft முக்கியம். அப்புறம் தான்   மெசேஜும் மற்ற புடலங்காயும். நல்ல parallel cinema எடுக்க அவர் சீக்கிரம் கற்றுக் கொள்ளட்டும். அதற்கு தமிழ் சினிமாவில் ஏற்கனவே நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. அவரை ஏத்தி விடுகிறவர்களை பார்த்து ஏமாந்து போகாமல்  சீக்கிரம் விழித்துக் கொள்ள வேண்டும்.
காலா  - கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிறார்கள் :-(

Sunday, June 03, 2018

தமிழ்வானின் விண்மீன் - முக - 95

“ஆகாரத்திற்காக தடாகத்தில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு சுத்தப்படுத்துகிறதே மீன்.

அதுபோலத்தான்  நான். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்து இருக்கிறது”

இது கலைஞரின் வசனம் அல்ல. அவர் வாழ்க்கையின் சுருக்கம் என்றே நினைக்கிறேன்.
தமிழ் பிடித்தவனுக்கு கலைஞர் கருணாநிதியைப் பிடிக்கும். மற்றதெல்லாம் பிறகுதான். எவனைக்  கண்டால் எதிர்முகாமுக்கு எட்டிக்காயாய் இருக்கிறதோ, எவனைக் கண்டால் எதிரிக்கு பீதி பெருகுகிறதோ - அவனே உன் தலைவன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் பெரியாரை அல்ல, அண்ணாவை அல்ல - கருணாநிதியைக் கண்டால்தான் என் எதிர்முகாம் நண்பர்களுக்கு கிலி வருகிறது. அவர்களுக்கெல்லாம் கடந்த ஒரு வருடமாக கொண்டாட்டம். தன் கரகரத்த குரலில் கழகக் கண்மணிகளை மட்டும் அல்ல, தமிழகத்து மக்களை எல்லாம் கட்டிப் போட்டிருந்த  அந்த காந்தக் குரல், கூர் வாளினையொத்த அந்த மூளை களைத்துக் கிடக்கிறது. தமிழக அரசியல் கலகலத்துக் கிடக்கிறது. பட்டத்து இளவரசன் பலவீனப்பட்டு நிற்கையில்,  சிஸ்டமும், மய்யமும், எடுபிடிகளும், கரன்(சி)களும், சே(வ)கர்களும், கூஜாக்களும் நாளொரு அறிக்கையும் பொழுதொரு பேச்சுக் கச்சேரியுமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதிர்ப்பாட்டு பாடி சிக்ஸர் அடிதத தலைவன், பேரக்குழந்தைகளுக்குபந்து போட்டுக் கொண்டிருக்கிறான் -கோபாலபுரத்தில். ”முதுமையில் அனைவருக்கும் வரும் நிலை” என்பதான நிதர்சனத்தையும் மறந்து விட்டு, “பாரு.. இந்தாளுக்கு இன்னும் சாவு வரலை. பண்ணின பாவம்” என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

எப்போது என்று நினைவில்லை. அப்பா கலைஞர் கூட்டங்களுக்கு சிறுவயதில்கூட்டிப் போக ஆரம்பித்தார். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழார்வலர். அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்தவர் என்று அப்பாவுக்கு கலைஞரைப் பிடிக்க பல காரணங்கள். ”டோப்பா” தலையனால் தமிழ்நாடு கெடுகிறது என்பார் அடிக்கடி. அப்போதெல்லாம் மயிலாடுதுறையில் நகரப்பூங்கா அருகே அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும். அரசியல் தாண்டி கலைஞர் பேச்சினைக் கேட்க வேண்டியே கூட்டம் வரும். ”உடன்பிறப்பே” என்று அந்தக் கரகரத்த குரலில் அவர் துவங்கும்போதே கூட்டம் ஆர்ப்பரிக்கும். அந்த வயதில் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போடும் அவர் ஆளுமை வியப்படைய வைக்கும். இத்தனைக்கும் அந்தக் காலங்களில் அவர் ஆட்சியில் இல்லை.

வயது வளர வளர அவர் மேடைப் பேச்சு தாண்டி அவர் யார், பின்புலம் என்ன? திமுக என்ற கட்சி மற்ற
கட்சிகளிலிருந்து வேறுபட்டு எப்படி உட்கட்சி ஜனநாயகத்தை பேணுகிறது. சினிமா பின்புலம் இருந்தாலும் கருணாநிதி எப்படி அதையும் தாண்டி எல்லாரிடமும் ஒரு மரியாதையை பெற்றிருக்கிறார் போன்ற விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. சிறுவயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால் ஜூனியர் விகடனும் துக்ளக்கும் அரசியல் செய்திகளை கொடுத்துக் கொண்டே இருந்தன. இதன் மூலமே அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடந்த குழப்பங்கள், கூத்துகள், ஜெயலலிதாவின் வளர்ச்சி போன்ற போக்குகள் உடன் தெரிநதன. கருணாநிதி ஜெயலலிதாவுடனும் அரசியல் செய்ய ஆரம்பித்தார். இப்போது ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரமும் முடிந்த நிலையில் கோபாலபுரத்தில் மறுபடியும் குழந்தை போல அமர்ந்து இருக்கிறார்.

   கருணாநிதியின் சுயநலம் பற்றி, அவர் ஊழல் பற்றி, அவர் சந்தர்ப்பவாதம் பற்றி பேசுவோர் உண்டு. அப்படி பேசுபவரில் எப்படியாவது அவர் ஆளுமையை கறைப்படுத்தி விடலாம் என்று பேசுபவரை பற்றி கவலை கொள்ளாவிடினும், நடுநிலையோடுஅவரை விமரிசிப்பவர்களிடம் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கக்கனைப் போலவும், நல்லகண்ணுவைப் போலவும்  
இருந்திருந்தால் அவருக்கு நல்லவர் என்ற பேர் கிடைத்திருக்குமே ஒழிய,  அரசியல் அதிகாரத்தோடு தமிழக மக்களுக்காக அவர் என்னவெல்லாம்   செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் செய்திருக்க முடியாது. தவிரவும்- அவர் வானத்திலிருந்து இறங்கி வந்து விடவில்லை. இந்த சமுகத்திடம் இருந்துதான் தலைமைப் பதவி நோக்கி போனார். அவரிடம்  இருப்பதாக சொல்லப்படும் குறைபாடுகள்
யாவும் இந்த சமூகத்திடம் உண்டு. இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட மக்களுக்கு இவனே தலைவனாக இருக்க வாய்க்கும். தேனை எடுததவன் புறங்கையை நக்கியதை பற்றியே பேசாமல், அந்தத் தேனை எடுத்து யாருக்கு ஈந்தான். அவனால் வெகுமக்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணுகையில் புரிய வேண்டியது புரியும். 

கலைஞர் தனக்கு வரும் எதிர்ப்புகளையும் விமரிசனங்கலையும் பற்றி,  அது தன் சாதிய பின்புலத்தினால் தன் மீது அதிகமாக ஏவப்படும் அடக்குமுறை என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் ஏற்படும். நான் பிறந்த மாயவரத்தில், என் பள்ளி நட்களில் அனைத்து சாதியினரும், மதத்தினரும் வித்தியாசமில்லாமல் நன்றாகத்தான் பழகுவார்கள். அக்ரஹாரங்களிலும் மகாதான/ பட்டமங்கல தெருக்களிலும் இருக்கும் நண்பர்கள் எந்த வேற்றுமையும் பாராட்டி பழகியதில்லை. இப்படி இருக்கையில் அவர் கூற்று எனக்கு ஆச்சரியமளித்தது உண்மை. ஆனால் அவர் விஷயத்தில் இது ஓரளவு உண்மைதான் என்று இப்போது தோன்றுகிறது.அவருடைய அரசியல் எதிரிகள் அவர் பிறந்த  சாதியை பற்றி மட்டமாக பேசி அவரை தாழ்த்த நினைப்பதை கேட்கும் போது வரும்
கோபத்துக்கு அளவில்லை. அவரை எதிர்கொள்ள இதை விட்டால் அவர்களுக்கு வேறு விஷயமா இல்லை என்று அயர்ச்சியாகிறது. ஆனால் இதையும் தாண்டி தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் சின்னக் குத்தூசி தியாகராஜன் போன்றவர்களையும், தன் யோகா குருவையும் வைத்திருந்தார். நட்புக்கும், கொள்கைக்கும் நடுவே கோடு போட்டுக் கொண்டு, எதற்கும் பங்கம் வராமல்  வாழ்வதிலும் என் போன்றவர்களுக்கு அவரே முன்மாதிரி ( என்பது என் நண்பர்களுக்குத் தெரியும் :-)  )

ஈழ விஷயத்தில் கலைஞர் மீதுள்ள குற்றச்சாட்டுகள், அவர் மீதிருந்த ஏகப்பட்ட   எதிர்பார்ப்புகள் வீணான விரக்தியில் சொல்லப்படுபவை.  தீவிரவாதத்தின் மீதான   9/11க்குப்  பிறகான உலகநாடுகள் பார்வை, இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு  வர முடிவதற்கான பாதைகள் மூடிய சூழல், 2009 ல் இலங்கை அரசின் போர்த்தந்திர  வியூகங்கள் போன்ற காரணிகள் காரணமாக, கலைஞர் என்றில்லை, அப்போது வேறொரு  முதல் அமைச்சர்  இருந்தாலும், எதுவும் செய்திருக்க இயலாது.  ஆனால் செய்ய முடியாத சூழலில் இருந்தவர்  தமிழினத் தலைவர் என்று சொல்லப்படுவதால் ஏச்சும் பேச்சும் இன்றும் தொடர்கின்றன. ஒருபுறம் இயக்கங்களை முட்டுக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டுக்காக இந்திய அரசால் நிந்திக்கப்படுவது, இன்னொருபுறம் தமிழினத்தலைவர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழினத்துக்காக ஏதும் செய்யாதவர் என்று பழிச்சொல் பெறுவது -  என்று மத்தள வாழ்க்கை அவருக்கு வாய்த்திருக்கிறது.

வயதும் மனமும் முதிர்ந்து யோசிக்கும் இந்தக் காலங்களில்,   கலைஞரின் சிறப்பு -  திராவிட சித்தாந்தங்களை தன் அரசியல் அதிகாரத்தின் மூலம் அரசு முறை கொள்கைகளாக்கி, சமூக நீதி என்பதை முன்னேறிய வகுப்பினர்கூட ( சற்றே முணுமுணுப்போடு ) ஒத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு 
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதுதான். இதன் நீட்சியே ஜெயலலிதாவின் 69% இட ஒதுக்கீடும்,  அதன் காரணமாக அவர் பெற்ற பெயரும். வெகுமக்கள் அரசியலை கையில் எடுக்காவிட்டால் தன் அறிவும், பலமும், எத்தனை தினமணிகளும், தினமலர்களும் முட்டுக் கொடுத்தாலும்
தவிடு பொடியாகும் எறு அவருக்குத் தெரியும். இன்றைக்கும் வட மாநிலங்களில் சமூகநீதி படும் பாட்டை பார்க்கையில், தமிழ் நாட்டு வெகுமக்கள் திராவிட கட்சிகளுக்கு எந்தளவு நன்றிக்கடன் பட்டு இருக்க வேண்டும் என்பது விளங்கும். விவரம் தெரியாத சில பேர் முக-வை வசைபாடும்போது
“ நீங்கள் குரலுயர்த்தி பேசும் இந்த அறிவும், சுதந்திரமும் அதன் பின்புலமாக நீங்கள் பெற்றிருக்கக்கூடிய கல்வியும்,  இந்த இயக்கம் தந்த பிச்சை. உங்கள் சோற்றுப் பருக்கைகள் ஒவ்வொன்றிலும் இவர்கள் பெயர்கள் எழுதி இருக்கிறது” என்று வாய் விட்டு கூவத் தோன்றுகிறது. ”வலிமையுள்ளது எஞ்சும் ” என்று சொல்லி கானக சித்தாந்தம் பேசாமல், மனிதத்தனமையோடு  திராவிட இயக்கங்கள் எடுத்த  நடவடிக்கைகள் புரிய வெகுநாட்கள் ஆகும்

ஆனால் ஒன்று - தமிழ்நாட்டில் இன்று, அன்றிருந்தது போல சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஓரளவு எல்லா வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது. எனவே வெகுமக்களிடம் 1960-1970 களில் இருந்த கோபம் இல்லை. சமூகத்தில் பெருவாரியாக எல்லா வகுப்பினரிடையேயும் ஒற்றுமை நிலவுகிறது - அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சாதி சண்டைகளை தவிர. இன்றிருக்கும் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகளின் தேவை இல்லை என்று தோன்றலாம். ஆனால் மக்கள் போராடி பெற்ற உரிமையையும் சுதந்திரத்தையும் பேணுவதற்காவவாது அந்தக் கட்சிகளின் இருப்பும், அவர்களின்  அரசியல் அதிகாரத் தேவையும் இன்றும் உள்ளது. இந்தியா ஒரு ஃபெடரல் அமைப்பு என்பதையே மறந்து விட்டு மாநிலங்களையும் அதன் அடையாளங்களையும் ஒழித்து, மைய நீரோட்டம் என்ற பெயரில் நம் தனித் தன்மைகளை காணாது ஆக்க டெல்லி கட்சிகள் முயன்று, அதன் காரணமாக ஒவ்வொரு விதமாக தமிழகததை நசுக்கும் முயற்சிகளில் இறங்கும்போது,  பிரதேசக் கட்சிகளின் ஒற்றுமையும் வீரியமும் இன்னும் ஓங்க வேண்டும்.

இந்தக் காலத்தின் தேவைக்கு இன்னும் ஒரு கலைஞர் வேண்டும்..

மு.க களைத்துக் கிடக்கையில் எங்கள் ஆவலாதியை தீர்க்கப் போகும் அந்த தலைவன் யார் என்று காத்துக் கிடக்கிறோம்.  

முன்னர் எழுதியவை :

குப்பத்து ராஜா - http://mynose.blogspot.com/2016/05/blog-post_15.html

கவனம் - தி.மு.க - http://mynose.blogspot.com/2016/05/blog-post.html

கருவின் கவிதை - http://mynose.blogspot.com/2011/05/blog-post.html

 

Wednesday, May 23, 2018

இன்னா நாற்பது ....

 

மீசை நரை போக்க
பொறுமை ஏகம் தேவைப்பட
ஆசை நுரை மட்டும்
சுழித்துப் பிரவகிக்கிறது
இன்னமும்....
யோசித்துக் களைத்த மூளை
கொஞ்சம் உருகியும் வழியவே
பின்னுச்சியில் சூரிய உதயம்...
இணையாய் இருந்த மனைவி
துணையாகி... தூணாக
வெளிச்சத்தில் சிரித்துக் கொண்டு
விட்டம் பார்த்து விடிகாலை
இருட்டில் யோசனைகள்.....
மாரடைப்பில் ஏகும் அகாலர்களை
நினைக்கையில் மட்டும்
பயம் வருகிறது,
கொஞ்சம் சுயம் அழிகிறது!!
பருவம் எட்டிப் பார்க்கும்
பதின்மர்களைப் பார்த்தால்
கொஞ்சம் பாவமாகவும்
கொஞ்சம் கோபமாகவும் இருக்கிறது.
பணம் எவ்வளவு இருந்தாலும்
மனம் மட்டும் எதன்பொருட்டோ
கலங்கிக் கொண்டே இருக்கிறது.
அகவை நாற்பது என்பது
அகத்துக்கும் தெரிகிறது.
அவனிக்கும் தெரிகிறது.

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...