Wednesday, June 30, 2004

தயாநிதியின் தேவதை..தாத்தாவுக்கு அரக்கி
========================================

வீடு மாற்றுவதில் உள்ள சங்கடங்களில் ஒன்று முகவரிகளை முக்கியமான இடங்களில் இற்றைப்படுத்துவது. அமெரிக்க நிரந்தர குடியுரிமை இன்னமும் கிட்டாத நிலையில், இது இன்னமும் முக்கியம்.இல்லாவிடில் ஏகப்பட்ட பிரச்சினை வரும். அரசாங்க கடிதங்கள் பழைய முகவரியிலிருந்து புதிய முகவரிக்கு முன்னிப்பு செய்யப்படாது என்ற தகவலும் சேர்ந்து பேரதிர்ச்சி தர இன்று தபால் அலுவலகம் சென்றேன். வாசலில் காவலர் வழிமறித்து குண்டு வருடியால் சோதனை நிகழ்த்த ஐயோ என்றது அது. இடுப்புப் பட்டையில் இருந்து அரைஞாண் வரை அனைத்தும் கழற்றினாலும் குய்யோ முறையோ என்றது. கடைசியில் காவலர் என் கைத்தொலைபேசியிலுள்ள் காமிராவைப் பார்த்துவிட்டு " இதோடு உள்ளே போகாதே..அனுமதி இல்லை. இதை என்னிடமும் கொடுத்துச் செல்லாதே ' என்று மக்கர் பண்ண, மணி வேறு ஆகிக் கொண்டிருந்தது. தபால் அலுவலகம் மூடும் நேரம் வேறு.

ஓடினேன்..ஓடினேன்...பக்கத்தில் உள்ள ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்டுக்கு. மேல் மூச்சு கீஷ் மூச்சு வாங்க நிலைமையை சொல்ல, "அய்யோ..ஃபோனை என்னிடம் கொடுக்காதே...அதில் என்ன இருக்கிறது" என்று எனக்குத் தெரியாது என்றார். நான் கெஞ்ச, பக்கத்தில் உள்ள ஆசாமியிடம் " க்யா ..இஸ்கோ லே சக்தே ஹை..?? " என்று மாடு ஓட்டினார். கபாலென்று எனக்குத் தெரிந்த இந்தியில், மறுபடியும் பிரச்சினையை சொல்ல, "யே முஜே பஹலே போல்னா தா..ஆப் ஹிந்தி மே பூச்தே தோ, மை லே ஸக்தா தா..." என்றார் அந்த ஆசாமி.

ஒருவழியாக, தொலைபேசியை அவரிடம் ஒப்படைத்து விட்டு மறுபடியும் தபால் அலுவலகம் போய் வேலை எல்லாம் முடித்து விட்டு வெளியே வரும்போது பார்த்தேன் - ஒரு 55 வயது அமெரிக்க மாதுவை குனியவத்து உடல் முழுக்க குண்டு வருடியால் சோதனை நிகழ்த்திக் கொண்டிடுந்தார்கள். பெல்ட்டை இறுக்ககட்டி தொப்பைக்கு மேல் ஏற்றி விட்டுக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

" கர்நாட்டிக் ம்யூசிம் க்ளாஸ் போறேம்ப்பா..ஹிந்தி க்ளாஸ் வேணாம்பா" என்று முரண்டு பிடித்த என்னை கதறக கதற " சாந்தா ஹிந்தி வித்யாலயத்தில்" கொண்டு தள்ளிய சூர்யாவின் தாத்தாவுக்கு மனசுக்குள் ஒரு சல்யூட் அடித்து விட்டு திரும்பினேன்.

Karunanidhi


தயாநிதிக்கு மட்டுமல்ல ...எனக்கும் அவள் தேவதைதான்.

Tuesday, June 29, 2004

சுஷீலா
===========

மாயவரம் அரங்காச்சாரி மேல்நிலைப்பள்ளியில் 'பத்தாம்பூ' படிக்கும்போது இரட்டை ஜடை போட்டுக் கொண்டு, அழகான லாக்கெட் செயினோடு சுற்றி வரும் சுஷீலாவைத் தவிர, 'பட்டு' பட்டு' என்று என் அப்பாவின் செல்லப் பேரைக் கூப்பிடுக்கொண்டே சுற்றி வரும் அவருடைய பால்ய ஸ்நேகிதி மட்டும் தெரியும். (நற..நற - அம்மா)

இன்று சாக்ரமண்டோவில் சுஷீலா.. ( மலையாளப் படம் மாதிரி இருக்கிறதா..?? )

கலிஃபோர்னியா மாநில பட்ஜெட் பிரச்சினையால் கன்சல்டண்டுகளை கழற்றி விடும் உன்னதமான திருக்காரியத்தை எல்லா ஸ்டேட் டிபார்ட்மெண்டுகளும் செய்து கொண்டிருக்கின்றன. கால காலமாக இங்கேயே தங்கி, அடுக்கு டிஃபன் கேரியரில் சாப்பாடும், அக்குள் இடுக்கில் ஆனந்த விகடனுமாக அலைந்து கொண்டு, பஸ்ஸேறி ஆஃபிஸ் வந்த கும்பல் எல்லாம் இன்று ஒவ்வொன்றாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. அம்மாதிரி ஒரு வழியனுப்பு லஞ்சுக்கு இன்று சென்றிருந்தேன். போனது ஒரு ஜப்பானிய உணவு விடுதி. உணவி விடுதியின் பேரே மேலிருந்து கீழாக இடியாப்ப திரைச்சீலை மாதிரி இருந்தது. ஆரம்பக் கட்ட வைபவங்களுக்குப் பின் கையில் குச்சியைப் பிடித்துக் கொண்டு சாப்பாட்டுத் தட்டில் சிலம்பம் ஆடிக் கொண்டிருந்தேன். (ஹி.ஹி..சாப்ஸ்டிக்...)எதிரே சாப்பிட்ட ஆள் ஆர்டர் பண்ண ஸ்பெஷல் அய்ட்டம் வந்தது.

ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன். ரத்தச் சிவப்பில் முள் எல்லாம் எடுக்கப்பட்டு மீன் துண்டுகள் - அத்தனையும் பச்சை..Raw Fish...!!!
நான் வைத்து திக்கு முக்காடிக் கொண்டிருந்த குச்சியினால், அவைகளை எடுத்து எடுத்து லபக் லபக் என்று ( பல்லி பூச்சி பிடிக்கும்போது பார்த்திருக்கிறீர்களா..??? ) வாய்க்குள் விட்டுக் கொண்டார். ரசித்துச் சாப்பிட்டுவிட்டு இரண்டு லிட்டர் ஐஸ் டீ குடித்தார்.

பதார்த்தம் பேரு/வகை "சுஷீ" யாம்.

sushi

ஆந்திர தேசத்தில் ஆஸ்துமா தொந்திரவுக்காக, மூக்கு வழியே மீன் சாப்பிடுபவர்களைவிட இது தேவலாம் தானே..

Wednesday, June 23, 2004

மாறும் மதிப்பீடுகள்
==================

'பெரிய செட்டு' என்று எல்லா இடங்களிலும் ஒன்றுண்டு. உருவத்தில், நடவடிக்கைகளில் எல்லாம் முரட்டுத்தனம் தெரிய, கடைசி பெஞ்சில் உட்கார்ந்ந்து கொண்டு வாத்தியாரை கிண்டல் அடிப்பார்கள். கூடப் படிக்கும் பெண்களின் சேலை விலகினால் "ஸ்..." என்பார்கள் கீழ்க்குரலில்.
சுற்றுப்புறம் மறந்து கெட்ட வார்த்தை பேசுவார்கள். சாயங்காலம் ஷார்ட்ஸும், வியர்வை வெள்ளை படிந்த டி சர்ட்டுமாய் வாலிபால், பாஸ்கட் பால் ஆடுவார்கள். விளையாடி முடித்து ஃபில்டர் கிங்ஸ் குடித்து , வாரயிறுதிகளில் ஹாஸ்டல் வராந்தாக்களில் பியர் பாட்டிலோடு 'ம்மாள.." என்ரு பேசித் திரிவார்கள். போதை மிதமிஞ்சிப் போனால் லேடீஸ் ஹாஸ்டல் வாசலில் நின்று சவுண்டு விடுவார்கள்.

காலேஜ் படிக்கும் போதெல்லாம் இம் மாதிரி ஆட்களைப் பார்த்து மிரண்டு ஓடியது நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. கொஞ்சம் வருத்தமாக கூட இருக்கிறது. மனிதர்களை சரியாக எடை போடத் தெரியாமல் , வெளியில் தெரிந்த முரட்டுத்தனத்தையும் அடாவடித்தனத்தையும் மட்டும் பார்த்து நல்ல ,மனிதர்கள்/நண்பர்கள் பலரை நான் இழந்திருக்கிறேன். கல்லூரி வயதில் நடந்த ஹார்மோன் ரகளையில் எனக்கு எஃபக்ட் உள்ளே இருந்து 'பக்திப்' படம் பார்க்க வைத்திருக்கிறது. சிரித்து சிரித்து கடலை போட வைத்திருக்கிறது. பாட வைத்திருக்கிரது. கவிதை எழுத வைத்திருக்கிரது. அது அவர்களை வேறு மாதிரி நடக்க வைத்திருக்கிறது. வெளிப்பட்ட விதம்தான் வித்தியாசமே தவிர, ரகளை ஒன்றுதான். அதை தவறு என்று கூட சொல்ல மாட்டேன். ஏனெனில் அவர்கள் கல்லூரியில் நாலு வருடங்களில் செய்த அத்தனையும், நான் அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாசுக்காக செய்திருக்கிறேன்.

இத்தனையும் எதற்கென்று கேட்கிறீர்களா..??

கல்லூரியில் மேற்சொன்ன கல்யாண குணங்களோடு இருந்த என் 'பெரிய செட்டு' பேட்ச் மேட் ஒருவனுடைய தங்க மனசு இத்தனை காலம் கழித்து எனக்கு தெரிய வந்திருக்கிறது. இத்த்னை முட்டாளாக இருந்திருக்கிறோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் எனக்கு வருத்தமே இல்லை.

கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படுவதில்தான், என்னுடைய வளர்ச்சி தெரிகிறதாய் நான் நம்புகிறேன்.

Tuesday, June 22, 2004

பெண்மொழி

===========

normal_Cute


ஆழமாய் வேர்பரப்ப முடியாதபடி
பதியமிடும் குரோட்டன்களாய்
போயிற்று வாழ்க்கை

சத்தமிட்ட என் சிரிப்புகளிலிருந்து
சந்தோஷத்தை கிள்ளியெடுத்து
அதிராத சிக்கன முறுவல்களை
பதியமிட்டாள் பொட்டற்ற பாட்டி

முழங்கால் தெரிந்த ஆடையையும்
கதவு தாண்டிய பாண்டியாட்டத்தையும்
ஜன்னலுக்குள் பார்வைகளாய் சிறைவைத்து
வேர்களோடாது பதியமிட்டார் அப்பா

சரியாத ஆடைகளை சரிசெய்து
சுழலும் விழிகளை தணிக்கைக்குட்படுத்தி
தொடைவலிக்கக் கிள்ளி வெட்கம் கற்பித்து
வட்டத்துக்குள் பதியம் வைத்தாள் அம்மா

அவனிஷ்டத்துக்கு பூத்து காய்த்து
கனியும்படி, நீர் கசிய துளையுமின்றி
குடும்பப் பாத்திரத்தில்
பதியமிட்டிருக்கிறான் கணவன்

சந்தோஷம் துக்கமென அவர்களுக்காய்
வாழச்செய்திருக்கின்றன தொப்புள்கொடி உறவுகள்
மழைவிரும்பினாலும் இவர்களுக்கென
கான்க்ரீட் குடைகளுக்குக் கீழ் பதியமாய்

கிளைபரப்பி விழுதிட்டு தாங்கி நின்றாலும்
சார்ந்து வாழும் கொடியென
வீட்டுக்குள் பொய்ப்பதியமிட்டு
அழகிற்காய் வைத்திருக்கிறது சமூகம்

வேர்களை தொலைத்து விட்டு பதியங்களில்
கழிகிறது குரோட்டன்ஸ் வாழ்க்கை.


கவிஞர் பாலா எழுதி இருக்கும் கவிதை பெண்களின் வாழ்க்கை குரோட்டன்ஸ்களாய் சிறுப்பதாய் சொல்கிறது. இன்னொரு பாலா இருபது வருடம் முன்பு, கல்யாணமாகாத ஒரு முதிர்கன்னியின் வாழ்க்கையை "கல்யாண முருங்கை" என்ற நாவலாய் எழுதினார். பெண்வாழ்க்கை இப்படியல்ல என்று சொல்ல என் கண்முன்னே ஏராளமான உதாரண்ங்கள் உள்ளன. என்றாலும், இன்னமும் எங்காவது ஒரு மூலையில் இம்மாதிரி இன்னமும் வாழும் பெண்களும் இருக்கிறார்கள்.

சுகிர்தாராணியின் கவிதைகளை படித்தவுடன், எனக்கு இதை இங்கே இடத் தோன்றியது.
மெல்ல..மெல்ல
================

முதுகு இன்னமும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இரவில் கனவுகளே இல்லாமல் பெருங்குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறேன். செய்ய வேண்டிய காரியங்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறேன். அலுவலக பணி சுமை வேறு. ஆயினும் இன்று உணவு இடைவேளையில் வெகுநாட்கள் கழித்து பூவலம் வந்தேன்.

அப்பப்பா...சந்தோஷமாயிருக்கிறது.

வலைப்பூவில் வாசன் தன் தமிழுலக இணைய அனுபவங்களை பட்டியலிட்டிருந்த பதிவு அருமை. தமிழ் இணையத்தில் "தினம் ஒரு கவிதை" வழியே நுழைந்த என்னைப்போல நடு விடலைகளுக்கு, புதிய செய்திகள் அவை. அழகு தமிழில் நிறைய விடயங்களை எழுதும் அவர் பெயரின் பின்பாதி மட்டும் எனக்கு 'தளை' தட்டுகிறது. எனவே அவரைக் குறிப்பிடும்போது கவனமாக தவிர்த்திருக்கிறேன்.

அட்சரம் அசாத்தியமான ஆழத்தோடு அற்புதமாக வருகிறது. எஸ்.ரா அருமையாக எழுதுகிறார். அவரை வலைப்பூவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு, தண்ணியில்லாத காட்டிலும் பான் பராக் கிடைக்கட்டும். பழைய பிலிப்ஸ் ரேடியோவில் ஃபேஷன் ஷோ தெரியட்டும்.சூர்ப்பனகையின் மூக்கரிந்த கதையை எச்.ரா வெளிப்படுத்தி இருக்கும் இடமும், அந்தப் பதிவின் வீச்சும் அருமை. அவருடைய ஆங்கில காப்பிப் படங்கள் பற்றிய பதிவின் பின்னூட்டம் வழியாக குமுதம் பாலாஜி பக்கம் சென்றேன். அங்கு அண்ணா கண்ணனின் கவிதாயினி பற்றிய பதிவுகள்.

மாலதி மைத்ரி, சுகிர்தாராணி என்று அறிமுகங்களைப் படிக்க படிக்க தேன் குடித்த நரி ஆகி விட்டேன்.

ஒற்றையாக, பெரும் ஆறாக ஓடி வரும் காவிரி, தஞ்சை மண்ணில் கிளை நதிகளாக ஓடி கடலில் கலப்பதை கல்கி இப்படி வர்ணித்திருப்பார் " நாயகனாகிய சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க காவிரி தன் கைகளை நாலாக, ஆறாக, எட்டாக ஆக்கி அசாத்திய காதலோடு ஓடி வருகிறாள் "

பத்திரிக்கை உலகிலிருந்தும், பதிப்பு உலகிலிருந்தும், கணிணித் துறையிலிருந்தும், இணையத்தமிழை நோக்கி ஓடி வரும் பெருங்கூட்டத்தின் ஆயிரம் கைகளைப் பார்த்து எனக்கு ஏனோ கல்கி சொன்னது ஞாபகம் வந்தது.

வேகமாய்த் தமிழ் இனி வளரும்...


Thursday, June 10, 2004

கார்மேகம்
=========

" நம் எல்லோரிடமும் ஆண்/பெண் என்ற இரு குணங்களும் நிரம்பிக் கிடக்கிறது. எனவே பெண் குழந்தைகளிடம் ஆண் குணங்களையும், ஆண் குழந்தைகளிடம் பெண் குணங்களையும் ஊக்கி வளர்த்தால் வாழ்க்கையில் பாதி குழப்பங்கள் ஒழிந்து விடும் " என்றாராம் ஓஷோ. குழந்தைகள் வளர்வதைப் பார்க்கும்போது இது உண்மைதான் எனத் தோன்றுகிறது. பெண் குழந்தைகள் என்றால் 'பார்பி டால், சமையல் சாமான், மைக்ரோவேவ் அவன், குழந்தை பொம்மைகள், டோரா கார்ட்டூன் என்று ஒதுங்க, ஆண் குழந்தைகள் கார், ட்ரக், பைக் , சைக்கிள் என்று வேறு திசையில் பயணிக்கின்றன. க்ரோமோசோமில் இதையெல்லாம் ஹார்ட்கோட் பண்ணிவிட்ட கடவுள், இதையெல்லாம் சில குழந்தைகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே வைத்து விட்டான் போலும்.

டீ.வில் வரும் கார் விளம்பரத்தில் " உங்கள் குழந்தை மம்மி என்ற வார்த்தையையோ, டாடி என்ற வார்த்தையையோ முதலில் சொல்வதில்லை. அவன் கார் என்பதை தான் முதலில் சொல்கிறான். எனவே எங்கள் காரை வாங்குங்கள் " என்கிறான்.எங்கள் வீட்டில் எங்கு போனாலும், எதை எடுத்தாலும், எதையாவது தேடினாலும் புளியங்கொட்டை சைஸிலிருந்து , பூத சைஸ் வரை கார்கள்...கார்கள்...கார்கள். டீ.வி பார்த்தால் கார், புத்தகம் படித்தால் கார், நாங்கள் பேப்பர் படிக்கும்போது எங்களுடன் உரசிக்கொண்டு அவனும் படிக்கையில் பேப்பரில் கார் , காரில் போகையில் கார், ஸ்கூலுக்கு போகயில் கார், அங்கே போனதும் கார் என்று சூர்யா சரியான கார் பைத்தியம். ஸ்கூலில் பெரிசாக சொல்லிக் கொடுத்து கிழிக்கவில்லை என்றாலும், அட்லீஸ்ட் அவர்கள் சொல்லித்தரும் சின்னச்சின்ன விஷயங்களை சிரத்தையாக செய்ய விடாமல் , கார் பைத்தியம் அவனைத் துரத்திக் கொண்டிருக்கிறதே என்று ஒருநாள் வீட்டில் உள்ள எல்லா கார்களையும் மூட்டை கட்டி ஓரமாகப் போட்டேன். "மனநிலை பாதித்து விடப் போகிறது ...அப்படி செய்யாதீர்கள் ' என்கிறாள் சூர்யாவின் மம்மி.

போன வாரம் குழந்தைக்கு "தனந்தரும் கல்வி தரும் ...தளர்வறியா மனம் தரும் " சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தபோது அவனாக " கார் தரும் " என்ற வார்த்தையையும் சேர்த்து விட்டான் என்றால்....
அவன் கார்மோகம் எந்த அளவிற்கு போயிருக்கிறது என்று விளங்குகிறதா..??

காரை எடுக்காதே என்று கட்டளை போட நல்லதொரு பரமசிவம்பிள்ளையை தேடிக்கொண்டிருக்கிறேன்.

அதட்டுவதற்கு ஒரு அடியாள் இருப்பது நல்லதுதானே..

Monday, June 07, 2004

தங்கள் சித்தம் என் பாக்கியம்
===================================


A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ

1 2 3 4 5 6 7 8 9 10

( பாராவின் ஒன்பது கட்டளைகளை சிரத்தையாக பாவித்து எழுதி இருக்கும் முதல் பதிவு :-) )

வாரயிறுதி விவரணைகள் - 1
============================

Munnabai


சஞ்சய்தத் படங்களை பொதுவாக நான் பார்ப்பதில்லை. கடைசியில் 1993 அக்டோபரில் டோம்பிவிலியில் கல்நாயக் பார்த்ததோடு சரி.( அதுவும் மாதுரி தீக்ஷித்துக்காக...) வசூல்ராஜா வாக வரப்போகிறதே என்பதற்காக, முன்னாபாய் எம்.பி.பி.எஸ் பார்த்தேன். ஆரம்ப காட்சிகளில் சற்றே நாடக வாசனை அடித்தாலும், கொஞ்ச நேரம் கழித்து படம் உள்ளே இழுத்து விட்டது. சஞ்சய்தத் இயல்பான காமெடியில் கலக்கி இருந்தார். மதுபாலாவின் மலிவுப் பதிப்பு போல இருந்த க்ரேஸி சிங் அழகாக இருந்தாலும் சில காட்சிகளில் அசடு வழிந்தார்.படம் பார்க்கும்போது நம்மைக் கவரும் கதாபாத்திரங்களை " இதை யார் தமிழில் செய்யப்போகிறார்கள்' என்று யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை. விஸ்வநாத், பிரபு, ஸ்நேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இருப்பது தெரிந்தாலும், டெல்லி கணேஷ், மணிவண்ணன், நாசர், எஸ்.என்.லக்ஷ்மி,மயில்சாமி மற்றும் பசுபதியும் இருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்தக் கதையை தமிழில் கமலை வைத்து செய்ய யோசித்தவர் யாரோ அவருக்கு ஒரு சபாஷ். க்ரேஸி மோகன் வசனங்களோடு காமெடியில் கலக்கி எடுக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. பட ஷூட்டிங்கில் கமல் தன் கவிதைகளை சரணிடம் படித்துக் காண்பிக்கிறாராம். செம மூடு போலிருக்கு.

ஜோடி ஸ்நேஹா ஆச்சே...

எழுதுங்க சார்..எழுதுங்க...!!!

(ஒன்பது கட்டளைகள் படித்த பிறகு எது எழுதினாலும் பயம்ம்..மாயிருக்கு.)

Friday, June 04, 2004

மியூசியம் வெரைட்டி..??

===================

உனக்கேன் இந்த மாதிரி
ஆசையெல்லாம்...

என் வளையலை உடைப்பது,
கொலுசுத் திருகாணியைக்
கழற்றி விடுவது
கூந்தலில் இருக்கும் பூவைப்பறித்து உன்
கன்னத்தில் உரசிக்கொள்வது
காதில் தொங்கும் ஜிமிக்கியை
ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது

ஆனால் ஒன்று
சின்ன வயதிலிருந்து
இந்தத் தோடு
வளையல்,பூ,கொலுசு
இதெல்லாம் எதற்காக
அணிந்து கொள்ளவேண்டுமென்று
யோசித்து யோசித்து
விடை தெரியாத கேள்விக்கு
உன்னால்தான்
விடை கிடைத்த மாதிரியிருக்கிறதெனக்கு

சின்ன வயதில் சில நேரங்களில்
வெட்கப்பட்டிருக்கிறேன் ஆனால்
அப்போது
வெட்கப்படுவதில் வெட்கப்படுவதைத் தவிர
வேறு எதுவும் இருந்ததில்லை
வேறு ஏதாவது இருக்கும் என்பதுகூட
அப்போதெனக்குத் தெரிந்ததில்லை
இன்றுமாலை
பேசிக்கொண்டிருக்கையில்
சட்டென்று நீ
என் கையை பிடித்து விட்டபோது
உன் கைக்குள் இருக்கும் என் கையை
இழுக்கத் துடிக்கும் என் பெண்மையிலும்
"வேண்டாம் இருக்கட்டும்" என்ற காதலிலும்
மாறி மாறித் தவித்த தவிப்பில்......
அப்பா...
வெட்கப்படுவதில்
என்னென்ன இருக்கிறது.கவிதையில் காதோரம் குழல் கற்றைகள் அசைந்தாட, பிஸ்தா க்ரீன கலர் சூடிதாரோடு தெளிந்த விழிகளும், சின்னச் சிரிப்புமாக, கருப்பு ஸ்ட்ராப் வாட்ச்சோடு ஒரு பெண் தலை குனிந்து சிரித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரிகிறதா...???

தினம் ஒரு கவிதை யில் வந்த கவிஞர் 'தபு சங்கரின் " கவிதை.

தலைப்பு சத்தியமாய் அவர் கொடுத்த தலைப்பில்லை. என் கைங்கர்யம்.

Thursday, June 03, 2004

இக்கரைக்கு அக்கரை பச்சை
=========================

bl_060304


பிரில்லியண்ட் டுடோரியல்ஸ்/அகர்வால் என்ற பெயர்களை கேட்ட மாத்திரத்தில் சென்னை மாணவர்களுக்கு தலையில் பல்பு பளீரென்று எரியும். தமிழ்நாட்டில் எஞ்சினியரிங் நுழைவுத்தேர்வு எழுத, எந்தப் பயிற்சியும் அவசியம் இல்லை. ஆனால் IIT யில் சேர, IIT JEE என்ற தேர்வை எழுதி பாஸ் பண்ணினால் மட்டுமே தரவரிசையின் அடிப்படையில்,இந்தியாவில் உள்ள எட்டு ஐ.ஐ.டி களில் ஒன்றில் இடம் கிட்டும்.தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு இந்த தேர்வு எட்டாக் கனி. செந்த்ரல் போர்டும், மெட்ரிகுலேஷன் படிக்கும் மாணவர்களுக்கே இந்த தேர்வு மிகக் கடினம். (12 ஆவது படிக்கும்போதே நானும் இதை ட்ரை பண்ணிவீட்டு பேய்முழி முழித்திருக்கிறேன்). அப்போதெல்லாம், " என்னடா இது ...ஸ்டேட் போர்ட் படித்ததனால், இந்த மாதிரி எக்ஸாம்களில் தேற முடியவில்லையே" என்று வருத்தப்படுவது வழக்கம். இந்த கல்விமுறை வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களைத் தான் உருவாக்குகிறது. மார்க் எடுக்கும் திறமையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்னதான் செய்யப் போகிறோம் என்று சலித்துக் கொண்டதுண்டு. 10 ஆவதுக்கும் 12 ஆவதுக்கும் மட்டும் வெவ்வேறு சப்ஜெக்டுகளுக்கு ட்யூஷன் போய், படித்ததை எல்லாம் பரீட்சை பேப்பரில் வாந்தி எடுத்து, MPC இல் 95% எடுத்து எஞினியரிங் சேர்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு படிப்பு என்னெ ரேஞ்சுக்கு போனது என்பது தனிக்கதை. அது வேறு ஒரு சமயம்
.

ஆனால், என் சூர்யா ஸ்கூலுக்கு போய் விட்டு வருவதைப் பார்க்கும்போது, அமெரிக்காவில் இளையர்கள் ஹைஸ்கூல் ட்ராப் அவுட்டுகளாக, மெக்டீயில் பர்கர் ஃபிலிப்புவதை பார்க்கும்போது, பரிட்சை பேப்பர் திருத்தும் என் மனைவி சிக்ஸ்த க்ரேட் மாணவர்களின் அறிவு "விஸ்தீரணங்களை" பற்றி சொல்லும்போது,சொல்லிக் கொடுக்கும் போது சரிவர கவனிக்காமல் சூர்யா அலைபாயும்போது, என் இந்திய கல்விமுறை சரிதானோ என்ற எண்ணம் எழுகிறது. அதற்குத் தகுந்தாற்போல், வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் இந்திய பெற்றோர்களும் இந்தியா செல்லும்போது இந்திய பாட புத்த்கங்களை வாங்கி வந்து இங்கே சொல்லித் தருகிறார்கள். கிட்டத்தட்ட இந்திய கல்விமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதால், குடாப்பகுதியில் சேலஞ்சர் எனப்படும் பள்ளிகளில், அதிக செலவு செய்து தன் குழந்தைகளை சேர்க்கிறார்கள். கணக்கிலும் அறிவியலிலும் மிக மோசமான திறமை உள்ள அமெரிக்க குழந்தைகள் நம் குழந்தைகளை விட இங்கே பின் தங்கி இருக்கிறார்கள். இங்கு படிக்கும் இந்திய குழந்தைகள் இந்தியா திரும்பி போனால் ஸ்கூல் பரீட்சைகளில் ஃபெயில் ஆகிறார்கள் என்று சொல்வதை எல்லாம் கேட்டால் வயிறு கலங்குகிறது. நம் பாடமுறை மனப்பாடம் செய்ய பயிற்றுவித்தாலும், மார்க் எடுக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தாலும், படிக்கும் மாணவர்களுக்கு அதைப் பற்றிய ஒரு சீரியஸ்னெஸ்ஸை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.அது முக்கியம் எனவும் நினைக்கிறேன். அமெரிக்க இளைய சமுதாயமே இந்த சீரியஸ்னெஸ் இல்லாமல்தான், கல்லுரி போகும்போது, சடாரென்று உயரும் பாடத்தின் கனத்தினாலும், அழுத்தத்தினாலும் நிலைகுலைந்து போகிறது.


எனவே ஸ்கூல் பருவத்தை இந்தியாவில் கழித்து, பட்டபடிப்புக்கோ, பட்ட மேற்படிப்புக்கோ அமெரிக்கா வருவதுதான் சரி என எனக்குத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...?

பின்னூட்டம் தருவதை விட உங்கள் எண்ணங்களை விரிவாக உங்கள் வலைப்பதிவில் எழுதினால மகிழ்ச்சி. பாடத்திட்டம் பற்றியும், கல்வி பற்றியும் ஏற்கனவே அநாமிகாவும், வெங்கட்டும் தொடங்கி வைத்தார்கள்
.

அப்போதிலிருந்தே எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டிருதேன்.

இன்றுதான் வேளை வந்தது.

(பதிவுக்கும், போடும் பொம்மைக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமா என்ன..?? ஹி..ஹி...)

Wednesday, June 02, 2004

உலகம் சுற்றும் வாலிபன்
=======================

2000 ஆகஸ்டில், அமெரிக்காவில் குடாப்பகுதியில் அடியெடுத்து வைத்தபோது, கோவன்சிஸ் (Covansys ) மில்பீடஸ் அலுவலகத்தில் நான் பாலமுருகனைப் பார்த்தேன்.என்னைப் போலவே அவரும் நெட்வொர்க் ஆசாமி. எல்லோரும் அவரை ஜீ..ஜீ என்று விளித்துக் கொண்டிருந்தார்கள்.NIC கன்பிகரேஷனிலிருந்து , உங்கள் வீட்டு குழாய் ரிப்பேர் ஆனால் என்ன செய்வது என்பது வரை இந்த ஜீ யிடம் கேட்கலாம். எல்லோருக்கும் ஓடி ஓடி உதவும் மனசு. உங்களுக்கு எங்காவது ஏர்போர்ட் போக வேண்டுமானால், பாலா சாமான் உள்பட ட்ரங்கில் ஏற்றி ( நீங்கள் சொல்லாமலேயே) கொண்டு விடுவார். "இதையெல்லாம் நாம செய்ய வேணாய்யா" என்ற இயல்பான எண்ணம் அவருக்கு வராது. எப்படி இப்படி வளர்ந்தாரோ என்று நான் அவ்வப்போது ஆச்சரியப்படுவது உண்டு.

பதிவு அதைப் பற்றி இல்லை.

என்னுடன் குடாப்பகுதியில் இருந்தவர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கு ப்ராஜெக்ட் சென்றார். ஒன்றரை வருடம் கழித்து அந்த புராஜெக்ட் முடிய, சாக்ரமண்டோ வந்தார். சாக்ரமண்டோ வில் இருந்து போன வருடம் இண்டியானாபொலிஸ் சென்றார். இப்போது மறுபடியும் கான்சாஸ் செல்கிறார். தனியாக இல்லை. மனைவியுடனும் , 4 வயது மகனுடனும், காருடனும், தன்னுடைய தட்டுமுட்டு சாமான்களுடனும். எல்லா இடங்களிலும் மூவிங் செலவுகள் கம்பெனியே தருகிறது என்றாலும், வேலை செய்வது கனச்ல்டிங் கம்பெனி என்றாலும் , மூன்றரை வருடங்களில் இது கொஞ்சம் அதிகமாகத் தோன்றவில்லை.????? போகும் இடங்களில் புதிய மனிதர்கள், புதிய ஏரியா, புதிய அபார்ட்மெந்த், புது ட்ரைவிங் ரூல்ஸ், புது க்ளைமேட் என்று தினுசு தினுசாக வாழ்க்கை. அவருடைய அட்ரஸே சமயங்களில் அவருக்கு மறந்து விடுகிறது.

இத்தனை அலைச்சல்களிலும் இன்னமும் புன்னகை மாறாமல், போனை எடுத்தவுடன் ' என்ன Buddy ..எப்படி இருக்கீங்க' என்று வெடிச்சிரிப்பு சிரித்தவாறு வார்த்தையாடுகிறார்.

கடவுள் பொறுமைசாலிகளைதான் ரொம்ப சோதிக்கிறான்.

ஒரு வாசகமென்றாலும் திருவாசகம்தான்
=====================================

'என் புள்ள இந்த வீட்டுல சாப்பிட்டே 15-20 வர்சத்துக்கு மேல ஆச்சுய்யா..ஒத்த பிள்ள ஒரு பிள்ளைய பெத்துட்டு அதயும் இந்த ஊருக்கே கொடுத்துட்டேன்" என்று வெள்ளைப்புடைவை உடுத்திய அந்த மூதாட்டி படுக்கையில் படுத்தபடி தீனமாக சொல்ல சொல்ல மனசு கனத்துப் போகிறது.

கருப்பு வைரம் காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகி இருக்கிறது.அந்தப் படத்தில் இருந்துதான் மேற்கண்ட காட்சி.

kaamaraj


காலம் சென்ற தலைவர்களைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. அதில் மிகுதியும் அவர்களைப் பற்றி உயர்வாக சொல்லப்படுபவன. இறந்து போனவர்களைப் பற்றி ஏதும் மோசமாகப் பேசக்கூடாது என்ற மரபு வழியின்படி பேசினாலும், அந்தக் காலகட்டத்தில் உள்ள பத்திரிக்கைகள், பழைய பேட்டிகள் என்று பார்க்கும்போது இப்போது உயர்வாக பேசப்படும் தலைவர்களின் பொது வாழ்வு அத்தனை சிலாக்கியமாக இல்லை என்பது விளங்கும்.பொதுவாழ்வில் எளிமைக்குப் பேர்போன காங்கிரஸ் மந்திரி கக்கனைப் பற்றிக்கூட டி.என்.சேஷன் ஒருமுறை மோசமாக சொல்லி இருந்தார். ஆனால் விருதுப்பட்டி வைரத்தைப் பற்றி இதுவரை நான் ஒருமுறைகூட, ஒருவரிடம் கூட கெட்ட விஷயங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் எளிமை, தான் படிக்காது போனாலும் தமிழ்நாடு படிக்க ஏற்பாடு செயத தீர்க்க தரிசனம், தொழில் முன்னேற்றத்துக்கான முனைப்பு என்று இத்த்னை பண்புகளையும் ஒருங்கே, ஏதாவது தற்கால அரசியல்வாதிகளிடத்தில் தேடினால ஏமாற்றமே மிஞ்சும். எத்தனை அறிவிருந்தாலும் யாரையும் மதிக்காதவர்களாக, எத்தனை திற்மை இருந்தாலும் தான்,தன் குடும்பம், தன் பேரன் என்று குறுகிய நோக்கில் சிந்திக்கும் குடும்ப ஆர்வலர்களாக, இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் கொள்கையில் நாட்டம் கொண்டவர்களாக, ஏகப்பட்ட தகுதிகள் இருந்தாலும் பவுடர் மூஞ்சிகளுக்கு வால் பிடிக்கும் சிவகங்கைப் பிள்ளைகளாத் தான் தற்காலத்தவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.

அத்தனை நற்பண்புகளமையப் பெற்ற குணசீலன், இந்தியாவின் பிரதமரையே தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருந்த அந்த நல்லவர், அரசியலுக்கு தேவைப்படும் திறமைகள் இல்லாமல், சாமர்த்தியசாலியாக இல்லாது போனதுதான் காலக்கொடுமை.நேர்மையாளர்கள் நெளிவு சுளிவு இல்லாமல் தோற்றுபோவதால்தான், புல்லுருவிகள் சாம்ர்த்தியமாக பிழைத்துக் கொண்டு காலம் கடத்துகிறார்கள்.

காமராஜர் விஷயத்தில் எனக்கு ஒரு வருத்தம் உண்டு.

ஊரே போற்ற வாழ்ந்தாலும், தாயை சரிவர கவனிக்காமல், அவர்களை தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வைத்துக் கொண்டு, வறுமையில் வாட விட்டுக் கொண்டு வறட்டு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். இதே எண்ணம் மகாகவியின் விஷயத்திலும். வீட்டில் சோறு இருக்கிறதா என்று பார்க்காமல் வந்தவர்க்கெல்லாம் சோறு போட்டு மனைவியை வறுமையில் வாட விட்டதுவும், தன் செல்வ மகளின் திருமணத்துக்குக்கூட போகாமல் வெளியிருந்ததுவும் என்னைப் பொறுத்தவரை மிக கொடுமை. ஊருக்கே நிழல் தரும் ஆலமரம், தன்னில் ஒதுங்கிய மைனாக்குஞ்சை வெளியே தள்ளும் செயலாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என் நண்பனுடன் இது பற்றி இருநாள் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான்.

19170841


"பாரதியும் காமராஜும் நம்மைப்போல தனக்கும் தன் குடுமபத்துக்கும், என வாழ்ந்து இறந்து போயிருந்தால் நாம் இன்னும் இவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போமா..சாதாரணர்கள் ஆயிரம் பேர் இருக்கும் உலகில், இதைப் போல அசாதாரணர்களும் தேவை - அவர்களை சார்ந்தோருக்கு ரணமாயிருந்தாலும் "

உண்மைதான்.

Tuesday, June 01, 2004

கரும்பு (ஜூஸ்) விற்கும் அரும்பு
==============================

பாரா சிஷ்யனின் லீலைகள் ஆரம்பம்.

ஆனா...சும்மா சொல்லக்கூடாது. முதல் பதிவே கலக்கல்...

தொடர்ந்து எழுதுங்க ராசா.

என்னிடம் சதாம் உசேனின் துப்பாக்கி இருக்கிறது - ஜார்ஜ் புஷ்
=========================================================


என்னிடம் பாக்கிஸ்தான் பந்துவீச்சாளரின் விரல் இருக்கிறது - டெண்டுல்கர்

என்னிடம் அத்வானியின் பல் இருக்கிறது - சோனியா

என்னிடம் ஜெ யின் பிரம்பு இருக்கிறது - கருணாநிதி

என்னிடம் காங்கிரஸின் வால் இருக்கிறது - சுர்ஜித்

என்னிடம் ஒய்.எஸ்.ஆருக்கு laxative இருக்கிறது - சந்திரபாபு நாயுடு

அப்பாவுக்கு ஆப்பு என்னிடம் இருக்கிறது - இன்பத்தமிழன்

ஸ்டாலினுக்கு 2006ல் வெடி இருக்கிறது - வைகோ

என்னிடம் சிம்ரனின் லிப்ஸ்டிக் இருக்கிறது - கமலஹாஸன்

.....

......

......


என்று இவர்களும் சொல்லாம் தலைப்பை படித்துவிட்டு.

தலைப்பு -- உண்மை

ஜூரி ட்யூட்டி
=============

அமெரிக்கர்கள் மிக வெறுக்கும் வேலை இது. நம்மூரில் சாதாரண கோர்ட்டில், வக்கீல்கள் எல்லாம் பேசப் பேச, ஒரே நீதிபதி உட்கார்ந்து சுத்தியலை தட்டிவிட்டு தீர்ப்பு சொல்லிவிட்டு போய்விடுவார். ஆனால் அமெரிக்காவில் வரி கட்டும் எல்லாருக்கும், கோர்ட்டிலிருந்து இந்த வேலைக்காக ஓலை வரும். நேரில் போய் இதற்கான குவாலிஃபிகேஷன் எல்லாம் இருக்கிறதா என்று கோர்ட் ஆசாமிகளால் சரி பார்க்கப்பட்டால், இந்த வேலையை 16$ தினசரி சம்பளத்தில் இரண்டு வாரம் பார்க்க வேண்டும்.அமெரிக்க குடிமகன்களாக இருக்க வேண்டியது இதற்கான தகுதி என்றாலும், வரி கட்டுவதால் இமிக்ரண்ட்டுகளுக்கும் இந்த ஓலை வரும். 'அய்யா..நான் சிட்டிசன் இல்லை' என்று பதில் கொடுத்தால் போதும். விட்டுவிடுவார்கள். இந்த ஜூரி சிஸ்டம் நம் ஊரில் அந்தக் காலத்தில் இருந்ததாம். கொள்ளுத்தாத்தா ஜகந்நாதன் மாயவரம் முனிசிபல் சேர்மனாக இருந்ததோடு, நாகப்பட்டினம் கோர்ட்டில் ஜூரியாகவும் இருந்ததாக அப்பா சொல்லுவார். உண்மையா..உடான்ஸா என்று தெரியவில்லை.

இதை வைத்து எடுத்த Runaway Jury என்ற படத்தை நீள்வாரயிறுதியில் ( Long weekend :-) ) பார்த்தேன்.

படம் சரியான மசாலாதான். சொன்ன விதம் தான் அசத்தல். ஜான் க்ரீஷாம் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இது. ஜான் க்யூசாக்,டஸ்டின் ஹாஃப்மன் மற்றும் ஜீன் ஹாக்மன் நடித்த இப்படம் சொல்லப்பட்ட ஸ்டைல் ஷங்கர் படங்களை ஒத்து இருந்தது. வெளிப்பார்வைக்கு சாதாரணனாக இருக்கும் நாயகன், மறைவில் கொலை செய்பவனாக, பயமுறுத்துபவனாக, அதைச் செய்ய தேவைப்படும் கரிய கடந்த காலத்தோடு...etc etc. நிறைய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் பின்புலங்கள், அமெரிக்க சமூகத்தின் அடிப்படை பிரச்சினையான ஸ்கூல் ஷூட்டிங்/துப்பாக்கி கலாசாரம், சம்பந்தப்பட்ட வழக்குகள், வக்கீல்கள் என கதை சுழற்றி சுழற்றி அடிக்கிறது.படம் பார்க்கும்போது கொஞ்சம் அசந்தாலும், கதையின் ஏதாவது ஒரு நுனி மிஸ் ஆகி விடும் அபாயம் இருக்கிறது. ஆனால், டாகுமெண்டரி வாடை அடிக்காமல், வெகுஜன விருப்பங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இந்த முக்கியமான விஷயத்தை சொன்னதற்கு ஒரு ஷொட்டு.

runaway_jury


நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்தால் சந்தோஷம். கிழக்குக்கரை நகரங்களில் இது வித்தியாசமானதாகவும் ( வெஸ்ட் கோஸ்ட் கலாசாரம் இருக்கிறது - more liberal ), பல படங்களில் குற்றம்/சதி வடிவமைக்கப்படும் இடமாகவும் இருக்கிறது. இதோடு 'மார்டிக்ரா' என்று கொண்டாடப்படும் நியூ ஆர்லியன்ஸ் திருவிழாவைப் பற்றியும் யாரேனும் எழுதினால் , மகிழ்ச்சி.

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...