Friday, April 20, 2007

நிறை அன்பு I.A.Sவிகடனில் சமீபகாலங்களில் வந்திருக்ககூடிய மிகக அற்புதமான தொடர் இது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதனையாளர்கள், திறமையாளர்கள் என்று வரிசை கட்டி ஆடுகிறார்கள்


மனதை மிகவும் கவர்கிற எழுத்துக்கள்.


*****************


‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.

சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.


சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.

கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.


கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.


‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.


தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.


சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.


காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!

வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.


ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.
இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.


ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!


என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!
தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!


மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.


என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!


*******

இறை நம்பிக்கை


அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!

ஜெயித்தது எப்படி?


சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!

இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..


தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!


கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?


கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!


ஒரே கனவு


அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?

Tuesday, April 17, 2007

The Bridges of Madison County(1995)


ஆக்ஷன் ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் டைரக்ஷனில் 1995ல் வெளிவந்த படம். அவரே கதாநாயகன். நாவலாக எழுதப்பட்டு பெருவெற்றி பெற்ற கதையை படமாக்கி இருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத கதை, யோசிக்க வைக்கும் கரு, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதை மற்றும் வசனம்.

அயோவா மாகாணத்தின் கிராமம் ஒன்றில் பதின்ம வயது பிள்ளைகளுடன், பழிபாவம் இல்லாத நல்ல கணவனுடன், ப்ரான்ஸெஸ்கா (Merryl streep) தன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறாள். நூற்றைம்பது வருடமாக கணவன் குடும்பத்தார்க்கு பழக்கப்பட்டு போயிருக்கும் அந்த வீட்டில் இத்தாலி கிராமத்திலிருந்து வந்து அவள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகின்றன. குழந்தைகள் மற்றும் கணவனுடனா அவள் பழக்க வழக்கத்தில் அன்பும், நெருக்கமும் தெரிந்தாலும், கொஞ்சம் அலுப்பும் தெரிகிறது. மத்திய வயது, பறக்கத் துவங்கி சற்றே விலகத் தலைப்பட்டு இருக்கும் குழந்தைகள், இத்தனை வருடங்களான தாம்பத்தியத்தில் தன்னுடைய ஆகர்ஷிப்புக்கு வெளியே போய்விட்ட கணவன், என நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ வேலையாக கணவனும், குழந்தைகளும் ஒரு வாரம் வெளியே செல்கிறார்கள். தினசரி கடமைகளில் இருந்து அவளுக்கு சற்றே ஓய்வு கிடைக்க, வீட்டு முன்புறம் அருகே உலாத்திக் கொண்டிருக்கும் அவளிடம்
பாலத்துக்கு வழி கேட்க வந்த நேஷனல் ஜியாக்ரஃபி போட்டோகிராஃபர் ஒருவன் ஆச்சரியமூட்டுகிறான். காற்றுக்கு சொந்தக்காரனைபோல சொந்த பந்தம் இல்லாமல் விட்டு விடுதலையாகி, உலகம் முழுக்க அலைந்து கொண்டு இருக்கும் அவன், குடும்பப் பொறுப்பு/ பாரத்தின் பொருட்டு அவள் வாழ முடியாத வாழ்க்கையை, வாழ்வதால் அந்த சுதந்திரத்தின் மீதான ஏக்கம் அவனுடன் பேச ஆரம்பித்த ஒரு நாட்களுக்குள்ளேயே அவன் மீதான ஏக்கமாக, பின் விரகமாக மலர்கிறது. அவனிடம் மனசு விட்டுப் பேசலாம் என்று தோன்றி விட வெட்கப்பட்டுக்கொண்டே தன் மனசைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் தன்னையும்....

அந்த மூன்று நாட்களும் அவர்களிருவரும் பதின்ம வயது குழந்தைகளைப் போல சுற்றித் திரிகிறார்கள். பியர்/சிகரெட்/பிராந்தி வெள்ளமாக பொழிய, அயோவா சாலைகளில், பூங்காங்களில், பாலத்தின்விளிம்புகளில், குளியலறை தொட்டியில், வீட்டின் சாப்பாடு அறை நடனத்தில் காதல் பொறி பறக்கிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் ரகசியக் கனவுகள் எல்லாம் அவளுக்கு நான்கு நாட்களில் நனவாகிறது. பிரியும் நாளுக்கு முன், அவளுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. மற்ற பெண் நண்பிகளைப் பற்றி எல்லாம் தன்னிடம் கதைத்த அவன் அவளைப் பற்றி மற்றவர்களிடம் என்ன சொல்லப்போகிறான்??? தன்னை, தன் உணர்வுகளை எப்படி புரிந்து கொண்டானோ என்கிற குமைச்சலில் அவனிடம் தங்கள் உறவை கொச்சைப்படுத்திக் கூறுவதுபோல சுடுசொற்கள் சிலவை வீசிப் பார்க்கிறாள். அதை அமைதியாக எதிர்கொள்ளும் அவன், தன் மனதை, அதில் அவளுக்கான இடத்தைப் புரிய வைக்கிறான். தன்னுடன் வந்து விடுமாறு அவளை அழைக்கிறான். குழந்தைகள் வாழ்க்கைக்காவும், கணவன் உடைந்து போகக்கூடாது என்பதற்காகவும், காமிராக்காரனுக்கான தன் உணர்வுகள் அவனுடன் ஓடிப்போவதால் கேவலப்படுத்தப்படும் அபாயமும் கூடவே இருப்பதால், அவள் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுக்கிறாள். மற்ற குடும்பக் கடமைகள் ஊடே சாகும் மட்டும் அந்த நான்கு நாட்களை நினைத்துக் கொண்டே உயிர் விடுகிறாள்.

தன் உயிலில், தான் இறந்தவுடன் தன்னை எரித்து பின் சாம்பலை , (என் வாழ்க்கையைத் தான் உங்களுக்கு கொடுத்து விட்டேன். அதையாவது அவனுக்கு கொடுக்க வேண்டும்) அவனைச் சந்திக்க வைத்த பாலத்தில் இருந்து தூவ வேண்டும் என்கிற வேண்டுகொளை வைக்கிறாள். அம்மாவின் இறப்புக்குப் பின் அவள் உயிலுடன் இருக்கிற டயரிக் குறிப்புகளை படிக்கிற அவள் பிள்ளைகள் (அண்ணனும் தங்கையும்) தன் அம்மாவின் கடந்த காலம் தெரிந்து பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதிலும் பிள்ளையால் தன் அம்மாவின் "ஒழுக்கம் கெட்ட" நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை. பின்னர், வாழ்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும், வாழவே முடியாத இன்னொரு பிரதியும் உள்ளே இருப்பதன் நிதரிசனம் புரிந்து கொண்டு, அம்மா அந்த பிரதியை நாலு நாளாவது வாழ விட்டாள் என்கிற பெருமூச்சோடு தங்கள் உடைந்த வாழ்க்கையை சரி செய்ய தங்கள் கூடுகளுக்கு திரும்புகிறார்கள்.

கொஞ்சம் பிசகி இருந்தாலும், காமிராக்காரனின் காம லீலைகள் என்று தடம் புரண்டு விடக் கூடிய கதையை, அதன் சிக்கலை, மனசுப்படி யாருமே வாழ முடியாத குடும்பத்தின் அமைப்புச் சிக்கலை, கண்ணீரும் காவியமுமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும்போது அஸ்தித்வ என்கிற தபுவின் இந்திப்படமும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் என்கிற கொங்கனா சென் படமும் நினைவுக்கு வந்தன.

என் கண்ணுக்கு முன்பே இது நடந்திருக்கிறது. மூன்று இருபது வயது பெண்களையும், இரண்டு பத்து வயது ஆண் பிள்ளைகளையும் விட்டு விட்டு, கனவர் இறந்த கொஞ்ச நாளில், மனசுக்குப் பிடித்த ஆணோடு ஒரு அம்மாள் போய் விட்டார். என் தோழியின் அம்மா அவர். அப்போது கேட்டபோது ச்..ச்சீ என இருந்தாலும், பழிச் சொல்லுக்கு பயப்படாமல், தியாகி ஆகி பொய் வாழ்க்கை வாழாமல், திடமாக தடம் மாறிப் போனாரே என்று இப்போது தோன்றுகிறது. பலர் நடக்க நடக்கத் தானே தடங்கள் உருவாகின்றன.

உண்மையான காதல் இணைவதில் முடியவேண்டாம்.காதல் ஜீவிதமாக இருக்கட்டும் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால் காதல் ஜீவிதமாக
இருக்க மனுசப்பய மனசு அல்லவா செத்துப் போகிறது. யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஆச்சரியம். விருப்ப வாழ்வின் மீதான ஆணின் விழைவை உடல் சார்ந்தது என்று (ஆண்களே) வகைப்படுத்துவதும், பெண்ணின் விழைவை உள்ளம் சார்ந்தது என வகைப்படுத்துவதும் நம் எல்லோருக்கு நம் அம்மாக்கள் மீதான அன்பு கலந்த மரியாதையையே ஸ்திரம் செய்கிறது. ஒரு ஆண் தன் இச்சைகளினை கெளரவப்படுத்தாமல், சமூகத்தின் சட்டங்களுக்கும், குடும்பத்தின் இறுக்கத்துக்கும் பயந்து பலகாலம் புழுக்கத்தில் வாழ்ந்து, அவ்வப்போது அதற்கு மரியாதைக் குறைவான வடிகால்கள் தேடி, தன்னிரக்கத்தில் அதற்காகவும் துயருற்று வாழ்ந்து விடமுடியும். ஆனால் ஒரு பெண் நினைத்து விட்டால், அவள் எதற்காகவும் காத்திருப்பதில்லை. எந்த பெயர் வாங்கவும் அஞ்சுவதில்லை என்பது தான் எனக்கு இப்போதைய நடப்பாக தோன்றுகின்றது.

பார்த்து விட்டு நீங்களும் யோசியுங்கள்.

பிற விமரிசனங்கள் : ஒன்று இரண்டு

Friday, April 06, 2007

Pursuit of Happyness


Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், "This is just a Mov...vie. Why you are crying Dad..? என்றான்.

மூன்றாம் உலக நாடுகளில்/ ஏழை நாடுகளில் ஏழையாக இருப்பது பெரிதல்ல. அமெரிக்க போன்ற நாடுகளில் ஏழையாக இருப்பது, தங்க வீடில்லாமல், காரில்லாமல், பூப்போல ஒரு பிள்ளையை சுமந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இரவுகளில் அலைவது மிகக் கடினம்.

க்ரிஸ் கார்ட்னர் Bone density scanner என்று சொல்லப்படுகின்ற ஒரு வினோத வஸ்துவை தூக்கிக் கொண்டு அலையும் விற்பனை பிரதிநிதி. அந்த மெஷின் எங்கும் விற்பதில்லை. தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி. அரசுக்கு வரி பாக்கி. அவன் இயலாமையை சொல்லிச் சொல்லி இம்சிக்கும் மனைவி கடைசியில் பிள்ளையை அவனிடம் விட்டு விட்டு நியூயார்க் போய் விடுகிறாள். போனபின் நிலைமை இன்னமும் மோசம். வீட்டை விட்டு மோட்டலுக்கு வருகிறான். காரை விற்கிறான். மோட்டலுக்கும் காசு தர முடியாமல் ரோட்டுக்கு வருகிறான். ஐந்து வயசு பிள்ளையுடன் இரவு தங்க இடமில்லாமல் BART ஸ்டேஷன் கழிப்பறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டு தங்குகிறான்.

அவனுக்கும் ஒரு நாள் விடிகிறது. விடியல் சேதி கேட்டவுடன் கண்கள் குளமாகின்றன. ஓடிவந்து தன் ரத்தத்தை கட்டிக்கொண்டு விசும்புகிறான்.மனசு கனத்துப் போகிறது. அதற்குப் பிறகு அவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக இருந்த க்ரிஸ் நிஜ நாயகராம். இது அவருடைய உண்மைக் கதையாம். நமக்கெல்லாம் வில் ஸ்மித் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார்

தவறவிடக்கூடாத அறிமுகம்...

Wednesday, April 04, 2007

வியர்டு
ஃபீல்ட் அவுட் ஆன ஆசாமிகளைக் கூப்பிட்டு பேட்டி எடுப்பது மாதிரி இருக்கிறது மதியின் இந்த அழைப்பைப் பார்த்ததும். பேட்டி கொடுப்பவர்க்கு வியப்பு கலந்த தர்மசங்கடம் - எழுதுவதே இல்லை. என்னடா நம்மளை எல்லாம் கூப்பிடறாங்களேன்னு.

படிக்கிறவங்களுக்கு அதை விட... :-) :-) :-)


தேடிச்சோறு நிதந்தின்று ...... ..... வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்கிற பாரதியில் தெரிவது நம் எல்லாரிலும் துணுக்காய் தெரிகிறதோ என்றொரு எண்ணம். எல்லாருக்கும், மற்றவரை விட தான் ஒரு மாதிரி ..வித்தியாசமான பிரகிருதி என்று நினைத்துக் கொள்வதில், அதை வெளிச்சமிட்டுக் கொள்வதில் அலாதி ஆனந்தம்.

கடவுள் படைப்பு ரகசியமே நாம் எல்லோரும் வியர்டாக, ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அதனால்தான் பேசிக்கொண்டே இருக்கும் பையனுக்கு பேசா மடந்தையைப் பிடிக்கிறது. வெண்ணைக்கட்டி அழகிகளுக்கு பனைவெல்லத் தூண்களைப் பிடிக்கிறது. நெட்டைக் கொக்குகளுக்கு சுண்டுவிரல் சுந்தரிகளையும், பயந்தாங்கொள்ளி கோழைகளுக்கு நெஞ்சுர நாயகிகளையும் பிடிக்கிறது. இத்தனை வியர்ட் கலவைகளுக்கு பிறக்கின்ற வியர்டுகள் வியர்டாகத்தானே இருக்க வேண்டும்.
அதனால்தான் சாரு நிவேதிதா லூசு மாதிரி எழுதுகிறார். கலைஞர் ஜேகேவைக் கூப்பிட்டு முரசொலி விருது கொடுக்கிறார். அவரும் அதை வாங்கிக் கொண்டு தமிழ் சிஃபியில் உப்புத்தாள் குரலில் முழ நீளத்துக்கு சுகதேவுக்கு வழாவழா கொழ கொழா விளக்கம் கொடுக்கிறார்.

அதனால்தான் உலகம் சுவாரசியமாக இருக்கிறது.

சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை விளையாட்டாகவும், விளையாட்டாக எடுத்துக் கொள்கிற விஷயங்களை சீரியஸாகவும், தினமும் ஆபிஸுக்கு வேறு வேறு பாதைகளில் போகின்ற விருப்பம் இருந்தாலும் செக்கு மாடு மாதிரி தெரிந்த ரூட்டிலேயே செல்வதையும், பெண்களுடன் ரொம்ப மரியாதையாக, கண்ணியமாக பழகுகிறவன் என்கிற மாதிரி நடந்து கொண்டு உள்ளுக்குள் அல்பத்தனமாய் நினைப்பதையும், டீ.ராஜேந்தர் சிட்டிபாபுவுடன் சரிக்கு சரி சவடால் விடுவதை திட்டிக் கொண்டே அந்த மாதிரி பஜாரித்தனம் செய்ய முடியாத தன் கோழைத்தனத்துக்காக ரகசியமாக குமைவதையும், சாப்பிடுவதில் அதீத ரசனை இருந்தாலும், " உணவை ரசித்து உண்பது பாவம். இந்த வெண்டைக்காய்க்காகவே மோர்க்குழம்பை நக்கி நக்கி சாப்பிடலாம் என்பது, அவ மாருக்காகவே அவளை லவ் பன்ணலாம் என்று சொல்வது போல குரூரமானது" என்று யாரோ ( பாலகுமாரன்???!!! ) சொன்னதற்காக கஷ்டப்பட்டு உணவு பற்றிய ரஸனை குறைந்து விட்டதாக காட்டிக் கொள்கிற அயோக்கியத்தனத்தையும், மாய்ந்து மாய்ந்து லவ்வி விட்டு அல்வாவியதும் அதற்காக கட்டுக் கட்டாக தன்னிரக்கக் கவிதைகளும் எழுதிவிட்டு தான் உண்மையாகத்தான் நேசித்தோமா என்கிற அறிவுஜீவித்தனமான ஆத்ம விசாரத்தையும், இணையத்தில் எப்போது நல்ல "கலர்ப்படங்கள்" பார்த்தாலும் லஜ்ஜையில்லாமல் My pictures ல் சேகரித்துக் கொள்கிற சபலத்தையும், தனக்கு எதிரியாயிருக்கிறவர்களின் திறமைகளை ரசிப்பதையும், ரொம்ப நெருக்கமானவர்களின் அருகாமையை அலட்சியமாக நினைப்பதையும் வியர்டு என்றெல்லாம் நான் நினைக்கவில்லை :-)

கட்டுப்பெட்டி சமத்துக் கடைக்குட்டியாக, மடிநாயாக வளர்க்கப்பட்டு, கல்லூரி சுதந்திரம் கிடைத்ததும் முதல் ஒன்றரை வருடம் அத்துமீறிப்போய் ஆட்டம் போட்டு விட்டு பயந்து போய் மறுபடியம் டே ஸ்காலராகி, சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்ததால் காதல் கத்தரிக்காய் என்று அலையாமல், கிடைத்ததும் அதிலும் நுனிப்புல் (சிறுவீட்டு மேய்ச்சல்!!!!! ) மேய்ந்து விட்டு, பிறகு சொந்த சாதியில் பந்தப்பட்டு பந்தாடப்பட்டு, எல்லாத் திமிரையும் பெற்றதிடம் அடகு வைத்துவிட்டு யாருக்காகவோ வாழ்வதாக பீலா விட்டுக் கொண்டு இருக்கும்
சர்...ர்ர்ர்ர்ரியான சராசரி.

நான் அதற்குமேல் எவ்வளவு பெரிய வியர்டு என்பது என்னுடன் புழங்குகிற புண்ணியாத்மாக்களுக்கு தெரியும்.

என் பெருமையை நானே எப்படி சொல்லிக் கொள்வதாம்.. !!!!!!!!!

நன்னி மதி.

இதுவரை கூப்பிடப்பட்டார்களா என்றெல்லாம் தெரியாது. நான் அழைக்க விரும்புபவர்கள் கீழே

சுந்தரவடிவேல்
தங்கமணி
டிசே தமிழன்
மீனாக்ஸ்
எம் கே குமார்

Tuesday, April 03, 2007

ஏக்கம்


வெருண்டோட மான்களில்லை
காயமாற நக்கி சலிப்பதில்லை
கடுங்குளிர் கொடுமழை சுடும்கதிர்
தனியே எதிர்கொள்ளும் சாபமில்லை
வயிற்றுக்கு பதிலாய்
வேட்டையாடும் வேலையில்லை
அசைபோட்டு படுத்திருக்க
ராணிதரும் உணவில்லை
செல்லக்கடி கடித்து முயங்க
குட்டியில்லை குடும்பமில்லை
வண்ண விளக்கு நடுவே நான்
கர்ஜித்து வாய்பிளக்க
கண்கொட்டா மனிதரில்லை
சாட்டையின் சொடுக்கிற்கும்
இசையின் வேகத்துக்கும்
கரவொலி காதுகிழிக்க
சுற்றிச் சுழன்று வருகின்றேன்.
ஆழத்தில் கானகம்.

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...