Tuesday, November 29, 2005

வேட்டை


பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்கும் தட்டுப்பட்டு கலவரத்தை கிளப்பியது. லெதர் சோஃபாவும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் ஒயர்களும் நினைவுக்கு வந்து கலவரமாக்கின. போதாதற்கு சிநேகிதி வீட்டில் வாஷருக்கு வரும் தண்ணீர் பைப் கடிக்கப்பட்டு வீடெல்லாம்
"தமிழ்நாடு" ஆன செய்தி பீதியைக் கிளப்பியது.

ஊரிலென்றால் தேங்காய் துண்டத்தையோ, மற்ற கவிச்சிகளையோ பொறியில் வைத்தால் லபக்கென்று ஓரிரவில் பிடிபடும். இங்கே பரிட்சை அட்டைக்கு போடும் க்ளிப் போல கிடைத்த ஒரு பொறியில், சீஸ் வைத்து காலையில் பார்த்தால், சீஸ் மட்டும் தின்னப்பட்டு காலியாய் கிடந்த பொறியை பார்த்தபோது வெறியாய் வந்தது. போனாப்போகுது என்று ஒரு பூனை வளர்க்கலாமா என்று கூட ஒரு யோசனை. கரப்பு இருந்தாலாவது, அழுக்கு இருப்பதை நாசுக்காக, அதர்ஷ்டக்கரப்பு/லக்ஷ்மிவண்டு என்று சொல்லிக் கொள்ளலாம். எலி இருப்பதை எப்படி சொல்ல..??. எலி விஷம் வைத்து பிடிக்கலாம் என்றால், அது பாட்டுக்கு எங்கேயாவது மறைவிடத்தில் போய் மரித்து விட்டால், பிறகு நாற்றம் தாங்காதே என்றும் ஒரு தலைவேதனை வேறு.

இறுதியாக டார்கெட் ஸ்டோரில் ஒரு ஸ்டிக்கர் அட்டை ( Glue pad) கிடைத்தது. வாங்கி வந்த வீட்டம்மாவை நக்கலாக பார்த்து, "எலி இதில் மாட்டுமா..? அது ஏற்கனவே சீரியல், சீஸ், தேங்காய் என்று சாப்பிட்டுவிட்டு கொழுத்துப் போய் படம் காட்டுகிறது" என்றேன். வழக்கம்போல அலட்சியப்படுத்திவிட்டு வைத்தாள்.

காலையில் பார்த்தால், பயாலஜி லேபில் பாடம் செய்யப்பட்டது போல. சிலுவையில் குப்புற அறையப்பட்டது போல மாட்டி இருந்தார். "பிடிப்பதுதான் என் வேலை. அப்புறப்படுத்துவது உங்கள் பாடு" என்றுவிட்டு அம்மையார் ஜூட்.. நம்மூரில் என்றால் பக்கத்து வீட்டு கொல்லையில் சத்தம் போடாமல் தூக்கி எறிந்துவிட்டு நல்லபிள்ளையாய் ஆபீஸ் போகலாம். இங்கே அதைச் செய்தால் பின்னால் "மாமா" வருவான்.

அலைந்தேன்.... அலைந்தேன்.... என் வீட்டுக்கு பக்கத்தில் அமெரிக்கன் ஆற்றில் கிளை நதி/ வெள்ள வடிஆறு இருக்கிறது. அதில் வீசலாம் என்றால் கம்யூனிட்டியே கொதிக்கும். என் வீட்டு குப்பை டப்பாவில் போடலாம் என்றால் வெள்ளிக்கிழமை, யானை தன் தலையில் மண்ணை கொட்டிக் கொள்வது போல குப்பைகளை கொட்டிக் கொள்ளும், லாரி வருவதற்குள் ஏரியாவே மணம் வீசும். எடுத்து ஒரு பாலித்தீன் உறைக்குள் போட்டு இறுகக்கக் கட்டி, காரின் முன்னே உள்ள விண்ட்ஷீல்ட் வைப்பரில் கட்டி, கிட்டத்தட்ட சவ ஊர்வலம் போல ஓட்டி வந்து, அருகாமையில் அடிக்கடி சுத்தம் செய்யப்படும் ஒரு குப்பைத்தொட்டியில் கடாசி விட்டு இப்போதான் வந்தேன்.

இறந்தது எலியானாலும் அதுவும் பிணந்தானே. அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் ரிலீஃபாக இருந்தது. என் தந்தையாருக்கு இதே பிரச்சினைதான். தெரிந்தவர்கள் வீடுகளில் துக்கத்துக்கு போனால், பிணம் எடுக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார். பசி பொறுக்காமல், சொந்தக்காரர்கள் எல்லாரும் வருகிறார்களோ இல்லையோ, அவசரம் அவசரமாக டேக் ஆஃப் ஆக்கி விடுவார். இதற்குப் பயந்து கொண்டே, இப்போதெல்லாம் அவரை அந்த சமயங்களில் எப்பாடு பட்டாவது ஏதாவது சாப்பிட வைத்து விடுகிறார்கள்.

Thursday, November 17, 2005

விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்

கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் நான் இந்தியாவின் மீதுள்ள என் மனத்தாங்கலைக் கூறி " என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்று எழுதிய வரிக்கு, ஒரு நண்பர் 'இவர்கள் இந்தியர்கள்' என்ற தலைப்பில் ஒரு வசைக் கட்டுரையே பதித்திருந்தார் . அந்த வரியை எழுதும்போதே இதனால் தமிழிணைய நண்பர்கள் கோபப் படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களின் கோபம் ஒரு நாகரீக வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்கிற பெரும்போக்கான நினைப்பில் தான் நான் அந்த பதிப்பை எழுதியிருந்தேன். ஆனால், வயது வித்தியாசம் பாராமல், சிலருடைய வசை சொற்கள் சிறிது எல்லை மீறியனவாக அமைந்திருந்தன.

தொடர் முடிந்தவுடன், நான் எழுதியதை குறித்த தர்க்கத்தை வைத்துக் கொள்வோம் என்று பொதுவாக நானும் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். இது நடந்து ஒரு மாததிற்குமேல் ஆகிறது. "சரி நடந்து முடிந்த கதை, இதை எதற்கு பெரிது பண்ண?" என்று என் வழியிலே போகலாம் என்று பார்த்தால், அதற்கு தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. ஆதலால் வேறு வழி தெரியாத நிலையில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாசகர்கள், என் தனி மனித பிரச்சனைக்காக உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

சிவா என்ற நண்பர் எழுதியது

- ஆனால் , அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு , பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். கேணத்தனமாக பேசாதீர்கள்.

- ஒரு நாட்டை பற்றி குறை சொல்வதற்க்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும். அது இந்தியாவில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு , நான் மேதாவி என்று ஒரு அயல்நாட்டை (இந்தியா மட்டும் அல்ல) குறைத்து பேசி, உங்கள் புராணம் பாட வேண்டாம்
.


ரவி என்ற நண்பர் எழுதியது :- -

சொந்த நாட்டில் வசிக்க வக்கில்லாமல் வெளிநாட்டில் நக்கிக்கொண்டிருக்கும் தங்களை போன்றவர்கள், அயல்நாட்டு பெருமை சொல்லி ஏன் சொந்த நாட்டை நக்கலடிக்கிறீர்கள். உங்களுக்கு புடிக்கலைன்னா பொத்திக்கிட்டு நக்கிக்கிட்டு இருக்கும் நாட்டை பற்றி பெருமையாக எழுதுங்கள். தாய் நாட்டை கேவலப்படுத்தாதீர்கள்.

பெயரில்லா நண்பர் எழுதியது :-

............ என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை ( தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.

இதையெல்லாம் படிக்கும்போது சில அடிப்படை விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கின்றன. நான் இந்தியாவைப் பற்றி மேலே குறிப்பிட்ட வரிகள் கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் சொல்லப் பட்டிருக்கின்றன. அதற்கு முன்பு ஐந்து பாகங்கள் எழுதி இருந்தேன். அவற்றில் நான் எழுதிய யாவும் மலேசியாவில் வாழும் இந்தியர்களின், தமிழர்களின் அவல நிலையை பற்றிய விவரங்கள். மலேசியாவில் நம் இனம் எப்படி நொந்து நூலாகிக் கொண்டுள்ளது என்பதை பற்றியும், எங்களின் மொத்த அநுபவங்களில் இருந்தும் என் தனிப்பட்ட வாழ்க்கை அநுபவங்களில் இருந்தும் பிற NRI கள் என்ன பாடம் கற்றுக் கொள்ளமுடியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் எழுதப் பட்ட எழுத்துக்கள்தான் யாவும். இதை ஒவ்வொரு பதிவிலும் நான் திரும்ப திரும்ப சொல்லி வந்துள்ளேன்.

அத்தோடு கிழட்டு அநுபவங்கள் என்ற தலைப்பில் ஒருவர் , இவ்வளவு சீரியசான விஷயத்தை பற்றி எழுதுகிறார் என்றால், அவர் ஒர் அளவுக்கு வயது முதிந்தவாராகத் தான் இருக்க வேண்டும் என்பது யார் மனதிலும் தோன்றும் ஒரு உண்மை. அப்படி சமுதாய உணர்வு கொண்ட ஒரு பெரியவர்தான் இந்தியாவைப் பற்றி குறைபட்டு கொள்கிறார் என்று தெரிந்தும்கூடவா, இப்படி வசை வசனம் எழுத உங்களுக்கு மனது வந்தது ?? ஏனப்பா தம்பிகளா !! ??

சரி ' தமிழ்மனம் ' என்கிற , உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தத்தம் எழுத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு இடத்தில், தமிழ் மொழியிலேயே இந்தியாவுக்கு எதிராக ஒருவர் கருத்துரைக்கிறாரே , இவர் என்ன அடி முட்டளா? அல்லது " இந்தியா உலக அரங்கில் தன் தகுதிக்கு நிகரான எழுச்சியை பெறவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் கொண்டிருக்கும் இந்தியாவை நேசிக்கும் பல கோடி இந்திய வம்சாவளியினரில் இவரும் ஒருவரா ?" என்று எதுவுமேயா அலசிப் பார்க்க உங்களுக்கு தோன்றவில்லை ??

அதிகமாகவே பேசிவிட்டீர்கள், பாதகமில்லை.

ஆனால் , நான் எதிர்பார்த்த "எந்த ஆதாரத்தை வைத்து உன் கூற்றைக் கூறுகிறாய் ?" என்கிற அறிவுபூர்வ கேள்வியை உங்களில் யாராவது ஒருவராவது கேட்டிருந்தீர்களேயானால் நமக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த விவாதத்தை கொண்டு சென்று , பல விஷயங்களை தெளிவு படுத்தி , பல கருத்துக்களை பரிமாறிக் கொணடு எல்லோருமே பயன் அடைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் விவாதத்தை வேறு திசையில் கொண்டு சென்று இருந்தீர்கள். " இந்தியாவை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கின்றது" என்பது ஒன்றுதான் உங்கள் வாததின் மையக் கருவாக இருந்தது.. சரி, என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள் :-

1952 ல் காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூர் எனும் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டவராயன்பட்டிக்கும் , அதை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலங்குடிக்கும் இடையில் உள்ள சுண்டக்காடு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட. "

என்ன ராஜசேகரன் மலேசியாவில் 100 வருடங்களுக்கு முன்னரே குடி புகுந்ததாக கூறிவிட்டு, திருப்பத்தூர் என்கிறார் , கண்டவராயன்பட்டி என்கிறார் , சுண்டக்காடு என்கிறார் ? " என்று வாசகர்களுக்கு குழப்பமாக இருக்கிறதா ?? நான் பிறந்தது இந்தியாவில். இரண்டு நாடுகளிலுமே வாழ்ந்து, போக வர இருந்த என் பெற்றோர்கள் , எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என்னை மலாயாவிற்கு கூட்டிச் சென்றனர். அன்றிலிருந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறேன். அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரே என் தலைமுறைக்கு முந்திய தலைமுறையினர் மலேசியாவில் குடிபுகுந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , இந்தியாவில் எல்லா குடும்ப, பாரம்பரிய தொடர்புகளையும் இன்றுவறை பிரயாசையுடன் பேணிக் காத்துவரும் சில பழைய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்களுக்கு திருப்பத்தூரை ஒட்டிய கிராமங்களிலும், திருச்சி , மதுரை போன்ற நகரங்களிலும் இன்றும் ஆயிரக்கணக்கான சுற்றத்தார்கள் உள்ளனர்.

மலேசியாவில் தொழில் புரிந்து சம்பாதித்த பணத்தில் 80 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன. இவற்றுக்கெல்லாம் வரி கட்டுவதில் இருந்து, வரப்பில் யாராவது கேட்காமல் மரத்தை வெட்டினால், அவர் சிண்டைப் பிடிப்பது வரை நானும் , என் தம்பியும், மலேசியாவில் வாழும் என் பெரிய தகப்பனார் பேரன்களும்தான் இன்று வரை செய்து வருகிறோம்.

இதெல்லாம் போக குடும்பத்தில் யார் எங்கு இறந்தாலும் அவர்களை தகனம் செய்ய வேண்டி இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது. மலேசியாவில் வாழ்ந்த எங்கள் மூதாதையர் அத்தனை பேரினுடைய சமாதிகளும் அந்த இடுகாட்டில்தான் உள்ளன. எப்படி என்று கேட்கிறீர்களா? காரணம் சாவு நெருங்கும்போது ஒருவர் விடாமல் அத்தனை பேரும் பிறந்த மண்ணுக்கு திரும்பி விட்டவர்கள்.

என்னோடு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் ஒரு சகோதரர் மட்டும் குடும்பத்தோடு மலேசியாவில் உள்ளார். ஒரு மலேசிய வங்கியில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார். அவருடைய மனைவி இந்தியாவில் பிறந்து , வளந்த உறவினரின் மகள். மற்றொரு சகோதரர் இந்தியாவிலேயே செட்டில் ஆகி, திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவியும் இந்தியாவில் பிறந்த வளர்ந்தவர்தான். இவர்கள் போக எனக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இருவரும் இந்தியாவில் உறவினர்களை மணந்து பிள்ளை , குட்டி , பேரன் , பேத்தி என்று வாழ்பவர்கள். இப்படி இந்தியாவில் பின்னிப் பினைந்து கிடக்கும் உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

இதெல்லாம் போக என் பெரிய தகப்பனார் வழியில் , மலேசியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட வம்சாவளியினரில் பெருவாரியானோர் இந்தியாவிலிருந்து பெண் எடுத்தவர்கள். இவர்களில் மலேசிய நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினாராக (MP) இருக்கும் என் பெரிய தகப்பனார் பேரனும் ஒருவர். அவரின் மனைவியும் கோயம்புத்தூரில் பிறந்து, படித்து, வளந்தவர்தான்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன்.தமிழ்மணத்தோடு எனக்கு உள்ள ஈடுபாடு வெறும் இரண்டு மாதங்கள் தான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில், இங்கும் கூட ஏதோ ஆழமான அரசியல் ஊற்று ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம. நாம் நம்மில் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைத்து இங்கு வாய்ப் போரும் வசைப் போரும் நடத்திக் கொண்டு இருக்கும் வேலையில், வேறு கலாச்சாரக் கூறுகளை உடைய பிற நாட்டவர் தங்கள் புத்திகளை எப்படி எல்லாம் உபயோகித்து தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?? ..... நினைத்தால் பெருமூச்சுத்தான் வருகிறது

மற்றவர் எப்படியெல்லாம் சிந்தித்து செயல் படுகிறார்கள் என்பதற்கு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' ஐ பற்றிய ஒரு குட்டி கதையை கீழே வழங்கி விடைபெறுறேன்.

வணக்கம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

" நான் பல வருடங்களுக்கு முன்பு தூபாயில் வேலை செய்வதாக கூறி இருந்தேன் அல்லவா? அப்போது என் சொந்த வேலையாக ஒரு முறை கோலாலம்பூர் திரும்ப வேண்டி இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில், இக்கோனொமி கிளாஸ் டிக்கட். இரவு ப்ளைட். check-in முடிய பத்து நிமிடங்களுக்கு முன் கவுண்டருக்கு போய் சேர்ந்தேன். 'இக்கோனோமில் இடம் இல்லாததால் உங்களை ராஃபில்ஸ் கிளாசுக்கு (பிசினஸ் கிளாஸ்) மாற்றிய்ள்ளோம்" என்று கவுண்டரில் இருந்த பெண் சொன்னதும் எனக்கு படு குஷி.

விமானத்திற்குள் போய் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டை தேடி உட்கார்ந்தால், அடுத்த சீட்டில் எங்கள் நிறுவனத்தின் சரக்கு கப்பல் பிரிவின் ஜெனரல் மானேஜர் - கோவாவைச் சேர்ந்த ஒரு இந்தியர். வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது. மெனு கார்டோடு, wine list ம் கூடவே வழங்கப் பட்டது. லிஸ்ட்டை பார்த்துவிட்டு என் பானம் என்னவென்பதை பக்கத்தில் நின்று ஆர்டர் எடுத்து கொண்டு இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். அவர் என் நண்பரிடம் திரும்பி "உங்கள் பானம் என்ன சார்?" என்று கேட்டார். என் நண்பர் அவர் கையில் வைத்திருந்த wine list ல் ஒரு பானத்தை காண்பித்து, "இது" என்று சொல்ல முற்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றோரு பணிப் பெண் அங்கு வந்து "இல்லை, மிஸ்டர் பிலிப்ஸ் உங்களின் பானம் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது" என்றார். நாங்கள் திரும்பிப் பார்த்தால், ஒரு பக்கெட்டில் ஒரு பாட்டல் வைனை ஐஸ் வைத்து குளிர வைத்த நிலையில் மற்றோரு பணிப் பெண் சுமந்து வந்து கொண்டிருந்தார்.

"நாம் இப்போதுதானே ஆர்டரே கொடுக்க போகிறோம்.....அதற்குள் எப்படி....வைன் ?!!" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண்பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. "இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்?!!" என்று வாயை பிளந்தார். அதற்கு அந்த பணிப் பெண் "உங்களுக்கு இந்த வைனைப் பறிமாற வேண்டும் என்று எங்களின் டியூட்டி ரோஸ்டரில் சொல்லப் பட்டிருந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்." என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்திற்கு என் நண்பர் தலையை பிய்த்து கொண்டபடி இருந்தார். பிறகு திடீர் என்று என் பக்கம் திரும்பி, "எனக்கு தெரிந்து விட்டது" என்றார். "ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு இரவு ப்ளைட்டில் லண்டனுக்கு வேலையாக போகும்போது இதே மாதிரி ஒரு wine list என்னிடம் கொடுக்கப் பட்டது. அன்று அங்கிருந்த விமானப் பணி பெண்ணிடம் இந்த குறிப்பிட்ட வைன் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த வைன் எவ்வளவு பிரமாதமான ஒன்று என்று அவரிடம் விலாவரியாக சொல்லி கொண்டிருந்தேன். அதை அவர் குறிப்பெடுத்து, அது கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்ற பட்டு, ஆறு மாதம் கழித்து நான் வேறு ரூட்டிற்கு டிக்க்ட் புக் செய்யும் போது, என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டு, எனக்கு இந்த வைன் தான் பரிமாறப் படவேண்டும் என்கிற ஆர்டர் தரையில் வேலை செய்யும் சிப்பந்திகளிடம் கொடுக்க பட்டு, அதன்படி இந்த குறிப்பிட்ட வைன் விமானத்திற்கு அனுப்ப பட்டு, குறித்த நேரத்திற்கு முன்பே அது குளிர் படுத்தபட்டு, இங்கு எனக்கு வளங்க பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்தோடு சொல்லி முடித்தார்.

உலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும், நம்பர் ஒன் விமான நிறுவனமாக ஏன் சீனர்கள் நடத்தும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா?xxxxxxxxxxxxxxxxx

மலேசியாராஜசேகரன்

Monday, November 14, 2005

கிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி


அறிவிப்பு

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து


மலேசியாவின் நடைமுறை நிலைமை, பூமிபுத்ரர்களுக்கான முதல் சலுகை, பல்கலைக்கழக படிப்புமுறை, இங்குள்ளவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான காரணங்கள், மலேசியத் தமிழர்களின் அவலநிலை, இங்கு இந்தியர்கள் எப்படி வந்து சேர்ந்தனர் என்பதை உணர்த்தும் பூர்வாங்க சரித்திர விளக்கம், சுதந்திரத்தை ஒட்டிய காலக் கட்டம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறை, 1969ல் நடந்த இனக் கலவரம், அதையடுத்து அமல்படுத்தபட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை (நியூ இக்கோனோமிக் போலிசி) அதன்பிறகு இன உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், சீன வம்சாவளியினர் மலாயா வந்து சேர்ந்ததை உணர்த்தும் விளக்கம், வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார வளப்பம், அவர்களின் கலாச்சார நடைமுறை இயல்புகள், ஒரு தெளிந்த செட்டியாரின் அறிவுரை, "வேறு எந்த நாட்டிலாவது புலம் பெயரலாமா?" என்று எங்கள் மனங்களில் ஓடிய எண்ண ஓட்டம், குடும்பத்தில் நடந்த விபத்து, அதையடுத்து புலம் பெயரல் பற்றி நாங்கள் எடுத்த முடிவு, தொழில்புரிவது என்று கிளம்பி நான் அடைந்த தோல்வி, வளைகுடாவில் வேலைக்கு சென்றது, அங்கு பிற NRI களோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, நாங்கள் மலேசியா திரும்பியது, ஏற்றுமதி தொழில் ஆரம்பித்தது என்று விற்பதற்கென்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் கிழட்டு அநுபவங்களின் கடந்த பத்து பகுதிகளில் உங்களிடம் விற்றாகி விட்டது.இதற்குமேல் விற்பதற்கென்று ஏதும் உளதா என்று வியாபாரப் பையின் அடியை தடவினால் "வாழ்க்கையைப் பற்றிய என் தனிமனித எண்ணங்கள்" என்கிற ஒரு சிறு பொட்டலம் மட்டும் தட்டுப் படுகிறது . இதை விற்றால் "ராஜசேகரன் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார் !!" என்று வாசகர்கள் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்கிற தயக்கத்திற்கு நடுவில் அதில் இருந்து ஒரே ஒரு அம்சத்தை மட்டும் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். பிரயோஜனப் படுகிறதா என்று பாருங்கள்.

பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் சிந்திப்பதில்லை. பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை சிந்திப்போம். ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடைபோடுபவையாக அமையும். அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.

இது நம் யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு என்றாலும், பிறந்த நாட்டிலேயே சுற்றங்களோடும், நட்ப்புக்களோடும் குழுமி வாழ்வோருக்கு இந்த கூற்றின் தாக்கம் மிகவும் யதார்த்தமான ஒன்று. ஆனால் பிற நாடுகளுக்கு ஒரு 25 வயதிலிருந்து, 35 வயதுக்குள் புலம் பெயரும் நணபர்களுக்கு இதன் தாக்கம் மிக ஆழமான பின் விளைவுகளை கொண்டு வரும் என்பது ஒரு அசைக்க முடியாத, ஆட்சேபிக்க முடியாத உண்மை. காரணம் ஐந்து பத்து வருடங்களை தாண்டி யோசியாத வயதில் வேறு ஒரு நாட்டிற்கு குஜாலாக புலம் பெயர்ந்து விட்டு, ஒரு பத்து வருடங்கள் அங்கு வேலை செய்த பிறகு, நாம் பிறந்து வளர்ந்த நாட்டை திரும்பிப் பார்த்தால், அங்கு நாம் விட்டு வந்த சூழ்நிலைகள் அத்தனையும் மாறிப் போயிருக்கும். அதே சமயம் நாம் அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிற நாட்டு வாழ்க்கை சூழலிலிருந்தும் இலகுவில் விடுபட முடியாத மாறுதல்கள் நம்மைச் சுற்றி நடந்தேறியிருக்கும். நாம் செய்து வரும் வேலை நிலை பெற்றிருக்கும். சம்பாத்தியம் கூடியிருக்கும். பிள்ளை குட்டி என்று நம் குடும்ப அமைப்பு மாறியிருக்கும். ஏன் நம் தனி மனித சிந்தனையே 'அடுத்த சில வருடங்கள்' எனும் இளமையின் யதார்த்த நிலையிலிருந்து, 'தலைமுறை கணக்கு' என்கிற முதுமை நிலயை ஒத்து ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த கால கட்டத்தில் நீங்கள் துணிந்து எந்த வாழ்க்கை மாறுதல்களையும் எடுக்க உங்கள் மனதும் விடாது, சூழலும் விடாது, சுற்றமும் விடாது. அப்படியானால் "புலம் பெயரல், வெளி நாட்டு வேலை என்று வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டிகள்தான் என்ன? தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வதுதான் எப்படி ?" என்கிற கேள்விக்கு பலரும் பலவித பதில்கள் வைத்திருப்பர்.இதில் என் சிந்தனை இதுதான். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொண்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கும் முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல. ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து அதற்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள். தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி.

இதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன். 32 வயதில் நான் வேலையை இழந்து கோலாலம்பூரில் தவித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, 38 வயதில் தூபாயில் வேலை செய்து கொண்டிருந்த போதும் சரி, 47 வயதில் பிள்ளைகள் படிப்பிற்கென்று எனக்கு அதிகமான பணம் தேவைப் பட்ட போதும் சரி, இப்போது 53 வயதில் நான் முதுமையின் வாசலில் நின்று கொண்டு இருக்கும் போதும் சரி "என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் ?" என்று நான் ஒரு பட்டியலை அமைத்திருந்தால், அது இப்படித்தான் இருந்திருக்கும் :-

1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.

2). பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.

3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.

4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.

5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்தல்.

இதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட லிஸ்ட்டு. இந்த மாதிரி நீங்களும் ஒரு லிஸ்ட்டை போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால், லிஸ்ட்டை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு

" BE CAREFUL OF WHAT YOU WISH FOR ! YOU MIGHT GET IT !!" .

இதுகுறித்து உங்களுக்கு தெரிய வாய்பில்லாத ஒரு குட்டி விஷயத்தை இங்கு பகிர்ந்துவிட்டு செல்கிறேன்....... மலேசியாவில் உள்ள 'ட்வின் டவர்ஸ்' ஐ கட்டிய ஆனந்த கிருஷ்ணனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா ? அவரின் வயது 65. மொத்த சொத்து மதிப்பு US$ 2,000 MILLION ஐ தாண்டி சில வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் ப்போர்ப்ஸ் வர்த்தக இதல் அவரை மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்த வருடம் மதிப்பிட்டிருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். அதில் அந்த மூத்த ஆண் பிள்ளை என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ? அவர் முற்றும் துறந்த, 'புத்தம் சரணம், கட்ச்சாமி' என தியானத்தை விரும்பும் ஒரு புத்த பிக்கு !!!!!! ஏன்? எப்படி? எதனால்? காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், தன் மகன் இப்படி ஆவார் என்று ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், அவர் தன் வாழ்க்கையை நிச்சயமாக வேறு விதமாக அமைத்து கொண்டு இருந்திருப்பார் என்பது.
== முற்றும் ==

சரி, தமிழ் வலையுலக நண்பர்களே கிழட்டு அநுபவங்கள் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. இத்துடன் என் ஊட ஈடுபாட்டை நிறுத்திக் கொண்டு விடை பெற நினைக்கிறேன். இதன் பின்னர் பகிர்ந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் என்று என் மனதில் ஏதாவது தோன்றினால், அப்போது வந்து எண்ணங்களை பகிர்ந்து செல்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து எழுத என்னிடம் சரக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த தொடரின் ஆறாவது பகுதியில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று முடிச்சு அவிழ்ந்த நிலையில் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டி அடுத்த சில தினங்களில் 'முக்காலே மூணு வீசம் இந்தியன்' என்கிற தலைப்பில் ஒரு ஒற்றைக் கட்டுரையை இங்கு பதிவு செய்ய வருவேன். நேரமிருந்தால் வந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள். இதற்கு முன்பு நான் எழுதிய பத்து பகுதிகளுக்கும் பின்னூட்டங்கள் எழுதிய அன்பு, துளசி கோபால், வாய்ஸ் ஆப் விங்ஸ், தேன் துளி, மதி கந்தசாமி, தங்கமணி, கரிகாலன், கரைவேட்டி, பக்கோடா பக, பத்ரி, டுபுக்கு, ஆள்தோட்டபூ, ஓம்தட்சட், பிரகாஜ் பழனி, ஸ்ரீரங்கன், ராஜீ, பெத்த ராயுடூ, சிகிரி, தருமி, ஜோ, டி ராஜ், ரவிசங்கர், ப்பீடிபோய், பாரதி, சுதர்ஸன், மூர்த்தி, காசி, கோ. கணேஷ் யாவரும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களின் பின்னூட்ட பதிவுகளுக்கு பதிலுரைத்து அளாவி இருக்க வேண்டும். செய்யவில்லை. சாரி. இந்த பகுதிக்கு சுந்தரராஜனோடு சேர்ந்து நானும் பின்னூட்டங்களுக்கு பதிலுரைக்கிறேன்.

இத்தோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது - எனக்கு இணையத்தில் தமிழ் ஊடங்கள் என்ற ஒரு கூறு இருப்பதைக் காண்பித்து, ஈ-கலப்பை எனும் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது எனும் செய்முறையை சொல்லிக் கொடுத்து, நான் எழுதிய ஒவ்வொறு பதிப்புகளிலும் இருந்த பெருவாரியான ஸ்பெல்லிங் மற்றும் வல்லின மெல்லின பிழைகளை திருத்தி, நான் அனுப்பிய பதிவுகளில் உபயோகப் படுத்திய ஆங்கிலச் சொற்களை எல்லாம் கூடியவரை தமிழாக்கம் செய்து, என் எழுத்துக்களை எடிட் பண்ணி, கொம்போஸ் செய்து, என் சிந்தனைகள் எழுத்து வடிவம் பெற ஊக்குவித்து, அவரின் இணைய நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து, உற்ச்சாகப் படுத்தி, 25 வருடங்களில் தமிழிலில் ஒரு கடிதம்கூட எழுதாத என்னாலும் தமிழில் நான்கு வரிகள் எழுத முடியும் என்று எனக்குள் இருந்த என் தமிழ்த்தகுதியை அடையாளம் காட்டிய என் இள நண்பர் சுந்தரராஜனுக்கு, ஒரு ஆசானுக்கு மாணக்கன் படும் ஆழ்ந்த நன்றி கடனை நான் பட்டிருக்கிறேன் என்பதை பாசத்தோடு யாவரும் அறிய கூறி மகிழ்கிறேன் (சுந்தர், எனக்காக தயவு செய்து, இந்த வாக்கியத்தையும் சேர்த்து இந்த பாராவில் எதையுமே எடிட் பண்ணாமல் இப்படியே பதிப்பித்து விடுங்கள். நன்றி).

வணக்கம்.

உங்கள் நண்பன்,

மலேசியா ராஜசேகரன்

Wednesday, November 09, 2005

ஐடியா ..??

அடுத்த ஷங்கர் + சுஜாதா காம்பினேஷனுக்கு கரு (?!!) ரெடி என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்.

இந்த தலைமுறையிலோ அல்லது போன தலைமுறையிலோ இருக்கின்ற/இருந்த அறிவுஜீவிகளை "அப்படியே" வேண்டுமென்றால் க்ளோனிங்.. க்ளினிங் என்றெல்லாம் போக வேண்டும்.

சரி..அவர்கள் விந்துவையாவது சேமித்து வைத்து குட்டி அறிவுஜீவிகள் வேண்டுகின்ற அம்மாக்களுக்கு அளிக்கலாம் என்று ஆரம்பித்த யோசனையாம்..:-)

நிஜமாகவே சுவாரஸ்யமான கருதான் :-)

நன்றி : ஜில்லி அண்ணா என்றழைக்கப்படும் டீ.ஏ.அபிநந்தனன்

Monday, November 07, 2005

கிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது

கருவிலேயே மாண்ட ஏற்றுமதி பிசினஸ்

எனக்கு 24 வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில் குமாஸ்தா நிலையில் இருந்து எக்ஸ்போர்ட் எக்ஸிக்யூட்டிவாக உயர்ந்திருந்தேன். சம்பளமும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகள் ஆகியிருந்ததால் சம்பள உயர்வுக்கு மேல் குடும்பச் செலவுகள் அதிகரித்திருந்தன. வேலை செய்வது போக பகுதி நேரத் தொழிலாக, இந்தியாவில் இருந்து ' கோஸ்டியும் ஜுவல்லரி ' தருவித்து ஏஜண்டுகள் வைத்து வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தோம். தொழில் ஒர் அளவுக்கு நன்றாகவே நடந்து வந்தது. இருந்தாலும் மிகவும் சிறிய தொழில் என்பதனால், அதிலிருந்து சொற்ப வருமானமே பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் centralisation of operation என்று கூறி என் நிறுவனத்தினர் நான் வேளை செய்த எக்ஸ்போர்ட் துறையை கோலாலம்பூரில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றினர். என்னால் கோலாலம்பூரில் இருந்து வேறு எங்கும் பெயர முடியாத நிலை. ஆனால் மற்றோரு பக்கம் நான் வாங்கிய சம்பளத்திற்கு ஒத்த சம்பளம் கோலாலம்பூரில் எனக்கு வேறு எங்கும் கிடைக்காது என்கிற நடைமுறை உண்மை வேறு. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது, என் பால்ய நண்பர் ஒருவர் "நீங்கள் ஏன் ஒரு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்து, தூபாய், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பாம் ஆயில் சம்மந்தபட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது? உங்களுக்குதான் அதில் நிறைய அநுபவம் உள்ளதே ?" என்றார். அவர் சொன்னதை மனதில் அசை போட, அசை போட அது ஒரு சிறந்த யோசனையாகவே எனக்கும் என் மனைவிக்கும் பட்டது. அடுத்த சில தினங்களில் யோசனையை அமல்படுத்த முடியுமா என்று ஆராய, எங்கள் ஊர் கிளையில் வங்கி மானேஜராக இருந்த நண்பர் ஒருவரைப் போய் பார்த்தோம். "இரண்டு ஏற்றுமதி ஆர்டர்களை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், என் வங்கியின் மூலமே என்னால் உங்களுக்கு தேவையான கடன் உதவியை பெற்றுத்தர முடியும்" என்று கூறினார்.

பல முறை எங்கள் நிறுவனத்தின் பொருட்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பிடிக்க வேண்டி, வளளகுடா நாடுகளுக்கு சென்றுவந்த ஆநுபவம் உண்டு என்பதனால், என் நண்பர் சொன்னதுபோல் இரண்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிற தைரியத்தில், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு ஏற்றுமதி கம்பெனியை ரிஜிஸ்டர் செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி கம்பெனி நிலைக்கவில்லை. வங்கி தலைமையகத்திலிருந்து கடன் சாங்ஷன் ஆகி வருவதற்கு இடைப்பட்ட இரண்டு மாதங்களில், என்னென்னவோ நடந்து முடிந்தன. நான் வேலையை ராஜினாமா செய்த சில வாரங்களில் "மலேசியா இரண்டு மூன்று ஆண்டுகளாவது நீடிக்க கூடிய பொருளாதார மந்த நிலையை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்" என்று சில வெளிநாட்டு செய்தி மையங்கள் கருத்து வெளியிட்டன. அதை தொடர்ந்து ஒரு மாதத்தில் "நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள போவது உண்மையே" என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டு, நாட்டுப் பிரதமரே நிலமையை ஊர்ஜிதப் படுத்தினார். வங்கிகள் யாவும் தத்தம் கடன் கொள்கைகளில் மாறுதல்களை கொண்டுவந்தன. எங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்க பட்டது. எங்கள் ஏற்றுமதி திட்டமும் கருவிலேயே மாண்டது.

துபாயில் வேலை

அந்த கால கட்டத்தில் இருந்த வேலையையும் விட்டு விட்டு, அன்றாடச் செலவுக்கு கூட பணம் இல்லாது, என்ன செய்வதென்று புரியாது குழம்பி தவித்து கொண்டிருந்தபோது, தூபாயில் எனக்கு நன்கு பரிச்சயமான, என் பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான ஒரு பெரிய அரபு நிறுவனத்தார், நான் விரும்பினால் தூபாயில் அவர்களின் உணவு பொருட்கள் இறக்குமதி, வினியோகப் பிரிவில் எனக்கு "சேல்ஸ் & மார்கெட்டிங் மானேஜர்" பதவியில் வேலை தருவதாகக் கூறி என்னை வற்புறுத்தி அழைத்தனர்.

குடும்பத்தை கோலாலம்பூரில் தனியே விட்டுவிட்டுப் போக எனக்கு மனமில்லை என்றாலும், வேறு வழி இல்லாது "மூன்று வருடங்களுக்கு மட்டும்" என்கிற நிபந்தனையின் பேரில் தூபாய்க்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் 22 பிரிவுகளில், என்னோடு இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். அரபு நாடுகளில் வசிப்பது என்பது ஒரு நாளுக்கு ஒரு நாள் எந்த வித்தியாசமும் இல்லாது, ஏதோ அரைத் தூக்கத்தில் நிகழ்வுகள் நடப்பதுபோன்ற ஒரு மாதிரி, மாயையான வாழ்க்கை அநுபவம்.

வேலைக்கென்று நீங்கள் அங்கு சென்ற முதல் நாளே உங்கள் பாஸ்போர்ட்டை நிறுவனத்தார் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு வேலை, வேலை, வேலை என்று வேலையைத் தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவுமே நிகழாது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றாலும் முதல் ஆறு நாட்கள் செய்த வேலையின் கலைப்பு தீர உறங்கத்தான் சொல்லும். இரவு நேரங்களில் வீடியோவில் தமிழ், மலயாள, இந்தி திரைப்படங்கள். வியாழ வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்களோடு பெர்மிட்டில் வாங்கிய விஸ்கி, ரம். அவ்வப்போது சிறிது ஷாப்பிங். வட இந்தியர்களின் பாடு, தென் இந்தியர்களை விட சிறிது பெட்டர் - நவராத்திரியின் போது டாண்டியா ஆட்டம் இருக்கும், மாதம் ஒருமுறை ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் பார்ட்டி கொடுத்து கொள்வார்கள். அதற்கு மேல் எதுவுமே கிடையாது. பணம் மட்டும் வங்கி அக்கவுண்டில் மாதாமாதம் சிறிது, சிறிதாக சேர்ந்து கொண்டே வரும்.

இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமேயானால் அதற்கு இலகுவில் விடை கிடைக்காது. சில சமயம் அந்த வாழ்க்கையும் ஒரு அழகான வாழ்க்கை போலத் தோன்றும், சில சமயம் எதுவுமே வாழாதது போலவும் தோன்றும். பிரச்சனையற்ற சுதந்திரம் இருப்பது போல ஒரு நாள் மனதிற்கு படும். மறுநாள் இனம் புரியாத சோகம் நம்மை ஆட்கொண்டு மனதை ரனப் படுத்தும். அங்கு நான் பார்த்த ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவை மையமாக வைத்து ஏதோ ஒரு கனவு இருந்தது. ஒருவர் மூன்று காண்டிராக்ட் (ஒரு காண்டிராக்ட் என்பது இரண்டு வருடம்) தூபாயில் வேலை செய்துவிட்டு, சேமிக்கும் பணத்தில் பரோடாவில் தன் சகோதரரோடு சேர்ந்து வீடு கட்டி கொடுக்கும் தொழில் ஈடுபடப் போவதாகச் சொன்னார், மற்றொருவர் இன்னும் சிறிது பணம் சேர்ந்தவுடன் பூனாவில் டிராவல் ஏஜன்சி துவக்க இருப்பதாகச் சொல்வார், ஒருவர் பம்பாயில் தான் வாங்கிப் போட்டிருந்த இரண்டு ப்ளாட்டுகளின் விலை அரைக் கோடி ரூபாயைத் தாண்டின மறு கனமே தாயகம் திரும்பி விடப்போவதாக சொல்லி இருந்தார். மற்றோருவர் கேரளாவில் ஒன்பது அறைகளுடன் அவர் கட்டிய வீட்டின் புகைப்படங்களை காண்பித்து இன்னும் ஒரு காண்டிராக்டை முடித்துக் கொண்டு அவ்வீட்டில் குடிபுகப் போவதாக கூறுவார்.

ஆனால் இப்படிச் சொன்ன என் நண்பர்கள் ஒருவர்கூட அவர்களாக தாயகம் திரும்பவில்லை. நான் தூபாயை விட்டு வந்து 15 வருடங்கள ஆகின்றது, பம்பாயில் என் நண்பரின் ப்ளாட்டுகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயை தாண்டி விட்டது, ஆனால் அவர் இன்னமும் தூபாயில்தான் இருந்து வருகிறார். கேரளாவில் வீடு வைத்திருந்த நண்பருக்கு சென்ற வருடம் மாரடைப்பு ஏற்பட்டு இனி வேலை செய்ய முடியாது என்கிற நிலையில் இப்போதுதான் இந்தியா திரும்பியுள்ளார்.

திரும்பாததற்கான காரணங்கள்

வேலை நிமித்தமாக தூபாயை மையமாக வைத்து ஐக்கிய அரசு கூட்டரசின் எல்லா நகரங்களோடு, குவைத், சவுதி அரேபியா, பகரேன், கட்டார், ஓமான் ஆகிய பிற வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்களுக்கும் பற்பல முறை பயணம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் எனக்கு கிட்டின. இப்படி மேற்கொள்ள பட்ட பயணங்களின் போது, தனியார் நிறுவனங்களில் நடுநிலை மற்றும் மேல்மட்ட நிலைகளில் நிர்வாகஸ்தர்களாக இருந்த நூற்றுக்கனக்கான இந்தியர்களை சந்தித்து அணுக்கமாக பழகக்கூடிய வாய்ப்புக்களும் எனக்கு நிறைய கிட்டின. இப்படி சந்தித்து, அறிமுகமாகி, அளவளாவிய நண்பர்களோடு அடிக்கடி பகிரப்பட்ட விஷயங்களில் ' போதுமான பணம் சம்பாதித்த பிறகும்கூட அவர்கள் ஏன் தாய் நாட்டிற்கு திரும்பாமல் அரபு நாடுகளில் வாழ்கிறார்கள்' என்பதும் ஒன்று. அதற்கு அவர்கள் பலரும் பகிர்ந்து கொண்ட காரணங்களில் கீழ்வரும் நான்கு காரணங்கள் பரவலாக மீண்டும், மீண்டும் கோடி காண்பிக்க பட்டன:-

1). குடும்ப பெருமிதம். "என் மகன் (அல்லது மாப்பிள்ளை) வெளிநாட்டில் வேலை செய்கிறார்" என்று தாயகத்தில் இருக்கும் குடும்பத்தாரின் பெருமிதம். அதனால் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இயல்பாக ஏற்படும் 'எதிர்பார்ப்பு தாக்கம்'. இதனால் எப்படி குடும்பத்தார்களுக்கு தங்கள் எண்ணத்தை புரிய வைத்து நாடு திரும்புவது என்கிற குழப்பம்.

2). தாயகம் திரும்பின பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி. அப்படியே இதுதான் செய்யப் போகிறோம் என்ற திட்டம் மனதில் இருந்தாலும், அதை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்கிற நடைமுறை அமல்திட்டம் இருப்பதில்லை. அப்படியே அமல்திட்டம் இருந்தாலும் "போடும் திட்டம் தோல்வியுற்றால் என்ன செய்வது ?" என்கிற பயம்.

3). மாறுதல்களை அனுசரிக்க முடியாத வயதை எட்டி விடுதல். 30 வயதில் புலம்பெயரலால் ஏற்படும் மாறுதல்களை ஒருவர் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதே புலம்பெயரலை 45 வயதில் மேற்கொண்டால்? புதுச் சூழ்நிலையை அனுசரித்துப் போகுதல் கடினமானதாக அமைந்து விடுதல்.

4). வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பிரச்சனையற்ற வாழ்க்கை சூழல் (COMFORT ZONE). "இந்த சூழலை விட்டு ஏன் வெளியேற ?" எனும் ஒர் எதார்த்தம்.

இன்னுமொரு காண்டிராக்ட்

இதனால் 'இன்னுமொரு காண்டிராக்ட். இன்னுமொரு காண்டிராக்ட்' என்று நாட்கள் கடந்து விடுகின்றன. இந்த 'இன்னுமொரு காண்டிராக்ட்' எனும் தாக்கம் தூபாயின் ஒரு திர்காம் நாணயத்திற்கு ஒரு மலேசிய ரிங்கிட் மட்டும் எனும் நாணய பரிமாற்றத்திற்கு உட்பட்ட என்னையே விடவில்லை. மூன்று வருடங்கள் மட்டும் தூபாயில் வேலை செய்யப் போவதாக சொல்லி வந்த நான், ஆறு வருடங்கள் கழித்துதான் மலேசியா திரும்பினேன். அப்படி இருக்க ஒரு திர்காமிற்கு 10 - 12 இந்திய ரூபாய் எனும் கணக்கு உடைய இந்தியர்களிடம் என்னத்தை சொல்வது ?

தூபாயில் எனது முதல் மூன்றாண்டுகள் முடியும் தருவாயில் நான் வேலை செய்த அரபு நிறுவனத்தினர் என் சேவையை தொடர வைக்க வேண்டி, அவர்களோடு நான் வேலையை தொடர்ந்தால் எனக்கு சம்பள உயர்வும், என் 'பாச்சிலர் குவார்ட்டர்ஸ்க்கு' பதிலாக 3 அறைகளையுடைய 'பர்னிஷ்டு அப்பார்ட்மண்டும்' கம்பெனிச் செலவில் கொடுப்பதாக கூறினர். இதை நான் கோலாலம்பூருக்கு வேலை நிமித்தமாக வந்திருந்தபோது என் குடும்பத்தார் முன்னினையில் என் மனைவியிடம் சொல்ல, அவர் உடனே "நீங்கள் எதற்கு மலேசியா திரும்புகிறீர்கள்? நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உங்களோடு தூபாய் வந்துவிடுகிறேன்" என்றார். உடனே குடும்பத்தார் யாவரும் "நல்ல யோசனை!" என்று ஒருமித்து குரல் எழுப்பினர். அந்த கனப் பொழுதில் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக சிந்தியாத, ஒரு அரைத் தீட்சண்ய நிலையில், நான் 'சரி' என்கிற வகையில் மண்டையை மண்டையை ஆட்ட, மடை திறந்த வெள்ளம்போல் நிகழ்வுகள் சடசடவென அதையடுத்து நிகழ்ந்தன. அடுத்த நான்கு மாதங்களில் என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் என்னோடு தூபாய் வந்து சேர்ந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் வாழ்க்கை தூபாயிலேயே கழிந்தது.

ஆனால் எனது மூன்றாவது காண்டிராக்டின் போது என் உள்மனது என்னை அரித்தெடுக்க ஆரம்பித்தது. "நமக்கு 38 வயது ஆகிவிட்டது. இதற்கு அப்புறமும் நாம் மலேசியா திரும்பி நாம் கண்ட கனவுப்படி ஒரு தொழிலை ஆரம்பிக்கா விட்டால், தொழில் முனைவராகும் நமது கனவு கடைசிவரை வெறும் கனவாகவே இருந்துவிடும்" என்கிற ஞானோதயம் என் மனதில் ஆழமாக எழும்ப, "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்கிற குருட்டு தைரியத்தில், என் காண்டிராக்ட் முடித்த கையோடு மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக் கொண்டு, குடும்பத்தோடு மலேசியா வந்து சேர்ந்தேன். ஒரு சிறு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் என் குடும்பம் துபாய்க்கு வந்து என் பிள்ளைகள் அங்குள்ள ஆங்கில பள்ளிக்கூடங்களில் படிக்கப் போய், மலேசியா திரும்பிய பிறகு அவர்களை திரும்ப அரசாங்க மலாய் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பித்தால் படிப்பு எங்கு கெட்டுவிடுமோ என்கிற பயத்தில், ஆங்கில மீடியத்தில் பாடம் நடத்த பட்ட தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட நேர்ந்தது. இதனால் மலேசியா திரும்பிய அடுத்த ஒன்பது வருடங்களுக்கு எனக்கு மாதாமாதம் சராசரி US$ 450 கூடுதலாக செலவாகியது. இதை நான் பல வருடங்களுக்கு முன் யோசியாது ஒரு முறை மண்டையை ஆட்டினதற்கான அபராதம் என்று நினைத்து கொள்வது உண்டு.

எதனில் ரிஸ்க்கு இல்லை ?

இந்த பகுதியை முடிக்குமுன்னர் புலம்பெயருதல் பற்றி நான் ஒரு கண்ட ஒரு சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மலேசியாவில் வாழப் பிடிக்காமல் லட்சக்கணக்கான மலேசியக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினர் வெளிநாடுகளில் புலம்பெயந்துள்ளனர். அவர்களில் சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வப்போது புலம்பெயந்த நாட்டில் வாழப் பிடிக்காமல், மலேசியா திரும்பிவிடுவதும் உண்டு. அப்படி குடும்ப காரணங்களுக்காக 12 வருடங்கள் கழித்து பிள்ளை குட்டியோடு மலேசியா திரும்பிய ஒரு சீனரை ஒரு சக நண்பருடைய விருந்தில் பார்க்கும்படி நேர்ந்தது. பேச்சுவார்த்தையில் எனது இந்திய நண்பர் வந்திருந்தவரிடம் கேட்டார் "இந்த வயதில், அதுவும் 12 வருடங்கள் வெளி நாட்டில் வசித்துவிட்டு, குடும்பத்தோடு திரும்புகிறீர்களே, இங்கு என்ன செய்வீர்கள்? இது ஒரு பெரிய ரிஸ்க்காக உங்களுக்கு படவில்லையா ?" என்று. அதற்கு அந்த 49 வயது சீனர் அளித்த பதில் சீனர்களின் இயல்பை அப்பட்டமாக காட்டுவதாக அமைந்தது.

"WHAT IS NOT A RISK FRIEND ?? TO EXIST IS A RISK !!".


தொடரும்

Thursday, November 03, 2005

அவள் விகடன் கட்டுரை

இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். என்னுடைய பழைய பதிவு ஒன்றில் அகஸ்மாத்தாக நான் அமெரிக்க "ஆல் பவர்ஃபுல்" அம்மையார் காண்டலீசா
ரைஸைப் பற்றி சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா என்று கேட்டிருந்தார்.

என்னுடைய சோம்பேறித்தனம் தான் ஜகப் பிரசித்தம் ஆயிற்றே. தவிரவும் இந்த மாதிரி ஆ.....ஆழமாக எழுதி எனக்குப் பழக்க்மும் இல்லை. இதோ..அதோ என்று இழுத்துக் கொண்டே போய், கடைசியில் அனுப்பி வைத்தேன். அது இந்த வாரம் அழகாக எடிட் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர் ஸ்டான்ஃபோர்டில் வேலை செய்ததையும், அவரைப் பற்றி இப்போது வந்திருக்கும் hillary vs Clinton புத்தகத்தைப் பற்றியும், அவருக்காக (அதிபர் தேர்தலுக்கு) ஆதரவு திரட்ட ஆரம்பித்திருக்கும் வலைத்தளங்கள் பற்றியும், அவரை "விவரமில்லாத புஷ்" எத்தனை நம்பி இருக்கிறார் என்பதையும் பற்றி எழுதி இருந்தது மட்டும் கத்தரிக்கப்பட்டு இருக்கிறது.

நம்ம மக்கள் பார்த்துவிட்டு ரெண்டு மொத்து மொத்தினால் சந்தோஷம்.

இந்தக் கட்டுரை எழுத முடிந்ததற்கு காண்டலீசாவுடனான என்னுடைய தனிப்பட்ட நட்பும், அமெரிக்க அரசியலில் என் அறிவும், குடியரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் என் கூர்ந்த பார்வையும்....வெயிட்..வெயிட்..வெயிட்டீஸ்..

கட்டுரைத் தகவல்களுக்காக இணையத்துக்கு நன்றி. விகடனுக்கும்

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...