Sunday, October 23, 2005

கிழட்டு அனுபவங்கள்(8) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு


1) பள்ளியில் கண்ட பல இன ஒற்றுமை

1959 , ஜனவரி மாதம். ஒரு திங்கட்கிழமை. அன்றுதான் பள்ளி ஆண்டின் முதல் நாள். என் தந்தை முன்பே பதிந்து வைத்திருந்த பாலர் வகுப்பில் என்னன சேர்த்துவிட்டு, பிற பெற்றோர்களோடு வகுப்பிற்கு பின்புறமாக வெளியே நின்று கொண்டிருந்தார். நான் மருள மருள விழித்துக் கொண்டும், தந்தை வெளியில் தொடர்ந்து நிற்கின்றாரா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்தபடி, வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தேன் " கரும்பலகையில் எழுதியிருப்பதைப் போல நீங்களும் 'A' எழுதுங்கள் பார்க்கலாம்" என்று ஆசிரியர் சொல்ல, எல்லாக் குழந்தைகளும் அவரவர் சிலேட்டு பலகைகளில் 'A' எழுத ஆரம்பித்தோம். நான் பழக்க ஊந்தலால், என் தந்தை நின்று கொண்டிருந்த இலக்குவை சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அங்கு தந்தையைக் காணோம்! உடனே என் பிஞ்சு மனதை பீதி ஆட்கொள்ள இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்தேன். திரும்பி நின்று சுற்று முற்றும் பார்த்தால், தந்தையை எங்கேயும் காணவில்லை. ஆசிரியர், வகுப்பின் பின்புறம் ஒரு மாணவனின் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. அழுகையையும் அடக்க முடியாமல், அதே நேரத்தில் பிற சிரார்கள் முன் உரத்து அழ தன்மானமும் இடங்கொடுக்காத நிலையில் கண்களில் லேசாக நீர் சுரக்க, உதடுகள் விதும்ப என் இருக்கையில் மெதுவாக அமர்ந்தேன். அப்போது பின்னிருந்து ஒரு சிறு கரம் என் தோளைத் தொட்டு இறுக்கியது. 'அழாதே' என்று ஆதரவாக ஆங்கிலத்தில் ஒரு குரல் சொல்ல, திரும்பிப் பார்த்தேன், ஒரு சீனச் சிறுவன். அவன் பெயர் 'ஒங் ச்சௌ ப்பெங்'. பள்ளி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன். முதுநிலைப் பள்ளி முடியும் வரை பனிரெண்டு வருடங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். சட்டையெல்லாம் கிழிந்து போகும் அளவிற்கு நான்காம் வகுப்பில் புழுதியில் புரண்டு சண்டையும் போட்டிருக்கிறோம், எழாம் வகுப்பில் சக நண்பன் ஒருவன் லாரி மோதி இறந்தபோது கட்டிப் பிடித்து கொண்டு ஓவென்று அழுதும் இருக்கிறோம். மீசை முளைத்த பருவத்தில், சைக்கிளில் ஊரைச் சுற்றி என்னோடு சேர்ந்து அவனும் இந்தியப் பெண்களை சைட் அடித்திருக்கிறான். அவனோடு சேர்ந்து நானும் சீனப் பெண்களை சைட் அடித்திருக்கிறேன்.

இன்றும், என்னுடைய எத்தனையோ பிற இன நண்பர்களுல் அவனும் ஒருவன். நான் படித்து வளர்ந்த ஊரில் இப்போது ஒரு பெரிய மரக்கரி வியாபாரியாக (charcoal trader) உள்ளான். வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறான். இன்றும் உறவினரைப் பார்க்க அந்த ஊருக்கு போகும்போதெல்லாம் அவனோடு உட்கார்ந்து இரண்டு பீர்களாவது அருந்தி, ஒருமணி நேரமாவது அரட்டை அடித்து விட்டு வந்தால்தான் என் மனதில் ஊருக்கு போய் வந்த நிறைவு ஏற்ப்படும்.

இது 1959 ல் ஆரம்பித்த கதை. எந்த நாட்டிலும், ஊரிலும் ஏற்படுவது போல ஏற்பட்ட ஒரு இயல்பான பள்ளி நட்பு. ஆனால் இந்த மாதிரி கதைகளையெல்லாம் இப்போது நீங்கள் மலேசியாவில் கேள்விப்பட முடியாது. 1970 ல் நானும் \'ஒங் ச்சௌ ப்பெங்\' கும் பள்ளிப் படிப்பை முடித்து, வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் இந் நாட்டு வரலாற்றின் மிகப் பெரிய இனக் கலவரம் நடந்தது. அந்த இனக் கலவரத்தோடு முடிந்தன என் சிறு வயதில் நான் பார்த்த, அநுபவித்த அழகான ஆழமான அந்த பல இன நட்பும், ஒற்றுமையும்.

2. இன ஒற்றுமை, இன அனுசரிப்பானது 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் தொடங்கிய இனக் கலவரத்தில் இரு தரப்பிலும் சுமார் 3,000 பேர் மாண்டனர். அந்த கலவரத்தின் சூடு தணியுமுன்பே நான் ஏற்கனவே கூறிய NEW ECONOMIC POLICY யும் அமல்படுத்தப் பட்டது. அத்தோடு நாடே தலைகீழாக மாறியது. இப்போது இங்கு இனங்களுக்கு இடையே காணப்படுவதெல்லாம் வெறும் அனுசரிப்புத் தன்மை மட்டும்தான். இதை இன ஒற்றுமை என்று கூற முடியாது. ஓரளவுக்கு எல்லா இனத்தவருக்கும் ஏதோ ஒரு வழியில் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டிருக்கிற படியால் யாரும் வேறு எந்த இனத்தவரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்து கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு போகிறார்கள்.

ஆனால் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக எந்த ஒரு இனப் பிள்ளைகளும் பிற இன பிள்ளைகளோடு சேர்வதுமில்லை, எங்கள் காலத்தை போல் நெருங்கி பலகுவதுமில்லை. உள்ளூர ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த இனத்தின் மீது ஒரு சிறு வெறுப்பு, ஒரு தாழ்ப்புணர்ச்சி என்ற நிலமை உறுவாகி விட்டது. இது அரசாங்கத்திற்கும் நன்கு தெரிகிறது. இந் நிலையை சரி செய்ய அவர்களும் அவர்களால் ஆன என்னென்னவோ செய்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் அவர்களின் எந்த முயற்ச்சியும் இதுவரை பயன் அளிக்கவில்லை.


3). ரோஷம் கெட்ட பிழைப்பு

மலேசிய நாட்டில் இலைமறை காயாக இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்தாலும், கடந்த 36 வருடங்களாக பெரிய இனப் பிளவு எதுவும் அப்பட்டமாக ஏற்படாமல் இந்த நாடு தப்பித்தற்கு, இதுவரை மலேசியா அடைந்து வந்துள்ள பொருளாதார வளப்பம்தான் முழுக் காரணம். ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்த பொருளாதார வளப்பத்திற்கு பங்கம் ஏற்பட்டால், அன்று இங்குள்ள இனங்களுக்கு இடையே பிரச்சனைகள் எழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மலேசியாவின் தற்போதைய 3 விழுக்காடு வேலையில்லா குறியீடு, 6 விழுக்காடு அனாலேயே பிரச்சனைகள் தொடங்கிவிடும் என்பது என் கணிப்பு. காரணம் 35 வருடங்களாக தங்களுக்கு கிடைத்து வந்துள்ள 'முதற் சலுகைகளை' மலாய் இனத்தவர்கள் அவர்களின் பிறப்புரிமையாக கருத ஆரம்பித்து விட்டதுதான். தங்க தாம்பாளத்தில் வைத்து அவர்களுக்கு ஊட்டி, ஊட்டி கெடுத்துவிட்டு, இனிமேல் போய் "நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை ஆதலால் உங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கி வரப் படும் சலுகைகளை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது", என்று கூற இங்கு எந்த அமைச்சருக்கும் துணிவு வராது. மற்ற இனத்தவருக்கு சாப்பிட அரிசி இருக்கோ இல்லையோ, மலாய் இனத்தவரின் நலத்தை அமைச்சரவை காபந்து பண்ணியே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போய்விடும்.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால், மலேசியாவில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எந்த அரசியல் பலமும் கிடையாது. "ஏதோ மலாய்காரர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழ்வதற்கு தயாரானவர்கள் தொடர்ந்து இந் நாட்டில் வசிக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் அவரவருக்கு உசிதமான வேறு எந்த நாட்டிலாவது குடியேறிக்கொள்வது நல்லது", என்று பார்லிமெண்டு மெம்பரிலிருந்து தெருக் கூட்டும் மலாய்காரர் வரை எங்களைப் பார்த்து அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் ரோஷம் கெட்டு அவர்கள் சொல்வதை கேட்டும் கேட்காததுபோல் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் இங்குள்ள மலாய்காரர் அல்லாத 80 லட்சம் இந்திய / சீன வம்சாவளியினருடைய உண்மையான நிலைமை.

ஆனால் உலகம் முழுவதும் குடும்ப, கலாச்சார தொடர்புகளை உடைய சீன வம்சாவளியினருக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. மேலும் எந்த நாட்டில் குடிபுகுந்தாலும் சிறப்பாக வேலை செய்தோ, தொழில் புரிந்தோ வாழ்க்கையை நலமுடன் வாழ்வதற்கான நடைமுறை அநுபவங்களும், திறமைகளும் சீனர்களிடம் நிறையவே உள்ளன. இப்போதும் வருடா வருடம் பல பத்தாயிரம் மலேசிய சீனர்கள், குறிப்பாக வெளிநாடுகளுக்கு படிக்க போகும் இளைஞர்கள், மலேசியாவிலிருந்து பிற நாடுகளில் சரமாரியாக குடி பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் கூட குடும்ப தொடர்புகள் இல்லாத, படிப்பு அறிவு குறைந்த இங்குள்ள பதினைந்து லட்சம் தமிழர்களின் நிலை ??

4). செட்டியாரிடம் படித்த பாடம்

தமிழ்நாட்டிலிருந்து , பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே இந்த நாட்டிற்கு வணிகர்களாக வந்து சீனர்களையும் மிஞ்சி அபாரமாக பணம் சம்பாதித்த இனம் 'நாட்டுக் கோட்டை செட்டியார்கள்' இனம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 1969 இனக் கலவரத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக இந்த நாட்டின் தொடர்பை முழுமையாக அறுத்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர். இப்போது செட்டியார்கள் இனத்தில் மிஞ்சி போனால் மலேசியா முழுவதும் ஒரு 800 பேர் தான் இருப்பார்கள். இப்படி மலேசிய தொடர்புகளை முழுமையாக அறுத்துக் கொண்டு சில நாட்களில் தாயகம் திரும்ப இருந்த ஒரு முதிய செட்டியாரிடம் எனக்கு 20 வயது இருக்கும்போது நானும் என் உறவினர் ஒருவரும் "ஏன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறீர்கள்?", என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்று எனக்கு சரிவர புரியவில்லை. ஆனால் 32 வருடங்கள் கழித்து இன்று நினைத்துப் பார்க்கையில் அது ஏதோ அசரீரி சொன்ன தேவ வாக்குப் போல் தோன்றுகிறது.

"தம்பீ, முதலெ நாம எதுக்கு நாடு விட்டு நாடு வந்தொம் என்கிற மூல காரணத்தை மனதிலெ ஏத்திக்கனும். 100 வருஷங்களுக்கு முன்னாலெ எங்க தாத்தா இந்த நாட்டுக்கு வந்தப்ப இங்க பணம் சம்பாதிக்க நெறைய வாய்ப்பு இருந்திச்சு. மலாய்காரங்கலெல்லாம் நல்ல மனுஷங்களா இருந்தாங்க. நாமளும் நெரைய சம்பாதித்தோம். ஆனா இப்ப எல்லாமே மாறிப் போச்சு. இனிமே இந்த நாட்டை நம்பி, நாம பொலப்பு நடத்தவும் முடியாது, குடும்பங்குட்டியோட இங்க வாழவும் முடியாது. இவனுங்க இப்பச் சொல்றானுங்களே 20 வருஷத்துக்கு மட்டும் எங்களுக்கு 'முதற்சலுகை' கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் அது எங்களுக்கு வேண்டாம்ன்னு. அதை நீ நம்புறே ? அதெல்லாம் புருடா. நடக்காதுப்பா. இவனுங்க இனிமெ ஜன்மத்துக்கும் இவனுங்களோட சலுகைய விட்டுக் கொடுக்க மாட்டானுங்க. இஙக உள்ள தமிழங்களுக்கெல்லாம் இந்தியாவை சுத்தமா மறந்துட்டு இந்த நாட்டிலேயே செட்டில் ஆகனுன்னு நெனைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பத் தெரியாது. ஒரு இருவது முப்பது வருசம் போனதுக்கு அப்புறம்தான் தோணும், அடடா தப்பு பண்ணிட்டமேன்னு.

இந்தியாவுக்கு என்னப்பா கொறச்ச? நூறு வருஷத்துக்கு முன்னாலெயே நாம மலாயா, சிங்கப்பூர், பர்மான்னு இத்தனை நாடுகளுக்கும் கொண்டிவிக்க வந்து பணம் சம்பாதிச்சம்ன்னா, அதுக்கான கெட்டிகாரத்தனத்தையும், பக்குவத்தையும், வித்தையையும் எங்கேருந்து கத்துகிட்டோம் ? இந்தியாவில இருந்துதானே.

நமக்கு தான் தொழில் செய்யிறது எப்படின்னு தெரியுமே! நம்ம ஊருக்குபோய் எதாவது தொழில் ஆரம்பிச்சா முதல்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். அப்புறம் எல்லாம் சரியா வந்திரும். சொல்லப் போனா பணம் இருந்தால் இந்தியா மாதிரி சொகுசான எடம் எங்கேயும் கெடைக்காதுப்பா.

தம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுஙக் காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்" என்று சொல்லி முடித்தார்.

5 comments:

 1. //தம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுஙக் காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்//

  இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி!

  நான் கடைசியாகப் போட்ட பதிவோடு சம்பந்தப்படுத்தி யோசித்துப் பார்க்கும்போது பொறுப்பு விளங்குகிறது.

  தொடர்ந்து எழுதுங்கள் ராஜசேகரன்.

  அருமையாக இருக்கிறது.

  -மதி

  ReplyDelete
 2. I would like to know more about factors that helped for the economic success of Malaysia despite the pro-malay concessions.

  Thanks,

  Pedharayudu

  ReplyDelete
 3. இராஜசேகரன்,வணக்கம்!நல்ல அநுபவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.தாய் நாட்டையிழந்து அந்நிய நாடுகளில் வாழும்போது ஏற்படும் இந்த அவலம்,எல்லோருக்குமே பொது.ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நமது அநுபவங்களும் இதே.வேண்டுமானால் மலேசியாவுக்குப் பதில் ஜேர்மனியென்றும்,மலேகாரருக்குப்பதில் ஜேர்மனியர்களென்று மட்டும் மாற்றிவிட்டால்போதும்.மற்றெல்லாம் ஒரு மாதிரித்தாம்.அந்தச் செட்டியார் கூற்றுச் சரியானது.இந்த அநுபவங்களை ஆற்றலோடு எழுதுகிறீர்கள்.தொடர்ந்து பல்லின மக்களின் பலதரப்பட்ட உளவியல் நெருக்கடிகளை எழுதுங்கள்.அவை நமக்குப் பாடமாக அமையும்.சும்மா சொல்லவில்லை,உங்கள் அநுபவப் பகிர்வு அற்புதமாக இருக்கிறது.அதாவது எழுத்து வியூகத்தைச் சொல்கிறேன்.எல்லோரிடமும் மிக இலகுவாக ஒட்டிக்கொள்ளும் தெளிந்த நடை.தொடருங்கள்.இப்பதிவுக்கு நன்றி,இராஜசேகரன்!இராஜசேகரன்,வணக்கம்!நல்ல அநுபவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.தாய் நாட்டையிழந்து அந்நிய நாடுகளில் வாழும்போது ஏற்படும் இந்த அவலம்,எல்லோருக்குமே பொது.ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நமது அநுபவங்களும் இதே.வேண்டுமானால் மலேசியாவுக்குப் பதில் ஜேர்மனியென்றும்,மலேகாரருக்குப்பதில் ஜேர்மனியர்களென்று மட்டும் மாற்றிவிட்டால்போதும்.மற்றெல்லாம் ஒரு மாதிரித்தாம்.அந்தச் செட்டியார் கூற்றுச் சரியானது.இந்த அநுபவங்களை ஆற்றலோடு எழுதுகிறீர்கள்.தொடர்ந்து பல்லின மக்களின் பலதரப்பட்ட உளவியல் நெருக்கடிகளை எழுதுங்கள்.அவை நமக்குப் பாடமாக அமையும்.சும்மா சொல்லவில்லை,உங்கள் அநுபவப் பகிர்வு அற்புதமாக இருக்கிறது.அதாவது எழுத்து வியூகத்தைச் சொல்கிறேன்.எல்லோரிடமும் மிக இலகுவாக ஒட்டிக்கொள்ளும் தெளிந்த நடை.தொடருங்கள்.இப்பதிவுக்கு நன்றி,இராஜசேகரன்!இன்னுமொன்று...இது கிழட்டு அநுபவந்தாம்.எனினும் தெறிக்கும் அறிவுடன் பகிரப்படுகிறது.இதுதாம் டஜ்!

  நட்புடன்
  ப.வி.ஸ்ரீரங்கன்

  ReplyDelete
 4. என்ன மாதிரி கிணத்துத் தவளைகளுக்கு இதுபோன்ற கட்டுரைகள் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பதின் முழுப்பொருளைப் புரிய வைக்கிறது.

  ஒரே ஒரு எதிர்ப்புக் குரல் மட்டும் கொடுக்கவேண்டியதுள்ளது! ஐம்பத்தோரு வயசெல்லாம் ஒரு 'கிழட்டு வயசா'? நம்க்குத் தெரிந்த கேசு ஒண்ணு, 61 முடியப்போகுது இந்த வருஷத்தோடு; தருமின்னு பேரு; அதுவே அப்படி நினச்சது மாதிரி தெரியல; நீங்க என்னடான்னா...!

  ReplyDelete
 5. அருமையா வந்துக்கிட்டு இருக்கு. விவரமான பதிவுக்கு நன்றி.

  எல்லாத்துலேயும் ஒரு 'தூரப்பார்வை' வேணுமுல்லே?

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...