Showing posts with label சொந்தக்கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை. Show all posts

Sunday, June 05, 2011

பிஷிங்

வளர்ந்த குழந்தை போலத் தான் இருந்தான் பிரசாத். நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. நெற்றியில் குங்குமத் தீற்றல். வெள்ளைச் சிரிப்பு. முழுக்கை சட்டை. அதன் நிறத்துக்கு ஒவ்வாத ஒரு பேண்ட். எல்லாரையும் ஜி..ஜி என்று விளித்துக் கொண்டு, Campion பள்ளியில் தன்னுடன் படிதத பையன்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு காரைக்குடி கல்லூரி ஹாஸ்டலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

பால்குடி மறக்காத சுடுகுஞ்சுகளே கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்ததும் வால் முளைத்த குரங்கு குட்டிகளாகி விடுகிற அதிசயத்தில் இது எங்களுக்கு தீராத ஆச்சரியம்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அந்த அதிசயம் பழக்கமாகி விடவே “ ப்ரசாத்துன்னா இப்படித்தான் மச்சி” என்று சொல்லிவிட்டு எங்கள் துரத்தல்களில் பிசியானோம்.

எல்லா வளர்சிதை மாற்றங்களையும் தோற்கடித்துவிட்டு, லேப்களில், டூர்களில், கேண்டீன்களில், கல்லூரி கலைவிழாக்களில், இரவு நேர சென்னைப் பயணங்களில், குறும்பு மிக்க வகுப்புத் தோழிகளின் அலப்பரையில் பிரசாத் நடத்தும் பால்யத் திருவிளையாடலகள் எங்கள் காதுகளுக்கு வந்தபடியே இருந்தன. ஆனால் எல்லோருக்கும் இனியனாக, படிப்புகளில் துடியாக, வம்புகளில் சிக்காதவனாக, நடிகை சரோஜாதேவி ஸ்டைலில் தமிழ் பேசும் பிரசாத் தன் வழியில் போய்க் கொண்டிருந்தான். இதையெல்லாம் CECRI யின் ஆஞ்சநேயர், பிரசாத் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் வெண்ணை பூசிக்கோண்டும், வடை மாலைசார்த்திக்கொண்டும் மையமாகப் பார்ட்துக் கொண்டிருந்தார். இறுதியாண்டில் அவனையும் சலனப்படுத்திய ஒரு பெண்ணிடம் ”ரோஜாத்தோட்டம் வைக்கலாம்,சோஷியல் சர்வீஸ் பண்ணலாம் என்று அவன் தன் மனதைப் பகிர்ந்த தகவல் வந்தபோது, எங்களால் அவன் “குணா” ஆனான்.

கல்லூரி முடிந்து, கனவுகள் கலைந்து, நிஜம் தாக்கி, நெஞ்சம் அலுத்து, சலித்து, களைத்து, மலர்ந்து வாழ்க்கை நிலைத்த வருடங்களில் அவன் அமெரிக்காவில் கிழக்கு கடற்கரையில் மணமாகி, குழ்ந்தைகளுடன் இனிதே வாழ்வதாகவும், கிழக்குகரை நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மெயில், யாஹூ குழுமம், இணைய நிழற்படம் முதலியன மூலம் தெரிந்தபோது சந்தோஷப்பட்டேன்.

நான்கு வருடங்களுக்கு முன், மகனை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு ஏரியில் குளிக்கப்போக, பாம்பு கடித்தோ, வலிப்பு வந்தோ, அந்த சபிக்கப்பட்ட தினத்தில் மரணித்து அமெரிக்க தினசரிகளில் கதறும் அவன் மகனின் படத்துடன் அமரனாகி, செய்தியாகப் போனபோது நாங்கள் இடிந்தே போனோம். நல்ல மனம் கொண்ட நண்பர்கள் சிலர் குடும்ப நிதியாக பணம் வசூலித்து அவன் குடும்பத்தை இந்தியா வழியனுப்பி வைத்தது எல்லாம் அந்த துன்பியல் சம்பவத்தின் நீட்சிகள்.

நேற்று அவனிடமிருந்து என் யாஹூ மெயில் முகவரிக்கு எதையோ விளம்பரித்து, எங்கேயோ அங்கத்தினனாகச் சொல்லி மெயில் வந்திருக்கிறது.

அடப் பாவிகளா...!!!!!

Tuesday, December 07, 2010

சமீபத்திய சந்தோஷம்



சமீபத்திய தமிழ் மன்ற விழாவில் பாடியபோது ஐஃபோனில் புத்திரன் சுட்ட வீடியோ. தகவல்களுக்கு -
http://www.sactamil.org/KulirKaalaKondattam2010.html
பட்டிமன்றம், அரட்டை அரங்கம், பாட்டுக் கச்சேரி என்று ஒரே கோலாகலம்தான். நிழற்படங்கள் விரைவில் -

Saturday, May 08, 2010

தமிழ்மன்ற விழா - 2010



நான்கு வருடங்களாக விழா ஒருங்கிணைப்பாளராக இருந்ததில் தமிழ் மன்ற நிகழ்ச்சிகளில் மேடையில் பாடவோ, நடிக்கவோ, ஆடவோ முடியாமல் இருந்தது. இவ் வருடம் அப்போறுப்புகளில் இருந்து விடுதலை ஆனதில் கொஞ்சம் சவுகரியம். இரண்டு நாடகங்களில் பங்கேற்றேன். ஒன்றில் (ஒபாமா விஜயம்)தொணதொணக்கும் வீட்டுப் பெரியவராக, மற்றொன்றில் ( கந்தசாமி MP3) தோற்றுபோய் ரோட்டுகு வரும் அரசியல்வாதியாக. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு என்றாலும், கந்தசாமி ஹிட். நடிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. தொழில்முறை நடிகனாக இல்லாமல் போனதால், ஒவ்வொரு பாத்திரமும் ரொம்ப பாதித்தது. பெரியவர் வேட நாடகம் முடிந்தபிறகு, அரசியல்வாதி நாடகம் வரவே, உடல்மொழியை மாற்றுவதற்கு சற்று சிரமப்பட்டேன்.

விழா விவரம் இங்கே :
விழா படங்கள் இங்கே

you tube ல் கந்தசாமி MP3 - பகுதி 1 பகுதி 2 பகுதி 3

கந்தசாமி முழு ஒளித்தொகுப்பு :

சூர்யா நடனம்

அண்டை அயலில் உள்ள நாடக ஆர்வலர்கள் இணைந்து ஒரு நாடகக்குழு துவங்கியுள்ளோம் . கலாட்டா க்ரியேஷன்ஸ் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. வேறு பெயர்கள் தொன்றினால் சொல்லவும். இந்தக் குழு அரங்கேற்றும் 1.5 மணி நேர நாடகத்தில் இந்திரனாக நடிக்கிறேன். மேல் விவரங்கள் விரைவில்.

இப்படியே நாடகம், டீ.வி, சினிமா என்று நடித்து, நானும் ஒரு நாள் தமிழ்நாட்டுக்கு சி.எம் ஆகிவிடமாட்டேனா என்ன..? :-) :-)


Sunday, May 04, 2008

தமிழ்மன்ற விழா - சாக்ரமெண்டோ








(சூர்யா மற்றும் சூர்யா அப்பாவின் புகைப்படங்கள் - மேலே)

சாகரமெண்டோ தமிழ் மன்றத்துடன் கடந்த மூன்று வருடங்களாக பணிசெய்து வருகிறேன். இந்த வருடம் தலைவராக.

நேற்று தமிழ்புத்தாண்டு விழா நடைபெற்றது. மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். ஏறக்குறைய ஐநூறு பேர் இருக்கும். அதில் 150 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் :-). குழந்தைகள் குட்டிகள் பட்டுபுடவை யுவதிகள், நடுவயது மங்கையர் திலகங்கள், ( வழக்கம்போல்) அசடு வழியும் ஆண்கள் என்று நிஜமாகவே கல்யாணக் களைதான்.

எத்தனைதான் முயன்றாலும் சில குறைகளை களையவே முடியவில்லை - உதாரணம் “நேரா நேரத்தில் உணவு” . காரணமாக கடும் வருத்தம் மற்றும் மன உளைச்சல். நிஜமாகவே எப்போது தப்பிக்கலாம் என்று தோன்றுகிறது :-(

நிகழ்ச்சியை ஒரு பார்வைளாளனாக கமெண்டு அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டு பார்ப்பதுதான் உலகிலேயே மிக உவப்பான விஷயமாக தோன்றுகிறது. ம்.. Life would have have been much more better, if second thoughts came first.

நிகழ்ச்சி அறிவிப்பு இங்கே மற்றும் இங்கே

நிக்ழ்ச்சியை ஒட்டி வெளியான விழா மலர் / குறிப்பு இங்கே

நிகழ்ச்சியின் போது நான் எழுதி வைத்துப் படித்த உரை இங்கே.

மற்ற புகைப்படங்கள் இங்கே

Monday, April 21, 2008

போலீசு ...போலீசு...



நம்மூரில் போலீஸ்காரர் கண்டிப்பானவர் என்றால் அவர் விலை ஜாஸ்தி என்று அர்த்தம். மாமா என்றும் , குச்சான் என்றும், ட்ரேட்மார்க் தொப்பை என்றும் எல்லாராலும் ரேக்கப்படும் அந்த வர்க்கம் அமெரிக்காவில் பொது ஜனங்களுக்கு சிம்மசொப்பனம். உயரமும், அகலமும், கோபமில்லா கண்டிப்புமாக, நீலச்சீருடையில் உலாவரும் நீலக்கண் அழகர்களை வயசு வித்தியாசமில்லாமல் நம்ம ஊர் பெண்மக்கள் சைட் அடிப்பார்கள்.


Freeway ல் வேக எல்லை மறந்து அதி வேகமாக க்ரூய்ஸும்போது, அங்கிள் பர்த்துவிட்டால் போச்...அவன் நம்மை பார்ப்பதற்கு முன் நாம் அவனை பார்த்துவிடுவது உத்தமம். மாட்டினால் கருணையே கிடையாது. வழிசல், லஞ்சம் எதுவும் வெலை செய்யாது. கையில் உள்ள கருவிமூலம் உங்கள் ட்ரைவிங் ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டு சீட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டு
போயே விடுவான். ரோட்டிலே அவன் காரின் தலையில் உள்ள லைட்டைப் போட்டு ரெண்டு முறை பிளிறினால் சகலருக்கும் Laxative இனாம்.


நேற்று மாலை திரும்பிக் கொண்டிருந்தேன். 65 ஸ்பீட் உள்ள சாலையில் எல்லோரும் கிட்டத்தட்ட 80 ல் சீறிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் ( Monday)
பெல்ட் கட்டி பேட்டரி மாற்றி ஓடவேண்டிய அவசரம். எங்கிருந்தோ வந்தான் ரங்கன்...


வந்தவன் சாலைக்கு மத்தியில் வந்து லைட்டைப் போட்டான். 80ல் சீறிய எல்லோருக்கும் நடுக்கம். எவனுக்கு லைட்டைப் போட்டான் என்று தெரியாமல் ப்ரேக்கை ஏறி அழுத்த, அங்கிள் நாலு லேன்களிலும் மார்கழி மாத கோல உருளை மாதிரி அப்படியும் இப்படியுமாக ஆத்தினான். அங்கிளுக்கு “திரவக்” குழப்பமா என்றும் யோசனையாக இருந்தது, யாரைப் பிடிக்க என்று குழப்பமோ என்று நினைக்க, இந்த ஆத்தல் தொடர்ந்து 7 நிமிடங்களுக்கு நடந்தது. எல்லோரும் ஜானவாஸ கார் ரேஞ்சுக்கு ஸ்பீட் குறைந்ததும் சட்டென்று கிளைச்சாலை பிடித்து வெளியே போனான்.


பொறந்தாலும் அடுத்த சென்மத்துல அமெரிக்கா மாமாவா பொறக்கணும்யா...!!!


Monday, May 14, 2007

தமிழ்புத்தாண்டு விழா 2007


இன்னமும் முதுகு முள்முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. கால் பாதத்தை தனியே கழட்டி வீசிவிடலாமா என்று அப்படி ஒரு வலி. கொஞ்ச நாட்களாக தூக்கம் சரியாக இல்லாததால் இமைகள் மேல் எருமை மாடு ஏறி உட்கார்ந்திருப்பதை போல அப்படி ஒரு அழுத்தம்.

நேற்றுத்தான் விழா முடிந்தது. எங்கள் தமிழ்மன்றத்தின் புத்தாண்டு விழா. வருடம் நடக்கும் மூன்று விழாக்களில் தலையாய விழா. வேலை பெண்டு கழண்டு விட்டது. அத்தனையும் மீறி விழா நல்லபடியாக நடந்து முடிந்ததில் சந்தோஷம்.

ஏகப்பட்ட பொறுப்புகளை நானெ தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டதில்தான் மேற்சொன்ன நல்லவையும், அல்லவையும். வழக்கம்போல எல்லா நிகழ்ச்சிகளின் முடிவிலும் கிடைக்கும் ஷொட்டு ப்ளஸ் குட்டு. முக்கியமான சந்தோஷம் என்ன என்றால், நிகழ்ச்சியை ஒட்டி வெளியிடப்படும் கையேட்டில் என்னால் சேர்க்க முடிந்த தமிழ் இணையப் பக்கங்களின் முகவரிகள். கணிணியில் தமிழ் எழுத கற்றுத் தரும் கில்லியின் பக்கம். வந்திருந்த நானூறு பேரில் பத்து பேர் பார்த்தால் கூட இணையத்தில் சண்டை போட இன்னமும் ஒரு காட்டா குஸ்தி தமிழன் கிடைக்கப் போகிறான் என்ற மனநிறைவு.

சூர்யாவின் பங்குக்கு அவனும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டான்.
வீரா சூப்பர் ஸ்டார் பாட்டுக்கு கை சூப்பற குழந்தைகள் ஆடிய கூட்டாட்டத்தில் அவனும் ஒரு மடிசார் குழந்தையுடன் ஆடி தமிழனின் கலாச்சாரத்தை புதுக்கினான். பின்னர் சாக்ரமண்டோ புலிகேசியில் எலியாக வந்தான். புகைப்படங்கள் இங்கே....

விழாவின் ஒருங்கிணைப்பாளன் என்ற முறையில் நான் எழுதிப் ப(க)டித்த உரை இங்கே...

விழா கையேடு இங்கே...

Friday, October 08, 2004

எங்கே செல்லும் இந்தப் பாதை ....

எச்சரிக்கை :

முழுக்க முழுக்க இது என் சொந்தக்கதை. கிட்டத்தட்ட என் Resume வின் தமிழாக்கம். வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள், "ஒரு விளையாட்டுப் பையன் வளர்ந்த கதை" யை படிக்க வேண்டுமானால் உள்ளே போகலாம். மீறி நுழைந்து வருத்தப்பட்டால், நான் ஜவாப்தாரி இல்லை.

%%%%$$$$?????@@@@@*********%%%%%%

அம்பத்தூர் தொழிற்பேட்டையில், திருமங்கலம் முக்கில் இருந்து நேராக உள்ளே போனால், எலெக்ட்ரா பவர் சப்ளை சிஸ்டம்ஸ் இன்னம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு லேத் பட்டறை சைஸ்தான். உள்ளே பீரோ பீரோவாக, டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் உபயோகப்படும் பேட்டரி சார்ஜர்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். ரோட்டிலிருந்து கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும், சுண்ணாம்பு கற்கள் வழி எங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கம்பெனிதான் என் முதல் கம்பெனி.

காரைக்குடி எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு, பாட்டும், கூத்தும், கலாட்டாவும், பத்திரிக்கைப் பணியும் பண்ணியது போக மிஞ்சிய கொஞ்சூண்டு நேரத்தில் படித்து, நான் சேர்ந்த முதல் வேலை. இப்போதைய என் ஒரு மணி நேர சம்பளத்தை விட மிகக் குறைந்த மாதச்சம்பளம். அப்போது அது எனக்கு ஒரு பொருட்டில்லை. ஏனெனில் சம்பளத்துக்காக நான் வேலை பார்க்கவில்லை அப்போது. மேஜர் ஆகி, கல்யாணத்துக்கு காத்திருக்கும் மகளை பார்த்தால் எத்தனை கலவரம் பெற்றவர்களுக்கு வருமோ, அதைப் போலவே படித்து வேலைக்கு காத்திருக்கும் மகனைப் பார்த்தாலும் வரும் என்ற உண்மை பரிபூரணமாக தெரிந்ததால், பெற்றவர்களின் கண்ணிலிருந்து தப்பினால் போதும் என்ற அவசரத்தில் சென்னைக்கு ஓடி சேர்ந்த வேலை அது. கொஞ்சம் காத்திருந்தால் வேறு ஏதாவது கெளரவமான வேலை கிடைத்திருக்கக் கூடும். ஆனால், பத்து நிமிடம் கழித்து வரும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸை விட, நகர்ந்து கொண்டிருக்கும் பாடாவதி டவுன் பஸ்ஸில் ஏறும் அவசரக்கார முட்டாள்தனம்..!! கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகே ஜாகை - இப்போதைய "அவள் விகடன்" ஆசிரியர் ம.கா.சியோடு. நூறடி ரோட்டில் 70-ஜெ பிடித்து திருமங்கலம் முக்கில் இறங்கி வேலைக்கு போக வேண்டும்

வேலைக்கு சேர்ந்த பின் தான் கொடுமை தெரிந்தது. டெஸ்டிங் இஞ்சினியர் வேலை. இந்தப் பையன் இங்கே ரொம்ப நாள் தங்க மாட்டான் என்று தெரிந்தே என்னவோ, பிழிந்து தள்ளினார்கள். அப்பா ஒரு நாள் அங்கே பார்க்க வந்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சேர்ந்தால் இளநிலை பொறியாளர் பதவியோடு ஜீப்பும் தருவார்கள் என்று ஆசை காட்டி ஓய்ந்த அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு, வீம்புக்கு கஷ்டப்படும் தன் பிள்ளையைப் பார்த்து வருத்தமாயிருந்திருக்கக்கூடும். ஒன்றும் சொல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார். அந்த அளவு அரசுப்பணி வெறுப்பு எனக்கு...

ஒரே மாதம் தான் வேலை செய்தேன். அதற்குள் மும்பையில் இருந்த குடும்ப நண்பருக்கு கடிதமெழுதி, அவர் வீட்டுக்கு போய் இறங்கி, நாரிமன் பாயிண்ட் கட்டிடங்களில் ஏறி இறங்கி ரெஸ்யூம் கொடுத்து கிடைத்த அடுத்த வேலை HCL - communication division ல் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலை.
சேல்ஸ் வேலை விட டெக்னிகல் வேலைதான் பிடிக்குமென்றாலும் புவ்வாவுக்கு வழி...?? ஏனெனில் அதற்குள் நண்பரின் வீட்டைத் துறந்து அந்தேரி வெரசோவாவில் தனியே தங்கி இருந்தேன்.

HCL ல் இருந்தாலும், எனக்கு கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்ய விருப்பம். இத்தனை ஐ.டி புரட்சி எதுவும் நிகழ ஆரம்பித்திராத 1993 அது. எனவே கடைசியில் wipro/ ATT dealer ஒருவரிடம் கஸ்டமர் சப்போர்ட் இஞ்சினியராக சேர்ந்தேன். கம்பெனி பெயர் ஏவிசி இன்கார்பரேட்டட். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் வேலைதானே ஒழிய திருப்தியான சம்பளம் ஒன்றுமில்லை. ஆனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆறுமாதங்கள் வேலை பார்த்த பிறகு Zenith Computer Systems ல் வேலை கிடைத்தது. இது நல்ல நிறுவனம் என்பதால் அதிக சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன், ஹிந்துஸ்தான் லீவர் - சர்ச்கேட் அலுவலகத்தில் ரெஸிடெண்ட் இஞ்சினியராக நியமிக்கப்பட்டேன். கார்ப்பரேட் ஆஃபிஸ் என்பதால், அந்த அனுபவம் எனக்கு பலவகையில் உதவியாக இருந்தது. நடுரோட்டில் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட நாய்க்குட்டி போல மிரள மிரள விழித்த காலங்கள் அவை.

மறுபடியும் அப்பா குறுக்கிட்டார்.

என்னைப் பார்க்க பாம்பே வந்த அவர், அதன் நவநாகரீக வேகத்தில் மிரண்டு போய், " அதான் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்து விட்டதே ..மெட்ராஸ் வாடா" என்று பணித்து விட்டு ஊருக்குப் போனார். வேலை தேடி அடுத்த மாதத்தில் சேன்னை Nexus computers ல் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்ப கட்ட பயிற்சி முடித்து, திருச்சி கிளைக்கு போஸ்டிங் செய்து, கும்பகோணம் சர்வீஸ் சென்டரை பார்த்துக் கொள்ளச் சொல்லி அங்கே என்னை அனுப்பியபோது வருஷம் 1994. அதன் பின்னர் நெடுதுயில். காரணம் நெக்ஸஸ் சூழ்நிலை. இரண்டாவது கல்லூரி வாழ்க்கையோ என சந்தேக/சந்தோஷப்படும் அளவிற்கு ஏகப்பட்ட இளைஞர்கள். கை நிறைய சம்பளம், போனஸ், வகையறா, சிறிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கிடைத்த கல்லூரி ஸ்நேகிதியின் நட்பு ..இத்யாதி..இத்யாதி.

கிளைத்தலைவர் அமெரிக்க வேலை கிடைத்துப் போனதும், ஸ்நேகிதிக்கு ஆன திடீர் கல்யாணமும் என்னை திருச்சியில் இருந்த கிளப்ப, இவைகளை மறக்க 1998 ல் சென்னை Hexaware Infosystems Ltd ல் சேர்ந்தேன். நந்தனம் சிகனல் அருகே இருக்கும் இவர்களுடைய சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் சிஸ்டம் அட்மின் வேலை. அதுவும் அலுத்து, 1999 மே யில் சிங்கப்பூர். சிங்கப்பூரில் keppel Tatlee Bank / DBS / Chase Manhattan Corp ல் sigmasoft என்ற கம்பெனி வழியாக கன்சல்டண்ட் உத்தியோகம். நடுவே 1999 நவம்பரில் ஒரு வழியாக கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதித்தேன். கல்யாணம் பண்ண சூட்டில் கர்ப்பமாக்கி விட்டு, மனைவியை பிள்ளைப் பேறுக்கு இந்தியா அனுப்பி விட்டு, 2000 ஆகஸ்டில் Covansys Corp ல் சேர்ந்து அமெரிக்கா வந்தபோதுதான், டாட் காம் குமிழி வெடித்து, பொருளாதாரம் தள்ளாடி Rececession ஆரம்பித்து, பின் பின்லேடன் தயவால் அது இன்னமும் பிரச்சினையாகி, ஏகப்பட்ட உருளல்களுக்குப் பின், வீடு வாங்கி, பச்சை அட்டை கிடைத்து, கலிபோர்னியா அரசுத்துறையில் - Calpers சேர்ந்து விட்டு போன வாரம் அம்மாவுக்கு ஃபோன் செய்தபோது சொன்னேன்.

" ஏண்டா...நாங்க சொல்லும்போதெல்லாம் கவர்மெண்ட் வேலை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு, இப்ப மட்டும் கலிஃபோஓஓ..ர்னியா கவர்மெண்டில வேலைக்கு சேர்ந்திருக்கியே" என்றாள்.

நியாயமான கேள்விதானே...!!!!

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...