Sunday, September 30, 2007

மணம் பரப்பும் மல்லிகை மகள்

படிக்கும்போது பெருமிதமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.


நண்பர் ம.கா.சிவஞானத்தைப் பற்றி என் வலைப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். என் கல்லூரி சீனியர். விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்திலும் சீனியர். சென்னைக்கு காலடி எடுத்து வைத்து நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 51, அழகர் பெருமாள கோயில் தெரு, வடபழனியில் தன் அறையில் இடம் கொடுத்த சென்னைவாசத்திலும் சீனியர். இப்போது தன் கனவுப்பூவை மலரவிட்டு "மல்லிகை மகள்" ஆக்கி இருக்கிற இமாலய தன்னம்பிக்கையிலும் சீனியர்.



சல்யூட் தலைவா......!!





இனியர் ம.கா.சி இத்தனை வருடங்களாக விகடன் குழும பத்திரிக்கையான
"அவள் விகடன்" பொறுப்பாசிரியராக இருந்தவர். சொற்பங்களில் இருந்த பத்திரிக்கையை தன் முயற்சிகளின், புதுப்புது எண்ணங்கள் மூலம் லட்சங்களில் உயர்த்தி பத்திரிக்கையுலக ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது "மல்லிகை மகள்" என்ற பெண்கள் பத்திரிக்கையை நண்பர்களின் துணையுடன் துவங்கி இருக்கிறார்.



முதல் இரண்டு இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக ஸ்நேகமான ஒரு உணர்வைத் தந்த முயற்சி. மிக பாசிட்டிவான எழுத்துக்கள். வித்தியாசமான தலைப்புகள் என்றாலும் " அவள் விகடன்" போல இருக்கிறதே என்ற உணர்வும் வந்தது. உருவத்தில் மூத்தவளைப் போல இளையவளும் இருப்பது பெற்ற தாயின் கையிலா இருக்கிறது..?? ஆனால் வேறு விதமாக வளர்க்கலாம்.


நண்பருக்கு அது தெரியும்.


மல்லிகை மகள் உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறாள். அனுப்பி வையுங்கள். அச்சு உலகில் "நச்" என்று முத்திரை பதியுங்கள்



இப்போது மல்லிகை மகளுக்காக ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறார். ஆனால் முழுமையான இணையத்தளத்தில் மல்லிகை மகள் மணம் வீசி நடை பழகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. உங்கள் எண்ணங்களை அவருக்கு எழுதுங்கள்.

Tuesday, September 25, 2007

அட...!!!


சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.

101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்

‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.

இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.

ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.

இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்.
நன்றி : விகடன்

நட்பு..?

நேரம் ஓடுகிறது
கோப்பைகள் காலியாகின்றன
மதுவின் போதை ஏற ஏற
மாதுவின் முகதரிசனம்
கலவரம் கூட்டி
உடல் மிரட்டி
விழி உருட்டுகிறது
பாசிக்குளப் படிக்கட்டில்
கால்வைக்கும் கவனமும்
கைக்குழந்தையின் கண்களில்
தூசு நீக்கும் லாவகமும்
கத்திமுனையில் நிருத்யம் பயிலும்
கலாவேசமுமாக
மனசு கிடந்து அலமலக்கிறது
பேசுகிறோம். பேசுகிறோம். பேசுகிறோம்....
சிரிக்கிறாய் சிரிக்கிறேன்
பரிமாறுகிறேன் புசிக்கிறாய்.
கால் நீட்டி சொடக்கெடுக்கிறாய்.
கை உயர்த்தி முறிக்கிறாய்
கண்கொட்டா ஆச்சரியம்
உறக்கத்தினால் ஒட்டுகிறது
கொண்ட நட்புக்கு
பங்கம் வராமல்
நடுநிசி வரை
பேசிப் பிரிகிறோம்.
காற்றுப் போல திரிய
யெளவனம் தடையென்று
முதுமையை வரமாய் பெற்ற
ஒளவை பாவம்...
உடல் தாண்டும் வேட்கை கொண்ட
ஸ்நேகமும் உண்டென்றரிய
வாய்க்கவில்லை அவளுக்கு

Saturday, September 22, 2007

மாடர்ன் மரத்தடிகள்

இணையவெளி ஏற்படுத்தியிருக்கும் சாத்தியங்களின் சமீப சாட்சி. எனக்கே இது பலவகையில் உபயோகமாக இருக்கிறது. நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களின் தொடுப்புகளால் ஆன மாபெரும் மனித சங்கிலி.

இணையத்தை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கிற புண்ணியாத்மாக்களுக்கு ஜே.

பார்க்க : க்ளிக்க : ஒரு அருமையான யூ-குழாய் பகிர்வு :-) :-)

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...