Thursday, October 28, 2004

உதிர்ந்த முத்து

எத்தனை உண்மையென்று தெரியாது.

பா.ம.க. தரப்பில் இருந்து ரஜினி படத்துக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்கப்பட மாட்டாது. அதேசமயம், அவரும் தன்னை அரசியல்ரீதியாக முன்னிறுத்தி பேசுவதோ, அறிக்கை விடுவதோ, படத்தில் வசனங்கள் வைப்பதோ கூடாது. சினிமாக்காரர்கள் சினிமாக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எங்கள் டாக்டரின் கொள்கைக்கு அவர் மதிப்பளித்தால், எங்களால் அவர் படத்துக்கு எந்த தொல்லையும் இருக்காது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் பா.ம.க. தரப்பில்.

- நன்றி ஜூனியர் விகடன்

சேப்பு கலரு ஜிங்குச்சா...!!!

ரஜினிகாந்த் " சந்திரமுகி" படத்துக்கு பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளார் மூலமாக ரவுடி டாக்டரிடம் சமரசம் பேசினார் என்று ஒரு செய்தியை ஜூ.வி கசிய விட்டிருக்கிறது. ரஜினிக்கு எதிரான செய்திகளை குழலெடுத்து ஊதுவதில் ஜூ.வி யின் ஆர்வம் சமீபகாலமாகவே அதிகரித்து வந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 1996 தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தபிறகு ஜெயலலிதா பாஸ்கர் என்பவரை மீடியா அட்வைஸராக நியமித்துக்கொண்டு பத்திரிக்கை உலக பிரமுகர்களுடன் தனக்கிருக்கும் பிரச்சினைகளை சரி செய்யத் தலைப்பட்டார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில்தான் விகடன் ஆசிரியர் பாலனும், மதனும் ஜெயலலிதாவை சென்று சந்தித்து வந்தார்கள்.

இப்போது இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இது உண்மையெனில், ரஜினி நிஜமாகவே பரிதாபத்துக்கு உரியவர். ஜெவுக்கு எதிராக படங்களில் அதிரடி மிரட்டல் விடுத்து, பொது மேடையில் ஜெவுக்கு எதிரான குரலை எழுப்பி, அரசியலில் அவருக்கு எதிரான கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்து சவுண்டு விட்டவர், "பாபா" ஊத்திக்கொண்டதும் நிலைமாறி, ஜக்குபாயையும் ட்ராப் செய்து விட்டு, இப்போது அடுத்த படம் ஓட, டாக்டர் காலில் விழுந்திருக்கிறார்.

இதற்கு அவர் பேசாமல் இமயமலைப் பக்கம் போயிருக்கலாம்.

இந்தப் படம் ஓடி, கல்லா நிறைந்தால் மறுபடியும் அவர் அரசியல் கருத்துக்களை உதிர்க்கக் கூடும். அப்படி நடந்தால், புழுவை கொட்டிக் கொட்டி குளவியாக்கியது போல, தமிழ்நாட்டு அரசியல்வியாதிகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு அரசியல்வியாதியை உருவாக்கி விட்டதாகத்தான் அர்த்தம்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்திலேயே அவர் மகள் ஐஸ்வர்யா, தன் முன்னாள நண்பர் சிலம்பரசனுக்கு அல்வா கொடுத்துவிட்டு சுள்ளானை கைப்பிடிக்க போவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அப்பா ராஜேந்தர் காதல் தோல்வியையே தமிழகம் இன்னமும் மறக்கமுடியாதபடி படம் படமாக எடுத்துத் தள்ளினார் அவர். "அவள இதயத்தை தாடி என்றேன் ! அவள் தர மறுத்துவிட்டாள்..! நான் "தாடி"யானேன் " என்று சிம்புவும் தாடி வளர்க்காமல் சமுத்தாக மன்மதனானால் சரிதான்.

அப்பா எண்பதடி பாஞ்சா பொண்ணு எண்ணூறு அடி பாயுதுங்கோவ்...


Wednesday, October 27, 2004

கடேசி குவார்ட்டர்

தலைப்பை படித்ததும் தப்பிதமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தீர்த்தத்தை நிறுத்துவதாக தற்போதைக்கு உத்தேசம் ஏதும் இல்லை. இந்த குவார்ட்டர் JFM, AMJ, JOS, OND என்று விற்பனைப் பிரிவிலும் , மார்க்கெட்டிங்கிலும் அழைக்கப்படும் பெயர். பேராண்மை ..ச்சீ..மேலாண்மை தொழிலிக்கும் நம்ம எம்பீஏ ஆசாமிகளுக்கு பழக்கப்பட்ட இன்னொரு குவார்ட்டர்.

ஆயுதபூஜையிலும், சரஸ்வதி பூஜையிலும் ஆரம்பிக்கும் நம்ம விழாக்காலங்கள் போலவே அமெரிக்காவிலும் எல்லா பண்டிகைகளும் இந்த கடைசி மூன்று மாதங்களில்தான் அதிகம் வருகின்றன. மேற்கு கடற்கரை பகுதிகளில் கூட, குளிரெடுத்து எல்லாரும் "மூடி"க்கொண்டு போகிறார்கள் எனில் கிழக்கு கரையோர மக்களை கேட்கவே வேண்டாம். பனி, அது சார்ந்த அசெளகரியங்கள் என்று இயல்பு வாழ்க்கையே பாதிக்கபட்டு விடும். எங்கு பார்த்தாலும் Sale..Sale..sale. ஏகப்பட்ட நீள்வார இறுதிகள். இதற்கு நடுவே ஒட்டு மொத்த தேசமே ( சில மாநிலங்களைத் தவிர) கடிகார முட்களை பிடித்துழுத்து பின்னே தள்ளிக்கொள்ளும் Day light saving அட்ஜஸ்ட்மெண்ட். சல்லிசான விலையில் ப்ளேன் டிக்கெட் கிடைத்து விட , காஸ்ட்கோவிலும், வால்மார்ட்டிலும், பேக்டரி அவுட்லெட்டிலும் சாமான்களை வாங்கித் திணித்துக் கொண்டு, இந்திய விஜயம் செய்யும் நம்மஉடன்பிறப்புகள். வேலை கிடைப்பது குறைந்து விடும். யாரை தொடர்பு கொண்டாலும் ஆள் இருக்க மாட்டார்கள். கதை சொல்லும் தொலைபேசியிடம் தான் பதில் சொல்ல வேண்டும். குளிர் பொறுக்காமல், தினமும் "வெளி" ஹீட்டரும், மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை "உள்" ஹீட்டரும் போட வேண்டும். எந்தச் செடியும் பூக்காது. புல்தரை சரியாக வளராமல், சோபை இழந்து இருக்கும். விளையாட்டு மைதானங்கள் ஈயடிக்கும். எல்லோரும் தங்கு தங்கென்று ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருப்பார்கள்.கொல்லைப்புறம் உட்கார்ந்து காற்று வாங்கினால், மறு நாளே டாக்டர்கள் fees வாங்குவார்கள். எல்லோரும் flu shot போட்டுக் கொள்வார்கள்.

இத்தனை கலாட்டாக்களுடன் சேர்ந்து இந்த வருடம் புஷ்-கெர்ரியின் ஊசலாட்டத் தேர்தல் வேறு. வரலாறு காணாத குழப்படிகளுடன் வரப் போகும் முடிவுகளினால், எல்லோரும் நீதித்துறையின் உதவி வேண்டி போகவேண்டி இருக்கும் என்று இப்போதே மணிக்கணக்கில் விவாதங்கள் நடத்துகிறார்கள். கெர்ரியின் பேச்சை ரேடியோவில் கேட்டபோது, நம்ம புரட்சி தலைவர் ஸ்டைலில் கூட்டத்திடம் கேள்வி கேட்டு பதில் வாங்கும் Interactive உத்தியை எல்லாம் பயன்படுத்தி "தம்" கட்டிப் பார்க்கிறார்.

ம்ஹூம்...சுவாரசியமா ஏதாவது சொல்லுங்கப்பா...!!!

ஆலிவர் ராஜாமணி

நேற்று NPR சானலில் இவரைப் பற்றி கேட்டதாக நண்பர் சொன்னார். கிழக்கும் மேற்கையும் கலந்து அதில் தமிழ்நாட்டு இசையை பிசைந்து, எதுமாதிரியும் இல்லாத புது மதிரி இசையை இவர் தருவதாக இங்கே சொல்கிறார்கள். அமெரிக்காவில், டெக்ஸாஸ் மாநிலத்தில் வசிக்கும் இவர், இங்கே அவர் தம் குழுவுடன்...

band_fw


இவரைப் பற்றி இசை ஆர்வம் உள்ள நம் நண்பர்களுக்கு தெரியுமா..?? தமிழ்நாட்டுக்குத் தெரியுமா..??

உங்கள் தகவலுக்கு...!!

Tuesday, October 26, 2004

சவால் நாயகர்கள்

soundparty

சவுண்டு பார்ட்டி என்று ஒரு காவியம். சத்யராஜ் படம். இத்தனை இளைஞர்கள் இருக்கையில், இன்னமும் சத்யராஜ் நடிக்கிறார் என்றால் அது நிஜமாகவே திறமைதான். அந்தத் திறமையை நம்பாமல், ஹீரோயினாக ஒரு சின்னப் பெண்ணை கூட நடிக்க வைத்து, லொள்ளு பண்ணியிருக்கிறார். பாட்டு சீனில் அந்தப் பெண் - செத்துப் போன பிரதியுக்ஷா - குதிப்பதை பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது. பிற்பாடு கேஸட்டில் அந்தப் பாடலை பதிவு செய்து வைத்து விட்டது - வேறு விஷயம். :-)

தமிழ்சினிமாவில் வயதான கதநாயகர்கள் படங்கள் எல்லாமே இப்படித்தான். அவர்கள் படங்களில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகத்தான் இருக்கும். டோப்பா தலையோடு, ஓவர் கோடடை போட்டுக் கொண்டு சிவாஜி தள்ளாடி வர, சைடில் ஸ்ரீதேவியும், அம்பிகாவும், ஸ்ரீப்ரியாவும் சிக்கன உடைகளில் ஆடிப்பாடுவதைப் பார்க்க கோராமையாக இருக்கும். இத்தனைக்கும் சிவாஜி தன் உடல் பாகங்களை எல்லாம் தனித்தனியாக நடிக்க வைப்பார் என்று சொல்வார்கள். பாட்டு பாடும்போது வாயில் பேப்பர் வைத்தால் பாட்டு டைப் அடித்து வந்து விடும் என்கிற கிண்டலோடு அவர் வாயசைப்பை சிலாகிப்பார்கள்.

எம்.ஜி.யார் மட்டும் என்ன..?? இதயக்கனி போன்ற படங்களில் அவர் ஆடாத ஆட்டமா..ராதா சலூஜா, லதா மற்றும் புரட்சித் தலைவியோடு அரைகுறை ஆடைகளில் அடிக்காத கூத்தா..?? அவருக்கு மட்டும் என்ன ..?? சினிமாவில் மவுசுக்கா குறைச்சல்..??

வயசான காலங்களில்தான் ஹீரோக்கள் இப்படி ஹீரோயின்களின் கவர்ச்சியை நம்பி படம் எடுக்க, ஆரம்பகால கட்டங்களிலும், ஒரு இடத்துக்கு வரும் வரை அவர்கள் ஹீரோயின்களையே நம்பி இருக்கிறார்கள். விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்ப கால படங்களில் சங்கவியும் சுவாதியும் அடிக்க அவர்கள் "தெறமை" காரணம் என்று நம்புவீர்களானால் நீங்கள் ரசிகன் என்ற விஜய் படத்தையும் வான்மதி என்கிற அஜித் படத்தையும் பார்க்கவில்லை என்று அர்த்தம். கிட்டத்தட்ட அவை இரண்டுமே நாயுடு ஹால் விளம்பரங்கள் தான் . இதே பாதையைத்தான் இப்போது சிம்புவும் தனுஷும் தொடர்கிறார்கள். ( படம் வேணுமா என்ன..? ). ஆனானப்பட்ட கலைஞானி கமல் கூட மலையாள ஜெயபாரதியுடன் ஆரம்ப காலங்களில் இசகு பிசகான படங்களில் நடித்திருக்கிறாராம். கதாநாயகர்கள் இப்படி கதாநாயகளை வைத்து மேலே வந்து விட, இன்று அதே கதாநாயகிகள் இன்று அவர்களுக்கே அம்மா வேஷம் கட்டி நடித்திருக்கிறார்கள்.

ஆக, ஆரம்ப காலங்களிலும் சரி, டோப்பா காலங்களிலும் சரி, கதாநாயகர்கள் நாயகிகளின் சிக்கன உடைகளை மூலதனமாக வைத்தே நடிக்கும் நிலை இருக்க, இடைப்பட்ட காலங்களில் தான் அவர்களுக்கென்று ரசிகர்களும் , இமேஜும், அவர்களால் படம் ஓடுகிறது என்ற பேச்சும் ஏற்படுகிறது. (ராஜ்கிரணும், கிராமராஜனும் ஆடாத ஆட்டமா) இந்த இடைப்பட்ட காலங்களில் தான் அவர்கள் சவால் விடுவது, பஞ்ச் டயலாக் உதிர்ப்பது, தல என்றும் திருமலை என்றும் பேசுவதெல்லாம் நடக்கிறது. முகம் தெரியாத எதிரிகளுக்கு சவால் விடுவது நடிகர்களை மோட்டிவேட் பண்ணும் கருவியாகக் கூட அவர்கள் நினைத்துக் கொள்ளலாம். வியாபார யுக்திகள் இவை. அதை வியாபாரம் என்று தெரிந்து கொள்ளாத ரசிகர்கள்தான் தியேட்டர் வாசல்களில் அடித்துக் கொண்டு சாகிறார்கள். அது ரசிகர்களின் முட்டாள்தனம்.

பண்ணி விட்டுப் போகட்டுமே...!!! அவர்கள் கல்லா நிறைகிறது என்கிற பட்சத்தில் அவர்களிடம் இருந்து வேறெதும் எதிர்பார்ப்பது நம் தவறு. இப்படிப் பட்டவர்களை நம்பி கட்சிக் கொடி கட்டுவதும், கைக்காசை நம்பி போஸ்டர் ஒட்டுவதும், அப்பா அம்மா வைத்த பேரொடு அவர்கள் பெயரை சேர்த்துக் கொள்வதும்தான் நம்முடைய அடிமுட்டாள்தனம்.

( ஹி..ஹி..கவர்ச்சிப்படம் போட்டு ரொம்ப நாள் ஆச்சேன்னு ஒண்ணு போட்டேன். ஆனா, சென்ஸார் பண்ணி போடாம, பதிவில சேக்க மனசு ஒப்புக்கலை... :-( )

நன்றி : அருண் வைத்தியநாதன்

Monday, October 25, 2004

நம் கேள்வி

நினைவு தெரிந்த நாள் முதல், தமிழக தலைவர்களின் பேச்சுகளை மேடையில் கேட்டவாறும், பத்திரிக்கைகளில் படித்தவாறும் இருந்திருக்கிறோம். அடுக்குமொழி மேடைப்பேச்சுகளும், அருவருக்கத்தக்க சொற் பிரயோகங்களும் காதில் விழாமல், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தன் பதின்ம வயதுகளைக் கடந்த எந்த மனிதனும் இருந்திருக்க முடியாது. வெறும் வார்த்தைகளுக்கு மிஞ்சி, குறிப்பிட்ட சிந்தனை வட்டமோ, கட்சியோ எதிலுமே சிக்கிக் கொள்ளாத தலைவர்களை சிந்தனையாளர்களை நான் கண்டதில்லை.

coll_TT

விவரமே தெரியாத வயதில் மாயவரம் பியர்லஸ் தியேட்டர் எதிரே நடக்கும் கலைஞர் கூட்டங்களுக்கு போயிருக்கிறேன். கர கர குரலில், அடுக்கு மொழியில், சமயோசித பளிச் வார்த்தை உபயோகங்களில், கூட்டத்தோடு நானும் புளகித்துப் போய் கை தட்டி இருக்கிறேன். என்றாலும் இரவிலும் கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு, பவுடர் மினுக்கலோடு மறுபடியும் மறுபடியும் அவர் சித்திரை - முத்திரை - பத்தரை என்றெல்லாம் பேச, இதை கேட்பதற்கு தியேட்டருக்கே போய் விடலாம் என்று பின்னாளில் தோன்றிப் போனது.

அப்பா அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் கூட்டங்களுக்கும், ஜெயகாந்தன் கூட்டங்களுக்கும் போய் வருவார். என்னையும் போகச் சொன்னாரென்றாலும் நான் போனதில்லை. ஆனால் அரசியலில் திரு.ஜெயகாந்தனின் நிலைப்பாடுகளும், அண்ணா இறந்தபோது அவர் பேசியதும், நீண்ட நெடுங்காலத்துக்குப் பின படிக்கக் கிடைத்து "ஆடிப்" போனேன். அவரை ஒரு முறை சந்தித்தபோது கூட " நீங்கள் ஏன் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவில்லை" எனக் கேட்டேன். " அரசியலில் நேரடியாக ஈடுபட்டுத்தான் என் பங்களிப்பை சமூகத்துக்கு தர வேண்டியதில்லை" என்றார் அவர். மறைமுகமாக என்ன விதமான பங்களிப்பை தருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. தொடர்ந்து தன் சிந்தனையை அரசியல் பக்கம் செலுத்தி இருந்தால், தமிழ்நாட்டுப் பொதுக்கூட்ட கலாசாரத்துக்கு முற்றான வேறு பரிமாணத்தில் அவர் வெளிப்பட்டிருக்கக் கூடும். கூட்டங்கள் என்றில்லை...தன் சிந்தனையையும் சக்தியையும் அவர் அரசியலில் இன்னமும் செலுத்தி இருக்கலாம் எனற ஆதங்கம் இன்றும் உண்டு எனக்கு.

மக்கள் சக்தி இயக்கம் உதயமூர்த்தி அவர்களை கொஞ்ச நாள் கவனித்துக் கொண்டிருந்தேன். என் ஊருக்கு அடுத்த செம்பொன்னார் கோவில் அவர் சொந்த ஊர். அவருடைய புத்தகங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். "உன்னால் முடியும் தம்பி" என்ற கமல் படமே அவரை முன் மாதிரியாக வைத்து எடுக்கப் பட்டதுதான் என்று சொல்வார்கள். "மக்கள் சேவைக்கு மிஞ்சி சங்கீதம் உசத்தி இல்லை" என்று கமல் சொல்லும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பிற்காலத்தில், அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்ப சிலாக்கியமாக இல்லை. அவரும் அந்தர் தியானமாகி விட்டார்.

பின் வந்தார் நம்ம தமிழ்நாட்டின் க்ளெவர் ராஸ்கல். குமுதமும், விகடனும் படிக்கும் பத்து வயதிலேயே நான் துக்ளக்கையும் விழுந்து விழுந்து படிப்பேன். அவர் நக்கலில் தெரியும் தைரியம், தர்க்க ரீதியாக எழுதும் தன்மை, மனதில் பட்டதை பளீரென்று போட்டுடைக்கும் தன்மை என்று அவர் என் ஆதர்ச நாயகர். அதுவும் கொஞ்ச காலம்தான். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு காவடி தூக்கியது, திமுக-தா.ம.க கூட்டணிக்கு சாமரம் வீசியது, பிறகு திமுகவை எதிர்க்கும் நிலை எடுக்க வழக்கமான சட்டம் ஒழுங்கு பல்லவியை பாடியது, பா.ஜ.க எம் பி ஆகியது, தான் என்ன நிலை எடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல காரணங்களை சொல்ல முடியும் என்கிற திமிரில் பேசுவது போன்ற செய்கைகளால், அவர் குப்புற அடித்து வீழ்ந்தார் என் உள்ளத்தில். அவர் அரசியலில் ஈடுபடாமல், பேசாமல் துக்ளக் ஆசிரியராக மட்டும் இருந்திருந்தால் இன்னமும் அவர்தான் என் ஆதர்ச நாயகராயிருந்திருப்பார். புத்திசாலிகள் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான சமீபத்திய மோசமான உதாரணம் "சோ" ராமஸ்வாமி.

அடுத்தவர் மாலன். அவர் சிநேகிதர் பாஷயில் சொல்வதானால் " மாலன் அமைதியானவர்.ஆனால் மாலனின் கதைகள் முகத்தில் அறையும். விஷயம் புரிந்தவர்களுக்கு". மாலனின் கதைகளில் தென்படும் கருத்துக்கள் அவ்வளவு வீரியமானவை. அரசியலைப் பற்றியும், பொது வாழ்க்கை பற்றியும், முக்கிய சமூக விஷயங்கள் குறித்தும் பேசும் அவர் கதைகள் அற்புதமானவை. ஆனால் அவர் மீது இன்றைக்கு தி.மு.க ஆதரவாளர் என்ற கறை படிந்திருக்கிறது. சன் டீவி ஊழியராக அவர் இருப்பதால், திமுக மற்றும் அதன் கூட்டாளிகள் செய்யும் விஷயங்களில் நீக்கு போக்கோடும், ஜெ வுக்கெதிராக தீவிர நிலை எடுப்பவராகவும் தான் இந்த தலைமுறை அவரை அறிந்திருக்கிறது. அந்தக் கறையை எடுக்க அவர் முனைய வேண்டியது அவருக்காக மட்டுமல்ல, அவர் சொல்பவற்றில் உள்ள நியாயங்கள் திசை திருப்பப்படாமல் சமூகத்தை சென்றடைய. இதே மாதிரி திமுக முத்திரை குத்தபட்ட சுதாங்கன், இப்போது ஜெ. டீவியில் அம்மா புகழ் பாடிக் கொண்டிருக்கிறாராம். தன் கறை நீக்க அவர் தேர்ந்தெடுத்த வழி போல இல்லாமல், மாலன் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ரபி பெர்னார்ட் பேட்டி என்றால் ஒரு காலத்தில் ஆரம்ப கால தூர்தர்ஷன் "ஒலியும் ஒளியும்" நிகழ்ச்சி போல. அவ்வலவு பிரபலம். அத்தனை நாசுக்கு. அத்தனை நையாண்டி. பேட்டி எடுப்பவர் யார்...?? என்ன..?? என்று கணக்கெடுக்காமல், இஷ்டத்துக்கு கேள்வி கேட்டு, அவர்களை "வழிய" விட்டு கெட்ட கூத்தடித்துக் கொண்டிருந்தார். ஒரு முறை ஜெ வின் பேட்டிக்கும், ஜயேந்திரர் பேட்டிக்கும், "தரையில் குழி வெட்டி அதற்குள் உட்காராத குறையாக" ப்வயம் காட்டியதும், அவர் ஸ்கோர் மளமளவென்று குறைந்து ஆவியாகி விட்டது. எங்கே அவர் ..?? ஜெயா டீவியா..??

சிதம்பரம் த.மா.க தலைவராக இருந்தபோது அவர் பேச்சை திருச்சியில் கேட்டேன். சமகால தலைவர்களில் அத்தனை நிதானமான, தெளிவான உரையை நான் எங்கும் கேட்டதில்லை. அடித்த அரசியல் காற்றில், கருப்பையா மூப்பனார் அடித்த பல்டியில், ஜனநாயகப் பேரவை தொடங்கி, சூப்பருக்காக காத்திருந்து, கடைசியில் அவரும் மந்திரி பதவி வாங்கிக் கொண்டு காங்கிரஸில் ஐக்கியமாகி விட்டார். சிந்தனையாளர்களுகே சினிமாக்காரர்களின் தயவு தேவை. இல்லாவிட்டால் அவர்களுக்கு மதிப்பில்லை என்பது மறுபடியும் தமிழகம் ஜனநாயகப் பேரவை மூலம் தந்த பாடம்.

எந்த பக்கமும் சாராமல், எந்த குழாமிலும் தீபம் கொளுத்தாமல், மிஞ்சி இருப்பது எனக்குத் தெரிந்து "தீம்தரிகிட" ஞாநிதான். ஆனால் புரையோடி போயிருக்கும் வாரிசு அரசியல் கலாசாரத்திற்கும், வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கும் மதவாதத்திற்கும் மதத் தீவிரவாதத்திற்கும், ஜாதிக்கட்சி கலாச்சாரங்களுக்கும், அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசு யதேச்சையதிகாரத்தினை தட்டிக் கேட்பதற்கும் ஒரு ஞாநி போதுமா.??
சிந்தனையாளர்களில், தன்னுடைய லாபத்துக்காக லாவணி பாடாமல், விருப்பு வெறுப்பற்று, அடுத்த தலைமுறைக்கு நல்ல சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறவர்கள் யார்...??

அவசியம் பதில் தேவைப்படும் கேள்வி இது....!!!


Sunday, October 24, 2004

விலை உயர்ந்த அபத்தம்

கேரட்டை எடுத்து, அழகழகான வடிவங்களில் வெட்டி, விலை உயர்ந்த , தங்கக்கம்பி தீற்றல்களில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை பீங்கான் தட்டில் வைத்து, சுற்றி பச்சை காய்கறிகளையும், எலுமிச்சம்பழ துண்டுகளையும் வெட்டி வைத்து, அரையிருட்டில், சுத்தமாக உடையுடுத்திய பணியாளர் கொண்டு வந்து டேபிளில் வைத்தால், " ஆரி(றி)யபவன்" " "வசந்தபவன்" சாப்பாட்டுக்காரர்களுக்கு "அடச்... ச்... சே" எனத் தோன்றும்.

joohi

அப்படித்தான் இருந்தது "தீன் தீவாரேங்". நாகேஷ் குக்குனூரின் அடுத்த படம். பிரகாஷ் சொன்னாரே என்று பார்த்தேன். காமிரா, எடிட்டிங் மற்றும் திரைக்கதையை சிரத்தை எடுத்து செய்த அளவுக்கு, கதையில் புதுமை இல்லை. ஜாக்கி ஷ்ராஃப், நஸீருத்தீன் ஷா ஆகியோர்களோடு நாகேஷும் நடித்திருக்கிறார். ஜூஹி ஓகே. நாகேஷின் முந்தைய படங்களில் வந்தவர்கள் சிலரை இதிலும் பார்க்க முடிகிறது. மகாநதியிலும், விருமாண்டியிலும் பார்த்த சிறைக்காட்சிகளின் பாதிப்பினால், இதில் அப்பட்டமாக காட்டப்படும் சிறைக்குற்றவாளிகளின் ஓரினச்சேர்க்கை கூட அந்தளவு எடுபடவில்லை.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நாகேஷ்...!!!


Friday, October 22, 2004

Flavours

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களைப் பற்றி எடுக்கப்படும் படங்கள் பொதுவாக அமெச்சூர் முயற்சியாக இருக்கும். கையில் காமிரா இருந்தால் நாமே களத்தில் இறங்கிவிடலாம் போலிருக்கே என்கிற உத்வேகத்தை கிளப்பும். ஆனால் இந்தப் படம், கொஞ்சம் Main Stream சினிமா பக்கம் வருவதற்கு முயற்சி செய்திருக்கிறது.

flavours

கல்யாணத்துக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு பாதிரியாரின் உரையோடு ஆரம்பிக்கும் படம், அந்த ஹாலில் உள்ள வெவ்வேறு விதமான கேரக்டர்களையும் காட்டி, "கொஞ்ச காலத்துக்கு முன்" என்று படத்துக்கு உள்ளே போகிறது. இந்தியாவிலிருந்து வந்து இறங்கும் வயதான தம்பதியினர், வெள்ளைக்காரியை மணந்து கொள்ளப் போகும் தன் மகனுடனும், அவன் ஸ்நேகிதியுடனும் சுற்றுவது ஒரு துண்டு. அலுவலத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டு, எப்போதும் ஹிஸ்டீரிகலாக புலம்பிக் கொண்டும், இந்தியாவில் தான் ஒரு தடவை கூட பேசாத "ஸைட்" வீட்டுக்கு போன் செய்து திட்டு வாங்கிக் கொண்டும், கூடவே Bench ல் இருக்கும் மற்ற நண்பர்களின் அராஜகத்தோடு, தோளில் கை போட்டுப் பேசினாள் என்பதற்காக கூடப் பழகும் ஒரு "ஆம்பிளைக் காமாச்சியை" டாவும் ராதாகிருஷ்ணன் இரண்டாவது துண்டு. அமெரிக்காவுக்கு புருஷனுடன் வந்துவிட்டு, Single ஆக இருக்கும், கண்ணாடியில் அடிக்கடி "சைடில்" பார்க்கும் புதுமணப் பெண் மூன்றாவது துண்டு. இவனா..அவனா என்று தான் குழம்பி, மற்றவர்களயும் குழப்பி, கடைசியில் தமிழ்ப்பட ஸ்டைலில் ப்ளேனிலிருந்து போன் செய்து, " நீ முதல்ல லவ் யூ சொல்லு " என்று வம்படிக்கும் ஒரு கெமிகல் இஞ்சினியர் குட்டி நான்காவது துண்டு.

இத்தனை துண்டையும் போட்டு, நன்றாக காமெடி மசாலா கொடுத்து கலக்கி, பளிச் பளிச் என்று அங்கங்கே மின்னல் வெட்டும் வசனங்களால் படத்தை மெருகு படுத்தி இருக்கிறார்கள். இத்தனை குட்டிக் கதைகளையும் சொல்லி, அந்தக் கல்யாண ஹாலிலேயே படம் முடிகிறது

படத்தின் டைரக்டர்கள் இந்தியாவில் ஒன்றாக படித்த எம்.டெக் குகள். இதற்கு முன்பே ஷாதி.காம் என்ற படத்தை எடுத்திருக்கிறார்களாம். ஹெச்-1, கல்யாணம், குழந்தை, க்ரீன் கார்டு என்ற வட்டத்துள் முடங்கி போய் விட விருப்பமில்லாமல் தான் "பிலிம்" காட்ட வந்ததாக என்கிறார்கள். இருவரும் இப்போதும் "பொட்டி தட்டும்" வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் - தாசர கொத்தபள்ளி, படத்திலும் நடித்திருக்கிறார். ஸாருக்கு இந்தியாவில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம்.

அமெரிக்க முதல் தலைமுறை இந்தியர்களைப் பற்றிய சித்தரிப்பில் ஓரளவு உருப்படியான படம் இது.

அங்க ரிலீஸ் ஆச்சா..??

இந்த நாள், இன்னுமொரு நாள்.!

" நானென்ன ...பெரிய ஆளா..?? பொறந்து இதுவரைக்கும் என்ன பெரிசா சாதிச்சு கிழிச்சிட்டேன்...பொறந்த நாள் கொண்டாடறதுக்கு " என்பார் என் நண்பர் ஒருவர். கேக் வெட்டி, மெழுகுவர்த்தி ஊதி, பாட்டுப்பாடி கொண்டாடா விட்டாலும், அவருடைய பிறந்தநாள் மற்றும் எங்களுடைய பிறந்த நாட்களையும் அவர் பாட்டில் உடைத்து, கிங்ஸ் கொளுத்தி கோழியோடு கொண்டாடுவது வழக்கம் அந்தக் காலங்களில்.

பள்ளிப் பருவத்தில் எல்லாம் மாயவரத்தில், வீட்டில் பிறந்த நாள் கொண்டாடியதாக நினைவே இல்லை. எங்களுக்கு சொந்தமான கோவிலில் ஒரு அபிஷேகத்துக்கு சொல்லிவிட்டு, அபயாம்பாளுக்கு அஸ்வினி நட்சத்திரம் பேரில் அர்ச்சனைக்கு சொல்லி, கோவில் போய்விட்டு வந்து, மடப்பள்ளி சர்க்கரைப் பொங்கலை ஒரு வெட்டு வெட்டு விட்டு தூங்கி விடுவது வழக்கம். கல்லூரி காலங்களில் இது கொஞ்சம் மாறியது. கூடப் படிக்கும் பையன்களையும், பெண்களையும் டவுனுக்கு அழைத்துப் போய், காரைக்குடி அன்னபூரணாவில் ட்ரீட் கொடுத்து விட்டு, மானாவரியாக ஜொள்ளும் விட்டுவிட்டு கொண்டாடுவது வழக்கம். அப்போதெல்லாம், நல்லவேளை தீர்த்தவாரி இல்லை. அதெல்லாம் வேலை பார்க்க அரம்பித்த பின்தான்.

காதல் காலங்களில் வந்த பிறந்த நாட்கள் சுவாரசியமானவை. போன் வரும். க்ரீட்டிங் கார்டு வரும். அதை சாக்கிட்டு மீட்டிங் நடக்கும். சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் உடைகளுக்கு மவுசு கூடிப்போகும். மறுபடி மறுபடி க்ரீட்டிங் கார்டையும், கொடுக்கப்படும் புத்தகங்களயும் படித்து படித்து, வரிகளுக்கிடையில் துழாவி இரண்டு வாரம் ஓடும். அந்தக் காலகட்ட பஸ் பயணங்களில், பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் ஆள், காரணமில்லாமல் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைப் பார்த்து பயந்து போவார்.
அது அப்படிப் போனது. இல்லை..இல்லை..அதோடு போனது. பிற்பாடு, எல்லாம் முடிந்தவுடன் பழைய கடிதங்களை/கார்டுகளை ஒரு கொடுமையான குளிர்கால இரவில் மொட்டை மாடியில் கொளுத்தும்போது, வெப்பத்தினால் விரிந்த ஸ்பெஷல் வாழ்த்து அட்டையொன்று நெருப்பில் இசை எழுப்ப, கன்னங்கள் கண்ணீரில் நனைந்தது.

பின்னர் பல வருடங்கள் கழித்து சந்தோஷமாக கொண்டாடியது பிள்ளையின் பிறந்த நாள்தான். கேக்கில் உள்ள மெழுகுவர்த்தியை ஊதத்தெரியாமல் அவன் அயர்ந்து போக, எல்லாரும்ம் சிரித்துக்கொண்டே ஹாப்பி பர்த்டே பாடியதும், சத்தத்தில் அவன் பயந்துபோய் அம்மாவின் புடைவைத்தலைப்புக்குள் மருண்ட கண்களோடு ஒளிந்து கொண்டான். எனக்கோ, என் வீட்டம்மாவுக்கோ பிறந்த நாள் என்றால் நாங்கள் ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லிக் கொள்வதில்லை. அதில் தெரியும் செயற்கைத்தனங்களில் எனக்கு ஏற்பட்ட அலர்ஜியை, அவள் எப்படி தெரிந்து கொண்டாள் எனத் தெரியவில்லை. " என்னடி கிழவி..?? எத்தனை வயசு இன்னைக்கு " என்று மட்டும் அவளை கலாட்டா பண்ணுவது வழக்கம் அவள் பிறந்த நாட்களில்.

இன்று அப்படி ஒரு நாள். சாயங்காலம் கோவிலுக்குப் போக வேண்டும்...
birthday13

Thursday, October 21, 2004

அமெரிக்க நொறுக்ஸ்

***** Oreilly Factor என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, ஏகப்பட்ட பேர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட, கேள்வி கேட்டு விட்டு அதற்கு பதிலளிக்கவே விடாமல் தானே முந்திரிக்கொட்டைத்தனமாக பேசி, புஷ் கும்பலின் ஊதுகுழலாக வலம் வரும் பில் ஓரெய்லி Sexual Harassment வழக்கில் சிக்கிக் கொண்டு விழித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் யாரிடம்...?? தன் நிகழ்ச்சியின் இணைத்தயாரிப்பாளரிடம். "கச முசா" என்று அவர் பேசிய பேச்சுகளின் ஒலிநாடா வேறு இருப்பதாக கேள்வி. கேஸ் போட்ட அம்மணி ஆண்ட்ரியாவின் மேல் இவரும் கேஸ் போட்டிருக்கிறார் - மிரட்டிப் பணம் பறிக்க முயல்வதாக...

சந்தோஷமா இருக்கு...!!

***** டெமாக்ரடிக் வேட்பாளர் கெர்ரியின் மனைவி தெரஸா ஹெயின்ஸ் கெர்ரி. மிகப் பணக்காரப் பெண்மணி. அமெரிக்காவின் பிரபல ketchup கம்பெனியின் முதலாளி. கெர்ரி வென்றால், மூன்றாவது பணக்கார அமெரிக்க அதிபராக இருப்பார். சொத்து மதிப்பு மட்டும் 525 மிலியன் டாலர்கள். சமீபத்தில் USA Today என்கிற தினஇதழ் அவரிடம் " அதிபரின் மனைவி லாரா புஷ்ஷுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ..? எனக் கேட்க, மறதியாக " லாரா எங்கும் வேலை பார்த்தாக தெரியவில்லை" என சொல்லி இருக்கிறார். உண்மையில் லாரா நூலக அறிவியல் பட்டதாரி. ஆசிரியையாகவும், நூலகராகவும் பணி புரிந்தவர். தெரஸாவின் கமெண்டுக்கு புஷ் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்க, தெரஸா இன்று மன்னிப்பு கோரி இருக்கிறார். அந்த ஸ்டெட்மெண்டிலும் புஷ் தரப்பு குற்றம் கண்டு பிடித்திருக்கிறது.

தேர்தல்....!!!!

***** புஷ் அடித்த இத்தனை கூத்துகளையும் தாண்டி, தேர்தலில் இவருக்கும் கெர்ரிக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. கெர்ரி வென்றால் அது மயிரிழை வெற்றியாகத்தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். "தான் பிடித்த முயலுக்கு மூணு கால்" என்பது போல so called உறுதி இல்லாமல், மற்ற தரப்பில் உள்ள நியாயங்களையும் பார்க்கும் கெர்ரியினை ஊசலாட்டக்காரர் என்று சித்தரிக்க புஷ் தரப்பு முயற்சி செயவது, கிட்டத்தட்ட ஜெயித்து விட்டதாகத் தான் தோன்றுகிறது.

புஷ்ஷுக்கு எசகு பிசகான இடத்தில் மச்சம்...ஹூம்...!!

***** டெமாக்ரட்டிக் கட்சி வேட்பாளராக ஹில்லாரி க்ளிண்டன் நின்றிருந்தால் இந்த அளவு போட்டி இருந்திருக்காது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அந்த அளவு திடமாகவும், ஆணித்தரமாகவும் பேசக்கூடிய பெண்மணி. இந்திரா பேசி நான் கேடிருக்கிறேன். தாட்சர் பேசி கேட்டதில்லை. ஜெ வின் டீச்சர்தனமான, "நான்" "எனது" போன்ற பதங்கள் பிரதானப்படுத்தப்படும் உரையைக் கேட்டால் எரிச்சல் மிகும். ஒரு ரேடியோ நிகழ்ழ்சியில் ஹில்லாரி உணர்ச்சியோடு பேசும் உரையினை 4 நிமிடங்கள் ஒலி பரப்பி விட்டு, Talk show host இடைமறித்து, "க்ளிண்டன் ஏன் மோனிகாவிடம் போனார் என்று இப்போதுதான் தெரியுது. Who would listen to this bitch all day" என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த மோனிகா விவகாரத்தில், க்ளிண்டனை அவர் தாங்கிப் பிடித்ததில்தான் அவர் மதிப்பு கூடிப்போனது.

கெர்ரி புட்டுகிட்டா, அம்மணிதான் அடுத்த தேர்தலில் வேட்பாளர்..!!!

***** க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ ஒரு போது நிகழ்ச்சியில் கீழே விழுந்து முட்டியை உடைத்துக் கொண்டாராம். இதுதான் இங்கே, இன்று முக்கிய செய்தி 78 வயதாகும் காஸ்ட்ரோ, அமெரிக்க அரசாங்கத்தின் பலத்த எதிர்ப்போடு இத்தனை காலம் ஆட்சியில் இருக்கிறார். க்யூபாவை விட்டுக் குடி பெயர்ந்தவரகள் எல்லாம் கிழக்கு கடற்கரை மாகாணமான ப்ளோரிடவில் தங்கி, புஷ் அரசாங்கத்தின் க்யூபா எதிர்ப்புக்கு முழு ஆதரவு அளிக்கிறார்கள். போனமுறை தேர்தல முடிவை தொங்கலில் விட்ட Palm Beach County ப்ளோரிடாவில்தான் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பொதுவாக , " யானை நடந்தா நியூஸ் இல்ல. விழுந்தாதான் நியூஸ் என்பார்கள்"

காஸ்ட்ரோ விழுந்தாலும் நியூஸ். எழுந்தாலும் நியூஸ் தான்.

( இப் பதிவின் உபயதாரர் : சி.என்.என் ....ஹி ஹி...ஹி )

Wednesday, October 20, 2004

நக்கல்


அமெரிக்க "கால் சென்டர்" வேலைகள் இந்தியாவுக்கு வருவது பற்றி வெவ்வேறு தளங்களில் விவாதம் நடந்து வருவது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்துண்டு ஒரு talk show வில் இருந்து உருவப்பட்டது.

கண்டு களியுங்கள்.

சிஸ்கோவில் ஒரு மாற்றம்

bay-mv

அமெரிக்க பொருளாதாரம் விழுந்து, சிக்கலில் தவித்த கடந்த மூன்றாண்டுகளில் குடாப்பகுதியில் என்னென்னவோ நடந்திருக்கிறது. ஏகப்பட்ட இந்தியர்கள் திரும்பிச் சென்றார்கள். வாங்கி வைத்த பொருள்களை எல்லாம் ( வீடு உட்பட) கிடைத்த விலையில் விற்றுவிட்டு, சோகத்துடன் போவது என்பது அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அந்தக் காலகட்டத்தில் இங்கு இருக்கப் பிடிக்காமல் அலுத்துப் போய் தானாக வேலையை ராஜிநாமா செய்து விட்டு , ஊருக்கு போனவர்களைக்கூட தமிழ்நாட்டில் எல்லோரும் 'வேடிக்கை' பார்த்தார்கள். சுஜாதா(த்தா) "என்.ஆர்.ஐ மாப்பிள்ளைகள் வேலை இழந்தார்கள்" என்று எழுதினார். கல்லுரிகளில் கம்ப்யூட்டர் துறை, மாணவர்கள் இல்லாமல் ஈயடித்தது. சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் சன்னிவேல் அபார்ட்மெண்டுகளில் 'வறுமையின் நிறம் சிவப்பு" கமல் ஸ்டைலில் வாழ்ந்தார்கள். வால்மார்ட்டிலும், மெக்டொனால்டிலும் 8$ க்கு வேலை பார்த்தார்கள். ஸ்டாக் மார்க்கெட்டுகளில் ஏகப்பட்ட பணத்தை இழந்த ஓரளவு வசதி படைத்தவர்கள், தெனாலிராமன் வளர்த்த பூனை போல முடங்கிக் கிடந்தார்கள். பஸ் ஸ்டாண்டுகள் இந்திய மென்பொருளாளர்கள் இல்லாமல் வெறிச்சிட்டன.

பொருளாதாரம் மெதுவாக மீண்டெழுந்தாலும், முழுவீச்சில் இன்னமும் சோம்பல் முறிக்கவில்லை. போன வாரத்தில் வந்த job report மறுபடியும் ஸ்டாக் மார்க்கெட்டை கொஞ்சம் கீழே தள்ளி இருக்கிறது. வீரப்ப நெருப்பில் நேற்று இணையம் வெந்து கொண்டிருந்தபோது, நண்பன் பேசினான்.

பச்சை அட்டை sponsor செய்வதில்லை என்ற கடந்த இரண்டு வருடங்களில் எடுக்கபட்ட முடிவை சிஸ்கோ வாபஸ் வாங்கி இருக்கிறது. ஏறக்குறைய 25000 ஊழியர்கள் பணிபுரியும் சான்ஹோசே அலுவலகத்தில் எண்பது சதவீதத்துக்கும் மேற்பட்டொர் இந்தியர்கள் மற்றும் சீனர்கள். இந்த முடிவு அவர்கள் வயிற்றில் பீர் வார்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த முடிவு இன்னமும் இரண்டு வாரங்கள் கழித்து எடுக்கப்பட்டிருந்தால், என் நண்பன் சிஸ்கோ லண்டன் கிளைக்கு சென்றிருப்பான். ஏனெனில் ஹெச்-1 விசாவில் இங்கே வேலை செய்ய வந்த அவன் காலக்கெடு - ஆறு வருடம், முடிவதாக இருந்தது. வாங்கிய காரையும், மற்ற மதிப்பு மிக்க மற்ற சாமான்களையும் விற்றுவிட்டு போக நேர்ந்திருப்பதை பற்றி விசனப்பட்டுக் கொண்டே இருந்தான்.

இந்த முடிவுக்கு இன்னொரு முக்கிய காரணம் - ஊழியர்களுக்கு வழங்கப்படும் கம்பெனி பங்குகள் இனி கம்பெனி செலவுக்கணக்கில் ஏறப்போகின்றன. இதன் விளைவால், இனி பங்கு விலைகள் முன்னைப்போல வானளாவி வளராது. அதன் விளைவால் ஏகபட்ட ஊழியர்கள் விலகுவார்கள் என்று நிர்வாகம் எதிர்பார்ப்பதால், ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களையும் விட்டு விடக்கூடாது என்று சமயோசிதமாக முடிவெடுத்திருக்கிறார் ஜான் சேம்பர்ஸ். இவர்தான் கம்பெனியின் C.E.O. உதாரண CEO என்று அமெரிக்காவில் பாராட்டப்படுகிற இவர், கம்பெனியை பழைய நிலைக்கு கொண்டு வரும் வரை $1 மாதச்சம்பளம் போதும் என்று உறுதி பூண்டிருக்கிறார். இவரைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

சிஸ்கோ நண்பர்களுக்கு இது நிஜமாகவே ஒளிமிகுந்த தீபாவளிதான்.

வாழ்த்துக்கள்.

பி.கு :

காணாமல் போன கும்மோணம் வெங்கட்டு மறுபடியும் இங்கே.

Wecome back Venkat.

Tuesday, October 19, 2004

எல்லாமே அரசியல் ....ச் சே..!!

சந்தனக்கடத்தல் வீரப்பன் பற்றிய பதிவுகளும், அவைகளுக்கான எதிர்வினைகளும் மிகுந்த ஆயாசம் அளிக்கின்றன. கருணாநிதி-ஜெ வைக் கொண்டு வராமல், இனிமேல் நாம் எந்த விஷயத்தயும் பார்க்கவே முடியாதோ என்று கலக்கமாக இருக்கின்றது.

இறந்தவன் ஒரு கொலைகாரன். யானைத் தந்தங்கள திருடத்தொடங்கி, சந்தன மரத்தில் வளர்ந்து, ஆள் கடத்தலில் முற்றி, இப்போது இறந்து போயிருக்கிறான். இப்படி அவன் ஆனதற்கு எந்த விதமான காரணங்களும் இருந்து விட்டுப் போகட்டும். காரணங்கள், அரசியல் தவறுகள், தொடர்புகள் எல்லாம் அவனை, அவன் செயலை புனிதப்படுத்தி விட முடியாது. ஏன் உயிரோடு பிடிக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி. உயிரோடு பிடித்து அவனை என்ன செய்யப் போகிறீர்கள்..?? நாட்டுக்கு கொண்டு வந்து அவனிடம் பேட்டி எடுப்பீர்கள். போட்டோ பிடிப்பீர்கள். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்பீர்கள். அவன் குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளை தாக்குவீர்கள். அவன் தாக்கும் நடிகைகளை பேட்டி காண்பீர்கள். இதுவே மிச்சம்.

அவன் செத்த பாம்பாக இருக்கலாம். ஆனால் பாம்புதான். அவன் காவிரிக் காப்பாளானாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதே, ஓடி ஒளிய தெம்பில்லாமல் நாட்டுக்குள் வர விரும்பியதால்தான். ரத்தம் சூடாக இருக்கும்போதெல்லாம் படுபாதகம் செய்து விட்டு, ரத்தம் சுண்டிப்போனவுடன்
மீடியா உதவியுடன் புனித வேடம் போட்டு விட முடியாது. தண்டிக்கப்பட
வேண்டியது அரசியல்வாதிகள் என்றால் தேர்தல் மூலமாக அவர்களை தண்டியுங்கள். பொது மக்கள் புறக்கணிப்பை ஒருமுனைப் படுத்துங்கள். வனத்துறையை களை எடுங்கள். பத்திரிக்கை ஆசிரியர்களை எழுதுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

நடந்தது சட்ட நடவடிக்கை. செத்தது ஒரு கொலைகாரன். சமூகவிரோதி. துப்பாக்கி ஏந்தியவன். கெட்ட வழியில் சம்பாதித்த பணத்தை மலைவாழ் மக்களுக்கு தூவி, அவர்கள் துணையுடன் வாழ்ந்து வந்தவன். அவனுக்கு துப்பாக்கிதான் பதில் சொல்லவேண்டும். வீரப்பன்கள் உருவாவதை தடுக்க, பெரிய அளவில் மாற்றம் வேண்டும். ஆனால் அம் மாற்றம் வரும்வரை உருவானவர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

விஜயகுமாருக்கு ஜே. தமிழக அரசுக்கு ஒரு சபாஷ்.

Monday, October 18, 2004

பழையமுது


தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தமிழை ஆட்சி மொழியாக்கும் யத்தனம், கருணாநிதிக்கு "செம்மொழி செவ்வேல்" பட்டம், ராமதாஸுக்கும் , ஏ.கே மூர்த்திக்கும் செம்மொழிப் போராளி பட்டம் என்றெல்லாம் செய்திகள் பறந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் இந்த மடலை பழைய ராயர் காப்பி க்ளப்பில் படிக்க நேர்ந்தது. எல்லே சீனியரின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையின் இன்னொரு எடுத்துக்காட்டு இது.

coll_3

ராஜாஜி: இன்னிக்கு நாம பேசப்போற சமாசாரம் என்னன்னா, ராயர் கிளப்புல சமீபத்துல கேட்ட இரண்டு கேள்விகள் பத்தி. அதுல நம்மஸ்டாண்டு என்னன்னு விவாதிக்கலாமா?

பெரியார்: ஆச்சாரியரே...ராயர் கிளப்பா? பிராமணாள் ஓட்டலா?பை கிராப்ட்ஸ் ரோடுலதானே? நான் அடிச்ச தார் கரைஞ்சு போச்சா?

ராஜாஜி: நாய்க்கர்வாள்..இது வேற கிளப்பு. அந்த பழைய பிரச்னையே இன்னொரு நாள் பேசலாம்..

அண்ணா: மூதறிஞர் கேள்வியைப் பற்றி சொல்லட்டும்.

ராஜாஜி: மொதல் கேள்வி, மத்தள ராயர் சொல்லாராய்ச்சி இங்கவேணாம்னு சொல்லிட்டு, அதே சூட்டுல ஒரு இங்லீஷ் வார்த்தைக்கு தமிழ்ல என்ன அர்த்தம்னு கேக்கலாமா?

பெரியார்: வெங்காய ஆராய்ச்சி...இங்க்லீஷை படிச்சு முன்னேறுங்கடான்னாதமிழ்ல என்னன்னு நோண்ட்டுரானுக..

அண்ணா: அப்படி அசட்டையாக இருந்திடல் தவறு. தமிழில் தக்க சொல்காணல் தலையாயது. ஆராய்ச்சி வேண்டாம் என்று அவர் சொன்னது உரையாடலில் ஆங்கிலச் சொற்கள் சில வருமாயின்,அவற்றை ஆய்ந்துகொண்டிருந்தால் உரையாடல் தடைப்படும் என்பதால். தம்பி கருணாநிதிகூட அவரை போலீசு கைது செய்ய வந்தபோது, "அரெஸ்ட் வாரண்ட்இருக்கா"ன்னு தான் கேட்டார். "குற்றமென்ன செய்தேன் கொற்றவனே,குற்றமென்ன செய்தேன்? கைது செய்ய அனுமதிப்பத்திரம் உள்ளதா"ன்னுகேட்கவில்லை. இடம், காலம், ஏவல், பொருள் கருதி ஆங்கிலம்பயன்படுத்துதல் தவறல்லவே. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டல்லவா? மற்ற சமயத்தில் ஆங்கிலத்துக்குதக்க தமிழ்ப் பொருளை, சொல்லைத் தேடுவது பயனளிக்கும்.

ராஜாஜி: வாஸ்தந்தான்...பெளராணிகர் கதை சொல்றப்போ "கைகேயிசொன்னதைக் கேட்டு ராமனோட பேசியல் எக்ஸ்பிரசன் மாறிடுத்து"ன்னா,பேசாம கதயக் கேக்கணுமே தவிர எக்ஸ்பிரசன்னா என்னன்னு சப்ஜெக்டைமாத்தப்படாதுங்கறேள். மத்தபடி ஒரு வார்த்தைக்கு நல்ல தமிழ் வார்த்தைதேடறது நல்லதுதான். சோசியலிசத்தை நான் அபேதவாதம்னு தமிழ்லமொழிபெயர்த்திரிக்கேன்.

பெரியார்: அதை எத்தனை பேர் சொல்லப்போறாங்க..இது வேலையத்தவன்செய்யறதுன்னா...

அண்ணா: தமிழில் தக்க சொல்லைத் தேடுவது தவறல்ல. மக்கள் முன்அதை வையுங்கள். பிடித்தால் எடுத்துக் கொள்வர்.

ராஜாஜி: சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்...

அண்ணா: ஆம். தக்கன தழைக்கும், தகாதன தொலையும்..

ராஜாஜி: இப்ப ரெண்டாவது கேள்வி என்னன்னா, சினிமா பார்க்கறச்சேவாயப்பொத்திக்கிட்டு கேட்கிறவன், வெளியில வந்து சினிமால தமிழ்ப்பாட்டைக்கொலை செய்யறான்னுகத்தறாங்க, எழுதறச்சே ஆங்கிலம் கலந்து எழுதி கொலை செய்வது தெரியவில்லை?

பெரியார்: சினிமாவையே ஒழிக்கணும்னு சொன்னேன்..பாட்டு புரியாதபோனதுக்கு அந்த அய்யருதான் காரணம்....கேரளநாட்டு இளம்பெண்ணோட சுந்தரத் தெலுங்குல பாடிக்கிட்டுதோணி¢ல போகணுமாம்..என்னிக்கி மலையாளத்துக்காரி தெலுங்கு கத்திக்கிட்டு பாடி இவருபுரிஞ்சிக்கப்போறாரு... ஆனா இதை சினிமாக்காரன் புடிச்சிக்கிட்டான். எவன் எதைப்பாடறதுன்னு வரைமுறைஇல்லாம போச்சு.துனிந்த பின் மனமே துயரம் கொல்லாதேன்னு கண்டசாலா பாடுராரு.வண்டி வருது ருக்குமிணி ஓரம்போன்னு பாடறான். நான் என்ன சொல்லியும் இவனுக திருந்தாம ஓரமாப்போன்னுசொல்லலாமா? தீண்டாமைதப்பில்லயா?

ராஜாஜி: எனக்கும் சினிமாவே பிடிக்காது. வேணுதான் பிடிவாதம்மாசம்பூர்ண ராமாயணம் பாக்க அழைச்சிண்டு போனான்..ஒரே கேலிகூத்து..எப்பேர்ப்பட்ட மகா காவ்யம் அது.. சக்ரவர்த்தித் திருமகனோட சரித்திரம்..அதைப்போய் சினிமா கூத்தாடிகள் கெடுத்துண்டு...ரசாபாசம்..

அண்ணா: கம்பரசம் பற்றி நான் எழுதியதை இங்கு குறிப்பிட்டு உங்கள் மனதை நோகடிக்க விரும்பவில்லை..செம்மையாகதமிழறிந்தவர் தெள்ளுதமிழில் பேசி, பாடி, ஆடி திரைப்படத்தில்நடித்த காலம் நடிப்பிசைப் புலவர் இராமசாமியுடன் நடிகை பேரழகி பானுமதியுடன், பழங்கதையாய்,வெறுங்கனவாய், புதைந்த நாகரீகமாய், கடலில் மூழ்கிய தமிழ் இலக்கியமாய், காற்றில் பறந்த மூக்குபொடியாய்போய்விட்டது. கொச்சைத்தமிழில் பேசுவதை, பாடுவதை மக்கள் இன்று இச்சையுடன் இரசிக்கிறார்கள். தமிழ்கொச்சையானாலும் பச்சையாக மங்கையின் கச்சையே இவர்கள் கண்களுக்கு படுவதால் படம் பார்க்கும் போது மொழியைப்பற்றி இவர்கள் லச்சைப்படுவதில்லை. ஆனால் காட்சியின்று குரல் மட்டும் கேட்கும் காலத்து தமிழ்க்கொலைஉறுத்துகிறது. எழுத்தில், ரேசரால் தாடியை ஷேவின்னான் என்றால் உறுத்துகிறது. ஆயினும் அவசர யுகத்தில் மின்மடல் காலத்தில் கொஞ்சம் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது ஆங்கில மோகத்தால் அல்ல,தமிழறிவுக் குறைவால். சினிமாவிலேயே ஐம்பது கேஜி தாஜ்மகல், பாக்சில் வந்த கவிதை என்று கேட்கும்போது,மனம் நொந்து போய் யாழெடுத்து யாரேனும் இன்பம் சேர்க்க மாட்டார்களா என்றே தோன்றுகிறது.

பெரியார்: சினிமாக்காரன்னா மக்களுக்கு பிரமை பிடிச்சிருச்சி..அவன் என்னா பண்றான்..எங்க போறான்னு பாக்கறானுக..கிசுகிசு எழுதறான்..

அண்ணா: என்னைப்பற்றியும் கிசுகிசு சொன்னார்கள். எனக்கும் கானி இளம் மானுக்கும் என்ன உறவென்றார்கள். நான்சொன்னேன்," " என்று.

ராஜாஜி: கர்மம்..கர்மம்.. அது கெடக்கிட்டம். கிளப்புல சின்னப்பசங்ககாதுல விழ வேண்டாம். என் முடிவு என்னன்னாபேசற தமிழ் மணிப்பிரவாளமா இருந்தா பாதகமில்லே. "ஷப்தஜாலம் மாகாரண்யம் சித்த பிரம்மன காரணம்"னான்காளிதாசன்...வார்த்தைகள் பெரிய காடு மாதிரியாம், மனுசனுக்கு பைத்தியமேபிடிச்சிருமாம். நன்னா புரிஞ்சிக்க ஒண்ணு ரெண்டு வார்த்தை இங்க்லீஷ் மிக்ஸ் ஆனா தப்பில்லே. மாறுதல் சகஜம்.

பெரியார்: வெங்காயம். என்ன மாறுதல் ? நான் அம்பது வருசமா பேசி இப்பத்தான் லை, னை போடக்கத்துக்கிட்டிருக்கானுக.. 'ளை'ய தனிக்குவளைல வெச்சிட்டான். இன்னம் ஒத்தை கொம்பு, ரெட்டைக் கொம்பு, மூணுகொம்பு, பட்டைனு போடரத விடல. என் கச்சிய நடத்தறவர் பாத பூஜைக்கு போயி அன்னதான லைன்லநிக்கராரு.. இவங்க எப்ப தேறி தமிழும் தமிழனும் உருப்பட்டு...

அண்ணா: நெஞ்சம் தளர்ந்திட வேண்டாம். நஞ்சு நிறைவஞ்சகர் தமிழை மஞ்சத்துப் பஞ்சென நினைத்து ஊதிடினும், கிஞ்சித்தும்வஞ்சமின்றி அது வளர்ந்து பஞ்சமின்றி நெஞ்சு நிறைக்கும். தமிழ்விஞ்சாதென அஞ்ச வேண்டா.ஆங்கிலம் கலக்காமல் எழுதிட, பேசிட முயலவேண்டும்.சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கமன்றோ...ஆங்கிலம் கலந்த பேச்சு அடிமைப்புத்தியை காட்டுகிறது.தமிழறிஞர்கள் நல்ல தமிழ்ச்சொற்களை தருவது மனத்துக்குஇதமளிக்கிறது. அவர்தம் பணி தொடரட்டும்.
மன்னிக்க வேண்டும் எனக்கு நேரமாகிறது. ஜெண்டில்மேன்,லவ் ஸ்டோரி, பிரண்ஸ் , டார்லிங், ஐ லவ் யு டா தமிழ்ப்படங்களுக்கு அப்புறம் இப்போது "சீமாட்டிசாட்டர்லேயின் காதலர்களை" ஒட்டி தயாரிக்கப்பட்ட "ஹாய், நாட்டி கேர்ல்" படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்கப்போகவேண்டும். விடை பெறுகிறேன். வணக்கம்.

ரா.கா.கி யில் உள்ள இது மாதிரி சுவையான படைப்புகளை எல்லாம் எடுத்து, யுனிகோடுக்கு மாற்றி ஏதாவது ஒரு தளத்தில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆவல். மரத்தடி.காம் மற்றும் திண்ணைக் களஞ்சியத்தை படிக்கும் போதெல்லாம் எழும் பெருமூச்சு, மேற்சொன்ன ஆசையின் பாற்பட்டதுதான் என்றுணர எனக்கு நெடுங்காலம் ஆகவில்லை. நேரம் கிடைப்பதுதான் அரிதாயிருக்கிறது

Thursday, October 14, 2004

புரியாத புதிர்

amma

அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஊரிலிருந்து அடிக்கடி தன் தாய் தந்தையர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவது வழக்கம். இரண்டு பேர் வேலைக்குப் போவதால், இவர்கள் வந்திருக்கும் நேரமாவது குழந்தையை சரியாக கவனிக்கலாம் என்றோ, மனைவியின் பிரசவத்துக்கு ஒத்தாசையாக இருக்கும் என்றோ பெரும்பாலானவர்கள் நினைப்பதால், இது அடிக்கடி நிகழும் செயல் இங்கே.

போன வாரம் என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் மாமியார் ஊரிலிருந்து வந்திருந்தார். நாங்கள் ஏதோ முக்கியமான விஷயங்கள் - புது வீடு சம்பந்தப்பட்டது - பேசிக் கொண்டிருக்க, நண்பரின் மாமியாரும் அந்த சம்பாஷணையில் கலந்து கொள்ளும் பொருட்டு தன் கருத்தையும் சொல்ல, அவர் மகள், " நீ சும்மா இரும்மா..நடு நடுல பேசாதே " என்று அதட்டிக் கொண்டும், எரிந்து விழுந்து கொண்டும் இருந்தார். எனக்கு பாவமாக இருந்த போதும், என் மனசுக்குள் என் தாயாரை எப்படி நடத்துகிறேன் என்பதும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

வயதாகிப் போனதினால் வரும் அலட்சியத்தையும், தலைமுறை இடைவெளியையும் ஆண்கள் மிக இயல்பாக கடந்து விட்டு, டிப்ளமாட்டிக் ஆக, ஒதுங்கிக் கொண்டாலும், இந்த அம்மாக்கள் மட்டும் எல்லா இடங்களிலும் அல்லல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். உள்ளுக்குள் அம்மாமீது எத்த்னை பாசம் இருப்பினும், வீட்டில் நடக்கும் முக்கியமான காரியங்கள் மீதான முடிவுகள் அவர்கள் பேச்சைக் கேட்டே எடுக்கப்படினும், அவர்களை சரியாக உபயோகித்துக் கொண்டு, மற்ற நேரங்களில் அவர்களை கண்டுகொள்ளாத கல் நெஞ்சர்களாகத் தான் இருக்கிறோம். மையப்புன்னகை புரிந்து கொண்டு அப்பாவும் மாமனாரும் ஒதுங்கி விட, இந்த அம்மா/மாமியார் ஜென்மங்கள் தான் எல்லாவற்றிலும் தலையை விட்டுக் கொண்டு, யாரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் நடுவில் இருந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஒன்றிருக்கிறது. குழந்தைகள் வளர வளர, பெண்கள் தங்கள் கவனத்தை எல்லாம் குழந்தைகள் மீது திருப்புகிறார்களே ஒழிய, கணவன்மார்கள் அவர்கள் கவனத்தில் இருந்து காணாமல் போய் விடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து குழந்தைகளின் கவனம், அவர்கள் படிப்பு, முன்னேற்றம் சார்ந்தும், அவர்களுடைய வாழ்க்கைத்துணை சார்ந்தும் வேறு திசையில் பயணிக்கிறது. அம்மா என்கிற உறவுக்கு அத்தனை முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இந்த விலகல் தெரிந்து நொந்து போகும் தாய்களை, அவர்களால் முன்னர் புறக்கணிக்கப்பட்ட அவர்கள் கணவர்கள் பழைய நேசத்தோடு அரவணைப்பதில்லை. " என்னை உட்டுட்டு ஓடினியே பசங்க பசங்க ன்னுட்டு..இப்ப என்னாச்சு பாத்தியா...வாடி..வா.." என்ற ஒரு வித இளக்காரத்துடன்தான் வயதான காலத்தில் அணுகுகிறார்கள். இதைத் தவிர்க்க, அம்மாக்கள் ஆதி காலத்திலிருந்தே குழந்தைகளும் கணவனுக்கும் நடுவே ஒரு மாதிரி பேலன்ஸ் செய்து கொண்டால், கதைகளிலும் , கவிதைகளிலும், சினிமாவிலும் "பாடல்" பெறுவது மட்டுமின்றி நிஜமாகவே சுய கெளரவத்துடன் நிம்மதியாக இருக்கலாம்.

என்னவோ எழுதிட்டேனே ஒழிய, அடுத்த முறை அம்மாவைப் பாக்கும்போதுகூட என்னுடைய வழக்கமான அராஜகம்தான் தொடரும்னு தோணுது. எனக்குத் தெரிஞ்சு அரசியலில் மட்டும்தான் "அம்மா" அராஜகம். மற்ற இடத்தில் எல்லாம் பிள்ளைகள்தான்...!!!


Wednesday, October 13, 2004

தமிழகம் இழந்த தலைவர் - கர்மவீரர் காமராஜர்

இந்தப் படம் பார்த்து முடிப்பதற்குள், பலமுறை கண்கலங்கி, பேசக்கூட முடியாமல் தொண்டை அடைத்து விட்டது. சிறு வயதில் சிவாஜி படங்களை பார்க்கும்போது இம்மாதிரி நேர்ந்ததுண்டு. ஆனால் ஒன்றுமறியா வயதில் நடிகனைப் பார்த்து உணர்ச்சி மேலீட்டில் விசனப்பட்டதற்கும், இத்தனை முதிர்ந்து, இந்தப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்டதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருந்தன.

k_kamaraja

படம் பார்க்கும்போதே என் மனைவியிடம் சொன்னேன் " இத்தனை விஷயங்களும், திரைப்படத்திற்காக மிகைப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டிராமல், உண்மையாகவே நடந்திருந்தால், காமராஜ் கடவுள்" என்று. உண்மைதான். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் " ஆஹா..இம் மாதிரி ஒரு ஆள், இன்று இல்லாமற் போனாரே" என்ற ஏக்கத்தை உருவாக்கி, தமிழகத்தின் இன்றைய அரசியல்வியாதிகளை எண்ணி பெருமூச்செறிய செய்தது.

படத்தில் எனக்கு நெருடலாகத் தோன்றிய விடயம், காமராஜ் தான் பதவியை விட்டு விலகி, திரு.பகதவச்சலம் அவர்களை தமிழக முதலமைச்சராக்கிய நிகழ்வுதான். அவர் ஆட்சியில்தான் அரிசிப்பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் வெறுப்பு 1967 தேர்தலில் எதிரொலித்ததாக அறிகிறேன். மேலும் நேரு குடும்ப விசுவாசம் காரணமாக், இந்திரா அம்மையாரை உயர்த்தி விட்டு, பிறகு அவராலேயே "காமராஜரா..யார் அவர்" என்று கேட்கப்படும் காட்சி எல்லாம், அரசியல் அரங்கில் காமராஜருக்கு இருந்த நேர்மை மட்டும் போதவில்லை என்று கசப்பாக நிரூபணம் செய்தது.

இன்னொரு அதிர்ச்சியான தலைவர் சித்தரிப்பு ராஜகோபாலாச்சாரியடையது.
படத்தில் அவர் தோன்றும் காட்சிகளும், உதிர்க்கும் கருத்துகளும், பொது மேடையிலேயே காமராஜருக்கும் அவருக்கும் ஏற்படும் பேதங்களும் தைரியமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவர் மூதறிஞராக இருக்கட்டும், பெர்ரிய அறிவாளியாக இருக்கட்டும், இத்தகைய குணத்துக்காக அவர் தமிழக அரசியல் வரலாற்றில் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்.

திராவிட அரசியலையும் படம் தோலுரிக்க தயங்கவில்லை. அவ்வபோது கரகரத்த குரலில் கேட்கும் அண்ணாவின் குரலும், இன்றைப்போலவே அன்றும் அடுக்குமொழி பேசிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பேச்சும், சாராயக்கடையில் ஒலிக்கும் பராசக்தி பாடலும், செயல்வீரர் தலைமையில் செழிப்புற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை, வேறு பாதைக்கு இட்டுச் செல்கின்ற, சினிமாக்கார முகங்களை வைத்து ஏமாற்றுகின்ற மோடி வித்தைகளுக்கு சொந்தக்காரர்களாக காட்டுகிறது.

இந்தியா செல்லும்போது, காமராஜர் பற்றிய நாகூர் ரூமியின் புத்தகத்தையும், சன் டீவி வீரபாண்டியனின் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று உறுதி கொள்ள வைத்த அருமையான படம் இது. நண்பர்கள்
வேறெந்த புத்தகத்தையும் சிபாரிசு செய்தாலும் நன்றி .

விளம்பர நேரம்

காதுகளில் தேனாகப் பாயும் குரலோசை...

எந்த கரகரப்பும் எதிரொலியும் இல்லவே இல்லை.

விலையோ குறைவு. பலனோ அதி உன்னதம்.

உங்களுக்குத் தெரியுமா...

இங்கே சொடுக்குங்கள்....

இந்தியாவுக்கு ரிலையன்ஸின் குறைந்த விலை தொலைபேசி சேவை...

திருபாய் அம்பானிக்கு ஜே....

Sunday, October 10, 2004

சலாம் பாம்பே - மீரா நாயர்

பத்திரிக்கைகளிலும், பெரியவர்கள் சொல்லியும் கேள்விப்பட்ட படம். இன்று டிவிடியில் பார்த்தேன்.

salaam_bombay
ஆதரவற்ற குழந்தைகளை பற்றிய சித்தரிப்பில், நந்தா, புதிய பாதை, அன்று உன் அருகில், நாயகன் போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடி இது. பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்ற "ப்ழைமை" வாசனை கொஞ்சமும் அடிக்காமல், இன்று அந்தப் படத்தை ஒட்டிப் பார்க்க முடிந்தது எனில், வந்த காலத்தில் எத்தனை ஃப்ரெஷ்ஷாக இருந்திருக்கும் இந்தப் படம்..??!!!.

கையில் இருக்கும் பணத்தை ரயில்வேஸ்டேஷன் கவுண்டரில் கொடுத்து, அருகில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு பெரிய நகரத்துக்கு டிக்கட் தருமாறு கேட்டு சிறுவன் கிருஷ்ணா வந்து இறங்கும் ஊர் பம்பாய். துயரத்தோடு தெருவில் நின்று சதை விற்கும் கிராந்த் ரோட்டு விலைப்பெண்களுக்கு டீ எடுத்துத் தரும் வேலை. நடுவில் அவன் சந்திக்கும் அவன் வயதொத்த தெரு நண்பர்கள், போதை விற்று கடைசியில் போதையாலேயே செத்துப்போகும் "சில்லம்" , "வேலை" பார்க்கும் அம்மாவை தொந்தரவுபடுத்தாமல் வெளியே விளையாட அறிவுறுத்தப்படும் மஞ்சு, கூட்டிக்கொடுக்கும் தொழிலோடு போதை தலைமை வேலை பார்க்கும் பாபா, எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டு 'சீல்' உடைக்காமல் ஒரு கிழவனுக்கு விற்கப்படும் ஸ்வீட் சிக்ஸ்ட்டீன், என்று பலவகை மக்களின் நடுவே வாழும் கிருஷ்ணா, கடைசியில் கிராமத்துக்கு போவதற்காக தான் வைத்திருக்கும் பணத்தையும் பறிகொடுத்து, குற்ற நிழலில் முழுதாக ஒதுங்கி, ஒரு கொலையையும் செய்துவிட்டு, திண்ணையில் ஒதுங்கி அமர்ந்து அழத்துவங்கும்போது படம் முடிகிறது.

salaam

படம் பார்க்கும் உணர்வே இல்லை. பாத்திரங்களுக்கு அநாயாசமாக பொருந்தி இருக்கும் குழந்தைகளும், நடிகர்களும், காமத்திபுராவின் அழுக்கு சந்துகளிலும், கோழி வெட்டும் கடைகளிலும், குறுகலான ரேழியோடிய வீடுகளுக்குள்ளும், நூறாண்டு பழைமை மற்றும் துயரத்தோடு அழுது வடிந்து நிற்கும் வீடுகளிலும், கிட்டத்தட்ட ரியாலிடி ஷோ ரேஞ்சுக்கு வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

வசனம் அதிகம் இல்லை. இயல்பான காட்சி அமைப்பிலும், எல்.சுப்ரமணியத்தின் இசையிலும் அழகாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் மீரா. தெருக்களும், குறுக்கே நெடுக்கே போகும் மின்சார ரயில்களும், படத்தில் நடித்திருக்கின்றன. நமக்கு இன்று நடந்திருக்கும் நல்லவைகளுக்கெல்லாம், நிஜமாகவே புண்ணியம் பண்ணி இருக்கிறோம் என்ற எண்ணமும், வாழ்கின்ற வாழ்க்கையின் தரமும், இந்தக் குழந்தைகளை பார்க்கும்போது சுளீரென்று தாக்கியது.

எந்தரோ மகானுபாவலு...அந்த்தரிகி வந்தனமு....!!!

Friday, October 08, 2004

ஜூனியர் பாலையா vs வையாபுரி

bush

அமெரிக்க தேர்தல் வழக்காடு மன்றத்தின் இரண்டாவது சுற்று பார்த்து விட்டு வந்து சுடச்சுட எழுதுகிறேன். மீடியா மொத்தமும் அடுத்த புதன் வரை இதைத் தான் பினாத்திக் கொண்டு இருக்கப்போகிறது. அவர்கள் கருத்தினால் பாதிக்கப்படும் முன், என் 100% சொந்தக் கருத்து இது:

முதல் முறை சொதப்பியது போல புஷ் அவ்வளவாக சொதப்பவில்லை எனினும் அவருடைய சில குறைபாடுகள் இன்னமும் நீங்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது. காட்டாக, கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் குரலை இழுப்பதும், சர்ச்சையான கேள்விகளை எதிர்கொள்ளும்போது அவருடைய "கார்ட்டூன்" ரெஸ்பான்ஸ்களும், ஒரு அமெரிக்க அதிபருடையதாக அல்லாமல் முதிர்ச்சி அற்றதாக இருந்தது. பாதி நேரம் கெர்ரி வையாபுரியின் குற்றசசாட்டுகளை சமாளிக்கவே நேரம் இருந்ததே ஒழிய, அவரை தாக்க பாலையா புஷ்ஷுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

kerry

எத்தனை பிரச்சினைகளை பேசினாலும் இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போவது ஈராக்..ஈராக்...ஈராக். அதை கெர்ரி சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளும் வரை வெற்றி அவருக்குத்தான்.

தவிரவும் Tax Cut யாருக்கு உபயோகமளிக்கிறது என்பதிலும், லேடனை இன்னமும் பிடிக்க முடியவில்லை என்பதிலும், உலகளவில் அமெரிக்காவிற்கு எதிரான மனோபாவம் வளர்ந்திருப்பதற்கும், Bunker Buster வகை நீயூக்ளியர் குண்டுகளை நாம் உருவாக்கிக் கொண்டு, உலக நாடுகளுக்கு அணு ஆயுத விடயத்தில் அறிவுரை வழங்க முடியாது என்பதிலும் புஷ்ஷை எதிர்த்து கெர்ரி வைத்த கருத்துக்கள் நியாயமாகவே இருந்தன.

ஈராக் - அதுதான் இந்த அமெரிக்க தேர்தலின் மந்திர வார்த்தை. மறைமுகமாக சதாம் இந்த விடயத்தில் புஷ்ஷை ஜெயித்து விட்டதாகத் தான் தோன்றுகிறது.

பார்ப்போம்...அடுத்த மோதல் ....... அடுத்த புதன்...


எங்கே செல்லும் இந்தப் பாதை ....

எச்சரிக்கை :

முழுக்க முழுக்க இது என் சொந்தக்கதை. கிட்டத்தட்ட என் Resume வின் தமிழாக்கம். வேறு உருப்படியான வேலை இல்லாதவர்கள், "ஒரு விளையாட்டுப் பையன் வளர்ந்த கதை" யை படிக்க வேண்டுமானால் உள்ளே போகலாம். மீறி நுழைந்து வருத்தப்பட்டால், நான் ஜவாப்தாரி இல்லை.

%%%%$$$$?????@@@@@*********%%%%%%

அம்பத்தூர் தொழிற்பேட்டையில், திருமங்கலம் முக்கில் இருந்து நேராக உள்ளே போனால், எலெக்ட்ரா பவர் சப்ளை சிஸ்டம்ஸ் இன்னம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு லேத் பட்டறை சைஸ்தான். உள்ளே பீரோ பீரோவாக, டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் உபயோகப்படும் பேட்டரி சார்ஜர்களை தயார் செய்து கொண்டிருப்பார்கள். ரோட்டிலிருந்து கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும், சுண்ணாம்பு கற்கள் வழி எங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கம்பெனிதான் என் முதல் கம்பெனி.

காரைக்குடி எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு, பாட்டும், கூத்தும், கலாட்டாவும், பத்திரிக்கைப் பணியும் பண்ணியது போக மிஞ்சிய கொஞ்சூண்டு நேரத்தில் படித்து, நான் சேர்ந்த முதல் வேலை. இப்போதைய என் ஒரு மணி நேர சம்பளத்தை விட மிகக் குறைந்த மாதச்சம்பளம். அப்போது அது எனக்கு ஒரு பொருட்டில்லை. ஏனெனில் சம்பளத்துக்காக நான் வேலை பார்க்கவில்லை அப்போது. மேஜர் ஆகி, கல்யாணத்துக்கு காத்திருக்கும் மகளை பார்த்தால் எத்தனை கலவரம் பெற்றவர்களுக்கு வருமோ, அதைப் போலவே படித்து வேலைக்கு காத்திருக்கும் மகனைப் பார்த்தாலும் வரும் என்ற உண்மை பரிபூரணமாக தெரிந்ததால், பெற்றவர்களின் கண்ணிலிருந்து தப்பினால் போதும் என்ற அவசரத்தில் சென்னைக்கு ஓடி சேர்ந்த வேலை அது. கொஞ்சம் காத்திருந்தால் வேறு ஏதாவது கெளரவமான வேலை கிடைத்திருக்கக் கூடும். ஆனால், பத்து நிமிடம் கழித்து வரும் எக்ஸ்பிரஸ் பஸ்ஸை விட, நகர்ந்து கொண்டிருக்கும் பாடாவதி டவுன் பஸ்ஸில் ஏறும் அவசரக்கார முட்டாள்தனம்..!! கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகே ஜாகை - இப்போதைய "அவள் விகடன்" ஆசிரியர் ம.கா.சியோடு. நூறடி ரோட்டில் 70-ஜெ பிடித்து திருமங்கலம் முக்கில் இறங்கி வேலைக்கு போக வேண்டும்

வேலைக்கு சேர்ந்த பின் தான் கொடுமை தெரிந்தது. டெஸ்டிங் இஞ்சினியர் வேலை. இந்தப் பையன் இங்கே ரொம்ப நாள் தங்க மாட்டான் என்று தெரிந்தே என்னவோ, பிழிந்து தள்ளினார்கள். அப்பா ஒரு நாள் அங்கே பார்க்க வந்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சேர்ந்தால் இளநிலை பொறியாளர் பதவியோடு ஜீப்பும் தருவார்கள் என்று ஆசை காட்டி ஓய்ந்த அந்த மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு, வீம்புக்கு கஷ்டப்படும் தன் பிள்ளையைப் பார்த்து வருத்தமாயிருந்திருக்கக்கூடும். ஒன்றும் சொல்லாமல் ஊர் போய்ச்சேர்ந்தார். அந்த அளவு அரசுப்பணி வெறுப்பு எனக்கு...

ஒரே மாதம் தான் வேலை செய்தேன். அதற்குள் மும்பையில் இருந்த குடும்ப நண்பருக்கு கடிதமெழுதி, அவர் வீட்டுக்கு போய் இறங்கி, நாரிமன் பாயிண்ட் கட்டிடங்களில் ஏறி இறங்கி ரெஸ்யூம் கொடுத்து கிடைத்த அடுத்த வேலை HCL - communication division ல் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலை.
சேல்ஸ் வேலை விட டெக்னிகல் வேலைதான் பிடிக்குமென்றாலும் புவ்வாவுக்கு வழி...?? ஏனெனில் அதற்குள் நண்பரின் வீட்டைத் துறந்து அந்தேரி வெரசோவாவில் தனியே தங்கி இருந்தேன்.

HCL ல் இருந்தாலும், எனக்கு கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்ய விருப்பம். இத்தனை ஐ.டி புரட்சி எதுவும் நிகழ ஆரம்பித்திராத 1993 அது. எனவே கடைசியில் wipro/ ATT dealer ஒருவரிடம் கஸ்டமர் சப்போர்ட் இஞ்சினியராக சேர்ந்தேன். கம்பெனி பெயர் ஏவிசி இன்கார்பரேட்டட். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் வேலைதானே ஒழிய திருப்தியான சம்பளம் ஒன்றுமில்லை. ஆனாலும் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆறுமாதங்கள் வேலை பார்த்த பிறகு Zenith Computer Systems ல் வேலை கிடைத்தது. இது நல்ல நிறுவனம் என்பதால் அதிக சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன், ஹிந்துஸ்தான் லீவர் - சர்ச்கேட் அலுவலகத்தில் ரெஸிடெண்ட் இஞ்சினியராக நியமிக்கப்பட்டேன். கார்ப்பரேட் ஆஃபிஸ் என்பதால், அந்த அனுபவம் எனக்கு பலவகையில் உதவியாக இருந்தது. நடுரோட்டில் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட நாய்க்குட்டி போல மிரள மிரள விழித்த காலங்கள் அவை.

மறுபடியும் அப்பா குறுக்கிட்டார்.

என்னைப் பார்க்க பாம்பே வந்த அவர், அதன் நவநாகரீக வேகத்தில் மிரண்டு போய், " அதான் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்து விட்டதே ..மெட்ராஸ் வாடா" என்று பணித்து விட்டு ஊருக்குப் போனார். வேலை தேடி அடுத்த மாதத்தில் சேன்னை Nexus computers ல் வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்ப கட்ட பயிற்சி முடித்து, திருச்சி கிளைக்கு போஸ்டிங் செய்து, கும்பகோணம் சர்வீஸ் சென்டரை பார்த்துக் கொள்ளச் சொல்லி அங்கே என்னை அனுப்பியபோது வருஷம் 1994. அதன் பின்னர் நெடுதுயில். காரணம் நெக்ஸஸ் சூழ்நிலை. இரண்டாவது கல்லூரி வாழ்க்கையோ என சந்தேக/சந்தோஷப்படும் அளவிற்கு ஏகப்பட்ட இளைஞர்கள். கை நிறைய சம்பளம், போனஸ், வகையறா, சிறிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கிடைத்த கல்லூரி ஸ்நேகிதியின் நட்பு ..இத்யாதி..இத்யாதி.

கிளைத்தலைவர் அமெரிக்க வேலை கிடைத்துப் போனதும், ஸ்நேகிதிக்கு ஆன திடீர் கல்யாணமும் என்னை திருச்சியில் இருந்த கிளப்ப, இவைகளை மறக்க 1998 ல் சென்னை Hexaware Infosystems Ltd ல் சேர்ந்தேன். நந்தனம் சிகனல் அருகே இருக்கும் இவர்களுடைய சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் சென்டர் சிஸ்டம் அட்மின் வேலை. அதுவும் அலுத்து, 1999 மே யில் சிங்கப்பூர். சிங்கப்பூரில் keppel Tatlee Bank / DBS / Chase Manhattan Corp ல் sigmasoft என்ற கம்பெனி வழியாக கன்சல்டண்ட் உத்தியோகம். நடுவே 1999 நவம்பரில் ஒரு வழியாக கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதித்தேன். கல்யாணம் பண்ண சூட்டில் கர்ப்பமாக்கி விட்டு, மனைவியை பிள்ளைப் பேறுக்கு இந்தியா அனுப்பி விட்டு, 2000 ஆகஸ்டில் Covansys Corp ல் சேர்ந்து அமெரிக்கா வந்தபோதுதான், டாட் காம் குமிழி வெடித்து, பொருளாதாரம் தள்ளாடி Rececession ஆரம்பித்து, பின் பின்லேடன் தயவால் அது இன்னமும் பிரச்சினையாகி, ஏகப்பட்ட உருளல்களுக்குப் பின், வீடு வாங்கி, பச்சை அட்டை கிடைத்து, கலிபோர்னியா அரசுத்துறையில் - Calpers சேர்ந்து விட்டு போன வாரம் அம்மாவுக்கு ஃபோன் செய்தபோது சொன்னேன்.

" ஏண்டா...நாங்க சொல்லும்போதெல்லாம் கவர்மெண்ட் வேலை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிட்டு, இப்ப மட்டும் கலிஃபோஓஓ..ர்னியா கவர்மெண்டில வேலைக்கு சேர்ந்திருக்கியே" என்றாள்.

நியாயமான கேள்விதானே...!!!!

Thursday, October 07, 2004

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டி முடிவுகள்

சும்மாவாச்சுக்கும் போட்டி அறிவித்து விட்டு அதைப் பற்றி மறந்து போகாமல், தொடர்ந்து போட்டி நடத்துவதென்பதும், நல்ல விஷயமுள்ள நடுவர்களை அழைத்து, படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவதும் மிக நல்ல விஷயம்.

சமீபத்தில் மரத்தடி போட்டியில் பரிசு பெற்ற கதைகளையும், கவிதைகளையும் மரத்தடி டாட் காமில் படிக்க நேர்ந்தது. போட்டிக்கு வந்திருந்த எல்லாக் கதைகளையும் படித்திருந்திருக்கலாம். படிக்காத காரணம் - விட்டுப் போன கதை படிக்கும் பழக்கமும், சோம்பேறித்தனமும். படைப்புகள் நிஜமாகவே நன்றாகத் தான் இருந்தன. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் பார்வையிலிருந்து தரப்பட்ட அவரது "நடுவர் மடல்" ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் எனினும், கதை படிக்கும் பழக்கமே வழக்கொழிந்து வருகின்ற இந்த அவசர அதிவேக யுகத்தில், கதை எழுத, அதை இத்தனை மெனக்கெடலோடு செய்திருக்கின்ற நண்பர்களுக்கு "என் உயரத்திலிருந்து" வாழ்த்தும் வணக்கங்களும்.

ஜெயஸ்ரீ இத்தனை அப்ஸர்வேஷனோடு, இத்தனை பாசுரம் கலந்து, இப்படி இன்னொரு (பாம்பே)ஜெயஸ்ரீயை துணைக்கழைத்துக் கொண்டு, இவ்வளவு அநாயாசமாக எழுதுவார் என்பது எனக்குத் தெரியாது போயிற்று. அவருடைய ஆரம்ப கால மரத்தடி மடல்களில் டெலிஃபோனில் வம்பளக்கும் ஒரு இன் டெலக்சுவல் மாமியாகத்தான் அறிமுகம் ஆனார். அவருக்குள் இதத்னை படைப்பூக்கம் இருப்பது மிக நல்ல விஷயம். அவருடைய மற்றைய படைப்புகளையும் விலாவரியாக படிக்க எண்ணம். மற்ற படைப்புகளும் இதே சாயலில் இருப்பின், எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். பார்ப்போம். இரண்டாம் பரிசுக் கதை எழுதிய விஜயாலயன், சாதாரண விஷயத்தை எழுதி இருந்தாலும், இலங்கைத் தமிழில், இலங்கை சமூக பொருளாதார விடயங்களயும் அங்கங்கே தெளித்து 'ரவுசு' பண்ணி இருந்தார். மூன்றாம் பரிசுக் கதையின் ஃபார்மட்டே கொஞ்சம் பழகிய ரகமாக தோன்றியதால் உள்ளே போகவே இல்லை. சந்திரசேகரன் கிருஷ்ணனின் கவிதையும், நிர்மலா டீச்சரின் கவிதையும் அசத்தல். கிருஷ்ணனின் கவிதை எளிமையாக இருந்தாலும், நிர்மலாவின் கவிதை - சொல்லப்பட்ட உணர்வு சிக்கலானதால் - கொஞ்சம் பாயை பிராண்ட வைத்தது.

இத்தனை அபாரமாக நடந்த விஷயத்தை நம்ம எம்.கே.கே கடேசியில் சொதப்பி விட்டார். ராமகிருஷ்ணன் நன்றி சொன்ன நண்பர்கள் பெயர் அவருக்கு உறுத்தி விட்டது போல. பாரா வும் , பத்ரியும் உதவி செய்த விஷயத்தை என்னவோ பெரிய சமாச்சாரமாக பேசி விட்டு, இதைப் போல அறிவியல் புனைகதைக்கு இரா.மு உதவுவாரோ என்ற கிளை, நக்கல், குசும்பு
கேள்வி.

அடே ஃபில்டர் காப்பி அம்பி...இரா. மு உதவினால் என்ன தப்புண்ணேன். சுஜாதா உதவி கேட்டு, முருகனும் மனம் உவந்து, செய்தால் மரத்தடி என்ன வேண்டாமென்றா சொல்லும். அப்படி என்ன சென்மப் பகை நமக்குள்ளே...!!!
ஏதோ சில விரும்பத்தகாத சம்பவங்கள், உணர்ச்சி வசப்பட்ட சொல்லாடல்கள், உரிமை எடுத்துக் கொண்டு செய்த சில விஷயங்கள் கடந்த காலத்தில் நடந்திருந்தால், அதையே நினைத்து குத்தி, சொறிந்து, பொருக்குத் தட்டியிருக்கும் காயத்தை ஏன் புண்ணாக்க வேண்டும்.

எம்.கே.கே அம்பி...கொஞ்சம் லேட்டா சொல்லிட்டேண்ணு எனக்கு வருத்தம்தான்.

ஆனா உம்ம மேல இருக்கற அக்கறையில சொல்றேன் நான் ..!!! அந்த வாத்தியத்தை கொஞ்சம் கீழ வச்சிட்டு பேனாவை எடும்.

அது போதும் நோக்கு...!!!

Monday, October 04, 2004

ஹி...ஹி...

images

போலீஸ்காரர் மகளும்
அரசியல்வாதி மகனும்
காதலித்தார்கள்

கல்யாணத்துக்கு
முன்பே அவள்
தொப்பையானாள்

அவன்
கூட்டணியை
முறித்துக்
கொண்டான்.


நன்றி: விகடன் லவ் சேனல்


குறிப்பு :

வேலை ரொம்ப சொமந்து போச்சு கண்ணுகளா...நாளைக்காவது வாறேன்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...