Sunday, March 18, 2007

கார்த்தி வீரன்


பருத்தி வீரன் பார்த்தேன்.
தெக்கத்திச் சீமையின் மண்ணையும், அதன் மணத்தையும், ரத்தத்தையும், வெறியையும், அழும்பையும், நக்கலையும், சாதி வெறியையும் இத்தனை அசலாக சொன்ன படங்கள் மிக குறைவு. மனித நடமாட்டம் இல்லாத அடர் காட்டுக்குள் ஓடிவரும் காட்டாறு மிரட்டலாக தெரிந்தாலும், அதன் தூய்மையும், ஆளாளுக்கு வித்தியாசம் காட்டாமல் எல்லாவற்றையும் புரட்டித் தள்ளி ஓடும் அதன் வெறியும், இதன் நாயகனில்தெரிகிறது.பாரதிராஜாவுக்கும், கமலுக்கும் அடுத்து இதை அசலாக பதிவு செய்த அமீருக்கு ஒரு "ஓ".
வாழ்ந்து காட்டி இருக்கிற எல்லா பாத்திரங்களை விடவும் முத்தழகு அசத்தி விட்டாள். இந்த மாதிரி யாரையும் நம்மால் நேசிக்க முடியவில்லையே என்று பொறாமைப்படவைக்கிற கதாபாத்திரம். இப்படிப்பட்ட நேசத்தைப் பார்க்கும்போதுதான் "தரையில் அழுத்தமாக கால்பாவிக் கொண்டு" இன்னொருவரை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததன் அபத்தம் புரிகிறது. தன்னை மட்டுமே முழுக்க முழுக்க நேசிப்பவர்களால, எல்லா உணர்வுகளுக்கும் கணக்கு கட்டம் போடு சட்டம் கட்டுபவர்களால் வேறொருவரை தன்னை இழந்து நேசிக்க முடியாது. அந்த ரேஞ்சுக்கு நேசிக்க முடிந்தால் ஒருநாள் கூட வாழ்ந்தால் போதும். துரதிர்ஷ்டவசமாக அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. பூச்சுக்கள் அற்று வாழ கற்பிதங்கள் விடுவதில்லை. நம் மனசும் முளையுமே கற்பிதங்களின் மொத்தக் கொத்தினைத்தான் அறிவு என்று நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையான காதல் முத்தழகினைனுடையது போலத்தான் இருக்க வேண்டும். அவள் ஆதங்கம், அலுப்பு, ஆற்றாமை, காத்திருப்பு, காதலுக்காக அரிவாள் தூக்கி அம்மாவை வெட்டப் போகும் வெறி, தனக்காக வீட்டு வாசலில் ரவுசு பண்ணும் காதலனைப் பார்க்கின்ற பெருமையான சிரிப்பு, அவன் "அப்படி இப்படி" இருப்பதைக் கூட அலட்சியப்படுத்தி, கல்யாணத்துக்கு பின் இப்படி பண்ணா வெட்டிப் போடுவன் என்கிற மிரட்டல், ஆண் பிள்ளைத்தனம் கலந்த அந்த தெக்கத்திக் குரல் எல்லாம அச்த்து அச்த்து என்று அசத்துகிறது. இது முத்தழகுவின் படம். முத்தழகையும் வீரனையும் படம் பார்த்த பின்னும் பல மணி நேரம் உள்ளுக்குள் ஊற்றி வைக்கிற அமீரின் அருமையான காதல் படம். விருமாண்டியை விட அசலான பிரதி. கார்த்திக்கின் முதல் படம், அவருடைய இயல்பான நடிப்பு என்பதால், அவருக்கு அதிக வெளிசசம் கிடைத்திருக்கிறது. படத்தின் வர்த்தக கட்டாயங்களால் அமீரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாய் செய்திகள் வந்து கொண்டிருப்பது மட்டும் கஷ்டமாக இருக்கிறது
படம் பார்த்த சூட்டோடு மாலை சன் டீவியின் அன்புடன் நிகழ்ச்சியில் கார்த்தியின் நேர்முகம். பையன் சரியான "பதினாறடி". நல்ல வளர்ப்பின் அடையாளமாக படிப்பும், அத்ன் பயனாய கிடைத்திருக்கின்ற பக்குவமுமாக அசத்தல் பையன். ஒளிவு மறைவில்லாத யதார்த்தமான பேச்சு. நடிகனின் மகனாக வளராமல், வீட்டுக்கு வந்து மேக்கப்பை கழுவவதால் மட்டுமே, அப்பா நடிகர் என்கிற நிஜம் புரிந்த குழந்தைப் பருவம், எது செய்வதாலும் படித்துவிட்டு செய்யுங்கள் என்கிற அப்பாவின் "கல்வியோடு இருக்கின்ற செல்வம் மட்டுமே நல்லது" நம்பிக்கை, சினிமாவில் இருக்கின்ற ஆர்வம் காரணமாக மனசு பூரா சினிமா சினிமா என்று அலமலப்போடு காலடி எடுத்து வைத்திருக்கும் பையன்.
வளர்த்தால் சிவகுமார் மாதிரி பிள்ளை வளக்கணும்யா....!!!!!!!!!

Monday, March 12, 2007

இலவசம் ஏன் - நாகநாதன் விளக்கம்


‘‘இலவசம்... இந்த ஒற்றைச் சொல்தான் தமிழக அரசின் தாரக மந்திரமாக இருக்கிறது. இது அரசின் நிதி நிலையைப் பாதிக்காதா? இலவசங் களை நடைமுறை சாத்தியமாக்க நிதி ஆதாரம் இருக்கிறதா?’’

‘‘இலவசம் என்கிற சொல்லைப் பலர் பலவிதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். நலிந்த பிரிவு மக்களின் நலன்களுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அளிக்கும் திட்டங்களை இலவசம் என்று கூறிவிட முடியாது. மக்கள் நல அரசு என்ற அணுகுமுறை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஜப்பான் ஆகிய நாடுகளில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் விவசாயத் துறைக்கு மானியமாகவும், உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. கல்வி, பொதுச் சுகாதாரம் ஆகியன இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் அளிக்கப்படுகின்றன. அவற்றை எல்லாம் அந்த நாடுகளில் இலவசம் என்று யாரும் கூறுவதில்லை.

தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி அளிப்பது என்பது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். பொருளியல் அறிஞர் அமெர்த்தியா சென் அவர்களுடன் இணைந்து பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி வரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜியன் டிரேஸ், ‘வறுமையில் வாழும் ஏழைகளுக்கு நடுவண் அரசின் உணவுத்தானிய கிடங்குகளில் உள்ள தானியங்களை இலவசமாகவே எடுத்து அளிக்க வேண்டும்’ என்று அண்மையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 20 லட்சம் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு அளிக்கப்படும் நிலம் இலவசம் என்பதைவிட, லிந்தபிரிவினருக்குப் பொருளா தார அதிகாரத்தை அளிக்கும் முற்போக்குத் திட்டம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் ஆண்டாண்டு காலமாக ஏற்றத்தாழ்வுகள் தொடரும் சமுதாயத்தில் 30 விழுக்காட்டு ஏழைப் பிரிவினர் மட்டும் தொலைக்காட்சி இல்லாமல் இருக்கின்றனர். இது எந்தவகையில் சமூக நீதியாகும்? ஏழை குடும்பங்களில் படிக்கும் மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அப்பாலும் கல்வி, பொது அறிவு தொடர்பான ஏராளமான தகவல்களைத் தொலைக்காட்சியின் மூலம் பெறுவதைத் தடுப்பது எப்படி மக்கள் ஜன நாயகமாகும்? ஆகவே தான் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதில் முதல்வர் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.

அடுத்து நீங்கள் கேட்டதைப்போல், நிதியாதாரத்தைப் பெருக்குவது அரசின் தலையாய பணியாகும். முதல்வர் கலைஞர் கடந்த காலங்களில் 12 ஆண்டுகள் திறமைமிக்க நிதியமைச்சராக இருந்தவர். தமிழகத்தின் நிதித்துறையும் சிறந்த நிர்வாகத் திறனுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வரி வருவாயைப் பெருக்குவதிலும், பொதுச் செலவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் போதுமான நிதியாதாரம் உள்ளது என்பதே உண்மை.’’

‘‘இலவச கலர் டி.வி. வழங்குவதால் சமூக ஏற்றத்தாழ்வு குறையும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்... தனிநபர் வருமானத்தை உயர்த்துதல், பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கான அரசு திட்டம் என்ன?’’

‘‘புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்ட பிறகு தமிழகத்தின் தொழில் துறையும், பணித்துறையும் அதிக வளர்ச்சியடைந்துள்ளன. தமிழ் நாட்டின் தலாவாரி வருமானம் 1993&94 ஆண்டில் ரூ.8955 ஆக இருந்தது. 2004&05 ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி ரூ.25965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை, முதல்வர் கலைஞர் அவர்களுடைய தொடர் முயற்சியினால்தான் தமிழகம் பெற்றுள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கான துறைவாரியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் மொத்த வருமானமும், தலாவாரி வருமானமும் பெருகி வருவதையே புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.’’

’’ஒரு மக்கள் நல அரசின் திட்டங்களை செம்மையாக செயல்படுத்த அரசின் கருவூலம் வற்றாமல் இருக்க வேண்டும். அந்தவகையில், தமிழக அரசுக்கு எந்தெந்த வகையில் வருவாய் வருகிறது?’’

‘‘மாநில அரசுக்கு இருவகைகளில் நிதி கிடைக்கிறது. மாநிலமே வரி மூலம் திரட்டும் வருவாய். நடுவண் அரசிலிருந்து நிதிக்குழுவின் மூலம் பெறப்படும் வருவாய். கடந்த 1&வது, 12&வது நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ கத்துக்குக் கிடைக்க வேண்டிய உரிய நிதியின் அளவு குறைந்தாலும், மாநில அரசு வரிகள் மூலம் திரட்டும் வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. மதிப்புக் கூட்டு வரி (வாட்) இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவதால் தற்காலிக வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பினை நடுவண் அரசு சரிக்கட்டுவதற்கு ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. பொருளாதாரத்தில் பணித்துறையின் பங்கு அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே ஆளுநர் உரையில் சேவை வரியை விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு உரிய நிதியை வருகின்ற நிதியாண்டுகளில் பெற முடியும். ஆகவே, அரசு கருவூலத்தில் நிதி குறைந்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.’’

‘‘கூட்டணிக் கட்சியான பா.ம.க. சமீபத்தில் வரைவு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?”

‘‘சில நேரங்களில் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை, நல்ல கருத்துக்களை உன்னிப்பாகக் கவனித்து, உடனடியாக அக்கருத்துக்களின் அடிப்படையில் பல முடிவுகளை நம் முதல்வர் எடுத்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்ததே. எனவே தோழமைக் கட்சிகள் அளிக்கும் நல்ல கருத்துக் களை, திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது.’’

‘‘நிதி அமைச்சர் அன்பழகன் நடத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், ‘ஆன்&லைன் வர்த்த கத்தை அரசு ஊக்குவிக்கக் கூடாது’ என்று வியாபாரிகள் வலியுறுத்தியிருக் கிறார்களே... உண்மையில் ஆன்&லைன் வர்த்தகம் எந்த அளவுக்குப் பொதுமக்களை பாதிக்கிறது?’’

‘‘இன்று எல்லாத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு உள்ளது. அதேசமயம் கணினியை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. யூக வாணிபம் எப்பொழுதுமே அதிக லாபத்தைப் பெற வேண்டும் என்ற பேராசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த யூக வாணிபத்தை கட்டுப்படுத்தவும், அடிப்படை நுகர்வுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவும் ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. ஆனால், இந்த யூக வாணிபத்தில் அதிக லாபம் சம்பாதிக்க விரும்பி இணையதள வழி வர்த்தகத்தில் பலர் ஈடுபட்டுள்ளதால், அது இன்றைக்கு விலைவாசியை உயர்த்தியுள்ளது. மக்களுக்கு தேவையான பொருட்களைப் பதுக்கி, செயற்கையான முறையில் விலையை ஏற்றும் சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் இந்தப் போக்கை கட்டுப்படுத்த முடியும்.’’

‘‘வரும் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும்?’’

‘‘ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் தமிழ் நாடும், மக்களும் நலம்பெறும் பல்வேறு திட்டங்கள் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும்...’’
‘‘பல ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப் பட வில்லை... ஆகவே, இந்த நிதி நிலை அறிக்கையில்..?’’

‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது உண்மை. அரசு சார்பில் நடத்தப்படும் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை முன்னிலைப்படுத்தியே இயங்க முடியாது. அதே நேரத்தில் தொடர்ந்து இழப்பிலும் நடத்த முடியாது. கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையேற்றம், விலை இறக்கம் போன்றவை கட்டணம் தொடர்பாக பல சிக்கல்களை நிர்வாகத்துக்கு உருவாக்குகின்றன. பயணிகளின் வசதி களை மேம்படுத்தினால் அதிக கட்டணம் கொடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் நகரின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு உட்காரும் வசதியோடு இயங்கிவரும் பேருந்துகளில் சாதாரணப் பேருந்து கட்டணங்களைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெரிசலை தவிர்ப்பதற்கு இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையை பல வழித்தடங்களிலும் விரிவுபடுத் தலாம்.
மேலும் நெரிசல் நேரத்தில் அதிக கட்டணமும், நெரிசல் இல்லாத நேரத்தில் சாதாரண கட்டணமும் பெற்று போக்குவரத்து ஊர்திகளை ஒழுங்குப்படுத்தி லாபத்தோடு இயங்க வைக்கலாம்.’’

‘‘தற்போது விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதோடு, ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டாலே விலைவாசி உயர்ந்துவிடும்’ என எப்போதும் ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. ஏன் இப்படி?’’

‘‘விலைவாசி உயர்வுக்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டில் இருந்தும் மக்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பணத்தின் சுழற்சியைக் கட்டுப்படுத்துவதற்காக, உடனடியாக பத்தாயிரம் கோடி ரூபாயை பணச் சுற்றோட்டத்திலிருந்து மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) நடவடிக்கைகளின் மூலம் எடுத்துள்ளது. இதுபோன்ற பல நடவடிக்கைகளால் விலைவாசி குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகுதான் விலைவாசி உயர்ந்தது என்று குறிப்பிடுவது உண்மையல்ல.’’
நன்றி : ஆ.வி
**********************************************************************************
தமிழக அரசின் கவர்ச்சித் திட்டங்கள் அரசு கஜானாவை காலியாக்கி மக்கள் பணத்தை அள்ளிவழங்கி, மஞ்சள் துண்டு தாத்தா போகும் காலத்துக்கு புண்ணியம்
தேடிக்கொள்கிற வழியோ என்று நான் கூட நினைத்தேன். நாகநாதனின் வாதங்கள் அரசின் இலவசத்திட்டங்களுக்கு கொஞ்சமேனும் நியாயம் சேர்ப்பதாக உள்ளது.

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...