Sunday, March 18, 2007

கார்த்தி வீரன்


பருத்தி வீரன் பார்த்தேன்.
தெக்கத்திச் சீமையின் மண்ணையும், அதன் மணத்தையும், ரத்தத்தையும், வெறியையும், அழும்பையும், நக்கலையும், சாதி வெறியையும் இத்தனை அசலாக சொன்ன படங்கள் மிக குறைவு. மனித நடமாட்டம் இல்லாத அடர் காட்டுக்குள் ஓடிவரும் காட்டாறு மிரட்டலாக தெரிந்தாலும், அதன் தூய்மையும், ஆளாளுக்கு வித்தியாசம் காட்டாமல் எல்லாவற்றையும் புரட்டித் தள்ளி ஓடும் அதன் வெறியும், இதன் நாயகனில்தெரிகிறது.பாரதிராஜாவுக்கும், கமலுக்கும் அடுத்து இதை அசலாக பதிவு செய்த அமீருக்கு ஒரு "ஓ".
வாழ்ந்து காட்டி இருக்கிற எல்லா பாத்திரங்களை விடவும் முத்தழகு அசத்தி விட்டாள். இந்த மாதிரி யாரையும் நம்மால் நேசிக்க முடியவில்லையே என்று பொறாமைப்படவைக்கிற கதாபாத்திரம். இப்படிப்பட்ட நேசத்தைப் பார்க்கும்போதுதான் "தரையில் அழுத்தமாக கால்பாவிக் கொண்டு" இன்னொருவரை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததன் அபத்தம் புரிகிறது. தன்னை மட்டுமே முழுக்க முழுக்க நேசிப்பவர்களால, எல்லா உணர்வுகளுக்கும் கணக்கு கட்டம் போடு சட்டம் கட்டுபவர்களால் வேறொருவரை தன்னை இழந்து நேசிக்க முடியாது. அந்த ரேஞ்சுக்கு நேசிக்க முடிந்தால் ஒருநாள் கூட வாழ்ந்தால் போதும். துரதிர்ஷ்டவசமாக அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. பூச்சுக்கள் அற்று வாழ கற்பிதங்கள் விடுவதில்லை. நம் மனசும் முளையுமே கற்பிதங்களின் மொத்தக் கொத்தினைத்தான் அறிவு என்று நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையான காதல் முத்தழகினைனுடையது போலத்தான் இருக்க வேண்டும். அவள் ஆதங்கம், அலுப்பு, ஆற்றாமை, காத்திருப்பு, காதலுக்காக அரிவாள் தூக்கி அம்மாவை வெட்டப் போகும் வெறி, தனக்காக வீட்டு வாசலில் ரவுசு பண்ணும் காதலனைப் பார்க்கின்ற பெருமையான சிரிப்பு, அவன் "அப்படி இப்படி" இருப்பதைக் கூட அலட்சியப்படுத்தி, கல்யாணத்துக்கு பின் இப்படி பண்ணா வெட்டிப் போடுவன் என்கிற மிரட்டல், ஆண் பிள்ளைத்தனம் கலந்த அந்த தெக்கத்திக் குரல் எல்லாம அச்த்து அச்த்து என்று அசத்துகிறது. இது முத்தழகுவின் படம். முத்தழகையும் வீரனையும் படம் பார்த்த பின்னும் பல மணி நேரம் உள்ளுக்குள் ஊற்றி வைக்கிற அமீரின் அருமையான காதல் படம். விருமாண்டியை விட அசலான பிரதி. கார்த்திக்கின் முதல் படம், அவருடைய இயல்பான நடிப்பு என்பதால், அவருக்கு அதிக வெளிசசம் கிடைத்திருக்கிறது. படத்தின் வர்த்தக கட்டாயங்களால் அமீரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாய் செய்திகள் வந்து கொண்டிருப்பது மட்டும் கஷ்டமாக இருக்கிறது
படம் பார்த்த சூட்டோடு மாலை சன் டீவியின் அன்புடன் நிகழ்ச்சியில் கார்த்தியின் நேர்முகம். பையன் சரியான "பதினாறடி". நல்ல வளர்ப்பின் அடையாளமாக படிப்பும், அத்ன் பயனாய கிடைத்திருக்கின்ற பக்குவமுமாக அசத்தல் பையன். ஒளிவு மறைவில்லாத யதார்த்தமான பேச்சு. நடிகனின் மகனாக வளராமல், வீட்டுக்கு வந்து மேக்கப்பை கழுவவதால் மட்டுமே, அப்பா நடிகர் என்கிற நிஜம் புரிந்த குழந்தைப் பருவம், எது செய்வதாலும் படித்துவிட்டு செய்யுங்கள் என்கிற அப்பாவின் "கல்வியோடு இருக்கின்ற செல்வம் மட்டுமே நல்லது" நம்பிக்கை, சினிமாவில் இருக்கின்ற ஆர்வம் காரணமாக மனசு பூரா சினிமா சினிமா என்று அலமலப்போடு காலடி எடுத்து வைத்திருக்கும் பையன்.
வளர்த்தால் சிவகுமார் மாதிரி பிள்ளை வளக்கணும்யா....!!!!!!!!!

5 comments:

 1. //இந்த மாதிரி யாரையும் நம்மால் நேசிக்க முடியவில்லையே என்று பொறாமைப்படவைக்கிற கதாபாத்திரம். இப்படிப்பட்ட நேசத்தைப் பார்க்கும்போதுதான் "தரையில் அழுத்தமாக கால்பாவிக் கொண்டு" இன்னொருவரை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருந்ததன் அபத்தம் புரிகிறது. தன்னை மட்டுமே முழுக்க முழுக்க நேசிப்பவர்களால, எல்லா உணர்வுகளுக்கும் கணக்கு கட்டம் போடு சட்டம் கட்டுபவர்களால் வேறொருவரை தன்னை இழந்து நேசிக்க முடியாது. அந்த ரேஞ்சுக்கு நேசிக்க முடிந்தால் ஒருநாள் கூட வாழ்ந்தால் போதும். துரதிர்ஷ்டவசமாக அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. பூச்சுக்கள் அற்று வாழ கற்பிதங்கள் விடுவதில்லை. நம் மனசும் முளையுமே கற்பிதங்களின் மொத்தக் கொத்தினைத்தான் அறிவு என்று நம்பிக் கொண்டிருக்கிறது. உண்மையான காதல் முத்தழகினைனுடையது போலத்தான் இருக்க வேண்டும்.//

  where there is self, there is no love. where there is love, there is no self !!

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது முழுக்க உண்மை சுந்தர். நானும் கார்த்திக்ப் பற்றி எழுதி இருக்கிறேன் படித்து பாருங்கள்.

  முத்தழகு பற்றி உண்மையாக சொல்லி உள்ளீர்கள். ப்ரியாமணியின் பேட்டி குமுதத்தில் பாருங்களேன். கொஞ்சம் ஓவராக பேசியதுப் போல தெரியும்.

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 3. Thanks Ravi.

  சிவா, நன்றி. பேட்டியை படிக்கிறேன்.

  ReplyDelete
 4. நண்பர் பிரசன்னாவின் வலைப்பூவில் பின்னூட்டம் இட முடியவில்லை. எனவே

  // கிழவிகளை உட்கார வைத்து ப்ரியாமணி பாடும் காட்சி, எந்த வகையிலும் படத்துடன் ஒட்டாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது.//

  அடே அப்பா. இதைத்தான் நானும் நினைத்தேன்.

  // எந்த வகையிலும் கதைக்குச் சொந்தமில்லாதவர்கள் திடீரென வன்புணர்வில் ஈடுபடும்போது, 'தப்புச் செஞ்சான் தண்டனை கிடைச்சது' என்கிற நீதியின் ஒரு பகுதியாக இப்படத்தை அணுகிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது//

  சூப்பர். என் நண்பரிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது இதே வரிகளையே நானும் சொன்னேன்.
  பருத்திவீரன் விலைமகளிரோடு கூடுவதால், அவன் காதலியும் அப்படியே நினைக்கப்பட்டு வன்புணரப்பட்டாள் என்கிற மாதிரி ஒரு "நீதியை" சொல்லியதன் மூலம் அமீர் தானும் ஒரு prude என்று நிரூபிக்க முயல்கிறாரா என்றேன்.
  கல்யாணத்துக்கு முன் அப்படி இப்படி இருப்பது பொதுவாக பெரிய குற்றமாக கிராமங்களில் கருதப்படுவதில்லை. ஏன் கருவாச்சிக்கே அவன் ஒத்த வீட்டுக்கும், மோட்டார் ரூம் பக்கமும் ஒதுங்குவது தெரியுமே... !!!!!

  ReplyDelete
 5. sorry..Missed the URL

  http://nizhalkal.blogspot.com/2007/04/blog-post.html

  ReplyDelete

இன்னா நாற்பது ....

  மீசை நரை போக்க பொறுமை ஏகம் தேவைப்பட ஆசை நுரை மட்டும் சுழித்துப் பிரவகிக்கிறது இன்னமும்.... யோசித்துக் களைத்த மூளை கொஞ்சம் உருகியும் ...