Skip to main content

Posts

Showing posts from March, 2015

தேஜஸ்வினி

ஆண்டாள் ப்ரியதர்ஷினி
குட்டி ரேவதி
சல்மா
சுகிர்தாராணி
லக்‌ஷ்மி சரவணகுமார்...
ஜெயமோகன்
ஜெயகாந்தன்
பாலகுமாரன்
நீல பத்மநாபன்
தகழி சிவசங்கர பிள்ளை
சுகா
புனத்தில் குஞ்சனப்துல்லா.....
வகை தொலை இல்லாமல்
நீள்கின்ற இந்தப் பட்டியலில்
பெரும்பாலானோரை
உன்னை சுற்றி இருந்தவர்கள்
யாருக்கும் தெரியாது
நீயோ இவர்களின் அணுக்கி...
இத்தனை பேரை தெரிந்தும்
சுற்றி இருந்த அபத்தங்களை
சகித்துக் கொண்டும்
சீறிக் கொண்டும் இருந்தாய்.
புத்தியற்றவர்கள் நிம்மதி
பெற்றவர்கள்.
கோயிலுக்கு நிதம் போய்க் கொண்டு
காய் நறுக்கிக் கொண்டு
கழுவின பாத்திரத்தையும்
அடுப்பு மேடையையும்
திரும்பத் திரும்பக் கழுவிக்கொண்டு
விஜய் டீவியில் ”நீயா நானா” பார்த்துகொண்டு
பண்டிகைக்கு பண்டிகை பட்டுப் புடவைக்கு
மல்லுக் கட்டிக் கொண்டு
இயலாமைகளை எல்லாம் ஒற்றை
உதட்டு மடிப்பில் மூடிவைத்து
என்னுடன் தனியே இருக்கும்
சந்தர்ப்பங்களில் மட்டும்
மளுக்கென்று அழுதுகொண்டு
நீ எங்காவது ஒரு மூலையில்
உயிரோடாவது இருக்கக் கூடாதா?

காயம்

அரவணைக்க எந்தைக்கு ஆளில்லை
ஆடி ஓடி தோள்கொடுக்க என் தாய்க்கும் உறவில்லை
வறுமையிலும் வலிகளிலும் வளர்ந்தோம்
உழைப்பையும் உறுதியையும் நாவன்மையும்
அன்றி தோள் கொடுக்க யாரும் இல்லை. ...
சத்தமில்லாமல் யுத்தம் செய்தோம் நித்தம் நித்தம்
எங்களுக்கும் விடிந்தது இறைஅருளால்
எம் மகவும் சீர் பெற்றது அவன் பெருங்கருணையால்
உற்றாரும் உரியோரும் விதந்தோந்த
எம்மை பெற்றவர் மகிழ்ந்திருந்தார்
பேருவகையில்
முட்டி மோதி பெற்றெடுத்த
நிம்மதியை...அகமகிழ்வை.. பெருமிதத்தை
கைவிட்டு நிற்கிறோம்
நெட்ட நெடுமரமாய்..
எங்கு சொல்ல..யாரிடம் சொல்ல
எதைச் சொல்ல... எப்படிச் சொல்ல...
மிஞ்சி இருக்கும் வாழ்க்கை முழுதும்
உனை இழந்த துக்கம்தனை
விஞ்சாது எதுவும் எம்மை.....

பரிகாரம்

பிடித்த கலரில் பாலியஸ்டர் சட்டை
கிடைக்காததையும்
புகை நெடியடிக்க தீபாவளி பட்டாசு
அலுக்க அலுக்க கொளுத்தாததையும்
முழுப்பரிட்சை லீவுக்கு போக...
மாமா வீடு இல்லாததையும்
ஏசி தியேட்டர் லெதர் சீட் இல்லாது பார்த்த
சகலகலாவல்லவனுக்கும்
இரவலில் ஓட்டியே பழகிய சுவேகா
என் வீட்டு வாசலில்
சொந்தமாக நிற்காததையும்
பிடித்த கல்லூரி...
பிடித்த பாடம்...
பிடித்த ஸ்நேகிதி...
பிடித்த வேலை...
இப்படியாக...
கிடைக்காமல் போன எல்லாவற்றுக்கும்
சொல்லி சொல்லி அழுதிருக்கிறேன்.
இன்று....
உன்னை இழந்ததின் சோகம்
என்னை ஊமையாக்கி
உறைய வைத்திருக்கிறது.
என் நம்பிக்கைகளையும்
எதிர்பார்ப்புகளையும்
பொடிப்பொடியாய்
உடைத்திருக்கிறது
அடைய நினைத்தவைகளின் விலகல்
தந்த துயரம் தாண்டியும்
இருக்கும் உறவை இழக்கும் துயரம்
மாபெரும் சோகம்.
இன்னொரு முறை
பிறந்து வாயேன்.....
உனக்கு இழைத்த
துன்பத்துக்கெல்லாம்
பரிகாரம் செய்கிறோம்.