Friday, July 22, 2016

கபாலி - எண்ணங்கள்

  • ரஜினி மாஸ். ரசிகர்கள் துள்ளிக் குதித்து அனுபவிக்க ஏகப்பட்ட காட்சிகள். அங்கங்கே தெறிக்கும் அவர் ஸ்பீடு அசத்தல்.
  • ரஜினி செம ஸ்மார்ட். கம்பீரமான அழகு. பின்பாதியில் மனைவியை சந்தித்ததும்  தாடி எடுத்து விட்டு ஒரு அழகு வருகிறதே .....அது !!!
  • காமிரா சூப்பர்
  • வசனம் அங்கங்கே பளிச். தேவையற்ற இடங்களில் சில கருத்துகளை ரஞ்சித் திணித்திருக்கிறார். அது துருத்திக் கொண்டு பல் இளிக்கிறது. படத்தில் “காற்று பிரிந்தால்” கூட மகிழ்ச்சி என்கிறார்கள். அலுத்து விடுகிறது
  • ”மாய நதி” பாடல் அருமையான இடத்தில் வைத்து இருக்கிறார்கள். பொதுவாகவே இசைக் கோர்ப்பில் மெனக்கெடல் தெரிகிறது.
  • படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு இன்னார் இன்னாருக்கு என்ன செய்தார் என்று நினைவில் வைத்துக் கொள்வதே போதும் போதும் என்றாகி விடுகிறது
  • Casting detailsகாக மெனக்கெடும்போது முக்கியமான பாத்திரங்களுக்கு மட்டும் அதிகம் உழைப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை குறைக்கும்
  • கிஷோர் எப்பேர்ப்பட்ட நடிகன் !!!  கிலோ கிலோவாக நகையை சுமக்க செய்து வீண் பன்ணி விட்டார்கள். சீன வில்லனை டம்மி செய்து இவருக்கு கொஞ்சம் சேர்த்திருக்கலாம். பாவம் !!
  • தன்ஷிகாவும், தினேஷுமாவது தேவலை - கலையரசனும், ரித்விகாவும் வேஸ்ட். பள்ளி சம்பத்தப்பட்ட காட்சிகளும் சரியாக கையாளப்படவில்லை.
  • ராதிகா ஆப்தேவுக்கு ”நல்லவனுக்கு நல்லவன்” ராதிகா சாயலும், ”விருமாண்டி” அபிராமி சாயலும் இருந்தாலும் குழப்படியான பாத்திரம்.அவர் அழகு அதிகம் உபயோகப்படுத்தப்படவில்லை.  பல வருடங்கள் கழித்து கணவனும் மனைவியும் சந்திக்கையில் உணர்ச்சிகள் டாப் கியர்.
  • மற்ற கதாபாத்திரங்களில் உள்ள நடிகர்கள் முகம் தெரியாமல் இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ரஜினி படத்தில் நடிக்க வைத்து அவர்களை பெரியாளாக்கி விடலாம் என்று ரஞ்சித் நினைத்திருக்கலாம். வேலைக்காகவில்லை.
  • சென்னை வரும் காட்சிகளில் ”லீ மெரிடியனில்” தேவையில்லாமல் ஏற்படுத்தப்படும் பதற்றமும், மனைவியை தேடி அங்குமிங்கும் ஓடுவதும்,  பார்வையாளர்களை சீட் நுனிக்கு கொண்டுவரும் என்று நினைத்திருக்கலாம். அது சீட்டை விட்டு கிளம்பலாமா என்று யோசிக்க வைக்கிறது. 
  • கடைசி காட்சி ( துப்பாக்கியின் “க்ளிக்”)  தமிழுக்கு புதுசு.
  • ரஞ்சித் படமா ரஜினி படமா என்ற குழப்பத்தில் நம்மையும் குழப்பி விட்டார்கள். தியேட்டர் விட்டு வெளிவருகையில் நூடுல்ஸில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டாற்போல் ஒரு மையமான உணர்ச்சி.
ரஜினிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

Sunday, June 19, 2016

சிந்தையில் எந்தை

அன்புள்ள அப்பா,
 
  நினைவில் இருத்தி நாட்காட்டியில் குறித்து வைத்தெல்லாம் நான் உங்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள் சொன்னதில்லை. அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து புளகித்துப் போகும் பழக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை. இந்த சடங்குகளையெல்லாம் வெறும் புன்சிரிப்பால் கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தீர்கள். அன்பு உள்ளுறை வெப்பம் போல தொகைந்தே இருந்தது. உங்களை நானும் என்னை நீங்களும் முகத்தின் முன் வாயார வாழ்த்திக் கொள்ளும் வழக்கமெலாம் இருந்ததில்லை எந்நாளும் உங்கள் முதுமை ஏற ஏற நானே யோசித்துதான் சில விஷயங்களை புத்திபூர்வமாக மட்டும் அல்லாமல் உணர்வுபூர்வமாகவும் செய்ய விழைந்தேன்.
 
இன்று நீங்கள் இல்லை. ஸ்தூலம் கடந்த ஸ்நேகிதம் என்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. உங்கள் மரணம் நீங்கள் வேண்டியபடியே உங்களை வந்தடைந்தது. யாருக்கும் பாரமாக இல்லாமல் படுக்கையில் கிடந்து துன்புறாமல், உங்கள் கம்பீரம் குறையாமல் இறையடி சேர்ந்தீர்கள். சேர்ந்தபோது என் கை உங்களை பற்றி இருந்தது. நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம் என்று நிம்மதியுடன் அறிந்த பிறகே உங்கள் மரணம் நிகழ்ந்தது. ”எந்நோற்றான் கொல் எனும் சொல். என்ற அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் நீங்கள் பெருமைப்படும் விதத்தில்தான் நடந்து கொண்டென் என்று நினைக்கிறேன். முதுமையில் உடன் இருந்திருந்தால் இன்னமும் உவகையுற்றிருப்பிர்கள். எனினும் என்னை வற்புறுத்தி இந்தியா அழைத்துகொள்ள உங்களுக்கு சம்மதமில்லை. மகனென்னும் கடமை இருப்பதைப் போல எனக்கு, தந்தை என்ற கடமையும் இருப்புவதை முழுதுணர்ந்து என் மகவை வளர்த்தெடுப்பதில் முனையச் சொன்னீர்கள். பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வளர்வதும், பிள்ளைகளை நல்ல பெற்றோராக வளர்ப்பதுமே வாழ்வின் ஆகச்சிறந்த கடமையாக சொன்னீர்கள்.
 
அப்பா... உங்கள் மீது முதலில் பயம் இருந்தது. பின் பாசம், பெருமை, மரியாதை, கரிசனை என்று வளர்ந்து இறுதியில் இரக்கமே எஞ்சியது. என்னை வளர்த்தை போல என் கண்மணியையும் நான் வளர்ப்பேனாயின் நீங்கள் என்னை பெற்றதன், நான் பிறந்ததன் அர்த்தம் விளங்கி வாழ்வு முழுமையடைந்து விடும். உங்கள் ஆசிகள் என்றும் எங்களுக்கு உண்டு என்று தெரியும் தொடர் ஓட்டத்தின் (Baton in relay race)”பேட்டன்” தடியை அவனிடம் கையளித்து விட்டு நானும் உங்களிடம் வருவேன்.
 
என் உடலும், திடமும், அறிவும், மொழியும், பணிவும், பண்பும், மாண்பும் நீங்கள் ஈந்தது
நன்றி--யாவற்றுக்கும்.
 
முன்னர் எழுதியவை :
 
 
 

Saturday, June 04, 2016

இகமெங்கும் இறைவிகள்

கமலஹாசனைப் போல கார்த்திக்குக்கும் துணிச்சல் அதிகம். இல்லாவிட்டல் ரசிகர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து இப்படி ஒரு படத்தை முயன்றிருப்பாரா?  அந்த நம்பிக்கைக்கு வாழ்த்துகள். ஆனால் படம் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. ஹிட் அடித்தால் இளைய தலைமுறையும், தாய்மார்களும் கை தூக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் கொஞ்சம் கனமான படம்தான். He sprinkles brilliance casually all over, but the audience should be sharp enough to catch them.



கார்த்திக் இதுவரை சொல்லாத அளவுக்கு இந்தப் பிரச்சினையை(பெண்களின் வாழ்க்கை)  உரத்துப் பேசாமல் அணுகி இருக்கிறார்.  உரத்து சொல்லாததால் பார்வையில் இருந்து விடுபட்டுப் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தலைமுறை ரசித்துப் பார்ப்பதற்கு காட்சிகளும் வசனங்களும் அத்தனை அத்தனை உண்டு. படத்தில் வில்லன் என்று ஆள் இல்லாமல் சந்தர்ப்பங்களில் எல்லாரும் வில்லன் ஆவது அழகு. வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. He should choose a vocal/ contradicting editor next time. Editor provides a different perspective and he should not necessarily think like the Director and just follow his orders. படம் நீளம். எனவே பார்ப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். ரவுடி கூட்டத்தில் திடீரென ஒரு ரவுடி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை பார்த்தவுடன் பம்மி,  தன் நடிப்பை பற்றி சொல்வதும்,  நல்லா பாடுவேண் என்று சான்ஸ் கேட்பதும் ”ஜிகிர்தண்டாவை” நினைவு படுத்துகிறது. அதே போல Rehabilitation center ஆளும் ஜிகிர்தண்டா வாத்யார் சோமசுந்தரத்தை நினைவுபடுத்துகிறார். கார்த்திக் அடுத்த முறை புதிய நட்சத்திரங்களுடன் முயற்சிக்க வேண்டும். .

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை . உண்மைதான். வழக்கமான கோணங்கித்தனங்கள் இல்லாமல் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் “நான் நடிக்கத்தான் வந்தேன். மற்றதேல்லாம் இந்த இடத்திற்கு வருவதற்கான முயற்சிகளே” என்று அவர் சொல்வதெலாம் டூ மச். எந்த டைரக்டர்  படத்தில் நடித்தாலும் அவர் தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கொண்டு வெளுத்துக் கட்டட்டும். அப்புறம் பார்க்கலாம். மனைவியாக வரும் கமலினி முகர்ஜி சரியான தேர்வு இல்லை. முகபாவங்கள் ஒத்துழைக்கவில்லை. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொள்ளும் அழகான ஹீரோயின்களா இல்லை? என்னிடம் கேட்டிருக்கலாம். ;-)

விஜய் சேதுபதி வழக்கம் போல அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.   அந்த அமைதியான ஆளுக்குள் இருக்கும் மூர்க்கம் வெளிப்படும்போதெல்லாம் கதை திசை திரும்புகிறது. அவர் சிறை வாழ்க்கையும், வீடு திரும்பலும் சுஜாதாவின் ”ஜன்னல் மலரை” நினைவு படுத்துகிறது. இத்தனை மூர்க்கமான ஆள் காதலியிடமும், கடைசியில் மனைவியிடமும்  க்ளீன் போல்ட் ஆகும்போது பரிதாபம் வருகிறது. உண்மையில்  சேதுவின் பாத்திரம் முந்தின காட்சிகளில் எல்லாம் அவஸ்தைப்பட்டு மனதளவில் மக்கி, க்ளைமேக்ஸில் வெறுமே முடிவுக்கு காத்திருக்கிறது. அந்த முடிவு அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு விடுதலை !!!

அஞ்சலி அட்டகாசம். உடம்பு அரைத்து வைத்த இட்லிமாவு பொங்குவது போல போயிருந்தாலும் முகமும், குரலும், நடிப்பும் கை கொடுக்கிறது. அவர் புது மணச்சிரிப்பு, நாள்பட நாள்பட வரும் முதிர்ச்சி, கணவனிடம் காட்டும் சம்பிரதாய ( சம்சார)க் கனிவு, அவன் இறுக்கம் தளர்ந்து நெருங்கி வருகையில் வரும் ஆச்சரிய மலர்ச்சி, அவன் செயல்களின் விளைவான  திணிக்கப்பட்ட தனிமையால் வரும் ஏமாற்றம், அயலானின் அன்புக்கு செவிசாய்த்தும் அவனை நாசுக்காக விலக்கி வைக்கும் சம்பிரதாய ( பரம்பரை) பயிர்ப்பு என்று ......அதகளம். அதுவும் அந்த அயலானை நெடுநாள் கழித்துப் பார்க்கும்போது வரும் இனம்புரியா சங்கடத்தை காட்சியில் காட்டி இருக்கும் நளினம்--- wow - Classic.

 பாபி சிம்ஹா அசலான பாத்திரம். மேலுக்கு சிரித்துக் கொண்டு, ஊரில் உள்ளவர்கலை எல்லாம் வைது கொண்டு,  தன் செயல்களுக்கு உறுத்தலே இல்லாமல்  இல்லாமல் சாமர்த்தியமாக ஞாயம் கற்பிக்கும், வரம்பு மிறிய பிரதி. அவன் மையல் இன்னும் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கலாம். சொல்லி இருந்தால் அந்த ராவண ஞாயமும் இன்னும் வெளிப்பட்டிருக்கும். இவர் கார்த்திக் படங்களில் சோபிக்கும் அளவுக்கு மற்ற படங்களில் நடிப்பதில்லை. கார்த்திக்கின் வெற்றியாக இருந்தாலும் இது ஒரு நடிகனின் தோல்வி. பாபி ஜாக்கிரதை.

பூஜா அருமையான படைப்பு. உள்ளதை உள்ளதென்று சொல்லி நிஜம் பேச நம்மில் பலருக்கு இல்லாத தைரியம் அவளுக்கு இருக்கிறது. அதுவே அவள் காதலனையும் கூட மிரளச்செய்கிறது. அவன் லெளகீக வாழ்வுக்கு இழுத்தாலும் அவள் வருவதில்லை. ஏனேனில் அதனால் விளையும் உறவுக்குழப்பங்கள்  தங்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறாள். பெரும்பாலானோர் புரிந்து கொள்ள முடியாத பாத்திரம். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கார்த்திக் கோடி காண்பித்து இருக்கிறார். இன்னொரு வரம்பு மிறிய ப்ரதி. இந்தப் ப்ரதிகள்  அதிர்ஷ்டவசமாக சேது போன்ற ஆண்களுடன் உறவில் /நட்பில் இருக்கீறார்கள் . அதனால் abuse செய்யப்படுவதில்லை. sigh...

ராதாரவி அடக்கி வாசித்திருப்பது நன்று. சிலை திருட அனுபதி கொடுப்பதும், ஆஸ்பத்திரியில்  நர்ஸம்மாவை அதட்டுவதும் தவிர படம் நெடுக வெறும் பார்வை மட்டுமே. சீனு மோகன் கொஞ்சம் ஓவர். குழப்பமான பாத்திரம். சில காட்சிகளில் நிகழ்வதற்கு  முன்னரே அவர் முகம் ரெடியாகி விடுகிறது - so dramatic. டெல்லி கணேஷ் பொருந்தி இருக்குமோ?

சந்தோஷ் நாராயணன் பெரிய hype. டொய்ங் டொய்ங் என்று மேற்கத்திய சுட்ட இசையை BGM என்று படம் முழுக்க மீட்டி  இருக்கிறார். ஜீவன் இல்லாத  வேறும் ”ஓசை”. இரண்டு பாடல்கள் தேறும். இசைஞானி இந்தப் படத்தை வேறு உயரங்களுக்கு தூக்கி இருப்பார். கார்த்திக் சும்மா சும்மா வசனங்களில் மட்டும் ராஜாவை சிலாகிப்பதை விடுத்து அடுத்த படத்துக்கு அவரிடம் போய் கேட்க வேண்டும்.


பாஸ்கி லிங்க்

ஹிந்து ரங்கன்



 

Sunday, May 15, 2016

குப்பத்து ராஜா

இதுதான் ஊடக அறமா என்ற தலைப்பில் மதுரைப் பல்கலைகழகத்தின் இதழியல் துறைப் பேராசிரியர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்யாருக்கு நாற்காலி என்கிற தலைப்பில் விகடன் ஏடு வெளியிட்ட கட்டுரை எவ்வாறு திமுக சார்பு நிலை எடுத்திருக்கிறது என்பதையும் விகடன் ஏன் மக்கள் நலக்கூட்டணியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும்  கேள்வி கேட்டு இருக்கிறார்.



தமிழ்மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்கிற ஒரு பத்திரிக்கை தமிழர்களின் கருத்தை மாற்றி அமைக்கிற, தன் சார்பு நிலை பற்றி சொல்கிற வேலையிலிருந்து வெளிவந்து மாமாங்கம் ஆயிற்று பேராசிரியர் அவர்களே. தற்கால வெகுஜன ஊடகங்கள் ( அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டோ / நடத்தப்பட்டோ வெளிவருபவை தவிர)  பொதுமக்கள் நினைப்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளும் நுகர்வோர் கலாசாரத்தின் கூறாகி விட்டன.  விகடனில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பங்கு இப்போது இருக்கிரது என்ற அடிப்படையில் பலருக்கு கட்டுரையைப் பற்றிய  சந்தேகம் வந்தாலும் கடந்த பல தேர்தல்களாக விகடனின் குரல் எப்படி எதிரொலித்து இருக்கிறது என்று கூர்ந்து அவதானித்தால் உண்மை விளங்கும்

மக்கள் நலக்கூட்டணி  ஒரு பலமான மூன்றாம் அணியாக உருவெடுக்காததற்கு அவர்களே காரணம்.
அங்கு இருக்கும் தலைவர்கள் ஒருவருக்கும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தாக்கும் அருகதை இல்லை. இரண்டு கரைகளிலும் ஒதுங்கித்தான் அந்த தலைவர்கள் இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறார்கள். வைகோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட   தலைவர். வானவில்லின் ஏழு நிறங்களையும் தாண்டி அரசியல் அரங்கில் நடனம் ஆடும் வினோதர். இம் என்றால் அழுகை , ஏன் என்றால் கர்ச்சனை என்று காட்டி தன்னை தொடர்பவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் கோமாளி. உப்புசப்பிலாத காரணத்துக்காக இத் தேர்தலில்    அவர் போட்டியில் இருந்து விலகினார். அது ஒருபெரிய பின்னடைவு. விஜயகாந்தின் தேமுதிக இன்னொரு சர்க்கஸ் கூடாரம். விஜய்காந்தின் தற்போதைய உடல்நிலை, மனநிலை, அவர் குழறல் எல்லாமே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பாதித்தன. கேப்டனை பிடித்தவரகள் கூட சுதீஷுக்கும் பிரேமலதாவுக்கும் பட்டம் கட்டவா நாம் பிறந்தோம் என்று ஒதுங்கும் அலவுக்கு அவர்கள் இருவரும் பவனி வந்தனர். பத்திரிக்கையாளர்களை தாக்குவது, பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வது, கேலிக்கூத்தான தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து  கேப்டனும் செல்லாக்காசாகிப் போனார். திருமாவளவனுக்கு அரசியல் அரங்கில் இருக்கும் மதிப்பு ஓட்டுகளாக திரள கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளரவேண்டும். அது இத்தேர்தலில் சாத்தியமில்லை. தவிரவும் திருமா சாதி ரீதியாக மேடைகளில் பேசும்போது பொது வாக்காளர்களின் ஆதரவை இழக்கிறார். மிச்சம் அந்த அணியில் உள்ள தமாகவும். கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களால் பொருட்படுத்தக் கூடிய கட்சிகளாக இல்லை. மொத்ததில் மூன்றாம் அணி  களையிழந்து போனதற்கு அவர்களே காரணம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக திகழ வேண்டுமெனில் அவர்களை எந்த தேர்தலிலும் சாராமல் தனிப்பெரும் சக்தியாக தமிழகத்தில் வளரவேண்டும்.

இதை யோசிக்கும் போது சீமான் நினைவுக்கு வருகிறார். சீமானின் உணர்ச்சி வேகமும், அவர் பாசிசப் பேச்சும் இப்போது வேண்டுமானால்  கூட்டம் சேர்க்கும். அந்த வெறுப்பரசியல் நெடிய நாள் வேலைக்கு ஆகாது. பதட்டம் குறைந்து, பக்குவம் கூடி இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்து, கழகங்களின் மாற்றாக திகழ அவர் கனிந்து வர வேண்டும். ஹிட்லரைப் போல பேசுவதும், மாற்று இன/ மொழி மக்களை விரட்டுவதும், திராவிடத்தை பழித்துகொண்டே பெரியாருக்கு சாமரம் வீசுவதும், முப்பாட்டன் முருகன், பாட்டன் பெரியார் என்று வாதிப்பதும் வெறும் உணர்ச்சி வேகங்களே. உணர்ச்சி வேகங்களுக்கும்  நாற்காலிகளுக்கும் தூரம் அதிகம்.

தேர்தல் நெருக்கத்தில் மே 14/15 தேதிகளில் திமுகவே வோட்டுக்கு பணம் கொடுத்ததை நான் அறிவேன். ஜெயலலிதாவின் ஆட்சி மீது  இததகைய வெறுப்பு மக்களுக்கு இருந்தும் கூட அத்தகைய ஆட்சியை அப்புறப்படுத்தும் ஜனநாயகக் “கடமையை” செய்ய  வைக்கக் கூடமக்களுக்கு கட்சிகள்   லஞ்சம் தரும் காலமாகி விட்டது. தேர்தல்களை வாங்கும் போக்கு இரு கழகங்களுக்கும் உள்ளது என்பதே கசப்பான உண்மை. ஆனால், மக்களுக்கு  மாறி மாறி வாக்களிக்க ஒரு மாற்றுக் கட்சியாவது இருக்கிறதே என்று ஆறுதல் மட்டுமே மிச்சம். இப்போது  ஆட்சிக்கு வரும் ஸ்டாலின் தவறு செய்தால் ஐந்தாண்டுகளில் ஜெ கம்பெனிக்கு வாய்ப்பு கிட்டும் அவ்வளவே. ஆனால் இவ்விரு கட்சிகளை தாண்டி தலையெடுக்க தமிழ் மண்ணில்  இம்முறையும் வாய்ப்பு இல்லை.

  திமுகவுக்கு/ ஸ்டாலினுக்கு இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. அடுத்த தேர்தலுக்குள் கருணாநிதி இருக்கிறாரோ என்னமோ , இத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால், மத்தியிலும் , வட மாநிலங்களிலும் , மற்ற துறைகளிலும் ஊடுருவி உள்ள வலதுசாரி சக்திகளை கட்டுக்குள் வைக்க திமுகவின் எழுச்சி உதவும். ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொண்டால்   ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக தன்னைக் கூறிக்கொள்ளும், ஓட்டுக்களுக்காவது அவர்களை குறிவைக்கும் ஒரு இயக்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள அது உதவும். மற்றபடி திமுகவின் ஊழல்களையும் , குடும்ப அரசியலையும் வாக்காளர்கள் திமுகவால் தங்களுக்கு கிடைக்கும் அரசியல் பலத்துக்கான “கமிஷன்/தண்டல்” தொகையாகவே பார்க்கிறார்கள்.

குப்பத்து தாதா அக்கம்பக்கத்து பெருந்தனக்காரர்களுக்கு வேண்டுமானல் பொறுக்கியாக தெரியலாம்.
குப்பத்துக்கு ராஜா அவன்தான்

Sunday, May 01, 2016

கவனம் தி.மு.க !!!

தேர்தலையொட்டி  எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளும், உளவுத்துறையின் விவரணைகளும், பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படும் பேச்சுகளும் ஜெயலலிதாவின் பதட்டமும் ஒன்றை நாசுக்காக சுட்டுகின்றன.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு ஆதரவாக வரப்போவதையே அவை சொல்லுகின்றன.

பெரிய கட்சிகளுக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணும் என்று எதிர்பார்க்கப்ப்ட்ட ம.ந.கூ தலைவர்களின் உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளால் பிசுபிசுத்து விட்டது. பா.ஜ.க தனித்து விடப்பட்டது. பா.ம.க அடுத்த தேர்தலில் பேரம் பேசும் வலிமையை பெறுவதற்கே தேர்தலை சந்திக்கிறது. சீமான் அடுத்த வை.கோ. இந்த சூழலில் ஆளுங்கட்சி மீதுள்ள அதிருப்தியை முழுக்க முழுக்க அறுவடை செய்யும் கட்சியாக தி.மு.க எஞ்சுகிறது. வெற்றி பெற்றால் அக் கட்சி செய்ய வேண்டுவன என்று  ஒரு பொதுஜனத்தின் பார்வையில் பார்த்தோமானால் :

  1. கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது. கட்சித்தலைவர் / ஆலோசகர்  பதவியில் இருந்து கொண்டு ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும்.  அது அடுத்தகட்ட தலைவர்கள் தலையெடுக்க வழி வகை செய்யும். முதல்வரை  மாற்றும் வல்லமை கட்சித் தலைமைக்கு இருக்க வேண்டும்
  2. கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளர்க்கப்படவேண்டும் . கலைஞருக்கு அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும், நாஞ்சில் மனோகரனும், சாதிக் பாட்சாவும்,  விரபாண்டி ஆறுமுகமும் தோள் கொடுத்து நின்றது போல கட்சியின் வாழ்விலும் தாழ்விலும் ஸ்டாலினுடன் உடன் நிற்க ஒரு குழு வேண்டும்.
  3. அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் அல்லது ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பேற்க வேண்டும். இணைந்து பணிபுரிவதே யாவர்க்கும் பயன் தருவதாக அமையும்.
  4. கனிமொழி  டெல்லி அரசியலில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். தயாநிதி மாறன் டெல்லி அரசியலில் மறுபடியும் வந்தாலும் அவர் குடுமி கனிமொழியின் கையில் இருக்க வேண்டும்
  5. கட்சியும் ஆட்சியும் ஒன்றையொன்று சாராமல் தனியே இருக்க வேண்டும். கட்சி பிரமுகர்களின் வியாபாரங்கள்  ஆட்சியை பாதிக்கக் கூடாது.
  6. மத்திய அரசுடன் இணக்கமான முறையில் பணியாற்றி தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்
  7. ஆட்சிக்கு எதிரான சீமான், பா.ம.க, ம.ந.கூ போன்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசிலித்து அவைகளில் நியாயம் இருந்தால் அவை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களை கட்டுக்குள் வைக்க அதுவே சிறந்த வழி.
  8. சினிமாத்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்காமல் எங்கெங்கு கண்டிப்பு வேண்டுமோ அதை செயல் படுத்த வேண்டும்.
  9. பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியாவிடினும் அதை படிப்படியாக கொண்டுவர வேண்டும். கட்சியினரின் சாராய ஆலைகள் கைவிடப்படவேண்டும்.
  10. ஜெயலலிதா மீதுள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தண்டனை வாங்கித்தரப்பட வேண்டும் கலைஞர்  பூரண ஓய்வு பெற வேண்டும். இத்தனை வயதில் அவர் இப்படி உழைப்பது கட்சிக்கு அவப்பெயர்.
 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...