அன்புள்ள அப்பா,
நினைவில் இருத்தி நாட்காட்டியில் குறித்து வைத்தெல்லாம் நான் உங்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள் சொன்னதில்லை. அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து புளகித்துப் போகும் பழக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை. இந்த சடங்குகளையெல்லாம் வெறும் புன்சிரிப்பால் கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தீர்கள். அன்பு உள்ளுறை வெப்பம் போல தொகைந்தே இருந்தது. உங்களை நானும் என்னை நீங்களும் முகத்தின் முன் வாயார வாழ்த்திக் கொள்ளும் வழக்கமெலாம் இருந்ததில்லை எந்நாளும் உங்கள் முதுமை ஏற ஏற நானே யோசித்துதான் சில விஷயங்களை புத்திபூர்வமாக மட்டும் அல்லாமல் உணர்வுபூர்வமாகவும் செய்ய விழைந்தேன்.
இன்று நீங்கள் இல்லை. ஸ்தூலம் கடந்த ஸ்நேகிதம் என்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. உங்கள் மரணம் நீங்கள் வேண்டியபடியே உங்களை வந்தடைந்தது. யாருக்கும் பாரமாக இல்லாமல் படுக்கையில் கிடந்து துன்புறாமல், உங்கள் கம்பீரம் குறையாமல் இறையடி சேர்ந்தீர்கள். சேர்ந்தபோது என் கை உங்களை பற்றி இருந்தது. நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம் என்று நிம்மதியுடன் அறிந்த பிறகே உங்கள் மரணம் நிகழ்ந்தது. ”எந்நோற்றான் கொல் எனும் சொல். என்ற அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் நீங்கள் பெருமைப்படும் விதத்தில்தான் நடந்து கொண்டென் என்று நினைக்கிறேன். முதுமையில் உடன் இருந்திருந்தால் இன்னமும் உவகையுற்றிருப்பிர்கள். எனினும் என்னை வற்புறுத்தி இந்தியா அழைத்துகொள்ள உங்களுக்கு சம்மதமில்லை. மகனென்னும் கடமை இருப்பதைப் போல எனக்கு, தந்தை என்ற கடமையும் இருப்புவதை முழுதுணர்ந்து என் மகவை வளர்த்தெடுப்பதில் முனையச் சொன்னீர்கள். பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வளர்வதும், பிள்ளைகளை நல்ல பெற்றோராக வளர்ப்பதுமே வாழ்வின் ஆகச்சிறந்த கடமையாக சொன்னீர்கள்.
அப்பா... உங்கள் மீது முதலில் பயம் இருந்தது. பின் பாசம், பெருமை, மரியாதை, கரிசனை என்று வளர்ந்து இறுதியில் இரக்கமே எஞ்சியது. என்னை வளர்த்தை போல என் கண்மணியையும் நான் வளர்ப்பேனாயின் நீங்கள் என்னை பெற்றதன், நான் பிறந்ததன் அர்த்தம் விளங்கி வாழ்வு முழுமையடைந்து விடும். உங்கள் ஆசிகள் என்றும் எங்களுக்கு உண்டு என்று தெரியும் தொடர் ஓட்டத்தின் (Baton in relay race)”பேட்டன்” தடியை அவனிடம் கையளித்து விட்டு நானும் உங்களிடம் வருவேன்.
என் உடலும், திடமும், அறிவும், மொழியும், பணிவும், பண்பும், மாண்பும் நீங்கள் ஈந்தது
நன்றி--யாவற்றுக்கும்.
முன்னர் எழுதியவை :
No comments:
Post a Comment