Sunday, December 31, 2006

வசந்தபாலன் பேட்டி

குமுதம் வெப் டீவி ( web Tv) எனக்கு டாலர் தேசம் புகழ் பா.ராகவன் பேட்டி மூலம் அறிமுகமாகியது ( உபயம் : கில்லி) . பிறகுதான் கொஞ்சம் ரெகுலராக பார்க்க ஆரம்பித்தேன். விகடன்.காம் தன் ராட்சஸ கரங்களால் நாளொரு பத்திரிக்கையும், பொழுதொரு வசதியுமாக இணைய ரேஸில் முந்திக் கொண்டுவிட விகடனின் ஆதிகால போட்டியான குமுதம் இப்போதுதான் தட்டுத் தடுமாறி காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு சேவைக்கட்டணம் ஏதும் இல்லை என்றாலும், கூடிய விரைவிலேயே ஆக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ரபி பெர்னார்ட் பேட்டிகள், சினிமா சமாச்சாரங்கள் என்று வெப் டீவியில் குமுதம் குழும இதழ்களை விட சுவாரஸ்யம் அதிகம்.

விஷயத்துக்கு வருகிறேன். "வெயில்" படத்தைப் பற்றி இனி நான் புதுசாக சொல்ல ஏதுமில்லை. சமீப காலங்களில் மண் மணத்தோடு, வந்திருக்கக்கூடிய உருப்படியான படம். ஷங்கர் என்ற டைரக்டரைப் பற்றி பவித்ரன்/ எஸ்.ஏ.சி அஸிஸ்டெண்ட் என்ற வகையிலேயே எனக்கு அறிமுகம் இருக்கிறதே ஒழிய பெரிய கலாபூர்வமான மனிதர் என்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. செல்லுலாய்டில் ரிப்போர்ட்டிங் செய்யும் ஜர்னலிஸ்ட் என்று வேண்டுமானல் ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் சினிமாவில் தான் பண்ணிய பணத்தை, தன் அஸிஸ்டெண்டுகளின் "நல்ல படமெடுக்க வேண்டும்" என்ற ஆசைக்காக, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது உண்மையிலேயே பாராட்டத் தோன்றுகிறது. மிச்ச சொச்சத்தை வெயில் இயக்குநர் வசந்தபாலன் பேட்டியில் பாருங்கள். குமுதம்.காம் பயனராக இருந்தால் இந்த சுட்டியில் பாருங்கள். http://www.kumudam.com/streaming.php?id=6

வ.பாலன் ரொம்ப சின்சியராக தெரிகிறார்.

Friday, December 29, 2006

சைக்கோ அனாலிலிஸ்


சமீபகாலங்களில் படித்த மிகச்சிறந்த கட்டுரை.

நன்றி : ஞாநி


மீடியா டிலைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்!

தமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.

இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!

வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்!

வைகோவை மூலவராக் கிப் பார்க்கத் திட்டமிட்ட வர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயி லில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித் தேன்.

வி.பி.சிங், 1987&ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990&ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பி&யால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.

வி.பி.சிங், தி.மு.க&வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க&வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவரு டைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.

பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.

வி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பி னார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.க&விலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். Ôதனக்கு யார் நிஜமான தலைவன்Õ என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.

வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.க&விலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பல மாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.க&விலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.

உண்மையில், வைகோவை தி.மு.க&விலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.

வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.க&விலிருந்து வெளியேறி ம.தி.முக&வை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர் கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட் டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரை கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!

ஆனால், தற்போது தி.மு.க&வை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.

தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு, அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்று டன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.

அதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளு மன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.க&வுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.
தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.க&வுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக் கும் மாற்று யார்?
இதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸ§க்கும் இல்லை, பி.ஜே.பி&க்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜய காந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! ‘எமோஷனல் பாலிட் டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!

*------*--------*-------------*------------------*

நண்பர்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, July 17, 2006

ப்ரைவேட் ப்ராப்பர்டி

சிதம்பரம் அக் 25, 20xx -

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற ஏழுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் கைதி செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கொவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் - கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்த்னைகளை
முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற
விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும்.

சின்னப் புள்ளத்தனமாக எங்களிடம் வந்து கேட்ட மாதிரி மசூதியிலோ, சர்ச்சிலோ, சரவணா ஸ்டோர்ஸிலோ, குமரன் சில்க்ஸிலோ போய் கேட்க வேண்டியதுதானே?? பெரிய இது மாதிரி எங்களிடம் கேட்க வருகிறீர்கள். இது பக்தி இல்லை. வெறும் வீம்பு. உண்மையான பக்தி இருந்தால் இதெல்லாம் செய்யச் சொல்லாது. வேஷ்டியை துடைக்கு மேல் ஏத்திக் கொண்டு, வருகிற சுற்றுலா பயணிகளிடம் டாலர் கணக்கில் வசூலிக்கச் சொல்லும். பராந்தக சோழன் பொன்னம்பலம் வேய்ந்த கோவிலை வைத்து தலைமுறை தலைமுறையாக பிழைக்கச் சொல்லும். ஏன்னா நாங்க சொன்னதுதான் சாமி. நாங்க பண்ற இத்தனை வேலைகளுக்கும் இவ்ளோ நாள் சாமி எங்களை ஏதும் செய்யாததைப் பாத்தா, எனக்கே பெரியாரை நம்பணும் போல இருக்குது.
என்றார் அசினாச்சு.

Thursday, July 06, 2006

பருப்புப் பஞ்சம்



இரண்டு நாட்களாக நெருப்பு மாதிரி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது - பருப்புகளைப் பற்றி.

இந்தியாவில் பருப்பு விளைச்சல் குறைந்ததால், பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் இன்னமும் ஆறு மாதங்களுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்றும் பரவிய செய்தியால், மளிகைக் கடைகளில் அமோக கூட்டம். சந்தடி சாக்கில் சரக்குகள் பதுக்கப்பட்டன. விற்கின்ற பருப்புகள் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. என்னைப் போல மாமிச பட்சணிகளே ஐந்து கிலோ துவரம் பருப்பு வாங்கி வைத்தேன் எனில், மாமிசம் சாப்பிடாதவர்களின் கதி..??

இனிமேல் " நீ என்ன பெரிய பருப்பா" என்று கேட்பதற்கு சமகால காரணம் யாரும் தேடவேண்டியதில்லை...:-)

இந்திய ஞாபக மிச்சங்கள்

இந்தியப் பயணம் முடிந்த வந்து இப்போதுதான் சற்று ஓய்வாக உட்கார்ந்து யோசிக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே செய்ய உத்தேசித்து இருந்தபடி பல வேலைகள் செய்ய முடியாமற் போனாலும், உபயோகமாக சில விஷயங்கள் செய்ய முடிந்ததில் திருப்தி. அதில் ஒன்று லேசிக் சர்ஜரி. கடந்த ஐந்து வருடங்களாக என் அத்தான் இதனை செய்துகொள்ளுமாறு என்னை கேட்டுக் கொண்டே இருந்தாலும், பயந்து கொண்டே இருந்தேன். இருக்கிற கண்ணும் போய் விட்டால் என்ன செய்வது என்ற முக்கியமான பயமே இதற்குக் காரணம்.

அந்த பயம் போவதற்கு முக்கியமான காரணம் செல்வாவும், இங்கே சாக்ரமண்டோவில் இருக்கும் இன்னொரு நண்பர் ரவியும். இருவருமே இந்த சிகிச்சையை மேற்கொண்டு பரிபூரண குணம் கண்டவர்கள். இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்த சில நண்பர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த நண்பர்களைப் பற்றி நான் நினைக்க விரும்பவில்லை. மேலும் நான் போட்டிருந்த கண்ணாடியின் தடிமனைப் பற்றி நினைக்கும்போது, உட்படப்போகும் சிகிச்சை அதற்கு மேலும் என் கண்ணை கெடுத்து விட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு. இணையத்திலே காணக்கிடைக்கும் என் புகைப்படங்களிலே
அந்த சோடாபுட்டியின் தீவிரம் தெரியாது. குளிர்க்கண்ணாடியோ, அல்லது கண்ணாடி இல்லாமலோ நான் இருந்த புகைப்படங்களை இணையத்தில் காணும் என்னை முன்னமே அறிந்த சிலர், " எங்கேடா உன் சோடாபுட்டி ?? " எனக் கேட்பர். :-)

இந்திய விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய பின்னர், என் அலுவலக நண்பர்கள் பலர் என்னை அடையாளம் தெரியவில்லை என்று சொல்கிறார்கள். மெல்லப் பழகும் என்று சொல்லிவிட்டு, அவர்களை எனக்கு அடையாளம் தெரியவைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விடுகிறேன். இரவுகளில் மட்டும் Glare கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டம்மா வாங்கிக் கொடுத்த RayBan குளிர்க்கண்ணாடியை போட்டுக் கொண்டு ரவுசு பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச காலத்துக்கு gym போகக் கூடாது என்று சொல்லி விட்டதால் மாலையில் மிஞ்சும் அந்த நேரங்களை சென்னையிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆனந்தமாக இருக்கிறது :-)

விடுமுறையைப் பொறுத்தவரை முதல் பதினைந்து நாட்கள் சகோதரி மகள் கல்யாணத்திலும், அடுத்த பதினைந்து நாட்கள் லேசிக் சிகைச்சைக்காகவும் கழிந்தது. அதற்கு நடுவே மிகச் சில நண்பர்களுடனான சந்திப்பு/ தீர்த்தவாரி மற்றும் ஷாப்பிங் ஆகியவையும் நடந்தது. பிரசன்னாவை சந்திக்கலாம் என நினைத்தேன். இயலவில்லை. சந்தித்தது பிரகாஷை மட்டுமே. வருகிறேன் என்று சொன்ன என் கல்லூரி நண்பர் ராஜ்குமாரும் சொந்த வேலை என்று சொல்லிவிட்டு வரமுடியவில்லை என்றார் ரஜினி ராம்கி நடுவே சற்று நேரம் வந்து போனார்.அவர்கள் இருவரும் மசமசப்பாய் தெரிந்தது என் ஆபரேஷன் கண்களாலா, திரவ மகிமையா அல்லது Bar ல் இருந்த குறைந்த பட்ச வெளிச்சத்தாலா என்பது பட்டிமன்ற டாபிக். ஆனால் நல்லதொரு மாலை நேரம். பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை. ரஜினி ராம்கி வால் பையன். :-). பிரகாஷ் கில்லி அனுபவங்களை கொஞ்சம் விவரித்தார். விளையாட்டாய் செய்யும் எழுத்தை எத்தனை பேர் எத்த்னை தீவிரமாக நினைக்கிறார்கள் என்ரு கொஞ்சம் புரிந்தது. ஒருநாள் விகடன் நண்பருடன் செலவிட்டேன். அங்கும் கோப்பைகளின் சத்தத்தில் கனவுகள் விரிந்தன. எல்லோருடைய கனவுகளும் நிறைவேற இறைவன் அருளட்டும்.

மீனாக்ஸ் கல்யாணம் போக முடியாமல் போனது. ஜூன் ஏழாம் தேதி சிகிச்சை மற்றும் அதன் பின்னான ஓய்வு என்று சுணங்கிப் போனது. டோண்டு மற்றும் முன்னாள் திராவிட ராஸ்கோலை சந்திக்க முடியவில்லை. காசியுடனும், ஜெயஸ்ரீயுடனும் தொ(ல்)லை பேசினேன். ஜெயஸ்ரீ லேசிக் சிகிச்சைக்கு தைரியம் கொடுத்தார்.

வீட்டம்மாவை ஊருக்கு அழைத்துப் போகாததால் கொஞ்சம் போர் அடித்தது. சூர்யா அம்மா ஞாபகமே இல்லாமல், என்னை சோதனை செய்யாமல்
நல்ல பையனாக இருந்தான். புதுப்பேட்டை என்ற காவியத்தை மட்டும் எங்கள் ஊர் விஜயா தியேட்டரில் செல்வராகவனையும், தியேட்டர் ஓனரையும் கொஞ்சம் சபித்துக் கொண்டே பார்த்தேன். ஊருக்கு திரும்பி வருகையில், கிண்டி லீ மெரிடியனில் குடும்பத்தினருடன் ஒரு சின்னக் கூட்டம்

மற்றபடிக்கு வேறு ஏதும் சுவாரசியமான சம்பவங்கள் அற்ற, குழப்பங்கள் இல்லாத இனிய பயணம். அடுதத முறை போவதற்குள் பயணநேரம் பாதியாகக் குறையும்படி எந்த விஞ்ஞானியாவது எதையாவது கண்டுபிடித்தால் மிக்க சந்தோஷம்.

Wednesday, June 28, 2006

நான்கு இரண்டான கதை

வேண்டி விரும்பி பெற்றதில்லை
பிறப்பிலேயே வரமாகி வந்த வேதனை
இது பிறக்கவே வேண்டாம் என்று
நினைத்ததனால் வந்த வேதனை

கர்ணனுக்கு கவச குண்டலம் போல
காதுக்கும் மூக்குக்கும் கண்ணுக்கும்
பாலமாய் என் பாவமாய் இருபதாண்டாய்
முளைத்திருந்த கண்கள்

அம்மாவுக்கு வேண்டுதலாய் போன
எனக்கு வேண்டாத சுமையான
என் வேகத்தை மட்டாக்கிய
என் இனியர்கள் எனக்கு கூப்பிடுபெயராய்
சூட்டி அழகு பார்த்த

என் கண்ணாடிக் கண்களை....

நெய் மணக்கும் பண்டங்களுக்கே
நானறிந்த அகர்வால் என்ற பெயர்
ஆயுசுக்கும் மெய் சிலிர்க்க என்
கண் திறந்தது இந்தப் பயணத்தில்.

இந்தியாவிலிருந்து திரும்பி இருக்கிறேன்
இரண்டு கண்ணனாக.

தைரியம் தந்த செல்வாவுக்கு நன்றி.

Tuesday, May 09, 2006

ஹை...யா..இந்தியப் பயணம்

கடந்த ஒரு மாதமாக சரியான வேலை. மே மாதம் ஆறாம் தேதி சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை ஒட்டிய கொண்டாட்டம். தொண்டரடிப்பொடிகளில் ஒருவனாக இருப்பதால், நிகழ்ச்சியை நடத்துவதில், ஒருங்கிணைப்பதில் மெனக்கெட வேண்டி இருந்தது. தவிர சூர்யா இரு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றான். மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்ட நடன/நாடகமாக இருந்ததால் அவனுக்கு பயிற்சிக்காகவும் ஏகப்பட்ட முறை போக வேண்டி வந்தது.

வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.

இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.

ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை

மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். து அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.



அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.

வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.

துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Friday, May 05, 2006

இளஞ்சேரன் பாண்டியன்

சேரன் மீது எனக்கு டைரக்டர் என்ற முறையில் பெரிய அபிப்ராயமெல்லாம் கிடையாது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, மனிதனின் மிக மென்மையான பகுதியை வருடிவிட்டு, சோக உணர்ச்சியை தூண்டிவிட்டு படம் எடுக்கிற ஆசாமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும், எதற்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று அவர் படங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு அழும்போது, எரிச்சலாக இருக்கும். அழுகிற ஆண்களின் மீது எனக்கு நம்பிக்கை வருவதில்லை.

விகடனில் இந்த வாரம் முடிந்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் அந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. அதிலும் நிறைவுப் பகுதி பலே ஜோர். டைரக்டரின் அப்பாவாயிட்டோமே என்ற கெத்தெல்லாம் பார்க்காமல் பழையூர்ப்பட்டி ஆபரேட்டர் பாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அபிராமி ராமநாதனிடம் "மொதலாளி" என்றழைத்துப் பேசிய சேரனின் அப்பாதான் சேரனின் இன்றைய வெற்றிக்கும் ஆபரேட்டர்



சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.

டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று தொடர். விகடன் பிரசுரமாக அது வெளிவரும்போது அது ஆடும் கூத்து, காலம் என்கிற மாயக்கண்ணாடியில் பலவண்ணங்களில் தெரியும்.

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி

Monday, March 20, 2006

திங்கள் சூசகம்

ஹி..ஹி..




111 இடங்களில் தனித்துப் போட்டி




இவருக்கு அதுக்குள்ள ரிசல்ட் எப்படித் தெரிஞ்சது..??




டேய் ..மூக்கு..!! ஜாக்கிரதை. என் நெலமை உனக்கும் வந்துரப் போவுது...!!

சாகஸ ஞாயிறு

ஒரே திருவிழாக் கூட்டம்தான். அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா நெடுஞ்சாலைகளும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டி, திக்கித் திணறின. ஏழெட்டு மைல் முன்பிருந்தே மினுக்கும் பலகைகள் வேறு வழிகளை நாடச்சொல்லி கெஞ்சின.
மக்கள் கேட்கவில்லை.குளிர்காலம் முடிந்து வெய்யில் கிட்டத்தட்ட "சுள்"ளென்று உறைக்குமாறு அடிக்கும் நேரம். எல்லோரும் ஓவர்கோட் போட்டுக் கொண்டு, முன்னெச்சரிக்கையாக சன்ஸ்கிரீன் பூசிக் கொண்டு(ம்), மடக்கு நாற்காலிகள், பெட்ஷீட்டுகள், குளிர் கன்ணாடிகள், சிப்ஸ்/பிஸ்கட், குழந்தை குட்டிகளுடன் பெரிய்ய்ய பேரணியாகவே கிளம்பி விட்டார்கள்.

மாயூரத்தில் அஞ்சாம் திருவிழாவுக்கு தேர் பார்க்கப் போவது போல இருந்தது.

இது அமெரிக்க விமானப் படையின் முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் தொடர்புக்கு அருமையான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்லுவேன். சாக்ரமண்டோவில், மேத்தர் ஃபீல்ட் என்ற இடத்தில் உல்ள ஏர்ஃபோர்ஸ் பேஸில், எல்லா வகையான பறக்கும் ஊர்திகளையும் கொண்டு வந்து வானில் சாகஸம் நிகழ்த்திக் காட்டும் ஏர் ஷோ. தலைக்கு 15$.
இத்துடன் கார் பார்க்கிங், மற்றும் உள்ளே சுற்றுலா பொருட்காட்சி திடலில் சாப்பாடு விற்பது போல அநியாய விலையில் சாப்பாட்டு/பீர் கடைகள்.
அடேங்கப்பா...இவங்க எது செஞ்சாலும் பெரிசா தான் இருக்குது. அபான வாயு விட்டாக் கூட மைக் வெச்சுத்தான் விடுவாங்க போல ;-)

ஆனா, இந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே பிரம்ம்ம்ம்....மாண்டம்தான்.

முதலில் கிளைடர் வகை குட்டி விமானங்கள். வானில் எல்லாப் பக்கமும் உரண்டு, புரண்டு, திரும்பி, கவிழ்ந்து, ஏறி, இறங்கி, வானத்திலேயே ஜாங்கிரி பிழிவது போலவும், ரங்கோலி போடுவது போலவும் ஆட்டம் காட்டி கிலி கிளப்பின. இவர்கள் இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட வேண்டுமென்றால், அரிசி, உளுந்து, தேங்காய், பொட்டுக்கடலை, கொஞ்சம் ப.மிளகாய் , உப்பு, தண்ணீர் குடித்து விட்டு ஏறினால் போதும் என்று நான் அடித்த கமெண்ட் புரிந்து கொண்டு சிரிக்க யாரும் இல்லாமல் காற்றில் கரைந்தது. காரணம் வீட்டம்மாவும் பசியில் இருந்தார்.

அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் வந்து ஆட்களை மீட்பது, பாராசூட்டில் இறக்கி விடுவது, கீழே காயம்பட்டவனை காப்பற்றி தூக்கி செல்வது என்று செய்து காட்டின. கூட்டம் சற்றே அசந்து கால் பரப்பி உட்கார்ந்தபோது கிளைடர் விமானங்களில் இருந்து பலத்த சத்தத்துடன் குண்டு வீசி நெருப்பை கிளப்பி சூடேற்றின.



பிறகு வந்தன ப்ளூ ஏஞ்சல் வகை விமானங்கள். அத்தனை வேகத்தில், அத்தனை துல்லியமான இடைவெளியில் அத்தனை அழகாக ஆறு விமானங்கள் பறந்து நான்கண்டெதேஇல்லை. வேறு யாராவது படம் பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருந்தால் கண்டிப்பாக
க்ராஃபிக்ஸ் என்று லொள்ளி இருப்பேன். அத்தனை ஆச்சரிய சாகசம்.
நம்மூரில் இப்படிப்பட்ட ஏர்ஷோக்கள் குடியரசு தின, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக இருக்குமோ என்னவோ, இது போல எங்கும் மக்கள் தொடர்புக்காக நடத்துவது மாதிரி தெரியவில்லை. இப்படி எல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தினால், நம் பாதுகாப்புப் படை மீது நிஜமாகவே மரியாதை பிறக்கும். "மிலிட்டரிக்காரனா,,?? வம்பு பிடிச்ச பயலுங்கப்பா..?? ரம்மையும், கோழியயும் தின்னு கொழுத்துபுட்டு, ஊருக்கு லீவுல வந்தா கண்ட இடத்தில் வம்பு வளத்துகிட்டு திரியறானுங்க" போன்ற புகார்கள் குறையும்.

நேற்று காலை பத்து மணிக்கு உள்ளே போன நாங்கள் வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அடித்துப் போட்டாற்போல தூங்கிவிட்டு, காலையில் ஆபீஸ் விரையும்போது, மேலே ஒரு அலுமினியப் பறவை ஆடாமல், அசையாமல் நேராகச் சென்றது.

ஆச்சரியமாக இருந்தது. பைலட்டுக்கு போர் அடிக்காது..?? ;-)

Wednesday, March 01, 2006

லல்லல்லா...லாலு

இந்திய அரசியலில் உச்சபட்ச கேலிக்கு உள்ளாகும் ஆட்களில் லாலுவும் ஒருவர் என்பது புதிய செய்தி இல்லை. அவருக்காகவே ஸ்பெஷலான ஜோக்குகள், அவருடைய பேட்டி க்ளிப்பிங்குகள், அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை என்று எல்லாமெ நமக்கு ஜோக்குதான்.



என்னுடைய காலேஜ் சீனியர் - ஐ.ஆர்.எஸ் நண்பர் பாலா, தன்னுடைய பேட்ச்சில் இருந்த பீஹார் நண்பர்கள் லாலுவின் மேல் வைத்திருந்த அபார மதிப்பை, எனக்கு ஒரு காலத்தில் சொன்னார். மீடிவாவின் சித்தரிப்புக்கு மாறாக லல்லு எவ்வளவு நல்ல மனிதர் என்றும் அவர் சொன்னபோது நம்பவில்லை.

இந்த வார விகடனில் வந்திருக்கும் கலக்குறாரு லாலு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பார்வைக்கு :


ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்’ என்று யாராவது கேட்டால் தடுமாற வேண்டிய தேவையே இல்லை. சும்மா ‘லாலு’ என்று சொன்னாலே போதும்! சிரிப்பு தானாகவே வரும்! அப்படி ஒரு காமெடியனாக பலராலும் சித்திரிக்கப்பட்டு வருகிறவர்தான் முன்னாள் பீகார் முதல்வரும் இந்நாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்! அப்படிப்பட்டவர் கடந்த இரண்டு வருட காலமாகப் பலரும் பாராட்டும் அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துக் கொண்டிருப்பது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம்! ரூபாய் 14,293 கோடி உபரி பட்ஜெட்டாக இந்த முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அசத்தியிருக்கிறார் லாலு.

‘Right person at right place and at right time’ என்பார்கள் ஆங்கிலத்தில். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கும் மிகச் சரியான ஆளுக்கு எல்லாமே நன்றாக நடக்கும்’ என்பதுதான் இதன் பொருள். கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் தொழில்துறை நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னேறி வரும் எந்த ஒரு நாட்டிலும் போக்குவரத்துத் துறை முக்கியத் துவம் பெறும். அதிலும் சரக்குப் போக்குவரத்துத் துறை அதிவேகத்தில் முன்னேறும். இப்படி ஒரு தருணத்தில்தான் லாலு பொறுப்பேற்றார். Ôகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு லாலு பெயர் தட்டிச் செல்கிறார் எனச் சொல்பவர்களும் உண்டு.

முதலில் லாலு என்ன செய்திருக்கிறார் எனப் பார்ப்போம். மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால், இரண்டாம் வகுப்புக் கட்டணத்தில் பொதுவாகவே யாரும் கைவைப்பதில்லை. லாலுவும் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதேசமயம், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. கட்டணங்களை பத்து சதவிகிதத்தில் இருந்து பதினைந்து சதவிகிதம் வரை குறைத்துள்ளார். ஐந்நூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விமானப் பயணம் சாத்திய மாகியுள்ளதைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சமயோசிதமான முடிவு இது. நடுத்தட்டு மக்களும் பயணம் செய்யும் விதமாகத் தற்போதைய ஏ.சி. 3 டயர் கட்டணத்தைவிட 25 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் ஏ.சி. பயணத்துக்கும் வழிவகுத்திருக்கிறார். ‘ஏழைகள் ரதம்’ (கரீப் ரத்) என்ற பெயரில் இதற்கென தனி ரயிலே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ரயில்வேக்கு முக்கிய வருவாயே சரக்குப் போக்குவரத்தில் இருந்துதான். பல எண்ணெய் நிறுவனங்கள் குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுசெல்ல ஆரம்பித்திருப்பதால், அது ரயில்வேயைப் பாதிக்கலாம் என்பதை உணர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை 8 சதவிகிதம் குறைத்துள்ளார். மற்ற சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. இரும்பு, எண்ணெய், சிமென்ட் போன்ற விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சீஸனைப் பொறுத்துக் கட்டணத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை சிறப்புக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மட்டுமல்லாது, அதன் தயாரிப்புக்குத் தேவை யான மூலப் பொருட்களையும் இனி ரயில் மூலமாகவே கொண்டுவருவார்கள் என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுத்த பிசினஸ்மேன் போல லாலு பரிணாமம் எடுத்திருப்பதையே இது காட்டுகிறது! அதிலும், சாலைப் போக்குவரத்தையே நம்பி இருந்த நிறுவனங்கள், சரக்கு லாரிகளில் ஓவர்லோடுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்குப் பின் கொஞ்சம் உடைந்து போயிருந்தன. இந்நிலையில் அவர்களுக்கு லாலுவின் பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம்தான். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே முன்வந்திருப்பது, அதன் சிந்தனை ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. அதேபோல பாராட்டப்பட வேண்டிய துணிச்சலான முயற்சி, கன்டெய்னர் ரயில்களில் தனியாருக்கு அனுமதி. அதேபோல, பயன்படுத்தப்படாமல் நாடெங்கும் கிடக்கும் ரயில்வேக்கு சொந்தமான ஏகப்பட்ட இடங்களைப் பல வகைகளில் தனியார் பயன்பாட்டுக்கு வாடகைக்குக் கொடுத்து காசு பார்த்திருப்பதும் சரியான முயற்சியே!

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமும் லாலுவின் பட்ஜெட்டில் உண்டு. இதுவரை சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் 80 வகை சரக்கு களாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத்தக்க போக்குவரத்துக் கட்டண விகிதம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த எண்ணிக்கை 28 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டண விகிதம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. லாலுவுக்குப் பாராட்டுக் கிடைப்பதற்கு ரயிவே நிர்வாகத்தின் திறமையான நடவடிக்கைகளும் ஒரு காரணம். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் பொருட் களை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவான ‘காஸ்ட் ஆஃப் காரேஜ்’ டன் ஒன்றுக்கு 61 பைசாவில் இருந்து 51 பைசாவாகக் குறைந்திருப்பது, ரயில்வேயின் செயல்பாட்டில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான டி.ஏ. காரணமான செலவு அதிகரித்திருக்கும் அதே தருணத்தில், அதையும் மீறி ரயில்வே லாபத்தில் இயங்குவது, அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பால்காரர்கள், விவசாயிகளுக்குச் சலுகை என்பது போக, வழக்கம்போல புதிய ரயில்களுக்கான அறிக்கைகள் என்று இருந்தாலும், தமிழகத்துக்குத் தேவையான பல முக்கிய வழித்தடங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு திருப்திகரமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை காரைக்குடிக்கு இடையிலான அகல ரயில்பாதை போன்ற மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் சில இந்த பட்ஜெட்டில் இடம்பிடித்திருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளில் யார் காரணம் என்ற போட்டாபோட்டி வராமல் இருந்தால் சரி!
2001ம் ஆண்டில் 350 கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் கையிருப்பு இன்று லாலுவின் கீழ் 11,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! எந்த ஒரு தனியார் நிறுவனம்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை இது! இன்றைய நிலையில் லாலு மட்டும், ஏதாவது ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு வேலை கேட்டு மனு செய்தாரென்றால், அவரைக் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்! நிர்வாகம் தெரியாதவர் என எள்ளி நகையாடப்பட்ட சில தலைவர்கள், பின்னர் நிர்வாகத்தில் பின்னி எடுத்தது நாம் கண்ட ஒன்றுதான். அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுதான்... ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’எனும்குறள் போல தனக்குத் தெரியாத விஷயத்தில் தேவையில்லாத தலையீடுகள் செய்யாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் சொல்லி விட்டு, அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை உரிய அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்கள். அதைதான் லாலு செய்திருக்கிறார்... நிர்வாக சீர்திருத்தம் செய்தேன்... சலுகைகளை வாரிக்கொடுக்க முடிந்தது என்று ஒரே வரியில் இந்த பட்ஜெட்டை தானே விமர்சித்திருக்கிறார் லாலு!

Friday, February 24, 2006

புஷ்பராஜா நேர்காணல்



" எல்லோரும் ஈழ விடுதலைக்காகப் போராடினோம். எனினும், நாங்களும், மற்ற ஆயுதக் குழுக்களும் விடுதலை பற்றிய தத்துவக் கோட்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தோம். இது சகோதரக் கொலையில் கொண்டு போய் எங்களை நிறுத்தியது"

"ஈழத்துக் கவிஞர் சிவசேகரத்தின் கவிதை ஒன்று...

துரோகி எனத் தீர்த்து
முன்னொரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது
குற்றஞ் சாட்டியவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனைச்
சுட்டது
தீர்ப்பை ஏற்றவனைச்
சுட்டது
சும்மா இருந்தவனையுஞ்சுட்டது....."

"தேதியை நிச்சயித்தபடி வரும் மரணத்தில் சில சௌகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு, துரிதமாக முடிக்கலாம். எழுத விரும்புவதை எழுதலாம். சந்திக்க விரும்பும் நண்பர்களைச் சந்தித்து அளவளாவி மகிழலாம். ஆனால், என்ன ஒன்று... இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கப் போகிறோம் என்பதால், ஆசை கட்டுக்கடங்காமல் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை ஆசைகளும் இவ்வளவு நாள் எங்கே இருந்தன என்று தெரியவில்லை. இறுதித் தேர்வை எழுதும் மாணவன் போல் என்னை உணர்கிறேன்."

"ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது"


ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஷ்பராஜா

உணர்ச்சி பூர்வமான, நெகிழ்வான கட்டுரைக்கு விகடனுக்கு நன்றி.


புத்தகம் தொடர்புடைய சில சுட்டிகள்:

சுந்தரவடிவேல் பாரா வெங்கட் டிசே

Thursday, January 12, 2006

வாழ்த்துகள் மலேசியா ராஜசேகரன்!!!!

இந்த வார அவள் விகடனில் ஒரு பணிப்பெண்ணின் தன்மானப் போராட்டம் என்ற தலைப்பில் மலேசியா ராஜசேகரன் சென்ற பதிவில் குறிப்பிட்ட "டிப்ஸ்" சம்பவம் வந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராஜசேகரன் ஐயா.

அவள் விகடனில் இருந்து:

சீனாவின் உட்புறங்களில் பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், கேளிக்கை மையங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்க மறுத்துவிடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘‘சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. செய்யும் வேலைக்கான ஊதியத்தில் நாங்கள் குறியாக இருப்போம். அது அல்லாது, ‘சன்மானம்’ என்று தரப்படுவதை வாங்குவது என்பது எங்கள் கலாசாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது!’’ என்றார்கள்.

இதுகுறித்து நான் நேரில் கண்ட சுவாரஸ்யமான ஒரு சம்பவம்... ஒருமுறை, சீனாவில் உள்ள ‘ஹ§னான்’ மாநிலத்தின் தலைநகரமான ‘சங்ஸா’ என்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு நானும் ஒரு நண்பரும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து இருந்த மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதி இருவர் இருந்தனர்.
தங்களின் சாப்பாட்டுக்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையில் இருந்து 30 யுவானை (ஹிஷி$ 3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பரிமாறிய சீனப் பணிப்பெண்ணிடம் ‘டிப்ஸாக’ நீட்டினார். அந்தப் பெண் அதை வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருக்கவும், அந்த அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் தோள்களையும் ‘சரணடைந் தேன்’ என்கிற பாணியில் உயர்த்திக் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.


மனைவியிடம் பேசிக்கொண்டே உணவகத்தின் வாசல் வரை போனவர், திரும்பிப் பார்த்தபோது, அந்தப் பணிப்பெண் கையில் சில தட்டுகளோடு உணவகத்தின் பின்னே இருந்த சமையற்கட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
உடனே, அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளை போல் கிடுகிடு என்று ஓடி வந்து, அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது அந்த 30 யுவானை வைத்துவிட்டு, கிடுகிடு என்று ஓடி மனைவியோடு, வீதியில் சென்ற கூட்டத்தில் கலந்துவிட்டார்.


சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்தப் பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். பணத்தை சட்டென்று எடுத்துக்கொண்டு உணவகத்தின் வெளியே ஓடினார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், நண்பரும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்துவிட்டோம். எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதியை தேடியபடி, நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு, உணவகத்தில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின்தொடர்ந்து சென்ற நான், டாக்ஸி நின்றிருந்த இடத்துக்கு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்ஸியை அணுகிய அந்தப் பணிப்பெண் ஓட்டுனரின் கதவைத் தட்டி டாக்ஸியை நிறுத்திவிட்டு, பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதி யிடம் ஜன்னல் வழியாக அந்த 30 யுவானை நீட்டியபடி, முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். விடாது போராடி, அந்த அமெரிக்கரிடம் பணத்தை ஒப்படைத்த பின்னரே, அங்கிருந்து நகர்ந்தார்.

நான் நாற்பது நாடுகளுக்கு போய் வந்த அனுபவம் உள்ளவன். இத்தகைய ‘தன்மான உணர்வை வெளிக்காட்டும்’ ஒரு சம்பவத்துக்கு ஒப்பான சுற்றுப்பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. & மலேசியா

ராஜசேகரன்

Thursday, January 05, 2006

இரண்டு முறை காணாமல் போன பதிவு

1. சீன சமூகத்தில் படிப்பு

சீனர் தம் பிள்ளைகளின் படிப்பில் அளவுக்கு அதிகமான நாட்டம் காட்டுவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சீனர்கள் வீடு வாசல்களை விற்று தம் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஒரு மிச சாதாரண நிகழ்வு. இப்போது எல்லா இன மக்களும் தம் பிள்ளைகளின் படிப்பின்பால் அதிகமான நாட்டம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், சீனர்களிடம் இந்த தாக்கம் எப்போதும் சற்று கூடுதலாகவே இருந்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எனக்கு தெரிய மலேசியாவில் ஒரு 30 - 40 வருடங்களாக மார்க்கட்டில் காய்கறி விற்கும் சீனர் கூட இரவு பகலாக உழைத்து தம் பிள்ளைகளை ஐரோப்பா, அமெரிக்கா என்று அனுப்பி சிறந்த பல்கலைகழகங்களில் நல்ல படிப்புக்களை படிக்க வைத்து விடுவார். இது ஏதோ அத்தி பூத்தார் போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். மலேசியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றுர்களிலும் இது ஆயிரக்கனக்கான சீன குடும்பங்களால் செயல் படுத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
சீனர்கள் படிப்பிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லா இனங்களுக்கும் பொருந்தும் பொதுவான காரணங்களை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று பிரத்தியேகமான பாரம்பரிய சரித்திர காரணங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கிய இரண்டை இங்கு விளக்குகிறேன் :-

அ). ( Confuciunism ) கன்பியூசியனிசத்திின் தாக்கம்

சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை. இவர் வாழ்ந்த காலத்தில் சீன நாட்டில் இவருக்கு ஓரளவே வரவேற்பே இருந்தது என்றாலும், இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர், கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்தர்களான ஆன சிஷ்யபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, /கன்பியூஷியனிஸம்/ எனும் வாழ்க்கை வழிமுறை தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.

கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றினஅடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாளும் அரசனின் பல கடமைகளிலுல், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமையும் ஒன்று" என்பதுதான்.

காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன. அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸத்தை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமல்படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது.
ஆதலால் 2,000 வருடங்களுக்கு முன்பிருந்தே படிப்பின் ஆழமும், அதன் தன்மையும் மற்ற இனங்களை காட்டிலும் சீனர்களுக்கு மிகப் பரவலாக தெரிந்தும், புரிந்தும் இருந்திருக்கின்றது.

1 ஆ). (Chinese Imperial Examination) சீன அரசு தேர்வு பரிட்சையின் தாக்கம்

சின நாட்டின் சரித்திரத்தில் கி.பி. 600 ஆம் ஆண்டின் வாக்கில் 'சுயி' என்ற அரசன் தான் பல பாகங்களாக சிதறுண்டு கிடந்த சீன நாட்டை ஒன்று சேர்த்தவன். அப்படி ஒன்று சேர்க்க பட்ட நாடு மிக பெரிய, பறந்த பிரதேசமாக இருந்ததால், அதன் நான்கு திசைகளிலும் இருந்த நகரங்களையும், சிற்றுர்களையும், கிராமங்களையும் நிர்வகிக்க அரசனுக்கு திறமையான பல நிர்வாகிகள் தேவை பட்டனர். அதற்கு முன் அரசு நிர்வாகத்தை பார்த்து வந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது அரசனுக்கு அதிகமான நம்பிக்கை இல்லாது இருந்ததால், நாடு முழுவதிலும் உள்ள திறமைசாலிகளை அடையாளம் காண வேண்டி 'அரசு தேர்வு பரிட்சை' (imperial examination) என்ற தேர்வு முறையை துவக்கினான். ஆறிலிருந்து, பன்னிரண்டு நிலைகளை உடைய இந்த பரிட்சை முறை எத்தனையோ மன்னர்களும், சாம்ராஜியங்களும் வந்து போயிருந்த சூழ்நிலையிலும் நிறுத்த படாமல் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை தொடர்ந்து 1,300 வருடங்கள் அமுலில் இருந்திருக்கின்றது.

இந்த பரிட்சையில் சீன நாட்டில் பிறந்த யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்ற நிலை இருந்திருக்கின்றது. காப்பியங்கள், சீன இலக்கியம், ராணுவ வியூகங்கள், வரி மற்றும் நிதி நிர்வாகம், விவசாயம், பூலோகம், சட்டம், எழுத்து வண்ணம் (calligraphy), ஓவிய கலை என்று பல கலைகளை உள்ளடிக்கிய இந்த பரிட்சை முறையின் கடைசி நிலையில், பரிட்சைக்கு அமர்பவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் வரை பரிட்சிக்க பட்டிருப்பதாக சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பண்டைய சீனாவில் இந்த பரிட்சைகளில் வெற்றி பெற்றவர்கள்தான் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அரச நிர்வாகிகளாக அமர்த்த பட்டனர்.

ஏழ்மை நிலையில் பாமர வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்றைய சீனர்கள், இந்த பரிட்சையை தங்களை ஏழ்மையிலிருந்து மீள வைக்க கூடிய ஒரு ஏணியாகவே நினைத்தனர். ஒரு குடும்பத்தை சார்ந்த ஆண்மகன் ஒருவர் இந்த பரிட்சையில் தேர்ச்சியுற்று அரசாங்க அதிகாரியாக நியமிக்க பட்டால், அவரால் அவரின் குடும்பம் மட்டுமல்லாது, அவர் பிறந்த கிராமமே வளமடைந்துள்ளது. இதனால் 1,400 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனர்கள் தம் பிள்ளைகளை படிக்க தூண்டும் இயல்பு உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த பரிட்சை முறை பண்டைய சீனாவிலிருந்து ஜப்பான், கொரியா, வியட்னாம் அகிய நாடுகளுக்கும் பறவியுள்ளது. பிறகு சமீபமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்து ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரர்களும் உலகம் முலுவதும் பரந்து விரிந்து கிடந்த தங்கள் காலனிகளை நிர்வாகம் செய்வதற்கென்று அனுப்பிய நிர்வாகிகளை, சீனர்களின் இந்த பரிட்சை முறையை உதாரணமாக கொண்டுதான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர் என்று சீன ஆராய்ச்சிளார்கள் கூறி வருகின்றனர)்.

2. சீனர்களும் உழைப்பும்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி சீனர்கள் பெரும்பாலும் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள். கடின உழைப்பு என்பது அவர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 50 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும்்் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

3). தொழில் போட்டியாளர்களாக சீனர்கள்

சீனர்கள் வியாபாரத்தில் பயங்கரமான போட்டியாளர்களாக் இருப்பார்கள். இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும். தொழிலில் போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடுவதே கிடையாது். இதற்கு எத்தனையோ உதாரணங்களை உள்ளன, ஆனால் ந்ம யாவருக்கும் பரிச்சயமான சூழலிலிருந்து ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடா வருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40 - 50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், சீன வியாபாரிகள்தான். இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை. இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் இங்கு தங்களின் விலையை சட்டென்று குறைத்து விடுவார்கள். இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல்் சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றிவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுவார்்்.

4). சீனர்களும் எண்களும், வர்ணங்களும்

சீனர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புபவர்களும் கூட. சீனர்களுக்கு '8' மிகவும் அதிர்ஸ்டமான எண். அதேபோல் '4' துரதிர்ஷ்டமான எண். இதற்கு காரணம் சீன மொழியில் எட்டு என்ற சொல் தனம், பொருள் எனும் ஒலியை ஒட்டியதாக இருக்கும். அதே சமயம் நான்கு என்ற சொல் மரணம் என்ற ஒலியை ஒட்டியதாக இருக்கும். இதனால்தான் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான மாநகரங்களில் பல மாடி கட்டிடங்களில் நான்காவது மாடியை '3A' என்று குறிப்பிடுவார்கள், அதே போல வர்ணங்களில் சீனர்களுக்கு பரவலாக பிடித்த வர்ணம் சிவப்பு. அவர்கள் கலாச்சாரத்தில் சிவப்பு வர்ணம் சந்தோஷம், புகழ், செல்வம் ஆகியவற்றை குறிக்கும்.

5). புது வருட பிறப்பின் போது சீனர்கள் கடைபிடிக்கும் சில சம்பிரதாயங்கள்

சீனர்கள் புது வருட பிறப்பின் முதல் நாள் இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு வீட்டை பெருக்க மாட்டார்கள். காரணம் வீடுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நாமே கூட்டி வெளியே தள்ளினால்் போல் ஆகிவிடும் என்று அவர்களுக்கு ஒரு ஐதீகம்.
சீன புத்தாண்டின் முதல் நாள் இரவு சீனர்கள் ஒரு பெரிய குடும்ப விருந்தை சமைத்து, மூதாதையர்களை வணங்கி, அவர்களுக்கு உணவு படைத்து, குடும்பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து யாவரும் உண்பர். அடுத்த 15 நாட்களுக்கு அனுசரிக்க படும் புத்தாண்டு வைபத்திலேயே, குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த விருந்தில் கலந்து கொள்வதுதான் மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப் படுகிறது். பொருள் ஈட்டுவதற்கென்றும், படிப்பிற்கென்றும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் யார் எந்த திசைக்கு போய் வசித்து வந்தாலும சரி், இந்த விருந்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன புத்தாண்டின் போது அவரகள்் குடும்பத்தோடு நிச்சயமாக தகப்பன் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இது இன்றளவும் சீனர்கள் போற்றி கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களில் ஒன்று. நடைமுறையில் இந்த குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் ் தாக்கம் என்ன வென்றால், புது வருட பிறப்பின் போது வீட்டிற்கு போகும்போது கடந்த வருடம் எப்படி இருந்தது என்று எல்லோரும் கேட்பார்களே, என்ற உத்வேகத்திலேயே சீனர்கள் வருடம் முழுவதும் தம்மை மேம்படுத்தி கொள்ள இன்னும் கூடுதளாக உழைப்பார்கள்.

6). வேலை செய்யும் இடங்களில் சீனர்களை அனுகுவதற்கான டிப்ஸ்

அமெரிக்க, கனேடிய ், ஐரோப்பிய சீனர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆதலால் நான் இங்கு கூறுவது அந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தாமல் இருக்கலாம். இந்த பாரா மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து போய் சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்களுக்காக எழுத பட்டது.

- இயல்பிலேயே சீனர்கள் சிறிது arrogantஆன பேர்வழிகள் தான். மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். இது ரூட்டீனான ஒரு உண்மை. இதை பற்றி அவர்களோடு வேலை செய்யும் நாம் கவலை பட்டோ, மனம் வெதும்பியோ ஆக போவது ஒன்றுமில்லை. ஆதலால் சீனர்கள் மெஜாரட்டியாக உள்ள நிர்வனங்களில் வேலை செய்பவர்கள் சிறிது எதார்த்தமாக எதையும் எடுத்து கொள்வது நல்லது.

- சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்கள் தங்களின் உடை உடுத்தலில் அக்கறை காட்டுவது மிக மிக முக்கியம். காரணம், மண்டையின் உள்ளே உள்ள மூளை நன்றாக வேலை செய்வது தான் முக்கியம்் என்று நினைப்பது நமது கலாச்சாரம். ஆனால் மூளை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மனிதனின் வெளி தோற்றமும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சீனர்களின் கலாச்சார கூறு. அதனால், ஒரு சராசரி சீனர் நம்மை விட துணிமணிக்கென்று இரண்டு, மூன்று மடங்கு அதிக பணம் செலவு செய்வார். அவரோடு ஒத்த லெவலில் நாம் பழக வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஒன்று உண்டு என்றால்், அதற்கான முதல் கட்ட தயார் நிலை, நமது உடுப்பை தயார் செய்வது கொள்வது தான்.

- வேலையில் உங்கள் திறமையை பலரும் உணரும் வகையில் காண்பியுங்கள். தேவை பட்டால் internal memo மூலம் நீங்கள் செய்து முடித்த வேலையின் கூறுகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இப்படி நீங்கள் உங்களின் வேலை சம்மந்த பட்ட விஷயங்களை ரெக்கார்டு பண்ணுகிறீர்கள் என்று தெரிந்தாலே, உங்கள் மேல் அனாவசியமான extra work load ஐ தினிக்க பொதுவாக மற்றவர்கள் பயப்படுவார்கள். நான் சீனர்களோடு வேலை செய்த காலத்தில் இந்த அனுகுமுறை எனக்கு மிகவும் உதவியாக இருந்ததது.

- சீனர்களை விட நமக்கு அபாரமாக வாய்த்த வித்தை 'சொல் வித்தை'. நமக்கு உள்ள அளவுக்கு சீனர்களுக்கு மொழி வளம் ஏற்படுவது கிடையாது. இந்த உண்மை சீனர்களுக்கும் மிக நன்றாக தெரியும். ஆதலால் உங்களுக்கு ஆங்கில மொழி வளம் நன்றாக இருந்தால், அவர்களிடம் பழகும்போது அந்த அட்வாண்டேஜை உங்களுக்கு சாதகமாக பல வகையில் பயன் படுத்தி கொள்ளலாம்.


- முற்றும் -

இந்த பதிவோடு நண்பர் சுந்தரராஜனின் வலைபதிவில் என் கட்டுரைகளை பதிப்பதை நிறுத்தி கொள்ள விரும்புகிறேன். இதற்கு மேலும் நண்பரை நான் சிரம படுத்துவது முறையாக பட்வில்லை. இதற்கு பின்னர் நான் எதுவும் எழுத விழைந்தால் எனக்கென்று ஒரு தனி வலைபதிவை துவக்கி, அதில் என் கட்டுரைகளை பதிப்பிடுகிறேன். நன்றி. வணக்கம்.

Monday, January 02, 2006

பொங்கும் பூம்புனல்


சிலோன் ரேடியோ மேட்டர் இல்லை..லோக்கல் நியூஸ் இது.

சென்னையிலும் சிதம்பரத்திலும் டீவி வழியாக பார்த்த வெள்ளம் சாக்ரமண்டோவுக்கும் வரும் என்று நினைத்தேனா..?? கடந்த ஒரு வார காலமாக கனமழை, சுற்றிசுழன்று அடிக்கும் காற்று என்று எங்கள் ஏரியா அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் வயிற்றில் பயமூட்டை கட்டிக் கொண்டு மணல் மூட்டை மேல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல நெடுஞ்சாலைகள் மண்சரிவுகளால் மூடப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவசர அவசமாக தண்ணீரை வழித்து கொட்டிவிட்டு, மேக்கப் போட்டுக் கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட லெவிகள் எல்லாம் காற்றுக்கும் மழைக்கும் முன்னால் எப்படி தள்ளாடுகின்றன என்று நீர்மானகைத் துறை அதிகாரிகள் கவலை படிந்த முகத்துடன் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். எங்கள் அலுவலகத்துக்கு முன்னே உள்ள ராட்சத மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து, சாலையில் போய்க் கொண்டிருந்த கார் மேல் விழுந்திருக்கிறது. நல்ல வேளை காரோட்டிக்கு காயம் இல்லை. எல்லாருக்கும் கட்ரீனா ஞாபகம் வந்து தொலைக்க, ஓஃபிஸ் ஓஃப் எமர்ஜென்சி மேனெஜ்மெண்டிலிருந்து கொடுத்திருக்கும் வெள்ள முன்னேற்பாடுகளை பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். சாக்ரமண்டோவுக்குள்ளே பின்னி ஓடும் அமெரிக்கன் ஆறும், சாக்ரமண்டோ ஆறும் கரைபுரண்டால், நாங்கள் எல்லாம் தரை புரள வேண்டியதுதான். அதிலும் எங்கள் வீட்டீற்கு முப்பது அடி சமீபமாக சாகரமண்டோ ஆற்றிம் வெள்ள நீர் வடிகால் வாய்க்கால் ஓடுகிறது.

வெளியே இவ்வளவு களேபரம் என்றால் என் இல்லத்தில் அதைவிட அதிகம். பள்ளிக்கு செல்லும் பாலகர்கள் எல்லாம் இந்த சீஸனில் அறிவோடு கொஞ்சம் வைரஸையும் விட்டுக்கு எடுத்து வருவார்கள் - மற்ற குழந்தைகளிடம் இருந்து. சூர்யா போன வாரம் எடுத்து வந்த ஃப்ளூ வைரஸ் முதலில் அவனைத் தாக்கி, அவனிலிருந்து வீட்டம்மாவுக்கும் பரவி, இரண்டு பேரும் தும்மலிலும் ஜூரத்திலும் இருமலிலும் கடந்த ஒரு வாரமாக எசப்பாட்டு பாடிக்கொண்டிருக்க, நான் கிலியோடு தனி ரூமுக்கு ஒதுங்கி விட்டேன். காரணம்- டாக்டர் கொடுத்த எச்சரிக்கை - அடுத்த இலக்கு நான் என்று. வீட்டு நிலவரத்தால் வெள்ள நிலவரம் தெரியாது, இன்றுதான் விலாவரியாக படித்து பயந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்.

சில நேரம் நியூஸ் பார்க்காமல் இருப்பதே நல்லதுதான்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...