Wednesday, March 01, 2006

லல்லல்லா...லாலு

இந்திய அரசியலில் உச்சபட்ச கேலிக்கு உள்ளாகும் ஆட்களில் லாலுவும் ஒருவர் என்பது புதிய செய்தி இல்லை. அவருக்காகவே ஸ்பெஷலான ஜோக்குகள், அவருடைய பேட்டி க்ளிப்பிங்குகள், அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை என்று எல்லாமெ நமக்கு ஜோக்குதான்.என்னுடைய காலேஜ் சீனியர் - ஐ.ஆர்.எஸ் நண்பர் பாலா, தன்னுடைய பேட்ச்சில் இருந்த பீஹார் நண்பர்கள் லாலுவின் மேல் வைத்திருந்த அபார மதிப்பை, எனக்கு ஒரு காலத்தில் சொன்னார். மீடிவாவின் சித்தரிப்புக்கு மாறாக லல்லு எவ்வளவு நல்ல மனிதர் என்றும் அவர் சொன்னபோது நம்பவில்லை.

இந்த வார விகடனில் வந்திருக்கும் கலக்குறாரு லாலு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பார்வைக்கு :


ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்’ என்று யாராவது கேட்டால் தடுமாற வேண்டிய தேவையே இல்லை. சும்மா ‘லாலு’ என்று சொன்னாலே போதும்! சிரிப்பு தானாகவே வரும்! அப்படி ஒரு காமெடியனாக பலராலும் சித்திரிக்கப்பட்டு வருகிறவர்தான் முன்னாள் பீகார் முதல்வரும் இந்நாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்! அப்படிப்பட்டவர் கடந்த இரண்டு வருட காலமாகப் பலரும் பாராட்டும் அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துக் கொண்டிருப்பது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம்! ரூபாய் 14,293 கோடி உபரி பட்ஜெட்டாக இந்த முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அசத்தியிருக்கிறார் லாலு.

‘Right person at right place and at right time’ என்பார்கள் ஆங்கிலத்தில். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கும் மிகச் சரியான ஆளுக்கு எல்லாமே நன்றாக நடக்கும்’ என்பதுதான் இதன் பொருள். கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் தொழில்துறை நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னேறி வரும் எந்த ஒரு நாட்டிலும் போக்குவரத்துத் துறை முக்கியத் துவம் பெறும். அதிலும் சரக்குப் போக்குவரத்துத் துறை அதிவேகத்தில் முன்னேறும். இப்படி ஒரு தருணத்தில்தான் லாலு பொறுப்பேற்றார். Ôகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு லாலு பெயர் தட்டிச் செல்கிறார் எனச் சொல்பவர்களும் உண்டு.

முதலில் லாலு என்ன செய்திருக்கிறார் எனப் பார்ப்போம். மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால், இரண்டாம் வகுப்புக் கட்டணத்தில் பொதுவாகவே யாரும் கைவைப்பதில்லை. லாலுவும் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதேசமயம், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. கட்டணங்களை பத்து சதவிகிதத்தில் இருந்து பதினைந்து சதவிகிதம் வரை குறைத்துள்ளார். ஐந்நூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விமானப் பயணம் சாத்திய மாகியுள்ளதைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சமயோசிதமான முடிவு இது. நடுத்தட்டு மக்களும் பயணம் செய்யும் விதமாகத் தற்போதைய ஏ.சி. 3 டயர் கட்டணத்தைவிட 25 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் ஏ.சி. பயணத்துக்கும் வழிவகுத்திருக்கிறார். ‘ஏழைகள் ரதம்’ (கரீப் ரத்) என்ற பெயரில் இதற்கென தனி ரயிலே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ரயில்வேக்கு முக்கிய வருவாயே சரக்குப் போக்குவரத்தில் இருந்துதான். பல எண்ணெய் நிறுவனங்கள் குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுசெல்ல ஆரம்பித்திருப்பதால், அது ரயில்வேயைப் பாதிக்கலாம் என்பதை உணர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை 8 சதவிகிதம் குறைத்துள்ளார். மற்ற சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. இரும்பு, எண்ணெய், சிமென்ட் போன்ற விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சீஸனைப் பொறுத்துக் கட்டணத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை சிறப்புக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மட்டுமல்லாது, அதன் தயாரிப்புக்குத் தேவை யான மூலப் பொருட்களையும் இனி ரயில் மூலமாகவே கொண்டுவருவார்கள் என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுத்த பிசினஸ்மேன் போல லாலு பரிணாமம் எடுத்திருப்பதையே இது காட்டுகிறது! அதிலும், சாலைப் போக்குவரத்தையே நம்பி இருந்த நிறுவனங்கள், சரக்கு லாரிகளில் ஓவர்லோடுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்குப் பின் கொஞ்சம் உடைந்து போயிருந்தன. இந்நிலையில் அவர்களுக்கு லாலுவின் பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம்தான். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே முன்வந்திருப்பது, அதன் சிந்தனை ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. அதேபோல பாராட்டப்பட வேண்டிய துணிச்சலான முயற்சி, கன்டெய்னர் ரயில்களில் தனியாருக்கு அனுமதி. அதேபோல, பயன்படுத்தப்படாமல் நாடெங்கும் கிடக்கும் ரயில்வேக்கு சொந்தமான ஏகப்பட்ட இடங்களைப் பல வகைகளில் தனியார் பயன்பாட்டுக்கு வாடகைக்குக் கொடுத்து காசு பார்த்திருப்பதும் சரியான முயற்சியே!

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமும் லாலுவின் பட்ஜெட்டில் உண்டு. இதுவரை சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் 80 வகை சரக்கு களாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத்தக்க போக்குவரத்துக் கட்டண விகிதம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த எண்ணிக்கை 28 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டண விகிதம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. லாலுவுக்குப் பாராட்டுக் கிடைப்பதற்கு ரயிவே நிர்வாகத்தின் திறமையான நடவடிக்கைகளும் ஒரு காரணம். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் பொருட் களை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவான ‘காஸ்ட் ஆஃப் காரேஜ்’ டன் ஒன்றுக்கு 61 பைசாவில் இருந்து 51 பைசாவாகக் குறைந்திருப்பது, ரயில்வேயின் செயல்பாட்டில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான டி.ஏ. காரணமான செலவு அதிகரித்திருக்கும் அதே தருணத்தில், அதையும் மீறி ரயில்வே லாபத்தில் இயங்குவது, அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பால்காரர்கள், விவசாயிகளுக்குச் சலுகை என்பது போக, வழக்கம்போல புதிய ரயில்களுக்கான அறிக்கைகள் என்று இருந்தாலும், தமிழகத்துக்குத் தேவையான பல முக்கிய வழித்தடங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு திருப்திகரமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை காரைக்குடிக்கு இடையிலான அகல ரயில்பாதை போன்ற மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் சில இந்த பட்ஜெட்டில் இடம்பிடித்திருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளில் யார் காரணம் என்ற போட்டாபோட்டி வராமல் இருந்தால் சரி!
2001ம் ஆண்டில் 350 கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் கையிருப்பு இன்று லாலுவின் கீழ் 11,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! எந்த ஒரு தனியார் நிறுவனம்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை இது! இன்றைய நிலையில் லாலு மட்டும், ஏதாவது ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு வேலை கேட்டு மனு செய்தாரென்றால், அவரைக் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்! நிர்வாகம் தெரியாதவர் என எள்ளி நகையாடப்பட்ட சில தலைவர்கள், பின்னர் நிர்வாகத்தில் பின்னி எடுத்தது நாம் கண்ட ஒன்றுதான். அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுதான்... ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’எனும்குறள் போல தனக்குத் தெரியாத விஷயத்தில் தேவையில்லாத தலையீடுகள் செய்யாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் சொல்லி விட்டு, அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை உரிய அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்கள். அதைதான் லாலு செய்திருக்கிறார்... நிர்வாக சீர்திருத்தம் செய்தேன்... சலுகைகளை வாரிக்கொடுக்க முடிந்தது என்று ஒரே வரியில் இந்த பட்ஜெட்டை தானே விமர்சித்திருக்கிறார் லாலு!

10 comments:

 1. லாலு பொன்மொழிகளுள் ஒன்று:
  Ab tak samosa mein hai aalu, tab tak Bihar mein hai Lalu ;-)

  ReplyDelete
 2. வாங்கய்யா பட்டணம் பொடி மட்டை ;-)

  ஊரு முழுக்க தும்மல் கெளப்புனது
  போததுன்னு இங்க வேறயா..??

  பொன்மொழிக்கு நன்னி..

  ReplyDelete
 3. லாலுவைப்பற்றிய பிம்பம் ஆங்கிலப்பத்திரிக்கையாளர்களால் கட்டமைக்கப்பட்டது. 'எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து போனவன் ஹெலிகாப்டரில் போவதைப்பார்க்கபொறாத சமூகத்தின் சிந்தனை' என்று லாலு சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கும் என்றே நினைக்கிறேன். ஊழலையும் பைலட்டாக வேலைபார்த்துவிட்டு வந்தவர் செய்தால் ஒரு மாதிரியும், விவசாயி செய்தால் ஒரு மாதிரியும் பார்க்கவேண்டுமென்பது சமூக நீதியின் பாலபாடம்.

  ReplyDelete
 4. இந்திய இருவுள் வாயில் (Railway) இது நாள் வரை சரக்குத் தொடரி (goods train) ஒருவழியில் (one way) நிலக்கரி ஏற்றிப் போனால், அதே தொடரி திரும்பி வரும் போது எந்தச் சரக்கும் ஏற்றாமல் வெறுமனே (அல்லது உப்புக்குச் சப்பாணியாய்க் குறைந்த அளவு சரக்கேற்றித்) திரும்பி வந்ததாம். இது போல பல சரக்குத் தொடரிகள் ஒருவழிப் பயணத்தில் மட்டுமே பணம் ஈட்டிக் கொண்டிருந்தனவாம்.

  "ஏன் மறுவழிப் பயணத்தில் சரக்குக் கட்டணத்தைக் குறைத்து சரக்குகளை ஏற்றிக் கொள்ளக் கூடாது?" என்று லாலு ஒருமுறை கேள்வி கேட்டது, அதிகாரிகளை யோசிக்க வைக்க, அதன் பின் அமைச்சகம் கொடுத்த ஆணையின் மூலம் 85% அளவு சரக்குக் கட்டணத்தில் மறுவழிப் பயணங்களை (return journeys) ஆக்கம் உள்ளதாக மாற்றியது தான் வருமானம் இப்படி எக்கச் சக்கமாகப் பெருத்ததற்குக் காரணம் என்று பலரும் சொல்லுகிறார்கள்; தாளிகைகளிலும் படித்தேன். [சரக்குத் தொடரிப் பயணங்களால் பெருத்த பணம் ஈட்டமுடியும் என்பதை இப்பொழுது புரிந்துகொண்ட தனியார் முதலாளிகளின் மூக்கும் வேர்க்கத் தொடங்கிவிட்டது. தனியார் சரக்குத் தொடரிகளைத் தாங்கள் ஏன் விடக் கூடாது என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.]

  மொத்தத்தில் லாலு வந்ததிற்குப் பின் இருவுள் துறையில் உள்ள கொண்மைப் பயன்பாடு (capacity utilization) கூடியிருக்கிறது. இதற்கு லாலுவின் கேள்வியும் ஆணையும் தான் காரணம் என்று பலரும் சொல்லுகிறார்கள். தாளிகைகளிலும் படித்தேன்.

  மானகைத் துறையில் (management field) இது பலரும் அறிந்த ஒரு கருத்து:

  முற்றிலும் புதியவர், அது நாள் வரை நடந்த நடைமுறையின் சுமையைத் தனக்குள் ஏற்றிக் கொள்ளாதவர், ஒரு கட்டகத்தின் (within a system) உள்ளே வந்ததும், அறியாமையால் குறுக்கும் மறுக்கும் கேள்வி கேட்கிறார் பாருங்கள், அப்பொழுது பொறித்து வெடிப்பது தான் பெரும்பாலும் இது போன்று தீர்வு பெறாத சிக்கல்களின் முடிவாக இருக்கிறது. அதனால் தான் எப்பொழுது முதியவர்களையே ஒரே துறையில் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். பழம் பெருச்சாளிகள் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு காணவிடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சிந்தனை முறையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகிக் கிடக்கும். அவ்வப்போது புதியவர்கள் துறைக்குள் உள்நுழைந்தால் தான், இது போன்ற பெட்டிக்கு வெளியே காணும் தீர்வுகள் (out-of-box solutions) கிடைக்கும்.

  இருவுள் துறைக்கு லாலு வந்தது நல்ல காலம். யார் எங்கு, எப்படி மலர்ந்து திறமை காட்டுவார்கள் என்று சொல்லுவது கடினம்.

  அன்புடன்,
  இராம.கி

  ReplyDelete
 5. ///Ab tak samosa mein hai aalu, tab tak Bihar mein hai Lalu///

  சன்னாசி,

  அது 'Jab tak samosa mein.. ' :)

  ReplyDelete
 6. இராம.கி ஐயா, உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த கட்டுரையிலேயே பாருங்கள், தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் பொறுப்புகளை விடவேண்டிய அதிகாரிகளிடம் விட்டதால்தான், நிர்வாகம் இப்படி சூப்பராக இருக்கிறது என்று வேறு சேர்த்திருக்கிறார்கள். வேறு யாராவது "அறிவாளி" அமைச்சராக இருந்திருந்தால், "ஆஹா..என்னே அவர் மதிநுட்பம். என்னமா வேலை வாங்கி இருக்காருய்யா" என்றிருப்பார்கள்.

  "ஜ"யஸ்ரீ வாங்க. "ஜ" வை நீங்க பாக்காம வேற யார் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது..;-). தபூ பின்னாடி வந்தா முன்னாடி ஜபூ தானேங்க வரணும். போனாப் போறாரு பொடிமட்டை...விட்டுடுங்க.

  ReplyDelete
 7. இது வெளிவந்தது ஜூனியர் விகடனில்...
  சீனு.

  ReplyDelete
 8. சாரி சீனு, பொதுவா விகடன் வெப் சைட்டுன்னு எழுதிட்டேன். அது சரி விகடனும், ஜூனியரும் வேற வேறயா என்ன..??

  தங்கமணி, பைலட்டை விடவே மாட்டீங்க போல..!!!

  ReplyDelete
 9. J-dropக்கு மன்னிக்க - போகிறபோக்கில் சொன்ன கமெண்ட் அது - இதில் பொடி ஏதுமில்லை நண்பரே! அடடடடா!!!

  ReplyDelete
 10. சன்னாசி,

  அது காம்ப்ளிமெண்ட் !!!!!

  எனக்கு பொடி போட்டு பிரயோஜனம் இல்லைனு உங்களுக்கு தெரியும்.

  பொடி இல்லாமயே தும்முற ஆளு நானு. அவ்ளோ அலர்ஜி ப்ராப்ளம். ;-)

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...