Saturday, November 08, 2008

அடுத்தாத்து ஆல்பர்ட்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும்- முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர். தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் - கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.
மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி - சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.
விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவெ என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது "வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்" என்பதற்காக
உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

பார்ப்போம்...!!!

அமெரிக்க தேர்தலுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் தமிழ் வலைத்தளத்தில் வெளியான கட்டுரை.

Tuesday, November 04, 2008

சொல்லச் சொல்ல இனிக்கிறது


* வாழ்த்துக்கள் அதிபர் ஒபாமா..
* உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்.
*வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள். எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்
* அதே சமயம் மக்களுக்குப் பிடிக்காத முடிவுகளை, பொது மன்றத்தில் பேசி நைச்சியமான முறையில் சம்மதிக்க வையுங்கள்.
* எல்லா மக்களுக்குமான அதிபர் நீங்கள் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
* நூறாண்டு காலம் கழித்து கிடைத்து இருக்கும் அதிகாரத்தை வீணாக்காது சரியான முறையில் பயன்படுத்தி வரலாறு படையுங்கள்.
* அரசியல் மாச்சரியம் தாண்டி, உலகத்தில் அமெரிக்காவுக்கு தற்போது உள்ள கோர முகத்தை மாற்றுங்கள்.
* உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள்.
* தான் சொல்வது மட்டுமல்ல, சரியான முடிவு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பயிலுங்கள்
* பயணம் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...