Monday, October 31, 2005

கிழட்டு அனுபவங்கள்(9) - மலேசியா ராஜசேகரன்

தலையாய குழப்பம்

மலேசிய நாட்டில் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பரவலான சமூக, சமய, அரசியல், இன உறவுகளின் மாறுதல்களை கண்கூடாக பார்த்து வருகிறோம். அவற்றின் தாக்கங்களை முழுமையாக உணர்ந்து, இனி இந்த நாட்டில் நம்மைப் போன்ற சிறுபான்மை இனத்தின் வாழ்வு பிரச்சனையான, கேள்விக்குறியான ஒன்றுதான் என்பதை பல இந்திய சீனக்குடும்பங்கள் தீர்க்கமாக அறிந்து கொண்டுள்ளன. "இந்த நாட்டிலிருந்து வேறு எஙகாவது குடிபெயர்ந்து போய்விடலாமா?", என்று அவர்களைப்போலவே நாங்களும் அடிக்கடி எங்களை நாங்களே கேட்டுக் கொண்டது உண்டு.

ஆனால் எங்கு குடிபுகுவது?

இந்தியாவிற்கு திரும்பலாம் என்றால், நூறு வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டு இனி அங்கு போய் அங்குள்ள மக்களோடு முண்டி அடித்துக் போட்டி இடுவதற்கான அணுகுமுறையோ, சிந்தனையோ எங்கள் பிள்ளைகளுக்கு கிடையாது. நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபுகலாம் என்றால் (எங்களின் மூன்று பிள்ளைகளுமே இதற்கு தகுதி உடையவர்கள்தான்), அங்கும் பரவலான இனப் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இந்திய வம்சாவளியினர் என்றால் அங்குள்ளவருக்கும் ஒரு இளக்காரம்தான். அதெல்லாம் போக மலேசியாவில் எங்களுக்கு உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட உறவினர்களின் துணையையும், மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒருமித்த உணர்வுகொண்ட இங்குள்ள பதினெட்டு லட்சம் இந்தியர்களின் தோழமையையும் விட்டுவிட்டு, நமக்கு ஆள் இல்லாத ஊரில் தனி மரமாக போய் வாழ்கை நடத்துவதற்கு நமக்கு என்ன விதியா? என்கிற நினைப்பு ஒரு புறம். இப்பொழுதே மலாய்காரர் அல்லாதாருக்கு மலேசிய நாட்டில் இத்தனை கெடுபிடியென்றால், வருங்காலத்தில் இந்த நாட்டு மலாய்காரர் ஜனத்தொகை பெருகப் பெருக, நமது அடுத்தடுத்த வாரிசுகள் எவ்வளவு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப் படுவர் என்கிற கவலை மற்றொரு புறம். இதற்கு நடுவில் எங்கு வாழ்வது என்பதை என்னவென்று முடிவு செய்வது ?? என்னைப் போன்ற பல்லாயிரக்கனக்கான நடுத்தர, மேல்மட்ட மலேசிய குடும்ப தலைவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல குழப்பங்களில் பெரிதும் மூத்த குழப்பமே இதுதான்.

ஆனால் இந்த கேள்விக்கு, ஆறு மாததிற்கு முன்பு என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலமாக எங்களுக்கு விடை கிடைத்தது. இனிமேல் 'மலேசியாவா?, ஆஸ்திரேலியாவா?, நியூசிலாந்தா?' என்கிற கேள்வி எல்லாம் எங்களுக்கு கிடையாது. மலேசியாதான் என்கிற தீர்க்கமான முடிவுக்கு எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினருமே வந்து விட்டோம். இந்த தெளிவுக்கு காரணம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு விபத்தும், அதை அடுத்து நடந்த நிகழ்வுகளும்தான். அந்த கதையை கூறுவதற்கு முன்பு, இந்த நாட்டில் மலாய்காரர் அல்லாதார் எதிர்கொள்ளும் கெடுபிடியால் எற்படும் தாக்கத்தின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்தி ஆக வேண்டும். இல்லையென்றால் நான் கூறுவதில் பாதிக்குமேல் வெறும் பிதற்றலாகப் படும்.

பிள்ளைகளைப் படிக்க வைக்க நாங்கள் படும் பாடு

இங்குள்ள பல்கலைக்கழகங்களில் மலாய்காரர்களுக்குப் பிறகு தான் மற்ற இன பிள்ளைகளுக்கு இடங்கள் வழங்கப் படுகின்றன என்றும், அதன் காரணமாக சீனர்களில் பெரும்பலானோரும், இந்திய குடும்பங்களில் சிலவும் அவரவரின் பிள்ளைகளின் படிப்பிற்காக வீடு, வாசல் முதற்கொண்டு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள் என்றும் ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா. அதை சிறிது விளக்கமாக சொல்கிறேன்

இதுவரை என் மூன்று பிள்ளைகளில் படிப்பிற்காக நான் கையைவிட்டு செய்துள்ளது செலவு US$ 260,000. இது என் பரம்பரைச் சொத்திலிருந்தோ, என் தகப்பனார் விட்டுச் சென்ற செல்வத்திலிருந்தோ எடுத்து செய்யப் பட்ட செலவு அல்ல. குமாஸ்த்தாக்களாக இருந்த நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கு முன்பே "நம் குடும்பம் இந்த நாட்டில் வளர்ச்சியுற வேண்டுமானால், நாம் சம்பளத்திற்காகச் வேளை செய்வதை விடுத்து, எதாவது தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்" எனறு எடுத்த முடிவின் பிரதிபலிப்புத்தான் இது. தொகையைப் பார்த்துவிட்டு, ராஜசேகரன் மலேசியாவில் ஏதோ பந்தாவாக வாழ்வதாக நினைத்துவிடாதீர்கள் :-)) சம்பாதிப்பதில் சல்லிக் காசு விடாமல், எல்லாவற்றையும் பிள்ளைகளின் படிப்பிற்கென்று செலவழித்து, நடைமுறையில் மிகச் சதாரணமான நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மலாய்காரர் அல்லாத குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அவ்வளவுதான்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால், நாங்கள் முன்பு யோசித்ததுபோல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடிபுகுந்தால், எங்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த படிப்பு பிரச்சனையெல்லாம் இருக்காது. அங்கு அபாரமான தரமுள்ள படிப்பு, PR பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட இனாமாகவே வழங்கப் பட்டு விடுகிறது. ஆனால் படிப்பிற்கென்று மட்டும் அங்கேயெல்லாம் குடிபுகுந்தால், வாழ்க்கையின் மற்ற கூறுகள் அடிபட்டுப் போய்விடுமே என்கிற எண்ணம்தான் எங்களுக்கு

வழிகாட்டிய விபத்து

சரி, விபத்து நடந்த கதைக்கு வருவோம். இந்த வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி எங்கள் குடும்பத்தார் யாரும் இலகுவில் மறக்க முடியாத ஒரு நாள். நான் பயந்து பார்த்திராத என் சுற்றத்தாரும், நான் அழுது பார்த்திராத என் பிள்ளைகளும் நான் கதிகலங்கி, முகம் வெளுத்து, கைகால்கள் நடுங்கி, முற்றாக செயல் இழ்ந்து, விக்கி விக்கி அழுததைப் பார்த்ததும் அன்றுதான்.

இரவு 9.30 மணி இருக்கும். குடும்பத்தோடு 'கெந்திங் ஹைலண்ஸ்' எனும் சுற்றுலாத்தலத்திற்கு பஸ்ஸில் போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தோம். காரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், டாக்ஸி பிடிக்க வேண்டி நான் மட்டும் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தேன். என் மனைவியும், மூன்று பிள்ளைகளும் சாலையைவிட ஒரு அடிக்கு உயர்த்திக் கட்டப்பட்டிருந்த நடை பாதையில், அடைக்கபட்டிருந்த ஒரு கடை ஓரமாக, சாலை விளிம்பிலிருந்து 20 அடி தள்ளி பாதுகாப்பாக நின்று கேலியும், கிண்டலுமாக உரையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று கிரீச்சென்ற சத்தமும் அதை அடுத்து தட முட என்ற சத்தமும் என் பின்னிருந்து கேட்க, நான் சட்டென்று திரும்பினேன். அங்கு நான் பார்த்த காட்சி என் ரத்தமெல்லாம் உறைய வைப்பது போன்ற ஒரு பேய்த்திகிலை ஏற்படுத்தியது. தெருவில் போய்க் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது தட முடா என்று தாவி ஏறி, என் குடும்பம் நின்று கொண்டிருக்கும் திக்கிற்கு நேராக பாய்ந்து கொணடிருந்தது.

கார் சத்தத்தையும், முக விளக்கின் ஒளி தங்களை நோக்கி வருவதையும் பார்த்த எங்களின் பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து தாவி விழுந்தனர். என் மனைவியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் கடைசி மகள் தன் தாயின் கையை பிடித்து இழுத்து தாவ முயலுகையில் இருவரின் கைகளும் நழுவ, என் மனைவி திகிலடித்து நின்ற இடத்திலேயே மரத்து சிலையாக நின்று விட்டார். கட்டுபாட்டை இழந்த கார் நேராக என் மனைவியின் மீது மோத, அவரின் உடல் கடையின் இரும்பு ஷட்டரின் மேல் தூக்கி எறியப்பட்டு, தரையில் சாய்ந்தது. சுதாரித்தக் கொண்ட கார் ஓட்டுனர், காரை ஒரு கணப் பொழுது சட்டென்று நிறுத்தினார். ஆனால் அதன்பின் அந்த இந்தியப் பெண் ஒட்டுனருக்கு மறுபடியும் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, பிரேக்கிலிருந்து காலை நகர்த்தி ஆக்சிலேட்டரை மற்றொருமுறை அழுத்தி விட்டார். இந்த முறை கார் சீறிப்பாய்ந்து தரையில் கிடந்த என் மனைவியின் வலது கணுக்கால் மேல் ஏறி, கடையின் இரும்பு ஷட்டரை சடாலென மோதி நின்றது.

சிறிது நேரத்தில் மலேசிய பல்கலைக்கலக மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி வந்து சேர்ந்தது. நான் என் மனைவியோடு ஆம்புலன்ஸில் ஏறி, அவர் கோமாவில் போய்விடாதபடி சொருகும் கண்களை சொருக விடாமல் கன்னத்தை தட்டியபடி, அவரிடம் உரத்துப் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பிள்ளைகள் மூவரும், விவரம் அறிந்து 15 நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்திருந்த என் மகனின் நண்பர்களுடன் வேறோரு காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து இமர்ஜென்சி தியேட்டரினுல் விரைந்து எடுத்துச் சென்றனர். நான் வெளியில் கதறி அழுதுகொண்டிருந்த என் பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தேன். விவரம் அறிந்து சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக எங்கள் சுற்றமும், நட்பும் மருத்துவமனைக்கு கண்களில் நீர் சொட்ட வந்துசேரத் தொடங்கினர். முதலில் என் மனைவியின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் வந்து சேர்ந்தனர், பிறகு அவரின் மூத்த சகோதரரும் மனைவியும், அதற்கு சிறிது நேரங்கழித்து என் இளய சகோதரன் குடும்பத்தொடு வந்து சேர்ந்தான் (பெரிய வங்கியியொன்றில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக உள்ளான். ஆனால் அன்று அவன் முகத்தில் நான் கண்ட அலங்கோலத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் என் கண்களில் நீர் சுரத்து விடுகிறது). அதன்பின் என் மனைவியின் மற்ற மூன்று சகோதரிகள், இரு சகோதரர்கள் அவர்களின் கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், என் பெரியப்பாரின் மகன், பெரியப்பாரின் பேரன்கள் அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், எனது நண்பர்கள், என் மனைவியின் நண்பர்கள், எங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் என்று அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

மனைவியை இமர்ஜன்சி தியேட்டருக்குள் கொண்டு சென்ற சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஒரு சீனியர் அறுவை சிகிச்சை மருத்துவர் - ஒரு சீனர், கதவை சிறிது திறந்தபடி "இந்த பேஷண்டின் கணவர் இருக்கிறாறா ?" என்றார். நான் எழுந்து உள்ளே சென்றேன். என் மனைவியின் மூத்த சகோதரரும், மருத்துவத் துறையில் அனுபவமுள்ள என் மனைவியின் மூத்த சகோதரியும் என்னோடு இமர்ஜன்சியினுள் வந்து மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்தபடி நின்றனர். சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மருத்துவர் ஒரு கணம் எச்சில் முழுங்கினார். பிறகு, என் தோளைத் தொட்டு அணைத்தவாறு "உட்காருங்கள்" என்றார். எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. நான் பக்கத்தில் இருந்த நாற்காலியின் நுணியில் அமர்ந்தேன்.

"உங்கள் மனைவியின் வலது காலில் ஐந்து ஆறு இடஙகளில் எலும்புகள் முறிந்திருக்கின்றன, அவற்றில் மூன்று open comminuted fracture எனப்படும் நொறுங்கிய நிலை முறிவுகள். அத்தோடு, கார் டயர் ஏறியதில் அவர் கீழ்க் காலின் பெரும்பகுதி சதை, நரம்பு, டெண்டன் எல்லாம் மோசமாக பாதிக்க பட்டிருக்கிறது........" என்று கடைசி நான்கைந்து வார்த்தைகளின் போது என் கண்ணைப் பார்க்க முடியாமல், பக்கத்திலிருந்த தூணைப் பார்த்தபடி இழுத்தார்.

எனக்கு தலை சுற்றி, மயக்கம் வருவதுபோல் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு, "ஆதலால்....." என்று மருத்துவர் சொல்ல வந்து, விட்ட வார்த்தையை எடுத்துக் கொடுத்தேன். மருத்துவர் ஆறுதலாக என்னைப் பார்த்து..."ஆதலால், உங்கள் மனைவியின் காலை முழங்காலுக்கு கீழ் வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்னும் அரை மணி நேரத்தில் அவரை ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு செல்கிறோம். அங்கு திறந்து பார்க்கும்போதுதான் காயங்களின் உண்மையான நிலைமை தெரியும். எக்ஸ்ரேகளைப் பார்க்கும்போது அவரின் காலைக் காப்பற்றுவதற்கு 30 விழுககாடு வாய்ப்புக்களே இருப்பதாக இப்போதைக்கு எங்களுக்குப் படுகிறது. உங்கள் மனனவியின் காலைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனாலும் உங்கள் மனத்தை கடினமாக்கி, எதற்கும் தயாராக இருங்கள்", என்று கூறி என் தோளை ஆதரவாக தடவி விட்டு சென்றார்.

அருகில் நின்றிருந்த என் மனைவியின் சகோதரியும், சகோதரரும் என்னை ஆதரவாக அனைத்தபடி நின்றனர். எனக்கு உலகமே என்னைச் சுற்றி சுழல்வது போன்ற ஒரு பிரமை. பக்கத்தில் நிற்கும் இருவரையும் அண்ணாந்து பார்த்து, எதோ சொல்ல வாய் எடுத்தேன். "அப்பா!! " என்று குரல் தளும்ப என் மூன்று பிள்ளைகளும் கதவை பிளந்தபடி உள்ளே நுழைந்தனர். அவ்வளவு தான். அதற்கு மேல் அணைபோட்டு தடுத்து வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல், இரு கைகளாலும் கண்களை மூடியபடி விக்கி, விக்கி அழத்தொடங்கினேன். என் அழுகையைப் பார்த்த பிள்ளைகள் அவர்களின் அழுகையை அடக்கிக் கொண்டு, அவர்களின் மாமா அத்தை துணையோடு என்னை கைத் தாங்கலாய் தாங்கி இமர்ஜன்சி ரூமிற்கு வெளியே கொண்டு வந்தனர். நான் அழுவதைப் பார்த்த என் பந்துக்கள் அனைவரும் ஏதோ ஒருமித்த சக்தியால் உந்தப் பட்டதுபோல என்னையும் பிள்ளைகளையும் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு அனைத்து கொண்டனர்.

அன்றுதான் "இந்த பந்தபாசங்களை விட்டு விட்டு, எந்த காரணத்திற்காகவும், மலேசியாவை விட்டு வேறு எந்த நாட்டிலும் குடிபுகுவது இல்லை" என்ற முடிவை நாங்கள் தீர்க்கமாக எடுத்தோம்

(கடைசியாக காலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இரண்டு மாதங்கள், மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெற்று, மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு அப்புறம் இப்போது ஒரு அளவு தேறி, வீல்சேரின் உதவியோடு நகர்ந்து, என் மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இன்னும் சிறிது வாரங்களில் நடக்க ஆரம்பித்து விடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. அவரை பக்கதிலேயே இருந்து பார்த்து கொள்வதனால்தான் இத்தனை பதிவுகளைக் கொண்ட ஒரு தொடரை என்னால் எழுத முடிந்தது).

************************

வலையுலக நண்பர்களுக்கும் இந்தத் தொடரின் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


மலேசியா ராஜசேகரன்

Tuesday, October 25, 2005

ரோசா..ரோசா..


அமெரிக்காவில் நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த முதல் கறுப்பின பெண்மணி ரோசா பார்க்ஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சிக்காக போராடியவர்கள் என்ற முறையில் எப்போழுதும் மார்ட்டின் லூதர் கிங்கையும், ஆப்ரஹாம் லிங்கனையும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக இவர்கள் பங்களிப்பு என்றால், சமூகரீதியில் தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் ரோசா.

இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் என்ற இடத்தில் தையல்கடையில் பணிபுரிந்து வந்தார் ரோசா. தன்னுடைய பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஐரோப்பியருக்கு உட்கார இடம் தர மறுத்து, தொடர்ந்து அமர்ந்தே பிரயாணம் செய்து "புரட்சி" செய்தார்.

இன்றைக்கு இதை புரட்சி என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறத்துவேஷம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலகட்டங்களில் அது நிஜமாகவே புரட்சிதான். கறுப்பின மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பலவித அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்த காலமது. முன்வழியாக ஏறித்தான் இங்கே பஸ்ஸில் டிரைவரிடம் டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே வர வேண்டும். ஆனால் கறுப்பின மக்கள் மட்டும் முன்னே டிக்கெட் வாங்கி விட்டு, கீழே இறங்கி பஸ்ஸின் பின்புற கதவு வழியாக உள்ளெ நுழைய வேண்டுமாம். சில சமயங்களில் பஸ் டிரைவர் அவர்களை ஏற்றிக் கொள்ளாமலேயே பஸ்ஸை எடுத்து விடுவாராம்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்பட்ட முறையில் ரோசா சந்தித்த கொடுமைகள் அநேகம். பலமுறை பஸ்ஸில் இருந்து அவர் வெளித்தள்ளப்பட்டிருக்கிறாராம். பஸ் டிரைவருடன் பலமுறை வாக்குவாதங்கள். ஆனால் பின்னாளில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமரியில் நடந்த பஸ் புறக்கணிப்பு போராட்டத்திற்கு விதையாக இதுவே அமைந்தது

இணையத்தில் அவரைப் பற்றி விக்கியது இது

கிளிண்டன் அதிபராக இருந்த போது, 1992 ஆம் வருடம் ரோசா அம்மையாருக்கு Congressational Gold Medal of Honor வழங்கப்பட்டது.

இவருடைய வாழ்க்கையை ஹாலிவுட் படமாக எடுத்தது. நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த வீராங்கனையின் வாழ்வில், பின் என்ன நிகழ்ந்தது என்று கண்டுகொள்ளாத உலகத்துக்காக, அந்த அம்மையாரின் வாழ்க்கையை நுணுக்கமாக பதிவு செய்ய நினைத்ததன் வெளிப்பாடு என்பதாக சொல்கிறது ( நான் இன்னும் பார்க்கவில்லை)

அது சரி..?? பெயர்க்காரணம் இதுதானா..?? :-)

Sunday, October 23, 2005

கிழட்டு அனுபவங்கள்(8) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு


1) பள்ளியில் கண்ட பல இன ஒற்றுமை

1959 , ஜனவரி மாதம். ஒரு திங்கட்கிழமை. அன்றுதான் பள்ளி ஆண்டின் முதல் நாள். என் தந்தை முன்பே பதிந்து வைத்திருந்த பாலர் வகுப்பில் என்னன சேர்த்துவிட்டு, பிற பெற்றோர்களோடு வகுப்பிற்கு பின்புறமாக வெளியே நின்று கொண்டிருந்தார். நான் மருள மருள விழித்துக் கொண்டும், தந்தை வெளியில் தொடர்ந்து நிற்கின்றாரா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்தபடி, வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தேன் " கரும்பலகையில் எழுதியிருப்பதைப் போல நீங்களும் 'A' எழுதுங்கள் பார்க்கலாம்" என்று ஆசிரியர் சொல்ல, எல்லாக் குழந்தைகளும் அவரவர் சிலேட்டு பலகைகளில் 'A' எழுத ஆரம்பித்தோம். நான் பழக்க ஊந்தலால், என் தந்தை நின்று கொண்டிருந்த இலக்குவை சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அங்கு தந்தையைக் காணோம்! உடனே என் பிஞ்சு மனதை பீதி ஆட்கொள்ள இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்தேன். திரும்பி நின்று சுற்று முற்றும் பார்த்தால், தந்தையை எங்கேயும் காணவில்லை. ஆசிரியர், வகுப்பின் பின்புறம் ஒரு மாணவனின் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. அழுகையையும் அடக்க முடியாமல், அதே நேரத்தில் பிற சிரார்கள் முன் உரத்து அழ தன்மானமும் இடங்கொடுக்காத நிலையில் கண்களில் லேசாக நீர் சுரக்க, உதடுகள் விதும்ப என் இருக்கையில் மெதுவாக அமர்ந்தேன். அப்போது பின்னிருந்து ஒரு சிறு கரம் என் தோளைத் தொட்டு இறுக்கியது. 'அழாதே' என்று ஆதரவாக ஆங்கிலத்தில் ஒரு குரல் சொல்ல, திரும்பிப் பார்த்தேன், ஒரு சீனச் சிறுவன். அவன் பெயர் 'ஒங் ச்சௌ ப்பெங்'. பள்ளி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன். முதுநிலைப் பள்ளி முடியும் வரை பனிரெண்டு வருடங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். சட்டையெல்லாம் கிழிந்து போகும் அளவிற்கு நான்காம் வகுப்பில் புழுதியில் புரண்டு சண்டையும் போட்டிருக்கிறோம், எழாம் வகுப்பில் சக நண்பன் ஒருவன் லாரி மோதி இறந்தபோது கட்டிப் பிடித்து கொண்டு ஓவென்று அழுதும் இருக்கிறோம். மீசை முளைத்த பருவத்தில், சைக்கிளில் ஊரைச் சுற்றி என்னோடு சேர்ந்து அவனும் இந்தியப் பெண்களை சைட் அடித்திருக்கிறான். அவனோடு சேர்ந்து நானும் சீனப் பெண்களை சைட் அடித்திருக்கிறேன்.

இன்றும், என்னுடைய எத்தனையோ பிற இன நண்பர்களுல் அவனும் ஒருவன். நான் படித்து வளர்ந்த ஊரில் இப்போது ஒரு பெரிய மரக்கரி வியாபாரியாக (charcoal trader) உள்ளான். வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறான். இன்றும் உறவினரைப் பார்க்க அந்த ஊருக்கு போகும்போதெல்லாம் அவனோடு உட்கார்ந்து இரண்டு பீர்களாவது அருந்தி, ஒருமணி நேரமாவது அரட்டை அடித்து விட்டு வந்தால்தான் என் மனதில் ஊருக்கு போய் வந்த நிறைவு ஏற்ப்படும்.

இது 1959 ல் ஆரம்பித்த கதை. எந்த நாட்டிலும், ஊரிலும் ஏற்படுவது போல ஏற்பட்ட ஒரு இயல்பான பள்ளி நட்பு. ஆனால் இந்த மாதிரி கதைகளையெல்லாம் இப்போது நீங்கள் மலேசியாவில் கேள்விப்பட முடியாது. 1970 ல் நானும் \'ஒங் ச்சௌ ப்பெங்\' கும் பள்ளிப் படிப்பை முடித்து, வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் இந் நாட்டு வரலாற்றின் மிகப் பெரிய இனக் கலவரம் நடந்தது. அந்த இனக் கலவரத்தோடு முடிந்தன என் சிறு வயதில் நான் பார்த்த, அநுபவித்த அழகான ஆழமான அந்த பல இன நட்பும், ஒற்றுமையும்.

2. இன ஒற்றுமை, இன அனுசரிப்பானது 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் தொடங்கிய இனக் கலவரத்தில் இரு தரப்பிலும் சுமார் 3,000 பேர் மாண்டனர். அந்த கலவரத்தின் சூடு தணியுமுன்பே நான் ஏற்கனவே கூறிய NEW ECONOMIC POLICY யும் அமல்படுத்தப் பட்டது. அத்தோடு நாடே தலைகீழாக மாறியது. இப்போது இங்கு இனங்களுக்கு இடையே காணப்படுவதெல்லாம் வெறும் அனுசரிப்புத் தன்மை மட்டும்தான். இதை இன ஒற்றுமை என்று கூற முடியாது. ஓரளவுக்கு எல்லா இனத்தவருக்கும் ஏதோ ஒரு வழியில் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டிருக்கிற படியால் யாரும் வேறு எந்த இனத்தவரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்து கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு போகிறார்கள்.

ஆனால் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக எந்த ஒரு இனப் பிள்ளைகளும் பிற இன பிள்ளைகளோடு சேர்வதுமில்லை, எங்கள் காலத்தை போல் நெருங்கி பலகுவதுமில்லை. உள்ளூர ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த இனத்தின் மீது ஒரு சிறு வெறுப்பு, ஒரு தாழ்ப்புணர்ச்சி என்ற நிலமை உறுவாகி விட்டது. இது அரசாங்கத்திற்கும் நன்கு தெரிகிறது. இந் நிலையை சரி செய்ய அவர்களும் அவர்களால் ஆன என்னென்னவோ செய்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் அவர்களின் எந்த முயற்ச்சியும் இதுவரை பயன் அளிக்கவில்லை.


3). ரோஷம் கெட்ட பிழைப்பு

மலேசிய நாட்டில் இலைமறை காயாக இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்தாலும், கடந்த 36 வருடங்களாக பெரிய இனப் பிளவு எதுவும் அப்பட்டமாக ஏற்படாமல் இந்த நாடு தப்பித்தற்கு, இதுவரை மலேசியா அடைந்து வந்துள்ள பொருளாதார வளப்பம்தான் முழுக் காரணம். ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்த பொருளாதார வளப்பத்திற்கு பங்கம் ஏற்பட்டால், அன்று இங்குள்ள இனங்களுக்கு இடையே பிரச்சனைகள் எழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மலேசியாவின் தற்போதைய 3 விழுக்காடு வேலையில்லா குறியீடு, 6 விழுக்காடு அனாலேயே பிரச்சனைகள் தொடங்கிவிடும் என்பது என் கணிப்பு. காரணம் 35 வருடங்களாக தங்களுக்கு கிடைத்து வந்துள்ள 'முதற் சலுகைகளை' மலாய் இனத்தவர்கள் அவர்களின் பிறப்புரிமையாக கருத ஆரம்பித்து விட்டதுதான். தங்க தாம்பாளத்தில் வைத்து அவர்களுக்கு ஊட்டி, ஊட்டி கெடுத்துவிட்டு, இனிமேல் போய் "நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை ஆதலால் உங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கி வரப் படும் சலுகைகளை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது", என்று கூற இங்கு எந்த அமைச்சருக்கும் துணிவு வராது. மற்ற இனத்தவருக்கு சாப்பிட அரிசி இருக்கோ இல்லையோ, மலாய் இனத்தவரின் நலத்தை அமைச்சரவை காபந்து பண்ணியே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போய்விடும்.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால், மலேசியாவில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எந்த அரசியல் பலமும் கிடையாது. "ஏதோ மலாய்காரர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழ்வதற்கு தயாரானவர்கள் தொடர்ந்து இந் நாட்டில் வசிக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் அவரவருக்கு உசிதமான வேறு எந்த நாட்டிலாவது குடியேறிக்கொள்வது நல்லது", என்று பார்லிமெண்டு மெம்பரிலிருந்து தெருக் கூட்டும் மலாய்காரர் வரை எங்களைப் பார்த்து அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் ரோஷம் கெட்டு அவர்கள் சொல்வதை கேட்டும் கேட்காததுபோல் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் இங்குள்ள மலாய்காரர் அல்லாத 80 லட்சம் இந்திய / சீன வம்சாவளியினருடைய உண்மையான நிலைமை.

ஆனால் உலகம் முழுவதும் குடும்ப, கலாச்சார தொடர்புகளை உடைய சீன வம்சாவளியினருக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. மேலும் எந்த நாட்டில் குடிபுகுந்தாலும் சிறப்பாக வேலை செய்தோ, தொழில் புரிந்தோ வாழ்க்கையை நலமுடன் வாழ்வதற்கான நடைமுறை அநுபவங்களும், திறமைகளும் சீனர்களிடம் நிறையவே உள்ளன. இப்போதும் வருடா வருடம் பல பத்தாயிரம் மலேசிய சீனர்கள், குறிப்பாக வெளிநாடுகளுக்கு படிக்க போகும் இளைஞர்கள், மலேசியாவிலிருந்து பிற நாடுகளில் சரமாரியாக குடி பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் கூட குடும்ப தொடர்புகள் இல்லாத, படிப்பு அறிவு குறைந்த இங்குள்ள பதினைந்து லட்சம் தமிழர்களின் நிலை ??

4). செட்டியாரிடம் படித்த பாடம்

தமிழ்நாட்டிலிருந்து , பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே இந்த நாட்டிற்கு வணிகர்களாக வந்து சீனர்களையும் மிஞ்சி அபாரமாக பணம் சம்பாதித்த இனம் 'நாட்டுக் கோட்டை செட்டியார்கள்' இனம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 1969 இனக் கலவரத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக இந்த நாட்டின் தொடர்பை முழுமையாக அறுத்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர். இப்போது செட்டியார்கள் இனத்தில் மிஞ்சி போனால் மலேசியா முழுவதும் ஒரு 800 பேர் தான் இருப்பார்கள். இப்படி மலேசிய தொடர்புகளை முழுமையாக அறுத்துக் கொண்டு சில நாட்களில் தாயகம் திரும்ப இருந்த ஒரு முதிய செட்டியாரிடம் எனக்கு 20 வயது இருக்கும்போது நானும் என் உறவினர் ஒருவரும் "ஏன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறீர்கள்?", என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்று எனக்கு சரிவர புரியவில்லை. ஆனால் 32 வருடங்கள் கழித்து இன்று நினைத்துப் பார்க்கையில் அது ஏதோ அசரீரி சொன்ன தேவ வாக்குப் போல் தோன்றுகிறது.

"தம்பீ, முதலெ நாம எதுக்கு நாடு விட்டு நாடு வந்தொம் என்கிற மூல காரணத்தை மனதிலெ ஏத்திக்கனும். 100 வருஷங்களுக்கு முன்னாலெ எங்க தாத்தா இந்த நாட்டுக்கு வந்தப்ப இங்க பணம் சம்பாதிக்க நெறைய வாய்ப்பு இருந்திச்சு. மலாய்காரங்கலெல்லாம் நல்ல மனுஷங்களா இருந்தாங்க. நாமளும் நெரைய சம்பாதித்தோம். ஆனா இப்ப எல்லாமே மாறிப் போச்சு. இனிமே இந்த நாட்டை நம்பி, நாம பொலப்பு நடத்தவும் முடியாது, குடும்பங்குட்டியோட இங்க வாழவும் முடியாது. இவனுங்க இப்பச் சொல்றானுங்களே 20 வருஷத்துக்கு மட்டும் எங்களுக்கு 'முதற்சலுகை' கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் அது எங்களுக்கு வேண்டாம்ன்னு. அதை நீ நம்புறே ? அதெல்லாம் புருடா. நடக்காதுப்பா. இவனுங்க இனிமெ ஜன்மத்துக்கும் இவனுங்களோட சலுகைய விட்டுக் கொடுக்க மாட்டானுங்க. இஙக உள்ள தமிழங்களுக்கெல்லாம் இந்தியாவை சுத்தமா மறந்துட்டு இந்த நாட்டிலேயே செட்டில் ஆகனுன்னு நெனைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பத் தெரியாது. ஒரு இருவது முப்பது வருசம் போனதுக்கு அப்புறம்தான் தோணும், அடடா தப்பு பண்ணிட்டமேன்னு.

இந்தியாவுக்கு என்னப்பா கொறச்ச? நூறு வருஷத்துக்கு முன்னாலெயே நாம மலாயா, சிங்கப்பூர், பர்மான்னு இத்தனை நாடுகளுக்கும் கொண்டிவிக்க வந்து பணம் சம்பாதிச்சம்ன்னா, அதுக்கான கெட்டிகாரத்தனத்தையும், பக்குவத்தையும், வித்தையையும் எங்கேருந்து கத்துகிட்டோம் ? இந்தியாவில இருந்துதானே.

நமக்கு தான் தொழில் செய்யிறது எப்படின்னு தெரியுமே! நம்ம ஊருக்குபோய் எதாவது தொழில் ஆரம்பிச்சா முதல்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். அப்புறம் எல்லாம் சரியா வந்திரும். சொல்லப் போனா பணம் இருந்தால் இந்தியா மாதிரி சொகுசான எடம் எங்கேயும் கெடைக்காதுப்பா.

தம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுஙக் காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்" என்று சொல்லி முடித்தார்.

Tuesday, October 18, 2005

சுந்தர ராமசாமி பற்றிய என் பாமர எண்ணங்கள்

பசுவய்யா கவிதைகள் என்ற புத்தகத்தைத் தவிர இன்றுவரை மறைதிரு சுந்தர ராமசாமியின் வேறெந்த படைப்புகளையும் புத்தக வடிவத்தில் படித்ததில்லை- இணையத்தில் வந்த அவருடைய கட்டுரைகளைத் தவிர. வழக்கம்போல சுஜாதாதான் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலை தன்னுடைய கட்டுரைகள் ஒன்றில் அறிமுகம் செய்திருந்தார். காமதேனு மூலம் நான் வாங்கி இருந்த சுராவின் புத்தகங்கள் இந்தியாவில் என் சகோதரியின் வசம் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும்.

கலை கலைக்காகவே என்று ஒரு குழுவும் கலை மக்களுக்காகவே என்று ஒரு குழுவும் பிரிந்து நின்ற தமிழிலக்கியத்தில், சுரா கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்று நினைக்கிறேன். " எல்லாரும் கூலிக்காரன் , பூட்ஸ் துடைக்கிறவன், வண்டித் தொழிலாளி மாதிரி ஆட்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே ஒழிய இலை போட்டு சாப்பிடுகிறவனை பற்றி யாரும் எழுதக் காணோம்" என்று அவர் சொன்னதாக பாஸ்டன் பாலாஜியின் வலைப்பூவிலிருந்து எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் அவரைப் பற்றி பல விஷயங்களை சொல்லாமல் சொன்னது.

அவரைப் பற்றி இன்னமும் அதிகம் தெரிய அவருடைய எல்லாப் படைப்புகளின் ஆழமான வாசிப்பும், கலந்துரையாடலும் உதவியிருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி பொதுவெளியில் உருவாகின்ற பிம்பம் முற்றும் பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை. " ஒருத்தனைப் பத்தி இருபது பேர் பிராப்ளம்னு சொன்னா, பிரச்சினை இருபது பேர்கிட்ட இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் கம்மி" என்று என் நண்பன் சொல்வான்.

சுராவின் பிம்பம் அவரை ஒரு கிண்டல்கார, இலக்கிய அரசியல் செய்கிற, காலச்சுவடு என்கிற நிறுவனத்துக்காக சமரசங்கள் செய்கிற ஒரு சராசரி மனிதனாகத்தான் என்னைப் போன்ற பாமரர்களின் மனதில் உருவாகி இருக்கிறது. அவருடைய இலக்கிய ஆளுமை என்னவிதமாக இருந்தாலும்,
இன்டெலக்சுவல் என்ற ரீதியில் அறியப்பட்டாலும் அந்த காரணிகள் எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமல்ல. சொல்லப்போனால் வேறு பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயகாந்தனின் எழுத்துகள், அவற்றின் சமூகரீதியான பரிவான அணுகுமுறைக்காக எனக்குப் பிடிக்கும். ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு என் அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு
என் அனுதாபங்களும்.

Monday, October 17, 2005

End of Affair

நேற்று End of affair என்ற என்ற படம் ஒன்று பார்த்தேன். ஆழமான படம். அமைதியான படம். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவே....ஏ முடியாத படம்.
இரண்டாம் உலகப் போர். குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில்
ஒரு எழுத்தாளன் திருமணமான மாதுவிடம் காதல் கொள்கிறான். இன்பமாக போய்க் கொண்டிருக்கும் வாழ்வில், திடீரென்று அவள் அவனை விட்டு விலகுகிறாள். காரணங்கள் சொல்லாத இந்த திடீர் விலகல் எழுத்தாளனை மிகவும் பாதிக்கிறது. ஏற்கனவே கணவன் போர் அடித்தததால், தன்னிடம் வந்த அவளுக்கு தானும் போர் அடித்து விட்டேன் போலும் என்று தானாகவே எண்ணிக் குமைந்து கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறான்.கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் அவளை சந்திக்கிறான். அவள் பேச முனைந்தும், வெறுப்பில் அவளுக்கு முகங்கொடுக்காமல் இருக்கிறான். கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, " வேறு யாருடனோ அவள் சுற்றிக் கொண்டு இருப்பதாக" நினைத்து கணவன் ச்ந்தேகப்படுவதை சொல்ல, இதுதான் சாக்கு என்று கணவன் சார்பில் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் அமர்த்தி, அவளை வேவு பார்க்க தலைப்படுகிறான்.

விசாரணை முடிவு அவனுடைய மனத்தினை உலுக்க, அவனுடைய மனம் கடவுளின் பக்கம் திரும்புகிறது.

விருமாண்டியில் கமல் பிழிந்த ஜிலேபியை ஹாலிவுட்டில் பல பேர் பல படங்களில் பிழி பிழி என்று பிழிந்து தள்ளி இருக்கிறார்கள். வித்தியாசமான படைப்பாக்கம் என்ற வகையிலும், நல்ல ட்ரீட்மெண்ட் என்ற வகையிலும் கதை/படம் ரொம்ப பிடித்திருந்தது.

படைப்புகளில் வரும் இம் மாதிரியான திருமணத்தை தாண்டிய உறவுகளில்
தாண்டுபவர் ஆணாயிருந்தால் ஒரு மாதிரியும், பென்ணாயிருந்தால் வேறு மாதிரியும் படைக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட், தெலிவுட் என்று எதுவுமே இதற்கு விதிவிலக்கில்லாமல் இருக்கிறது.
தவறு செய்யும் ஆண் ஜாலி பேர்வழியாகவும், குறிப்பிட்ட பெண் என்றல்லாது எவர் வந்தாலும் ஜொள் வடிய நிற்பவராகவும், அந்த மூன்றாவது பெண்ணின் குணம் அல்லாது, இளமைக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வேலி தாண்டுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மிகச் சில படங்களில் சொந்தவாழ்க்கை(த்துணை) சரியாக அமையாதவர்கள் வேலி தாண்டுவதைக் கூட மிக குற்றவுணர்வோடு செய்வதாகவும், அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து வாழ்க்கையில் அடி பட்டுப் போவதாகவும் தான் சித்தரிக்கப் படுகிறார்கள்.
ஆனால் திருமன உறவுதாண்டும் பெண்கள் பற்றிய படங்கள் எல்லாம் அதற்கான வலுவான காரணங்களோடும், ஏதோ அதை விட்டால் வேறு வழியே இல்லாததால் தான் அப் பெண் இப்படி முடிவெடுக்க நேர்ந்தது என்றும் வலுவாக நிறுவப்பட்டிருக்கிரது சுருங்கச் சொன்னால், படைப்புகளை பொறுத்த வரையில் வரைவு தாண்டிய உறவுக்கு ஆணுக்கு அளிக்கப்படும் கரிசனத்தை விட பெண் பாத்திரங்களுக்கு அதிகமாக அளிக்கப்படுகிறது.

என் வீட்டம்மாவிடம் இது பற்றி கேள்வியபோது, " ஜொள்ளு விடும் ஆண்களின் விகிதாசாரத்தை ஒப்பிடும்போது, பெண்கள் எண்ணிக்கை இப்போது குறைவாக இருக்கிறது. அதனால்தான் எங்காவது தென்படும் இந்த மாதிரியான விவகாரங்களில் கூட அவளுக்கு இதற்கான சரியான காரணம் உண்மையாகவே இருக்கிறது. படைப்புகளில் இவ்வாறு வலிந்து காட்டப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது சரியல்ல. அந்தக் காலத்திலிருந்தே ராஜாக்களுக்கு நூற்றுக்கணக்கில் ராணிகள் இருக்கிரார்கள் என்று சொல்லப்படுகிரதே தவிர எங்காவது ஒரு ராணிக்கு அந்தப்புரம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா. எனவே இதுதான் norm என்று ஆண்கள் சரமாரியாக ஜொள் விடுகிறார்கள். விதிவிலக்காக எங்கோ எப்போதோ வரைவு தாண்டும் பெண்களுக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது" என்றாள்.

எனக்கென்னமோ, ஆண்கள் தங்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப்படுவதை விட, தங்களின் ஒழுக்கம் மீதான நம்பிக்கையை விட தங்கள் தாய், சகோதரி, மனைவி என்று நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் ஒழுக்கம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அதற்காகத்தான் கதைகளில்/ படங்களில் கூட நமக்கு சகஜமாக/ காரணமே இல்லாமல் வெறும் உடல் ரீதியாக வரும் இச்சைகள் இல்லாம் அவர்களுக்கு வராது என்று நம்ப விரும்புகிறோம். ஆம் ..விரும்புகிறோம். அதனால்தான் குஷ்பு மாதிரி பெண்கள் பேசும்போது நம்முடைய நம்பிக்கைகள் தகர்கிறதே என்ரு பயமாக இருக்கிறது.

வெறும் உரத்த பேச்சால் வரும் மட்டும் பயமல்ல அது.

Sunday, October 16, 2005

கிழட்டு அனுபவங்கள் (7) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

பணிபுரிவதற்கு என்று வந்த நாட்டிலேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விடுவதா? அல்லது ஒரு காலகட்டத்தில் பிறந்த நாடான இந்தியாவிற்கு திரும்புவதா? என்ற இயல்பாக, ஒவ்வொரு NRI க்கும் அவ்வப்போது மனதில் ஏற்படும் எண்ணத் தாக்கங்களை பிரதிபலித்து, அவற்றை ஆய்வு செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டதுதான் 'கிழட்டு அநுபவங்கள்' தொடர். இது வெளிநாடு சென்ற இருபது ஆண்டுகளில், தமிழை மறந்து, பாதி வெள்ளையராக மாறிவிட்ட ஒருவர் எழுதினால் எடுபட மாட்டாது. அவரால் இப்படியெல்லாம் எழுதவும் முடியாது.

நான்கு தலைமுறைகளாக பதினெட்டு லட்சம் இந்திய வம்சாவளியினருடன், மலேசியா போன்ற ஒரு நாட்டில் குடிபுகுந்து, ஆண்டு, அநுபவித்து, கேடிகளையும் கோடிகளையும் பார்த்து, அதலபாதாளத்திலும் விழுந்து, புரண்டு, எழுந்து, அரசியல், தொழில், நிறுவனம், வரவு, செலவு, பட்டம், படிப்பு, பிறப்பு, இறப்பு, குடும்பம், பிள்ளை, குட்டி, வீடு, வசதி, வாகனம், நிலம், பலம், பணம், கோர்ட்டு, கேஸு என்று வெளி நாட்டில் வசித்து வந்தாலும், வாழ்கையின் சகல பரிமாணங்களையும் அநுபவ பூர்வமாக அறிந்த, உணர்ந்த, ஒரு சிந்திக்கக் கூடிய, அதே நேரத்தில் தமிழ் தெரிந்த ஒரு இந்தியனால் மட்டும்தான் இப்படி ஒரு தொடரை எழுத முடியும். அதிலும் அவர் என்னைப் போல் இன்னமும் இந்தியாவுடன் ஆழமான குடும்ப, பாரம்பரிய தொடர்புகளைப் பேணிக் காத்து வருவராக இருந்தால் மட்டுமே அவரின் எழுத்து, தமிழ் அறிவு கொண்ட பிற NRI களுக்கு பொருத்தமானதாக அமையும்.

சுருங்கச் சொன்னால் தமிழ் வாசகர்களாகிய உங்களைப் பொறுத்தவரை என்னைப் போன்று பல தலைமுறைகளுக்கு முன்பே பிற நாடுகளில் குடியேறி, தங்கள் சுய அநுபவங்களை வைத்து வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஆராய்ந்து தமிழில் அநுபவ பூர்வமாக எழுதக் கூடிய ஒருவர் ஒரு அபூர்வ ஜந்து . எப்போதாவது எங்காவது ஒருவர்தான் தென்படுவார். இதை நான் என் தற்பெருமைக்காக இங்கு சொல்லவில்லை. தமிழ் வாசகர்களான உங்களுக்கும் சில கடமைகள் உள்ளன என்பதை உங்களுக்கு நினைவுகூரத்தான் சொல்கிறேன். புதிதாக இணைய ஊடகப் பதிவுகளை எழுதும் எனனைப் போன்றோரை சில நேரங்களில் காப்பதும், ஊக்குவிப்பதும் வாசகர்களாகிய உங்களின் கடமைகளின் ஒன்று. \'இது என்ன லாஜிக்\' என்கிறீர்களா ? இது பழைய லாஜிக்.... யோசித்து பாருங்கள்...நான் சொல்வதன் ஆழம் புரியும். (என் எழுதுக்களை சமீபத்தில் காத்து கருத்துரைத்து எழுதிய நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்).

ஏற்கனவே என் தொடரில் கூறியுள்ளதைப் போல் "நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அறிந்தால்தான் எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது வாசகருக்குப் புரியும்". என் தொடரில் இதுவரை நான் கூறி வந்தது எல்லாம் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் சுட்டி காட்டத் தான். எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது இத் தொடரின் கடைசிப் பகுதியில் (பதிவு 9) வெளிநாட்டில் வசிக்கும் தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும், குடும்பத் தலைவன் என்ற முறையிலும், தகப்பன் என்ற முறையிலும் நான் அன்றாடம் எதிர்கொள்ளும் 'டிலைமாக்களுக்கு' எழுத்து வடிவம் கொடுக்கும்போது வெளிப்படும்.

இதற்கு முன்பு நான் எழுதிய 6 பதிவுகளும் மேற்கூறிய குறிக்கோளுக்கு நேரடி ஏற்ப்புடையனவாக அமைந்தன. ஆனால் இந்த 7 ஆவது பதிவு, சில வாசகர்கள் சீன மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று காட்டிய ஆர்வத்திற்கு இணங்க வெறும் செய்தியாக இங்கு சேர்க்கப் பட்டுள்ளது. ஆதலால் இவற்றை வெறும் துணுக்கு செய்திகளாகக் கருதி, ஆனந்த விகடன் பாணியில். ஒன்று, இர்ண்டு, மூன்று...என்று துணுக்கு, துணுக்காக வழங்கியிருக்கிறேன்.

1. சீனர்கள் தங்கள் நாடுதான் சகல உலகத்திற்கும் மையமானதென்றும் (middle kingdom), தங்கள் கலாச்சாரத்தை மிஞ்சிய கலாச்சாரம் என்று ஒன்று இல்லை என்றும் பல நூறு ஆண்டுகளாக ஆழமானதொரு நினைப்பிலிருந்து வந்துள்ளனர். ஆதலால் சீனர் அல்லாத பிற இனத்தவர் யாவரையும் 'காட்டுமிராண்டிகள்' என்றுதான் சமீப காலம்வரை அவர்கள் கூறியும், கருதியும் வந்துள்ளார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே தம்மைப் பற்றி ஒரு உயர்வான கருத்து எப்போதும் இருந்து வந்துள்ளது.

இதனால்தானோ என்னவோ நடைமுறையில் மற்றொரு சீனரோடு பழகும்போது அவர்கள் காண்பிக்கும் மரியாதை, நேர்மை, தன்மை யாவும் சீனர் அல்லாதவர்களோடு பழகும்போது குறைந்து காணப் படுகிறது. இந்த இயல்பை இன்றும் மலேசிய சீனர்களிடமும் பார்க்கலாம், சிங்கப்பூர் சீனர்களிடமும் பார்க்கலாம், சீனாவில் உள்ள சீனர்களிடமும் பார்க்கலாம். இதனால் பொதுவாக சீன இனத்தவருக்கு பிற நாடுகளில் வரவேற்பு என்பது என்றுமே சற்றுக் குறைவுதான்.2. சீன இனத்தவரின் ஆன்மாவிற்கு 'தங்கள் குடும்பம்' என்பததுதான் மையக் கரு. குடும்பத்திற்கு அப்புறம்தான் சகலமும். அவர்களில் குடும்பம் என்பது தாய், தகப்பன், மனைவி, மக்கள் மட்டும் அல்ல. மூதாதையர்கள், சிற்றப்பார், பெரியப்பார், அத்தை, மாமன், மச்சான், பஙகாளியிலிருந்து, சீனாவில் அவர்களின் கிராமத்தைச் சார்ந்த மக்களில் இருந்து, அவர்களைப் போன்ற முதற் பெயர் கொண்ட அனைவரும், வெவ்வேறு முக்கியத்துவம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களே. குடும்ப உறுப்பினர்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். செய்ய வேண்டியதை ஒரு கடமையாகவே நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாக ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதனால், ஒரு சீனர் மற்ற யாருடனும் எப்படி நடந்து கொண்டாரேயானாலும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் மிகவும் முறையோடு சொன்னது சொன்னபடி நடந்து கொள்வார்.

இதை இப்படிச் சொல்லிவிட்டு போனால், மேற்குறிப்பிட்ட இரு தன்மைகளின் தாக்கமும் வாசகர்களுக்கு சரிவர புரியாது. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள் இந்தோனீசியாவிலோ, பிலிப்பீன்சிலோ வசித்து அங்கு ஒரு பிசினஸ் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பணத்தேவையினால் அங்குள்ள ஒரு வங்கியை அணுகி கடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி சீனர்களுடைய வங்கியாக இருந்தால், நீங்கள் வங்கியிடம் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் பேப்பரின் நகல் அன்று இரவே உங்களின் சீன காம்பட்டிட்டரின் கையில் போய் சேர்ந்துவிடும். "அது எப்படி? எத்திக்ஸ் என்று ஒன்று இல்லையா?" என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. சீனருக்கும் சீனருக்கும் இடையில் இருக்கிறது. நீங்கள்தான் 'காட்டுமிராண்டி' கேட்டகரியைச் சேர்ந்தவராயிற்றே, உங்களிடம் என்ன எத்திக்ஸ் வேண்டி இருக்கு ? :)-.

3. சீன கலாச்சாரத்தில் 'FACE' என்பது மிக மிக முக்கியமானதொரு அம்சம். (இதை நுணுக்கமாக ஒட்டிய கருத்தோ வார்த்தையோ தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ இருக்கின்றனவா என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'. இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று. இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.

இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் பல விதமாக வெளிப்படும். உதாரணத்திற்கு பிறர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக கூறுவது, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிப்பது, தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் LOSING OF FACE ஆக கிரகிக்கபடும்.

அதேபோல் ஒரு சீன ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு தவறான வியாபார முடிவை எடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஸ்தாபனத்தில் உள்ள எல்லோருக்கும் அவர் எடுத்த முடிவு தவறானது என்று நன்றாக தெரிந்த பட்ச்சத்திலும், அதை வெளிப் படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். பண நஷ்டம் ஏற்பட்டாலும் பாதகமில்லை என்று அதன் தலைவர் FACE LOSE பன்னாமல் தற்காத்து அவருக்கு முட்டுக் கொடுப்பார்கள்.

இந்தியர்களை சீனர்கள் தாழ்வாக கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம். "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு கூறு. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிடும் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். ஆனால் சீனர்களின் பார்வையில் இது ஒரு அநாகரீகமான சமுதாய அனுகுமுறை.

4. பெரும்பாலான சீனர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களைப் போல் MORAL JUDGEMENT எல்லாம் செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கவர்மண்டு ஆபீஸுக்கு ஒரு வேளை விசயமாக ஒரு சீனர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். சட்டப்படி 1.00 மணிக்கு சாப்பாட்டு பிரேக் எடுக்க வேண்டிய குமாஸ்தா 12.30 க்கே நாற்காலியை காலி செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இனத்தவராக இருந்தால் என்ன நடக்கும் ? "சூப்பர்வைசரைக் கூப்பிடு. 12.30க்கே சாப்பாட்டு பிரேக்கா? " என்று சட்டம் பேசுவார்கள். ஆனால் ஒரு சராசரி சீனர் என்ன செய்வார் தெரியுமா? ஒன்று அங்கிருந்து போய்விட்டு மற்றொரு நாள் வருவார். அல்லது, கிளம்பி கொண்டிருக்கும் குமாஸ்தாவை தனியாக கூப்பிட்டு, அவர் நார்மலாக வாங்கும் லஞ்சத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து வேலையை முடித்துக் கொண்டு போய்விடுவார்.

சுருக்கமாகச் சொன்னால், எங்கு எப்படிப் பட்ட சூழ்நிலை இருந்தாலும் "இங்கு இதுதான் இயல்பு போலும்" என்று ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வதும் சீனர்களின் பாரம்பரிய இயல்புகளில் ஒன்று.

5. சீனர்களும் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புபவர்கள். நாம் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுபோல் அவர்களும் fengshui என்று அழைக்கப் படும் சீன வாஸ்துக்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்வார்கள்.6. சீனர்கள் பயங்கரமான சூதாடிகளும் கூட. அவர்களின் கலாச்சாரத்தில் சூதாட்டம் என்பது மிக மிக இயல்பான ஒன்று. அவர்களின் மிகப் பெரிய திருவிழாவான புதுவருடப் பிறப்பின்போது பார்த்தால் காலையிலேயே குடும்பத்தோடு சுற்றி உட்கார்ந்து கொண்டு தாய், தகப்பன், பிள்ளைகள், சிற்றப்பார், பெரியப்பார், தாத்தா, பாட்டி யாவரும் பணம் கட்டி சீட்டுப் ஆடும் காட்சியை இன்றும் மலேசியா இந்தோனீசியா போன்ற நாடுகளில் காணலாம்.7. நம்மைப் போல் சீனர்கள் கல்யாணத்திற்காக அதிகமான பணம் செலவு செய்வதில்லை. கல்யாண வைபவம் என்பது பெண் மாப்பிள்ளை குடும்பத்துக்கு உள்ளேயே ஒரு சிறு தேனீர் சடங்கோடும், ரிஜிஸ்ட்டிரேசனோடும் முடிந்து விடும். பிறகு நண்பர்களையும், உறவினர்களையும் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுப்பார்கள். அது சாதாரணமாக எட்டிலிருந்து பத்து உணவு ஐட்டங்களையும் அளவில்லாத மது ஓட்டத்தையும் கூடிய ஒரு பெரிய விருந்தாக அமையும். அப்போது விருந்திற்கு வந்திருப்பவர் ஒவ்வொருவரும் விருந்துக்கு நபர் ஒருவருக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்பதை அவர்களே அனுமானித்து அதற்கு குறையாத அல்லது அதற்கு நெருங்கிய 'மொய்யை' ஒரு சிவப்பு உறையில் வைத்து 'மொய்' வாங்குவதற்கென்று நியமிக்கப் பட்டுள்ள நபரிடம் கொடுத்துவிடுவார்கள். விருந்து முடிந்தவுடன் எல்லா சிவப்பு உறைகளையும் திறந்து பார்த்து. குறிப்பெடுத்துக் கொண்டு, மொத்த வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று கணக்குப் பார்த்து விருந்துக்கான பில்லை அங்கேயே செட்டில் செய்துவிடுவார்கள். பெரும்பாலும் வந்த மொய்க்கும் ஆன செலவுக்கும் கணக்கு சரியாகிவிடும். சில நேரங்களில் மணமக்கள் கையைவிட்டு பணம் எடுக்க வேண்டியதும் வரலாம். சில நேரங்களில் செலவு போக இரண்டாயிரம், மூவாயிரம் மணமக்கள் கைக்கும் வரலாம். ஆனால் நம்மைப் போல் 'போண்டியாகும்' அளவுக்கான கலயாண செலவுகளெல்லாம் சீனர்களுக்கு கிடையாது.

************************************

இது இழுத்துக் கொண்டே போகிறது........... இத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். வாசகர்களுக்கு சீனர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தால், உங்கள் ஆர்வததை வெளியிடுங்கள் இந்த தொடர் முடிந்ததும் அவர்களைப் பற்றி மேலும் ஒரு பதிவு எழுதுகிறேன்

Saturday, October 15, 2005

மறுபடியும் தங்கர் சாமி

மறுபடியும் எங்க வட்டார வழக்கோட ஒரு படம். சன்னமா மழை பெய்யும்போது ஜன்னலருகே உக்காந்தா மாதிரி வாசம்.

கொஞ்சம் இடிச்சத்தம் ஜாஸ்தி. அவ்வளவுதான்.!!!நேத்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாத்தேன். கூச்சல் அதிகமா உள்ள ஒரு குடும்பக்கதை. கொஞ்சம் அசந்தாலும் வி.சேகர் படமாயிடும் போல ஒரே சலசலப்பு படம் முழுசும். அழகி படத்தில் இருந்த மென்மை, சொல்ல மறந்த கதையில் கொஞ்சம் குறைந்து, சி.ஒ.அ.சாமியில் துள்..ளியுண்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

நாயகர்கள் யாரும் கிடைக்காததால், தான் நடிதேன் என்கிறார் தங்கர். காமிராவைப் பார்க்காமல் பேசும் கான்ஷியஸ்நெஸ்ஸை தவிர்த்து விட்டால் காரெக்டர் அவருக்கென்றே தைத்த மாதிரியான சவடால் கேரக்டர். இந்த மாதிரி பொறுப்பத்த ஷோக்கு தகப்பன்களை மாயவரம் ஏரியாவில் நிறையப் பார்க்கலாம். நிலபுலன்களோடு வாழ்ந்த அப்பா/தாத்தா காலத்தின் சொகுசுகளை விட முடியாமல், அதே சமயம் நிலம், தோப்பு, துரவு வழியாக வந்து கொண்டிருந்த வருவாய் மடை அடைந்து, இந்த தலைமுறையிலோ, போன தலைமுறையிலோ மாத சம்பள அரசு வேலைக்கு போகத் தலைப்பட்டிருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் இப்படித்தான் திரிவார்கள். அவர்களுக்கு இப்படித்தான் குத்துவிளக்கு கணக்காக மனைவி இருப்பாள் - எல்லாப் பக்கமும் இடி வாங்கிக் கொண்டு.

நவ்யா நாயர் பாந்தம். குரல் கொடுத்த அம்மணி மறுபடியும் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். போகிற போக்கில் ஐயப்ப சாமிக்கு மாலை போடும் சாமிகள் பற்றியும் நிறைய நக்கல். ஆனால் தேவையில்லாமல் தனுஷை வம்புக்கு இழுத்திருக்கிறார். தங்கருக்கு தான் படம் எடுப்பதை விட மற்றவனெடுப்பதெல்லாம் படம் அல்ல என்று தோண ஆரம்பித்திருப்பது கஷ்டகாலம். ஒன்று தங்கரின் அரசியல் சகவாசம் குறைய வேண்டும்.அல்லது பேய்க்கதைகளில் வருவது மாதிரி கொஞ்ச காலத்துக்கு அவர் நாக்கு மேலண்ணதோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.

" துறவு என்பது எல்லாவற்றையும் விட்டு விலகி ஓடுவதல்ல. எல்லாவற்றையும் அணைத்துக் கொள்வது என்றார் சுவாமி.அவன் தடேரென்று காலில் விழுந்தான்" ' என்று மாலன் எழுதின கதையின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன படத்தினை பார்த்து விட்டு.

Thursday, October 13, 2005

டாண்டியா ஆட்டமும் தசரா கூட்டமும்

பத்ரியின் இந்த பதிவு பல சீட்டுகளை தொடர்ச்சியாக தள்ளி,
கீபோர்ட் முன்னே என்னை தள்ளி விட்டது. உடனடியாக தோணியது அடடா..அப்பவே தெரியாத போச்சே என்பதுதான்.

எப்பவே..??

பம்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்த 92-93 வருடங்களில் எல்லாம் நிறைய மராத்தி/குஜராத்தி நண்பர்கள் உண்டு. எந்த மெட்ரோவுக்குமே ஒரு வித்தியாசமான முகம் உண்டு. எந்த குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்தாலும், மெட்ரோவில் மட்டும் பல மொழியினர்/ இனத்தவர்/ மதத்தவர், ஏன் நாட்டினர் கூட கலந்து கட்டியாக இருப்பர். அவ் விதத்தில் பம்பாய் ஒரு பலபட்டறை.( நன்றி : சாரு)

ஆனால் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு வகையினர் அதிகமாக இருப்பார்கள். பம்பாயை எடுத்துக் கொண்டால் தாதர்/குர்லாவில் மராத்தியர்கள், செம்பூர்/ மாதுங்காவில் தென்னிந்தியர்கள்( தமிழர்கள்), மாஹிம்/ மஸ்ஜித் பந்தரில் முஸ்லிம்கள், விலே பார்லேவில்/பாந்தராவில் ஆங்கிலோ இந்தியர்கள், என்று இலகுவாக பிரித்து விட முடியும். அப்படிப் பார்த்தால் காட்கோபரில் பெரிதும் குஜராத்திகள். கெம்ச்சு..கெம்ச்சு என்று பேசிக் கொண்டு லாந்திக்கொண்டிருக்கும் பம்பாயின் வியாபார பிரிவின் மூளைகள் - மார்வாடிகள் போல.தசரா காலங்களில் எங்கெங்கும் ஒரே கோலாகலமாக இருக்கும். கூட வேலை பார்க்கும் குஜராத்தி பாபுகள் எல்லாம் குஜாலாகி விடுவார்கள். ஆபிஸில் வேலை பார்க்கும் நண்பிகளையே கூட்டிக்கொண்டு கர்பாவுக்கு போய் விடுவார்கள். என்னையும் கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் போனதில்லை
" அட...இந்த வயசுல என்னத்த போய் கோலாட்டம் ஆட வேண்டி இருக்கு..?? " என்று நினைத்ததுதான்.

இதில் இவ்வளௌ சூட்சுமம் இருப்பது தெரியாத போச்சே என்ற விசனம்தான் இப்போது வருகிறது

இங்கே சாக்ரமண்டோவில் அஷோக் படேல் என்ற நண்பர் போன வாரம் கர்பாவுக்கு கூப்பிட்டுக் கொண்டிருந்தார். " வாங்க சுந்தர்..நல்லா இருக்கு" என்று. சரி..சூர்யாவுக்கு கொஞ்சம் கலர் காட்டிய மாதிரி இருக்குமே ( ஹி..ஹிஹி) என்று நினைத்துக் கொண்டு போகலாம் என்றிருந்தேன். வாரம் வாரம் தள்ளிக் கொண்டே வந்தது.

இன்று காலை பத்ரி ஆர்டிக்கிள் பார்த்து விட்டு, அஷோக்கிடம் தயங்கி தயங்கி, " என்னய்யா...இப்படி எல்லாம் நடக்குதாமே" என்று வினவ, ஒஹ்ஹோஹ்ஹோ என பெரிதாக சிரித்துவிட்டு
" என்னய்யா..சூரப் பழமா இருப்ப போலிருக்கு. பாம்பேல இருந்திருக்க. கர்பாவுல என்ன நடக்கும்னு தெரியாதா" என்று மானத்தை வாங்கினார்.

சரி இங்கே சாகரமண்டோ கர்பாவாவது போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டு " இங்கயும் கர்பா இப்படித்தானா..?? " என்று நான் அசடுவழிய " இல்லை சுந்தர்..இங்க ரொம்ப ட்ரெடிஷனலா பண்றோம். சினி ம்யூசிக் கிடையாது. ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இங்கயும் பல கல்யாணங்கள் கர்பால நிச்சயிக்கப்படுது" என்றார்.

தொடர்ந்து " ஆனா சாக்ரமண்டோல இந்த வருஷம் இனி கர்பா கிடையாது. ஏன்னா போன வாரம் ஆடிக்கொண்டிருக்கும்போதே 26 வயது பெண் ஒருவர் மயங்கி விழுந்து ஸ்பாட்டிலேயே காலி. 911 கூப்பிட்டு ஆட்கள் வருவதற்குள் ஹார்ட் அட்டாக். பாவம் ..கர்ப்பிணி வேறு" என்றார்.

"கல்யாணம் ஆனவங்கதானே" என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன்.

Wednesday, October 12, 2005

ஏன்..??

நேற்று இரவு "கண்டநாள் முதல்" என்ற படத்தின் முன்னோட்டப் படத்துண்டு ( trailer - ஹி ஹி.) சன் டீவியில் பர்த்தேன். பிரகாஷ்ராஜ் தயாரிப்பு. டைரக்டர் ப்ரியா என்று கண்டிருந்தது. இவர் மணிரத்னமோ. யாரோ ஒரு பெரிய டைரக்டரிடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். இவராவது பெயர் சொல்கிற மாதிரி நல்ல பெண் டைரக்டராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கே.எஸ்.ரவிகுமார் மாதிரியோ, சுரேஷ்கிருஷ்ணா மாதிரியோ, ஷங்கர் மாதிரியோ மிக ( கமர்ஷியலாக) பவர்ஃபுல்லான டைரக்டராக வரவேண்டுமென்பதில்லை. தொடர்ந்து பெரியதிரை படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு நல்ல பெண் டைரக்டர் நம்மிடையே ஏன் இல்லை - குறிப்பாக தமிழகத்தில்.

ரேவதி, சுஹாசினி, ராதிகா போன்றவர்கள் சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான அளவுக்கு, க்ரியேட்டர்களாக பெரிய திரையில் ஏன் பிரகாசிக்க முடியவில்லை?
ஜெயதேவி என்று அந்தக் காலத்தில் ஒரு டைரக்டர் இருந்தார். விலாங்கு மீன் என்று ஒரு படம் எடுத்தார். இப்போதும் ஹரிஹரனை வைத்து பவர் ஆஃப் விமன் என்றொரு படம் எடுத்தார். வெளியே வந்ததா என்று தெரியவில்லை.

அவ்வளவாக அறியப்படாத, பெண்கள் மனஉலகத்தின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்திருந்தாலே நம்மிடையே பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு பெண் டைரக்டர் இருந்திருப்பார். ஒரு கதையை, சம்பவத்தை ஒரு ஆண் அணுகுவதற்கும், விவரிப்பதற்கும், ஒரு பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.இந்த ப்ளஸ் பாயிண்டை எந்த பெண்டைரக்டரும் உபயோகப்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.

நமக்கு பெண்கள் எல்லாம் மனம் விட்டுப் பேசினாலோ, எழுதினாலோ பயமாயிருக்கிறது. நம்முடைய பயத்தை கூக்குரலாகவும்,கண்டனங்களாகவும் வெளிப்படுத்துகிறோம் என்பதே க்ரியேட்டர்கள் என்ற அலவில் பெண்களின் குரல் உரத்து ஒலிக்காததற்கு காரணமாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.
வடநாட்டிலே தீபா மேத்தா துணிந்து Earth, Fire போன்ற படங்களை துணிந்து எடுத்தார். நானும் அப்படங்களை பார்த்தேன். சராசரி படங்களில் வசனங்களிலும், பாடல் காட்சி அமைப்புகளிலும் விரசமாக தூவப்பட்டு வியாபாரம் செய்யப்படும் செக்ஸ்தான் அதே படங்களிலும் இருந்தது. ஆனால் ஆண் துணையில்லாமல் பெண்களே தனித்து வாழ்ந்து விடுவார்களோ என்கிற மனப்பான்மையின் விளைவாகவே Fire படத்துக்கு அத்தனை ஆர்ப்பாட்டம் எழுந்தது. முதுமையின் சாயை படியும்போது, இயல்பாக, சாத்வீகமாக, தன்னாலே
அமைதி அடைகின்ற இச்சைகளை முரட்டுத்தனமாக ஆன்மீகம் என்ற பெயரில்
கொல்லுவதின் விளைவை அந்தப் படம் பேசியதைப் போல எந்தப் படம் என்னைப் பொறுத்தவரை பேசியதில்லை.

ஆச்சு..மூணாவது படம் எடுக்கவே விடவில்லை. இலங்கையிலே போய் படம் எடுத்து கனடாவிலே திரை இடுகிறார். ஏதோ இந்தப் படம் பார்க்காவிட்டால்,
நமது சமூகம் பத்திரமாக இருந்து விடும் என்றும், பார்த்ததினால் "கெட்டுப்" போய் சீரழிந்து விடும் என்றும் ஒரு அலம்பல். அப்படி கெட்டுப் போவது ஆணாக இருந்தால் பரவாயில்லை. அவன் hotdog ஆம்பளை. பெண் பத்திரமாக பாலிதீன் உறைக்குள் இருந்து விடுவாள் என்பது இவர்களது நினைப்பு.

டெல்லி ஸ்கூல் பெண்ணை எடுத்து நாடு முழுக்க, உலகம் முழுக்க மெயில் அனுப்புகிறார்கள்.நடிகைகள் எங்கும் குளிக்கவே யோசிக்கிறார்கள். இனி பேட்டி கொடுக்கவும் யோசிப்பார்கள். ஊரில் உள்ள போலிஸ்காரனெல்லாம் தலையை சொரிந்து கொண்டு படுத்துக் கொண்ட பெண்ணுக்கு ஏழாண்டு ஜெயில். வயசான ஓட்டல்காரரின் பிடியிலிருந்து தப்பி மைனர்களிடம் மாட்டி இருக்கிரது இன்னொரு பெண். அதே ஓட்டல்காரரின் இன்னொரு சம்சாரமோ வாரம் தவறாமல் செய்தியில் வருகிறது.

நமக்கு பெண்களை வைத்துத் தான் காலை காபியிலிருந்து, செய்தியில் இருந்து படுக்கை வரை. ஆனால் அவர்கள் உரத்துப் பேசினால் பயந்து சாகிறோம்.
துடைப்பம் எடுக்கிறோம். ஊஞ்சலில் உட்கார்ந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுக்க பெண். பேசாமல் சிரித்தால் போதும். க்ளிக் !!!

வாட்ச் மாதிரி. மோதிரம் மாதிரி. செருப்பு மாதிரி.

Tuesday, October 11, 2005

கிழட்டு அநுபவங்கள் (6) - மலேசியா ராஜசேகரன்

முந்தைய பகுதிகள்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து

இந்தப் பகுதியில் வெளிநாட்டு சீனர்கள் (OVERSEAS CHINESE) மற்றும் அவர்கள் குணாதிசயங்கள் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன்

சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்தமான பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள் (OVERSEAS CHINESE)' என்பது. இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், தைவானியர்களையும் சேர்த்து, சுமார் ஆறு கோடிப் பேர் இருப்பர் (என்று இருந்தாலும், தைவான் சீனாவால் கைப்பற்றப் படப்போகிற நாடுதான் என்பது எங்களைப் போல் சீன மக்களோடு நெருங்கிப் பழகுபவர்களின் பரவலான அபிப்பிராயம்).

இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பிலியன் என்று நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் . மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-ஆச்சரியமாக உள்ளது இல்லையா. ஆம், ஆச்சரியம்தான். அதனால்தான் நாம் விதியென்றும், கிரகப் பலன்கள் எனவும், கர்மத்தாக்கம் என்றும் நம் கையாலாகாத்தனத்திற்கு சென்னையிலும், பம்பாயிலும், டில்லியிலும், கோலாலம்பூரிலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போது. முப்பத்தைந்து லட்சம் சீனர்களைக் கொண்ட சிங்கப்பூரும், அறுபது லட்சம் சீனர்களைக் கொண்ட ஹாங்காங்கும், இரண்டே கால் கோடி சீனர்களைக் கொண்ட தைவானும் உலகமே பிரமிக்கும் வகையில் உயர்ந்தோங்கி நிற்கின்றன. இதெல்லாம் போக, இப்போது எல்லோரையும் தூக்கி விழுங்கும் வகையில் சீனா தன் 130 கோடி ஜனத்தொகையுடன் வெற்றிப் புன்னகை ததும்ப 21 ஆம் நூற்றாண்டேறே தனதென்று மார்தட்டி நிற்கின்றது.கேட்கின்றது. உங்களில் பலர் 'இந்தியாவும் முன் போல் அல்ல. நாங்களும் வெகு வெகமாக முன்னேறி வந்து கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் இந்தியாவுக்கு பொயிருக்கின்றீர்களா?' என்று கேட்பது எனக்கும் கேட்கின்றது. போயிருக்கின்றேன் சார் !!! இந்தியாவிற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது போய் வந்து கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் இரண்டு முறை போய் வருவேன். அதேபோல் சீனாவிற்கும் ஆறு முறை போய் வந்திருக்கிறேன். என் அபிப்பிராயத்தில், தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது.

இதைப் படிக்கும் வாசகர்கள் எவ்வளவு கோபப்படுவீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? சைபீரியாவில் நின்று கணக்குப் போட்டாலும், சந்திர மண்டலத்தில் நின்று கணக்குப் போட்டாலும் ஒன்றும், ஒன்றும் என்றுமே இரண்டுதான். மூ ன்றாகாது. அதேபோலத்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வேறுபாடு.

சரி இந்த வாதத்தை பிறகு வைத்துக் கொள்வோம். இப்ப மேட்டருக்கு வருகிறேன்.

இந்தியர்களைப் போல் சீனர்களும் மலாயாவிற்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள்தான். ஆனால் நம்மைப் போல் வெள்ளையர்களால் இவர்கள் கொத்தடிமைகளாக இங்கு கொண்டு வரப் படவில்லை. சீனாவில் அப்போது இருந்த தங்களின் கடினமான வாழ்க்கையின் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் பாய்மர கப்பல்களில் ஏறி வந்தவர்கள்தான் இன்று மலேசியாவில் உள்ள சீனர்கள். தங்களை ஏற்றிச் செல்லும் பாய்மரக் கப்பல் கரை சேருமா சேராதா என்று அறியாத பட்ச்சத்தில் தாய், தகப்பன், மனைவி, மக்கள் யாவரையும் சீன தேசத்தில் விட்டு விட்டு 3,000 மைல் கடலை கடக்க எண்ணி கப்பலேரும் கூட்டத்தினர் எத்தகையவராக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இருந்தவர்களிலேயே துணிச்சல் மிக்கவர்களாக.

இதனால் இந்தியர்களுக்கு நேர்மாறாக இந்த நாட்டில் குடியேறிய சீன வம்சாவளியினரின் 'தரம்' மிகவும் நேர்த்தியான ஒன்றாக அமைந்தது. மேலும் பொதுவாக சீன வம்சத்தினரை புரிந்து கொள்ள வேண்டுமேயானால், சீன நாட்டின் வரலாற்றையும், அந் நாட்டின் அன்றைய அமைப்பையும் சிறிது அறிந்து கொள்ள வேண்டும். சீனாவின் சரித்திரம் மனிதனாலும், இயற்கையாலும் ஏற்படுத்த பட்ட பல பேரிடர்களைக் கொண்டது.

4,500 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப் பட்ட சீனர்களின் 'மஞ்சள் நதி' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மாறி மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனர்களின் வாழ்வு என்றுமே கடினமான ஒன்றாக இருந்திருக்கின்றது. இத்தகைய வாழ்க்கை முறையின் கீழ் மனதிலும் உடம்பிலும் வலு அற்றோர், உடம்பாலும், மனதாலும், ஊக்கத்தாலும் சிறந்தவர்களிடம் தோற்று ஒதுங்க வேண்டிய நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது. இப்படியே survival of the fittest என்ற ஒரு weeding out process 4,500 வருடங்களுக்கு முன்பிருந்து, சமீபகாலம் வரை நடந்து வந்திருக்கின்றது. இதனால் சீன வம்சமே உடம்பாலும், மனத்தாலும், உக்கத்தாலும் ஒரு 'சூப்பர் வம்சமாக' உருவெடுத்திருக்கிறது. இந்தியர்களுக்கும் மலாய்க் காரர்களுக்கும் 'இன்பீரியொரிட்டி காம்ப்லெக்ஸ்\ எப்படி ஒரு ஆழமான பிரச்சனையோ, அதே போல் சீனர்களுக்கு 'சுப்பீரியோரிட்டி காம்ப்லெக்ஸ்\' ஒரு பிரச்சனை.அத்தோடு இந்தியர்களைப் போன்றோ, மலாய் காரர்களைப் போன்றோ சீனர்கள் நெருங்கிய உறவினர்களோடு திருமணம் புரிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு TAN என்ற முதற்பெயர் கொணட ஒரு சீனர் TAN என்ற முதற்பெயர் கொண்ட மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டார். இது காலம் காலமாக அவர்கள் பேணிக் காத்து வரும் ஒரு பழக்கம். இதனால் நம்மைப் போல் தமக்கையின் மகளை மணம் செய்து (in-breeding), அதனால் அடுத்த வாரிசுகளுக்கு ஏற்ப்படும் மருத்துவ பிரச்சனை எல்லாம் சீனர்களுக்கு கிடையவே கிடையாது.

வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி அரசரையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை எங்கனம் கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது. இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக அவர்கள் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் பிற நாடுகளில் தொழில் புரியும்போது உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகயிலும் பரிசுகள் கொடுப்பதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.

இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சீனர்களுக்கு செழிப்பான பூமியையும், சோம்பேறி மலாய்காரர்களையும் கொண்ட அந்தக் காலத்து மலாயாவில் குறுகிய காலத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கைப்பற்றியதில் ஆச்சரியம் எதுவுமே இல்லை. 1970 ஆம் ஆண்டு அமல்படுத்தப் பட்ட NEW ECONOMIC POLICY மட்டும் இல்லையென்றால், சீனர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் 90 விழுக்காட்டை தங்கள் வசம் வைத்திருப்பார்கள் என்பது திண்ணம்.

அடுத்த தொடரில் சீனர்களின் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் பொதுவான கண்ணோட்டம் ஆகியவையை விவரிக்கின்றேன்.

Friday, October 07, 2005

காத்ரீனா முடித்த விரதம்

1965 இந்தியா- பாகிஸ்தான் போர் சமயத்தில், பாகிஸ்தானின் நட்பு நாடான அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்து வந்த உணவு தானிய உதவிகளை எல்லாம் நிறுத்தப் போவதாக செல்லமாக மிரட்டியது. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், அது இந்தியாவுக்கு உண்மையிலேயே நெருக்கடியான மிரட்டல். அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தில்லி ராம் லீலா மைதானத்திலே ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை கூட்டினார். அங்கு குழு இருந்தவர்களிடையே பேசும்போது, ஒவ்வொரு இந்தியனும் வாரத்துக்கு ஒரு வேளை உணவைத் தவிர்த்து விரதம் இருந்தால், உணவுத் தட்டுப்பாடு மட்டுப்படும். அமெரிக்க மிரட்டல் செல்லுபடி ஆகாமல் போகும் என்று அழைப்பு விடுத்தார்.

எனது பள்ளிப் பருவத்திலே இருந்த நான், சாஸ்திரியின் அழைப்பை ஏற்ற லட்சக்கணக்காண இந்திய மக்களில் ஒருவனாகி, விரதம் இருக்க ஆரம்பித்தேன். சாஸ்திரி சொன்னபடியே உனவுப்பஞ்சம் மட்டுப்பட்டு, அமெரிக்க மிரட்டல் உதிர்ந்து போனது. ஆனால், போர் முடிந்த பின்னும் நான் விரதத்தை விடவில்லை. என்றாவது ஒரு நாள் அமெரிக்காவுக்கு உணவு உதவி புரியும் நிலைக்கு இந்தியா வரும். அன்று என் விரதத்தை விடலாம் என்று முடிவு எடுத்து , நாற்பது வருடங்களாக தைத் தொடர்ந்தும் வந்தேன்.

அந்த விரதம் சமீப காலத்தில் முடிவுக்கு வந்தது.
காத்ரீனாவால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உதவி தரும் முகமாக, இந்தியா இரு விமானங்கள் நிறைய உணவு/உதவிப் பொருட்களும், ஐம்பது மிலியன் பண உதவியும் வழங்கிய தருணத்தில், என் நாடு இத்தனை காலத்தில் வளர்ந்திருக்கும் வளர்ச்சியை நினைத்து ஆனந்தமாக என் விரதம் முடித்தேன்.

- விஜய் க்ராந்தி, டீன், ஐ.ஐ.டி மதராஸ்

ஃபுல்லா...அரிக்குதுபா

காலேஜ் நாட்களில் ஏரியா கமல் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படும் நண்பர் ஒருவர் இப்போது ஒரு மடல் அனுப்பி இருந்தார். இது உண்மையா என்றி ஐ.ஐ.டி பஸ் மண்டைகளோ அல்லது அந்தக்கால பெரிசுகளோ சொன்னாத் தேவலை.

ஊத்தல்னா பின்னூட்டம் ஏதும் கொடுக்க வேணாம். நண்பருக்கு மெயில் போட்டு தாக்குங்க :-) ஹி.ஹி.ஹி..

Thursday, October 06, 2005

கிழட்டு அனுபவங்கள் - தொடர்கிறதுமலேசிய எஸ்டேட்டுகளில், வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், கூட்டமாக ஒரே இடத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று உறவினர்களோடு வாழும் வாழ்க்கை படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் இனத்திற்கு ஓரளவுக்கு போருத்தமானதாகத் தான் இருந்தது.

கூலிவேலையானாலும், அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை, எஸ்டேட் நிர்வாகம் கட்டிக் கொடுத்திருந்த வீடு, பிள்ளைகள் படிப்பதற்கென்று எஸ்டேட்டிலேயே ஒரு தமிழ் பள்ளிக்கூடம், அவர்களாகவோ, எஸ்டேட் நிர்வாகத்தின் துணையுடனோ கட்டிக்கொணட ஒரு கோவில், அருகாமையிலேயே ஒரு கள்ளுக்கடை, ஒரிரு பலசரக்குக் கடைகள், ஒரு மருத்துவ நிலையம், ஒரு இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறு பட்டினம், அதற்கு ஒர் இரு மாதங்களுக்கு ஒருமுறை போய்வர பேரூந்து வசதி, போழுது போக்கிற்கு மாதம் இருமுறை எஸ்டேட் நிர்வாகம் திரையில் போட்டுக் காட்டிய தமிழ் படங்கள், வருடத்திற்கு ஓரிரு முறை நடந்த கோவில் திருவிழாக்கள், பிறகு அவர்களுக்கிடையே நடந்த கல்யாணம், காது குத்து, இறப்பு, பிறப்பு என்று ஏதோ ஒரு மாதிரியாக, சிறிது சுவாரஸ்யமாகத் தான் எஸ்ட்டேடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டு இருந்தது.

ஆனால், என்று சூழ்நிலையால் உந்தப்பட்டு என்று தமிழர்கள் எஸ்ட்டேட் வாழ்க்கையை விட்டு மாநகரங்களுக்கு வரத்தொடங்கினார்களோ அன்றே அவர்களின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை நிலை மாறி, மாநகரங்களின் கீழ் மட்டவாழ்க்கையின் இயல்பான தாக்கம் அவர்களையும் பாதிக்க தொடங்கி விட்டது. 1957 ஆம் வருடம் மலேசியா சுத்ந்திரம் பெற்ற போது மலேசிய இந்தியர்களின் ஜனத்தொகையில் சுமார் 20 விழுக்காடு மட்டுமே நகர்புறங்களில் வாழ்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்று இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் நகர்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் கால்வாசிப் பேர் சேரிகளுக்கு ஒப்பான, வசதி குறைந்த பட்டண விளிம்புகளில் கள்ளத்தனமாக அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து சிறு சிறு MAKESHIFT குடிசைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வருகிறார்கள்.உறவுகளோடு ஒன்றாய் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை சிதைந்து போகும்போது கேட்பாரற்ற சூழ்நிலை இயல்பாக ஏற்படுத்தும் தான்தோன்றித் தனமும், ஒழுக்கமின்மையும் மலேசியத் தமிழ் இனத்தில் மிகப் பரவலான பிரச்சனையாகிவிட்டது. பள்ளிகளில் பிரச்சனை கொடுக்கும் மாணாக்கர்களில் அதிகம்பேர் தமிழ் இன பிள்ளைகள்தான் . அதேபோல் சிறு வயதிலேயே குண்டர் கும்பல்களில் ஈடுபாடு கொள்பவர்களும் தமிழ்க் குழந்தைகள்தான். மலேசியாவில் உள்ள குண்டர் கும்பலகளில் அதிகமான கும்பல்கள் இந்திய (தமிழ் இன) கும்பல்கள்தான். இங்கு உள்ள தாதாக்களில் பெரிய தாதாக்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்.

அத்தோடு படிப்பிற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்காத எஸ்டேட் கலாச்சாரத்தின் அடிப்படையில் வாழ்ந்து, வளர்ந்த மக்கள் என்பதன் தாக்கம், இன்றும் நகர்ப்புற வாழ்க்கையிலும் நம் இன மக்களை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. உயர்நிலை பள்ளிகளில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி கொள்வோருல் இந்தியப் பிள்ளைகளின் விகிதாச்சாரமே கூடுதலானது. அத்தோடு பல்கழைக்கழக இட ஒதுக்கிட்டில் இந்திய பிள்ளைகளின் இன்றைய விகிதாச்சாரம் வெறும் 3-4 விழுக்காடு மட்டும்தான். சீனப் பிள்ளைகள் பொதுப் பல்கலைகழகங்களில் அடித்துப் பிடித்து 30-35 விழுக்காட்டு இடங்களை வென்று விடுவார்கள். (மலேசிய ஜனத்தொகையில் இந்தியர்கள் 7.7 விழுக்காடும், சீனர்கள் 23.5 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 65 விழுக்காடும் உள்ளனர்).

இதேபோல் மதுப் பழக்கத்திற்கும் வெகுவாக அடிமையாபவர்களும் இந்தியர்கள்தான். மலேசியக் கன்ஸ்யூமர் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி கண்ட உண்மை என்னவென்றால், 65 விழுக்காட்டு இஸ்லாமிய ஜனத்தொகையை உடைய மலேசியா உலகிலேயே அதிகமாக மது அருந்தும் நாடுகளில் 10 ஆவது இடத்தில் இருக்கின்றது என்பதுதான். எப்படி ?? ஜனத்தொகையில் 65 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் மதுவை தொடுவதே இல்லை, 23 விழுக்காடு சீனர்களும் விலை உயர்ந்த மதுவை அவ்வப் போது அளவோடு அருந்துவார்களே ஒழிய பெரிய அளவில் குடிப்பவர்கள் இல்லை, பிறகு யார் இவ்வளவு மதுவையும் அருந்துகின்றனர் என்று பார்த்தால்.......நாம் தான்.....நம் இந்திய மக்கள்தான் இந் நாட்டில் 'பெருங் குடி மக்கள்"..!!!!

சிறு பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து கள்ளத்தனமாக விற்கப் படும் 'சம்ஸு' என்று பொதுவாக அழைக்கப் படும் பட்டைச் சாராயத்தில் இருந்து விலை உயர்ந்த ஸ்காட்ச் விஸ்கி வரை குடித்து தீர்ப்பது இந்தியர்கள்தான். ஆனால் இந்த ஒரு பிரச்சனையில் மட்டும் ஜாதி, மொழி, அந்தஸ்த்து யாவற்றையும் மிஞ்சிய ஒரு சமத்துவம் இந்தியர்களுல் உள்ளது. குப்பை அள்ளும் தொழிலாளியும் ஓவராக தண்ணி அடிப்பார், பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணரும் ஓவராகத் தண்ணி அடிப்பார். இதனால் இந்தியர்கள் என்றால் \'குடிகாரர்கள்\' என்ற ஒரு தாழ்வான கண்ணோட்டம் மற்ற இன மக்களின் மத்தியில் வெகு காலமாக வேரூன்றி விட்டது.

இப்படி இங்குள்ள இந்தியர்களின் (தமிழர்களின்) அவல நிலையைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். இந்தியர்களின் குறைவான LIFE EXPECTANCY RATE டிலிருந்து, அறியாமையின் காரணமாக குறித்த காலத்தில் குடியுரிமை பெறத் தவறியதால் பல தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளிலிருந்து, நகர்ப்புறங்களில் வீட்டு வசதி இன்றி தவிப்பவர்களிலிருந்து, பிள்ளைகளால் அனாதைகளாக கைவிடப் படும் பெற்றோர்களின் பிரச்சனைகளிலிருந்து, குடும்பத்தை இடையில் கைவிட்டு விடும் கணவன் / மனைவிமார்களிலிருந்து இந் நாட்டில் பெரும்பாலன சமூகப் பிரச்சனைகள நம் இனத்தைச் சார்ந்தவையாகத் தான் உள்ளன.ஆனால் மலேசியாவில் இந்தியர்களுக்கு எல்லாமே சூன்யமாக உள்ளதாகவும் நினைத்து விட முடியாது இங்கு உள்ள மொத்த டாக்டர்களில் 28 விழுக்காட்டினரும், வழக்குரைஞர்களில் 27 விழுக்காட்டினரும், பல் மருத்துவர்களில் 21 விழுக்காட்டினரும், விலங்கின மருத்துவர்களில் 29 விழுக்காட்டினரும், இஞ்சினியர்களில் 7 விழுக்காட்டினரும், கணக்காய்வாளர்ளில் 6 விழுக்காட்டினரும், சர்வேயர்களில் 3 விழுக்காட்டினரும், கட்டிடக் கலை நிபுணர்களில் 2 விழுக்காட்டினரும் இந்தியர்கள்தான். எப்படியோ இவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் (குறிப்பாக மலையாளிகள், சிலோன் தமிழர்கள், சீக்கியர்கள், வட இந்தியர்கள், தமிழர்களில் சில வகுப்பினர் முண்டி அடித்துக் கொண்டு முன்னேறி வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் இந்தியர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இங்கு நம் இனத்தின் வருங்காலம் மிகுந்த கவலைக் குறிய கேள்விக்குறிதான்.

என்னைப் போல இங்குள்ள நடுத்தர இந்திய குடும்பஸ்தர்களுக்கு, எங்களின் அடுத்த அடுத்த தலைமுறை வாரிசுகளின் எதிர்காலம் குறித்து எண்ணம்தான் எப்பொழுதும்.- மலேசியா ராஜசேகரன்

Monday, October 03, 2005

இனி என் முறை

செயலாய் இருந்த
சின்னவனுக்கு
கிட்னி பழுதாகி
அல்பாயுசு

அவனுக்கு நேர்
இளையவளுக்கு
மாரிலே வந்த கட்டி
கான்சர் சனியனாகி
உயிருரித்தது

பிரஷர் மாத்திரை தின்றே
வயசில் பாதிபோச்சு
இன்னோர் தமையனுக்கு

பெரியவருக்கு மார்ச்சளி
அடுத்தானுக்கு சர்க்கரை

என்னோடு ஒத்துப்பார்த்தால்
அப்பிராணி எல்லாருக்கும்
ரோகமே சோகமாக
காரணங்கள் தேடியே
மூளைக்குள் முடிச்சாகி
ஆண்டுகள் ஓடிப்போச்சு.

எனக்கும் ஏதோவந்து
படுக்கையில் கிடந்தகணம்
கிடக்காமல் பரக்காமல்
கொண்டு போய்ச்சேரப்பா
என்னையும் வாட்டாதே
என்றுனை வேண்டிநிற்க

காலம் இத்தனையும்
நமக்கென்ன காத்திருக்கோ
என்று கவலையோடே
அலைந்தாயே
வா வந்துசேர்....
அதுபோதும் உனக்கென்று
மர்மமாய் புன்னகைத்தான்.

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...