Tuesday, October 18, 2005

சுந்தர ராமசாமி பற்றிய என் பாமர எண்ணங்கள்

பசுவய்யா கவிதைகள் என்ற புத்தகத்தைத் தவிர இன்றுவரை மறைதிரு சுந்தர ராமசாமியின் வேறெந்த படைப்புகளையும் புத்தக வடிவத்தில் படித்ததில்லை- இணையத்தில் வந்த அவருடைய கட்டுரைகளைத் தவிர. வழக்கம்போல சுஜாதாதான் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலை தன்னுடைய கட்டுரைகள் ஒன்றில் அறிமுகம் செய்திருந்தார். காமதேனு மூலம் நான் வாங்கி இருந்த சுராவின் புத்தகங்கள் இந்தியாவில் என் சகோதரியின் வசம் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும்.

கலை கலைக்காகவே என்று ஒரு குழுவும் கலை மக்களுக்காகவே என்று ஒரு குழுவும் பிரிந்து நின்ற தமிழிலக்கியத்தில், சுரா கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்று நினைக்கிறேன். " எல்லாரும் கூலிக்காரன் , பூட்ஸ் துடைக்கிறவன், வண்டித் தொழிலாளி மாதிரி ஆட்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே ஒழிய இலை போட்டு சாப்பிடுகிறவனை பற்றி யாரும் எழுதக் காணோம்" என்று அவர் சொன்னதாக பாஸ்டன் பாலாஜியின் வலைப்பூவிலிருந்து எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் அவரைப் பற்றி பல விஷயங்களை சொல்லாமல் சொன்னது.

அவரைப் பற்றி இன்னமும் அதிகம் தெரிய அவருடைய எல்லாப் படைப்புகளின் ஆழமான வாசிப்பும், கலந்துரையாடலும் உதவியிருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி பொதுவெளியில் உருவாகின்ற பிம்பம் முற்றும் பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை. " ஒருத்தனைப் பத்தி இருபது பேர் பிராப்ளம்னு சொன்னா, பிரச்சினை இருபது பேர்கிட்ட இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் கம்மி" என்று என் நண்பன் சொல்வான்.

சுராவின் பிம்பம் அவரை ஒரு கிண்டல்கார, இலக்கிய அரசியல் செய்கிற, காலச்சுவடு என்கிற நிறுவனத்துக்காக சமரசங்கள் செய்கிற ஒரு சராசரி மனிதனாகத்தான் என்னைப் போன்ற பாமரர்களின் மனதில் உருவாகி இருக்கிறது. அவருடைய இலக்கிய ஆளுமை என்னவிதமாக இருந்தாலும்,
இன்டெலக்சுவல் என்ற ரீதியில் அறியப்பட்டாலும் அந்த காரணிகள் எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமல்ல. சொல்லப்போனால் வேறு பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயகாந்தனின் எழுத்துகள், அவற்றின் சமூகரீதியான பரிவான அணுகுமுறைக்காக எனக்குப் பிடிக்கும். ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு என் அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு
என் அனுதாபங்களும்.

11 comments:

  1. என் மனதின் பிரதிபலிப்பாக உங்கள் பதிவு.

    ReplyDelete
  2. நன்றி.

    இதுவே நிறைய பேரின் அபிப்ராயமாக இருக்கலாம். ஆனால் யாரும் **இப்போது** சொல்ல மாட்டார்கள் - என்னைப் போன்ற **மாபாதகர்களைத்** தவிர. :-)

    ReplyDelete
  3. நானும் சுந்தர ராமசாமியை அதிகம் படித்ததில்லை. புளிய மரத்தின் கதையை கல்லூரிக் காலங்களில் படித்த ஞாபகம். அதற்கு பின்னர் ரொம்ப வருஷம் கழித்துத்தான் ஜே. ஜே. சில குறிப்புகளை படிக்க நேர்ந்தது. தமிழில் இப்படியொரு நேர்த்தியான வடிவத்தை நான் பார்த்ததில்லை. எண்பதுகளில் வெளியான புதுமுயற்சி என்பதை நம்பவே முடியவில்லை. தொண்ணூறுகளில் ஒரு பெரிய அலை வரும். அது புதுப்புது இலக்கிய முயற்சிகளை கடல்கடந்து கொண்டுபோய் சேர்க்கும் என்று அவர் எழுதியிருந்ததை படித்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஜெயகாந்தனுக்கு பின்னர் இலக்கிய உலகில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருந்த ஒரே ஆலமரம். நம்பவே முடியவில்லை, ஏதோ நேற்றுதான் அசோகமித்திரன் 50 விழாவில் கலந்து கொண்டு வந்ததுபோல் இருக்கிறது. எட்டு மாதங்களுக்குள் என்னன்னவோ நடந்துவிட்டன.

    ReplyDelete
  4. //ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை.//
    கலை என்பதை activism என்ற வட்டத்துக்குள் குறுக்கமுயல்வது சரியல்ல என்றே நினைக்கிறேன். "அனைத்தையும் சமூக அக்கறை என்னும் வட்டத்துக்குள் சுருக்கமுயல்வது" என்னும் வாக்கியத்தில் 'சமூக அக்கறை' என்பதை எடுத்துவிட்டு நாசிஸம்/ஃபாசிஸம் என்று போட்டுப் பாருங்கள்; அதன் விபரீதம் உங்களுக்கே விளங்கும். சமூக அக்கறையும் நாசிஸமும் ஒன்றா என்பதல்ல இங்கே கேள்வி - ஒரு சமூகத்துக்கு, வாழ்வுமுறைக்கு, கலை வெளிப்பாட்டுக்கு எத்தனை choiceகளை அளிக்கிறோமென்பதுதான் முக்கியம் என்பது என் அபிப்ராயம். தேர்ந்தெடுக்க மாற்றுக்கள் இல்லாத சமுதாயத்தில் வாழ்வதைப்பற்றி யோசித்துப் பார்த்தால்.....

    ReplyDelete
  5. ராம்கி, சட்டுனு ஸ்டெஷன் பெஞ்சோன்னு நினைச்சேன். உருவம் பாத்தவுடந்தான் கஜினி காம்கினு வெளிங்குச்சு.

    பாம்பு,

    இது முழுக்க முழுக்க என் கருத்து. சுந்தர ராமசாமி சமூக அக்கறையோடு எழுதியிருந்தால்தான் நல்ல எழுத்தாளர் என சொல்ல்வில்லை. எழுதி இருந்தால் இன்னமும் என் மனசுக்கு நெருக்கமாக இருந்திருப்பார் என சொன்னேன்.

    சமூக அக்கறை என குறுக்கவில்லை.
    ஒரு பாடகனிடமோ, பரதநாட்டிய நாரீமணியிடமோ, அவர்கள் படைக்கும் கலையில் சமூக அக்கரையை கொண்டுவரச் சொல்வது கொஞ்சம் அதிகம் ( ஆனாலும் பாலே நடனத்தில் பஞ்சாலைத் தொழிலாளிகளை மையப்படுத்தி நைகழ்சி நடந்ததாக பாலகுமாரன் எழுதினார் - பரத நாட்டியத்தை "வாங்கும்போது" ) ஏனெனில் அம் மாதிரியான இடங்களில் கலைஞனின் சமூக அக்கறையை, சிந்தனையை வெள்ப்படுத்த ஸ்கோப் கம்மி. ஆனால் எழுத்தும், நாடகமும், திரை ஊடகமும், சமூக விஷயங்களைப் பேச, பரிவுடன் பிரச்சினைகளை அணுக, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல ஸ்கோப் அதிகம் உள்ள இடம். வருஷத்துக்கு பிறக்கும் 200 தீவிர வாசகர்களுக்காக மட்டும் அழகுணர்ச்சியோடு படைப்பிலக்கியம் செய்த சு.ராவின் படைப்பில் இன்னம் கொஞ்சம் சமூக அக்கறையும் இருந்திருந்தால் 2000 பேரையாவது அணுகி இருக்கலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.

    உம்ம வாசக உள்ளம் கொஞ்சம் கலங்கி விட்டது போல. இந்தக் காட்டானை கண்டுக்காதீங்க :-)

    ReplyDelete
  6. //கஜினி காம்கினு வெளிங்குச்சு.

    ஏதோ லூஸை பார்த்தமாதிரி டாக் வுடறீங்க! இன்னும் நீங்க எபிசோடுக்குள்ளேயே வரலையா... அப்ப சரிதான்!

    ReplyDelete
  7. //கலை கலைக்காகவே என்று ஒரு குழுவும் கலை மக்களுக்காகவே என்று ஒரு குழுவும் பிரிந்து நின்ற தமிழிலக்கியத்தில், சுரா கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்று நினைக்கிறேன்.//

    ஒரு புளிய மரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஜே.ஜே.சில குறிப்புகள் ஆகிய மூன்று நாவல்களையும் ஒரு முறையாவது வாசிக்கும் பட்சத்தில் உங்களது இந்த எண்ணம் மாறக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

    //ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .//

    சமூகத்தைப் பற்றிய கவலையை எவ்வளவோ முறை பலவிதமாக அவரது எழுத்துகளில் சு.ரா. வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஒரு முறையாவது அந்த மூன்று நாவல்களையும் வாசித்துவிட்டு உங்களது இப்பதிவை மறுவாசிப்பு செய்தீர்களென்றால் உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. :)

    நன்றி.

    அன்புடன்
    சுந்தர்

    ReplyDelete
  8. நன்றி சுந்தர்.

    படிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  9. //ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .//

    to start with i SUGGEST YOU TO READ SUNDARA RAMASAMY'S ARTICLES IN 'இது என் உரைகள் 'கட்டுரை தொகுப்பு...

    ReplyDelete
  10. முத்து.

    அப்புத்தகம் "இவை என் உரைகள்"

    நன்றி.

    அன்புடன்
    சுந்தர்.

    ReplyDelete
  11. //சமூக அக்கறை கட்டாயமா? //

    ஆம்.

    எனக்கு.

    என் விருப்பங்களில் ஒன்று அது.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...