Wednesday, October 12, 2005

ஏன்..??

நேற்று இரவு "கண்டநாள் முதல்" என்ற படத்தின் முன்னோட்டப் படத்துண்டு ( trailer - ஹி ஹி.) சன் டீவியில் பர்த்தேன். பிரகாஷ்ராஜ் தயாரிப்பு. டைரக்டர் ப்ரியா என்று கண்டிருந்தது. இவர் மணிரத்னமோ. யாரோ ஒரு பெரிய டைரக்டரிடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். இவராவது பெயர் சொல்கிற மாதிரி நல்ல பெண் டைரக்டராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

கே.எஸ்.ரவிகுமார் மாதிரியோ, சுரேஷ்கிருஷ்ணா மாதிரியோ, ஷங்கர் மாதிரியோ மிக ( கமர்ஷியலாக) பவர்ஃபுல்லான டைரக்டராக வரவேண்டுமென்பதில்லை. தொடர்ந்து பெரியதிரை படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு நல்ல பெண் டைரக்டர் நம்மிடையே ஏன் இல்லை - குறிப்பாக தமிழகத்தில்.

ரேவதி, சுஹாசினி, ராதிகா போன்றவர்கள் சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான அளவுக்கு, க்ரியேட்டர்களாக பெரிய திரையில் ஏன் பிரகாசிக்க முடியவில்லை?
ஜெயதேவி என்று அந்தக் காலத்தில் ஒரு டைரக்டர் இருந்தார். விலாங்கு மீன் என்று ஒரு படம் எடுத்தார். இப்போதும் ஹரிஹரனை வைத்து பவர் ஆஃப் விமன் என்றொரு படம் எடுத்தார். வெளியே வந்ததா என்று தெரியவில்லை.

அவ்வளவாக அறியப்படாத, பெண்கள் மனஉலகத்தின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்திருந்தாலே நம்மிடையே பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு பெண் டைரக்டர் இருந்திருப்பார். ஒரு கதையை, சம்பவத்தை ஒரு ஆண் அணுகுவதற்கும், விவரிப்பதற்கும், ஒரு பெண் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.இந்த ப்ளஸ் பாயிண்டை எந்த பெண்டைரக்டரும் உபயோகப்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.

நமக்கு பெண்கள் எல்லாம் மனம் விட்டுப் பேசினாலோ, எழுதினாலோ பயமாயிருக்கிறது. நம்முடைய பயத்தை கூக்குரலாகவும்,கண்டனங்களாகவும் வெளிப்படுத்துகிறோம் என்பதே க்ரியேட்டர்கள் என்ற அலவில் பெண்களின் குரல் உரத்து ஒலிக்காததற்கு காரணமாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.
வடநாட்டிலே தீபா மேத்தா துணிந்து Earth, Fire போன்ற படங்களை துணிந்து எடுத்தார். நானும் அப்படங்களை பார்த்தேன். சராசரி படங்களில் வசனங்களிலும், பாடல் காட்சி அமைப்புகளிலும் விரசமாக தூவப்பட்டு வியாபாரம் செய்யப்படும் செக்ஸ்தான் அதே படங்களிலும் இருந்தது. ஆனால் ஆண் துணையில்லாமல் பெண்களே தனித்து வாழ்ந்து விடுவார்களோ என்கிற மனப்பான்மையின் விளைவாகவே Fire படத்துக்கு அத்தனை ஆர்ப்பாட்டம் எழுந்தது. முதுமையின் சாயை படியும்போது, இயல்பாக, சாத்வீகமாக, தன்னாலே
அமைதி அடைகின்ற இச்சைகளை முரட்டுத்தனமாக ஆன்மீகம் என்ற பெயரில்
கொல்லுவதின் விளைவை அந்தப் படம் பேசியதைப் போல எந்தப் படம் என்னைப் பொறுத்தவரை பேசியதில்லை.

ஆச்சு..மூணாவது படம் எடுக்கவே விடவில்லை. இலங்கையிலே போய் படம் எடுத்து கனடாவிலே திரை இடுகிறார். ஏதோ இந்தப் படம் பார்க்காவிட்டால்,
நமது சமூகம் பத்திரமாக இருந்து விடும் என்றும், பார்த்ததினால் "கெட்டுப்" போய் சீரழிந்து விடும் என்றும் ஒரு அலம்பல். அப்படி கெட்டுப் போவது ஆணாக இருந்தால் பரவாயில்லை. அவன் hotdog ஆம்பளை. பெண் பத்திரமாக பாலிதீன் உறைக்குள் இருந்து விடுவாள் என்பது இவர்களது நினைப்பு.

டெல்லி ஸ்கூல் பெண்ணை எடுத்து நாடு முழுக்க, உலகம் முழுக்க மெயில் அனுப்புகிறார்கள்.நடிகைகள் எங்கும் குளிக்கவே யோசிக்கிறார்கள். இனி பேட்டி கொடுக்கவும் யோசிப்பார்கள். ஊரில் உள்ள போலிஸ்காரனெல்லாம் தலையை சொரிந்து கொண்டு படுத்துக் கொண்ட பெண்ணுக்கு ஏழாண்டு ஜெயில். வயசான ஓட்டல்காரரின் பிடியிலிருந்து தப்பி மைனர்களிடம் மாட்டி இருக்கிரது இன்னொரு பெண். அதே ஓட்டல்காரரின் இன்னொரு சம்சாரமோ வாரம் தவறாமல் செய்தியில் வருகிறது.

நமக்கு பெண்களை வைத்துத் தான் காலை காபியிலிருந்து, செய்தியில் இருந்து படுக்கை வரை. ஆனால் அவர்கள் உரத்துப் பேசினால் பயந்து சாகிறோம்.
துடைப்பம் எடுக்கிறோம். ஊஞ்சலில் உட்கார்ந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுக்க பெண். பேசாமல் சிரித்தால் போதும். க்ளிக் !!!

வாட்ச் மாதிரி. மோதிரம் மாதிரி. செருப்பு மாதிரி.

9 comments:

 1. //நமக்கு பெண்கள் எல்லாம் மனம் விட்டுப் பேசினாலோ, எழுதினாலோ பயமாயிருக்கிறது.//

  ஏன் பயப்படுகிறோம்?

  நாம் பலவந்தமாகவும், வன்முறையாகவும் சாதித்திருக்கும் அதிகாரம் ஆட்டம் கண்டுவிடுமென்றா?
  சுரண்டலுக்காக, நமது வசதிகளுக்காக அடிமைகளை உருவாக்கப்பட்ட அடிமைகள் விழித்துக்கொண்டால் என்ன செய்வது என்றா?
  ஒரு பெண்ணை நமது சுயமதிப்பாலோ, நட்பாலோ அன்றி சமூகத்தின் சகல சக்திகளின் ஒத்துழைப்புடனும், அச்சுறுத்தலுடனும் நாம் காலமெல்லாம் தக்கவைத்து சுரண்ட முடிகிற அமைப்பு தகர்ந்துவிட்டால் என்ன செய்வது என்றா?

  நல்ல பதிவு சுந்தர்.

  ReplyDelete
 2. The unknown fear of loosing control?Thanks for this post ( I dot not have Tamil fonts at work)

  ReplyDelete
 3. நன்றி தங்கமணி / பத்மா.

  ஏதோ எழுத ஆரம்பித்தேன். எங்கேயோ இழுத்து சென்று விட்டது. டைரக்ஷன் என்பது ஒரு சாம்பிள்தான். ஆனால் சிந்தனையோட்டம் வெளிப்பட ஸ்கோப் இருக்கிற எந்த இடத்திலும் தமிழ்நாட்டு பெண்கள் குரல் அடங்கின குரலாகவே இருக்கிறது. பெண்ணின் அவஸ்தையை சிவசங்கரி எழுதுவதை விட, பாலகுமாரனின் எழுதினால் நமக்கு ரொம்ப பிடிக்கிறது. பாலகுமாரன் எழுதினால் அந்த பெண்ணின் இடத்தில் அவரை பொருத்த முடியாதிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

  பெண்கள் பேச ஆரம்பித்து, அவர்களை கூக்குரல்களால் மன்னிப்பு கேட்க வைத்துக் கொண்டிருந்தால், நமக்கு நம் சமூகம் பற்றிய தரிசனமே பயமளிக்கிறது. உண்மையை எதிர்கொள்ள விருப்பமில்லை என்று அர்த்தமாகிறது.

  ReplyDelete
 4. மூக்கு,

  போகிற போக்கில் சிந்தனையைத் தூண்டும் பதிவு.

  எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ முடிந்தாலும் இரண்டாம் பகுதியை விரிவாக ஆழமாக எழுதலாம்.

  எம்.கே.

  ReplyDelete
 5. நல்ல பதிவு சுந்தர்.

  ReplyDelete
 6. சில நாள்களுக்குமுன், பின்னிரவில் (வெக்டோன் தொலைக்காட்சியா டான் தொலைக்காட்சியா என்று நினைவில்லை) பவர் ஆஃப் விமன் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அரிஅரன் ரியாஸ்கான், குஷ்பு மூவரைச் சுற்றியே படம் செல்கிறது.

  மேனாட்டில்(கானடா?)வாழும் ரியாஸ்கான், தமிழகக் கிராமத்துப்பெண் குஷ்புவைத் திருமணம்செய்துகொண்டு தன் ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய நண்பர் அரிஅரன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் வாழ்க்கையை இசைக்கென்றே அர்ப்பணித்தவர். பொதுமேடைகளில் பாடல்கள் பாடி, அதனால் வரும் பணத்தினைப் பலவிதமான சமுதாயச் சேவைகளுக்கு அளிக்கிறார். இசையில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் குஷ்புவிற்கு மென்மேலும் இசையைப் பயிற்றுவிக்கிறார்.

  இதற்கிடையில் குஷ்பூவிற்கு, போதைமருந்து கடத்தல்மூலம் வாழ்க்கை நடத்திவரும் ரியாஸ்கானின் உண்மை நிலை தெரியவருகிறது. அந்த இழிதொழிலை விட்டுவிடும்படி ரியாஸ்கானைப் பலமுறை வேண்டிக்கொள்கிறார் குஷ்பு. மறுக்கும் ரியாஸ்கானிடம் தன்னைத் தீண்ட வேண்டாம் என்று திட்டிவிட்டு ஒரேஇல்லத்தில் தனித்தனியாக வாழ்கின்றனர்.

  அரிஅரன் குஷ்பூ இருவருக்கிடையிலிருக்கும் குரு - சிஷ்யை நிலையை ரியாஸ்கான் தவறாகப் புரிந்துகொள்கிறார். கணவன் மனைவி இருவருக்கிடையில் சண்டை வலுக்கிறது.

  முடிவு என்னவென்று தெரியவில்லை. சோபாவில் உட்கார்ந்தபடியே படம் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது:-((

  படம் பார்த்தவர்கள் தயவு செய்து யாரேனும் முடிவினைச் சொன்னால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 7. Power of women வெளி வந்துவிட்டது.
  திரையரங்குகளுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

  ReplyDelete
 8. //முடிவு என்னவென்று தெரியவில்லை. சோபாவில் உட்கார்ந்தபடியே படம் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது:-(( //

  கண்டிப்பாய் அருமையான படமாய்த்தான் இருக்க வேண்டும். :-)

  ReplyDelete
 9. எம்.கே.கே, சுதர்ஷன், டுபுக்ஸ்,

  நன்னி.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...