Monday, October 31, 2005

கிழட்டு அனுபவங்கள்(9) - மலேசியா ராஜசேகரன்

தலையாய குழப்பம்

மலேசிய நாட்டில் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பரவலான சமூக, சமய, அரசியல், இன உறவுகளின் மாறுதல்களை கண்கூடாக பார்த்து வருகிறோம். அவற்றின் தாக்கங்களை முழுமையாக உணர்ந்து, இனி இந்த நாட்டில் நம்மைப் போன்ற சிறுபான்மை இனத்தின் வாழ்வு பிரச்சனையான, கேள்விக்குறியான ஒன்றுதான் என்பதை பல இந்திய சீனக்குடும்பங்கள் தீர்க்கமாக அறிந்து கொண்டுள்ளன. "இந்த நாட்டிலிருந்து வேறு எஙகாவது குடிபெயர்ந்து போய்விடலாமா?", என்று அவர்களைப்போலவே நாங்களும் அடிக்கடி எங்களை நாங்களே கேட்டுக் கொண்டது உண்டு.

ஆனால் எங்கு குடிபுகுவது?

இந்தியாவிற்கு திரும்பலாம் என்றால், நூறு வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டு இனி அங்கு போய் அங்குள்ள மக்களோடு முண்டி அடித்துக் போட்டி இடுவதற்கான அணுகுமுறையோ, சிந்தனையோ எங்கள் பிள்ளைகளுக்கு கிடையாது. நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபுகலாம் என்றால் (எங்களின் மூன்று பிள்ளைகளுமே இதற்கு தகுதி உடையவர்கள்தான்), அங்கும் பரவலான இனப் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இந்திய வம்சாவளியினர் என்றால் அங்குள்ளவருக்கும் ஒரு இளக்காரம்தான். அதெல்லாம் போக மலேசியாவில் எங்களுக்கு உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட உறவினர்களின் துணையையும், மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒருமித்த உணர்வுகொண்ட இங்குள்ள பதினெட்டு லட்சம் இந்தியர்களின் தோழமையையும் விட்டுவிட்டு, நமக்கு ஆள் இல்லாத ஊரில் தனி மரமாக போய் வாழ்கை நடத்துவதற்கு நமக்கு என்ன விதியா? என்கிற நினைப்பு ஒரு புறம். இப்பொழுதே மலாய்காரர் அல்லாதாருக்கு மலேசிய நாட்டில் இத்தனை கெடுபிடியென்றால், வருங்காலத்தில் இந்த நாட்டு மலாய்காரர் ஜனத்தொகை பெருகப் பெருக, நமது அடுத்தடுத்த வாரிசுகள் எவ்வளவு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப் படுவர் என்கிற கவலை மற்றொரு புறம். இதற்கு நடுவில் எங்கு வாழ்வது என்பதை என்னவென்று முடிவு செய்வது ?? என்னைப் போன்ற பல்லாயிரக்கனக்கான நடுத்தர, மேல்மட்ட மலேசிய குடும்ப தலைவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல குழப்பங்களில் பெரிதும் மூத்த குழப்பமே இதுதான்.

ஆனால் இந்த கேள்விக்கு, ஆறு மாததிற்கு முன்பு என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலமாக எங்களுக்கு விடை கிடைத்தது. இனிமேல் 'மலேசியாவா?, ஆஸ்திரேலியாவா?, நியூசிலாந்தா?' என்கிற கேள்வி எல்லாம் எங்களுக்கு கிடையாது. மலேசியாதான் என்கிற தீர்க்கமான முடிவுக்கு எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினருமே வந்து விட்டோம். இந்த தெளிவுக்கு காரணம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு விபத்தும், அதை அடுத்து நடந்த நிகழ்வுகளும்தான். அந்த கதையை கூறுவதற்கு முன்பு, இந்த நாட்டில் மலாய்காரர் அல்லாதார் எதிர்கொள்ளும் கெடுபிடியால் எற்படும் தாக்கத்தின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்தி ஆக வேண்டும். இல்லையென்றால் நான் கூறுவதில் பாதிக்குமேல் வெறும் பிதற்றலாகப் படும்.

பிள்ளைகளைப் படிக்க வைக்க நாங்கள் படும் பாடு

இங்குள்ள பல்கலைக்கழகங்களில் மலாய்காரர்களுக்குப் பிறகு தான் மற்ற இன பிள்ளைகளுக்கு இடங்கள் வழங்கப் படுகின்றன என்றும், அதன் காரணமாக சீனர்களில் பெரும்பலானோரும், இந்திய குடும்பங்களில் சிலவும் அவரவரின் பிள்ளைகளின் படிப்பிற்காக வீடு, வாசல் முதற்கொண்டு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள் என்றும் ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா. அதை சிறிது விளக்கமாக சொல்கிறேன்

இதுவரை என் மூன்று பிள்ளைகளில் படிப்பிற்காக நான் கையைவிட்டு செய்துள்ளது செலவு US$ 260,000. இது என் பரம்பரைச் சொத்திலிருந்தோ, என் தகப்பனார் விட்டுச் சென்ற செல்வத்திலிருந்தோ எடுத்து செய்யப் பட்ட செலவு அல்ல. குமாஸ்த்தாக்களாக இருந்த நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கு முன்பே "நம் குடும்பம் இந்த நாட்டில் வளர்ச்சியுற வேண்டுமானால், நாம் சம்பளத்திற்காகச் வேளை செய்வதை விடுத்து, எதாவது தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்" எனறு எடுத்த முடிவின் பிரதிபலிப்புத்தான் இது. தொகையைப் பார்த்துவிட்டு, ராஜசேகரன் மலேசியாவில் ஏதோ பந்தாவாக வாழ்வதாக நினைத்துவிடாதீர்கள் :-)) சம்பாதிப்பதில் சல்லிக் காசு விடாமல், எல்லாவற்றையும் பிள்ளைகளின் படிப்பிற்கென்று செலவழித்து, நடைமுறையில் மிகச் சதாரணமான நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மலாய்காரர் அல்லாத குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அவ்வளவுதான்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால், நாங்கள் முன்பு யோசித்ததுபோல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடிபுகுந்தால், எங்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த படிப்பு பிரச்சனையெல்லாம் இருக்காது. அங்கு அபாரமான தரமுள்ள படிப்பு, PR பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட இனாமாகவே வழங்கப் பட்டு விடுகிறது. ஆனால் படிப்பிற்கென்று மட்டும் அங்கேயெல்லாம் குடிபுகுந்தால், வாழ்க்கையின் மற்ற கூறுகள் அடிபட்டுப் போய்விடுமே என்கிற எண்ணம்தான் எங்களுக்கு

வழிகாட்டிய விபத்து

சரி, விபத்து நடந்த கதைக்கு வருவோம். இந்த வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி எங்கள் குடும்பத்தார் யாரும் இலகுவில் மறக்க முடியாத ஒரு நாள். நான் பயந்து பார்த்திராத என் சுற்றத்தாரும், நான் அழுது பார்த்திராத என் பிள்ளைகளும் நான் கதிகலங்கி, முகம் வெளுத்து, கைகால்கள் நடுங்கி, முற்றாக செயல் இழ்ந்து, விக்கி விக்கி அழுததைப் பார்த்ததும் அன்றுதான்.

இரவு 9.30 மணி இருக்கும். குடும்பத்தோடு 'கெந்திங் ஹைலண்ஸ்' எனும் சுற்றுலாத்தலத்திற்கு பஸ்ஸில் போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தோம். காரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், டாக்ஸி பிடிக்க வேண்டி நான் மட்டும் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தேன். என் மனைவியும், மூன்று பிள்ளைகளும் சாலையைவிட ஒரு அடிக்கு உயர்த்திக் கட்டப்பட்டிருந்த நடை பாதையில், அடைக்கபட்டிருந்த ஒரு கடை ஓரமாக, சாலை விளிம்பிலிருந்து 20 அடி தள்ளி பாதுகாப்பாக நின்று கேலியும், கிண்டலுமாக உரையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று கிரீச்சென்ற சத்தமும் அதை அடுத்து தட முட என்ற சத்தமும் என் பின்னிருந்து கேட்க, நான் சட்டென்று திரும்பினேன். அங்கு நான் பார்த்த காட்சி என் ரத்தமெல்லாம் உறைய வைப்பது போன்ற ஒரு பேய்த்திகிலை ஏற்படுத்தியது. தெருவில் போய்க் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது தட முடா என்று தாவி ஏறி, என் குடும்பம் நின்று கொண்டிருக்கும் திக்கிற்கு நேராக பாய்ந்து கொணடிருந்தது.

கார் சத்தத்தையும், முக விளக்கின் ஒளி தங்களை நோக்கி வருவதையும் பார்த்த எங்களின் பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து தாவி விழுந்தனர். என் மனைவியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் கடைசி மகள் தன் தாயின் கையை பிடித்து இழுத்து தாவ முயலுகையில் இருவரின் கைகளும் நழுவ, என் மனைவி திகிலடித்து நின்ற இடத்திலேயே மரத்து சிலையாக நின்று விட்டார். கட்டுபாட்டை இழந்த கார் நேராக என் மனைவியின் மீது மோத, அவரின் உடல் கடையின் இரும்பு ஷட்டரின் மேல் தூக்கி எறியப்பட்டு, தரையில் சாய்ந்தது. சுதாரித்தக் கொண்ட கார் ஓட்டுனர், காரை ஒரு கணப் பொழுது சட்டென்று நிறுத்தினார். ஆனால் அதன்பின் அந்த இந்தியப் பெண் ஒட்டுனருக்கு மறுபடியும் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, பிரேக்கிலிருந்து காலை நகர்த்தி ஆக்சிலேட்டரை மற்றொருமுறை அழுத்தி விட்டார். இந்த முறை கார் சீறிப்பாய்ந்து தரையில் கிடந்த என் மனைவியின் வலது கணுக்கால் மேல் ஏறி, கடையின் இரும்பு ஷட்டரை சடாலென மோதி நின்றது.

சிறிது நேரத்தில் மலேசிய பல்கலைக்கலக மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி வந்து சேர்ந்தது. நான் என் மனைவியோடு ஆம்புலன்ஸில் ஏறி, அவர் கோமாவில் போய்விடாதபடி சொருகும் கண்களை சொருக விடாமல் கன்னத்தை தட்டியபடி, அவரிடம் உரத்துப் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பிள்ளைகள் மூவரும், விவரம் அறிந்து 15 நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்திருந்த என் மகனின் நண்பர்களுடன் வேறோரு காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து இமர்ஜென்சி தியேட்டரினுல் விரைந்து எடுத்துச் சென்றனர். நான் வெளியில் கதறி அழுதுகொண்டிருந்த என் பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தேன். விவரம் அறிந்து சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக எங்கள் சுற்றமும், நட்பும் மருத்துவமனைக்கு கண்களில் நீர் சொட்ட வந்துசேரத் தொடங்கினர். முதலில் என் மனைவியின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் வந்து சேர்ந்தனர், பிறகு அவரின் மூத்த சகோதரரும் மனைவியும், அதற்கு சிறிது நேரங்கழித்து என் இளய சகோதரன் குடும்பத்தொடு வந்து சேர்ந்தான் (பெரிய வங்கியியொன்றில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக உள்ளான். ஆனால் அன்று அவன் முகத்தில் நான் கண்ட அலங்கோலத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் என் கண்களில் நீர் சுரத்து விடுகிறது). அதன்பின் என் மனைவியின் மற்ற மூன்று சகோதரிகள், இரு சகோதரர்கள் அவர்களின் கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், என் பெரியப்பாரின் மகன், பெரியப்பாரின் பேரன்கள் அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், எனது நண்பர்கள், என் மனைவியின் நண்பர்கள், எங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் என்று அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

மனைவியை இமர்ஜன்சி தியேட்டருக்குள் கொண்டு சென்ற சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஒரு சீனியர் அறுவை சிகிச்சை மருத்துவர் - ஒரு சீனர், கதவை சிறிது திறந்தபடி "இந்த பேஷண்டின் கணவர் இருக்கிறாறா ?" என்றார். நான் எழுந்து உள்ளே சென்றேன். என் மனைவியின் மூத்த சகோதரரும், மருத்துவத் துறையில் அனுபவமுள்ள என் மனைவியின் மூத்த சகோதரியும் என்னோடு இமர்ஜன்சியினுள் வந்து மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்தபடி நின்றனர். சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மருத்துவர் ஒரு கணம் எச்சில் முழுங்கினார். பிறகு, என் தோளைத் தொட்டு அணைத்தவாறு "உட்காருங்கள்" என்றார். எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. நான் பக்கத்தில் இருந்த நாற்காலியின் நுணியில் அமர்ந்தேன்.

"உங்கள் மனைவியின் வலது காலில் ஐந்து ஆறு இடஙகளில் எலும்புகள் முறிந்திருக்கின்றன, அவற்றில் மூன்று open comminuted fracture எனப்படும் நொறுங்கிய நிலை முறிவுகள். அத்தோடு, கார் டயர் ஏறியதில் அவர் கீழ்க் காலின் பெரும்பகுதி சதை, நரம்பு, டெண்டன் எல்லாம் மோசமாக பாதிக்க பட்டிருக்கிறது........" என்று கடைசி நான்கைந்து வார்த்தைகளின் போது என் கண்ணைப் பார்க்க முடியாமல், பக்கத்திலிருந்த தூணைப் பார்த்தபடி இழுத்தார்.

எனக்கு தலை சுற்றி, மயக்கம் வருவதுபோல் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு, "ஆதலால்....." என்று மருத்துவர் சொல்ல வந்து, விட்ட வார்த்தையை எடுத்துக் கொடுத்தேன். மருத்துவர் ஆறுதலாக என்னைப் பார்த்து..."ஆதலால், உங்கள் மனைவியின் காலை முழங்காலுக்கு கீழ் வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்னும் அரை மணி நேரத்தில் அவரை ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு செல்கிறோம். அங்கு திறந்து பார்க்கும்போதுதான் காயங்களின் உண்மையான நிலைமை தெரியும். எக்ஸ்ரேகளைப் பார்க்கும்போது அவரின் காலைக் காப்பற்றுவதற்கு 30 விழுககாடு வாய்ப்புக்களே இருப்பதாக இப்போதைக்கு எங்களுக்குப் படுகிறது. உங்கள் மனனவியின் காலைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனாலும் உங்கள் மனத்தை கடினமாக்கி, எதற்கும் தயாராக இருங்கள்", என்று கூறி என் தோளை ஆதரவாக தடவி விட்டு சென்றார்.

அருகில் நின்றிருந்த என் மனைவியின் சகோதரியும், சகோதரரும் என்னை ஆதரவாக அனைத்தபடி நின்றனர். எனக்கு உலகமே என்னைச் சுற்றி சுழல்வது போன்ற ஒரு பிரமை. பக்கத்தில் நிற்கும் இருவரையும் அண்ணாந்து பார்த்து, எதோ சொல்ல வாய் எடுத்தேன். "அப்பா!! " என்று குரல் தளும்ப என் மூன்று பிள்ளைகளும் கதவை பிளந்தபடி உள்ளே நுழைந்தனர். அவ்வளவு தான். அதற்கு மேல் அணைபோட்டு தடுத்து வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல், இரு கைகளாலும் கண்களை மூடியபடி விக்கி, விக்கி அழத்தொடங்கினேன். என் அழுகையைப் பார்த்த பிள்ளைகள் அவர்களின் அழுகையை அடக்கிக் கொண்டு, அவர்களின் மாமா அத்தை துணையோடு என்னை கைத் தாங்கலாய் தாங்கி இமர்ஜன்சி ரூமிற்கு வெளியே கொண்டு வந்தனர். நான் அழுவதைப் பார்த்த என் பந்துக்கள் அனைவரும் ஏதோ ஒருமித்த சக்தியால் உந்தப் பட்டதுபோல என்னையும் பிள்ளைகளையும் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு அனைத்து கொண்டனர்.

அன்றுதான் "இந்த பந்தபாசங்களை விட்டு விட்டு, எந்த காரணத்திற்காகவும், மலேசியாவை விட்டு வேறு எந்த நாட்டிலும் குடிபுகுவது இல்லை" என்ற முடிவை நாங்கள் தீர்க்கமாக எடுத்தோம்

(கடைசியாக காலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இரண்டு மாதங்கள், மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெற்று, மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு அப்புறம் இப்போது ஒரு அளவு தேறி, வீல்சேரின் உதவியோடு நகர்ந்து, என் மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இன்னும் சிறிது வாரங்களில் நடக்க ஆரம்பித்து விடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. அவரை பக்கதிலேயே இருந்து பார்த்து கொள்வதனால்தான் இத்தனை பதிவுகளைக் கொண்ட ஒரு தொடரை என்னால் எழுத முடிந்தது).

************************

வலையுலக நண்பர்களுக்கும் இந்தத் தொடரின் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


மலேசியா ராஜசேகரன்

11 comments:

 1. ராஜசேகரன் ஐயா,
  உங்கள் மனைவி விரைவில் முழுமையாக குணமடைந்து முன்பு போல் நடக்க ,எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  மிகவும் அருமையான தொடர் .வாழ்த்துக்களும் நன்றியும்.

  ReplyDelete
 2. பல நேரங்களில் நானும், எனக்கோ அல்லது எனது மனைவி (அ) பிள்ளைகளுக்கோ எதாவதென்றால் யார் வருவர் என்று சிந்தித்திருக்கிறேன். உறவுகளை காரணம் காட்டி தாயகம் திரும்பத்தான் திராணியில்லை.

  ReplyDelete
 3. உங்கள் மனைவி சீக்கிரம் நலம்பெற்று நடக்கவேண்டுமென்று இறைவனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 4. wish her speedy and complete recovery

  ReplyDelete
 5. ராஜசேகரன், உங்கள் மனைவி முழு குணம் அடைய வாழ்த்துகிறேன். இந்த தொடர் முழுவதையும் உன்னிப்பாக கவனித்து வந்தேன். தொடர் முடிவில் விரிவாக கருத்து கூறலாம் என்று இருந்தேன். ஆனால், தொடரை sentimentஆக முடித்திருப்பதால் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க மனமில்லை. எனினும், இந்தக் கட்டுரையின் மூலமாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து முடிவு எடுக்க உதவுவதாக சொல்லி இருந்தீர்கள். ஆனால், அந்தப் பணியை செவ்வனே செய்ததாகத் தெரியவில்லை. நீங்கள் கூறும் sentiment காரணங்கள் முழுமையான உறவினர் அமைப்புடன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு தான் பொருந்தும். அப்படி முழுமையான உறவு வலை வரும் அளவுக்கு ஆகும் காலத்தில் நீங்கள் இந்தியர்கள் என்ற அடையளத்தையே இழந்து விட்டீர்கள். மலேசியா தான் உங்கள் தாய் நாடு. இந்திய குடிமகன்களிலும் ஒதுக்கப்பட்ட சில இனத்தினர் உரிமைக்கு போராடுவது போல் நீங்கள் போராடித்தான ஆக வேண்டும். அதை விட்டு நாங்கள் இரண்டாம் தரமாக நடத்தப்படுகிறோம் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. மலாய் அரசாங்கம் நடந்து கொள்ளும் முறை முற்றிலும் எதிர்ப்பார்க்கவல்லது தான். இந்தியாவில் சில ஜெர்மன் காரரர்கள் வந்து குடியேறிக்கொண்டு எல்லாவற்றிலும் சம உரிமை கேட்டால் இங்குள்ளவர்கள் விட்டுக்கொடுப்பார்களா என்ன..உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் மண்ணின் மைந்தர்கள் என்பது தவிர்க்க முடியாத எல்லா நாடுகளிலும் உள்ள உணர்வு. நீங்கள் குறிப்பிட்ட ஒரு புத்திசாலி செட்டியார் போல சரியான சமயத்தில் இந்தியா திரும்பியிருக்கலாம். இப்பொழுது நீங்கள் ஆயிரம் காரணங்களை காட்டி மலேசியாவில் தங்க முடிவு எடுத்தாலும் அது முடிவு என்பதாக எனக்குப் படவில்லை. you are in a trap and its the only choice you have.

  முதல் எட்டு பாகங்களில் நீங்கள் குறைப்பட்டுக்கொண்டதை பார்த்தால், எல்லாரும் இந்தியாவுக்குத் திரும்புங்கள் என்பதாக தொடரை முடிப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் அறிவுப்பூர்வமாக நீங்கள் ஆரம்பித்து வைத்த விவாதத்திற்கு முற்றிலும் முரணாக கட்டுரையை முடித்து உள்ளீர்கள். அப்ப, உங்களை மாதிரி குடும்ப அமைப்புகளும் இல்லாமல் சிறு சிறுக் குடும்பங்களாக பல நாடுகளில் சிதறிக்கிடக்கும் வம்சாவழியினருக்கு என்ன பரிந்துரைக்கிறீரகள்..உங்கள் கட்டுரையை பார்க்கும் போது ஒரு விடயம் உறுத்துகிறது..இலங்கை இனப்பிரச்சினை எப்பொழுது முடியும்..அதன் காரணமாக பல நாடுகளில் சிதறிக் கிடக்கும் தமிழ் மக்கள் எப்பொழுது நாடு திரும்புவார்கள்..இல்லை, அமைதி நிலை வந்தாலும் உங்களைப் போன்று படிப்பு, வேலை போன்ற பல்வேறு காரணங்களை முன்னிட்டு நாடு திரும்ப முடியாத trapல் மாட்டிக்கொண்டிருப்பார்களா என்று நினைத்துப் பார்க்க வேதனையாக இருக்கிறது. மலேசியாவுக்கு குடி பெயர்ந்தவர்கள் போல் அல்லாது இலங்கையிலிருந்து கணிசமானவர்கள் குடி பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நாடு திரும்ப முடியாவிட்டால் தனிப்பட்ட முறையிலும் பண்பாட்டு ரீதியிலும் மாபெரும் இழப்பாக இருக்கும்.

  அப்புறம், இந்தியா இலங்கையை ஒப்பிட்டு மேம்போக்காக நீங்கள் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. வெறும் சுற்றுலா செல்வதின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. உங்கள் கல்வி பின்புலம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் பொருளாதார அறிஞராக இல்லாத பட்சத்தில் உங்கள் கருத்தை சட்டை செய்ய வேண்டிய அவசியமோ எதிர்க்குரல் கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. வீண் வேலை.

  இது வரை நான் தமிழ் வலைப்பதிவுகளில் தந்த நீண்ட பின்னூட்டம் இது தான். அந்த வகையில் வெட்டி அரட்டையாக இல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் எழுதியதற்கு பாராட்டுக்கள். மலாய் தமிழர் வாழ்க்கை நிலையை அறியச்செய்ததற்கும் நன்றி. தற்பொழுது அங்கு வேலை தேடி வந்து அல்லல்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்க்கை முறை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.

  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. //அப்புறம், இந்தியா இலங்கையை ஒப்பிட்டு மேம்போக்காக நீங்கள் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை//

  மேற்கண்ட வாக்கியத்தில் இலங்கையை என்பதற்கு பதில் சீனாவை என்று இருக்க வேண்டும்.

  ReplyDelete
 7. அன்புள்ள ரவி,

  தொடர் இன்னும் முடிவடையவில்லை.
  பத்தாவது பாகத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

  எனினும், உங்கள் கருத்துகளுக்கு( முதல் முறையாக இட்ட நீண்ட பின்னூட்டத்துக்கு) நன்றி

  ReplyDelete
 8. Agence Fance Presse news agency

  03 November 2005


  Malaysia has 60,000 undergraduates unemployed: report

  KUALA LUMPUR, Nov 3 (AFP) - A government survey has revealed nearly
  60,000
  Malaysian graduates are unemployed, many of who cannot get jobs
  because of
  their lack of experience and poor English and communication skills, a
  report
  said Thursday.

  The study by the country's Economic Planning Unit in September said the
  typical unemployed graduate was female, from the majority ethnic
  Malay race
  and lower income groups, the New Straits Times reported.

  Many of the unemployed graduates had also majored in business studies or
  information technology, while 81 percent attended public
  universities, where
  the medium of instruction in many courses is the Malay language.

  "Most have been jobless for more than a year," Human Resources
  Minister Fong
  Chan Onn was quoted as saying by the newspaper.

  "Some had jobs but not in accordance with their qualifications," he
  said.

  The 59,250 graduates polled said they were unemployed because they
  had no
  job experience, had poor English language and communication skills
  and had
  pursued studies irrelevant to the market place.

  "Universities must ensure that their graduates are marketable," said
  Fong.

  "It's sad when after their studies, they cannot find jobs because
  they lack
  the required disciplines, skills, language and experience," he said.

  "I have emphasised many a time that graduates must master the English
  language and ensure they have communication skills," Fong added.

  Graduate unemployment has been a sore point for the government, which
  has so
  far pumped 100 million ringgit (26.5 million dollars) into skills
  training
  and re-training schemes, according to the newspaper.

  Ends

  ReplyDelete
 9. It's a good reading, Sundar wrote really well. I look forward to next part.

  ReplyDelete
 10. hi bharathi,

  This is written by Mr. Rajasekara from Malasiya. I am just posting it here. This is FYI

  ReplyDelete
 11. Hi Sundar,

  I thought you edited/translated Mr. Rajasekar's email and presented that here. It is an easy reading.

  Thanks to you and Mr. Rajasekar!

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...