யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர
==================================
கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்றவர்கள் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஸீட்டிலும் இருக்கும் பெண் பக்கத்தில் உள்ள இடம் காலியாக இருக்க பஸ் கிளம்பும் நேரம், பையன்கள் வரிசையாக அந்தந்த இடங்களில் அமர்ந்து கொள்ள வண்டி புறப்படும். படிக்கும் நாட்களில் இவை எல்லாம் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. அதிக நெருக்கமாக பழக விரும்பும் இருவர் அதற்கேற்றார்போல உட்கார விரும்புவதாக நினைத்துக் கொண்டேன். பல வருடங்கள் கழித்து என் நெருங்கிய ஸ்நேகிதியுடன் பேசும்போது இவ்வாறு சொன்னாள் " மத்த பசங்களா ஏதாவது நினைச்சுகிட்டு ஒதுங்கி போயிடுறாங்க. உண்மையில் பெண்களுக்கு பெரும்பாலும், கூட படிக்கும் எல்லா பையன்களுடனும் பழக விருப்பம் இருக்கும். இவனுகளா ப்ராண்ட் பண்ணிட்டு, பின்னாடி இவனுகளா ஏதாவது பண்ணிகிட்டு அலையறான்க" என்றாள்.
தினவாழ்க்கையில் கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்புகிறோம். அந்த முடிவுக்கான காரணங்களை நம்மை பாதிக்கும் காரணிகளைக் கொண்டே அளந்து அந்த முடிவை எடுக்கிறோம். கேட்கும் செய்திகள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், கற்பிதங்களை கொண்டும் எடுக்கப்படும் முடிவுகளும், அது சார்ந்த கொள்கைகளும், அது பிரகடனப்படுத்தப்படும்போது ஏற்படும் விவாதங்களும் சர்ச்சைகளும் நமக்கு போதையூட்டுகின்றன. விவாதப்பொருளாகி விடும் காரணத்தால், நம் முடிவுகளின், இன்னமும் அறுதியிடப்படாத வீரியமான உண்மை நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது. அதன் மீது நமக்கு காதல் உண்டாகிறது. அந்த உண்மையை சாசுவதப்படுத்தவும், கேட்டறிதல்களினால் உண்டான நம் கொள்கைகளை கெட்டிபடுத்தவும் முனையும் நாம், மாற்று சாத்தியங்களையும், சித்தாந்தங்களையும் நியாயமான முறையில் முன் வைப்பவர்களைக் கூட ஒதுக்க முனைகிறோம். கற்றுக்கொள்ளுதன் பொருட்டு சிந்திக்க, படிக்க ஆரம்பித்த நாம், நம் கற்றல் முடிவுக்கு வரும் முன்பே பாடத்திட்டங்களை அதன் முரட்டு வாசல்களோடு கட்டமைக்க முயல்கிறோம்.
எனக்கு நிறைய படிக்க ஆசை. நிறைய தெரிந்து கொள்ள ஆசை. கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு அதற்காக கட்சி கட்டுவதை விட எதையும் மறுபார்வை பார்க்க ஆசை. யாருக்கும், எக்காலத்திலும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நான் எந்தக் குழாமிலும், எந்தப் பொறுப்பிலும் இல்லை. எழுத்தாளனாகி பெரிய பேர் வாங்கும் ஆசை இல்லை. புத்த்கம் போட்டு முகவாய்க்கட்டையில் பேனாவோடு, புத்தகங்களின் பின்னட்டைகளில் போஸ் பொடுக்கும் ஆசை இல்லை. கொள்கைகளை உருவாக்கி, என் பேனாவை வைத்து உலகத்தை ஒரு "பெரட்டு பெரட்டிவிட" எனக்கு ஊக்கம் ஒன்றும் இல்லை. சுத்தம் காரணமாக பல் துலக்க முற்பட்டு, அது அனிச்சை செயலாகி, தினமும் பல் விளக்கியும் , காரணம் தெரியாமல் கடனே என்று செய்வதால் நாம் ஊத்தைவாயர்களாக ஆவதைபோல, எழுத்து எனக்கு இல்லை. என் பிள்ளையை கொஞ்சுவது எனக்கு எத்த்னை உவப்பானதோ, அதைப் போலவே நான் நினைப்பதையெல்லாம் எழுதுவதும்.....
எழுத்தாள, சிந்தனையாள சித்தாந்த சுழல்களுக்குள் சிக்காத, policy based என்றில்லாமல் issue based நிலை எடுக்கும் ஒரு சாதாரண, சராசரிக்கும் கீழான வாசகன். வரிக்கு வரி எனக்கு ஒப்புமை இல்லை என்றாலும் ஜப்பார் வாப்பாவின் கட்டுரையில் இருந்த நிஜம் என்னை அசைத்தது. உடனே என் உணர்ச்சி அதை இங்கே சுட்டிட செய்தது. மிஞ்சிப்போன மண், சூளைக்கு வெளியே விழுந்தால் அது சாக்கடை வண்டலோடு கலந்து நாறிப்போகவும்
வாய்ப்பிருக்கிறது அல்லவா....!! எதுக்காச்சும் ஆகும் என்று அதையே கொண்டை செய்யச் சொன்ன ஒரு தாய்மனசு போல தெரிந்தது வாப்பாவின் மனசெனக்கு...
கூடையிலிருந்து சிதறி ஓடும்
ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,
திக்குகளறுத்து எல்லையறுத்து
மானுடம் வெல்லும் அது.
(பிரசன்னரின் கவிதைகளில் ஒன்று)
( குரு சத்ரு ஸ்தானத்தில இருக்காண்டா ன்னு அப்பா அப்ப சொன்னப்ப விளங்கலை. பக்கம் பக்கமா விளக்கம் எழுதும்போது இப்ப நல்லா வெளங்குது... )
No comments:
Post a Comment