Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 2

நம்பிக்கை மனிதர்கள்
===================

தூரத்திலிருந்து பார்த்தால் ஸ்கூல் பையன் போலத்தான் இருப்பார் ராட்னி வாங். அமெரிக்காவில் செட்டில்ஆகிவிட்ட மூன்றாம் தலைமுறை சீனர். ராக்லின் என்ற இடத்தில் இருந்து சாக்ரமண்டோ வரை ரயிலில் வந்திறங்கி, வெயிலோ மழையோ, ஸ்டேஷனிலிருந்து குழந்தைகள் ஓட்டும் குட்டி ஸ்கூட்டரில் ஒரு காலை வைத்து, இன்னோருகாலால் உந்திக் கொண்டே வருவார். "ர்" வராது என்பதால் 'ஹாய் ...சுண்டா" என்பார். எப்போதும் சிரித்த முகம்தான். ட்ரேட்மார்க் அரசு ஊழிய சோம்பேறித்தனமும், ஒபீ யும் அடிக்காமல், சின்சியராக வேலைபார்க்கும் ஆசாமி. போன வருடம் ஒரு நாள் அவருடைய டீன் ஏஜ் வயசுப் பெண் லாஸ் ஏஞ்சல் ஜூவுக்கு வெளியே நடந்த ஒரு விபத்தில் அடிபட்டு கோமாவில் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்து, மூன்றாம் நாள் உயிர் விட்டாள். அவருக்கு அவ்வளவு வயசில் பெண்ணிருப்பதே எனக்கு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் சம்பவம்முடிந்து ஆபிசுக்கு வந்தவரை விசாரிக்கப்போன என்னிடம், உடையாமல் கொள்ளாமல் திடமாக பேசிக்கொண்டிருந்தது.

பின் கொஞ்ச நாள் கழித்து கண்ணில் பச்சை கலர் மாஸ்க் போட்டுக் கொண்டு, தமிழ் சினிமா வில்லன்மாதிரி வந்தார். ஆள் என்னைபோல சோடா புட்டி. அதனால் லேசிக் சிகிச்சை செய்து கொண்டதாக சொன்னார். ஆனால் அவர் கெட்ட நேரம், ஆபரேஷன் செய்யப்பட்ட இடம் சரியாக ஆறாமல், எல்லாம் அவுட் ஆ·ப் ·போகஸில் தெரிந்து முன்பை விட பார்வை மோசமாகி விட்டது. ஆபரேஷன் செய்த டாக்டரை ஸ்யூ பண்ணுய்யா என்றேன். என்னத்துக்கு சுண்டா..என்றார் அதே சிரிப்போடு.

லேட்டாக வேலை பார்த்து விட்டு ஒரு நாள் வேக வேகமாக பார்க்கிங் லாட் சென்றுகொண்டிருந்தேன். ஆபரேஷனால் பாரவை பாதிக்கப்பட்டு, இரவில் சரியாக கண் தெரியாத அவர் அந் நேரத்துக்கு தன் ஸ்கூட்டரில் உந்திக் கொண்டு வர " என்ன இவ்ளோ லேட் ராட்னி. ராக்லின் போறதுக்கு இந்நேரத்துக்குமேல் ட்ரெயின் இருக்கா..?? என்று கேட்க, தான் இப்போது டவுனிலியே தங்கி இருப்பதாகவும், வெள்ளைக்கார மனைவி தன்னை டைவர்ஸ் செய்து விட்டதாகவும் அவர் சொல்லும்போது, நான் குறுக்கிட்டேன். " என்னராட்னி..வாழ்க்கையிலே இவ்ளோ நடக்குது. நீங்க பாட்டுக்கு கேஷ¤வலா சுத்திகிட்டு இருக்கிங்க...." என வினவவும் " இல்லை ...சுண்டா..என்னால முடியலை. எப்போ வெடிக்கப் போறேன்னு தெரியலை. அப்பப்ப பொறுமை இழப்பது எனக்கே இப்போ நல்லா தெரியுது. ஆனா என்ன பண்ணி அதை அடக்கறதுன்னு தெரீலை. எப்படியாவது என் வைப் மனசு மாறிடும்னு தோணுது. அதுதான் எனக்கிருக்கிற கடைசி ஹோப்" என்கிறார் சிரித்துக்கொண்டே....

ரவிஷங்கரின் ஆர்ட் ஆ·ப் லிவிங் கோர்ஸ¤க்கு போன என் நண்பன் ஒருவன், மூன்றாவது நாள் தன் உள்மனச்சோகம் உடைய, ஆறு மணி நேரம் அழுது கொண்டிருந்தானாம். ராட்னி அந்த வகுப்புக்கு போனால எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன்.

பயமாக இருந்தது.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...