என் நியாயமான சந்தேகங்களுக்கு பரிசு..??
======================================
வருத்தமாய் இருக்கிறது. வேதனை குமிழி இடுகிறது. தமிழனுக்கு தமிழனே ஆப்பு அடிக்கிறான். வரலாற்றுத் தவறுகளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தன் அளப்பரிய சக்தியை இம் மாதிரியான விடயங்களுக்கு வீணில் சிலவு செய்கிறான்.
ரமணியின் முதல் பதிவில் இருந்த நிதானமும், நேர்மையும் கூட நேரம் ஆக ஆக வலுவிழநது அவர் சிந்தனை வேறு திசையில் சீற ஆரம்பித்து விட்டது.
என்ன கேட்டேன்..??
இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு மாற்று வழிக்கு ஒப்புக்கொண்டு, அதில் இருந்து பிறழும்போது, இந்தியா பேசாதிருக்குமா..?? உலகத்தில் எல்லோருமா நீதியையும், நிதானத்தையும் பேணிக்கொண்டு சொன்ன வாக்குக்கு குந்தகமில்லாமல் நடக்கிறார்கள். சாதாரண மனிதன் அம்மாதிரி தவறு செய்தால் அது அவனோடு முடியும். ஒரு ஸ்தாபனம் தவறு செய்தால், அது பரவும். பலரை பலி கொள்ளும்...! அதுவே நடந்திருக்கிறது. தவறுக்கு தவறு பரிகாரம் என்று படர்ந்து விஷ விருட்சமாய் வளரும். அந்த விவரத்தை வசதியாக மறந்து விட்டு, தன் தரப்பு நியாயத்தை மட்டும் எடுத்துச் சொல்லிக்கொண்டு இத்த்னை நாள் இணையத்தில் பதிவுகள் வந்ததே, தமிழக/இந்தியத் தமிழர்கள் ஒரு வார்த்தை பேசி இருப்போமா..?? ஏன்..அடிபடுகிறவன் என் சகோதரன்..கற்பழிக்கப்படுகிறவள் தமிழச்சி..எரியும் பிஞ்சுகள் நாளைய சமுதாயம் என்ற உணர்வின் அடிப்படையிலேயே வாளாவிருந்தோம். ஆனால், ஒரு அளவுக்கு மேல் பேசாதிருந்தால், மறுதரப்பு நியாயம் செத்துப் போகிறதல்லவா..?? அதுவே என் பதிவின் நோக்கம்.
என்ன நடந்தது இங்கே..?? தேசபக்தி புதுப்பிக்கப்பட்டதென்றார்கள். யதார்த்தம் பேனாகி, பேன் பெருமாளானது என்றார்கள். பாரதிராஜா படத்து வெள்ளையுடை தேவதைகள் எல்லாம் இழுபட்டார்கள். எளிமை என்றார்கள். தட்டை என்றார்கள். தொலைக்காட்சித் தொடர் என்றார்கள்.
நான் கேட்ட கேள்வி சீந்துவாரில்லாமல் கிடக்கிறது மூலையில்....
தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர் ஆதரவுநிலை மாறியதற்குக் காரணம் இராஜீவ் காந்தி கொலை (ஒத்துக்கொள்கிறேன்; ஆனால், இன்னொரு விதத்திலே என்ன சொல்லவருகின்றீர்களென்றால், "ஏன் இராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்பதிலெல்லாம் எனக்கு(ம் - தித்தமிழக்மக்களுக்கும்) அக்கறையில்லை - ரமணி
உண்மைதான். ஏன் ராஜிவ் காந்தியை கொன்றார்கள் என்பதற்கான காரண காரியங்கள் எந்த இந்தியனுக்கும் முக்கியமில்லை. கொன்றது தவறு. அவர் எங்கள் தேச பிரதமர். நீங்கள் நினைப்பது போல geopolitics காரணங்களுக்காக இலங்கை பிரச்சினையில் மூக்கினை நுழைக்கவில்லை. கடலுக்கு இப்புறம் இருக்கும் தமிழகத்தையாவது காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற ஒருமைப்பாட்டு காரணங்களுக்காக, பிரபாகரனை கூப்பிட்டு பேசினார். ப்ரச்சினை முற்றி, போர் வெடித்தபின், உங்கள் உள்வீட்டு கலகக்காரர்களை அடக்கம் பண்ணுவது போல போட்டுத் தள்ளி விடுவீர்களோ....?? உண்மையில் ராஜீவ் கொலையை நீங்கள் நிகழ்த்திய கணத்திலேயே அமைதிப்படையின் கொடூரங்களைப் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வு ரீதியிலான சப்போர்ட்டை இழந்து விட்டீர்கள் என்றுதான் சொல்ல முடியும். புரிந்து கொள்ள இயலாவிடில் நான் ஒன்றும் சொல்ல ஏலாது
ஈழநாட்டுப்பற்றோ இந்தியத்தேசாபிமானமோ கண்மூடித்தனமாக இருக்கக்கூடாதென்பதென் அவா - ரமணி
அதுவேதான் என் ஆசையும். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது. எது பேசினாலும், எதை இழுத்தாலும், நீங்களெல்லாம் இந்தியாவை இழுத்தும் பழித்தும் பேசுவீர்களாம். அதில் உள்ள ஒருதலைப்பட்சமான உணர்வை யாராவது எடுத்துக்காட்டினால், எங்கள் தேசபக்தி புதுப்பிக்கப்பட்டதாய் சொல்வீர்களாம். நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, உங்கள் உணர்வுகள் எப்படி மதிக்கப்பட வேண்டுமென விரும்புகிறீர்களோ, அப்படியே மற்றவர்களையும் நடத்துங்கள். உங்கள் இன உணர்வுக்கும், நாட்டுப் பற்றுக்கும் சற்றும் குறைந்ததல்ல எங்கள் உணர்வுகள். உங்கள் நாட்டில் பிரச்சினை இருப்பதால், உங்கள் உணர்வுகள் குவி மையத்தில் இருக்கிறது. உயிர்போகிற அப்படி இரு பிரச்சினை இங்கே இல்லாததாகையால், நாங்கள் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு, மிமிக்ரி பண்ணிக்கொண்டு, சுகஜீவனம் வாழ்கிறோம் என நீங்கள் நினைக்கிறீர்கள் ..?? அப்படித்தானே..?? அப்படியே இருக்கட்டும் சாமிகளா...
ராஜீவ் காந்தி கொலையை, புலிகளின் வன்முறைகளைப் பேசும் நாம், நம் பக்கத்துத் தவறுகளையும் மறுதட்டில் வைத்தே எடை போட வேண்டும். எல்லை என்பதை நாம் உண்மையின் வாசலுக்கு வெகு முன்னரேயே வைத்து விட்டு எல்லையை மீறக் கூடாது என்று கூவக் கூடாது. உண்மைகள் வரட்டும். தேசாபிமானத்தின் குறுக்கீடின்றி எல்லாப் பக்கத்து உண்மைகளும் வரட்டும். அதுதான் வரலாறு, மொத்த முழுப் பார்வை. - சுந்தரவடிவேல்
போகுமிடமெல்லாம், எழுதும் விடயத்திலெல்லாம் ராஜீவ் காந்தியின் கொலையையும், புலிகளின் வன்முறையையும் பற்றி நாங்கள்தான் எழுதுகிறோமா. ??? இன்றைக்கு இணையத்திலே தேடிப்பாருங்கள். எத்த்னை இந்தியன் ராஜீவ் கொலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவ்விடத்தில் என்ன நடக்கிறது. தூக்கிப் போட்டுக் கொல்லும் சிங்களவனை விட இந்தியாவும், ராஜீவும், இந்திய பத்திரிக்கைகளும் நாயடி படுகின்றன. ஐயா..வீரம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை உங்களிடம். பராக்கிரமம் இருக்கும் அளவுக்கு எதிர்க்கருத்தையும் அளந்து பார்க்கிற பண்பு இல்லை உங்கள் அனைவரிடமும். இந்தியாவிடம் பிச்சை கேட்க விருப்பமில்லை என்கிறீர்கள் இப்போது. எதற்காக இந்தியாவின் தலையீட்டை ஒத்துக் கொண்டீர்கள் அப்போது. எதற்காக அழித்தொழிப்பு வேலைகள் செய்கிறீர்கள் என்றால், துவக்கு சுடக் கற்றதே இந்தியாவிடம்தான் என்கிறீர்கள். விளக்கேற்ற் தீப்பெட்டி கொடுத்தால் வீட்டை கொளுத்த உபயோகிப்பீர்களா..?? என்ன அவலம் இது..??
ஐயா...பாலியல் வன்புணர்ச்சியும், ராணுவ அத்துமீறல்களும் நியாயம் என்று எவனாவது சொன்னானா...ஏன் திரிக்கிறீர்கள்..?? ஒரு அரிப்பெடுத்த அவில்தார் மிருகம் போருக்கு போன இடத்தில் அறியாப் பெண்ணை மயக்கி அனுபவித்தானென்றால், அது இந்திய ராணுவம் எடுத்த பாடமா..?? ஊருக்கு ஊர், இலங்கை உட்பட நடக்கும் கற்பழிப்புகள், ஏமாற்றி வைக்கும் உடலுறவுகளுக்கு எல்லாம் யாராவது பாடம் எடுக்க வேண்டுமா..?? என்ன அறியாமை இது..??
பிரபாகரன் ஆரம்பித்த போது அடிபடும் தன் இனத்துக்காகத்தான் ஆயுதம் ஏந்தினார். ஆயுதம் தந்த பலம் இப்போது பதவி சுகத்தில் வந்து முடிந்து விட்டது. இலங்கை தமிழர்களின் தனியொரு தலைவனாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையே, உள்வீட்டு பிரச்சினைகளாக மாறி எதிர்க்கருத்து கொண்டோரை எல்லாம் போட்டுத்தள்ள சொல்கிறது. அதுவே பயமாக மாறி, இந்திய நுழைவை ஏற்றுக்கொண்டு பிறகு ஒத்துழைப்பு தராமல் பின் வாங்கிக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள துண்டு துக்கடா கட்சிக்கெல்லாம் பொருளாதார உதவி செய்து , பிற்காலத்தில் தமிழீழம் கடல் தாண்டி வளரவும், அந்த மேலாதிக்க ஆசையே தூண்டுகிறது. புலிகளின் இந்த ஆசையே இந்தியாவின் தேசியத்திலும் , இறையாண்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்களுக்கு துர்க்கனவாக இருக்கிறது.
தமிழ்நாடு என் தாய். இந்தியா என் தகப்பன். ஈழத்தமிழன், கொஞ்சம் வளர்ந்து விட்ட என் முரட்டுச் சகோதரன். இவர்களில் யாருக்கு ஏதாவதென்றாலும் எங்கள் நெஞ்சம் பதறும். அந்த உணர்வு உங்களுக்கும் வர, எனக்கு வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை.
இதற்கு மேல் இது விஷயமாக பின்னூட்டம் கொடுப்பதற்கும், மறு பதிவு போட்டு லாவணி பாடுவதற்கு எனக்கு இது Time pass விஷயமில்லை. உணர்ந்தால் உணருங்கள். இல்லாவிட்டால் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருங்கள். பொத்திக் கொண்டு போகச் சொல்கிறவர்கள் தன் கவிதையையே மறுபடி வாசியுங்கள். கைகள் தானாகவே செல்லுமிடம் விளங்கும்.
பெரிய்ய்ய்ய்ய்..ய்ய்ய்ய்ய்ய் கும்பிடு எல்லாருக்கும்....
No comments:
Post a Comment