Monday, August 09, 2004

நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்
===============================================

இனிய சுந்தர்,

தனியே எழுதாமல், அப்படி என்ன பொதுக்கடிதம் வேண்டி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கும், உங்களையொத்த எண்ணங்கள் கொண்ட எமது சக ஈழத்து சகோதரர்களுக்கும் என் நிலையை சொல்ல வேணுமென்று தோன்றியதால் எழுதுகிறேன்.

வல்வை படுகொலையைப் பற்றி தம்பி கரிகாலன், மற்றும் ஈழநாதன் ஆகியோரது பதிவுகளுக்கு தொடர்ச்சியாக உங்கள் பதிவையும் கண்டேன். ஈழத்தமிழர்களின் சோகமும், சிங்களக் காடையர்கள் அவர்கள் மீது நடத்தி வரும் அரக்கத்தனமான ஒடுக்குமுறையும், அதன் விளைவாக உலகெங்கும் சிதறிக்கிடக்கும் இலங்கை மக்களும் எங்கள் பரிவுக்கும், அனுதாபத்துக்கும் உரியவர்கள். அதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் எது நடந்தாலும், இந்தியா எது செய்தாலும், அதில் குற்றங்கண்டுபிடித்து, இந்தியாவை இகழவும் தூற்றவும் செய்யும் உங்கள் அனைவரின் செயல்களும், எழுத்துக்களும் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது.

உங்கள் அனைவரைப் போல எனக்கு இந்திய இலங்கை ஒப்பந்தமும், திகதிகளும், புள்ளி விவரங்களும் விரல் நுனியில் தெரியாது. ஆயினும், இலங்கை தமிழ்ப் போராளிகளுக்காக இந்திரா தொடங்கி, எம்.ஜி.ஆர் அளித்து வந்த ஆதரவும், ஈழத் தமிழினத்துக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு விஷயங்களும் என் மனதில் நிழலாடுகிறது. இவை அத்த்னையும் மாறியதற்கு முக்கிய காரணம் ராஜீவ் காந்தியின் படுகொலை. ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்துக்கு பலியாகி, புலிகளையும் பகைத்துக் கொண்டு, கடைசியில் சொந்த மண்ணிலேயே விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் அவர் என்பதுதான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பொது அபிப்ராயம்.

அவர் எதற்காக கொல்லப்பட்டார்..புலிகளிடம் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடந்துகொண்டாரா போன்ற விவாதங்கள் எல்லாம் நெடுந்தூரம். ஆனால் சித்தாங்களின் அடிப்படையில் மாறுபாடு கொண்டவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் புலிகளின் வேலை என்றால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு தீர்வே இல்லை. இப்படி இருக்கையில், இத்தனை அணுகுமுறைக் குறைபாடுகளையும், வன்முறையும், ரத்த வெறியையும் கொண்டுள்ள ஒரு கூட்டத்திடம் பரிவும், அனுசரணையும் காட்டும் நீங்கள், ஒரு அரசு கொடுத்த வேலையை செய்வதற்காக, நண்பன் யார்..பகைவன் யார்..இவர்கள் என்ன தந்திரம் செய்கிறார்கள் எனு எதுவும் தெரியாத சூழ்நிலையில், இலங்கை வந்து இறங்கிய இந்தியப் படையை, அதன் பொறுப்புகளை, நாம் பிறந்த நாடு இந்தியா என்பதையும் மறந்து புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

அபத்தத்தின் உச்சமாக, ஒரு அவில்தாரின், தனி மனித பாலியல் வாழ்வு சார்ந்த விடயத்தை, இந்திய அமைதிப் படையின் கூட்டுப் பொறுப்பில் ஏற்றி, ஒரு மூன்றாம் தர ஏடு செய்யும் விஷயத்தை, விஷமத்தனமாக செய்து இருக்கிறீர்கள். ஒரு நல்ல எழுத்தாளராகக் கூட இல்லை, ஒரு ந்ல்ல மனிதனாக இரண்டு பக்கமும் பாராமல், யோசியாமல், இப்படி ஒரு தலைப்பட்சமாக கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தியா உங்கள் பிரச்சினையில் நுழைந்தாலும் குற்றம் , நுழையாமல் இருந்தாலும் குற்றம் என்ற உங்கள் நிலையினை நீங்கள் மறுபரிசீலனை செய்கிறவரை, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுகே தெரியாதவரை, இந்த சோகம் தொடரத்தான் போகிறது. இன்னமும் இம்மாதிரியான சோகங்களும், வேதனைகளும் தொடரக்கூடாதெனில், வன்முறைக்கெதிராக உயர்த்திப் பிடிக்கும் உங்கள் கொடியினை, உங்கள் பிரியத்துக்குரிய புலிகளின் பக்கமும் திருப்புங்களேன். வன்முறை விடுத்து அவர்களை சனநாயகப் பாதையில் திரும்பச் செய்ய உமக்கும், உம்மையொத்த எமது சக ஈழ சோதரர்களுக்கும் தெம்பிருக்கிறதா..??

இல்லையெனில், இதோடு பிறர் வன்முறையை மட்டும் கண்டிக்கும் இரட்டை வேட நிலையை விட்டு விடுங்கள்.


என்றென்றும் அன்புடன்

சுந்தரராஜன்


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...