Thursday, August 26, 2004

குறும்பட வரிசை
===============

வெ.சா வின் கனடா சந்திப்பு நடந்த விஷயத்தில் தான் முதன்முதல் நான் சுமதி ரூபன் என்ற பெயரைக் கேட்டேன். பிறகு மனஓசையில் அவர்கள் குறும்படம் பற்றிய சேதி கண்டாலும், இன்று கேவீயார் வலைப்பதிவு படித்த் பின் மனுஷி பார்த்தேன்.

நல்ல படம. அருமையான நடிப்பு. ஆரம்பக் காட்சியிலிருந்தே நடந்து வரும் பெண்ணின் முக இறுக்கமும், அலுப்பும் , மென்மையான இசையும் நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. உள்ளே நுழைந்தவுடன், கஜோல் டான்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும் கணவன், இவள் இருப்பையே கண்டுகொள்ளாமல் சொரிந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருக்கிறான். உள்ளே செல்லும் அவள் இந்த பாராமுகத்தில் வந்த எரிச்சலை சாப்பிங் போர்டில் இருக்கும் மாமிசத்தில் மீது ஓங்கி ஓங்கி காட்டுகிறாள். அது கூட அவன் படம் பார்ப்பதற்கு இடஞ்சலாக இருக்கிறதே என்று முகம் சுளிக்கிறானே ஒழிய, எழுந்து வந்து இன்னதென்று கேட்பதில்லை. நேரம் ஓடுவதை 'மின்சாரக் கனவு' காட்சிகள் மாறுவதிலும், நேரம் ஓடி படம் முடிவதை AVM லோகோ மூலம் காட்டுகிறார் டைரக்டர். ஒரு பேச்சுக்கூட பேசாமல் காஃபி, சாப்பாடு இன்னபிற அயிட்டங்கள் அந்த சாக்கு மூட்டைக்குள் கொட்டப்படுகிறது. சரிதான்...ஏதோ சண்டை போலிருக்கு, அதனால்தான் ஒரே வீட்டுக்குள் இருந்தும், இப்படி ஒட்டாமல் இருக்கிறார்கள் இருவரும் என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் சென்று கடைசி காட்சியில் ஒரு விகார இளிப்போடு படுக்கையறையில் அவசரமாக எழுந்து உட்காரும் அந்த சாக்கு மூட்டையின் முகத்தில் படத்தை முடிக்கிறார் சுமதி.

வசனமே இல்லாமல், நல்ல இசை( மிக்ஸிங்) உதவியோடு, எடிட்டிங், மற்றும் நடிப்பும் சேர்ந்து மனுஷியை உச்சத்துக்கு தூக்கி, பாலுமகேந்திரா போன்ற ஒரு கை தேர்ந்த டைரக்டரின் படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. குறும்படங்களை நான் noose ல் இருந்துதான் பார்க்க ஆரம்பித்தேன். மனுஷி ஒரு நல்ல தொடர்ச்சி.

இவரின் மனமுள் என்ற படத்தையும் பார்த்தேன். ஆனால் என்ன ஏதென்று சரிவர விளங்கவில்லை. இத்தனைக்கும் படத்தில் வசனமுண்டு. தலைப்புக்கும் படத்துக்கும் கூட தொடர்பு விளங்கவில்லை.இதுதான் சுமதியின் முதல் படமாம். இதற்கும் மனுஷிக்கும் இடையே ஏகப்பட்ட வளர்ச்சி இருப்பது கண்கூடாக தெரிகிறது.

நானும் அருணிடம் அவருடைய மற்ற படங்களையும் வலையேற்றம் செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இன்னமும் சாமி மலையேறவில்லை. படமும் வலையேறவில்லை.

நிறைய படங்கள், இது போன்ற அழுத்தமான முத்திரைகளோடு வரவேண்டும்.



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...