Tuesday, August 03, 2004

sa(a)da சிவம் அல்ல ...ஸ்பெஷல் சிவம்
==================================

m002_large

மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்று சொன்னால் எத்தனை பேருக்கு தெரியுமோ, ஆனால் எம்.எஸ் என்றால் சுப்ரபாதம் காதுகளில் ஒலிக்கும். போன வாரம் ஸ்வரலயா ஃபவுண்டேஷனுக்காக, அவர் நடத்திய கச்சேரி ஒன்றை அடர்தகட்டு பேழையில் பார்க்க நேர்ந்தது.

அருமையான கச்சேரி. சொன்னபடி கேட்கும் குரல். கூடவே ஒத்தாற்போல் பாட உறுத்தாத கெளரி ராம்நாராயண் குரல் ( அவர் பாடினரா..??? ) என்று ஒரு சுகானுபவம் அது. பசுபதி அருகில் அமர்ந்திருந்தால் கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாக பயபக்தியோடு கேட்டிருப்பார். அவ்வளவு எம்.எஸ் பைத்தியம். அந்தக் கால ஐஸ்வர்யாராய்..அதுவும் அருமையான சாரீரம் கொண்டவர் என்றால் கேட்கவா வேண்டும்.

"At this ripe old age, we are blessed by a baby" என்று ஆரம்பித்தார் மிஸ்டர் எம்.எஸ். கூட்டம் முழுக்க கொல்லேன்று எழுந்த சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகியது. காரணம் கேரள அரசிலிருந்து எம்.ஏ.பேபி என்பவர் அந்த விழா நடைபெற முக்கியப் பங்காற்றினார். தொடர்ந்த சதாசிவம் அவர்கள், மேடையில் அமர்ந்திருந்த ஹிந்து ஆசிரியரைக் காட்டி " This is not (என்) N.Ram or உன் Ram. he is everybody's Ram" என்று அடுத்த போடு போட்டார். அருகில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு டி.டி.வாசு பயபக்தியுடன்.

ஊரே போற்றும் எம்.எஸ்ஸை விட என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருப்பவர் எம்.எஸ்ஸின் கணவர் திரு கல்கி சதாசிவம்தான். பல பேட்டிகளிலும், இடங்களிலும் " அவர் என் கணவர் மட்டுமில்லை..குரு" என்று எம்.எஸ் பயபக்தியோடு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். எம்.எஸ்சை போன்ற ஒரு பிரபல்யத்துக்கு புருஷனாக இருப்பதே கஷ்டமான காரியம். ( ஏறக்குறைய சொர்க்கம் ஞாபகம் வருதா..?? ) அதுவும் சாதிக் கட்டுப்பாடுகள் கொடி கட்டிப் பறந்த அந்தக் காலத்திலேயே ஒரு இசை வேளாளர் வீட்டுப் பெண்ணை மணக்க பிராமணரான சதாசிவத்துக்கு ஏகப்பட்ட தைரியம் இருந்திருக்க வேண்டும். மணந்து, அந்தப் பெண்ணுக்கு இயற்கையாக இருந்த திறமைகளை மங்கிப்போக விடாமல், மெருகூட்டி, நேரு முதல் ஐ.நா வரை அழைத்துப் போய் அவர் பெருமையை வெளிக் கொண்டுவந்து, இத்த்னைக்குப் பிறகும் எம்.எஸ்ஸின் பின்புறமே இருந்து கொண்டு..ஆஹா..சதாசிவம் அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது.

இதையெல்லாம் தாண்டி, எம்.எஸ் பற்றி ( நேருவை இணைத்து) வந்த வதந்திகள், சினிமாவில் நடித்ததால் இயல்பாக எழக்கூடிய கிசுகிசுப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, மனமொத்த தம்பதியினராக வாழ்ந்து விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்தான் மறைந்தார்.

கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர், விகடனிலிருந்து ரா.கிருஷ்ணமூர்த்தி வெளிவந்தபோது, அவரை வைத்து பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்தி, பத்திரிக்கை செலவுகளுக்காக, மார்க்கெட் உச்சமாக இருந்த காலத்திலேயே இமேஜ் பார்க்காமல் எம்.எஸ் ஆண் வேஷமெல்லாம் போட்டு நடித்தாராம்.

இருந்தால் எம்.எஸ் -- சதாசிவம் மாதிரி இருக்க வேண்டும்.

எங்கே முடிகிறது..??

(படத்தில் எம்.எஸ் மற்றும் எல்லீஸ் ஆர் டங்கனுடன் திரு சதாசிவம் - நன்றி ராயர் காப்பி க்ளப் )



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...