Friday, August 27, 2004

காணாமல் போனவர்கள் - தேன்சிட்டு
=================================

normal_nanthithadas

சொக்கன் மூலம்தான் இந்தப் பெயர் கேள்விப்பட்டேன். தி.ஒ.க வில் கவிதைகள் நிறைய எழுதுவார். தடலடியாக எழுதாமல், புரட்சிக் குரலெல்லாம் கொடுக்கும் பெண்ணியவாதியாக இல்லாமல், பழமைவிரும்பிகளால் கண்டனத்துக்குள்ளாகப்படும் "பப்பிஷேம்" கவிதைகள் எல்லாம் எழுதாமல், எழுதும பெண் கவிஞர் தேன்சிட்டு. மடலாடற்குழுவில் சேர்ந்த காலங்களில் முகமூடிப் பிரச்சினை வந்தபோது, யாரோ இவரை தேன்சிட்டு முகமூடியா ..?? ஒரிஜினல் பெயரென்ன..?..முகமென்ன..என்று கலாட்டா பண்ணித் தொலைக்க, அத்தனை விவகார முகமூடிகளும் பார்த்துக்கொண்டிருக்கையில், தன் ஃபோட்டோவை யாஹூ ப்ரொஃபைலில் போட்டு, என் பேர் திலகா..என் பேர் திலகா என்று ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் மருத்துவம் தொடர்பான படிப்பு படித்துக் கொண்டிருந்தவர், தான் கண்டதையெல்லாம் நல்ல முறையில் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அனுப்பிக் கொண்டிருந்தார். இட்லியைப் பற்றியெல்லம் கூட கவிதை எழுத முடியுமா..?? என்று என்னை ஆச்சரியப்படவைத்தவர். மரத்தடி, ராயர் காபி க்ளப், அகத்தியர் என்று பல குழுமங்களில் உள்ளவர்களோடு உறவுமுறை பெயர்கள் எல்லாம் சொல்லி எல்லாரையும் விளித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தார். கவிதை ஆர்வம் உள்ள நண்பர்கள் புகாரி, சேவியர் கற்பகம் இவர்களோடு உயிரெழுத்து என்ற மடலாடற்குழு ஆரம்பித்தார். என்ன ஆச்சோ தெரியவில்லை...பெர்முடா முக்கோணம் போன ப்ளேன் போல திடீரென்று "காணாமல்" போய் விட்டார். ஆமாம்...நிசமாகவே ...காணாமல்தான் போய்விட்டார். உயிரெழுத்து நண்பர்களுக்கு மேல் விவரம் தெரியலாம்.

காணாமல் போன அந்த வானம்பாடி வகைக் கவிஞர் என்றாவது ஒரு நாள் தடாலென்று திரும்பி வந்து இணைய ஊடாட்டம் செய்ய வேண்டும் என்பது
ஆசை மட்டுமல்ல...வேண்டல் கூட.

அவருடைய கவிதை ஒன்று கீழே:


எட்டாத தொலைவு
**************************

பிரிந்திராத சொந்தங்களே
நான் மாறிவிட்டேன்
சுத்தமாக விலக்கிவிட்டேன்-
உங்களை என்னிடமிருந்து
இதைச் சொலவ்தில்
மிகுந்த வருத்தம்தான் எனக்கு.

பயந்தவளென்றும்
பாவமென்றும், நான்
சாதுவென்றும்
சொல்லிச் சொல்லி என்னைப்
பாதுகாத்தவர்களை மறந்து
எட்டாத தொலைவில்
இன்னொரு வாழ்க்கை

தயவுசெய்து
என்னைத் தேடிவராதீர்கள்
எனக்குள் நானே
தொலைந்து விட்டபிறகு,
இதென்ன
இறுதி ஆசைபோல்
இழந்த நினைவுகள்.?

என் வாழ்வில் நீங்கள்
வந்துபோகும் அத்தியாயங்கள்
முடிந்தே விட்டன
என்றாலும்
மனதில் சில
ஈரங்கள் மிச்சமுண்டு
கண்ணீர்த்துளிகளாய்..!

மணமான பெண் தன் பிறந்த வீட்டை பார்த்து சொல்வதாய் இருக்கும் இந்த கவிதை, கிட்டத்தட்ட அவருடைய நிலையை நமக்கு சொல்வது போல் இல்லை..??இதுதான் எனக்குத் தெரிந்து இணையத்தில் அவர் கடைசியாய் எழுதியது.

அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். பிறகு, கொஞ்ச நாள் கழித்து திரும்ப வந்து கவிதை எழுதிக்கொள்ளலாம். அதுவரை என் தட்டில் இட்லியை பார்க்கும்போதெல்லாம் கோணலாக நான் சிரிப்பதை பார்த்து வீட்டில் விழி பிதுங்கட்டும்.

காணாமல் போனவர்கள் பட்டியல் தொடரும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...