======================
என்னுடைய முந்தைய பதிவில் சேர்த்திருக்க வேண்டிய விஷயமிது. ஆனால் தனிமரியாதை செய்ய வேண்டுமென்று தோன்றியதால் இங்கே எழுதுகிறேன்.
பத்ரியின் இலக்கியச்சிந்தனை கதைத் தேர்வு சம்பந்தமான பேச்சை படித்து முடித்ததும் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. பத்ரியை ஒரு டெக்னோக்ராட்டாக, தினமணி போன்ற வடிவம் உள்ள ஒரு வலைப்பூவை நடத்துபவராக, கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள ஒரு ஐ.ஐ.டி பஸ் மண்டையாக, அமெரிக்காவில் 'சாத்தமுசாதம்' சாப்பிட்டு படித்துவிட்டு இந்தியாவில் தொழில் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்துபவராக, எனக்குத் தெரியும். மடலாடற்குழுக்களிலும், மற்ற இடங்களிலும் வரும் அவர் கட்டுரையில் தினப்பத்திரிக்கை செய்தி வாசனை நிறைய அடித்தாலும், புனைவுப் படைப்புகளிலும் ( உதா: விடுதலை இனி இல்லை - நான் தனியே சேமித்து வைத்த கதை) அவருக்கு ஆர்வம் இருப்பது தெரியும்.
ஆனால் இலக்கிய சிந்தனை பேச்சினைப் படித்தபின்னர்தான் அவர் வாசிப்பின் நீள அகலங்கள் புரிந்தது. எழுத்தை தினப்படி எழுத வேண்டிய கட்டாயத்திலிருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களுக்கு இம்மாதிரியான விசாலமான வாசிப்பு தேவை. சாத்தியமும் கூட. ஆனால் இவருக்கு இவ்வளவு படிக்க நேரம் கிடைப்பது, இத்தனை தமிழ் வாசிப்பு ஆர்வமிருப்பது மிக நல்ல விஷயம். இவருடைய நிறுவனம்தான் கிழக்கு பதிப்பகத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அறிகிறேன். தமிழுக்கு சர்வதேச மதிப்பு கூடி வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழ் எழுத்தாளர்கள் வலை வெளியில் உலா வர ஆர்வம் காட்டும் இந்த சமயத்தில், பத்ரி மாதிரி ஒரு புரவலருக்கு, தமிழ் புத்தக ஆர்வமும், தமிழ் பதிப்பக தொழில் சார்ந்த விருப்பமும் வந்திருப்பது, கண்டிப்பாக தமிழம்மாவுக்கு நல்லது.
தமிழ் எழுத்தாளர்களுக்கு பொற்கிழி தர வேண்டாம். எழுதின எழுத்துக்கு ஒழுங்காக சேர வெண்டிய ராயல்டி கொடுத்தாலே போதும்...கிழக்குக்கு எப்போதுமே மேற்கு இல்லை.
சீக்கிரம் க்ரெடிட் கார்டு உதவியோடு புத்தகம் வாங்கும் வசதியும் ஏற்படுத்தித் தாருங்கள் பத்ரி.
No comments:
Post a Comment