Friday, August 06, 2004

மரபு - புதுசு - கவிதை..??

=====================

புதுக்கவிதை
===========

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத -

கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக்கொண்ட
மக்களாட்சி முறை

- கவிஞர். மேத்தா

*********************
தமிழ்க்கவிஞர்
============

உரைநடையினை
உடைத்துப் போட்டு
உடைப்பெடுக்கின்றதே
தன் கவிதையென்பார்
ஓசையில்லாமல்
ஓசை நயத்தையும் அழிப்பார்
அசைகளைப் பாடலில்
வேர் நுனியோடு
அசைத்தறுத்தெடுப்பார்
சீர்களைக் கவிதையில்
சீர் குலைத்துவிட்டு
சீர்மை மிகு பாடலென்பார்
வெண்பாவில் ஒன்றேனும்
எழுதியிராமல்
பெண் பாவை
அங்கத்தையே பெரும்பாலும்
தங்கமாய்ச் சொல்லி
கவி சமைப்பார்.
இலக்கணம் தெரியாமல்
பிலாக்கணமாய்
வரிகளைச் தொகுப்பார்
உவமையையும்
உருவகத்தையும்
உருத்தெரியாமற்
சிதைத்திருப்பார்
எளிமை என்பார்
அழகு என்பார்
அருமை என்பார்
இதுவே புதுமையுமென்பார்
ஒரு பாவுக்கேனும்
இலக்கணம் தெரியாதெனவுரையார்,
வினவிப் பாருங்களேன்
"போடா பழைய பஞ்சாங்கமே" யென
பொரித்தெடுப்பார் - அவரே
இருபதாம் நூற்றாண்டில்
தமிழ்க்கவிஞர்.

- "மரபர்" ராகவன் கோபால்சாமி


இனி பெருசுகள் :

வார்த்தைகளுக்கு மிஞ்சி, சொல்லின் அர்த்தம் மிஞ்சி, ஒரு உணர்வு அல்லது பிரம்மிப்பு ஏற்படுத்துவது கவிதை.வார்த்தைகளுக்கு இடையே தொக்கி நிற்கும் அர்த்தம் கனமாக கனமாக கவிதை உயர்வாகிறது.ஒருவன் ஒரு பெண்ணுக்கு மான் போல மருண்ட கண்கள் என வர்ணித்தால், அது வெறும் உபமானம் மட்டுமல்ல, அதில் அந்தப் பெண்ணை அவனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது என்கிற த்வனியும் தொக்கி நிற்கிறது. அவள் அழகான கண்களை உடையவள் என்பதும் புரிகிறது. கவிதையில் அந்தப் பெண்ணை பிடித்திருப்பது பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் உணர்கிறோம் இல்லையா..??. அதுபோல கவிதையில் சொல்லப்பட்ட அர்த்தம் தாண்டி ஒரு உணர்வு புரிபட் வேண்டும்.உணர்வு மரத்தின் உச்சாணிக்கிளை கவிதை.

- பாலகுமாரன் ("விசுவாமித்திர" தாடி இல்லாமல்)

புதிதோ, மரபோ - சட்டென்று மனதைக் கவ்வும் தன்மை, நேர்த்தியான நெசவு, "இந்தக் கவிதையை நான் எழுதாமல் போனேனே" என்று மனதில் சிறிய வருத்தம், பொறாமை, கவிதையனுபவத்தில் விளைகிற பிரமிப்பு, தனியாக நடக்கிறபோது கவிதை வரிகளை சத்தம் போட்டு சொல்ல வைக்கப் பார்க்கிற தூண்டுதல், எதிர்பாராத தருணத்தில் சடாரென நினைவுக்கு வந்து இன்புறுத்தும் , துன்பப்படுத்தும் கவிதை வரிகள், நாலு வரிக்கு நடுவில் மறந்து போன சொல்லை நாள் முழுக்க மனதில் தேடி, இரவில் படுக்கப் போகிறபோது சட்டென்று நினைவு வரக்கிடைக்கும் சந்தோஷம்...இவைதான் கவிதை என்று எனக்குத் தோன்றுகிறது.

- இரா.முருகன்

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...