Monday, August 23, 2004

தமிழ் க்ளாஸ்
============

குழந்தைகளின் படிப்பைப் பற்றியும், இந்திய அமெரிக்க கல்வி முறை வேறுபாடுகள் பற்றியும் நான் இங்கு ஏற்கனவெ சங்கு ஊதி இருக்கிறேன். இப்போதைய பதிவுக்குக் காரணம் - என் நண்பரின் சமீபத்திய விசிட்.

kids

எல்லா பெற்றோர்களின் முக்கியமான ஆதங்கமே, தான் கோட்டை விட்ட இடங்களில் தன் குழந்தைகள் தவறி விழக்கூடாது என்பதே. அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தக்கால ஆனந்த விகடனில் வரும் ஸ்கூல் ஜோக் ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

மேற்சொன்ன நண்பருக்கு ஒரு சுட்டிக் குட்டி இருக்கிறது. அது பிறந்த நாளிலிருந்தே கையில் பேனாவையும் புத்தகத்தையும் அண்ணாச்சி கொடுத்து விட்டார் போல. ஆய கலைகள் அறுநூற்று நாற்பதையும் (?!!) அந்தப் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்து அதன் இளவயதிலேயே இத்த்னை விஷயங்களை லோட் பண்ணி, அதை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
பாலே நடனம் போகிறது. நீச்சல் வகுப்பு போகிறது. ( குளிர்காலத்தில் வெந்நீர்க் குளம்..:-) ) . ஜிம்னாஸ்டிக் க்ளாஸ் போகிறது. இத்துடன் வாரத்துக்கு மூன்று நாட்கள் ஸ்கூல போகிறது. இளைத்துக் கறுத்து இருமிக்கொண்டே வாயடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்...சிசுவுக்கு மூன்று வயது.

என்ன சொல்ல...??

வாழ்க்கையில் பொருளாதாரம் தரும் பாதுகாப்பான வாழ்வு கிடைக்காமல்தான் பலபேர் தனக்குப் பிடித்த துறைகளை எல்லாம் விட்டு விட்டு வேறு துறைகளில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வற்புறுத்தல்கள் அடுத்த தலைமுறைக்கு இப்போது இல்லாத பட்சத்தில் அவர்கள் விருப்பம் என்ன என்று பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையை வடிவமைத்தால் என்ன குடிமுழுகிப் போகும்..?? நான் இஞ்சினியரிங் படித்தேன். என் பிள்ளை அட்லீஸ்ட் IIT படிக்க வேண்டும். நான் டாக்டர் சீட் கிடைக்காமல் விலங்கியல் படித்தேன். என் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று பிள்ளைகளை தங்கள் காலநீட்சியாக பார்ப்பதால் இந்த விபத்துகள் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிள்ளைக்கு ட்ராயிங் பிடித்திருக்கிறதா...க்ரியேட்டிவ் டிசைனிங் போகட்டும். ம்யூசிக் பிடித்திருக்கிறதா, கிடார் கற்றுக் கொள்ளட்டும். விளையாட்டு பிடித்திருக்கிறதா ஸ்போர்ட்ஸ்மேன் ஆகட்டும். கம்ப்யூட்டர் பிடித்திருக்கிறதா..அதைப் படிக்கட்டும் என்று எல்லாமே ஓரளவிற்கு குழந்தைகளின் விருப்பம் சார்ந்து நிகழ்ந்து விட்டால், நம்மைபோல 'ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்" என்று அழுகுணி ஆட்டம் ஆட வேண்டி இருக்காது. மனசாட்சி உறுத்தலோடு இப்படி ஆஃபிஸ் நேரத்தில் ப்ளாக் ஆட்டம் ஆட வேண்டி இருக்காது.

போன வாரம் இங்கே வந்திருந்தபோது அதே நண்பர் " என்ன சுந்து..சூர்யாவை தமிழ் க்ளாஸ் சேக்கலியா..என் பொண்ணு அடுத்த வாரத்திலேர்ந்து தமிழ் க்ளாஸ் போறா" என்று அநாயாசமாக ஒரு ஹைட்ரஜன் பாம் போட்டார். இத்தனைக்கும் நண்பருக்கு என் தமிழ்ப்பித்து பற்றி ஓரளவிற்கு தெரியும். பாம்படிக்கவும், சொறிந்து கொள்ளவும் நான் இணையத்தில் நடத்தும் லீலைகளும் தெரியும். சங்கடமாக ஒரு சிரிப்பைச் சிந்திவிட்டு கப்சிப் ஆகி விட்டேன்.

ஜிம் குட்டிகரணம், பாலே, ஆக்ஸெண்ட் போட்டு ஒரு இங்க்லீஷுடன் சமீபத்திய சேர்க்கையாக, அந்தச் சுட்டிக் குட்டி எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தை எனக்கு எழுதிக்காட்டி, நான் களிக்கும் நாளை ஆர்வமுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...