தனியார் துறையில் இட ஒதுக்கீடு
===============================
பத்ரி மற்றும் வெங்கடேஷின் பதிவுகள் படித்தேன். இதற்குமுன்னரே பாட்டில் பாலாவும் இதை எழுதி இருந்தாலும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்று ஆரம்பித்துவிட்டு கடைசியாக இடஒதுக்கீடு என்று பொதுவாக இதை விமர்சித்துவிட்டுத்தான் முடித்தார்.
என்னைப் பொறுத்தவரை தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவையற்றது. தனியார் துறையில், எந்த ஒதுக்கீடும் இல்லாமலேயே ஏற்கனவே எல்லா வகுப்பினரும், அவரவர் திறமையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெற்றுத்தான் வருகிறார்கள் - சில குறிப்பிட இடங்களைத் தவிர. அங்கு மட்டுமே முதலாளி வர்க்கத்தின் குறுகிய கண்ணோட்டத்தால் குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளையதலைமுறையின் கையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போது இதுவும் குறைந்து விடும் என்று நம்புவோம்.
ஏற்கனவே பொதுத்துறையில் இடஒதுக்கீடு இருப்பதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. அரசின் தயவில் கல்வியும், உயர்படிப்பும் படித்து விட்ட புதிய பார்ப்பான்கள் என்று அவர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள். ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால், ஏழையாக இருந்தாலும் முன்னேறிய வகுப்பினர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுகின்றன என்று சொல்கிறார்கள். அது முற்றிலும் நியாயம். ஆனால் பொருளாதாரம் மட்டுமே இதை அளக்க சரியான அளவுகோல அல்ல என்று நினைக்கிறேன்.
தலித் மற்றும் பின்தங்கிய வகுப்பினரில், போன தலைமுறையில் படித்து பட்டம் பெற்ற, செல்வம் சேர்த்து நல்ல நிலையில் இருப்பவர்களுக்கும், அவர்களால் பலன் பெறக்கூடிய அவர்களது குடும்பத்தினருக்கும் முதலில் இந்த சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். அதனால் மிகுதியாகும் வாய்ப்புக்களை அதே வகுப்பினில் இருக்கும் இன்னமும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் மக்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களும் கல்வி பெற்று சரியான நிலைக்கு வந்த பிறகு, அவர்களின் சலுகைகளை பறித்து, மற்ற வகுப்பினில் இருக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கலாம்.
பொருளாதார நிலை மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை முன்னேற்றம் அடைந்தவர்களாக காட்ட போதுமானதில்லை. அதைக் காட்டிலும், கடந்தும் வேறு காரணிகள் இருக்கின்றன. மாயவரம் ஏ.வி.சி கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படிக்கும் ஒரு முன்னேறிய வகுப்பு பையனும், ஒரு தலித் இளைஞனுக்கும் இருக்கும் பொருளாதார வசதிகள் ஒன்றாக இருந்தாலும், அந்த அடிப்படை கல்வியை முடித்துவிட்டு அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற பார்வையில், இருக்கிறது சூட்சுமம்.
பிராமணர்களுக்கு இத்தனை வருடங்கள் இந்த சலுகைகள் எல்லாம் மறுக்கப்பட்டு, பின்தங்கியோருக்கும், தலித்துகளுக்கும் கொடுக்கப்பட்டன. என்ன குறைந்து விட்டது அங்கே..?? திறமையின் மூலமும், ஏற்கனவே தன் திறமை மூலம் வெளியே பறந்து விட்ட தன் வகுப்பினர் மூலமும், அந்த வகுப்பினர் தங்களை இன்னமும் பலமாக்கி கொண்டு வளம் பெற்று விடவில்லையா..?? ஏற்கனவே உழுது, பண்படுத்தி, சிறக்க வைத்திருக்கும் அவர்கள் மூளையைக் கொண்டு அவர்களால் எங்கும் ஜெயித்து விட முடியும் - ஏழ்மை இருந்தாலும். அம்மாதிரி தொடர்புகளும், வாய்ப்புகளும் இல்லாதவரையே நான் இன்னமும் பின் தங்கிய வகுப்பினர் என்கிறேன். எனவே பொருளாதார அடிப்படையில், முன்னேறிய வகுப்பினர்கள் ஒதுக்கீடு கேட்பதற்கு காலம் கனியவில்லை.
பத்ரியின் கருத்துக்கு மறுமொழி தந்த திருமலை சிவகாமி ஐ.ஏ.எஸ் ஸின் கருத்தை மேற்கொள் காட்டி, அவர் சொன்னதை சுயநலம் என்கிறார். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் சலுகைகள் தொடரட்டும் என்று சொன்னது தன் சந்ததியினர் அனைவரும் கலெக்டர் ஆக இல்லை. தன் மீது பட்ட வெளிச்சம், இன்னமும் நசிந்த நிலையில் இருக்கும் தன் இன மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அறிவினாலோ, படிப்பினாலோ கிடைக்கும் மூளை வெளிச்சமும், மலர்ச்சியும், அதிகாலை சூரியக் கதிர் மாதிரி. மெல்ல மெல்லத்தான் தலித் சமூகத்தின் உள்ளே ஊடுறுவும் . அதுவரை கொஞ்சம் பொறுமை அவசியம்.
இப்போதைக்கு இடஒதுக்கீடு பொதுத்துறை/ அரசுத்துறையில் மட்டும் இருப்பதே சாலச்சிறந்தது. அதுவும் வெறும் நுழைவுக்கு மட்டுமே. பதவி உயர்வுக்கும் மற்ற சிறப்புகளுக்கும் திறமை அடிப்படையில் கணக்கிடுவதே சரியானது.
நாஞ் சொன்னா யாரு கேக்கப் போறாங்க..ஏதோ தோணிணதை எழுதிட்டேன்.
அம்புடுதேன்.!!!!!!!
No comments:
Post a Comment