Thursday, January 12, 2006

வாழ்த்துகள் மலேசியா ராஜசேகரன்!!!!

இந்த வார அவள் விகடனில் ஒரு பணிப்பெண்ணின் தன்மானப் போராட்டம் என்ற தலைப்பில் மலேசியா ராஜசேகரன் சென்ற பதிவில் குறிப்பிட்ட "டிப்ஸ்" சம்பவம் வந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராஜசேகரன் ஐயா.

அவள் விகடனில் இருந்து:

சீனாவின் உட்புறங்களில் பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், கேளிக்கை மையங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்க மறுத்துவிடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘‘சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. செய்யும் வேலைக்கான ஊதியத்தில் நாங்கள் குறியாக இருப்போம். அது அல்லாது, ‘சன்மானம்’ என்று தரப்படுவதை வாங்குவது என்பது எங்கள் கலாசாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது!’’ என்றார்கள்.

இதுகுறித்து நான் நேரில் கண்ட சுவாரஸ்யமான ஒரு சம்பவம்... ஒருமுறை, சீனாவில் உள்ள ‘ஹ§னான்’ மாநிலத்தின் தலைநகரமான ‘சங்ஸா’ என்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு நானும் ஒரு நண்பரும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து இருந்த மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதி இருவர் இருந்தனர்.
தங்களின் சாப்பாட்டுக்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையில் இருந்து 30 யுவானை (ஹிஷி$ 3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பரிமாறிய சீனப் பணிப்பெண்ணிடம் ‘டிப்ஸாக’ நீட்டினார். அந்தப் பெண் அதை வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருக்கவும், அந்த அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் தோள்களையும் ‘சரணடைந் தேன்’ என்கிற பாணியில் உயர்த்திக் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.


மனைவியிடம் பேசிக்கொண்டே உணவகத்தின் வாசல் வரை போனவர், திரும்பிப் பார்த்தபோது, அந்தப் பணிப்பெண் கையில் சில தட்டுகளோடு உணவகத்தின் பின்னே இருந்த சமையற்கட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
உடனே, அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளை போல் கிடுகிடு என்று ஓடி வந்து, அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது அந்த 30 யுவானை வைத்துவிட்டு, கிடுகிடு என்று ஓடி மனைவியோடு, வீதியில் சென்ற கூட்டத்தில் கலந்துவிட்டார்.


சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்தப் பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். பணத்தை சட்டென்று எடுத்துக்கொண்டு உணவகத்தின் வெளியே ஓடினார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், நண்பரும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்துவிட்டோம். எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதியை தேடியபடி, நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு, உணவகத்தில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின்தொடர்ந்து சென்ற நான், டாக்ஸி நின்றிருந்த இடத்துக்கு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்ஸியை அணுகிய அந்தப் பணிப்பெண் ஓட்டுனரின் கதவைத் தட்டி டாக்ஸியை நிறுத்திவிட்டு, பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதி யிடம் ஜன்னல் வழியாக அந்த 30 யுவானை நீட்டியபடி, முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். விடாது போராடி, அந்த அமெரிக்கரிடம் பணத்தை ஒப்படைத்த பின்னரே, அங்கிருந்து நகர்ந்தார்.

நான் நாற்பது நாடுகளுக்கு போய் வந்த அனுபவம் உள்ளவன். இத்தகைய ‘தன்மான உணர்வை வெளிக்காட்டும்’ ஒரு சம்பவத்துக்கு ஒப்பான சுற்றுப்பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. & மலேசியா

ராஜசேகரன்

3 comments:

  1. விகடனில் வந்தமைக்கும், மலேசிய இராஜசேகரனை வலைப்பதிவுக்கு அறிமுகப்படுத்தியமைக்கும் உங்கள் இருவருக்குமே நன்றி. அத்துடன்,அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
    அன்புடன்,
    கல்வெட்டு (எ) பலூன் மாமா.

    ReplyDelete
  2. மிக்க நன்றி. உங்களுக்கும், உங்கள் இல்லத்திலுள்ள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மலேசியா ராஜசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ,தொடர்ந்து தமிழ் வலைப்பதிவுகளை ஊக்குவிக்கும் அவள் விகடனுக்கு நன்றியும்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...