Friday, May 05, 2006

இளஞ்சேரன் பாண்டியன்

சேரன் மீது எனக்கு டைரக்டர் என்ற முறையில் பெரிய அபிப்ராயமெல்லாம் கிடையாது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, மனிதனின் மிக மென்மையான பகுதியை வருடிவிட்டு, சோக உணர்ச்சியை தூண்டிவிட்டு படம் எடுக்கிற ஆசாமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும், எதற்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று அவர் படங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு அழும்போது, எரிச்சலாக இருக்கும். அழுகிற ஆண்களின் மீது எனக்கு நம்பிக்கை வருவதில்லை.

விகடனில் இந்த வாரம் முடிந்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் அந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. அதிலும் நிறைவுப் பகுதி பலே ஜோர். டைரக்டரின் அப்பாவாயிட்டோமே என்ற கெத்தெல்லாம் பார்க்காமல் பழையூர்ப்பட்டி ஆபரேட்டர் பாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அபிராமி ராமநாதனிடம் "மொதலாளி" என்றழைத்துப் பேசிய சேரனின் அப்பாதான் சேரனின் இன்றைய வெற்றிக்கும் ஆபரேட்டர்சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.

டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று தொடர். விகடன் பிரசுரமாக அது வெளிவரும்போது அது ஆடும் கூத்து, காலம் என்கிற மாயக்கண்ணாடியில் பலவண்ணங்களில் தெரியும்.

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி

16 comments:

 1. சில சமயம் இந்த அதீத உணர்ச்சிகள் தான் மனிதனை பெரிய கலைஞனாக்குகிறது, அந்த வகையில் சேரனின் அழுகையும் ஒன்று! சேரன் அடைய வேண்டிய ரீச்சு அதிக தூரம் தான், அதற்கு அவர் வீச்சு அதிகரிக்க வேண்டும்! முற்றிலும் உண்மை!

  ReplyDelete
 2. நல்லதொரு தொடர்.
  முழுவதுமே சேரனின் எழுத்துத்தானா? அல்லது வேறு யாராவது தொகுத்தார்களா?
  முன்பு பாலாவின் தொடரின் போதும் எனக்கு இப்படித்தான் சந்தேகம் வந்தது.

  சேரனின் படங்களுக்குள் ஓரளவாவது மாறுபட்டு வந்தது 'தேசியகீதம்' என்று நினைக்கிறேன். (அதனாலேயே அதிகம் கவனிக்கப்படவில்லைப் போலும்)

  நீங்கள் சொல்வது போல் அந்த வட்டத்திலிருந்து அவர் வெளிவரத்தான் வேண்டும். நாலு படங்களுக்கு ஒன்றாவது முழுநீள நகைச்சுவைப் படமோ, புலனாய்வுப் படமோ தருவது நன்று. Action படம்கூடத் தரலாம். (இப்போது Action என்ற பெயரில் வரும் எந்தத் தமிழ்ப்படமுமே நான் நினைக்கும் வகையிலில்லை.)
  குறிப்பாக 'பாடல்கள் நல்ல சினிமாவுக்கு ஒரு சுமை' என்ற சேரனின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு. பாடலில்லாமல் படம் தரும் அவரது விருப்பத்தை அவர் இதுவரை நிறைவேற்ற முயற்சிக்காதது ஏனோ தெரியவில்லை. (இருபது வருடங்களின் முன்பே அந்நிலைப்பாடு எடுத்துவிட்ட கமல்கூட முழுமையாக முயற்சிக்கவில்லை).
  அப்படி அவர் முயற்சிக்கும்போது காதலில்லாமல், பழைய நினைவுகள் - இன்னபிற வழமையான சமாச்சாரங்களில்லாமல் வித்தியாசமான படமொன்று கிடைக்கும்.
  முதலில் சேரன் வெற்றிகரமான தயாரிப்பாளராக வருவது முக்கியம்.

  ReplyDelete
 3. அடேங்கப்பா..

  யாருப்பா இதை தேர்தல்ல வகைப்படுத்தினது..??

  செம லொள்ளு...

  ReplyDelete
 4. Anonymous12:50 AM

  மூக்கு அண்ணாச்சி,

  நல்லா இருக்கியல்லா?
  நம்மாளப் பத்தி எழுதியிருக்கிய. ந்ல்லா இருங்க!! :-)

  //எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது//

  அப்படின்னு ஒரேயடியா சொல்லிடாதீங்க அண்ணாச்சி.. சொந்த அனுபவத்தை கற்பனையோடு சேர்த்து தரும் புனைவுகளில் இருக்கும் ஆழம் மற்ற வெற்றுப் புனைவுகளில் கிடைக்குமா?
  'தலித் இலக்கியங்களும்', கிராவின் படைப்புகளும் அனுபவங்களின் பெயரிலேயே எழுதப்பட்டும் அலுத்தா விட்டது?

  வீச்சு இன்னமும் அதிகமாக வேண்டுமென்பதோடு உடன்படுகிறேன் நான்.ஆனால், காலைத் தரையில் ஊன்றிக்கொண்டு யோசிக்கும் ஒரு படைப்பாளியாக சேரனாவது தொடர வேண்டும். என்ன சரிதானுங்களா? :-)

  சாத்தான்குளத்தான்

  ReplyDelete
 5. வசந்தன்,

  பாலா மற்றும் சேரனின் தொடர் - இரண்டையும் தொகுத்தது ரா.கண்ணன்.
  ஆனந்த விகடன் குழுவின் சீனியர் எடிட்டர்.நல்ல எழுத்துகளுக்கு சொந்தக்காரர். நான் ஒரு காலத்தில் மாணவப் பத்திரிக்கையாளராய் ஜல்லி அடித்தபோது, சொல்லி அடித்த அவர் அவர் என் பேட்ச் மேட்.;-)

  ReplyDelete
 6. சொந்த அனுபவத்தை வைத்து படமாக்குவது, இரவல் வாங்கிப் படமாக்குவது பற்றி எல்லாம் எனக்கு அதிகம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சேரன் ஒரு நல்ல இயக்குனர்.

  பல சமயங்களிலே, சேரன் செமத்தியாகக் கடுப்பேற்றி இருக்கிறார். அடிக்கடி, அவரது கதாபாத்திரங்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி, பக்கம் பக்கமாக டயலாக் அடிக்கும் போது, எழுந்து மென்னியைப் பிடித்தால் என்ன என்று தோன்றும். இந்தக் குறைகளை எல்லாம் மீறியும், அவரது படங்களின் காட்சி அமைப்பும், கதைத் தேர்வும், பாத்திரங்களின் தேர்வும், பல நுட்பமான காட்சியமைப்பும் சில சமயம் பிரமிக்க வைத்திருக்கின்றன.

  உதாரணமாக, பொற்காலம் என்கிற சாதாரணமான மெலோடிராமாப் படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. முரளி, தன்னைக் காதலிக்கும் சங்கவியை, தன் தங்கையின் பொருட்டு, துறப்பது போன்ற காட்சி அமைப்பு. அவர், வற்புறுத்த, இவர் மறுக்க, கொஞ்சம் கண்ணீர், கொஞ்சம் வசனம் என்று நகரும் சாதாரணமான காட்சிதான். இதற்கு மேல் வற்புறுத்த முடியாது என்று சங்கவி கண்ணீருடன் விடை பெறும் போது, " உன்னை காதலித்ததற்கு பதிலாக பேசாமல் உனக்கு தங்கையாகவே பிறந்திருக்கலாம்" என்கிற மாதிரி ஒரு வசனத்தைச் சொல்லி விட்டு நகர்வார். தூக்ககலக்கத்தில் நைட்ஷோ பார்க்கும் போது கூட, இந்தக் காட்சியை, அந்த நுட்பத்தை, கவனித்ததும், 'அட' என்று நிமிர்ந்து உட்கார்ந்தது நிஜம்.

  படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ, ஓடுகிறதோ இல்லையோ, இது போன்ற, இனிய ஆச்சர்யங்கள், அவரது படங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். படு செண்டிமெண்டல் குப்பைகளில் கூட, சில சமயம், அவரது சிந்தனையும், அதை உருவாக்கும் விதமும் கவர்ந்திருக்கின்றன. தன்னுடைய இந்த டெம்போவை, படம் முழுக்கத் consistent ஆக மெய்ன்டெய்ன் செய்தால், ஆட்டோகிரா·ப் மாதிரி படம் தர முடிகிறது. கொஞ்சம் 'லூஸ்' விட்டால், over ambitious 'தேசிய கீதம்' போல அபத்தக் களஞ்சியம் ஆகிறது.

  அவரது ஒரு படத்தைக் கூட என்னால் முழுமையாக ரசிக்க முடிந்ததில்லை. இருந்தாலும், நாளா வட்டத்தில் அவரால் நல்ல படம் தர முடியும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 7. ஆஹா...சரிதானுங்க அண்ணாச்சி.

  சொந்த அனுபவம்கிறதை, சுயவாழ்க்கை அனுபவம்னு தெளிவா எழுதி இருக்கணும். என் தப்பு...த்தேன்

  நல்லா இருங்க அப்பு...!

  ReplyDelete
 8. நமது அணி அரசியல் கட்சியாக மாற்றி திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  தலைவர் தமிழினி முத்து

  துணைத்தலைவர் அஞ்சா நெஞ்சன் பொட்டீக்கடை

  பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் தருமி

  துணை பொதுச்செயலாளர் வியட்நாம்வென்றான் ஜோ

  திராவிட ராஸ்கல்கள் இயக்கத்திற்கு உங்கள் சேவையை பாராட்டி உங்களுக்கும் ஒரு பதவி தர விழைகிறோம். உங்களுக்கு தேவையாக பதவியை கேளுங்கள்.கவனியுங்கள்.கேட்டு பதவி தருகிற ஒரே இயக்கம் நம்முடையது மட்டுமெ.

  ReplyDelete
 9. கொள்கை பரப்பு செயலாளர் பதவி காலியா இருக்கா? இருந்தா எனக்கு சொல்லி அனுப்புங்க. :)

  ReplyDelete
 10. முத்து, எனக்குப் பதவியே வேணாமப்பு..

  பதவிக்கு வர்ற மக்களையெல்லாம் பாத்தா பயமா இருக்கு ;-)

  பிரகாஷ், உங்கள் கருத்துக்கு நன்றி. சேரனின் நிறைய படங்கள் நான் பார்க்கவில்லை.
  என்னய்யா..இந்தாளு எப்பப்பாத்தாலும் மெஸேஜ்/மெசேஜூன்னு ஓடிக்க்கிட்டு இருக்கான்னு லைட்டா அலுப்பு எனக்கு.
  உட்டா கோபால் பல்பொடி பாக்கெட்ல கூட மெசேஜ் வெக்கிற கருத்துத் தீவிரவாதி சேரன். இப்படி நெட்டுக் குத்தா நிக்காம, கொஞ்சம் அழகா சொல்லலாமேன்னு நினைப்பேன்.

  நீங்க சொன்ன உதாரணம் அதுக்கு அழகான உதாரணம். பாருங்க. நான் அந்தப் படத்தை மிஸ் பண்ணி இருக்கேன்.


  //அவரது ஒரு படத்தைக் கூட என்னால் முழுமையாக ரசிக்க முடிந்ததில்லை. இருந்தாலும், நாளா வட்டத்தில் அவரால் நல்ல படம் தர முடியும் என்று தோன்றுகிறது//

  அதே..அதே...

  ReplyDelete
 11. சுந்தர், சேரனைப்பற்றிய உங்கள் , "சோகத்தை வார்த்தெடுக்கும் கதை" என்ற கருத்துடன் உடன்பாடென்றாலும், சினிமாத்துறையில் வெற்றி என்பது கத்தியின் மீது நடப்பது போன்றது. ஆதலால் அவரது அனுபவத்தின் மீது வரும் நம்பிக்கையே அவரை அவ்வாறாக்குகிறது. வெற்றி நோக்கிய நகர்வாக அவர் பார்க்கும் பட்சத்தில் கையை சுட்டுக்கொள்ளாதவறு படமெடுத்தலும் முறையானதுதானே? ஆட்டோகிரப்புக்கு முந்தைய படம் அப்படியானதுதான். எனக்கு தனிப்பட்ட அளவில் சேரனின் தமிழக ஊர்ப்புற வாழ்வை சற்றேனும் ஆழமாக காட்டும் முறைமை பிடித்துள்ள்து என்றே சொல்வேன். கவர்ச்சியைப் போலவே கண்ணீர் வரவழைக்கும் சோகமும் தலைகுத்தலை மாறுபடும் என்பது சரிதானே? ;-) சேரன் நம்பிக்கைதரும் இயக்குனர் என்பது இன்றையவரை என் கருத்து.

  ReplyDelete
 12. "பாடலில்லாமல் படம் தரும் அவரது விருப்பத்தை அவர் இதுவரை நிறைவேற்ற முயற்சிக்காதது ஏனோ தெரியவில்லை. (இருபது வருடங்களின் முன்பே அந்நிலைப்பாடு எடுத்துவிட்ட கமல்கூட முழுமையாக முயற்சிக்கவில்லை)."


  வசந்தன்

  கமிலின் பேசும் படம், குருதிப்புனல் படங்களில் பாடல்கள் இல்லை.

  ReplyDelete
 13. கார்த்திக்,

  உங்கள் கருத்துக்கு நன்றி. ஒரு படைப்பாளியாக சேரனின் தளங்கள் விரிய வேண்டும் என்ற அவாவை சொன்னேன். மற்றபடி கல்லா கட்டும் கவலை எல்லாருக்கும் உண்டு என்பதையும் அறிவேன்.

  ReplyDelete
 14. Out of the topic!!உங்க கவிதைகளை எங்கே காணோம் மூக்கரே?(சுட்டினால் கடைசி கவிதையைத் தவிர மற்றது இல்லையே)

  ReplyDelete
 15. //பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் தருமி//

  'பொதுச்செயலர்' இனம் எண்டு ஏதாவது இருக்கோ?

  பிரபா, குறித்துக் காட்டியமைக்கு நன்றி. அதைத்தொடரவில்லையென்பது தான் நான் சொல்ல வருவது. எல்லோரும் (அல்லது பெரும்பாலானோர்) இப்படியான முடிவுக்கு வருமட்டும் சாத்தியமில்லை.

  பாடலின்றிப் படமெடுப்பது தனியே ஓரிருவரில் தங்கியில்லையென்றுதான் நினைக்கிறேன். நாலு பாட்டுக்களை வைத்தே படமோட்டிவிடலாம் என்ற நிலையிலிருந்து தமிழ்ச்சினிமா இன்னும் முழுதாக மீளவில்லை. இளையராசா காலத்தில் அது இன்னும் உச்சத்தில் இருந்தது. இப்போது ஓரளவு பராவாயில்லையென்ற நிலைதான். சில படங்களில் மொத்தச் செலவின் காற்பங்காவது பாடல்களுக்கு மட்டும் செலவு செய்யப்படுவதாக மணிரத்தினம் சொன்ன ஞாபகம்.

  ReplyDelete
 16. Mookku Sundarக்கு நன்றி.

  ஒரு வித்தியாசமான பதிவு!

  டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி லிங்குக்கு நன்றி. படித்தேன் ஒரு வரி என்னை இங்கு எழுதவைத்தது...


  //* கூட்டுப் புழுவாய்க் குறுகிக்கிடக்கும்போது, அவமானத்தில் கூச வேண்டிய அவசியம் இல்லை. அது காலம் நமக்குச் சிறகு தயாரிக்கும் களம் என்பதைப் பட்டாம்பூச்சிகளே சொல்லும்.*//

  நிச்சயம் இந்த எண்ணம் நம் இளைஞர்களுக்கு தேவை! சினிமாகாரன் சொன்னா என்னங்க கரெக்டா சொன்ன எடுத்துக்க தான் வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...