Skip to main content

அப்பா - மீள்பதிவுUnsung Heroes என்ற வரிசையில் தாராளமாக சேர்க்கலாம் இந்த உறவை. இலக்கியங்களிலும் புராணங்களிலும் அம்மா 'பாடல்' பெற்ற அளவிற்கு அப்பா பெறவில்லை. வீட்டில் குழந்தைகளை பராமரித்தும் , உறவுகளை அனுசரித்தும் காலம் முழுக்க வாழும் அம்மாவை பற்றி பேசும்போது , குடும்பத்துக்காக வெளியிலே சிலுவை சுமக்கும் தந்தையின் தியாகம் கண்டுகொள்ளப்படாமல்தான் போகிறது. எனக்குத் தெரிந்த வரையில் அம்மா பிள்ளைகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, கொஞ்சம் சுயநலமும், அதிகம் உழட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்பாவுடன் நல்ல உறவு நிலையில் இருக்கும் பையன்களுக்கு இவர்களைவிட திடமும், முதிர்ச்சியும் அதிகமாகவே இருக்கிறது.கல்யாணம் ஆனபின் பொதுவாக இந்த 'அம்மா கோண்டுகள்' எல்லாம் சகதர்மிணி வசம் தன்னை ஒப்படைத்து விடுகிறார்கள். 'சம்போகமே தாயின் கருவறையில் மறுபடியும் புகுந்து கொள்ளும் முயற்சி வகையை சேர்ந்ததுதான் ' என்று எங்கோ படித்ததை என் நண்பர் ஒருவரிடம் சொல்ல என்னை 'ஏற இறங்க' பார்த்தார் அவர். இது மாதிரி விஷயங்களை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம் என்று தியோடர் லிட்ஸ் எழுதிய " The person" என்ற புத்தகத்தை வாங்கி வைத்து கொஞ்சம் படிக்க முயற்சித்தேன். தலை கால் புரியவில்லை.என் மனைவி படித்துப் பார்த்து விட்டு 'புக் நல்லா இருக்கே..இதுல என்ன புரியலை'என்றாள். கொஞ்சம் பயமாக இருந்தது. இன்னொரு விஷயம்...தாயிடமும், பழகும் பெண்களிடமும் மரியாதையும் , ஸ்நேகமுமாக இருப்பவர்கள்தான் , விலைப்பெண்கள் விஷயங்களில் எல்லாம் தாராளமாக இருக்கிறார்கள். தீவிரமாக இதை யோசித்துப் பார்த்தால் காரணம் புரியும் என நினைக்கிறேன். எல்லா படைப்பாளிகளும் கிட்டத்தட்ட அம்மா பிள்ளைகள்தான். விதிவிலக்கு சுஜாதா. சுஜாதாவின் அப்பா இறந்தபோது அவர் எழுதிய 'அப்பா..அன்புள்ள அப்பா' மிகப் பிரபலம். அப்பா இறந்து போகும்போது பையன் அப்பா ஸ்தானத்துக்கு வருவதை எல்லாம் சினிமாக்களில் பார்த்து விட்டு கெக்கே பிக்கே என்று சிரித்திருக்கிறேன். ஆனால் நிஜவாழ்க்கையில், அந்த தருணத்தில் அதுதான் நிகழ்கிறது என்று தோன்றுகிறது. அப்பா கவிதை வரிசையில் நான் படித்த மிகச்சிறந்த கவிதையாக இரா.மு வின் இக்கவிதையை குறிப்பிட விரும்புகிறேன்.

அப்பாவின் மரணமும் அடுக்குமாடிக் குடியிருப்பும்
-------------------------------------------------

காலையில் வென்னீர் போட்டுத்தரச் சொன்ன குரலிலும்
குளிகை தேடித்தரக் கொடுத்த துணிப்பை மேலும்
சாவின் ரேகைகள் இல்லை.

செம்மண் பூமியில் எண்பது வருடம் முன்னால்
மாற்றாந்தாய்ப் பாலோடு தொடங்கியது
உஸ்மான்வீதி காப்பி கிளப் சர்க்கரை ஜாஸ்தி
பிற்பகல் காப்பியோடு முடிந்தது.

மழை ராத்திரியில் ஐஸ்பாளம் இறக்கிய
ஆட்டோக்காரர் சொன்னார்
'போட்டுக் கொடு சார். பொணம் கனம்'.

எல்லா மாடியிலும் தெரிந்த முகங்கள்
பார்த்தபடி நிற்கப் பாளம் உருட்டி
மாடியேற்றி நண்பர்கள் கைகொடுக்கக்
குளிரக் குளிரப் படுக்க வைத்தோம்.

'காலையிலே தானா மற்றதெல்லாம்?
சீக்கிரம் எடுத்துடுவேளா? எனக்குப்
பசி தாளாது. அல்சர் வேறே'.
தொலைபேசியில் சேதி சொல்ல
உறவு முறையிட்டது.

காலையில் லுங்கியோடு வந்த
முதல் மனிதர் நேர்மேலே மூன்றாம் தளம் -
'இந்துவிலே இப்பத்தான் படிச்சேன்.
அனுதாபங்கள்'.
டிவியில் சொல்லியிருந்தால்
எதிர்வீட்டிலிருந்தும் வந்திருப்பார்கள்.

நெய்யை ஊற்றி ஹோமம் பண்ணனும்.
சாஸ்திரி சொல்லியபடி
ஜர்தாபான் டப்பாவில்
வனஸ்பதி வாங்க
ஆள் அனுப்பினார்.

'எண்ணூறு சதுர அடி வீடா?
எவ்வளவுக்கு வாங்கினது?'
ஈரம் மிதித்துக் கேட்டவர்
குடையை மாட்ட இடம் தேடினார்.

'எடுத்துப் போக வண்டி வரலியா?'
எல்லோரும் கேட்கச் சங்கடம் தாங்காது
'போகலாம் வா' என்றார் அப்பா.
எப்போதும் போல் மழை.
இதைப் படித்து விட்டு கவிஞர் ஹரி எழுதியது கீழே:


'இன்னிக்கு ராத்திரி
எங்கிட்ட படுடா'
சொன்னவர் குரலில்
பயணம் தொனித்தது.

ஒற்றைக் கட்டில் - நான்
உதித்த கட்டில்
அந்தக் காலத் தேக்குப் பலகையும்
ஆயுள் பெருத்த ரோஸ்வுட் சட்டமும்
பற்றிக் கொண்டு நிற்கும் கட்டில்.

பெற்றவன் முதுகை மார்பிலணைத்து
ஒட்டிப் படுக்க தாகம் வலுக்க,
பற்றிய காலில் பயணச்சுவடு.

அறிவும் மனமும் எதிரெதிர் நிற்க
அம்மா உறங்கும் இடத்தைக் கடந்து
கங்கைச் சொம்பின் வாயைப் பிளந்து
கண்ணீர் படாமல் தொண்டை நனைத்தேன்.

ஒன்றரை மணிக்குக் கட்டிப் படுத்து
மூன்றரை மணிக்குக் கண்ணை விழித்தால்
பற்றிய கையில் அப்பாக் கூடு.
பயணம் ஆனதும் எக்கணம் அறியேன்.

உறங்கும் அம்மா.
உலுப்பிட வேண்டாம்.
காலை வரட்டும்.
கண்ணீர் எனக்குள்.

--ஹரி கிருஷ்ணன்


அன்புள்ள முருகன்,

எந்த எழுத்து இன்னொரு மனத்தைத் தொட்டு எழுப்புகிறதோ, எந்த எழுத்து இன்னொரு மனத்தின் அனுபவத்துக்குள் எட்டிப் பார்க்கிறதோ, அந்த எழுத்துக்கு என் வணக்கம்.


என் வணக்கமும்........

தந்தையர் தின வாழ்த்துக்கள். !!!!!!!!!!!!


Comments

 1. கவிதைகள் கனக்க செய்கின்றன ...
  அலைந்து திரிந்து அடங்கி
  கண் முன் தெரிகிறது என் தந்தையின் முகம் !

  வருகிறேன் தோழர் !

  ----------
  தந்தையர் தினம் கொண்டாடினேன்!
  http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

  ReplyDelete
 2. நன்றி நியோ.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இகமெங்கும் இறைவிகள்

கமலஹாசனைப் போல கார்த்திக்குக்கும் துணிச்சல் அதிகம். இல்லாவிட்டல் ரசிகர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து இப்படி ஒரு படத்தை முயன்றிருப்பாரா?  அந்த நம்பிக்கைக்கு வாழ்த்துகள். ஆனால் படம் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. ஹிட் அடித்தால் இளைய தலைமுறையும், தாய்மார்களும் கை தூக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் கொஞ்சம் கனமான படம்தான். He sprinkles brilliance casually all over, but the audience should be sharp enough to catch them.கார்த்திக் இதுவரை சொல்லாத அளவுக்கு இந்தப் பிரச்சினையை(பெண்களின் வாழ்க்கை)  உரத்துப் பேசாமல் அணுகி இருக்கிறார்.  உரத்து சொல்லாததால் பார்வையில் இருந்து விடுபட்டுப் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தலைமுறை ரசித்துப் பார்ப்பதற்கு காட்சிகளும் வசனங்களும் அத்தனை அத்தனை உண்டு. படத்தில் வில்லன் என்று ஆள் இல்லாமல் சந்தர்ப்பங்களில் எல்லாரும் வில்லன் ஆவது அழகு. வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. He should choose a vocal/ contradicting editor next time. Editor provides a different perspective and he should…

காற்று வெளியிடை - பானி பூரியில் பருப்பு சாம்பார்

”காற்று வெளியிடை” ன்னா என்ன? என்கிற ஒற்றை வசனத்தை வைத்துக்கொண்டு மணி படங்களில் வந்த பல காட்சிகளை கோத்து ஒரு யூடியூபில் ஒரு வீடியோ சமீபத்தில் ரிலீசானது. “மச்சி.. அதுவே பெட்டர். படம் செம மொக்கை” என்றவர்களை மீறிக்கொண்டு போய்ப் பார்த்த படம்... ஆனால் படம் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை.  ஒருமுறை பார்க்கலாம்
படத்துக்கு தேங்காய் உடைக்கும்போதே ”ஹிந்தி”யாவெங்கும் ரிலீஸ் பண்ணி கல்லா கட்டலாம் என்று ஏதோஒரு புண்ணியவதி ஓதியிருப்பார் போல. படத்துக்கு backdrop, லொகேஷன்கள்,  பாடல் எடுத்த விதம்,  கதாபாத்திரத்தின் காஸ்ட்யூம்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் (வட இந்தியப் பெண்கள் தன் குடும்பத்து ஆண்களை பார்க்க வரும்போது தலையில்  லைட்டாக முக்காடு இட்டுக் கொள்வார்கள்), பாத்திரங்களின் உடல்மொழி எல்லாவற்றிலுமே சப்பாத்தி/ ராஜ்மா வாசனை. என்னதான் அழுத்தம் திருத்தமாக “சக்ரபாணி பிள்ளை” என்று அழுத்தி அழுத்தி சொன்னாலும் கார்த்தியின் அப்பா படத்தில் “லாலா கடை” சேட்டு மாதிரிதான் இருக்கிறார் . அதிலும் நாயகியின் குடுமபத்துடன் உணவகத்தில் கார்த்தி முரண்படும் அந்த சீன்.. என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்லுங்கப்பா என்று உரக்கக் கத்தலாம்…

கபாலி - எண்ணங்கள்

ரஜினி மாஸ். ரசிகர்கள் துள்ளிக் குதித்து அனுபவிக்க ஏகப்பட்ட காட்சிகள். அங்கங்கே தெறிக்கும் அவர் ஸ்பீடு அசத்தல். ரஜினி செம ஸ்மார்ட். கம்பீரமான அழகு. பின்பாதியில் மனைவியை சந்தித்ததும்  தாடி எடுத்து விட்டு ஒரு அழகு வருகிறதே .....அது !!! காமிரா சூப்பர் வசனம் அங்கங்கே பளிச். தேவையற்ற இடங்களில் சில கருத்துகளை ரஞ்சித் திணித்திருக்கிறார். அது துருத்திக் கொண்டு பல் இளிக்கிறது. படத்தில் “காற்று பிரிந்தால்” கூட மகிழ்ச்சி என்கிறார்கள். அலுத்து விடுகிறது ”மாய நதி” பாடல் அருமையான இடத்தில் வைத்து இருக்கிறார்கள். பொதுவாகவே இசைக் கோர்ப்பில் மெனக்கெடல் தெரிகிறது. படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லாவற்றையும் நினைவு வைத்துக்கொண்டு இன்னார் இன்னாருக்கு என்ன செய்தார் என்று நினைவில் வைத்துக் கொள்வதே போதும் போதும் என்றாகி விடுகிறது Casting detailsகாக மெனக்கெடும்போது முக்கியமான பாத்திரங்களுக்கு மட்டும் அதிகம் உழைப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை குறைக்கும்கிஷோர் எப்பேர்ப்பட்ட நடிகன் !!!  கிலோ கிலோவாக நகையை சுமக்க செய்து வீண் பன்ணி விட்டார்கள். சீன வில்லனை டம்மி செய்து இவருக்கு கொஞ்சம் சேர்த்திருக்கலாம். …