Tuesday, October 26, 2004

சவால் நாயகர்கள்

soundparty

சவுண்டு பார்ட்டி என்று ஒரு காவியம். சத்யராஜ் படம். இத்தனை இளைஞர்கள் இருக்கையில், இன்னமும் சத்யராஜ் நடிக்கிறார் என்றால் அது நிஜமாகவே திறமைதான். அந்தத் திறமையை நம்பாமல், ஹீரோயினாக ஒரு சின்னப் பெண்ணை கூட நடிக்க வைத்து, லொள்ளு பண்ணியிருக்கிறார். பாட்டு சீனில் அந்தப் பெண் - செத்துப் போன பிரதியுக்ஷா - குதிப்பதை பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது. பிற்பாடு கேஸட்டில் அந்தப் பாடலை பதிவு செய்து வைத்து விட்டது - வேறு விஷயம். :-)

தமிழ்சினிமாவில் வயதான கதநாயகர்கள் படங்கள் எல்லாமே இப்படித்தான். அவர்கள் படங்களில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகத்தான் இருக்கும். டோப்பா தலையோடு, ஓவர் கோடடை போட்டுக் கொண்டு சிவாஜி தள்ளாடி வர, சைடில் ஸ்ரீதேவியும், அம்பிகாவும், ஸ்ரீப்ரியாவும் சிக்கன உடைகளில் ஆடிப்பாடுவதைப் பார்க்க கோராமையாக இருக்கும். இத்தனைக்கும் சிவாஜி தன் உடல் பாகங்களை எல்லாம் தனித்தனியாக நடிக்க வைப்பார் என்று சொல்வார்கள். பாட்டு பாடும்போது வாயில் பேப்பர் வைத்தால் பாட்டு டைப் அடித்து வந்து விடும் என்கிற கிண்டலோடு அவர் வாயசைப்பை சிலாகிப்பார்கள்.

எம்.ஜி.யார் மட்டும் என்ன..?? இதயக்கனி போன்ற படங்களில் அவர் ஆடாத ஆட்டமா..ராதா சலூஜா, லதா மற்றும் புரட்சித் தலைவியோடு அரைகுறை ஆடைகளில் அடிக்காத கூத்தா..?? அவருக்கு மட்டும் என்ன ..?? சினிமாவில் மவுசுக்கா குறைச்சல்..??

வயசான காலங்களில்தான் ஹீரோக்கள் இப்படி ஹீரோயின்களின் கவர்ச்சியை நம்பி படம் எடுக்க, ஆரம்பகால கட்டங்களிலும், ஒரு இடத்துக்கு வரும் வரை அவர்கள் ஹீரோயின்களையே நம்பி இருக்கிறார்கள். விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்ப கால படங்களில் சங்கவியும் சுவாதியும் அடிக்க அவர்கள் "தெறமை" காரணம் என்று நம்புவீர்களானால் நீங்கள் ரசிகன் என்ற விஜய் படத்தையும் வான்மதி என்கிற அஜித் படத்தையும் பார்க்கவில்லை என்று அர்த்தம். கிட்டத்தட்ட அவை இரண்டுமே நாயுடு ஹால் விளம்பரங்கள் தான் . இதே பாதையைத்தான் இப்போது சிம்புவும் தனுஷும் தொடர்கிறார்கள். ( படம் வேணுமா என்ன..? ). ஆனானப்பட்ட கலைஞானி கமல் கூட மலையாள ஜெயபாரதியுடன் ஆரம்ப காலங்களில் இசகு பிசகான படங்களில் நடித்திருக்கிறாராம். கதாநாயகர்கள் இப்படி கதாநாயகளை வைத்து மேலே வந்து விட, இன்று அதே கதாநாயகிகள் இன்று அவர்களுக்கே அம்மா வேஷம் கட்டி நடித்திருக்கிறார்கள்.

ஆக, ஆரம்ப காலங்களிலும் சரி, டோப்பா காலங்களிலும் சரி, கதாநாயகர்கள் நாயகிகளின் சிக்கன உடைகளை மூலதனமாக வைத்தே நடிக்கும் நிலை இருக்க, இடைப்பட்ட காலங்களில் தான் அவர்களுக்கென்று ரசிகர்களும் , இமேஜும், அவர்களால் படம் ஓடுகிறது என்ற பேச்சும் ஏற்படுகிறது. (ராஜ்கிரணும், கிராமராஜனும் ஆடாத ஆட்டமா) இந்த இடைப்பட்ட காலங்களில் தான் அவர்கள் சவால் விடுவது, பஞ்ச் டயலாக் உதிர்ப்பது, தல என்றும் திருமலை என்றும் பேசுவதெல்லாம் நடக்கிறது. முகம் தெரியாத எதிரிகளுக்கு சவால் விடுவது நடிகர்களை மோட்டிவேட் பண்ணும் கருவியாகக் கூட அவர்கள் நினைத்துக் கொள்ளலாம். வியாபார யுக்திகள் இவை. அதை வியாபாரம் என்று தெரிந்து கொள்ளாத ரசிகர்கள்தான் தியேட்டர் வாசல்களில் அடித்துக் கொண்டு சாகிறார்கள். அது ரசிகர்களின் முட்டாள்தனம்.

பண்ணி விட்டுப் போகட்டுமே...!!! அவர்கள் கல்லா நிறைகிறது என்கிற பட்சத்தில் அவர்களிடம் இருந்து வேறெதும் எதிர்பார்ப்பது நம் தவறு. இப்படிப் பட்டவர்களை நம்பி கட்சிக் கொடி கட்டுவதும், கைக்காசை நம்பி போஸ்டர் ஒட்டுவதும், அப்பா அம்மா வைத்த பேரொடு அவர்கள் பெயரை சேர்த்துக் கொள்வதும்தான் நம்முடைய அடிமுட்டாள்தனம்.

( ஹி..ஹி..கவர்ச்சிப்படம் போட்டு ரொம்ப நாள் ஆச்சேன்னு ஒண்ணு போட்டேன். ஆனா, சென்ஸார் பண்ணி போடாம, பதிவில சேக்க மனசு ஒப்புக்கலை... :-( )

நன்றி : அருண் வைத்தியநாதன்

No comments:

Post a Comment

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...