Friday, October 22, 2004

இந்த நாள், இன்னுமொரு நாள்.!

" நானென்ன ...பெரிய ஆளா..?? பொறந்து இதுவரைக்கும் என்ன பெரிசா சாதிச்சு கிழிச்சிட்டேன்...பொறந்த நாள் கொண்டாடறதுக்கு " என்பார் என் நண்பர் ஒருவர். கேக் வெட்டி, மெழுகுவர்த்தி ஊதி, பாட்டுப்பாடி கொண்டாடா விட்டாலும், அவருடைய பிறந்தநாள் மற்றும் எங்களுடைய பிறந்த நாட்களையும் அவர் பாட்டில் உடைத்து, கிங்ஸ் கொளுத்தி கோழியோடு கொண்டாடுவது வழக்கம் அந்தக் காலங்களில்.

பள்ளிப் பருவத்தில் எல்லாம் மாயவரத்தில், வீட்டில் பிறந்த நாள் கொண்டாடியதாக நினைவே இல்லை. எங்களுக்கு சொந்தமான கோவிலில் ஒரு அபிஷேகத்துக்கு சொல்லிவிட்டு, அபயாம்பாளுக்கு அஸ்வினி நட்சத்திரம் பேரில் அர்ச்சனைக்கு சொல்லி, கோவில் போய்விட்டு வந்து, மடப்பள்ளி சர்க்கரைப் பொங்கலை ஒரு வெட்டு வெட்டு விட்டு தூங்கி விடுவது வழக்கம். கல்லூரி காலங்களில் இது கொஞ்சம் மாறியது. கூடப் படிக்கும் பையன்களையும், பெண்களையும் டவுனுக்கு அழைத்துப் போய், காரைக்குடி அன்னபூரணாவில் ட்ரீட் கொடுத்து விட்டு, மானாவரியாக ஜொள்ளும் விட்டுவிட்டு கொண்டாடுவது வழக்கம். அப்போதெல்லாம், நல்லவேளை தீர்த்தவாரி இல்லை. அதெல்லாம் வேலை பார்க்க அரம்பித்த பின்தான்.

காதல் காலங்களில் வந்த பிறந்த நாட்கள் சுவாரசியமானவை. போன் வரும். க்ரீட்டிங் கார்டு வரும். அதை சாக்கிட்டு மீட்டிங் நடக்கும். சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் உடைகளுக்கு மவுசு கூடிப்போகும். மறுபடி மறுபடி க்ரீட்டிங் கார்டையும், கொடுக்கப்படும் புத்தகங்களயும் படித்து படித்து, வரிகளுக்கிடையில் துழாவி இரண்டு வாரம் ஓடும். அந்தக் காலகட்ட பஸ் பயணங்களில், பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் ஆள், காரணமில்லாமல் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைப் பார்த்து பயந்து போவார்.
அது அப்படிப் போனது. இல்லை..இல்லை..அதோடு போனது. பிற்பாடு, எல்லாம் முடிந்தவுடன் பழைய கடிதங்களை/கார்டுகளை ஒரு கொடுமையான குளிர்கால இரவில் மொட்டை மாடியில் கொளுத்தும்போது, வெப்பத்தினால் விரிந்த ஸ்பெஷல் வாழ்த்து அட்டையொன்று நெருப்பில் இசை எழுப்ப, கன்னங்கள் கண்ணீரில் நனைந்தது.

பின்னர் பல வருடங்கள் கழித்து சந்தோஷமாக கொண்டாடியது பிள்ளையின் பிறந்த நாள்தான். கேக்கில் உள்ள மெழுகுவர்த்தியை ஊதத்தெரியாமல் அவன் அயர்ந்து போக, எல்லாரும்ம் சிரித்துக்கொண்டே ஹாப்பி பர்த்டே பாடியதும், சத்தத்தில் அவன் பயந்துபோய் அம்மாவின் புடைவைத்தலைப்புக்குள் மருண்ட கண்களோடு ஒளிந்து கொண்டான். எனக்கோ, என் வீட்டம்மாவுக்கோ பிறந்த நாள் என்றால் நாங்கள் ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லிக் கொள்வதில்லை. அதில் தெரியும் செயற்கைத்தனங்களில் எனக்கு ஏற்பட்ட அலர்ஜியை, அவள் எப்படி தெரிந்து கொண்டாள் எனத் தெரியவில்லை. " என்னடி கிழவி..?? எத்தனை வயசு இன்னைக்கு " என்று மட்டும் அவளை கலாட்டா பண்ணுவது வழக்கம் அவள் பிறந்த நாட்களில்.

இன்று அப்படி ஒரு நாள். சாயங்காலம் கோவிலுக்குப் போக வேண்டும்...
birthday13

5 comments:

 1. " ஜென்மதின ஆஷம்ஸகள் "
  [ உங்களுக்கா உங்கள் மனையாளுக்கா எனத் தெரியவில்லை...ரெண்டு பேருக்கும்ச் சேர்த்து :-)]

  ReplyDelete
 2. //ஒரு கொடுமையான குளிர்கால இரவில் மொட்டை மாடியில் கொளுத்தும்போது, வெப்பத்தினால் விரிந்த ஸ்பெஷல் வாழ்த்து அட்டையொன்று நெருப்பில் இசை எழுப்ப, கன்னங்கள் கண்ணீரில் நனைந்தது.//

  நெகிழ்வான வரிகள்!

  ReplyDelete
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர்

  ReplyDelete
 4. அக்டோபர் 22, 2004 ல் எழுதியதற்கு சுத்ர்ஸன் பாராட்டு எழுதியபோது " ஆஹா..என் எழுத்து சாகாவரம் பெற்றது " என மகிழ்ந்து விட்டு வாளாவிருந்து விட்டேன். இப்போது பத்மாவின் வாழ்த்துகள். :-)

  பத்மா, வாழ்த்துகளை என் மனைவிக்கு அட்வான்ஸாக கொடுத்து விடுகிறேன். அக்டோபர் 22, 2005 க்கு உபயோகப்படும். :-)

  ReplyDelete
 5. சுந்தர்
  நான் பதிவுகளை படிப்பதோடு சரி. எப்போது எழுதியது என்று பார்ப்பதில்லை. கவனக்குறைவு. ஆனாலும் சில நாட்கள் எனக்கு கிழமை தேதி எல்லாம் மறந்தும் போய்விடும். நல்லவேளையாக கூட்டங்களை கணினி நினைவுபடுத்துகிறது. பிள்ளையின் விடுமுறை மறந்து பள்ளி பேருந்து வரவில்லை என காத்திருந்து அலுவலகம் அழைத்து சென்றதும் உண்டு!!

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...