Wednesday, October 13, 2004

தமிழகம் இழந்த தலைவர் - கர்மவீரர் காமராஜர்

இந்தப் படம் பார்த்து முடிப்பதற்குள், பலமுறை கண்கலங்கி, பேசக்கூட முடியாமல் தொண்டை அடைத்து விட்டது. சிறு வயதில் சிவாஜி படங்களை பார்க்கும்போது இம்மாதிரி நேர்ந்ததுண்டு. ஆனால் ஒன்றுமறியா வயதில் நடிகனைப் பார்த்து உணர்ச்சி மேலீட்டில் விசனப்பட்டதற்கும், இத்தனை முதிர்ந்து, இந்தப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்டதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருந்தன.

k_kamaraja

படம் பார்க்கும்போதே என் மனைவியிடம் சொன்னேன் " இத்தனை விஷயங்களும், திரைப்படத்திற்காக மிகைப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டிராமல், உண்மையாகவே நடந்திருந்தால், காமராஜ் கடவுள்" என்று. உண்மைதான். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் " ஆஹா..இம் மாதிரி ஒரு ஆள், இன்று இல்லாமற் போனாரே" என்ற ஏக்கத்தை உருவாக்கி, தமிழகத்தின் இன்றைய அரசியல்வியாதிகளை எண்ணி பெருமூச்செறிய செய்தது.

படத்தில் எனக்கு நெருடலாகத் தோன்றிய விடயம், காமராஜ் தான் பதவியை விட்டு விலகி, திரு.பகதவச்சலம் அவர்களை தமிழக முதலமைச்சராக்கிய நிகழ்வுதான். அவர் ஆட்சியில்தான் அரிசிப்பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் வெறுப்பு 1967 தேர்தலில் எதிரொலித்ததாக அறிகிறேன். மேலும் நேரு குடும்ப விசுவாசம் காரணமாக், இந்திரா அம்மையாரை உயர்த்தி விட்டு, பிறகு அவராலேயே "காமராஜரா..யார் அவர்" என்று கேட்கப்படும் காட்சி எல்லாம், அரசியல் அரங்கில் காமராஜருக்கு இருந்த நேர்மை மட்டும் போதவில்லை என்று கசப்பாக நிரூபணம் செய்தது.

இன்னொரு அதிர்ச்சியான தலைவர் சித்தரிப்பு ராஜகோபாலாச்சாரியடையது.
படத்தில் அவர் தோன்றும் காட்சிகளும், உதிர்க்கும் கருத்துகளும், பொது மேடையிலேயே காமராஜருக்கும் அவருக்கும் ஏற்படும் பேதங்களும் தைரியமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவர் மூதறிஞராக இருக்கட்டும், பெர்ரிய அறிவாளியாக இருக்கட்டும், இத்தகைய குணத்துக்காக அவர் தமிழக அரசியல் வரலாற்றில் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்.

திராவிட அரசியலையும் படம் தோலுரிக்க தயங்கவில்லை. அவ்வபோது கரகரத்த குரலில் கேட்கும் அண்ணாவின் குரலும், இன்றைப்போலவே அன்றும் அடுக்குமொழி பேசிக் கொண்டிருக்கும் கருணாநிதியின் பேச்சும், சாராயக்கடையில் ஒலிக்கும் பராசக்தி பாடலும், செயல்வீரர் தலைமையில் செழிப்புற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை, வேறு பாதைக்கு இட்டுச் செல்கின்ற, சினிமாக்கார முகங்களை வைத்து ஏமாற்றுகின்ற மோடி வித்தைகளுக்கு சொந்தக்காரர்களாக காட்டுகிறது.

இந்தியா செல்லும்போது, காமராஜர் பற்றிய நாகூர் ரூமியின் புத்தகத்தையும், சன் டீவி வீரபாண்டியனின் புத்தகத்தையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று உறுதி கொள்ள வைத்த அருமையான படம் இது. நண்பர்கள்
வேறெந்த புத்தகத்தையும் சிபாரிசு செய்தாலும் நன்றி .

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...