Tuesday, October 19, 2004

எல்லாமே அரசியல் ....ச் சே..!!

சந்தனக்கடத்தல் வீரப்பன் பற்றிய பதிவுகளும், அவைகளுக்கான எதிர்வினைகளும் மிகுந்த ஆயாசம் அளிக்கின்றன. கருணாநிதி-ஜெ வைக் கொண்டு வராமல், இனிமேல் நாம் எந்த விஷயத்தயும் பார்க்கவே முடியாதோ என்று கலக்கமாக இருக்கின்றது.

இறந்தவன் ஒரு கொலைகாரன். யானைத் தந்தங்கள திருடத்தொடங்கி, சந்தன மரத்தில் வளர்ந்து, ஆள் கடத்தலில் முற்றி, இப்போது இறந்து போயிருக்கிறான். இப்படி அவன் ஆனதற்கு எந்த விதமான காரணங்களும் இருந்து விட்டுப் போகட்டும். காரணங்கள், அரசியல் தவறுகள், தொடர்புகள் எல்லாம் அவனை, அவன் செயலை புனிதப்படுத்தி விட முடியாது. ஏன் உயிரோடு பிடிக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி. உயிரோடு பிடித்து அவனை என்ன செய்யப் போகிறீர்கள்..?? நாட்டுக்கு கொண்டு வந்து அவனிடம் பேட்டி எடுப்பீர்கள். போட்டோ பிடிப்பீர்கள். அரசியலுக்கு வருவீர்களா எனக் கேட்பீர்கள். அவன் குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளை தாக்குவீர்கள். அவன் தாக்கும் நடிகைகளை பேட்டி காண்பீர்கள். இதுவே மிச்சம்.

அவன் செத்த பாம்பாக இருக்கலாம். ஆனால் பாம்புதான். அவன் காவிரிக் காப்பாளானாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதே, ஓடி ஒளிய தெம்பில்லாமல் நாட்டுக்குள் வர விரும்பியதால்தான். ரத்தம் சூடாக இருக்கும்போதெல்லாம் படுபாதகம் செய்து விட்டு, ரத்தம் சுண்டிப்போனவுடன்
மீடியா உதவியுடன் புனித வேடம் போட்டு விட முடியாது. தண்டிக்கப்பட
வேண்டியது அரசியல்வாதிகள் என்றால் தேர்தல் மூலமாக அவர்களை தண்டியுங்கள். பொது மக்கள் புறக்கணிப்பை ஒருமுனைப் படுத்துங்கள். வனத்துறையை களை எடுங்கள். பத்திரிக்கை ஆசிரியர்களை எழுதுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்.

நடந்தது சட்ட நடவடிக்கை. செத்தது ஒரு கொலைகாரன். சமூகவிரோதி. துப்பாக்கி ஏந்தியவன். கெட்ட வழியில் சம்பாதித்த பணத்தை மலைவாழ் மக்களுக்கு தூவி, அவர்கள் துணையுடன் வாழ்ந்து வந்தவன். அவனுக்கு துப்பாக்கிதான் பதில் சொல்லவேண்டும். வீரப்பன்கள் உருவாவதை தடுக்க, பெரிய அளவில் மாற்றம் வேண்டும். ஆனால் அம் மாற்றம் வரும்வரை உருவானவர்களை விட்டு வைத்திருக்க முடியாது.

விஜயகுமாருக்கு ஜே. தமிழக அரசுக்கு ஒரு சபாஷ்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...