Monday, October 18, 2004

பழையமுது


தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தமிழை ஆட்சி மொழியாக்கும் யத்தனம், கருணாநிதிக்கு "செம்மொழி செவ்வேல்" பட்டம், ராமதாஸுக்கும் , ஏ.கே மூர்த்திக்கும் செம்மொழிப் போராளி பட்டம் என்றெல்லாம் செய்திகள் பறந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் இந்த மடலை பழைய ராயர் காப்பி க்ளப்பில் படிக்க நேர்ந்தது. எல்லே சீனியரின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையின் இன்னொரு எடுத்துக்காட்டு இது.

coll_3

ராஜாஜி: இன்னிக்கு நாம பேசப்போற சமாசாரம் என்னன்னா, ராயர் கிளப்புல சமீபத்துல கேட்ட இரண்டு கேள்விகள் பத்தி. அதுல நம்மஸ்டாண்டு என்னன்னு விவாதிக்கலாமா?

பெரியார்: ஆச்சாரியரே...ராயர் கிளப்பா? பிராமணாள் ஓட்டலா?பை கிராப்ட்ஸ் ரோடுலதானே? நான் அடிச்ச தார் கரைஞ்சு போச்சா?

ராஜாஜி: நாய்க்கர்வாள்..இது வேற கிளப்பு. அந்த பழைய பிரச்னையே இன்னொரு நாள் பேசலாம்..

அண்ணா: மூதறிஞர் கேள்வியைப் பற்றி சொல்லட்டும்.

ராஜாஜி: மொதல் கேள்வி, மத்தள ராயர் சொல்லாராய்ச்சி இங்கவேணாம்னு சொல்லிட்டு, அதே சூட்டுல ஒரு இங்லீஷ் வார்த்தைக்கு தமிழ்ல என்ன அர்த்தம்னு கேக்கலாமா?

பெரியார்: வெங்காய ஆராய்ச்சி...இங்க்லீஷை படிச்சு முன்னேறுங்கடான்னாதமிழ்ல என்னன்னு நோண்ட்டுரானுக..

அண்ணா: அப்படி அசட்டையாக இருந்திடல் தவறு. தமிழில் தக்க சொல்காணல் தலையாயது. ஆராய்ச்சி வேண்டாம் என்று அவர் சொன்னது உரையாடலில் ஆங்கிலச் சொற்கள் சில வருமாயின்,அவற்றை ஆய்ந்துகொண்டிருந்தால் உரையாடல் தடைப்படும் என்பதால். தம்பி கருணாநிதிகூட அவரை போலீசு கைது செய்ய வந்தபோது, "அரெஸ்ட் வாரண்ட்இருக்கா"ன்னு தான் கேட்டார். "குற்றமென்ன செய்தேன் கொற்றவனே,குற்றமென்ன செய்தேன்? கைது செய்ய அனுமதிப்பத்திரம் உள்ளதா"ன்னுகேட்கவில்லை. இடம், காலம், ஏவல், பொருள் கருதி ஆங்கிலம்பயன்படுத்துதல் தவறல்லவே. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டல்லவா? மற்ற சமயத்தில் ஆங்கிலத்துக்குதக்க தமிழ்ப் பொருளை, சொல்லைத் தேடுவது பயனளிக்கும்.

ராஜாஜி: வாஸ்தந்தான்...பெளராணிகர் கதை சொல்றப்போ "கைகேயிசொன்னதைக் கேட்டு ராமனோட பேசியல் எக்ஸ்பிரசன் மாறிடுத்து"ன்னா,பேசாம கதயக் கேக்கணுமே தவிர எக்ஸ்பிரசன்னா என்னன்னு சப்ஜெக்டைமாத்தப்படாதுங்கறேள். மத்தபடி ஒரு வார்த்தைக்கு நல்ல தமிழ் வார்த்தைதேடறது நல்லதுதான். சோசியலிசத்தை நான் அபேதவாதம்னு தமிழ்லமொழிபெயர்த்திரிக்கேன்.

பெரியார்: அதை எத்தனை பேர் சொல்லப்போறாங்க..இது வேலையத்தவன்செய்யறதுன்னா...

அண்ணா: தமிழில் தக்க சொல்லைத் தேடுவது தவறல்ல. மக்கள் முன்அதை வையுங்கள். பிடித்தால் எடுத்துக் கொள்வர்.

ராஜாஜி: சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்...

அண்ணா: ஆம். தக்கன தழைக்கும், தகாதன தொலையும்..

ராஜாஜி: இப்ப ரெண்டாவது கேள்வி என்னன்னா, சினிமா பார்க்கறச்சேவாயப்பொத்திக்கிட்டு கேட்கிறவன், வெளியில வந்து சினிமால தமிழ்ப்பாட்டைக்கொலை செய்யறான்னுகத்தறாங்க, எழுதறச்சே ஆங்கிலம் கலந்து எழுதி கொலை செய்வது தெரியவில்லை?

பெரியார்: சினிமாவையே ஒழிக்கணும்னு சொன்னேன்..பாட்டு புரியாதபோனதுக்கு அந்த அய்யருதான் காரணம்....கேரளநாட்டு இளம்பெண்ணோட சுந்தரத் தெலுங்குல பாடிக்கிட்டுதோணி¢ல போகணுமாம்..என்னிக்கி மலையாளத்துக்காரி தெலுங்கு கத்திக்கிட்டு பாடி இவருபுரிஞ்சிக்கப்போறாரு... ஆனா இதை சினிமாக்காரன் புடிச்சிக்கிட்டான். எவன் எதைப்பாடறதுன்னு வரைமுறைஇல்லாம போச்சு.துனிந்த பின் மனமே துயரம் கொல்லாதேன்னு கண்டசாலா பாடுராரு.வண்டி வருது ருக்குமிணி ஓரம்போன்னு பாடறான். நான் என்ன சொல்லியும் இவனுக திருந்தாம ஓரமாப்போன்னுசொல்லலாமா? தீண்டாமைதப்பில்லயா?

ராஜாஜி: எனக்கும் சினிமாவே பிடிக்காது. வேணுதான் பிடிவாதம்மாசம்பூர்ண ராமாயணம் பாக்க அழைச்சிண்டு போனான்..ஒரே கேலிகூத்து..எப்பேர்ப்பட்ட மகா காவ்யம் அது.. சக்ரவர்த்தித் திருமகனோட சரித்திரம்..அதைப்போய் சினிமா கூத்தாடிகள் கெடுத்துண்டு...ரசாபாசம்..

அண்ணா: கம்பரசம் பற்றி நான் எழுதியதை இங்கு குறிப்பிட்டு உங்கள் மனதை நோகடிக்க விரும்பவில்லை..செம்மையாகதமிழறிந்தவர் தெள்ளுதமிழில் பேசி, பாடி, ஆடி திரைப்படத்தில்நடித்த காலம் நடிப்பிசைப் புலவர் இராமசாமியுடன் நடிகை பேரழகி பானுமதியுடன், பழங்கதையாய்,வெறுங்கனவாய், புதைந்த நாகரீகமாய், கடலில் மூழ்கிய தமிழ் இலக்கியமாய், காற்றில் பறந்த மூக்குபொடியாய்போய்விட்டது. கொச்சைத்தமிழில் பேசுவதை, பாடுவதை மக்கள் இன்று இச்சையுடன் இரசிக்கிறார்கள். தமிழ்கொச்சையானாலும் பச்சையாக மங்கையின் கச்சையே இவர்கள் கண்களுக்கு படுவதால் படம் பார்க்கும் போது மொழியைப்பற்றி இவர்கள் லச்சைப்படுவதில்லை. ஆனால் காட்சியின்று குரல் மட்டும் கேட்கும் காலத்து தமிழ்க்கொலைஉறுத்துகிறது. எழுத்தில், ரேசரால் தாடியை ஷேவின்னான் என்றால் உறுத்துகிறது. ஆயினும் அவசர யுகத்தில் மின்மடல் காலத்தில் கொஞ்சம் ஆங்கிலம் கலப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது ஆங்கில மோகத்தால் அல்ல,தமிழறிவுக் குறைவால். சினிமாவிலேயே ஐம்பது கேஜி தாஜ்மகல், பாக்சில் வந்த கவிதை என்று கேட்கும்போது,மனம் நொந்து போய் யாழெடுத்து யாரேனும் இன்பம் சேர்க்க மாட்டார்களா என்றே தோன்றுகிறது.

பெரியார்: சினிமாக்காரன்னா மக்களுக்கு பிரமை பிடிச்சிருச்சி..அவன் என்னா பண்றான்..எங்க போறான்னு பாக்கறானுக..கிசுகிசு எழுதறான்..

அண்ணா: என்னைப்பற்றியும் கிசுகிசு சொன்னார்கள். எனக்கும் கானி இளம் மானுக்கும் என்ன உறவென்றார்கள். நான்சொன்னேன்," " என்று.

ராஜாஜி: கர்மம்..கர்மம்.. அது கெடக்கிட்டம். கிளப்புல சின்னப்பசங்ககாதுல விழ வேண்டாம். என் முடிவு என்னன்னாபேசற தமிழ் மணிப்பிரவாளமா இருந்தா பாதகமில்லே. "ஷப்தஜாலம் மாகாரண்யம் சித்த பிரம்மன காரணம்"னான்காளிதாசன்...வார்த்தைகள் பெரிய காடு மாதிரியாம், மனுசனுக்கு பைத்தியமேபிடிச்சிருமாம். நன்னா புரிஞ்சிக்க ஒண்ணு ரெண்டு வார்த்தை இங்க்லீஷ் மிக்ஸ் ஆனா தப்பில்லே. மாறுதல் சகஜம்.

பெரியார்: வெங்காயம். என்ன மாறுதல் ? நான் அம்பது வருசமா பேசி இப்பத்தான் லை, னை போடக்கத்துக்கிட்டிருக்கானுக.. 'ளை'ய தனிக்குவளைல வெச்சிட்டான். இன்னம் ஒத்தை கொம்பு, ரெட்டைக் கொம்பு, மூணுகொம்பு, பட்டைனு போடரத விடல. என் கச்சிய நடத்தறவர் பாத பூஜைக்கு போயி அன்னதான லைன்லநிக்கராரு.. இவங்க எப்ப தேறி தமிழும் தமிழனும் உருப்பட்டு...

அண்ணா: நெஞ்சம் தளர்ந்திட வேண்டாம். நஞ்சு நிறைவஞ்சகர் தமிழை மஞ்சத்துப் பஞ்சென நினைத்து ஊதிடினும், கிஞ்சித்தும்வஞ்சமின்றி அது வளர்ந்து பஞ்சமின்றி நெஞ்சு நிறைக்கும். தமிழ்விஞ்சாதென அஞ்ச வேண்டா.ஆங்கிலம் கலக்காமல் எழுதிட, பேசிட முயலவேண்டும்.சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கமன்றோ...ஆங்கிலம் கலந்த பேச்சு அடிமைப்புத்தியை காட்டுகிறது.தமிழறிஞர்கள் நல்ல தமிழ்ச்சொற்களை தருவது மனத்துக்குஇதமளிக்கிறது. அவர்தம் பணி தொடரட்டும்.
மன்னிக்க வேண்டும் எனக்கு நேரமாகிறது. ஜெண்டில்மேன்,லவ் ஸ்டோரி, பிரண்ஸ் , டார்லிங், ஐ லவ் யு டா தமிழ்ப்படங்களுக்கு அப்புறம் இப்போது "சீமாட்டிசாட்டர்லேயின் காதலர்களை" ஒட்டி தயாரிக்கப்பட்ட "ஹாய், நாட்டி கேர்ல்" படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்கப்போகவேண்டும். விடை பெறுகிறேன். வணக்கம்.

ரா.கா.கி யில் உள்ள இது மாதிரி சுவையான படைப்புகளை எல்லாம் எடுத்து, யுனிகோடுக்கு மாற்றி ஏதாவது ஒரு தளத்தில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆவல். மரத்தடி.காம் மற்றும் திண்ணைக் களஞ்சியத்தை படிக்கும் போதெல்லாம் எழும் பெருமூச்சு, மேற்சொன்ன ஆசையின் பாற்பட்டதுதான் என்றுணர எனக்கு நெடுங்காலம் ஆகவில்லை. நேரம் கிடைப்பதுதான் அரிதாயிருக்கிறது

2 comments:

 1. ..சினிமாவில் உச்சகட்ட ஆபாசங்களையும் இசைகளையும் தொழில் நுபங்களையும் அறிமுகப்படுத்திய அதிக மேற்கத்தைய நாட்டு மக்கள் சினிமாவிலேயே நேரத்தைக் கடத்துவதில்லை. அவர்கள் அடுத்ததாக எதை கண்டுபிடிக்கலாம், உலகிற்கு புதிதாக எதை அறிமுகப்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

  இன்று உலக சந்தைக்கு வருகிற நவீன கண்டுபிடிப்புகளும் சிந்தனைகளும் மேற்கத்தியர்களால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு காரணமே இதுதான்.
  அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள், நாங்கள் அதை செயல் படுத்துகிற செயல் வீரர்களாக இருப்போம்.
  http://changesdo.blogspot.com/2010/10/blog-post_10.html

  ReplyDelete
 2. இன்று நடைமுறையில் அதிக தீமையை உண்டாக்குவதில் சினிமாவின் தனிப் பங்கு பற்றி பல செய்திகளை முன்னைய ஆக்கங்களில் மிகச் சுறுக்கமாக ஞாபகமூட்டிய சந்தோசத்துடன் சினிமா தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாட்டையும் வெளிக்கொண்டுவருவது காலத்தின் தேவையாக இருக்கிறது. அதனை கவனத்தில் கொண்டு அது தொடர்பான சில விடயங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். http://changesdo.blogspot.com/2010/10/blog-post_07.html

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...