நினைவு தெரிந்த நாள் முதல், தமிழக தலைவர்களின் பேச்சுகளை மேடையில் கேட்டவாறும், பத்திரிக்கைகளில் படித்தவாறும் இருந்திருக்கிறோம். அடுக்குமொழி மேடைப்பேச்சுகளும், அருவருக்கத்தக்க சொற் பிரயோகங்களும் காதில் விழாமல், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தன் பதின்ம வயதுகளைக் கடந்த எந்த மனிதனும் இருந்திருக்க முடியாது. வெறும் வார்த்தைகளுக்கு மிஞ்சி, குறிப்பிட்ட சிந்தனை வட்டமோ, கட்சியோ எதிலுமே சிக்கிக் கொள்ளாத தலைவர்களை சிந்தனையாளர்களை நான் கண்டதில்லை.
விவரமே தெரியாத வயதில் மாயவரம் பியர்லஸ் தியேட்டர் எதிரே நடக்கும் கலைஞர் கூட்டங்களுக்கு போயிருக்கிறேன். கர கர குரலில், அடுக்கு மொழியில், சமயோசித பளிச் வார்த்தை உபயோகங்களில், கூட்டத்தோடு நானும் புளகித்துப் போய் கை தட்டி இருக்கிறேன். என்றாலும் இரவிலும் கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு, பவுடர் மினுக்கலோடு மறுபடியும் மறுபடியும் அவர் சித்திரை - முத்திரை - பத்தரை என்றெல்லாம் பேச, இதை கேட்பதற்கு தியேட்டருக்கே போய் விடலாம் என்று பின்னாளில் தோன்றிப் போனது.
அப்பா அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் தலைவர் பாப்பா உமாநாத் கூட்டங்களுக்கும், ஜெயகாந்தன் கூட்டங்களுக்கும் போய் வருவார். என்னையும் போகச் சொன்னாரென்றாலும் நான் போனதில்லை. ஆனால் அரசியலில் திரு.ஜெயகாந்தனின் நிலைப்பாடுகளும், அண்ணா இறந்தபோது அவர் பேசியதும், நீண்ட நெடுங்காலத்துக்குப் பின படிக்கக் கிடைத்து "ஆடிப்" போனேன். அவரை ஒரு முறை சந்தித்தபோது கூட " நீங்கள் ஏன் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவில்லை" எனக் கேட்டேன். " அரசியலில் நேரடியாக ஈடுபட்டுத்தான் என் பங்களிப்பை சமூகத்துக்கு தர வேண்டியதில்லை" என்றார் அவர். மறைமுகமாக என்ன விதமான பங்களிப்பை தருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. தொடர்ந்து தன் சிந்தனையை அரசியல் பக்கம் செலுத்தி இருந்தால், தமிழ்நாட்டுப் பொதுக்கூட்ட கலாசாரத்துக்கு முற்றான வேறு பரிமாணத்தில் அவர் வெளிப்பட்டிருக்கக் கூடும். கூட்டங்கள் என்றில்லை...தன் சிந்தனையையும் சக்தியையும் அவர் அரசியலில் இன்னமும் செலுத்தி இருக்கலாம் எனற ஆதங்கம் இன்றும் உண்டு எனக்கு.
மக்கள் சக்தி இயக்கம் உதயமூர்த்தி அவர்களை கொஞ்ச நாள் கவனித்துக் கொண்டிருந்தேன். என் ஊருக்கு அடுத்த செம்பொன்னார் கோவில் அவர் சொந்த ஊர். அவருடைய புத்தகங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். "உன்னால் முடியும் தம்பி" என்ற கமல் படமே அவரை முன் மாதிரியாக வைத்து எடுக்கப் பட்டதுதான் என்று சொல்வார்கள். "மக்கள் சேவைக்கு மிஞ்சி சங்கீதம் உசத்தி இல்லை" என்று கமல் சொல்லும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பிற்காலத்தில், அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்ப சிலாக்கியமாக இல்லை. அவரும் அந்தர் தியானமாகி விட்டார்.
பின் வந்தார் நம்ம தமிழ்நாட்டின் க்ளெவர் ராஸ்கல். குமுதமும், விகடனும் படிக்கும் பத்து வயதிலேயே நான் துக்ளக்கையும் விழுந்து விழுந்து படிப்பேன். அவர் நக்கலில் தெரியும் தைரியம், தர்க்க ரீதியாக எழுதும் தன்மை, மனதில் பட்டதை பளீரென்று போட்டுடைக்கும் தன்மை என்று அவர் என் ஆதர்ச நாயகர். அதுவும் கொஞ்ச காலம்தான். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு காவடி தூக்கியது, திமுக-தா.ம.க கூட்டணிக்கு சாமரம் வீசியது, பிறகு திமுகவை எதிர்க்கும் நிலை எடுக்க வழக்கமான சட்டம் ஒழுங்கு பல்லவியை பாடியது, பா.ஜ.க எம் பி ஆகியது, தான் என்ன நிலை எடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல காரணங்களை சொல்ல முடியும் என்கிற திமிரில் பேசுவது போன்ற செய்கைகளால், அவர் குப்புற அடித்து வீழ்ந்தார் என் உள்ளத்தில். அவர் அரசியலில் ஈடுபடாமல், பேசாமல் துக்ளக் ஆசிரியராக மட்டும் இருந்திருந்தால் இன்னமும் அவர்தான் என் ஆதர்ச நாயகராயிருந்திருப்பார். புத்திசாலிகள் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான சமீபத்திய மோசமான உதாரணம் "சோ" ராமஸ்வாமி.
அடுத்தவர் மாலன். அவர் சிநேகிதர் பாஷயில் சொல்வதானால் " மாலன் அமைதியானவர்.ஆனால் மாலனின் கதைகள் முகத்தில் அறையும். விஷயம் புரிந்தவர்களுக்கு". மாலனின் கதைகளில் தென்படும் கருத்துக்கள் அவ்வளவு வீரியமானவை. அரசியலைப் பற்றியும், பொது வாழ்க்கை பற்றியும், முக்கிய சமூக விஷயங்கள் குறித்தும் பேசும் அவர் கதைகள் அற்புதமானவை. ஆனால் அவர் மீது இன்றைக்கு தி.மு.க ஆதரவாளர் என்ற கறை படிந்திருக்கிறது. சன் டீவி ஊழியராக அவர் இருப்பதால், திமுக மற்றும் அதன் கூட்டாளிகள் செய்யும் விஷயங்களில் நீக்கு போக்கோடும், ஜெ வுக்கெதிராக தீவிர நிலை எடுப்பவராகவும் தான் இந்த தலைமுறை அவரை அறிந்திருக்கிறது. அந்தக் கறையை எடுக்க அவர் முனைய வேண்டியது அவருக்காக மட்டுமல்ல, அவர் சொல்பவற்றில் உள்ள நியாயங்கள் திசை திருப்பப்படாமல் சமூகத்தை சென்றடைய. இதே மாதிரி திமுக முத்திரை குத்தபட்ட சுதாங்கன், இப்போது ஜெ. டீவியில் அம்மா புகழ் பாடிக் கொண்டிருக்கிறாராம். தன் கறை நீக்க அவர் தேர்ந்தெடுத்த வழி போல இல்லாமல், மாலன் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
ரபி பெர்னார்ட் பேட்டி என்றால் ஒரு காலத்தில் ஆரம்ப கால தூர்தர்ஷன் "ஒலியும் ஒளியும்" நிகழ்ச்சி போல. அவ்வலவு பிரபலம். அத்தனை நாசுக்கு. அத்தனை நையாண்டி. பேட்டி எடுப்பவர் யார்...?? என்ன..?? என்று கணக்கெடுக்காமல், இஷ்டத்துக்கு கேள்வி கேட்டு, அவர்களை "வழிய" விட்டு கெட்ட கூத்தடித்துக் கொண்டிருந்தார். ஒரு முறை ஜெ வின் பேட்டிக்கும், ஜயேந்திரர் பேட்டிக்கும், "தரையில் குழி வெட்டி அதற்குள் உட்காராத குறையாக" ப்வயம் காட்டியதும், அவர் ஸ்கோர் மளமளவென்று குறைந்து ஆவியாகி விட்டது. எங்கே அவர் ..?? ஜெயா டீவியா..??
சிதம்பரம் த.மா.க தலைவராக இருந்தபோது அவர் பேச்சை திருச்சியில் கேட்டேன். சமகால தலைவர்களில் அத்தனை நிதானமான, தெளிவான உரையை நான் எங்கும் கேட்டதில்லை. அடித்த அரசியல் காற்றில், கருப்பையா மூப்பனார் அடித்த பல்டியில், ஜனநாயகப் பேரவை தொடங்கி, சூப்பருக்காக காத்திருந்து, கடைசியில் அவரும் மந்திரி பதவி வாங்கிக் கொண்டு காங்கிரஸில் ஐக்கியமாகி விட்டார். சிந்தனையாளர்களுகே சினிமாக்காரர்களின் தயவு தேவை. இல்லாவிட்டால் அவர்களுக்கு மதிப்பில்லை என்பது மறுபடியும் தமிழகம் ஜனநாயகப் பேரவை மூலம் தந்த பாடம்.
எந்த பக்கமும் சாராமல், எந்த குழாமிலும் தீபம் கொளுத்தாமல், மிஞ்சி இருப்பது எனக்குத் தெரிந்து "தீம்தரிகிட" ஞாநிதான். ஆனால் புரையோடி போயிருக்கும் வாரிசு அரசியல் கலாசாரத்திற்கும், வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கும் மதவாதத்திற்கும் மதத் தீவிரவாதத்திற்கும், ஜாதிக்கட்சி கலாச்சாரங்களுக்கும், அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசு யதேச்சையதிகாரத்தினை தட்டிக் கேட்பதற்கும் ஒரு ஞாநி போதுமா.??
சிந்தனையாளர்களில், தன்னுடைய லாபத்துக்காக லாவணி பாடாமல், விருப்பு வெறுப்பற்று, அடுத்த தலைமுறைக்கு நல்ல சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறவர்கள் யார்...??
அவசியம் பதில் தேவைப்படும் கேள்வி இது....!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
அடடா, அப்படியே சேமித்து வைத்துக்கொள்ளணும்போன்ற பதிவு. உங்கள் அலசலுக்கும், மொழிக்கும் சபாஷ் மூக்கரே.
ReplyDeleteஅடடே காசி ஸார்...வாங்க வாங்க.
ReplyDeleteநன்றி காசி.
//"தரையில் குழி வெட்டி அதற்குள் உட்காராத குறையாக" ப்வயம் காட்டியதும், //
ReplyDeleteஆஹா... சூப்பர்.
நீங்க சொல்றது போல நிலமை இருக்கிறது வாஸ்தவம்தான். நல்ல பதிவு இது. ரொம்ப ரசித்தேன்.
நல்ல நடு நிலைமையான பதிவு மூக்கன்.
ReplyDeleteநம் தலைவிதி இப்படிப்பட்ட சிந்தனையாளர்கள் மத்தியில் இன்னும் சிந்திப்போரைத் தேடி அலைவதே!
அவங்களெல்லாம்... போனாலென்ன? உங்களைப்போன்ற பல சிந்தனையாளர்களை இங்கு இப்போது காணமுடிகிறது. மக்களை நல்வழிப்படுத்த தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete"பின் வந்தார் நம்ம தமிழ்நாட்டின் க்ளெவர் ராஸ்கல். குமுதமும், விகடனும் படிக்கும் பத்து வயதிலேயே நான் துக்ளக்கையும் விழுந்து விழுந்து படிப்பேன். அவர் நக்கலில் தெரியும் தைரியம், தர்க்க ரீதியாக எழுதும் தன்மை, மனதில் பட்டதை பளீரென்று போட்டுடைக்கும் தன்மை என்று அவர் என் ஆதர்ச நாயகர்"
ReplyDeleteWhat has changed since then? You cannot deny the fact that his articles never stoop down to personal attacks. He never indulges in sensationalism. He is refreshingly different from time serving journalists. As a scrupulous commentator he has to reflect the changes in the leaders in his articles about them. They are the ones who change like chameleon. Not he.
சுந்தர் - நல்ல பதிவு. நாம் ஒரு காலத்தில் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் காலம் செல்லச் செல்ல சிதைந்துபோவது உண்மைதான். நீங்கள் அரசியல்வாதிகளைப்பற்றி சொல்லியிருப்பதுபோன்ற மாற்றம் என்னுடைய ஆசிரியர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது.
ReplyDeleteஒரு விஷயம் சொல்லட்டுமா? நீங்கள் எழுதியிருக்கும் பலரிடம் ஆரம்பம் முதலே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. குறிப்பாக ரபி பெர்னார்ட் போன்றவர்கள் (எங்க ஊர்க்காரர்தான் அவர்; அவர் இந்த கண்ணாடிப் பெட்டிக்குள்ள வரத்துக்கு முன்பே, அவருடைய பிலிப்பைன் வெரித்தாஸ் ரேடியோ காலத்திலிருந்தே எனக்குத் தெரியும்). அதே போல உதயமூர்த்தியும்.
ஒரு விஷயத்தைப் பார்த்தீர்களா?உங்கள் லிஸ்டில் இருக்கும் ஒரே முழுநேர அரசியல்வாதி சிதம்பரம்தான். இன்றைக்கும் அவருடைய முழுநேர அரசியல் விதிக்கும் எல்லைக்குள்ளே அவரிடம் கொஞ்சம் நேர்மை விஞ்சியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
தொண்டு :) சிரிப்புத்தான் வருகிறது. சோ விடம் என்ன நேர்மையிருக்கிறது? அவர் தரம்குறைந்து தாக்கவில்லை என்று சொல்வதெல்லாம் அபத்தம். வேறு ஒருவழியில் பார்த்தால் முகத்தில் சேறைவாரி இறைப்பதைக் கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் முதுகுக்குப் பின் நின்று குழிபறிக்கும் சோ போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.
கட்டாயமாக ஒரு காலத்தில் சோ நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்தான். எமெர்ஜென்ஸி காலங்களில் அவருடைய நேர்மையை வியக்கத்தக்கது. ஆனால் பிறரைச் சீண்டி, சில சமயங்களில் அவர்களுடைய சீழ்பிடித்த புண்களில் விரலைவிட்டு ஆட்டிச் சுகம்காணும் மனப்போக்கு அவருக்கு வந்தவுடன் அவருடைய நம்பகத்தன்மை போய்விட்டது. - venkat
தமிழ்நாட்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி தன்னுடைய எம்பி நிதியை முழுமையாக அதுவும் கல்விப்பணிகளுக்காக செலவிட்டாரென்றால் அது சோ மட்டும்தான்.
ReplyDeleteதன்னுடைய தேர்தல் கணிப்பை தானே கிண்டலடித்துக்கொண்ட ஓரே பத்திரிக்கையாளர் சோ மட்டும்தான்!
வீரப்பனை எப்படியாவது பிடித்தே ஆகவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வந்த ஓரே தமிழ் பத்திரிக்கையாளர் சோ மட்டும்தான்!
புத்திசாலிகள் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு மோசமான உதாரணம் சோவா? புரியவில்லை!
எந்தப்பக்கமும் சாராமல், எந்த குழாமிலும் தீபம் கொளுத்தாமலிருப்பது ஞாநிதான்னு சொல்வதிலிருந்து மூக்கனுக்கு தீம்தரிகிட சரிவர கிடைக்கவில்லையோ என்று கேட்க தோன்றுகிறது!
"ஆனால் பிறரைச் சீண்டி, சில சமயங்களில் அவர்களுடைய சீழ்பிடித்த புண்களில் விரலைவிட்டு ஆட்டிச் சுகம்காணும் மனப்போக்கு அவருக்கு வந்தவுடன் அவருடைய நம்பகத்தன்மை போய்விட்டது."
ReplyDeleteஇப்படிப் பொத்தாம்பொதுவாகக் கூறுவது நேர்மை ஆகாது. உதாரணத்துடன் கூறுங்கள். அப்படி யாரை அவர் சீண்டினார்?
தன்னைத் தானே நையாண்டி செய்து கொள்ளும் தைரியம் வேறு யாரிடம் கண்டீர்கள்? அவருடைய எழுத்துக்களை ஆரம்பம் முதலே படித்து வருபவன் என்ற தைரியத்தில் கூறுகிறேன். அவருடைய நேர்மை மற்ற எழுத்தாளர்களுக்கு இல்லை.