Thursday, October 14, 2004

புரியாத புதிர்

amma

அமெரிக்க வாழ் இந்தியர்கள், ஊரிலிருந்து அடிக்கடி தன் தாய் தந்தையர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவது வழக்கம். இரண்டு பேர் வேலைக்குப் போவதால், இவர்கள் வந்திருக்கும் நேரமாவது குழந்தையை சரியாக கவனிக்கலாம் என்றோ, மனைவியின் பிரசவத்துக்கு ஒத்தாசையாக இருக்கும் என்றோ பெரும்பாலானவர்கள் நினைப்பதால், இது அடிக்கடி நிகழும் செயல் இங்கே.

போன வாரம் என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் மாமியார் ஊரிலிருந்து வந்திருந்தார். நாங்கள் ஏதோ முக்கியமான விஷயங்கள் - புது வீடு சம்பந்தப்பட்டது - பேசிக் கொண்டிருக்க, நண்பரின் மாமியாரும் அந்த சம்பாஷணையில் கலந்து கொள்ளும் பொருட்டு தன் கருத்தையும் சொல்ல, அவர் மகள், " நீ சும்மா இரும்மா..நடு நடுல பேசாதே " என்று அதட்டிக் கொண்டும், எரிந்து விழுந்து கொண்டும் இருந்தார். எனக்கு பாவமாக இருந்த போதும், என் மனசுக்குள் என் தாயாரை எப்படி நடத்துகிறேன் என்பதும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

வயதாகிப் போனதினால் வரும் அலட்சியத்தையும், தலைமுறை இடைவெளியையும் ஆண்கள் மிக இயல்பாக கடந்து விட்டு, டிப்ளமாட்டிக் ஆக, ஒதுங்கிக் கொண்டாலும், இந்த அம்மாக்கள் மட்டும் எல்லா இடங்களிலும் அல்லல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். உள்ளுக்குள் அம்மாமீது எத்த்னை பாசம் இருப்பினும், வீட்டில் நடக்கும் முக்கியமான காரியங்கள் மீதான முடிவுகள் அவர்கள் பேச்சைக் கேட்டே எடுக்கப்படினும், அவர்களை சரியாக உபயோகித்துக் கொண்டு, மற்ற நேரங்களில் அவர்களை கண்டுகொள்ளாத கல் நெஞ்சர்களாகத் தான் இருக்கிறோம். மையப்புன்னகை புரிந்து கொண்டு அப்பாவும் மாமனாரும் ஒதுங்கி விட, இந்த அம்மா/மாமியார் ஜென்மங்கள் தான் எல்லாவற்றிலும் தலையை விட்டுக் கொண்டு, யாரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் நடுவில் இருந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஒன்றிருக்கிறது. குழந்தைகள் வளர வளர, பெண்கள் தங்கள் கவனத்தை எல்லாம் குழந்தைகள் மீது திருப்புகிறார்களே ஒழிய, கணவன்மார்கள் அவர்கள் கவனத்தில் இருந்து காணாமல் போய் விடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து குழந்தைகளின் கவனம், அவர்கள் படிப்பு, முன்னேற்றம் சார்ந்தும், அவர்களுடைய வாழ்க்கைத்துணை சார்ந்தும் வேறு திசையில் பயணிக்கிறது. அம்மா என்கிற உறவுக்கு அத்தனை முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இந்த விலகல் தெரிந்து நொந்து போகும் தாய்களை, அவர்களால் முன்னர் புறக்கணிக்கப்பட்ட அவர்கள் கணவர்கள் பழைய நேசத்தோடு அரவணைப்பதில்லை. " என்னை உட்டுட்டு ஓடினியே பசங்க பசங்க ன்னுட்டு..இப்ப என்னாச்சு பாத்தியா...வாடி..வா.." என்ற ஒரு வித இளக்காரத்துடன்தான் வயதான காலத்தில் அணுகுகிறார்கள். இதைத் தவிர்க்க, அம்மாக்கள் ஆதி காலத்திலிருந்தே குழந்தைகளும் கணவனுக்கும் நடுவே ஒரு மாதிரி பேலன்ஸ் செய்து கொண்டால், கதைகளிலும் , கவிதைகளிலும், சினிமாவிலும் "பாடல்" பெறுவது மட்டுமின்றி நிஜமாகவே சுய கெளரவத்துடன் நிம்மதியாக இருக்கலாம்.

என்னவோ எழுதிட்டேனே ஒழிய, அடுத்த முறை அம்மாவைப் பாக்கும்போதுகூட என்னுடைய வழக்கமான அராஜகம்தான் தொடரும்னு தோணுது. எனக்குத் தெரிஞ்சு அரசியலில் மட்டும்தான் "அம்மா" அராஜகம். மற்ற இடத்தில் எல்லாம் பிள்ளைகள்தான்...!!!


6 comments:

 1. பெண் பிள்ளைகள் இந்த விசயத்தில் ஆண் பிள்ளைகளை விட கொஞ்சம் அதிகமாகவே தாயை - அவள் ஊட்டிய நிகரில்லா பாசத்தை நினைத்து பார்ப்பார்கள். அதுவும் அவர்களே ஒரு தாயானபின் தத்தம் தாயை கவனிக்கும் முறையும் செலுத்தும் அன்பும் "ஒரு" படி மேலாகவே இருக்கும்.

  எலியும் பூனையுமாக எப்போதும் சண்டையிட்டு கொள்ளும் என் தோழியும் அவள் தாயும், இப்பொது "ஜெ - சசி" போல இருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் :-).

  ReplyDelete
 2. அதுதான் இல்லங்கறேன்...நான் பார்த்த இடத்திலெல்லாம், வளர்ந்த பெண்கள் அம்மாவை கொஞ்சம் எரிச்ச்லோடதான் பார்க்கிறார்கள். அப்பாவிடம் மிகவும் பிரியமாக இருக்கிறார்கள். சிக்மண்ட் freud ஐ துணைக்கு அழைக்க வேண்டிய சமாச்சாரம் அதெல்லாம்...:-). பையன்கள் கதையோ, கேட்கவே வேண்டாம். "நில்" லுன்னா உக்கார்றாங்க.உக்காருன்னா, "பட்"டுன்னு படுத்துடுறாங்க..
  பார்யாளிடம் அத்னை மிரட்சி. அதனால் அம்மாக்கு, அப்பாதான் முக்கியமா இருக்கணும் எப்பவும்.

  ReplyDelete
 3. ஆமோதிக்கிறேன்..

  பெண் பிள்ளைகளுக்கு தாயின் பேச்சுக்கள் வேம்பாகவும் அதிகம் தொல்லை தராத அப்பா பிரியமாகவும் இருப்பதை நானும் கண்டிருக்கிறேன். ஆனால் தாய், பாசம் அதிகமானதினால்தான் மகள் போகுமிடத்தில் " நல்ல" பெயர் எடுக்க வேண்டுமே என்ற பயத்தினால் விளைந்த கண்டிப்பை செலுத்துகிறாள்.

  ஆனால், சில பெண் பிள்ளைகளுக்கு இது புரிவதில்லை ( அல்லது புரிய முயற்சிப்பதில்லை..).அதனால் தாய் என்ன சொன்னாலும் "சும்மா வாயே வைச்சுக்கிட்டு இருக்க மாட்டே நீ.....தொணதொணன்னு ஏதாவது சொல்லிக்கிட்டே இரு..." அதன் நல்லது கெட்டது தெரியாமல்-புரியாமல் இகழ்கிறார்கள்.

  பிறகு இவர்களே தாயான பின் இவர்களின் கண்மணிகள் உதாசீனம் செய்கையில்தான் உறைக்கிறது.எனக்கு தெரிந்து இன்றைய இளையத்தலைமுறையில் தாய்-மகள் உறவு சுமுகமாகவே வளருவது போல் தெரிகிறது.

  ReplyDelete
 4. சுந்தர்,
  அருமையான, உண்மையான கருத்துக்கள்! என்னையும் சற்று சிந்திக்க வைத்தது. நானும் அப்பப்ப அராஜகம் பண்ற ஜாதி தான்! ஆனால், அம்மா என்றில்லை, பார்யாளிடமும் தான் :-) அதுவும், திருமணம் ஆனபின் தான், உதாசீனம் சற்று அதிகமாகிறது என்று சொல்லலாம். உங்கள் கருத்துக்கள் என் போக்கை மாற்றிக் கொள்ள தூண்டும் வகையில் உள்ளன. சமயம் கிடைக்கும்போது, என் BLOG-க்கு (http://balaji_ammu.blogspot.com) visit செய்யவும்.
  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 5. அன்பின் சுந்தர்,

  நல்ல பதிவு. ஏன் பிள்ளைகள் தாயை உதாசீனம் செய்கின்றன?

  உளவியல் கூறுகளைப் பார்க்கும் போது, நம் வளர்ப்பு முறையிலேயே சில தவறுகள் இருக்கின்றன.

  பிள்ளைகள், தாய் செய்வதனைத்தையும் அவளுடைய கடமை என்று நினைக்கின்றனவே அன்றி அவளுடைய சேவை அது என்று உணர்வதே இல்லை.

  அம்மாவிடம் எதையும் எதிர்பார்ப்பது என் உரிமை, அதை உடனே செய்வது அவள் கடமை. இது குழந்தை முதலில் கற்கும் தவறான பாடமாக ஆகிவிடுகிறது.

  தாயோ ஆரம்பம் முதல் தன்னுடைய உரிமைகளை நிலை நாட்டத்தவறி விடுகிறாள்.

  தான் எப்படி நடந்துகொண்டாலும் தாயின் அன்பும் அரவணைப்பும் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட குழந்தை, காரிய சித்திக்கு மட்டும் கரிசனம் காட்டிவிட்டு ("அப்பாவை கார் பொம்மை வாங்கித்தரச்சொல்லும்மா, என் செல்லமில்லை") மற்ற நேரங்களில் அலட்சியம் அல்லது அதிகாரம் செய்கிறது.

  இவை குழந்தை வளர வளர, சார்புத்தன்மை மறைய மறைய அதிகரிக்கின்றன.

  நம் குழந்தைப் பருவமும், மனசாட்சியுமே சாட்சி

  அன்புடன்
  இர.அருள் குமரன்

  ReplyDelete
 6. நன்றி நண்பர்களே. எனக்கு நானே உரத்து சொல்லிக் கொள்ளும் விடயங்கள் இவை. மற்றவர்களிடமும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால், தாயை அலட்சியப்படுத்துவதில் நான் மட்டும் தனியன் இல்லை என்ற வலி மிகுந்த உணர்வு ஏற்படுகிறது. தாயிடம் வைத்திருக்கும் பாசத்தில் நாம் யாருக்கும் குறைந்தவர்களில்லை. என் நண்பர் சொல்லுவார், If you love somebody show it என்று. என்னைக் கேட்டால், If you love your Mom, shower it...!!!!

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...