Sunday, June 05, 2011

பிஷிங்

வளர்ந்த குழந்தை போலத் தான் இருந்தான் பிரசாத். நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. நெற்றியில் குங்குமத் தீற்றல். வெள்ளைச் சிரிப்பு. முழுக்கை சட்டை. அதன் நிறத்துக்கு ஒவ்வாத ஒரு பேண்ட். எல்லாரையும் ஜி..ஜி என்று விளித்துக் கொண்டு, Campion பள்ளியில் தன்னுடன் படிதத பையன்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு காரைக்குடி கல்லூரி ஹாஸ்டலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

பால்குடி மறக்காத சுடுகுஞ்சுகளே கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்ததும் வால் முளைத்த குரங்கு குட்டிகளாகி விடுகிற அதிசயத்தில் இது எங்களுக்கு தீராத ஆச்சரியம்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அந்த அதிசயம் பழக்கமாகி விடவே “ ப்ரசாத்துன்னா இப்படித்தான் மச்சி” என்று சொல்லிவிட்டு எங்கள் துரத்தல்களில் பிசியானோம்.

எல்லா வளர்சிதை மாற்றங்களையும் தோற்கடித்துவிட்டு, லேப்களில், டூர்களில், கேண்டீன்களில், கல்லூரி கலைவிழாக்களில், இரவு நேர சென்னைப் பயணங்களில், குறும்பு மிக்க வகுப்புத் தோழிகளின் அலப்பரையில் பிரசாத் நடத்தும் பால்யத் திருவிளையாடலகள் எங்கள் காதுகளுக்கு வந்தபடியே இருந்தன. ஆனால் எல்லோருக்கும் இனியனாக, படிப்புகளில் துடியாக, வம்புகளில் சிக்காதவனாக, நடிகை சரோஜாதேவி ஸ்டைலில் தமிழ் பேசும் பிரசாத் தன் வழியில் போய்க் கொண்டிருந்தான். இதையெல்லாம் CECRI யின் ஆஞ்சநேயர், பிரசாத் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் வெண்ணை பூசிக்கோண்டும், வடை மாலைசார்த்திக்கொண்டும் மையமாகப் பார்ட்துக் கொண்டிருந்தார். இறுதியாண்டில் அவனையும் சலனப்படுத்திய ஒரு பெண்ணிடம் ”ரோஜாத்தோட்டம் வைக்கலாம்,சோஷியல் சர்வீஸ் பண்ணலாம் என்று அவன் தன் மனதைப் பகிர்ந்த தகவல் வந்தபோது, எங்களால் அவன் “குணா” ஆனான்.

கல்லூரி முடிந்து, கனவுகள் கலைந்து, நிஜம் தாக்கி, நெஞ்சம் அலுத்து, சலித்து, களைத்து, மலர்ந்து வாழ்க்கை நிலைத்த வருடங்களில் அவன் அமெரிக்காவில் கிழக்கு கடற்கரையில் மணமாகி, குழ்ந்தைகளுடன் இனிதே வாழ்வதாகவும், கிழக்குகரை நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மெயில், யாஹூ குழுமம், இணைய நிழற்படம் முதலியன மூலம் தெரிந்தபோது சந்தோஷப்பட்டேன்.

நான்கு வருடங்களுக்கு முன், மகனை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு ஏரியில் குளிக்கப்போக, பாம்பு கடித்தோ, வலிப்பு வந்தோ, அந்த சபிக்கப்பட்ட தினத்தில் மரணித்து அமெரிக்க தினசரிகளில் கதறும் அவன் மகனின் படத்துடன் அமரனாகி, செய்தியாகப் போனபோது நாங்கள் இடிந்தே போனோம். நல்ல மனம் கொண்ட நண்பர்கள் சிலர் குடும்ப நிதியாக பணம் வசூலித்து அவன் குடும்பத்தை இந்தியா வழியனுப்பி வைத்தது எல்லாம் அந்த துன்பியல் சம்பவத்தின் நீட்சிகள்.

நேற்று அவனிடமிருந்து என் யாஹூ மெயில் முகவரிக்கு எதையோ விளம்பரித்து, எங்கேயோ அங்கத்தினனாகச் சொல்லி மெயில் வந்திருக்கிறது.

அடப் பாவிகளா...!!!!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...