Thursday, November 17, 2005

விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்

கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் நான் இந்தியாவின் மீதுள்ள என் மனத்தாங்கலைக் கூறி " என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்று எழுதிய வரிக்கு, ஒரு நண்பர் 'இவர்கள் இந்தியர்கள்' என்ற தலைப்பில் ஒரு வசைக் கட்டுரையே பதித்திருந்தார் . அந்த வரியை எழுதும்போதே இதனால் தமிழிணைய நண்பர்கள் கோபப் படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களின் கோபம் ஒரு நாகரீக வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்கிற பெரும்போக்கான நினைப்பில் தான் நான் அந்த பதிப்பை எழுதியிருந்தேன். ஆனால், வயது வித்தியாசம் பாராமல், சிலருடைய வசை சொற்கள் சிறிது எல்லை மீறியனவாக அமைந்திருந்தன.

தொடர் முடிந்தவுடன், நான் எழுதியதை குறித்த தர்க்கத்தை வைத்துக் கொள்வோம் என்று பொதுவாக நானும் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். இது நடந்து ஒரு மாததிற்குமேல் ஆகிறது. "சரி நடந்து முடிந்த கதை, இதை எதற்கு பெரிது பண்ண?" என்று என் வழியிலே போகலாம் என்று பார்த்தால், அதற்கு தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. ஆதலால் வேறு வழி தெரியாத நிலையில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாசகர்கள், என் தனி மனித பிரச்சனைக்காக உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

சிவா என்ற நண்பர் எழுதியது

- ஆனால் , அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு , பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். கேணத்தனமாக பேசாதீர்கள்.

- ஒரு நாட்டை பற்றி குறை சொல்வதற்க்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும். அது இந்தியாவில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு , நான் மேதாவி என்று ஒரு அயல்நாட்டை (இந்தியா மட்டும் அல்ல) குறைத்து பேசி, உங்கள் புராணம் பாட வேண்டாம்
.


ரவி என்ற நண்பர் எழுதியது :- -

சொந்த நாட்டில் வசிக்க வக்கில்லாமல் வெளிநாட்டில் நக்கிக்கொண்டிருக்கும் தங்களை போன்றவர்கள், அயல்நாட்டு பெருமை சொல்லி ஏன் சொந்த நாட்டை நக்கலடிக்கிறீர்கள். உங்களுக்கு புடிக்கலைன்னா பொத்திக்கிட்டு நக்கிக்கிட்டு இருக்கும் நாட்டை பற்றி பெருமையாக எழுதுங்கள். தாய் நாட்டை கேவலப்படுத்தாதீர்கள்.

பெயரில்லா நண்பர் எழுதியது :-

............ என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை ( தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.

இதையெல்லாம் படிக்கும்போது சில அடிப்படை விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கின்றன. நான் இந்தியாவைப் பற்றி மேலே குறிப்பிட்ட வரிகள் கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் சொல்லப் பட்டிருக்கின்றன. அதற்கு முன்பு ஐந்து பாகங்கள் எழுதி இருந்தேன். அவற்றில் நான் எழுதிய யாவும் மலேசியாவில் வாழும் இந்தியர்களின், தமிழர்களின் அவல நிலையை பற்றிய விவரங்கள். மலேசியாவில் நம் இனம் எப்படி நொந்து நூலாகிக் கொண்டுள்ளது என்பதை பற்றியும், எங்களின் மொத்த அநுபவங்களில் இருந்தும் என் தனிப்பட்ட வாழ்க்கை அநுபவங்களில் இருந்தும் பிற NRI கள் என்ன பாடம் கற்றுக் கொள்ளமுடியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் எழுதப் பட்ட எழுத்துக்கள்தான் யாவும். இதை ஒவ்வொரு பதிவிலும் நான் திரும்ப திரும்ப சொல்லி வந்துள்ளேன்.

அத்தோடு கிழட்டு அநுபவங்கள் என்ற தலைப்பில் ஒருவர் , இவ்வளவு சீரியசான விஷயத்தை பற்றி எழுதுகிறார் என்றால், அவர் ஒர் அளவுக்கு வயது முதிந்தவாராகத் தான் இருக்க வேண்டும் என்பது யார் மனதிலும் தோன்றும் ஒரு உண்மை. அப்படி சமுதாய உணர்வு கொண்ட ஒரு பெரியவர்தான் இந்தியாவைப் பற்றி குறைபட்டு கொள்கிறார் என்று தெரிந்தும்கூடவா, இப்படி வசை வசனம் எழுத உங்களுக்கு மனது வந்தது ?? ஏனப்பா தம்பிகளா !! ??

சரி ' தமிழ்மனம் ' என்கிற , உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தத்தம் எழுத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு இடத்தில், தமிழ் மொழியிலேயே இந்தியாவுக்கு எதிராக ஒருவர் கருத்துரைக்கிறாரே , இவர் என்ன அடி முட்டளா? அல்லது " இந்தியா உலக அரங்கில் தன் தகுதிக்கு நிகரான எழுச்சியை பெறவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் கொண்டிருக்கும் இந்தியாவை நேசிக்கும் பல கோடி இந்திய வம்சாவளியினரில் இவரும் ஒருவரா ?" என்று எதுவுமேயா அலசிப் பார்க்க உங்களுக்கு தோன்றவில்லை ??

அதிகமாகவே பேசிவிட்டீர்கள், பாதகமில்லை.

ஆனால் , நான் எதிர்பார்த்த "எந்த ஆதாரத்தை வைத்து உன் கூற்றைக் கூறுகிறாய் ?" என்கிற அறிவுபூர்வ கேள்வியை உங்களில் யாராவது ஒருவராவது கேட்டிருந்தீர்களேயானால் நமக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த விவாதத்தை கொண்டு சென்று , பல விஷயங்களை தெளிவு படுத்தி , பல கருத்துக்களை பரிமாறிக் கொணடு எல்லோருமே பயன் அடைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் விவாதத்தை வேறு திசையில் கொண்டு சென்று இருந்தீர்கள். " இந்தியாவை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கின்றது" என்பது ஒன்றுதான் உங்கள் வாததின் மையக் கருவாக இருந்தது.. சரி, என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள் :-

1952 ல் காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூர் எனும் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டவராயன்பட்டிக்கும் , அதை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலங்குடிக்கும் இடையில் உள்ள சுண்டக்காடு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட. "

என்ன ராஜசேகரன் மலேசியாவில் 100 வருடங்களுக்கு முன்னரே குடி புகுந்ததாக கூறிவிட்டு, திருப்பத்தூர் என்கிறார் , கண்டவராயன்பட்டி என்கிறார் , சுண்டக்காடு என்கிறார் ? " என்று வாசகர்களுக்கு குழப்பமாக இருக்கிறதா ?? நான் பிறந்தது இந்தியாவில். இரண்டு நாடுகளிலுமே வாழ்ந்து, போக வர இருந்த என் பெற்றோர்கள் , எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என்னை மலாயாவிற்கு கூட்டிச் சென்றனர். அன்றிலிருந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறேன். அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரே என் தலைமுறைக்கு முந்திய தலைமுறையினர் மலேசியாவில் குடிபுகுந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , இந்தியாவில் எல்லா குடும்ப, பாரம்பரிய தொடர்புகளையும் இன்றுவறை பிரயாசையுடன் பேணிக் காத்துவரும் சில பழைய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்களுக்கு திருப்பத்தூரை ஒட்டிய கிராமங்களிலும், திருச்சி , மதுரை போன்ற நகரங்களிலும் இன்றும் ஆயிரக்கணக்கான சுற்றத்தார்கள் உள்ளனர்.

மலேசியாவில் தொழில் புரிந்து சம்பாதித்த பணத்தில் 80 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன. இவற்றுக்கெல்லாம் வரி கட்டுவதில் இருந்து, வரப்பில் யாராவது கேட்காமல் மரத்தை வெட்டினால், அவர் சிண்டைப் பிடிப்பது வரை நானும் , என் தம்பியும், மலேசியாவில் வாழும் என் பெரிய தகப்பனார் பேரன்களும்தான் இன்று வரை செய்து வருகிறோம்.

இதெல்லாம் போக குடும்பத்தில் யார் எங்கு இறந்தாலும் அவர்களை தகனம் செய்ய வேண்டி இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது. மலேசியாவில் வாழ்ந்த எங்கள் மூதாதையர் அத்தனை பேரினுடைய சமாதிகளும் அந்த இடுகாட்டில்தான் உள்ளன. எப்படி என்று கேட்கிறீர்களா? காரணம் சாவு நெருங்கும்போது ஒருவர் விடாமல் அத்தனை பேரும் பிறந்த மண்ணுக்கு திரும்பி விட்டவர்கள்.

என்னோடு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் ஒரு சகோதரர் மட்டும் குடும்பத்தோடு மலேசியாவில் உள்ளார். ஒரு மலேசிய வங்கியில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார். அவருடைய மனைவி இந்தியாவில் பிறந்து , வளந்த உறவினரின் மகள். மற்றொரு சகோதரர் இந்தியாவிலேயே செட்டில் ஆகி, திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவியும் இந்தியாவில் பிறந்த வளர்ந்தவர்தான். இவர்கள் போக எனக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இருவரும் இந்தியாவில் உறவினர்களை மணந்து பிள்ளை , குட்டி , பேரன் , பேத்தி என்று வாழ்பவர்கள். இப்படி இந்தியாவில் பின்னிப் பினைந்து கிடக்கும் உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

இதெல்லாம் போக என் பெரிய தகப்பனார் வழியில் , மலேசியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட வம்சாவளியினரில் பெருவாரியானோர் இந்தியாவிலிருந்து பெண் எடுத்தவர்கள். இவர்களில் மலேசிய நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினாராக (MP) இருக்கும் என் பெரிய தகப்பனார் பேரனும் ஒருவர். அவரின் மனைவியும் கோயம்புத்தூரில் பிறந்து, படித்து, வளந்தவர்தான்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன்.தமிழ்மணத்தோடு எனக்கு உள்ள ஈடுபாடு வெறும் இரண்டு மாதங்கள் தான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில், இங்கும் கூட ஏதோ ஆழமான அரசியல் ஊற்று ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம. நாம் நம்மில் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைத்து இங்கு வாய்ப் போரும் வசைப் போரும் நடத்திக் கொண்டு இருக்கும் வேலையில், வேறு கலாச்சாரக் கூறுகளை உடைய பிற நாட்டவர் தங்கள் புத்திகளை எப்படி எல்லாம் உபயோகித்து தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?? ..... நினைத்தால் பெருமூச்சுத்தான் வருகிறது

மற்றவர் எப்படியெல்லாம் சிந்தித்து செயல் படுகிறார்கள் என்பதற்கு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' ஐ பற்றிய ஒரு குட்டி கதையை கீழே வழங்கி விடைபெறுறேன்.

வணக்கம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

" நான் பல வருடங்களுக்கு முன்பு தூபாயில் வேலை செய்வதாக கூறி இருந்தேன் அல்லவா? அப்போது என் சொந்த வேலையாக ஒரு முறை கோலாலம்பூர் திரும்ப வேண்டி இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில், இக்கோனொமி கிளாஸ் டிக்கட். இரவு ப்ளைட். check-in முடிய பத்து நிமிடங்களுக்கு முன் கவுண்டருக்கு போய் சேர்ந்தேன். 'இக்கோனோமில் இடம் இல்லாததால் உங்களை ராஃபில்ஸ் கிளாசுக்கு (பிசினஸ் கிளாஸ்) மாற்றிய்ள்ளோம்" என்று கவுண்டரில் இருந்த பெண் சொன்னதும் எனக்கு படு குஷி.

விமானத்திற்குள் போய் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டை தேடி உட்கார்ந்தால், அடுத்த சீட்டில் எங்கள் நிறுவனத்தின் சரக்கு கப்பல் பிரிவின் ஜெனரல் மானேஜர் - கோவாவைச் சேர்ந்த ஒரு இந்தியர். வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது. மெனு கார்டோடு, wine list ம் கூடவே வழங்கப் பட்டது. லிஸ்ட்டை பார்த்துவிட்டு என் பானம் என்னவென்பதை பக்கத்தில் நின்று ஆர்டர் எடுத்து கொண்டு இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். அவர் என் நண்பரிடம் திரும்பி "உங்கள் பானம் என்ன சார்?" என்று கேட்டார். என் நண்பர் அவர் கையில் வைத்திருந்த wine list ல் ஒரு பானத்தை காண்பித்து, "இது" என்று சொல்ல முற்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றோரு பணிப் பெண் அங்கு வந்து "இல்லை, மிஸ்டர் பிலிப்ஸ் உங்களின் பானம் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது" என்றார். நாங்கள் திரும்பிப் பார்த்தால், ஒரு பக்கெட்டில் ஒரு பாட்டல் வைனை ஐஸ் வைத்து குளிர வைத்த நிலையில் மற்றோரு பணிப் பெண் சுமந்து வந்து கொண்டிருந்தார்.

"நாம் இப்போதுதானே ஆர்டரே கொடுக்க போகிறோம்.....அதற்குள் எப்படி....வைன் ?!!" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண்பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. "இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்?!!" என்று வாயை பிளந்தார். அதற்கு அந்த பணிப் பெண் "உங்களுக்கு இந்த வைனைப் பறிமாற வேண்டும் என்று எங்களின் டியூட்டி ரோஸ்டரில் சொல்லப் பட்டிருந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்." என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்திற்கு என் நண்பர் தலையை பிய்த்து கொண்டபடி இருந்தார். பிறகு திடீர் என்று என் பக்கம் திரும்பி, "எனக்கு தெரிந்து விட்டது" என்றார். "ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு இரவு ப்ளைட்டில் லண்டனுக்கு வேலையாக போகும்போது இதே மாதிரி ஒரு wine list என்னிடம் கொடுக்கப் பட்டது. அன்று அங்கிருந்த விமானப் பணி பெண்ணிடம் இந்த குறிப்பிட்ட வைன் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த வைன் எவ்வளவு பிரமாதமான ஒன்று என்று அவரிடம் விலாவரியாக சொல்லி கொண்டிருந்தேன். அதை அவர் குறிப்பெடுத்து, அது கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்ற பட்டு, ஆறு மாதம் கழித்து நான் வேறு ரூட்டிற்கு டிக்க்ட் புக் செய்யும் போது, என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டு, எனக்கு இந்த வைன் தான் பரிமாறப் படவேண்டும் என்கிற ஆர்டர் தரையில் வேலை செய்யும் சிப்பந்திகளிடம் கொடுக்க பட்டு, அதன்படி இந்த குறிப்பிட்ட வைன் விமானத்திற்கு அனுப்ப பட்டு, குறித்த நேரத்திற்கு முன்பே அது குளிர் படுத்தபட்டு, இங்கு எனக்கு வளங்க பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்தோடு சொல்லி முடித்தார்.

உலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும், நம்பர் ஒன் விமான நிறுவனமாக ஏன் சீனர்கள் நடத்தும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா?xxxxxxxxxxxxxxxxx

மலேசியாராஜசேகரன்

6 comments:

 1. //இங்கும் கூட ஏதோ ஆழமான அரசியல் ஊற்று ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம. நாம் நம்மில் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைத்து இங்கு வாய்ப் போரும் வசைப் போரும் நடத்திக் கொண்டு இருக்கும் வேலையில், வேறு கலாச்சாரக் கூறுகளை உடைய பிற நாட்டவர் தங்கள் புத்திகளை எப்படி எல்லாம் உபயோகித்து தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?? ..... நினைத்தால் பெருமூச்சுத்தான் வருகிறது//

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

  பல விதயங்களில் நாம் போகவேண்டிய தூரம் நிறைய.

  சீனர்களைப்பற்றியும் ஒரு தொடர் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் அனுபவங்களைத் தொடர்ந்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நிறையக் கற்றுக்கொள்கிறேன். அதுவும் புலம்பெயர்ந்த தமிழனரான என்னை யோசிக்க வைத்தது.

  நன்றி!

  -மதி

  ReplyDelete
 2. அன்பரே,
  நீங்கள் வயதில் பெரியவர் என்பது தெரிகிறது. சுந்தரின் "என் மூக்கு" பதிவின் வழியாக உங்களின் எல்லாக் கட்டுரைகளையும் படிக்காவிட்டாலும் சிலவற்றைப் படித்துள்ளேன். நான் இந்தத் தலைமுறையில் H1B என்ற வேலை நிமித்த விசாவில் அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களாக வசித்து வருபவன். உங்களின் கட்டுரைகள் நன்றாகவும் சீனா பற்றி புதிய (நான் அறிந்திராத) தகவல்களைத் தந்தது. நன்றி.

  //" என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது"//

  என்று நீங்கள் எழுதியபிறகு நானும் உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால் அது உங்களின் கருத்து.
  நீங்கள் அவ்வாறு சொல்வதால் இந்தியாவின் "முன்னேற்றத்தையோ" அல்லது "முன்னேறாமல் இருப்பதையோ" பாதிக்கப் போவது இல்லை.

  இந்தியாவப் பற்றி மாற்றுக் கருத்து உள்ளவர்களிடம் எல்லாம் அந்தக் கருத்துக்காக பகையுணர்வு பாரட்ட முடியாது.
  மேலும் நீங்களே //என் அபிப்பிராயத்தில்// என்று கூறிவிட்டபடியால் அதற்குமேல் ஒன்றும் பேசுவதற்கு இல்லை. உங்களுக்குத் தெரிந்தது (அல்லது உங்களின் நம்பிக்கை) அவ்வளவுதான்.

  சீனாவின் வளர்ச்சி மறுக்க முடியாததுதான். அவர்களின் உழைப்பு போற்றப்பட வேண்டியதுதான்.
  அவர்களைப் போற்றும் அதே சமயத்தில் உங்களுக்கு இந்தியாவை சீண்டவேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

  இதை நான் இப்போது எழுதக் காரணமே உங்களின் இந்த தன்னிலை விளக்கம்தான்.

  "விடைபெறும் முன்" கட்டுரையில் இந்தியாவில் உங்களுக்கு உள்ள தொடர்பு பற்றியும் சொத்துகள் பற்றியும் இங்கே விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்?
  இந்தக் காரணங்களால் இந்தியாவை விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதைச் சொல்ல வருகிறீர்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

  உண்மையிலேயே இந்தியாவின் மீது உங்களுக்கும் அக்கறை இருக்கும் பட்சத்தில்...
  இவ்வளவு அனுபவம் பெற்றுள்ள நீங்கள் "தலைகீழாக" நின்றாவது ஒரு சிறு மாற்றத்தையாவது இந்தியாவில் கொண்டுவர முயற்சிசெய்திருக்க வேண்டும்.
  (நீங்கள் அவ்வாறு முயற்சி செய்து இருக்கலாம். யார் அறிவார்?)

  இந்திய அரசியல்வாதிகள் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.பொது மக்கள் மற்றும் உங்களைப் போன்ற அனுபவம், அறிவு மற்றும் பொருளாதார வசதி உடையவர்கள் இப்படி விமர்சனம்(அபிப்பிராயம்) செய்வதோடு நிறுத்தாமல், மாற்றங்களை கொண்டுவர தலிகீழாக நின்று முயற்சி செய்தால் எதுவும் நடக்கும்.

  "விடைபெறும் முன்" ல் நீங்கள் இந்தியாவிற்காக,தமிழகத்திற்காக அல்லது நீங்கள் "சுண்டக்காடு" க்கு ஆற்றிய பொதுநல சேவைகளைப் பற்றி எழுதி இருந்தால், அல்லது சேவை செய்ய எண்ணி நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பட்டியல் இட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

  அதில்லாமல் இந்தியாவில் உங்களுக்கு உள்ள சொத்துக்கணக்கையும், உழைப்பை வேறு நாட்டில் கொட்டி விட்டு இறந்த பின் இந்தியாவில் தகனம் செய்ய இந்தியா வருவதாச் சொல்லி முடிப்பது எனக்கு ஏமாற்றமே.

  ஒருவேளை நீங்கள் உண்மையிலேயே இந்தியாவிற்காக,தமிழகத்திற்காக அல்லது நீங்கள் "சுண்டக்காடு" க்காக ஏதேனும் செய்து இருந்து, அதை இங்கு அவையடக்கம் காரணமாக சொல்லாமல் இருப்பீர்களேயானல் நான் மேலே சொன்ன அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

  நானும் வெளிநாட்டில் இருப்பதால் இதனைப் படிப்பவர்கள் நீ என்ன செய்துள்ளாய் உன் ஊருக்கு? என்று கேட்கலாம். நான் இதுவரை சொல்லிக்கொள்ளும் படியாக ஏதும் செய்யவில்லை. நான் செய்யவில்லை என்ற வருத்தம்தான் எனக்கு இருக்கிறேதே தவிர, இந்தியா தலைகீழாக நின்றாலும் சீனா போல் வராது என்ற எண்ணம் எனக்கு இல்லை.

  முயற்சிசெய்தால் சீனாபோல் நிலையை அடையாவிட்டாலும் , இப்போது இருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் முன்னேறுவது உறுதி.

  உங்களுக்காக பார்க்க:
  உருப்படாதது என்று பெயர் வைத்துக் கொண்டு நாராயணன் எழுதிய உருப்படியான கட்டுரைகள்
  Made in India - இந்தியாவின் தொழில்முனைப்புத் தேவைகளும் சாத்தியங்களும்
  http://urpudathathu.blogspot.com/2005_03_13_urpudathathu_archive.html


  உங்களிடம் இருந்து இன்னும் ஆக்கபூர்வமான முயற்சிகளை(யும்) எதிர்பார்க்கும்.

  கல்வெட்டு
  http://kalvetu.blogspot.com
  http://balloonmagic.blogspot.com

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. ஐயா ராஜசேகரனுக்கு இந்த பேராண்டியின் பதில் என் பதிவில் போட்டிருக்கிறேன்.

  http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html

  இதையும் "உங்கள் பதிவு உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்று மட்டுமே சொல்லமுடியும்" என்று சப்பை கட்டு கட்டாதீர்கள் :-)

  பேராண்டி சிவா.

  ReplyDelete
 6. ஒரு நல்ல கட்டுரைத் தொடரை அளித்ததற்கு திரு ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி.

  இந்த சீனர்கள் பற்றிய கருத்தில் நிறைய பேர் சீனாவையும் சீனர்களையும் போட்டுக் குழப்பிக்கொள்வதாக எனக்கு ஒரு எண்ணம்.

  என் அலுவலகத்தில் தலைமை அதிகாரி ஒரு சீனப் பெண்மணி. அவரையும் என்னுடன் பணி புரிந்த, பணியில் உள்ள மற்ற சீனர்களையும் அருகாமையில் கண்டவன் என்ற முறையில் அவர்களின் குணங்களை அறிய விருப்பமுள்ளவன்.

  21ஆம் நூற்றாண்டில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சீனா ஒரு வலுவான நாடாக உலக அரங்கில் இருக்கப்போகிறது. நாமும், நம் நாடும், சீனாவை/சீனர்களை பற்றி புரிந்து கொள்வது எதிர்காலத்தில் தனி நபர்களுக்கும், அரசியல்/வர்த்தக அரங்கிலும் மிகவும் பயன் தரும்.

  எனவே, உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,


  பெத்தராயுடு

  ReplyDelete

கர்ணன்  - அக்மார்க் நெய்யில் தாளித்த மசாலா -----------------  நம் மனிதர்களை ஹாலிவுட் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.   படம் முழுக்க வாளு...