Monday, November 07, 2005

கிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது

கருவிலேயே மாண்ட ஏற்றுமதி பிசினஸ்

எனக்கு 24 வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில் குமாஸ்தா நிலையில் இருந்து எக்ஸ்போர்ட் எக்ஸிக்யூட்டிவாக உயர்ந்திருந்தேன். சம்பளமும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகள் ஆகியிருந்ததால் சம்பள உயர்வுக்கு மேல் குடும்பச் செலவுகள் அதிகரித்திருந்தன. வேலை செய்வது போக பகுதி நேரத் தொழிலாக, இந்தியாவில் இருந்து ' கோஸ்டியும் ஜுவல்லரி ' தருவித்து ஏஜண்டுகள் வைத்து வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தோம். தொழில் ஒர் அளவுக்கு நன்றாகவே நடந்து வந்தது. இருந்தாலும் மிகவும் சிறிய தொழில் என்பதனால், அதிலிருந்து சொற்ப வருமானமே பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் centralisation of operation என்று கூறி என் நிறுவனத்தினர் நான் வேளை செய்த எக்ஸ்போர்ட் துறையை கோலாலம்பூரில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றினர். என்னால் கோலாலம்பூரில் இருந்து வேறு எங்கும் பெயர முடியாத நிலை. ஆனால் மற்றோரு பக்கம் நான் வாங்கிய சம்பளத்திற்கு ஒத்த சம்பளம் கோலாலம்பூரில் எனக்கு வேறு எங்கும் கிடைக்காது என்கிற நடைமுறை உண்மை வேறு. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது, என் பால்ய நண்பர் ஒருவர் "நீங்கள் ஏன் ஒரு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்து, தூபாய், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பாம் ஆயில் சம்மந்தபட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது? உங்களுக்குதான் அதில் நிறைய அநுபவம் உள்ளதே ?" என்றார். அவர் சொன்னதை மனதில் அசை போட, அசை போட அது ஒரு சிறந்த யோசனையாகவே எனக்கும் என் மனைவிக்கும் பட்டது. அடுத்த சில தினங்களில் யோசனையை அமல்படுத்த முடியுமா என்று ஆராய, எங்கள் ஊர் கிளையில் வங்கி மானேஜராக இருந்த நண்பர் ஒருவரைப் போய் பார்த்தோம். "இரண்டு ஏற்றுமதி ஆர்டர்களை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், என் வங்கியின் மூலமே என்னால் உங்களுக்கு தேவையான கடன் உதவியை பெற்றுத்தர முடியும்" என்று கூறினார்.

பல முறை எங்கள் நிறுவனத்தின் பொருட்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பிடிக்க வேண்டி, வளளகுடா நாடுகளுக்கு சென்றுவந்த ஆநுபவம் உண்டு என்பதனால், என் நண்பர் சொன்னதுபோல் இரண்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிற தைரியத்தில், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு ஏற்றுமதி கம்பெனியை ரிஜிஸ்டர் செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி கம்பெனி நிலைக்கவில்லை. வங்கி தலைமையகத்திலிருந்து கடன் சாங்ஷன் ஆகி வருவதற்கு இடைப்பட்ட இரண்டு மாதங்களில், என்னென்னவோ நடந்து முடிந்தன. நான் வேலையை ராஜினாமா செய்த சில வாரங்களில் "மலேசியா இரண்டு மூன்று ஆண்டுகளாவது நீடிக்க கூடிய பொருளாதார மந்த நிலையை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்" என்று சில வெளிநாட்டு செய்தி மையங்கள் கருத்து வெளியிட்டன. அதை தொடர்ந்து ஒரு மாதத்தில் "நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள போவது உண்மையே" என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டு, நாட்டுப் பிரதமரே நிலமையை ஊர்ஜிதப் படுத்தினார். வங்கிகள் யாவும் தத்தம் கடன் கொள்கைகளில் மாறுதல்களை கொண்டுவந்தன. எங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்க பட்டது. எங்கள் ஏற்றுமதி திட்டமும் கருவிலேயே மாண்டது.

துபாயில் வேலை

அந்த கால கட்டத்தில் இருந்த வேலையையும் விட்டு விட்டு, அன்றாடச் செலவுக்கு கூட பணம் இல்லாது, என்ன செய்வதென்று புரியாது குழம்பி தவித்து கொண்டிருந்தபோது, தூபாயில் எனக்கு நன்கு பரிச்சயமான, என் பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான ஒரு பெரிய அரபு நிறுவனத்தார், நான் விரும்பினால் தூபாயில் அவர்களின் உணவு பொருட்கள் இறக்குமதி, வினியோகப் பிரிவில் எனக்கு "சேல்ஸ் & மார்கெட்டிங் மானேஜர்" பதவியில் வேலை தருவதாகக் கூறி என்னை வற்புறுத்தி அழைத்தனர்.

குடும்பத்தை கோலாலம்பூரில் தனியே விட்டுவிட்டுப் போக எனக்கு மனமில்லை என்றாலும், வேறு வழி இல்லாது "மூன்று வருடங்களுக்கு மட்டும்" என்கிற நிபந்தனையின் பேரில் தூபாய்க்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் 22 பிரிவுகளில், என்னோடு இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். அரபு நாடுகளில் வசிப்பது என்பது ஒரு நாளுக்கு ஒரு நாள் எந்த வித்தியாசமும் இல்லாது, ஏதோ அரைத் தூக்கத்தில் நிகழ்வுகள் நடப்பதுபோன்ற ஒரு மாதிரி, மாயையான வாழ்க்கை அநுபவம்.

வேலைக்கென்று நீங்கள் அங்கு சென்ற முதல் நாளே உங்கள் பாஸ்போர்ட்டை நிறுவனத்தார் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு வேலை, வேலை, வேலை என்று வேலையைத் தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவுமே நிகழாது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றாலும் முதல் ஆறு நாட்கள் செய்த வேலையின் கலைப்பு தீர உறங்கத்தான் சொல்லும். இரவு நேரங்களில் வீடியோவில் தமிழ், மலயாள, இந்தி திரைப்படங்கள். வியாழ வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்களோடு பெர்மிட்டில் வாங்கிய விஸ்கி, ரம். அவ்வப்போது சிறிது ஷாப்பிங். வட இந்தியர்களின் பாடு, தென் இந்தியர்களை விட சிறிது பெட்டர் - நவராத்திரியின் போது டாண்டியா ஆட்டம் இருக்கும், மாதம் ஒருமுறை ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் பார்ட்டி கொடுத்து கொள்வார்கள். அதற்கு மேல் எதுவுமே கிடையாது. பணம் மட்டும் வங்கி அக்கவுண்டில் மாதாமாதம் சிறிது, சிறிதாக சேர்ந்து கொண்டே வரும்.

இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமேயானால் அதற்கு இலகுவில் விடை கிடைக்காது. சில சமயம் அந்த வாழ்க்கையும் ஒரு அழகான வாழ்க்கை போலத் தோன்றும், சில சமயம் எதுவுமே வாழாதது போலவும் தோன்றும். பிரச்சனையற்ற சுதந்திரம் இருப்பது போல ஒரு நாள் மனதிற்கு படும். மறுநாள் இனம் புரியாத சோகம் நம்மை ஆட்கொண்டு மனதை ரனப் படுத்தும். அங்கு நான் பார்த்த ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவை மையமாக வைத்து ஏதோ ஒரு கனவு இருந்தது. ஒருவர் மூன்று காண்டிராக்ட் (ஒரு காண்டிராக்ட் என்பது இரண்டு வருடம்) தூபாயில் வேலை செய்துவிட்டு, சேமிக்கும் பணத்தில் பரோடாவில் தன் சகோதரரோடு சேர்ந்து வீடு கட்டி கொடுக்கும் தொழில் ஈடுபடப் போவதாகச் சொன்னார், மற்றொருவர் இன்னும் சிறிது பணம் சேர்ந்தவுடன் பூனாவில் டிராவல் ஏஜன்சி துவக்க இருப்பதாகச் சொல்வார், ஒருவர் பம்பாயில் தான் வாங்கிப் போட்டிருந்த இரண்டு ப்ளாட்டுகளின் விலை அரைக் கோடி ரூபாயைத் தாண்டின மறு கனமே தாயகம் திரும்பி விடப்போவதாக சொல்லி இருந்தார். மற்றோருவர் கேரளாவில் ஒன்பது அறைகளுடன் அவர் கட்டிய வீட்டின் புகைப்படங்களை காண்பித்து இன்னும் ஒரு காண்டிராக்டை முடித்துக் கொண்டு அவ்வீட்டில் குடிபுகப் போவதாக கூறுவார்.

ஆனால் இப்படிச் சொன்ன என் நண்பர்கள் ஒருவர்கூட அவர்களாக தாயகம் திரும்பவில்லை. நான் தூபாயை விட்டு வந்து 15 வருடங்கள ஆகின்றது, பம்பாயில் என் நண்பரின் ப்ளாட்டுகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயை தாண்டி விட்டது, ஆனால் அவர் இன்னமும் தூபாயில்தான் இருந்து வருகிறார். கேரளாவில் வீடு வைத்திருந்த நண்பருக்கு சென்ற வருடம் மாரடைப்பு ஏற்பட்டு இனி வேலை செய்ய முடியாது என்கிற நிலையில் இப்போதுதான் இந்தியா திரும்பியுள்ளார்.

திரும்பாததற்கான காரணங்கள்

வேலை நிமித்தமாக தூபாயை மையமாக வைத்து ஐக்கிய அரசு கூட்டரசின் எல்லா நகரங்களோடு, குவைத், சவுதி அரேபியா, பகரேன், கட்டார், ஓமான் ஆகிய பிற வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்களுக்கும் பற்பல முறை பயணம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் எனக்கு கிட்டின. இப்படி மேற்கொள்ள பட்ட பயணங்களின் போது, தனியார் நிறுவனங்களில் நடுநிலை மற்றும் மேல்மட்ட நிலைகளில் நிர்வாகஸ்தர்களாக இருந்த நூற்றுக்கனக்கான இந்தியர்களை சந்தித்து அணுக்கமாக பழகக்கூடிய வாய்ப்புக்களும் எனக்கு நிறைய கிட்டின. இப்படி சந்தித்து, அறிமுகமாகி, அளவளாவிய நண்பர்களோடு அடிக்கடி பகிரப்பட்ட விஷயங்களில் ' போதுமான பணம் சம்பாதித்த பிறகும்கூட அவர்கள் ஏன் தாய் நாட்டிற்கு திரும்பாமல் அரபு நாடுகளில் வாழ்கிறார்கள்' என்பதும் ஒன்று. அதற்கு அவர்கள் பலரும் பகிர்ந்து கொண்ட காரணங்களில் கீழ்வரும் நான்கு காரணங்கள் பரவலாக மீண்டும், மீண்டும் கோடி காண்பிக்க பட்டன:-

1). குடும்ப பெருமிதம். "என் மகன் (அல்லது மாப்பிள்ளை) வெளிநாட்டில் வேலை செய்கிறார்" என்று தாயகத்தில் இருக்கும் குடும்பத்தாரின் பெருமிதம். அதனால் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இயல்பாக ஏற்படும் 'எதிர்பார்ப்பு தாக்கம்'. இதனால் எப்படி குடும்பத்தார்களுக்கு தங்கள் எண்ணத்தை புரிய வைத்து நாடு திரும்புவது என்கிற குழப்பம்.

2). தாயகம் திரும்பின பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி. அப்படியே இதுதான் செய்யப் போகிறோம் என்ற திட்டம் மனதில் இருந்தாலும், அதை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்கிற நடைமுறை அமல்திட்டம் இருப்பதில்லை. அப்படியே அமல்திட்டம் இருந்தாலும் "போடும் திட்டம் தோல்வியுற்றால் என்ன செய்வது ?" என்கிற பயம்.

3). மாறுதல்களை அனுசரிக்க முடியாத வயதை எட்டி விடுதல். 30 வயதில் புலம்பெயரலால் ஏற்படும் மாறுதல்களை ஒருவர் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதே புலம்பெயரலை 45 வயதில் மேற்கொண்டால்? புதுச் சூழ்நிலையை அனுசரித்துப் போகுதல் கடினமானதாக அமைந்து விடுதல்.

4). வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பிரச்சனையற்ற வாழ்க்கை சூழல் (COMFORT ZONE). "இந்த சூழலை விட்டு ஏன் வெளியேற ?" எனும் ஒர் எதார்த்தம்.

இன்னுமொரு காண்டிராக்ட்

இதனால் 'இன்னுமொரு காண்டிராக்ட். இன்னுமொரு காண்டிராக்ட்' என்று நாட்கள் கடந்து விடுகின்றன. இந்த 'இன்னுமொரு காண்டிராக்ட்' எனும் தாக்கம் தூபாயின் ஒரு திர்காம் நாணயத்திற்கு ஒரு மலேசிய ரிங்கிட் மட்டும் எனும் நாணய பரிமாற்றத்திற்கு உட்பட்ட என்னையே விடவில்லை. மூன்று வருடங்கள் மட்டும் தூபாயில் வேலை செய்யப் போவதாக சொல்லி வந்த நான், ஆறு வருடங்கள் கழித்துதான் மலேசியா திரும்பினேன். அப்படி இருக்க ஒரு திர்காமிற்கு 10 - 12 இந்திய ரூபாய் எனும் கணக்கு உடைய இந்தியர்களிடம் என்னத்தை சொல்வது ?

தூபாயில் எனது முதல் மூன்றாண்டுகள் முடியும் தருவாயில் நான் வேலை செய்த அரபு நிறுவனத்தினர் என் சேவையை தொடர வைக்க வேண்டி, அவர்களோடு நான் வேலையை தொடர்ந்தால் எனக்கு சம்பள உயர்வும், என் 'பாச்சிலர் குவார்ட்டர்ஸ்க்கு' பதிலாக 3 அறைகளையுடைய 'பர்னிஷ்டு அப்பார்ட்மண்டும்' கம்பெனிச் செலவில் கொடுப்பதாக கூறினர். இதை நான் கோலாலம்பூருக்கு வேலை நிமித்தமாக வந்திருந்தபோது என் குடும்பத்தார் முன்னினையில் என் மனைவியிடம் சொல்ல, அவர் உடனே "நீங்கள் எதற்கு மலேசியா திரும்புகிறீர்கள்? நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உங்களோடு தூபாய் வந்துவிடுகிறேன்" என்றார். உடனே குடும்பத்தார் யாவரும் "நல்ல யோசனை!" என்று ஒருமித்து குரல் எழுப்பினர். அந்த கனப் பொழுதில் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக சிந்தியாத, ஒரு அரைத் தீட்சண்ய நிலையில், நான் 'சரி' என்கிற வகையில் மண்டையை மண்டையை ஆட்ட, மடை திறந்த வெள்ளம்போல் நிகழ்வுகள் சடசடவென அதையடுத்து நிகழ்ந்தன. அடுத்த நான்கு மாதங்களில் என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் என்னோடு தூபாய் வந்து சேர்ந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் வாழ்க்கை தூபாயிலேயே கழிந்தது.

ஆனால் எனது மூன்றாவது காண்டிராக்டின் போது என் உள்மனது என்னை அரித்தெடுக்க ஆரம்பித்தது. "நமக்கு 38 வயது ஆகிவிட்டது. இதற்கு அப்புறமும் நாம் மலேசியா திரும்பி நாம் கண்ட கனவுப்படி ஒரு தொழிலை ஆரம்பிக்கா விட்டால், தொழில் முனைவராகும் நமது கனவு கடைசிவரை வெறும் கனவாகவே இருந்துவிடும்" என்கிற ஞானோதயம் என் மனதில் ஆழமாக எழும்ப, "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்கிற குருட்டு தைரியத்தில், என் காண்டிராக்ட் முடித்த கையோடு மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக் கொண்டு, குடும்பத்தோடு மலேசியா வந்து சேர்ந்தேன். ஒரு சிறு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் என் குடும்பம் துபாய்க்கு வந்து என் பிள்ளைகள் அங்குள்ள ஆங்கில பள்ளிக்கூடங்களில் படிக்கப் போய், மலேசியா திரும்பிய பிறகு அவர்களை திரும்ப அரசாங்க மலாய் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பித்தால் படிப்பு எங்கு கெட்டுவிடுமோ என்கிற பயத்தில், ஆங்கில மீடியத்தில் பாடம் நடத்த பட்ட தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட நேர்ந்தது. இதனால் மலேசியா திரும்பிய அடுத்த ஒன்பது வருடங்களுக்கு எனக்கு மாதாமாதம் சராசரி US$ 450 கூடுதலாக செலவாகியது. இதை நான் பல வருடங்களுக்கு முன் யோசியாது ஒரு முறை மண்டையை ஆட்டினதற்கான அபராதம் என்று நினைத்து கொள்வது உண்டு.

எதனில் ரிஸ்க்கு இல்லை ?

இந்த பகுதியை முடிக்குமுன்னர் புலம்பெயருதல் பற்றி நான் ஒரு கண்ட ஒரு சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மலேசியாவில் வாழப் பிடிக்காமல் லட்சக்கணக்கான மலேசியக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினர் வெளிநாடுகளில் புலம்பெயந்துள்ளனர். அவர்களில் சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வப்போது புலம்பெயந்த நாட்டில் வாழப் பிடிக்காமல், மலேசியா திரும்பிவிடுவதும் உண்டு. அப்படி குடும்ப காரணங்களுக்காக 12 வருடங்கள் கழித்து பிள்ளை குட்டியோடு மலேசியா திரும்பிய ஒரு சீனரை ஒரு சக நண்பருடைய விருந்தில் பார்க்கும்படி நேர்ந்தது. பேச்சுவார்த்தையில் எனது இந்திய நண்பர் வந்திருந்தவரிடம் கேட்டார் "இந்த வயதில், அதுவும் 12 வருடங்கள் வெளி நாட்டில் வசித்துவிட்டு, குடும்பத்தோடு திரும்புகிறீர்களே, இங்கு என்ன செய்வீர்கள்? இது ஒரு பெரிய ரிஸ்க்காக உங்களுக்கு படவில்லையா ?" என்று. அதற்கு அந்த 49 வயது சீனர் அளித்த பதில் சீனர்களின் இயல்பை அப்பட்டமாக காட்டுவதாக அமைந்தது.

"WHAT IS NOT A RISK FRIEND ?? TO EXIST IS A RISK !!".


தொடரும்

8 comments:

 1. படித்தேன் ஐயா என்று ஒரு கமெண்ட், அவ்வளவே.

  ReplyDelete
 2. //அரபு நாடுகளில் வசிப்பது என்பது ஒரு நாளுக்கு ஒரு நாள் எந்த வித்தியாசமும் இல்லாது, ஏதோ அரைத் தூக்கத்தில் நிகழ்வுகள் நடப்பதுபோன்ற ஒரு மாதிரி, மாயையான வாழ்க்கை அநுபவம்.//

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. மிகவும் நல்ல பதிவு சுந்தர்.

  இந்தப் பதிவிற்குக் கிடைத்திருக்கும் ஓட்டு எண்ணிக்கையைப் பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும்.

  இந்தப் பதிவிற்கு நான் பதில் சொல்வதைவிட மலேசிய எழுத்தாளரும் ராயர் காப்பிக்குழுமத்தில் உலா வருபவருமான டாக்டர். இரெ.கார்த்திகேசு அவர்கள் பதில் தருவதே சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.

  மலேசியா ராஜசேகரன் என்பவரைப் பற்றி நான் அறிந்ததில்லை. அவரின் படைப்புகளை தேடிப் பார்க்கிறேன்.

  நன்றி சுந்தர்.

  ReplyDelete
 4. நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி.

  இவ்வள்வு விரிவாக, சீரியஸாக எழுதும் திரு. ராஜசேகரனுக்கு ஊக்கம் அளிப்பதற்காக, தான் படித்தேன் என்று பதிவு செய்யும் பத்ரிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ். சீரியஸான பதிவுகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போனதால்தான் சீரியஸாக சிந்திக்கும் வலைப்பதிவர்கள் பலரும் சீரியஸ் திவிரவாதிகளாய் ஆகிப்போனது எனக்குத் தெரியும்.

  மூர்த்தி தமிழ்மணத்தில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து பதிவின் தரத்தை கணக்கிடக்கூடாது என்று நான் நம்பி வந்தேன் - அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பிரதிபலிப்பதால்.

  ஆனால் திரு. ராஜசேகரனின் பதிவுகளுக்கு கிடைத்துவரும் ஓரளவு ஆதரவு அந்த எண்ண்த்தை பொய்யாக்குகிறது. என்னைப் போன்ற
  வலைப்பதிவனுக்கு ஃப்ளூக்கில் கிடைத்த நல்ல கட்டுரைகள் இவை.

  எனக்குத் தெரிந்து திரு.ராஜசேகரன் எழுத்தாளக் கூட்டங்களில் புழங்குபவரல்ல. இதில் தெரியும் உண்மைகள் சராசரி மலேசிய இந்தியனின் பொதுப்புத்திக்கு எட்டிய
  தினவாழ்வு உண்மைகள். இலக்கியவாதி/எழுத்தாளர்/ திறனாய்வு /விமரிசக முகபடாம் மாட்டிக் கொண்டால் நமக்குத்தான் தலைகால் புரிவதில்லையே :-)

  ReplyDelete
 5. அனுபவித்து சொல்லியிருக்கிறார். தன் அனுபவம் பிறருக்குப் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் சொல்கிறார். திரு. ராஜசேகரனுக்குப் பாராட்டுகளும் நன்றியும்.

  தொடருங்கள்.

  ReplyDelete
 6. நன்றாக சொல்லியிருக்கிறார். புலம் பெயர்பவர்களின் மனக்கண்ணாடியாக இந்த பதிவு அமைந்துள்ளது.

  ஆனா பாருங்க இதுக்கும் "-" குத்தறவங்கள என்ன சொல்றது.

  ReplyDelete
 7. உங்களைப் போல் வாழ்க்கையை நன்கு வாழ்தவர்கள் அவர்கள் அனுபவத்தை தெளிவாக சொன்னால், நாங்கள் எல்லாம் வழிப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொரு பாகத்தையும் காத்திருந்து படித்து வருகிறேன்

  ReplyDelete
 8. //ஆனா பாருங்க இதுக்கும் "-" குத்தறவங்கள என்ன சொல்றது.//

  வாங்க நட்சஹ்திரம் கணேசு,

  - குத்தறவங்களை ஒண்ணும் சொல்ல வேணாம். சனநாயகம்...சனநாயக்ம் வேல செய்யுது. பேசாத வேடிக்கை பாருங்க.

  விமரிசனத்துக்கெல்லாம் கவலைபடணுமுண்ணா, மதிப்பீட்டு மீயுரையை நீக்கணும். கமெண்ட்டு பொட்டியை மூடறது அடுத்த லெவல். வலைப்பூவையே ஊத்தி மூடறது அதுக்கடுத்து.

  அதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா :-)

  நீங்க அங்கிட்டு பட்டைய கிளப்புங்கப்பு :-)

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...