Tuesday, November 29, 2005

வேட்டை


பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்கும் தட்டுப்பட்டு கலவரத்தை கிளப்பியது. லெதர் சோஃபாவும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் ஒயர்களும் நினைவுக்கு வந்து கலவரமாக்கின. போதாதற்கு சிநேகிதி வீட்டில் வாஷருக்கு வரும் தண்ணீர் பைப் கடிக்கப்பட்டு வீடெல்லாம்
"தமிழ்நாடு" ஆன செய்தி பீதியைக் கிளப்பியது.

ஊரிலென்றால் தேங்காய் துண்டத்தையோ, மற்ற கவிச்சிகளையோ பொறியில் வைத்தால் லபக்கென்று ஓரிரவில் பிடிபடும். இங்கே பரிட்சை அட்டைக்கு போடும் க்ளிப் போல கிடைத்த ஒரு பொறியில், சீஸ் வைத்து காலையில் பார்த்தால், சீஸ் மட்டும் தின்னப்பட்டு காலியாய் கிடந்த பொறியை பார்த்தபோது வெறியாய் வந்தது. போனாப்போகுது என்று ஒரு பூனை வளர்க்கலாமா என்று கூட ஒரு யோசனை. கரப்பு இருந்தாலாவது, அழுக்கு இருப்பதை நாசுக்காக, அதர்ஷ்டக்கரப்பு/லக்ஷ்மிவண்டு என்று சொல்லிக் கொள்ளலாம். எலி இருப்பதை எப்படி சொல்ல..??. எலி விஷம் வைத்து பிடிக்கலாம் என்றால், அது பாட்டுக்கு எங்கேயாவது மறைவிடத்தில் போய் மரித்து விட்டால், பிறகு நாற்றம் தாங்காதே என்றும் ஒரு தலைவேதனை வேறு.

இறுதியாக டார்கெட் ஸ்டோரில் ஒரு ஸ்டிக்கர் அட்டை ( Glue pad) கிடைத்தது. வாங்கி வந்த வீட்டம்மாவை நக்கலாக பார்த்து, "எலி இதில் மாட்டுமா..? அது ஏற்கனவே சீரியல், சீஸ், தேங்காய் என்று சாப்பிட்டுவிட்டு கொழுத்துப் போய் படம் காட்டுகிறது" என்றேன். வழக்கம்போல அலட்சியப்படுத்திவிட்டு வைத்தாள்.

காலையில் பார்த்தால், பயாலஜி லேபில் பாடம் செய்யப்பட்டது போல. சிலுவையில் குப்புற அறையப்பட்டது போல மாட்டி இருந்தார். "பிடிப்பதுதான் என் வேலை. அப்புறப்படுத்துவது உங்கள் பாடு" என்றுவிட்டு அம்மையார் ஜூட்.. நம்மூரில் என்றால் பக்கத்து வீட்டு கொல்லையில் சத்தம் போடாமல் தூக்கி எறிந்துவிட்டு நல்லபிள்ளையாய் ஆபீஸ் போகலாம். இங்கே அதைச் செய்தால் பின்னால் "மாமா" வருவான்.

அலைந்தேன்.... அலைந்தேன்.... என் வீட்டுக்கு பக்கத்தில் அமெரிக்கன் ஆற்றில் கிளை நதி/ வெள்ள வடிஆறு இருக்கிறது. அதில் வீசலாம் என்றால் கம்யூனிட்டியே கொதிக்கும். என் வீட்டு குப்பை டப்பாவில் போடலாம் என்றால் வெள்ளிக்கிழமை, யானை தன் தலையில் மண்ணை கொட்டிக் கொள்வது போல குப்பைகளை கொட்டிக் கொள்ளும், லாரி வருவதற்குள் ஏரியாவே மணம் வீசும். எடுத்து ஒரு பாலித்தீன் உறைக்குள் போட்டு இறுகக்கக் கட்டி, காரின் முன்னே உள்ள விண்ட்ஷீல்ட் வைப்பரில் கட்டி, கிட்டத்தட்ட சவ ஊர்வலம் போல ஓட்டி வந்து, அருகாமையில் அடிக்கடி சுத்தம் செய்யப்படும் ஒரு குப்பைத்தொட்டியில் கடாசி விட்டு இப்போதான் வந்தேன்.

இறந்தது எலியானாலும் அதுவும் பிணந்தானே. அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் ரிலீஃபாக இருந்தது. என் தந்தையாருக்கு இதே பிரச்சினைதான். தெரிந்தவர்கள் வீடுகளில் துக்கத்துக்கு போனால், பிணம் எடுக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார். பசி பொறுக்காமல், சொந்தக்காரர்கள் எல்லாரும் வருகிறார்களோ இல்லையோ, அவசரம் அவசரமாக டேக் ஆஃப் ஆக்கி விடுவார். இதற்குப் பயந்து கொண்டே, இப்போதெல்லாம் அவரை அந்த சமயங்களில் எப்பாடு பட்டாவது ஏதாவது சாப்பிட வைத்து விடுகிறார்கள்.

4 comments:

 1. எங்க வூட்டுலயும் இந்த பிரச்சனை இருந்தது. இதுக்காகவே இந்தியாவுலேர்ந்து மார்டின் வாங்கி வந்தோம் ஆனா ஒரு எலி இரண்டு எலியாகிடுச்சி. அப்புறம் உள்ளூர் மருந்து வாங்கி போட்ட அப்புறம் தான் மலையேறிச்சு

  ReplyDelete
 2. //இந்தியாவுலேர்ந்து மார்டின் வாங்கி வந்தோம் ஆனா ஒரு எலி இரண்டு எலியாகிடுச்சி//

  அட...மார்டின் எலிக்கு ரொம்ப பிடிக்குமா..??

  ReplyDelete
 3. ஹூம். பின்னூட்டமிட முடியாம இப்ப நாலாவது தடவையா முயற்சி பண்றேன். பார்க்கலாம்.

  http://maraththadi.com/article.asp?id=680

  சுந்தர்.

  ReplyDelete
 4. அந்தச் சுட்டியை நேரமிருந்தா படிச்சுப் பாருங்க. எல்லாருக்கும் எலி பிடிச்ச அனுபவம் இருக்கும். எனக்கும் இருக்கு. அதை ரொம்ப நாள் முன்னாடி மரத்தடில எழுதினது.

  நன்றி.

  ReplyDelete

காலா - இருளும் ஒளியும்

இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...