Monday, November 14, 2005

கிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி


அறிவிப்பு

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து


மலேசியாவின் நடைமுறை நிலைமை, பூமிபுத்ரர்களுக்கான முதல் சலுகை, பல்கலைக்கழக படிப்புமுறை, இங்குள்ளவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான காரணங்கள், மலேசியத் தமிழர்களின் அவலநிலை, இங்கு இந்தியர்கள் எப்படி வந்து சேர்ந்தனர் என்பதை உணர்த்தும் பூர்வாங்க சரித்திர விளக்கம், சுதந்திரத்தை ஒட்டிய காலக் கட்டம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறை, 1969ல் நடந்த இனக் கலவரம், அதையடுத்து அமல்படுத்தபட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை (நியூ இக்கோனோமிக் போலிசி) அதன்பிறகு இன உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், சீன வம்சாவளியினர் மலாயா வந்து சேர்ந்ததை உணர்த்தும் விளக்கம், வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார வளப்பம், அவர்களின் கலாச்சார நடைமுறை இயல்புகள், ஒரு தெளிந்த செட்டியாரின் அறிவுரை, "வேறு எந்த நாட்டிலாவது புலம் பெயரலாமா?" என்று எங்கள் மனங்களில் ஓடிய எண்ண ஓட்டம், குடும்பத்தில் நடந்த விபத்து, அதையடுத்து புலம் பெயரல் பற்றி நாங்கள் எடுத்த முடிவு, தொழில்புரிவது என்று கிளம்பி நான் அடைந்த தோல்வி, வளைகுடாவில் வேலைக்கு சென்றது, அங்கு பிற NRI களோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, நாங்கள் மலேசியா திரும்பியது, ஏற்றுமதி தொழில் ஆரம்பித்தது என்று விற்பதற்கென்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் கிழட்டு அநுபவங்களின் கடந்த பத்து பகுதிகளில் உங்களிடம் விற்றாகி விட்டது.



இதற்குமேல் விற்பதற்கென்று ஏதும் உளதா என்று வியாபாரப் பையின் அடியை தடவினால் "வாழ்க்கையைப் பற்றிய என் தனிமனித எண்ணங்கள்" என்கிற ஒரு சிறு பொட்டலம் மட்டும் தட்டுப் படுகிறது . இதை விற்றால் "ராஜசேகரன் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார் !!" என்று வாசகர்கள் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்கிற தயக்கத்திற்கு நடுவில் அதில் இருந்து ஒரே ஒரு அம்சத்தை மட்டும் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். பிரயோஜனப் படுகிறதா என்று பாருங்கள்.

பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் சிந்திப்பதில்லை. பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை சிந்திப்போம். ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடைபோடுபவையாக அமையும். அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.

இது நம் யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு என்றாலும், பிறந்த நாட்டிலேயே சுற்றங்களோடும், நட்ப்புக்களோடும் குழுமி வாழ்வோருக்கு இந்த கூற்றின் தாக்கம் மிகவும் யதார்த்தமான ஒன்று. ஆனால் பிற நாடுகளுக்கு ஒரு 25 வயதிலிருந்து, 35 வயதுக்குள் புலம் பெயரும் நணபர்களுக்கு இதன் தாக்கம் மிக ஆழமான பின் விளைவுகளை கொண்டு வரும் என்பது ஒரு அசைக்க முடியாத, ஆட்சேபிக்க முடியாத உண்மை. காரணம் ஐந்து பத்து வருடங்களை தாண்டி யோசியாத வயதில் வேறு ஒரு நாட்டிற்கு குஜாலாக புலம் பெயர்ந்து விட்டு, ஒரு பத்து வருடங்கள் அங்கு வேலை செய்த பிறகு, நாம் பிறந்து வளர்ந்த நாட்டை திரும்பிப் பார்த்தால், அங்கு நாம் விட்டு வந்த சூழ்நிலைகள் அத்தனையும் மாறிப் போயிருக்கும். அதே சமயம் நாம் அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிற நாட்டு வாழ்க்கை சூழலிலிருந்தும் இலகுவில் விடுபட முடியாத மாறுதல்கள் நம்மைச் சுற்றி நடந்தேறியிருக்கும். நாம் செய்து வரும் வேலை நிலை பெற்றிருக்கும். சம்பாத்தியம் கூடியிருக்கும். பிள்ளை குட்டி என்று நம் குடும்ப அமைப்பு மாறியிருக்கும். ஏன் நம் தனி மனித சிந்தனையே 'அடுத்த சில வருடங்கள்' எனும் இளமையின் யதார்த்த நிலையிலிருந்து, 'தலைமுறை கணக்கு' என்கிற முதுமை நிலயை ஒத்து ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த கால கட்டத்தில் நீங்கள் துணிந்து எந்த வாழ்க்கை மாறுதல்களையும் எடுக்க உங்கள் மனதும் விடாது, சூழலும் விடாது, சுற்றமும் விடாது. அப்படியானால் "புலம் பெயரல், வெளி நாட்டு வேலை என்று வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டிகள்தான் என்ன? தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வதுதான் எப்படி ?" என்கிற கேள்விக்கு பலரும் பலவித பதில்கள் வைத்திருப்பர்.



இதில் என் சிந்தனை இதுதான். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொண்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கும் முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல. ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து அதற்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள். தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி.

இதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன். 32 வயதில் நான் வேலையை இழந்து கோலாலம்பூரில் தவித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, 38 வயதில் தூபாயில் வேலை செய்து கொண்டிருந்த போதும் சரி, 47 வயதில் பிள்ளைகள் படிப்பிற்கென்று எனக்கு அதிகமான பணம் தேவைப் பட்ட போதும் சரி, இப்போது 53 வயதில் நான் முதுமையின் வாசலில் நின்று கொண்டு இருக்கும் போதும் சரி "என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் ?" என்று நான் ஒரு பட்டியலை அமைத்திருந்தால், அது இப்படித்தான் இருந்திருக்கும் :-

1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.

2). பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.

3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.

4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.

5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்தல்.

இதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட லிஸ்ட்டு. இந்த மாதிரி நீங்களும் ஒரு லிஸ்ட்டை போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால், லிஸ்ட்டை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு

" BE CAREFUL OF WHAT YOU WISH FOR ! YOU MIGHT GET IT !!" .

இதுகுறித்து உங்களுக்கு தெரிய வாய்பில்லாத ஒரு குட்டி விஷயத்தை இங்கு பகிர்ந்துவிட்டு செல்கிறேன்....... மலேசியாவில் உள்ள 'ட்வின் டவர்ஸ்' ஐ கட்டிய ஆனந்த கிருஷ்ணனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா ? அவரின் வயது 65. மொத்த சொத்து மதிப்பு US$ 2,000 MILLION ஐ தாண்டி சில வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் ப்போர்ப்ஸ் வர்த்தக இதல் அவரை மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்த வருடம் மதிப்பிட்டிருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். அதில் அந்த மூத்த ஆண் பிள்ளை என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ? அவர் முற்றும் துறந்த, 'புத்தம் சரணம், கட்ச்சாமி' என தியானத்தை விரும்பும் ஒரு புத்த பிக்கு !!!!!! ஏன்? எப்படி? எதனால்? காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், தன் மகன் இப்படி ஆவார் என்று ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், அவர் தன் வாழ்க்கையை நிச்சயமாக வேறு விதமாக அமைத்து கொண்டு இருந்திருப்பார் என்பது.




== முற்றும் ==

சரி, தமிழ் வலையுலக நண்பர்களே கிழட்டு அநுபவங்கள் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. இத்துடன் என் ஊட ஈடுபாட்டை நிறுத்திக் கொண்டு விடை பெற நினைக்கிறேன். இதன் பின்னர் பகிர்ந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் என்று என் மனதில் ஏதாவது தோன்றினால், அப்போது வந்து எண்ணங்களை பகிர்ந்து செல்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து எழுத என்னிடம் சரக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த தொடரின் ஆறாவது பகுதியில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று முடிச்சு அவிழ்ந்த நிலையில் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டி அடுத்த சில தினங்களில் 'முக்காலே மூணு வீசம் இந்தியன்' என்கிற தலைப்பில் ஒரு ஒற்றைக் கட்டுரையை இங்கு பதிவு செய்ய வருவேன். நேரமிருந்தால் வந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள். இதற்கு முன்பு நான் எழுதிய பத்து பகுதிகளுக்கும் பின்னூட்டங்கள் எழுதிய அன்பு, துளசி கோபால், வாய்ஸ் ஆப் விங்ஸ், தேன் துளி, மதி கந்தசாமி, தங்கமணி, கரிகாலன், கரைவேட்டி, பக்கோடா பக, பத்ரி, டுபுக்கு, ஆள்தோட்டபூ, ஓம்தட்சட், பிரகாஜ் பழனி, ஸ்ரீரங்கன், ராஜீ, பெத்த ராயுடூ, சிகிரி, தருமி, ஜோ, டி ராஜ், ரவிசங்கர், ப்பீடிபோய், பாரதி, சுதர்ஸன், மூர்த்தி, காசி, கோ. கணேஷ் யாவரும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களின் பின்னூட்ட பதிவுகளுக்கு பதிலுரைத்து அளாவி இருக்க வேண்டும். செய்யவில்லை. சாரி. இந்த பகுதிக்கு சுந்தரராஜனோடு சேர்ந்து நானும் பின்னூட்டங்களுக்கு பதிலுரைக்கிறேன்.

இத்தோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது - எனக்கு இணையத்தில் தமிழ் ஊடங்கள் என்ற ஒரு கூறு இருப்பதைக் காண்பித்து, ஈ-கலப்பை எனும் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது எனும் செய்முறையை சொல்லிக் கொடுத்து, நான் எழுதிய ஒவ்வொறு பதிப்புகளிலும் இருந்த பெருவாரியான ஸ்பெல்லிங் மற்றும் வல்லின மெல்லின பிழைகளை திருத்தி, நான் அனுப்பிய பதிவுகளில் உபயோகப் படுத்திய ஆங்கிலச் சொற்களை எல்லாம் கூடியவரை தமிழாக்கம் செய்து, என் எழுத்துக்களை எடிட் பண்ணி, கொம்போஸ் செய்து, என் சிந்தனைகள் எழுத்து வடிவம் பெற ஊக்குவித்து, அவரின் இணைய நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து, உற்ச்சாகப் படுத்தி, 25 வருடங்களில் தமிழிலில் ஒரு கடிதம்கூட எழுதாத என்னாலும் தமிழில் நான்கு வரிகள் எழுத முடியும் என்று எனக்குள் இருந்த என் தமிழ்த்தகுதியை அடையாளம் காட்டிய என் இள நண்பர் சுந்தரராஜனுக்கு, ஒரு ஆசானுக்கு மாணக்கன் படும் ஆழ்ந்த நன்றி கடனை நான் பட்டிருக்கிறேன் என்பதை பாசத்தோடு யாவரும் அறிய கூறி மகிழ்கிறேன் (சுந்தர், எனக்காக தயவு செய்து, இந்த வாக்கியத்தையும் சேர்த்து இந்த பாராவில் எதையுமே எடிட் பண்ணாமல் இப்படியே பதிப்பித்து விடுங்கள். நன்றி).

வணக்கம்.

உங்கள் நண்பன்,

மலேசியா ராஜசேகரன்

12 comments:

  1. இதுவரை வந்த பகுதிகளிலே இந்த முடிவுரைப்பகுதிதான் ரொம்ப சூஊஊஊஊஊப்பர்.

    ராஜசேகரன்,

    அருமையா சொல்லிட்டீங்க வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணுமுன்னு.

    தமிழ் இணையத் தொடர்பை விட்டுடாம, அப்பப்ப இன்னும் எழுதுங்க.

    இக்கால இளைஞர்களுக்கு நம்ம வாழ்க்கையிலிருந்தும்கூட எதாவது கற்றுக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.

    வாழ்த்துக்கள். நல்லா இருங்க.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. Anonymous9:44 PM

    மனதில் எங்கோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு உங்களோடு. என் வாழ்நாளில் உங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால்...........!

    ReplyDelete
  3. அன்புநிறை ராஜசேகரன், பண்புநிறை சுந்தர்,

    உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள். நீண்ட நாட்களாக உங்கள் உள்ளக் கிடக்கையில் இருந்த விஷயங்களைத் தைரியமாக வெளியுலகுக்குச் சொன்ன உங்களின் செயல் வரவேற்கத் தக்கது. உங்களின் கட்டுரையை ஆரம்பம் முதல் இறுதி வரையில் படித்துப் பயனுற்றேன் என்றால் அது மிகையல்ல.

    ReplyDelete
  4. பயனுள்ள பல புதிய விதயங்களை அறியத்தந்த தொடர். நன்றி இராஜசேகரன், சுந்தர்.

    ReplyDelete
  5. அன்புள்ள ராஜசேகரன்,

    சுவையான, பயனுள்ள தகவல்களையும் எண்ண ஓட்டங்களையும் உள்ளடக்கி, வாழ்கையின் ஓட்டத்தில் பல களங்களில் ஓடிய ஒரு மனிதனின் முதிர்ந்த பின்னோக்குப் பார்வையாக நீங்கள் எழுதியது பாராட்டத்தக்கது. யாருக்கு என்னவோ, எனக்கு மிகவும் தேவைப்படும் பல கருத்துக்களும் வழிகாட்டல்களும் கிடைத்தன. உங்களுக்கும் சுந்தருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. திரு. ராஜசேகரன்: தங்கள் தொடரின் கடைசி பாகத்திற்கும் "விடை பெறும்.." பதிவிற்கும் சேர்த்து ஒரு பின்னூட்டம்.

    முதலில் உங்களுக்கு நன்றி. தங்களின் அனுபவங்களையும் கற்ற பாடங்களையும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதற்கு. முதல் முதலாக கலப்பை மென்பொருளை பயன்படுத்தும் போது ஒரு பக்க கட்டுரையை எழுதவே எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிந்ததே! பல பக்கங்கள் பொறுமையாக எழுதி அதுவும் படிக்க தூண்டும் நடையுடன் எழுதி வந்தீர்கள். அதற்கும் ஒரு பெரிய நன்றி. தங்கள் வயதை அடைந்தவர்கள் பலர் தன் தோல்விகளையும் கற்ற பாடங்களையும் மற்றவர்களிடம், அதுவும் தன்னைவிட இளையவர்களிடம், சொல்வதை விரும்ப மாட்டார்கள். அந்த ஈகோவையும் தாண்டி தன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பயன் படட்டும் என்ற தங்கள் நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள்.

    உங்கள் தொடரில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தன. ஒரே ஒரு நெருடலான சமாசாரம் - இந்தியர்களையும் சீனர்களையும் ஒப்பிட்டது தான். அதைப் பார்த்து கொஞ்சம் வருத்தப்பட்டேன். கோபம் இல்லை. அதன் காரணம் -- உங்களின் perception எனக்கு புரிகிறது. நீங்கள் மலேசிய இந்தியர்களையும் மலேசிய சீனர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். அமெரிக்க இந்தியர்களையும் அமெரிக்க சீனர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. என்னை பொறுத்த வரை இந்த உலகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான். தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தவர்கள் அல்லது வாய்ப்பை உருவாக்கியவர்கள் மேலே வந்து விடுகிறார்கள்.

    இதில் சீனர்கள் உசத்தி, இந்தியர்களால் சீனர்கள் உயரத்தை அடைய முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களை தாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நிச்சயமாக அப்படி எழுதியிருக்க மாட்டீர்கள், உங்கள் மனதில் உள்ள ஆதங்கம் அப்படி வார்த்தைகளாக வெளியே வந்து விட்டது.

    FYI: பொருளாதார புள்ளி விபரங்களின் படி, இந்தியாவின் வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியில் ஏற்கனவே "பாதிக்கு மேலே" இருக்கிறது.

    சீனர்களின் அரசியல் அமைப்பு முறை அவர்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. ஜனநாயகம் கிடையாது. லல்லு பிரசாத் யாதவ், தேவ கௌடா போல குறுக்குபுத்தி கோமாளிகள் கிடையாது. கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சி. பெரும்பாலான குடும்பங்களில் (கட்டாயமாக) ஒரு குழந்தை தான். SARS நோயை பற்றி பத்திரிகைகளிடம் பேசிய மருத்துவரை பல மாதங்கள் காணவில்லை. அந்த மாதிரி அடக்கு முறை ஆட்சி இந்தியாவில் இருந்திருந்தால் இந்தியாவின் GDP சீனாவின் GDP-யை விட பல மடங்கு இருந்திருக்கும். ஆனால் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போமா? தெரியவில்லை.

    ReplyDelete
  7. ராஜசேகரன், உங்களின் இந்த கட்டுரைத் தொடர் மிக வித்தியாசமானதாக நன்றாக அமைந்திருந்தது. ஒரு நெடுநாளைய வெளிநாட்டுவாழ் இந்தியரின் கோணத்தில் நான் தமிழில் இதுவரை எதுவும் படித்ததில்லை, மிக்க நன்றி!

    ReplyDelete
  8. புகழ் மிக்க மனிதர்களின் வாழ்க்கை குறிப்புகளைவிட சாதாரணர்களின் மலரும்
    நினைவுகள் உண்மையும், யதார்த்தமாகவும் இருக்கும் என்று நிரூபித்துவிட்டீர்கள். மேலும் எழுதுங்கள், படிக்க காத்திருக்கிறோம்.
    சுந்தர் உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அருமையான தொடர்..சில நண்பர்கள் 'சுய விமர்சனம்' என்ற முறையில் நல்ல நோக்கத்தோடு எழுதப்பட்ட சில கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டதாகவே நான் நினைக்கிறேன் .பல சீனர்களோடு வேலை செய்வதாலும்,சீனாவுக்கு பல முறை சென்றதாலும் ,சீனர்களோடு பழகுவதாலும் ஐயா எந்த கோணத்தில் சொல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் .மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  10. உங்களின் எல்லா பதிவுகளையும் படித்து வந்தேன். பல நல்ல கருத்துக்கள் சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தன. எழுதிய உங்களுக்கும், பதிவிட்ட சுந்தருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி.

    வழக்கம்போல ஆறாவது பதிவில் வந்த விஷயமும் கண்மூடித்தனமான கருத்துத் தீவிரவாதிகளிடம் சிக்கி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. முகமூடிப் பெயர்களிலும் பலவிதத்திலும் உனர்ச்சிப் பிழம்பான பதிவுகள் சீறுகின்றன.இதற்கு நான் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூட இந்த தேசபகதர்கள் சண்டித்த்னம் செய்யும்போதுதான் எரிச்சல் எல்லை மீறுகிறது.

    ஆனால் பெருந்தன்மை மிக்க நம் விருந்தினர் மலேசியா ராஜசேகரன் அவர்கள், சுடுசொற்களுக்கு நடுவே இருக்கின்ற சேவை உள்ளத்தை மதிக்க வேண்டும் என்று எனக்குச் சொல்லிவிட்டு, இறங்கி வந்திருக்கிறார். அந்தப் பெருந்தன்மை கூட இவர்களுக்கு புரியுமா என்பது விளங்கவில்லை.

    ஒன்றுமட்டும் உண்மை. இந்த வீரர்களுக்கு பதில் சொல்ல 'நான்" வளர வேண்டும் :-)

    ReplyDelete
  12. ஒரு நல்ல கட்டுரைத் தொடரை அளித்ததற்கு திரு ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி.

    இந்த சீனர்கள் பற்றிய கருத்தில் நிறைய பேர் சீனாவையும் சீனர்களையும் போட்டுக் குழப்பிக்கொள்வதாக எனக்கு ஒரு எண்ணம்.

    என் அலுவலகத்தில் தலைமை அதிகாரி ஒரு சீனப் பெண்மணி. அவரையும் என்னுடன் பணி புரிந்த, பணியில் உள்ள மற்ற சீனர்களையும் அருகாமையில் கண்டவன் என்ற முறையில் அவர்களின் குணங்களை அறிய விருப்பமுள்ளவன்.

    21ஆம் நூற்றாண்டில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சீனா ஒரு வலுவான நாடாக உலக அரங்கில் இருக்கப்போகிறது. நாமும், நம் நாடும், சீனாவை/சீனர்களை பற்றி புரிந்து கொள்வது எதிர்காலத்தில் தனி நபர்களுக்கும், அரசியல்/வர்த்தக அரங்கிலும் மிகவும் பயன் தரும்.

    எனவே, உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,


    பெத்தராயுடு

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...