Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 3

ஏன் எழுதுகிறோம்
=================

ஸ்வஸ்திக் விளம்பரர் ஒருமுறை மிக முக்கியமான இந்தக் கேள்வியை மாமியின் ஸ்ரீராமஜெயத்தை வெளியிட்ட பத்திரிக்கையில் கேட்க, பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மைதான் . வெ.சா சொன்னபடி எந்தப் பிரயோஜத்துக்கும் ஆகாத தமிழை இளைய தலைமுறை ஏன் இப்படி விழுந்து விழுந்து சேவித்துக் கொண்டிருக்கிறது.

காரணம் ரொப்ப சிம்பிள்.

எல்லோருக்கும் தன்னுடைய இருப்பை நிலைநாட்ட ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. செத்துபோன பின், பத்தோடு பதினொன்றாக, புழுவும், பூச்சியும் , பூமியும் அரித்து மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்து காணாது போக யாருக்கும் விருப்பம் இல்லை.அதனால்தான் கவிதை எழுதுகிறோம். கானா எழுதுகிறோம். போட்டோ போடுகிறோம். எழுத்தாளரைக் கெள்வி கேட்கிறோம். கைக்காசை செலவழித்து புத்தகம் போடுகிறோம்.கேள்வி கேட்கிறோம். வம்பு எழுதுகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம், இந்த "நான்"தான். அங்கீகார அரிப்பு தேடும் இந்த ஆத்திரம்தான். சீசனுக்கு வந்து டப்பாங்குத்து ஆடும் மூக்கன் உட்பட.

அதில் தான் எத்த்னை மாறுபாடுகள். வண்ணங்கள். வர்ணங்கள். சிக்கல்கள்.
சிலருக்கு கவிதை இஷ்டம். அதிலேயே புதுக்கவிதை, மரபு என்று கோஷ்டி. சிலருக்கு கதை. அதில் ஆயிரம் வகை. எது எழுதினாலும் நம் சிந்தனையைத்தான் வேறு வேறு வடிவங்களில் எழுதப் பார்க்கிறோம் என்பது பலபேருக்கு விளங்குவதே இல்லை. அலகிட்டாலும், வரியை ஒடித்து வளைத்துப் போட்டு "புதுசு" எழுதினாலும், உள் இருப்பது அந்த "நான்" தான். ஸ்திரமாக இருக்க ஆசைப்படும் மனித யத்தனம்தான்.


1996 ல் நான் எழுதிய கவிதை கீழே:

http://www.weblogimages.com/v.p?uid=sundar23&pid=188613&sid=osR22jpCT7

அதே கவிதையை மாற்றி கட்டுரையாக எழுதிப் போடலாம் என்று தீபாவளி ரிலீஸாக ஒருமுறை ரா.கா.கி யில் எழுதினேன்.
======================================================================

வெடி
====

அப்போதெல்லாம் தீபாவளி வருவதற்கு இரண்டு மாதம் முன்னரே ஒரே பரபரப்பாயிருக்கும்.விநாயகர் சதுர்த்திவரும்போதே அதன் சாயல் தெரிந்துவிடும். முதல் அடையாளம் சின்னக்கடைத்தெருவில் வரும் பட்டாசுக் கடைகள்தான். மற்ற நேரத்தில் சோனியான பையன் காத்தடிக்க பஞ்சர் பார்க்கும் கனகு, தீபாவளியானால் பட்டாசுக்க்கடை வைத்து விடுவார். போன வருசத்து சரக்குகளையெல்லாம் எடுத்து தூசி தட்டி, வெயிலில் காய வைத்து,முதலில் விற்றுத் தீ¢ர்ப்பார். பிறகே வரும் துப்பாக்கிகள். அலுமினியப் பளபளப்பில், கருப்பு மினுக்கலில்,இரட்டைக் குழலோடு சரம் சரமாக சணலில் கட்டித் தொங்கும். ஸ்கூல் போகும் போதும் வரும்போதும் ஆசைஆசையாய் எட்டிப்பார்த்து , எச்சில் விழுங்கி, வீட்டில் கோரிக்கை வைத்து கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ,கிடைக்கும். பின் கேப்புகள். வாங்கி சுருள் சுருளாய் கோர்த்து, வெடிக்கும்போது ...அப்... ப்....பாஜென்ம சாபல்யம் தான். +1 படிக்கும்போது கூட காலாண்டு தேர்வு ஹாலில் சுருள் கேப்பு வெடித்தது ஞாபகம்இருக்கிறது.

அறுபது நாளைக்கு முன்பிருந்தே வெடி வாங்க லிஸ்ட் தயாராகும். குருவி வெடி, யானை வெடி, லக்ஷ்மி வெடி,டபுள் ஷாட் என்று எழுதி வைத்து, எங்கு வாங்கலாம். சிவகாசியில் நேரே வாங்கினால் விலைகுறைவாமே..ஸ்கூல் ·ப்ரெண்ட் எத்தனை ரூபாய்க்கு வாங்கினான். நாம் அவனை விட அதிகம் வாங்கவேண்டுமா..??என்று பல பல கேள்விகள் . சந்தேகங்கள். ஆசைகள். அபிலாஷைகள். சில பேர் வீ ட்டில்தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். விட்டு வாசலில் உட்கார்ந்து (டேய்...அவங்க வீட்டு வாசல்ல போய் உட்கார்ந்து 'பே' ந்னு பாத்துகிட்டு நிக்காதடா - அம்மா) அவர்கள்வெடிப்பதை, வீட்டுக்கும் வாசலுக்குமாய் ஓடி ஓடி ஊதுபத்தியால் திரியில் வைத்து விட்டு வருவதை, அவர்கள் த்ரில்லை, வெடிப்புகை வாசனையை ஏக்கத்தோடு உக்காந்து பார்த்து விட்டு, வீட்டுக்குள் வந்து என் வெடி லிஸ்டைஇன்னொரு தடவை சரி பார்த்துவிட்டு கனவுகளுடன் தூங்கிப் போவேன்.


தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு தடக்கென்று அப்பா வெளி ஊரிலிருந்து வெடி வாங்கி வந்து விடுவார். பிரித்துப் பார்த்தால்எல்லாம் மத்தாப்பு, தீப்பெட்டி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வானம் என்று தலையில் இடி விழும். கேட்டால்"சீ..நீ சின்னப் பையன். வெடி யெல்லாம் வெடிக்கக்கூடாது. மத்தாப்பு போதும்' என்ற கண்டிப்பு . தீபாவளிக்கு தீபாவளி வந்து போனதே ஒழிய , நான் பெரியவனாகவெ இல்லை. அப்பாவின் மத்தாப்புபாக்கெட்டுகளும் குறையவே இல்லை.


மெல்ல மெல்ல இதில் நாட்டம் குறைந்து, தீபாவளி புது ட்ரெஸ், புது படங்கள், சாட்டிலைட் டீவி சிறப்புநிகழ்ச்சிகள் என்று வேறு திசையில் பயணப்பட்டது மனசு. காலையில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு சாஸ்திரத்துக்கு இரண்டு வெடிகொளுத்திப் போடுவது வரை வந்தது நினவுக்கு இருக்கிறது. பிறகு வேலை தேடி வெளியில் பயணப்பட்டு, சில வருடங்கள் தீபாவளி எப்போ வருகிறது என்பதே மறந்து போய், வாழ்க்கையில்/ மனதில்ஏகப்பட்ட வெடிகள் வெடித்து ரணப்பட்டு, புகை மூட்டமாய் போய், மீண்டு, தெளிந்து ,மணமாகி, லாப் டாப்பில் cracker.exe யை வெடித்துப் பழகிய பிளளையோடு ஊருக்கு தீபாவளிக்கு போனேன். அப்பா தீபாவளிசாமான் வாங்க லிஸ்ட போடச்சொன்னார்.
பட்டாசு லிஸ்ட்டில் ஒரே மத்தாப்பாக பார்த்து விட்டு நிமிர்ந்த அப்பாவின் பார்வையை, அவரது புன் சிரிப்பை, அதன் அர்த்தத்தை எழுத எனக்கு ஆயிரம் விரல்கள் இருந்தாலும் போதாது.


==================================================================

படித்துவிட்டு மலேசிய தமிழ் எழுத்தாளர் ரெ.கா எழுதினார்:

தீபாவளி வெடி பற்றி சந்தோஷமாக பேசு முன்னர், இதை செய்வது சிவகாசி குழந்தைகள் என்று நினைவில்வைத்திருப்பது முக்கியமான விஷயம் என்றார்.

எனக்கு வெறுத்துப் போய், மயக்கம் வராத குறை. என்ன சொல்ல..??

அதுவும் ஒரு கோணம் தான். ரொம்பவே விரிந்த கோணம். :-)


No comments:

Post a Comment

சார்பட்டா பரம்பரை  --------------------------------------------  சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம...