Friday, August 13, 2004

தொட்ட பாவத்திற்கு....
==================

1986-87 ல் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு குடும்பம் குடி வந்தது. தகப்பன் தவறிப்போய், தாய் தன் இரு பெண்களோடும், இளைய மகனோடும் வசிக்க, மூத்தமகன் லண்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக சொன்னார்கள். செல்வமும் , செழுமையும் இருந்தாலும், எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருப்பார்கள். அவர்கள் மகள்களின் நடை உடை பாவனைகள் தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்ததால், அவர்களைப் பற்றி தேவையற்ற பேச்சுகள், பிரச்சினைகள் என்று பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் இலங்கை கலவரத்தினால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள்

*******

கல்லூரியில் படிக்கும்போது ஜூனியர் விகடன் பகுதி நேரப் பத்திரிக்கையாளராக பணி புரிந்து கொண்டிருந்தேன். சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டை முகாமில், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்ததை பற்றி எழுதி அனுப்ப சென்னையிலிருந்து தகவல் வந்திருந்தது. கிராமத்துக்கு சென்று முகாமிலும், கிராமத்திலும் அதைப் பற்றிக் கேட்டால் யாரும் வாயே திறக்கவில்லை. பஸ் ஏறும் சமயம் பின் தொடர்ந்து வந்த ஓரிரண்டு இளைஞர்கள் மருண்ட கண்களோடும், யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்துடனும் திக்கித் திணறி விவரித்தது நினைவுக்கு வருகிறது.

அது நாட்டரசன்கோட்டை இலங்கை அகதிகள் முகாம்.

*********

திருச்சியில் வேலை பார்க்கையில், என் நண்பரின் தோழரொருவர் இலங்கையிலிருந்து வருவார். தமிழ்நாட்டு யுனிவர்ஸிடியில் படித்துக் கொண்டிருந்தார். "பொடியன்களைப்" பற்றியும், எத்த்னை கொடூரம் இழைத்தாலும் இலங்கை தமிழர்களுக்கு அவர்களை விட்டால் வேறு நாதி இல்லாமையால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது பற்றியும், யுத்தகால நெருக்கடியால் சாதாரன சுசூகி எஞ்சினை மாற்றியமைத்து மண்ணெண்ணையிலேயே யாழ்ப்பாணத்தில் பைக் ஓடுவது பற்றியும், கதைத்துக் கொண்டிருப்பார்.

****************

வளர்ந்த , நினைவு தெரிந்த நாள் முதல் இப்படி ஏதாவதொரு வகையில் இலங்கையும், தமிழ் அவலமும் என் மனதில் பதிந்தே வளர்ந்திருக்கிறேன். அதனால்தான், என் பக்கம் நியாயம் இருப்பினும், தூக்கி எறிந்து பேசாமல் அடக்கி வாசிக்கிறேன். சாவுக்கு வா என்றால் கருமாதிக்கு வருகிறாயே என்பதற்கேற்ப தம்பி ஈழநாதன் லேட்டாக வந்து புள்ளி விவரங்களால என்னை புளகாங்கிதப்படுத்திக் கொண்டிருக்கிறார். பொறுமையிழந்து OTL கவிதைகள் எழுதும் நிலைக்கு என்னையும் தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறது. ஏனெனில் எந்த அளவுக்கு நானும் பேசுவேன் என்பது ரமணிக்கும் தெரியும்.

தம்பி ஈழநாதன்... ஒன்றாக, ஒற்றுமையுணர்வோடு இருந்து வந்த வலைப்பதிவாளர்கள் இருகூறாய்ப் பிளவு பட எங்கே பொறி கிளம்பியது என்று சற்றே யோசியுங்கள். வலைப்பூ ஆசிரியராய் இத்தனை பேர் இருந்து இருக்கிறார்கள் . ஆனால் நீங்கள்தான் "ஈழத்து வலைப்பதிவுகள்" என்று வகைப்படுத்தும் திருப்பணியை தொடங்கி வைத்தீர்கள். இது நாளை எங்கே தொடர்ந்து எவ்விதம் முடியுமென்று சற்றேனும் யோசித்தீர்களா..?? பிரிவினையும், வேறுபடுத்திப் பார்ப்பதும் எந்த ரத்தத்தில் ஊறியிருக்கிறது ...யோசியுங்கள். நீங்கள் இளைஞர். வளர வேண்டியவ்ர். கொதிக்கும் குருதியையும், முகிழ்க்கும் எண்ணங்களையும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க எண்ணிக்கொள்ளுங்கள். இந்தியத் தமிழன் எவனும், ஈழத்தவனை அயலானாக பார்ப்பதில்லை. அயலானாக பார்த்திருந்தால் ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ipkf கொடுமைக் கதைகள் தொடர்வதற்கு தார்மீக ரீதியான காரணங்கள் இல்லை இன்று. எப்படி அமைதிபடையில் வந்த ஒவ்வொரு ஜவானுக்கும் வக்காலத்து வாங்கி நான் பொறுப்பேத்துக்க முடியாதோ, அதே போலத்தான், விடுதலைப் புலிகளோட ஒவ்வொரு படுகொலைக்கும் நீங்க பொறுப்பேத்துக்க முடியாது. ராஜீவோட ரத்தத்தால, அமைதிப்படை அட்டூழியக் கறைகளை உங்காட்களே துடச்சு கழுவீட்டிங்க...பிறகு பேச்சென்ன.,கவிதையென்ன...வக்காலத்தென்ன..???

இரண்டையும் பற்றி நாம ரெண்டு தரப்புமே பேசாதிருந்தா தான் இலங்கைப் பிரச்சினை பற்றி உபயோகமா பேச இயலும்.

ஆமாம் , நடு நிலைமையோட எழுத பதிவு ஒண்ணு துவங்கி இருக்கிறீர்களே, அதுக்கு படம் என்ன போட்டு இருக்கிறீர்கள், தெரிகிறதா,,..??
இதுதான் உங்க ஸோ- கால்ட நடு நிலையோட லட்சணம். அங்க எழுதறவன் என்ன எழுதுவான்னு நான் சொல்லணுமா..??

இத்தனை திட்டிகிட்டு, எழுதிட்டு, கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிச்சுகிட்டு இருக்கீறீர்களே, உங்க குடுமபத்தில் இந்த க்ஷணம் இந்திய மண்ணில இருக்கிற, இந்திய சர்வகலாசாலையில படிக்கிற, இந்தியாவில வாழற உறவுகளை எல்லாம் வெளியே கூப்பிட்டுக்க வேண்டியதுதானே. மிருக வெறி பிடிச்ச போலிஸும், ஆமிக்காரனும் அங்கே இருக்கானே...தன் அரிப்புக்கு அங்க சொறிஞ்சுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..என்ன பாதுகாப்பு அங்க உங்களுக்கு...?? நீங்க பண்ண மாட்டீங்க..!! ஏன்னா, எங்களோட ஜனநாயகம் உங்களுக்கு பாதுகாப்பு, எங்களுடைய பரிதாபம் உங்களோட பலம் ( அது எங்க பலவீனம்...!!! ) எங்க அரசியல்வாதிகள் உங்க ஜால்ரா மாடுகள். அதனால நீங்க எப்படி வேணா இருக்கலாம். ப்ரான்ஸிலயும், கனடாவிலும், யூ.கே அரசாங்கமும் மாதிரி தமிழக அரசாங்கமும், அரசியல் வாதிகளும் விலக்கி வைச்சு பாக்க மாட்டாங்க அப்படித்தானே...

எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சு
ஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...
மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)

இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு

அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்.




No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...